மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

ஞாயிறு அன்று மாலை 5.30 மணி அளவில்தான் மோடியின் பொது நிகழ்ச்சி துவங்குவதாக இருந்தது. ஆனால் காலை முதலே சான் ஓசே நகரின் நடுவே அமைந்திருக்கும் எஸ் ஏ பி விளையாட்டு உள்ளரங்கு நோக்கி மக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். 18000 பேர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதினால் பலத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. கார் நிறுத்தும் இடங்கள், போராட்டம் நடத்துபவர்கள் கூடும் இடங்கள், வரிசையாகச் செல்வதற்கான ஏற்பாடுகள், அரங்கின் உள்ளே உணவகங்கள், கடுமையான வெயில் நாளாக இருந்தபடியால் வரும் அனைவருக்கும் தண்ணீர் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விளம்பரப் பலகைகள் நிறுத்துதல், கூட்டம் தள்ளு முள்ளு இல்லாமல் நெருக்குதல் இல்லாமல் எளிதாக உள்ளே போகவும் வெளியே வரவும் ஏற்பாடுகள் என்று அனைத்து ஏற்பாடுகளையும் மிகுந்த கவனத்துடனும், நுட்பத்துடனும், பரிவுடனும் விழா ஏற்பாட்டாளர்களும் உள்ளூர் மற்றும் மத்திய போலீஸ்காரர்களும் நகரசபையினரும் பார்த்துப் பார்த்து கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். எங்கும் எதிலும் ஒரு குறை சொல்ல முடியாவண்ணம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இரண்டு மாத உழைப்பும் திட்டமிடலும் விழா நாள் அன்று பலனளித்தன.

India Prime Minister Facebook

இந்தியர்கள் அவரவர் மாநிலங்களின் வண்ண வண்ண ஆடைகளில் குழுயிருந்தனர். வேட்டி, புடவை, வடஇந்திய உடைகள், ராஜஸ்தானிய குஜராத்திய தலைப்பாய்க் கட்டுக்கள் என்று அந்த அரங்க வளாகமே வண்ணமயமாக ஜொலித்தது. அனைத்து வயதிலுமான ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் குழந்தைகளும் கூடியிருந்தனர். பல அமெரிக்கர்களும் பிற தேசத்து மக்களும் கூட அங்கு காணப்பட்டனர். பல இஸ்லாமியர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வந்திருந்த விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் நாட்டின் பிரபல பாடகி அருணா சாய்ராம், மேற்கு வங்கத்தின் இந்து தலைவர் தபன் கோஷ் பல டி வி பிரபலங்களும் அங்கு வருகை தந்திருந்தனர். அந்த இடமே விழாக் கோலம் பூண்டிருந்தது. எங்கும் மோடியை வாழ்த்தும் ஒலிகள் முழங்கிக் கொண்டேயிருந்தன. அந்தந்த மாநிலத்தின் அமைப்புகள் தத்தம் பேனர்களைத் தாங்கி அங்கும் இங்குமாக சிறு ஊர்வலங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். அரங்கத்தின் முன் வாசலில் பல்வேறு ஆடல் பாடல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. சான் ஓசே பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவ மாணவிகள் வெண்ணிற இந்திய உடைகளையும் காவி நிற தலைப்பாய்களையும் அணிந்து கொண்டு பெரிய பெரிய கொட்டுக்களை அடித்துக் கொண்டு அந்த தாளத்திற்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தனர். நேரம் நேரம் ஆக ஆக பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. அரங்கத்தின் உள் சுற்றில் நிறுத்தப் பட்டிருந்த மோடியின் ஆளுயுர கட்டவுட்டுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். மேலேயிருந்து மோடியின் உருவங்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. உள்சுற்றில் பல்வேறு இந்திய உணவகங்கள் தங்கள் கடைகளைத் திறந்திருந்தனர். இந்திய உணவுகளை அருந்தவும் பெரும் வரிசைகள் காணப் பட்டன. வேகமாக காஃபி டீக்கள் தீர்ந்து கொண்டிருந்தன. வெளியிலும் உள்ளும் அனைவரும் முகமலர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காத்திருந்தனர். ஆடல் பாடல் வாழ்த்துக் கோஷங்கள் என்று அரங்கமே அதிர்ந்து கொண்டிருந்தது

அரங்கத்தின் உள்ளே பல்வேறு இந்திய மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. பாரதியின் தேச பக்தி பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து கதக், இந்திப் பாடல்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. நிகழ்ச்சிகளை அஷ்வின் பாவே என்ற ஹிந்தி நடிகையும்  நிகழ்ச்சியைத் தொகுத்தளித்துக் கொண்டிருந்தனர்.  கைலாஷ் கேர் என்ற பாடகர் அற்புதமாக இந்திப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். மோனா கான் டான்ஸ் அகடமி, நிருத்தோயதயா கதக் டான்ஸ் அகடமி ஆகிய பிரபலமான நடனப் பள்ளிகளில் இருந்து தேர்ந்த நடனக் கலைஞர்கள் வண்ணமயமான இந்திய நடனங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

அரங்கத்தின் வெளியே ஒரு புறம் இந்திய இளைஞர்களின் முரசு ஒலிக்க நடனமும் பிற வாழ்த்துக் கோஷங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. இன்னொரு புறம் மோடியை ஆதரித்து நூற்றுக்கணக்கான பேர்கள் அவரது படங்கள் தாங்கிய அட்டைகளைத் தாங்கி அவரையும் இந்தியாவையும் வாழ்த்தி பலத்த கோஷங்கள் இட்டுக் கொண்டிருந்தனர். அருகிலேயே காலிஸ்தான் இயக்கத்தினர் கருப்பு உடைகள் அணிந்து மோடிக்கும் இந்தியாவுக்கும் எதிராக கடுமையான வசை கோஷங்களை போட்டுக் கொண்டிருந்தனர். மோடியின் பெரிய படங்களை செருப்பால் அடித்துக் கொண்டிருந்தனர். இன்னொரு புறம் ஒருபால் இனத்தினர், முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ இயக்கத்தினர்கள், மனித உரிமைக் கழகத்தினர்கள் என்று பல்வேறு இந்திய விரொத இந்து விரோத மோடி எதிர்ப்பு அமைப்புகள் பல்வேறு காரணங்களைச் சொல்லி அட்டைகளைத் தூக்கி கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அந்த இடம் பதட்டமாகக் காணப் பட்டது.

இரு தரப்பினரும் அருகருகே போராட இடம் அளித்து பெரும் தவறை சான் ஓசே நகர போலீஸ் செய்திருந்தனர். எந்த நேரத்திலும் இரு குழுக்களுக்கும் இடையில் கை கலப்புகள் கலவரங்கள் எழுந்து விடும் என்ற சூழல் நிலவியது. வானத்தில் ஒரு சிறிய விமானம் இந்தியாவை காலிஸ்தானில் இருந்து வெளியேறு என்ற பேனருடன் சுற்றி வந்து கொண்டிருந்தது. இன்னொரு விமானமோ மோடியை வரவேற்கும் பேனருடன் சுற்றி வந்து கொண்டிருந்தது. ஆக மோடியின் வரவை ஒட்டி பூமியிலும் வானத்திலும் பரபரப்பான ஆதரவும் எதிர்ப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களின் எந்தவொரு குற்றசாட்டிலும் உண்மை இல்லை. காலிஸ்தானிகளை பாக்கிஸ்தானின் ஐ எஸ் ஐ அமைப்பு தூண்டி விட்டு நிதியளிக்கிறது. தேன்மொழி செளந்திரராஜன் என்பவர் தலைமையில் நடந்த எதிர்ப்புப் போராட்டங்களும் அர்த்தமற்ற அவதூறுகளைக் கொண்டதாக மட்டுமே இருந்தன. போராடும் அனைத்துக் குழுக்களும் இந்திய நலன்களுக்கும் இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரான தேசத் துரோக இயக்கங்கள் மட்டுமே. அவர்கள் அனைவரும் சில நூறு பேர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள். இருந்தாலும் இந்திய விரோத மீடியாக்கள் 5000 பேர்கள் கூடியிருந்ததாக அண்டப் புளுகை அவிழ்த்து விட்டன. கூசாமல் பொய் சொன்னார்கள்.

modi-CA-visit-6

இந்த பரபரப்பான சூழ்நிலையில்  அரங்கின் உள்ளே இருந்தும் வெளியே புல்வெளியில் அமர்ந்தும் நிகழ்ச்சியினைக் காண மோடியின் பேச்சைக் கேட்க்க கிட்டத்தட்ட 20,000 பேர்கள் கூடியிருந்தனர். நீண்ட வரிசைகளில் மக்கள் கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். வரிசையில் கூடியிருந்தவர்களும் பாரத் மாதா க்கீ ஜெய் வந்தே மாதரம் மோடிக்கு ஸ்வாகதம் என்று தொடர் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். வரிசைகள் நின்று கொண்டிருந்தவர்கள் உள்ளே சென்று அமர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது. உள்ளே செல்ஃபோன் தவிர்த்து வேறு எந்த பொருளும் அனுமதிக்கப் படவில்லை. ஏர்ப்போர்ட்டுக்குள் நுழையும் பொழுது செய்யப் படும் செக்யூரிட்டி செக்கப் அதே பாதுகாப்பு ஊழியர்களினால் செய்யப் பட்டது. வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு வாலண்ட்டியர்கள் கேட்டு கேட்டு தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்கள். பின்னர் அவற்றை சேகரித்து குப்பை பைக்ளில் சேர்த்தார்கள். இப்படியாக கல்ந்து கொள்பவர்களின் ஒவ்வொரு தேவையும் கவனித்து தீர்க்கப் பட்டன. கடைசி நிமிடம் வரை அனுமதி சீட்டு வாங்காதவர்கள் கடைசி நேரத்தில் மாற்றம் செய்தவர்கள் அனைவருக்கும் அவரவர் அனுமதி சீட்டுக்கள் வழங்கப் பட்டன. கார்கள் சரியாக வழிநடத்தப் பட்டு அவற்றுகுரிய இடங்களில் நிறுத்தம் செய்யப் பட்டன. அனைத்து ஏற்பாடுகளும் கடிகார ஒழுங்கில் கச்சிதமாக நிறைவேற்றப் பட்டன.

என் பி சி செய்தி வாசிப்பாளர் ராஜ் மத்தாய் மோடி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார் முதலில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களையும் இப்பகுதி நகரங்களின் மேயர்களையும் மேடைக்கு வரவேற்றார். அமெரிக்க காங்கிரஸின் டெமாக்ரட்டிக் கட்சி தலைவர் நான்ஸி பெலோஸி, ஹவாய் காங்கிரஸ் உறுப்பினர் துளசி மற்றும் ஏராளமான காங்கிரஸ் உறுப்பினர்கள் மேயர்கள் மேடையில் வரிசையாக நிற்க மோடி மேடைக்கு வருவது அறிவிக்கப் பட்டது.

****

மோடி அரங்கிற்குள் வருவதற்கு முன்பாகவே அவர் பெயர் சொல்லப் பட்டவுடனேயே உள்ளே இருந்த அனைவரும் எழுந்து நின்று மோடி மோடி மோடி என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டேயிருந்தனர். அந்த கோஷங்கள் அவர் பேசத் துவங்கி சில நொடிகள் வரை தொடர்ந்தன. பெரும் ஆரவாரத்துடனும் ஆச்சரிய ஒலிகளுடனும் நீண்ட எழுந்து நின்ற கை தட்டல்களுடனும் மோடி வரவேற்கப் பட்டார். கை தட்டுதல்களும் வாழ்த்தொலிகளும் அவர் பேசத் துவங்கிய பின்னரும் தொடர்ந்து மாபெரும் கடலலை போல மெல்ல மெல்ல அமைதியடைந்தன.

மேடையேறிய பாரத பிரதமர் முதலில் மேடையில் இருந்த அனைத்து அமெரிக்கத் தலைவர்களிடமும் கைகுலுக்கி ஒரு சில சம்பிராதய வார்த்தைகள் பேசிய பின்னர் தனது உரையைத் துவக்கினார். மேடையின் நடுவே 360 டிகிரி சுழலும் ஒரு வட்ட வடிவ சுழல் மேடையின் நடுவே நின்று உரையாற்றினார் அது மெல்ல மெல்ல சுழன்று அரங்கிலுள்ள அனைவரிடமும் நேரில் பேசுவது போல அமைந்தது. நடுவே அமைக்கப் பட்டிருந்த மாபெரும் திரையில் நாலாபுறமும் அவரது பேச்சும் பார்வையாளர்களும் காண்பிக்கப் பட்டனர். மோடியின் உரையை அரங்கின் வெளியே புல் வெளியில் அமர்ந்து கொண்டு மேலும் சில ஆயிரம் பேர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அரங்கின் வெளியே மோடியின் படங்களை செருப்பால் அடித்துக் கொண்டிருந்த பாக்கிஸ்தானிய கைக்கூலிகளான காலிஸ்தானிய காலிகளுக்கு மோடி தனது முதல் வார்த்தையிலேயே மறைமுகமாக ஒரு அடியைக் கொடுத்தார். மோடியை எதிர்க்கும் அமைப்பு தன்னை கத்தார் அல்லையன்ஸ் என்றும் அறிவித்துக் கொண்டு மோடி மற்றும் இந்திய எதிர்ப்பு பிரசாரங்களை செய்து வந்தது. அவர்களுக்கும் மோடி தனது உரையின் துவக்கத்திலேயே மரண அடி கொடுத்தார். மோடி கலிஃபோர்னியா சான் ஓசே நகரின் எஸ் ஏ பி உள்ளரங்கில் பேசிய பேச்சின் சுருக்கமான வடிவம் கீழே:

கலிஃபோர்னியாவுக்கு மாலை வணக்கம். உங்கள் ஆர்வம் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன். இன்று செப்டம்பர் 27 இந்தியாவில் செப்டம்பர் 28.  இன்று அமரர் பகத்சிங் அவர்களின் பிறந்த தினம். தன் தாய் நாட்டிற்காக தன்னுயிரை இழந்த தியாகி பகத் சிங். பாரத மாதாவின் தவப் புதல்வன் பகத் சிங் நீங்கள் அனைவரும் உங்கள் கைகளை உயர்த்தி அமரர் பகத் சிங் வாழ்க வாழ்க என்று கோஷம் இடுங்கள்.

(மக்கள் அனைவரும் பகத் சிங் அமர் ரஹே பகத் சிங் அமர் ரஹே என்று மோடியுடன் சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். அது வெளியில் கூடியிருக்கும் அந்த வாழ்த்தொலி காலிஸ்தான் கைக்கூலிகளின் முகத்தில் அறைகின்றது. அவர்களது போராட்டத்தையே அர்த்தம் இழக்கச் செய்கின்றது)

modi-CA-visit-7

கடந்த இரு நாட்களாக நான் அமெரிக்காவின் இந்தப் பகுதியில் உள்ள பலதரப்பட்ட மனிதர்களையும் கண்டு வருகிறேன். நான் ஐ நா சபையின் ஜெனரல் அசெம்ளி கூட்டத்தில் பேசுவதற்காக வந்த நேரத்தில் என் நாட்டு மக்களை சந்திக்கும் இந்த அரிய வாய்ப்பை பெற்றேன். உங்கள் அனைவரையும் சந்திக்கும் அதிர்ஷடம் அடையப் பெற்றேன்

நான் இங்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறேன். நிறைய மாறுதல்களைக் காண்கின்றேன். ஒரு விதத்தில் நான் துடிப்பான இந்தியாவின் முகத்தை இந்நகரத்தில் காண்கின்றேன். நான் சந்திக்கும் ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு ஒளியைக் காண்கின்றேன். அவர்கள் கண்களில் கனவினைக் காண்கின்றேன். சாதிக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிடம் காண்கின்றேன். அனைத்தையும் விட முக்கியமாக இந்நாட்டு மக்கள் இந்தியர்களைப் பற்றி பெருமையாக எண்ணுவதைக் காண்கின்றேன் அதற்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.

உலகத்தின் அனைத்து நாடுகளிலும் இன்று இந்தியா குறித்து ஒரு புதிய பிம்பம் எழுந்துள்ளது. இந்தியா குறித்தான அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. இந்தியா பற்றிய பழமையான எண்ணங்கள் மாறி வருகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் உங்கள் கை விரல்கள் செய்யும் மாயமே (கம்ப்யூட்டர் கீ போர்டில் டைப் அடிப்பது போல அபிநயம் செய்து காண்பிக்கின்றார். கரகோஷம் அரங்கின் கூரையைப் பிளக்கின்றது) நீங்கள் கணணி துறையில் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள் இந்தியா மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது. காலத்திற்கு ஏற்றாற் போல மாற மறுக்கும் எவரும் பிடிவாதம் பிடிக்கும் எவரும் 21ம் நூற்றாண்டில் அடையாளம் இழந்து போவார்கள். என் தேசத்து மக்களும் இளைஞர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பதன் மூலமாக ஒட்டு மொத்த உலகத்தையுமே புதிய திசையில் திருப்பியிருக்கிறார்கள். இதைக் கண்டு என்னைப் போன்றவர்கள் பேருவகை அடைகின்றோம். உங்களைக் கண்டு பெருமிதம் கொள்கின்றோம். இந்தியாவின் புகழை பரப்புவதன் மூலமாகவும் இந்தியாவின் மரியாதையை அதிகரிப்பதன் மூலமாகவும் ஒட்டு மொத்த உலகத்தையுமே இந்தியாவை ஒரு நவீன தேசமாக கருதத் தொடங்கி வியக்க வைத்திருக்கிறார்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மரியாதைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஆழ் மனதில் இருந்து வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

Sometimes in my country we used to hear people say that something has to be done to stop this “brain drain,” that this needs to stop. The land of India produces a lot of gems. We have continued to produce brain after brain, a growth of brains. This “brain drain” can also become a “brain gain.” Has anyone ever thought of that?

ஒரு சில சமயங்களில் எனது நாட்டில் மக்கள் இந்தியாவின் அறிவு வெளியேறுவதை தடுக்க வேண்டும் மூளை இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பாரதம் ஏராளமான அறிவுச் செல்வங்களை உருவாக்கியுள்ளது. நாம் தொடர்ந்து அறிவுச் செல்வங்களை உற்பத்தி செய்து வருகின்றோம். ஆகவே இந்த மூளை இழப்பு அறிவு சார் இழப்பு என்பது உண்மையில் இழப்பு அல்ல அது எதிர்காலத் தேவைகளுக்காக வெளிநாடுகளில் இந்திய அறிவு மூலதனம் சேமிப்பு என்று சொல்கிறேன். நீங்கள் எப்பொழுதாவது அப்படி நினைத்துள்ளீர்களா? (பெரும் கரகோஷங்களும் மோடி மோடி மோடி என்ற ஆமோதிக்கும் வாழ்த்தொலிகளும் எழுந்து அலையலையாய் அமர்கின்றன)

ஆகவே நான் அதை மூளை இழப்பாக கருதவில்லை வேறு விதமாக அணுகுகின்றேன். நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை இந்தியாவின் அறிவு இழப்பாக நான் கருதவில்லை மாறாக அவர்களை அறிவு சேமிப்பாக லாபமாகக் கருதுகின்றேன். வெளிநாடு சென்ற இந்தியர்களின் அறிவும் அனுபவங்களும் இந்தியாவுக்குத் தேவைப் படும் பொழுது இந்தியாவின் நலன்களுக்காக உபயோகப் படப் போகும் ஒரு சேமிப்பாகக் கருதுகின்றேன். வட்டியுடன் திருப்பி வரப் போகும் முதலீடாக நான் காண்கின்றேன். இது ஒரு விலை மதிக்க முடியாத அறிவுசார் முதலீடு. என் நாட்டின் சகோதர சகோதரிகளே இப்பொழுது அந்தத் தருணம் வந்து விட்டது. உங்களது அறிவையும் அனுபவத்தையும் வலிமையையும் உங்கள் அறிவின் பலன்களையும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பயன் படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்களை வளர்த்த இந்திய மண்ணும், நீரும் காற்றும் கலாசாரமும் உங்களை இந்த அளவுக்குக் கொண்டு வந்த தேசமும் உங்களுக்காக இரு கரம் நீட்டிக் காத்திருக்கின்றது. நீங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ வாருங்கள் என்று வரவேற்கின்றது (மீண்டும் பெருத்த கரகோஷமும் பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷமும் எழும்பி மோடியின் கோரிக்கையை ஆமோதிக்கின்றது பெரும் ஆரவாரம் எழுந்து எழுந்து அலை போல அடங்குகின்றது)

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் இந்த கலிஃபோர்னியாவில் ஐ டி துறையின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பில் நமது ஜனநாயக மதிப்பீட்டுகளில் நாம் அனைவரும் கட்டுண்டு இருக்கின்றோம். நீங்கள் வரலாற்றை திரும்பிப் பார்ப்பீர்கள் என்றால் நமது சீக்கிய சகோதரர்கள் இங்கு இந்தியாவில் இருந்து முதன் முதலாக வருகின்றார்கள். இங்கு வந்து அவர்கள் விவசாயம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து இந்தியாவுடன் தொடர்பில் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் இங்கிருந்து கொண்டு இந்தியாவின் விடுதலைக்காக தொடர்ந்து போராடியிருக்கின்றார்கள். யார் கத்தார் இயக்கதை மறக்க முடியும் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்தியாவின் சுதந்தித்திற்காக ஏந்திய சுதந்திர விளக்கு அல்லவா அது? இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு இந்த கலிஃபோர்னியாவில் இந்த மேற்குக் கடற்கரையில் இங்கு குடிபெயர்ந்த எனது சீக்கிய சகோதரர்கள் இந்தியாவின் விடுதலைக்க்காக போராடியதும் அல்லவா காரணம்? அவர்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பலமான பிணைப்பு அல்லவா உருவானது? அதை மறக்க முடியுமா? (கத்தார் அலையன்ஸ் என்ற பெயரில் இந்திய விரோத போராட்டங்களுக்கான மோடியின் மறைமுகமான பதில் அடி இது. எந்த இயக்கம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியதோ அதே இயக்கத்தின் பெயரில் இன்று இந்தியாவுக்கு விரோதமாக இந்தியாவுக்கு தூரோகம் செய்து கொள்கிறார்கள் என்ற அர்த்தம் தரும் பேச்சு. இதை போராட்டக்காரர்களும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உள்ளே இதன் அர்த்தம் புரிந்து பெரும் ஆரவாரம் எழுந்தது)

modi-CA-visit-8

இந்த 19ம் நூற்றாண்டில் இங்கிருந்த இந்திய விவசாயிகள் தங்கள் வியர்வை சிந்தி ஓய்வின்றி உழைத்த சீக்கியர்கள் அன்று இந்தியாவின் விடுதலைக்காக இந்தியாவை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கப் போராடினார்கள் என்றால் இன்று 21ம் நூற்றாண்டில் எம் நாட்டு இளைஞர்கள் இந்தியாவை வறுமையில் இருந்து விடுவிப்பதில் கவலையும் அக்கறையும் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்கள் பங்கினை அர்ப்பணிப்பை அளிப்பார்கள். அதை விட உந்துதலான விஷயம் வேறு என்ன இருக்க இயலும்?

1914ம் ஆண்டு கோபால் முகர்ஜி என்பவர் இங்குள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் முதல் இந்திய மாணவர். அது மட்டும் அல்ல 1957 முதல் 1963 வரை திலீப் சிங் சூட் என்பவர் இப்பகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக செயல் பட்டிருக்கிறார். வெகு சிலருக்கே தனது வாழ் நாள் முழுவதும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த ஒரு மனிதரைப் பற்றி தெரியும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மகாத்மா காந்தியின் அடியொற்றி வாழ்ந்து வந்தார். விடுதலிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்தியாவின் ஜனநாயகத்திற்கு சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்ட பொழுது 1975ல் இந்தியாவின் தலைவர்கள் சிறையில் அடைக்கப் பட்ட பொழுது இரண்டாவது சுதந்திரப் போருக்கான தலமையை அளித்தவர் ஜெயப் பிரகாஷ் நாராயணன் அவர்கள். ஒரு சிலருக்கே அந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் இதே கலிஃபோர்னியாவில் தான் படிக்க வந்தவர் என்பது தெரியும்

இந்தியாவுக்கும் கலிஃபோர்னியாவுக்கும் உள்ள தொடர்பு நீண்டது பிரிக்க முடியாதது. இன்று இங்குள்ள இந்திய வம்சாவழியினர் ஒரு புதிய உலகை சமைத்திருக்கிறீர்கள் அதனாலேயே இந்தியா உங்களைக் குறித்து பெருமிதம் அடைகின்றது உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

நான் டெல்லிக்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றன. 16 மாதங்களுக்கு முன்பாக நான் டெல்லிக்கு புதியவானக இருந்தேன். அங்குள்ள சாலைகள் கூட எனக்குத் தெரியாது பாராளுமன்றத்திற்கு செல்லும் வழி கூட எனக்குத் தெரியாது நான் எவரிடமாவது வழி கேட்க்கும் நிலையில்தான் இருந்தேன். 125 கோடி மக்கள் எனக்கு ஒரு பெரும் பொறுப்பை அளித்துள்ளனர். அதை என்னால் முடிந்தவரை சிறப்பாக நிறைவேற்ற நான் முடிந்த வரையிலும் முயற்சி செய்து வருகின்றேன். இன்று உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இந்தியா குறித்து ஒரு பெரும் நம்பிக்கையும் மரியாதையும் உருவாகியிருப்பதைக் காண முடிகின்றது. கடந்த 20,25 ஆண்டுகளாக 21ம் நூற்றாண்டு யாருடையது என்ற கேள்வி ஒரு விவாதப் பொருளாகி வருகின்றது. எல்லோரும் 21ம் நூற்றாண்டு ஆசியாவிற்கானது என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக உலக மக்கள் 21ம் நூற்றாண்டு ஆசியாவினுடையது என்று சொல்வதற்குப் பதிலாக இந்தியாவினுடையது என்று சொல்லத் துவங்கியுள்ளனர். இந்த மாறுதல் இந்தியாவின் 125 கோடி மக்களின் உறுதியினால் விளைந்துள்ளது. இந்தியா இனியும் பின் தங்கி விடக் கூடாது என்ற உறுதியினால் விளைந்தது. மக்கள் எப்பொழுது முடிவெடுத்து விட்டார்களோ இனி கடவுளும் ஆசீர்வதிப்பார்.

ஒட்டு மொத்த உலகமும் நேற்று வரை இந்தியா குறித்து எந்தவிதமான அக்கறையும் ஆர்வமும் காட்டியதில்லை. ஒரு காலத்தில் இந்தியர்கள் வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ள விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்தனர் ஆனால் இன்றோ வெளியுலகம் இந்தியாவுடன் தொடர்பு கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நம்பிக்கையான சூழல் இந்தியாவை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லப் போகின்றது.

நான் பதவிக்கு வந்த பொழுது ஒன்றைச் சொன்னேன். அதை மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றேன். இந்த தொழில்நுட்ப காலத்தில் எதையும் மறைத்து வைக்க முடியாது. எந்தவொரு விஷயமும் உலகத்திற்கு உடனுக்குடன் உங்கள் தொலைபேசி வாயிலாகத் தெரிந்து விடும். நீங்கள் ஒரு விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது  பந்து எங்கே செல்கிறது என்பதை உற்று நோக்கிக் கொண்டிருப்பீரகள். எங்கே விக்கெட் உள்ளது எங்கே பந்து பிடிப்பாளர்கள் நிற்கிறார்கள் என்பதை உற்று நோக்கிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதினால் உடனுக்குடனான அந்தக் கிரிக்கெட் மைதானத்தின் நிலமையை உணர்ந்து கொண்டே இருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் நேரில் மைதானத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு அத்தனை உன்னிப்பாக துல்லியமாக கவனிக்க இயலாது. ஆனால் வெகு தொலைவில் இருக்கும் உங்களுக்கோ எல்லாமே தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கும். இங்கே இருந்து கொண்டே அங்கே என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகக் காண இயலும். மோடி என்ன செய்து வருகிறார்? என்ன சொன்னார்? என்ன நிறைவேற்றினார் என்று அனைத்தையும் நீங்கள் இங்கிருந்தபடியே துல்லியமாக அளந்து வருவீர்கள். நான் கடின உழைப்பில் இருந்து தவற மாட்டேன். 125 கோடி மக்களும் எனக்கு அளித்திருக்கும் ஆதரவை நான் ஒவ்வொரு நொடியிலும் 100% சதவிகிதம் நிறைவேற்ற பாடு படுவேன். 16 மாதங்களுக்குப் பிறகு நான் சொன்னவற்றை நிறைவேற்றி வருகின்றேனா? நிறைவேற்றி வருகின்றேனா? அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றேனா? (அரங்கம் முழுக்க ஆமாம் ஆமாம் என்ற பெரும் ஓசை எழுகின்றது. மோடியை ஆமோதிக்கின்றது) நமது நாட்டில் அனைத்து விதமான குற்றசாட்டுக்களும் அரசியல்வாதிகள் மீது வைக்கப் படுகின்றன. அந்த அரசியல்வாதி 50 கோடிகள் கொள்ளையடித்து விட்டார் இந்த அரசியல்வாதி 100 கோடிகள் ஊழல் செய்து விட்டார் அந்த அரசியல்வாதியின் மகன் 250 கோடி ரூபாய்களை ஏமாற்றித் திருடிக் கொண்டார் இந்த அரசியல்வாதியின் மகள் 500 கோடி ரூபாய்கள் திருடி விட்டார்  இந்த அரசியல்வாதியின் மருமக்ன் ஆயிரம் கோடி ரூபாய்கள் கொள்ளையடித்து விட்டார் அந்த அரசியல்வாதியின் சகோதரன் வீடு வாங்கி விட்டார் இன்னொரு அரசியல்வாதியின் சகோதரன் பெரும் குத்தகையை எடுத்து விட்டார் என்றெல்லாம் நீங்கள் கேட்டு வந்தீர்கள் அல்லவா (ஆமாம் ஆமாம் வெட்க்கக் கேடு வெட்க்கக் கேடு என்று ஆமோதிக்கின்றார்கள்) இவை போன்ற செய்திகளைக் கேட்டு நீங்கள் அயர்ச்சி அடையவில்லையா வருத்தப் படவில்லையா மனச்சோர்வு அடையவில்லையா? (ஆமாம் ஆமாம் அடைந்தோம் அடைந்தோம் என்று அரங்கமே ஒத்துக் கொள்கின்றது) அதைக் கண்டு நீங்கள் கோபம் அடையவில்லையா கொந்தளிக்கவில்லையா? என் தேசத்தின் குடிமக்களே அவற்றைப் போன்ற எந்தவொரு குற்றசாட்டாவது என் மீது எழுந்துள்ளதா? (இல்லை இல்லை இல்லை என்று கோஷம் அரங்கத்தின் கூரையை எட்டுகின்றது) நான் உங்களுக்கு ஒன்றை உறுதி படச் சொல்கிறேன். நான் வாழ்ந்தால் என் தேசத்திற்காக வாழ்வேன் நான் இறந்தால் என் நாட்டிற்காகவே இறப்பேன். இது உறுதி. இதை உங்களிடம் உறுதி கூறுகின்றேன் (மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரிக்கின்றனர். மோடி மோடி மோடி என்று வாழ்த்தொலி எழுப்புகின்றனர்)

சகோதர சகோதரிகளே நம் நாடு முழுவதும் திறன்களும் சக்தியும் நிரம்பியுள்ளது. என்னிடம் மக்கள் சில சமயம் கேட்ப்பதுண்டு “மோடிஜி உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு தன்னம்பிக்கை கிடைக்கின்றது? எப்படி நம் தேசம் முன்னேறும் என்று உறுதியாக நம்புகின்றீர்கள்?” நான் சொல்லுவேன் நான் என் தேசம் வளர்ச்சி அடையும் என்று உறுதியாக நம்புகின்றேன். என் தேச மக்கள் சொல்லுகின்றார்கள் இது நடக்கின்றது அது நடக்கின்றது என்று. அதைக் கண்டு நீங்கள் அச்சமுறவில்லையா என்று கேட்க்கிறார்கள். இருந்தும் நம் தேசம் எப்படி முன்னேறுகிறது என்று நீங்கள் நம்புகின்றீர்கள் என்று கேட்க்கிறார்கள்? நான் அவர்களுக்குச் சொல்வேன்: நான் உறுதியாக என் தேசத்தை நம்புகின்றேன். ஏனென்றால் என் தேசத்தின் மக்கள் தொகையில் 65 சதவிகிதம் 35 வயதுக்கும் குறைவான இளைஞர்களினால் ஆனது. அந்த இளைஞர்களின் படை இருக்கும் பொழுது ஒரு தேசத்தினால் என்ன தான் சாதிக்க முடியாது? 800 கோடி இளைஞர்கள் 160 கோடி கைகள் இணையும் பொழுது நான் முழு நம்பிக்கையுடன் சொல்வேன் எனது இந்தியா இனியும் பின் தங்கி இராது என்று (கரகோஷமும் ஆமோதிப்பும் பல நிமிடங்களுக்கு அரங்கத்தில் எழுந்து ஆமோதிக்கின்றன)

(தொடரும்)

One Reply to “மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3”

  1. அற்புதம்.
    அபாரமான தொகுப்பு.
    துல்லியமாய் விவரிக்கிறது.
    ரசித்துப் படித்துவருகிறேன்.
    தொடரும் விவரணைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
    அற்புதம்.
    பராசக்தி துணை.
    வந்தே மாதரம்.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *