ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

“எப்ப வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது… ஆனால், வர வேண்டிய நேரத்தில் வருவேன்”…

இது பிரபல நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட வசனம். அவரது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதாக இந்த வசனம் அவரது ரசிகர்களை உசுப்பி வந்திருக்கிறது. அவர் கடந்த மே 15 முதல் மே 19 வரை சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது பல யூகங்களைக் கிளப்பிவிட்டது.  அந்த நிகழ்வின்போது கூறிய சில கருத்துகள், தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளன.

“நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இந்த உடம்பை நான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இதயத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அந்த ஆண்டவனிடம் நான் ஒரு கருவி. அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது நடிகனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்னவாகப் பயன்படுத்திகிறனோ அப்படி இருப்பேன். அவன் என்னவாகப் பயன்படுத்தினாலும் அதில் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோடு பணிபுரிவேன்” என்று அவர் பேசியபோது ரசிகர்கள் கரவொலி எழுப்பினர்.

இந்த முதல்நாள் பேச்சு ஏற்படுத்திய பரபரப்புக்கு இரண்டு நாள்கள் கழித்து விளக்கமும் அளித்தார் அவர். அப்போது,  “தமிழகத்தில் ‘சிஸ்டம்’ கெட்டுப்போய்விட்டது;  போர் (தேர்தல்) வரும்போது பார்த்துக் கொள்வோம்” என்று ரசிகர்களிடம் கூறியது, அவரது அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாகவே கருதப்படுகிறது. தனது பேச்சில் ஸ்டாலின், அன்புமணி சீமான் ஆகியோரை ரஜினி புகழ்ந்து பேசியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் அரசியலை விமர்சிக்கவும், அரசியலில் ஈடுபடவும் நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உரிமை உள்ளது. அதுபோலவே ரஜினியின் கருத்துகளை விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆயினும், அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவோ, தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை கிடையாது.

1996-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். அது அன்றைய திமுக- தமாகா கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. அன்றுமுதல், ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினிகாந்தின் அரசியல் பிரகடனத்தை எதிர்பார்ப்பது தமிழகத்தில் வழக்கமாகவே மாறிவிட்டது.

எனினும், நடிகர் ரஜினி அரசியலில் நுழையாமல் லாவகமாகத் தவிர்த்து வந்தார்; 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் பாஜகவுக்கு ஆதரவாக அவர் ‘வாய்ஸ்’ கொடுத்தார். எனவே அவர் பாஜகவில் சேரக் கூடும் என்ற யூகம் பரவுகிறது.

அதற்கேற்றாற்போல, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ரஜினிகாந்த் போன்ற நல்லவர்கள் தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு ரஜினி இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆயினும், தமிழக பாஜக சொந்தக் காலில் நிற்காமல் ரஜினி என்ற மாயக் கவர்ச்சியில் சிக்கிவிடக் கூடாது என்பதே பாஜக நலன் விரும்புவோரின் கருத்தாக இருக்கிறது.

இந்த நேரத்தில் ரஜினியின் நன்பரும், குழப்பமான அறிக்கைகளுக்குப் புகழ் பெற்றவருமான கமல்ஹாசன், ரஜினிக்கு அளித்துள்ள அறிவுரை தெளிவாக இருக்கிறது. மறைமுகமாக, ரஜினி அரசியலுக்கு வருவதைத் தடுக்க முயற்சித்திருக்கிறார் கமல். அதைவிட, தேமுதிக என்ற கட்சியைத் துவங்கி கையைச் சுட்டுக்கொண்ட நடிகர் விஜயகாந்தின் ஆலோசனை மிகுந்த பெறுமதி உடையது. இவற்றை மீறி தனிக் கட்சி துவங்குவதும், இன்னொரு கட்சியில் சேருவதும் ரஜினியின் விருப்பம். அதை ரஜினியே சொல்வதுபோல, ஆண்டவன் தீர்மானிக்கட்டும்.

இந்நிலையில், நடிகர் ரஜினியை வைத்து சில திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் பாரதிராஜா, “ரஜினி தமிழகத்தில் வாழ நினைக்கலாம்; தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது” என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். ஒரு நண்பராக இதை ரஜினியிடம் கூற பாரதிராஜாவுக்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது என்று ரஜினியை எச்சரிக்க அவர் யார்?

தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள், மாநிலத்திலுள்ள சுமார் 6 கோடி வாக்காளர்கள்தானே ஒழிய, பாரதிராஜா அல்ல. தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை பாரதிராஜாவுக்கு பெருமை சேர்க்காது.

நடிகர் ரஜினிகாந்தால் போராளி என்று போற்றப்பட்ட இயக்குநர் சீமானும், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வன்மையாகக் கண்டித்து வருகிறார். அவரது விமர்சனங்கள் எல்லை மீறி வருகின்றன. அதில் மொழிவழி தேசியப் பிரிவினையைத் தூண்டும் நோக்கமும் காணப்படுகிறது. இது நமது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. தமிழ்நாட்டில் முகவரியற்று இருந்த பிரிவினைவாத கோஷ்டிகள் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மெல்ல தலைதூக்கத் துவங்கியுள்ளதன் வெளிப்பாடே சீமான் போன்ற அரை வேக்காடுகளின் பிதற்றல்கள். அவர்களது அதீத எச்சரிக்கைகள், ரஜினி குறித்த அவர்களது மிகை அச்சத்தையே வெளிப்படுத்துகின்றன.

இத்தனைக்கும், ரஜினிகாந்த் தனது பேச்சில் அரசியல் களம் காணத் தயாராவதற்கான சிறு குறிப்பையே அளித்திருக்கிறார். அதற்குள், அவர் தமிழக அரசியலில் இறங்கி மக்கள் மனங்களை வென்று முதல்வராகவே ஆகிவிடப் போவதாக, பீதியுடன் சலசலக்கும் தமிழ்நேய ஆதரவாளர்களைக் காணும்போது பரிதாபமாக இருக்கிறது.

ரஜினிகாந்த் மக்களிடையே பிரபலமான, வசீகரமான நடிகராக இருக்கலாம். ஆனால், அரசியல் குறித்த அவரது பார்வை தெளிவானதாக இல்லை என்பது உண்மை திரைப்படத்தில் ஒரே பாடலில் பணக்காரன் ஆவதுபோல, அரசியலில் இறங்கியவுடன் புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்திவிட முடியாது- இதை அவர் அறியாதிருக்க முடியாது. ஆனால், அவரது பேச்சுகள் அப்படித்தான் இருக்கின்றன.

அரசியலில் ஒருவர் மக்கள் மனங்களை வெல்ல வேண்டுமானால், அரசியல் கட்சியை கட்டமைக்கும் வல்லமை வேண்டும்; கட்சிக்கான கொள்கைகளை வடிவமைக்கும் சமூக அறிவு வேண்டும்; ஒத்த சிந்தனை கொண்டவர்களை அரவணைத்து அவர்களை வழிநடத்தும் தலைமைப் பண்பு வேண்டும்; இவை அனைத்தையும்விட, ஓய்வற்ற உழைப்பும், அடித்தள மக்கள் எளிதில் அணுகக் கூடிய எளிமையும் வேண்டும்.

முதல் பிரதமர் நேரு முதல் இன்றைய பிரதமர் மோடி வரை, மகாத்மா காந்தி முதல் ஜெயபிரகாஷ் நாராயணன் வரை, காமராஜர் முதல் ஜெயலலிதா வரை, வெற்றிகரமான தலைவர்கள் அனைவருமே மேற்கண்ட பண்புகளால் உயர்ந்தவர்கள். நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுகளைக் காணும்போது, இந்த குணநலன்கள் அவருக்கு உள்ளனவா என்பதில் சந்தேகம் எழுவது இயல்பே.

ஒவ்வொருமுறை தனது புதிய படத்துக்குத் தயாராகும்போதும் அதற்கு முன்னோட்ட விளம்பரமாக அரசியல் யூகங்களைக் கிளப்புபவராகவே அவர் இருந்திருக்கிறார். தனது அரசியல் கொள்கை என்ன என்பது குறித்தோ, தனது பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்தோ அவர் சொன்னதில்லை. மந்திரத்தில் மாங்காய் விழ வைக்க முடியாது என்பதை அவர் முதலில் உணர வேண்டும்.

ரஜினி அரசியலில் இறங்குவாரா,  சாதிப்பாரா என்பன போன்ற கேள்விகளுக்கு முன்னதாகவே, அவரை நடிகர் என்பதற்காகவும், பிற மாநிலத்தில் பிறந்தவர் என்பதற்காகவும் எதிர்ப்பது எந்த அளவில் சரியில்லையோ, அதேபோல, அவர் பிரபல நடிகர் என்பதற்காகவே அவருக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பதும் தவறானதாகிவிடும்.

எது எப்படியாயினும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நன்மையாகவே இருக்கும் என்பது ஓர் அனுமானம். தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட, கடவுள் பக்தி மிகுந்த ரஜினி போன்ற ஒருவர் தமிழகத்துக்கு இப்போது தேவையே. தலைமையின்றித் தள்ளாடும் தமிழக அரசியலுக்கு விமோசனமாக ரஜினிகாந்த் வரட்டும். அதற்கு அவர் தன்னை தகுதி படைத்தவராக மாற்றிக் கொள்வதும் அவசியம்.

அதன்பிறகு அரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது.

 “நான் ஒரு தடவை சொன்னால், நூறு தடவை சொன்ன மாதிரி”…

8 Replies to “ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!”

  1. ரஜினி ஒரு வெத்து வேட்டு.அரசியலில் சினிமா கோமாளிகளின் செல்வாக்கு எடுபடாது.அது எம்.ஜி.யாா் மற்றும் ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது.ஜெயலலிதா இறந்த பின்னா்தான் தமிழகத்தை ஆளும் மந்திாிகளுககு சுதந்திரம் கிடைத்துள்ளது.அவரவா் துறைகள் குறித்து தகவல்களை அந்தந்ததுறை மந்திாிகள் மக்களுக்கு தொிவிக்கின்றாா்கள். இந்த கடமையுணா்வு செயல் திறன் இயல்பான நடைமுறை ஜெயலலிதாவால் மறுக்கப்பட்டு அடிமையாக சட்டமன்ற உறுப்பினா்களும் மந்திாிகளும் ஆக்கப்பட்டு வாழ்ந்து வந்தா்கள். ஜெயலலிதா ஆட்சி ஒரு அசிங்கம்.
    ரஜினி நல்ல நடிகா்.கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றாா். இந்து கலாச்சாரம் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்துவதில் ரஜினியின் திரைப்படங்கள் முன்னணியில் உள்ளன். நான் திரைப்படங்கள் பாா்ப்பதில்லை. 36 வருடங்கள் கழிந்த பின் விரைவு பேருந்தில் ஒரு நாள்.சிவாஜி படம் போட்டான்.முன் இருக்கையில் அமா்ந்த நான் படம் பாாத்தே ஆக வேண்டிய கட்டாயம் எற்பட்டது. அந்த படத்தின் கதாநாயகியாக வரும் அந்த தங்கை ஒரு காட்சியல் மட்டுமே முறையாக உடை அணிந்து காட்சி அளிப்பாா்.மற்ற இடங்களில் சகிக்கமுடியாத அளவில் அலங்கோலங்களில் அந்த நாயகி காட்சி அளிப்பாா். அதில் ஒரு உடையாவது ரஜனி தனது மனைவிக்கு அளித்து அணிந்து கொண்டு ஒரு பொது நிகழ்ச்சிக்கு வர முடியுமா ?இவா் மட்டும் காலில் ஷீ பேண்ட முழுகை சட்டை என்று தன்னை நாகரீகமாக உடை அணிந்து நடிக்கும் அவா் தனது கதாநாயகிகளுக்கும் முக்காலே முணு வீசம் அம்மண உடைதான்.இவன் எல்லாம் அரசியலுக்கு வந்தால் நாடு உருப்படுமா ?உருப்படாது.

  2. ரஜனி ஸ்டுயோக்களில் நடிப்பதுபோல் ரசிகா்கள் மத்தியிலும் நடித்து அரசியலைக் குறித்து பம்பநாத்து காட்டுகின்றாா். தனது படங்களுக்கு விளம்பரம் பெறவே இந்த தீடீர் அறிவிப்பகளை வெளியிடுகின்றாா் என்று நான் நினைக்கின்றேன்.
    பாரதிய ஜனதாக்கட்சியில் நல்ல ஆத்மாத்தமாக நாட்டுப்பற்று சிந்தனை உள்ள தொண்டா்கள் நிறையவே உள்ளாா்கள்.ரஜினி என்ற கழிவு நீா் பாரதீய ஜனதா என்ற கங்கையில் கலப்பது அசீங்கம். மிகுந்த நோ்மை உள்ளவா்கள் நிறைந்த பாரதீய ஜனதா கட்சியை தமிழ்நாட்டில் வளா்ப்பது சற்று கடினமான விசயம்தான்.மெதுவாகவே வளரும்.நிச்சயம் வளரும்.வளா்ந்து கொண்டிருக்கின்றது.பொறுமையிழந்து ரஜனி சமந்தா சந்தானம் மும்தாஜ் என்று இந்து பண்பாட்டை அழிக்கும் விஷவித்துக்களை கட்சியில் சோ்த்தால் விளைவு அசிங்கமாக இருக்கும்.பாரதீய ஜனதா கட்சியும் திராவிட கட்சிகள் போல் சாக்கடையாக மாறிவிடும். ரஜினி என்ற காக்காய் பொன் tinsel பாரதிய ஜனதா கட்சிக்கு தேவையில்லை.

  3. அரசியலில் திரைத்துறையினரின் செல்வாக்கு நீண்ட கால அளவில் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ரஜினியின் அரசியல் நுழைவு, என்னைப் பொருத்தவரை, தீமையே. அவர் நல்லவரா, கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. மற்ற நடிகர்களுக்கு அது மிகைக்கனவுகளை ஏற்படுத்தும், ரஜினிக்கு ஏற்பட்டது போல.

  4. ஈவேரா ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது, நிர்வாண சங்கத்தில் சேர்ந்து நிர்வாணமாக சுற்றிய அரசியல்வாதி. அப்படிப்பட்டவரை தலைவர் என்று சொல்லி கூத்தாடிகள் கட்சிகள் தான் கழகங்கள்.

    அப்படி இருக்கும் போது, திரைப்படங்களில் ஒரு நடிகைக்கு முக்கால் நிர்வாணமாக இருப்பது டைரக்டர் தரும் காட்சி அமைப்பு தான். எனவே தமிழ் படங்களை தொடர்ந்து பார்த்து வருவோருக்கு , கதாநாயகி என்பவர் ஒரு கவர்ச்சிப்பாவை என்பதே பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் உள்ள நிலை.உடை அமைப்புக்களை நடிகர்கள் தீர்மா னிப்பதில்லை.

    குல்லா வைத்தவன் எல்லாம் எம் ஜி ஆர் ஆகிவிட முடியாது. கறுப்புக் கண்ணாடி போட்டவனெல்லாம் தமிழ்வாணன் ஆகிவிட முடியாது.

    ஏற்கனவே தமிழக அரசியலில் சிவாஜி, டி ராஜேந்தர், பாக்கியராஜ், விஜயகாந்த், சரத்குமார் , ராமராஜன் என்று பலரும் இறங்கி, சிலர் எம் எல் ஏ ஆனார்கள். அதற்கு மேலே வரமுடியவில்லை. சிலர் எம் பி ஆனார்கள் . அதற்கு மேலே வரமுடியவில்லை. சிலரோ எதிர்க்கட்சித் தலைவரானார்கள். அதற்கு மேலே செல்வாக்கு இழந்தனர். சிலருக்கோ எம் எல் ஏ , எம் பி என்று ஒரு பதவியுமே கிடைக்காமல் தோல்வி அடைந்தனர். எனவே சினிமாக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக நம் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவதில்லை என்பதே உண்மை.

    ரஜினியை பொறுத்த மட்டில் , ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் தலைவர் இல்லாத ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது என்பதே உண்மை. அதனால் அந்த வெற்றிடத்தை நிரப்ப மக்கள் தலைவரை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ரஜினிக்கு வயது 67 -நடக்கிறது. இந்த வயதுக்கு மேல் சினிமாவில் நடிப்பது பெரிய விஷப்பரீட்சை போலத்தான். எனவே அவர் ஒரு பத்து வருடம் அரசியலுக்கு வந்தால் அவர் வயது என்பதை நெருங்கிவிடும். ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்கள் நிச்சயம் பேராதரவு தருவார்கள் . ஏனெனில் இன்று தலைவர் இல்லாத தமிழகம்.

    தமிழகத்துக்கு இன்று தலைவர் என்று ஆக விரும்பி போட்டியிடுவோரில் ஜாதிக்கட்சி நடத்தும் தலைவர்களும், பிரிவினையை தூண்டும் அயல்நாட்டுக் கைக்கூலிகளும், ஐ எஸ் ஐ எஸ் போன்ற மதவெறி வன்முறை கும்பலின் முகமூடிகளும், சொம்புகளும், மொழி , இன, ஜாதி வெறுப்புக்களை வளர்க்கும் வெறுப்பு அரசியல் வியாபாரிகளும் நிறைந்து உள்ளனர்.

    இப்படிப் பட்ட சூழலில் ரஜினி வருவதை மக்கள் எல்லோருமே வரவேற்கிறார்கள். ரஜினி வந்தால் பாலும் தேனும் ஓடும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் ஏற்கனவே நமது கழகங்களின் ஐம்பது வருட கொடுங்கோல் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட கொடுமைகளை தவிர வேறு புதிய கொடுமை எதனையும் அவர் நிச்சயம் செய்யமாட்டார். ரஜினி வந்தால் மொழி வெறுப்பு, ஜாதி வெறுப்பு, இனவெறுப்பு, பிரிவினை கும்பல் எல்லாமே தங்கள் வியாபாரம் படுத்துவிடுமே என்று தான் அஞ்சி , ஒரே கூச்சல் போடுகின்றன. மேலும் ரஜினி வந்தால், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை எதுவுமே நடக்காது. ஏனெனில் ஆற்றில் மணல் இருந்தால் தானே கொள்ளை அடிப்பதற்கு. ஏற்கனவே கழகங்கள் நன்றாக முழுவதும் சுரண்டிவிட்டன. இன்று உள்ள உண்மை நிலை என்னவெனில் , நமது மாநிலத்தில் கட்டிட வேலைகளுக்கு இனிமேல் வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து தான் மணல் வாங்க வேண்டும்.

    கிரானைட்டோ கேட்கவோ வேண்டாம். தேனீ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் இருந்த மலையையே காணவில்லை என்று போட்டோ ஆதாரத்துடன் பதிவுகள் வந்துள்ளன. ரஜினி வந்தால் இருக்கிற ஊழல் நிச்சயம் கூடாது. ஆனால் தலைமை என்ற ஒன்றாவது நமது மாநிலத்துக்கு கிடைக்கும். ஒரு சினிமா நடிகன் தான் தமிழகத்துக்கு தலைவனாகவேண்டுமா என்று கேட்பது முழு அறிவீனம்.

    தமிழகத்தில் 1967-இல் ஆரம்பித்து நாடக நடிகர்களும்,நாடக நடிகைகளும், திரைப்பட நடிகர்களும் , திரைப்பட நடிகைகளும் தான் கோலோச்சினார்கள் என்பது உண்மை. கழகங்களே நாடக் கம்பெனிகள் தான். அண்ணா அவர்கள் சந்திரமோகன்என்ற பெயரில் ஒரு நாடகத்தில் நடித்த நடிகர் . மேலும் பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிய வசனகர்த்தா. கம்பரசம் என்று எழுதி வக்கிரமான செக்ஸ் ரசனையை தமிழகத்தில் புகுத்தியவர். ரூபாய்க்கு மூன்று படி அரிசிப் பொய்யர். அவர் முதல்வராக இருக்கவில்லையா ?

    அவருக்கு பின்னர் வந்த கட்டுமரமும் நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் கதைவசனம் எழுதியதுடன் அண்ணாவைப் போலவே காகிதப்பூ என்ற நாடகத்தில் கதாநாயகராக நடித்த நாடக நடிகர் தானே.

    எம் ஜி ஆரோ கேட்கவே வேண்டாம். தமிழகம் கண்ட திரை நடிகர்களில் உலகப்புகழ் பெற்றவர். தமிழகம் கண்ட முதல்வர்களில் பெருந்தலைவர் காமராஜரும், மக்கள் திலகம் எம் ஜி ஆருமே மிக சிறந்தவர்களாக தமிழகம் கருதுகிறது. இவர்களுக்கு முன்னர் நல்ல மனிதர்களான ராஜாஜி, குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் முதல்வராக இருந்தபோது, அவர்கள் மிக குறுகிய காலங்களே பதவியில் இருந்தனர்.

    எம் ஜி ஆருக்கு பின்னர் முதல்வர் பதவி ஏற்ற திருமதி வி என் ஜானகி ராமச்சந்திரனும் திரைப்பட நடிகை தான்.

    எம் ஜி ஆரின் அரசியல் வாரிசாக கொள்கை பரப்பு செயலாளர், சத்துணவு திட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் என்றெல்லாம் எம் ஜி ஆரால் அறிமுகம் பெற்ற ஜெயலலிதாவும் ஒரு புகழ் பெற்ற திரைப்பட நடிகை தான்.

    எனவே அறுபத்தேழுக்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த திராவிடச் சீரழிவு , ரஜினி அரசியலுக்கு வருவதால் எந்த விதத்திலும் அதிகரிக்கப்போவதில்லை.

    ரஜினி அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று தோன்றுகிறது. அது தமிழகத்துக்கு வரமா , சாபமா என்பதை காலம் தான் தீர்ப்பு எழுதும். ஒன்று மட்டும் உறுதியாக சொல்லலாம் . ரஜினி ஆட்சியில் தேசவிரோத சக்திகளுக்கும், ஜாதிவெறுப்பு அரசியல் செய்வோருக்கும், மொழி இன வெறுப்பு அரசியல் செய்வோருக்கும் வேப்பங்காயை கடித்தது போலத்தான் இருக்கும். தங்கள் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடுமே என்று புலம்புகிறார்கள். அவ்வளவுதான்.

    தமிழக ஆட்சிகளில் கேடுகெட்ட ஆட்சி திமுக ஆட்சிதான். சர்க்காரியா, டூ ஜி, நிலப்பறி, மின்தட்டுப்பாடு, நடைப்பயணம் போவோர் படுகொலை, உயர்நீதிமன்றத்துக்குள் போலீசார் , வழக்கறிஞர்கள் மோதலால் நீதிபதியே ரத்தக்காயத்துடன் வெளியே தப்பி ஓட்டம், கிரானைட்டு மலைகள் மறைந்தன, இலங்கை தமிழர் லட்சக்கணக்கில் படுகொலை என்று ஒரே ஊழல் மற்றும் சோக வரலாறு. எனவே ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திமுக ஆட்சியை விட நல்ல ஆட்சியைத்தான் தருவார். காமராஜர், மொரார்ஜி , எம் ஜி ஆர் காலமெல்லாம் இனி திரும்ப வராது என்பதை நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.

  5. ஈவேரா ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது, நிர்வாண சங்கத்தில் சேர்ந்து நிர்வாணமாக சுற்றிய அரசியல்வாதி. அப்படிப்பட்டவரை தலைவர் என்று சொல்லி கூத்தாடிகள் கட்சிகள் தான் கழகங்கள்.

    ஈவேரா ஒரு அசிங்கம் என்பது எனது கருத்து.முக்கால் கிறுக்கன்.

    ரஜனி படங்களில் நடிகைகள் அணியும் உடைகளுக்கு யாா் பொறுப்பு என்பது அல்ல கேள்வி.

    அவைகள் பண்பாட்டு சீரழிவு என்பதுதான் எனது ஆதங்கம்.

    இன்று எங்கு பாா்த்தாலும் முழு முதுகை காட்டிக் கொண்டு ரவிக்கை அணிவது அசிங்கமாக உள்ளது.ஒரு திருமண மண்டபத்தில் மணமக்களைச்சுற்றி இப்படி முக்கால் முதுகைக் காட்டி ரவிக்கை அணிந்த பெண்கள் கூட்டம் ஆக்கிரமித்துக் கொண்டது. என்னால் மணமேடையை பாா்க்க கூச்சமாக இருந்தது.பாா்த்தால் அழகிய பெண்களிள்ன முக்கால் வீச முதுகு காட்சி அளிக்கின்றது.

    வேறு வழிியின்றி தலையை தாழ்த்திக் கொண்டேன்.
    ரஜினியை பற்றிய மாய பிப்பத்தில் அதீக நம்பிக்கை கொண்டு ஏதோ கற்பனையாக பதிவு செய்துள்ளாா்.அத்விகா.

    பாரதீய ஜனதாக் கட்சிக்கு ரஜனி பெரும் தீமையாக இருப்பாா். காத்திருந்து பாருங்கள். ரஜனி அரசியலுக்கு வரவே மாட்டாா். சினிமா வாய்ப்பு இருக்கும் வரை கோடிகளைக் குவித்துக் கொண்டேயிருப்பாா்கள்.பம்பாத்து பண்ணிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்ற அனைத்து தந்திரங்களையும் செய்வாா்.பாருங்கள்.

  6. It is clear from Advika’s post that she is living in fools paradise. If Rajini comes to politics, everything will get cleansed? It is news to me.

    It is not enough to be a good man to enter politics. You need to be capable, have leadership ability, be able to take people along etc.,

    Whether any of the present leaders have these traits is disputable but that does not justify rajini coming into politics.

    Assuming he comes to politics & forms his own party, what will happen? His fans would be made primary members of the party. They have been waiting for such a long time for this chance & will only be interested in making money. Some fans have openly said so.

    Assuming that he wins the election & comes to power, then the state will only go from bad to worse. Bcos rajini has absolutely no knowledge or opinion of the present conditions prevailing in the state or country.

    His past actions are proof enough. When there was a dispute between Fefsi workers & directors, he kept away. During the recent nadigar sangam elections also, he did not take a clear stand. His views on Cauvery water issue is well known.

    He has wisely invested his money in Karnatake & done little for tamils. In his films, however, he keeps saying that he is a true blue tamizhan. He knows that the cinema crazy tamilians can be taken for a ride.

    MGR was a popular CM but never a capable CM. Kumaraswamy Raja & Omandurar completed their full terms as CM with distinction. In fact, both of them refused a second tern. Their rule was even better than kamaraj’s.

    BJP can never ever hope to come to power in TN. They have no capable local leaders & there is a lot of infighting. Also, Modi has deprived TN of its natural rights & is only using the present CM as a puppet.

    Finally, we are debating all these points assuming that rajini will enter politics. But past record shows that he does such things only to promote his films. Even now, immediately after he met his fans & made such statements, the title of his latest movie “Kala” was announced the very next day.

    Moreover, his big budget film – “Robot 2″ is due for release soon.

    I will not be surprised if he continues to keep saying ” Only God knows when I will enter politics” etc., He has been saying so for the last 20 years & he may continue saying so for the next 20 years also.

    It is a sad state of affairs that people have started to think that a novice like rajinikanth should become CM. That is the most worrying part.

    Bharathi said ” Tamizhan endru sollada, thalai nimirndhu nillada”.

    Today, tamilians hang their heads in shame.

    Thank God, Bharathi is no longer alive to see this.

  7. அய்யா தாங்கள் சொல்லியிருப்பது பாஜக என்ற அரசியல் கட்சியின் எதிர்காலத்துக்கு சாதகமா பாதகமா என்ற கோணத்தில் சரியாக சொல்லியுள்ளீர்கள்.நான் பழைய ஸ்தாபனக் காங்கிரஸ் அனுதாபி. எனக்கு இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் மீது அபிமானமோ வெறுப்போ கிடையாது. பிரிவினை பேச்சுக்கள், ஜாதி அரசியல், மொழி, இன வெறுப்பு அரசியல் ஆகிய மூன்றும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என்று கருதுகிறேன். அந்த அடிப்படையிலேயே இன்றைய தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கிறது. இனியும் திராவிட இயக்கத்தின் பேரில் அரசியல் செய்வோர் கரங்களில் அதிகாரம் இருப்பது நன்மை பயக்காது என்று உறுதியாக தெரிகிறது.ரஜினி உடல்நிலை நன்றாக இருந்தால் அரசியல் கடிவாளத்தை எடுத்துக்கொள்ளட்டும் .

  8. திரு ரஜினிகாந்து அவர்கள் அரசியலுக்கு வருவது நல்லதா
    கெட்டதாஎன்று நாம் விவாத்திக்க வேண்டிய அவசியமே இல்லை .ஏனெனில் அவருக்கே அரசியல் பற்றி முடிவெடுக்க முடியாமல்
    மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். ஏதோ அவருக்கு ஒரு பயமோ,
    அல்லது ஏதோ ஒரு பாதுகாப்பை தேடும் உணர்வோ உள்ளுக்குள்
    இருக்கிறது .1996 ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக
    அவர் voice கொடுத்தபோது திரு சோ, திரு மூப்பனார், திரு கருணாநிதி , போன்ற கவசஉடை அணிந்து கொண்டு தான் பேசினார் இப்பொழுது கூட அவர் சீமான், ஸ்டாலின், ராமதாஸ் போன்ற தலைவர்களின் வார்த்தை கணைகளை சந்திக்க தைரியம் இல்லாமல் மயிலிறகாள் வார்த்தைகளை வடித்துள்ளார்.
    – SAKTHI PALANI.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *