ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3

இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.

3 – நம்மைப் பற்றிய உண்மை

இதுவரை நாம் இத்தொடரில் பார்த்ததை, பலருக்கும் புரியும் வகையில் ஜனரஞ்சகமாக எழுதினேன் என்று சொல்லலாம். அதை முதல் கட்டம் என்று எடுத்துக்கொள்வோம். இதில் வரும் தத்துவங்களைப் புரிந்து கொள்ளவும், பின் முடிந்த வரை அதன்படி அவரவர் வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்ளவும், சீரிய சிந்தனைகளால் உந்தப்பட்டவர்களுக்கே முடியும். அதனாலேயே ஆதி காலத்தில் இருந்தே சொல்லப் போவதென்ன, கேட்கப்போவர்களின் தகுதி என்னவாக இருக்கவேண்டும், கேட்பவர்களுக்கு என்ன பயன் என்பதைத் தொடக்கத்திலேயே கூறவேண்டும் என்ற விதியை வகுத்திருந்தார்கள். உதாரணத்திற்கு, ஆதி சங்கரரின் “ஆன்ம போதத்தில்” வரும் முதல் செய்யுளை, இப்பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள எனது நூலில் பார்க்கலாம். அல்லது இந்தக் கட்டுரையிலும் படித்து அறிந்துகொள்ளலாம்.

வேத பாடங்களில் மூன்று நிலைகள் இருப்பதாகச் சொல்வார்கள். முதல் நிலையில், அவை கூறுவதை அப்படியே எடுத்துக்கொள்ளாது அதன் பின்னணியில் உள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்வது. இரண்டாவதாக அவை கூறும் முறைகளைப் பின்பற்றி ஹோம யஞ்ஞங்களைப் புரிவது. மூன்றாம் நிலையில், அதில் வரும் வானசாஸ்திரக் கூற்றுகளை எடுத்துக்கொண்டு, வேண்டிய விவரங்களைக் கணிப்பது. இத்தொடரின் நோக்கம் முதல் நிலையான தத்துவங்களைப் புரிந்துகொள்வது மட்டுமே.

இரண்டாம் நிலை எதற்கு என்று கேட்பவர்களுக்கு எனது பதில் இதுதான். தத்துவங்கள் எவ்வளவுதான் உயர்ந்ததாக இருந்தாலும், காலப்போக்கில் அவை மறக்கப்படும், அல்லது நலிவடையும். அதனால் கூறப்படும் ஒவ்வொன்றுக்கும், ஒரு செயல்முறையையும் கற்பித்து வைத்து, அதைப் பரவலாகப் பலரும் செய்யும்போது, அதன் உள்ளர்த்தம் தெரியாவிட்டாலும் சமூக அளவில் வழக்கத்தில் அவை நிலைத்து நிற்கும் என்று நம் முன்னோர்கள் எண்ணியிருக்கவேண்டும். மூன்றாம் நிலை கால கட்டத்தைக் குறிப்பதற்கான ஒரு time stamp என்றும், சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்றும் கொள்ளலாம்.

நாம் போகும் பாதையில் இருந்து சற்று விலகி வேத காலத்துடன் தொடர்பு கொண்ட சில செய்திகளை அறியப்போகிறோம் . வேதமந்திரங்கள் செவி வழியாகக் கேட்கப்பட்டுப் பரவியது என்று பார்த்தோம். வெவ்வேறு முனிவர்களின் தவயோக நிலையில் உணரப்பட்டு (எண்ணத்தில் உதித்து அல்ல) அவை உருவாயின. ஏனென்றால் சிந்தனை என்பது இக வாழ்வுக்குத் தேவையானதே; அக வாழ்வுக்கு அல்ல. எண்ணங்களின் கலவை எங்கு இருக்கிறதோ அங்கு தனித்துவம் வருகிறது; மாசும் படர்கிறது. அதனாலேயே எண்ணக் கலப்பு இல்லாத நமது “த்ருஷ்டி” (பார்வை) மற்ற நான்கு புலன்களை விடத் தூய்மையாக இருக்கிறது என்றும் பார்த்தோம். அவ்வாறு முனிவர்கள் மூலம் உருவான மந்திர ஒலிகளைப் பிழை இல்லாமல் உச்சரிப்பதற்கென்று உருவானதே சம்ஸ்க்ருத மொழி. சம்ஸ்க்ருதம் என்றாலே “சீராக அமைந்த” என்று அர்த்தம்.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்த மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறுவார்: “இதயம் என்ற தமிழ்ச் சொல் ‘ஹ்ருதய’ என்ற சம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து வருகிறது. அதில் ‘ஹ்ரு’ என்பதற்கு ‘எடுத்துச் செல்வது’, ‘த’ என்பதற்கு ‘சுத்தம் செய்வது’, ‘ய’ என்பதற்கு ‘நகர்வது அல்லது துடிப்பது’ என்று பொருள். இவ்வாறாக இதயம் எப்போதும் துடித்துக்கொண்டே,அசுத்த இரத்தத்தை எடுத்து சுத்தி செய்து அனுப்பிக்கொண்டே இருக்கிறது அல்லவா? இவ்வாறு ஹ்ருதய என்ற சொல்லில் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு syllable-ம் அதன் செயலை விளக்குவது போல, சம்ஸ்கிருத சொற்கள், வாக்கியங்கள் என்ற அதன் ஒவ்வொரு அங்கமும் கூர்மையானவைகள்”. அவ்வாறான மொழியில் எழுதப்பட்டு இருப்பதாலேயே, பழமை மிக்க அந்த வேத மந்திரங்கள் ஆதி காலத்தில் எவ்வாறு ஓதப்பட்டதோ அதேபோல இன்றளவும் இம்மி பிசகாது ஓதுவதற்கு முடிகிறது.

மதம் என்று இன்று அறியப்படும் பிரிவினை எதுவும் கற்காலத்தில் இருந்ததில்லை. காலம் செல்லச்செல்ல, மக்கள் தொகை கூடக்கூட, வாழும் நெறிகளை உணர உதவும் தர்மக் கோட்பாடுகள் தேவைப்பட்ட சமயத்தில், மந்திர வடிவில் தோன்றிய நெறிகளே பிற்பாடு ரிக்வேத மந்திரங்களாக உருவெடுத்தன. மனிதன் இயற்கையில் கண்ட அனைத்து அதிசயங்களையும் உருவில் ஏற்றி ஒவ்வொன்றுக்கும் ஓர் இறை வடிவம் கண்டான். அவற்றில் ஆண் தன்மை (வல்லினம்), பெண் தன்மைகளைக் (மெல்லினம்) கண்டானே தவிர, ஆண்-பெண் என்ற பேதங்களைக் காணவில்லை. அந்தச் சொற்களும் அதில் இல்லை. பின்னர் உருவாகிய மொழிகளிலும் அந்த இனங்கள் வந்தன. வெளியுலகில் உலவும் பிறவிகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இக வாழ்வு வாழ்கின்றன என்று கண்டான்.

அதற்கு மிகவும் முக்கியமாக சூர்யன் இருப்பதை அறிந்துகொண்டான். எவ்வாறு ரிக் வேதத்தில் சூர்யக் கடவுள் உண்டோ, அதைப் பின்பற்றியே வந்த எகிப்து வழிபாட்டிலும் அப்பல்லோ என்னும் சூர்யக் கடவுள் உண்டு. இதேபோல வெவ்வேறு இயற்கை அம்சங்களுக்கு கிரேக்க, ரோமானியக் கடவுட்களும் உண்டு. இவை தவிர சம்ஸ்க்ருத மொழியில் இருந்தே ஐரோப்பிய மொழிகள் பலவும் உதித்தன என்பதே பல்வகை ஆராய்ச்சியாளர்களின் முடிவும் ஆகும். அத்தகைய தொன்மை வாய்ந்தது இந்த ரிக் வேதம். வாழ்க்கை நெறிமுறை என்னும் தர்மத்தைக் கூறுவதால் அதைப் பின்பற்றுபவர்களைச் சனாதன தர்ம வழி வந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டு, பின்னர் அவ்வழி இந்து தர்மம் என்றும், இந்து மதம் என்றும் ஆயிற்று.

சூரியன் உலகில் உயிர் வாழ ஆதாரமாக இருப்பதையும், அது தோன்றி மறைவதுடன் நமது பகல்-இரவு வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதையும் கண்ட வேதகால ரிஷிகள், அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்ந்தனர். பூமியை அன்னை என்றும், வானத்தைத் தந்தை என்றும் கூறிய அவர்கள், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தின் குணங்களையும் ஆராய்ந்து மந்திர ஸ்லோகங்களாகக் கூறினர். வெளியுலகை மட்டுமே ஆராயும் விஞ்ஞானத்தையும் மீறிய, வெளி மற்றும் உள் உலகத்தையும் ஆய்வு செய்தது போலவே அவர்கள் அன்று கூறியது இன்றும் உணரப்படுகிறது.

வானத்தில் உள்ள சூரியன் போல, உலகில் அக்னியையும், நம்முள்ளே உயிரையும் கண்டார்கள். என்றைக்கு ஒருவனது உயிர் பிரிகிறதோ அன்று சிவம் சவமாகி, அக்னி குளிர்ந்து அணைவதைக் கண்டனர். அதுவரை இந்திரன் நம்முள் இருந்து, பஞ்ச இந்திரியங்கள் மூலம் வெளிப்படுகிறான். அவனைக் குறிக்கும் வகையில்தான் அவைகளுக்கு அந்தப் பெயரே வந்துள்ளது என்பதைச் சிலரே அறிவார்கள்.

எப்போதும் வெளிப்பார்வை ஒன்றையே பார்க்கும் இந்திரியங்களை அடக்கி, அவைகளை உள்ளே நோக்க வைத்து உண்முகப் பார்வையை வளர்த்தால், தன்னை அறியும் மெய்ஞானம் வளரும் என்பதைக் கண்டனர். அதற்குச் சிந்தனைக் கலப்பு இல்லாத பார்வையையும் நீக்கி உள்ளொளி பெற ஒருமுகத் தியானம் செய்யவேண்டும். உலகம் தெரியும்வரை உள்ளது புலப்படாது. அவ்வாறு பெறப்படும் ஞான ஒளி சூரிய ஒளியினும் பல மடங்கு பெரிது என்றும், அதுவே தன் இருப்பிற்கு ஆதாரம் என்பதை அவரவரும் உணர்ந்து மட்டுமே தெரிந்து கொள்ளலாம்.

அந்த நிலையில் சோமன் எனும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் நாம் மூழ்குவோம். அதாவது தூல நிலையில் நாம் காணும் உடலுடன் நம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் வரை, நமது இயல்பான நுண்ணிய நிலையான ஆனந்தத்தை அடைய முடியாது. இவ்விரண்டையும் சேர்த்து நமக்கு மொத்தம் ஏழு நிலைகள் உள்ளன.

நம்மைச் சுற்றி இயற்கையாக அமைந்துள்ளதைக் கொண்டே நம் இறை எண்ணங்கள் உதித்தது போலவே, நம்முள் இயல்பாக எழும் சில உணர்வுகளையும், அதற்கான ஆதாரங்களையும் அலசி ஆராய்ந்தனர் வேதகால முன்னோர்கள். அதன் பயனாகத் தூல வடிவில் இருக்கும் உடல் போல, நுண்ணிய வடிவில் உள்ள நமது பல நிலைகளையும் கண்டறிந்து, நமது இருப்பின் தன்மையை உணர்வதே பிறந்துள்ள அனைவரின் இலக்கு என்று தெளிந்தனர். அதற்கு உடல் ஒரு கருவி என்றும், அதன் செயல் ஒவ்வொன்றும் அந்த இலட்சியத்தை எட்ட உதவ வேண்டும் என்றும் கூறினர். அந்த ஆன்மிகப் பயணத்தில் நமக்கு ஏழு நிலைகள் இருக்கின்றன.

அனைத்திலும் தூல வடிவில் முதலில் இருப்பது நம் உடல். அது ஒன்றுதான் பிறர் காணும்படி இருப்பது. அந்த உடல் இயங்க உதவும் நுண்ணியதான மூச்சுக் காற்று இருப்பதை நம்மையும் சேர்த்து மற்றவர்களும் உணரலாம்; ஆனால் காணமுடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களின் தொகுப்பான மனம் இருப்பதை அவரவர்கள் மட்டுமே உணரமுடியும். அதன் இருப்பை பிறர் நமது செயல் அல்லது வாக்கின் மூலமே ஓரளவிற்கு ஊகிக்க முடியும்.

நம் மனத்தை இயக்குவது அதனிலும் நுண்ணியதான புத்தி ஆகும். சில சமயம் ஒருவனுக்கே தன் புத்தியைப் பற்றிய தெளிவு இல்லாமல் போகும் வாய்ப்பு கூட இருக்கிறது. நாம் கேட்கும் கேள்விகள் எதுவானாலும் இத்துடன் நின்றுவிடுகின்றன. அந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலும், அவைகளும் அந்த நிலையிலேயே நின்றுவிடும். அதாவது வழிகாட்டியாக விளங்கும் குருவின் உபதேசங்களும் அந்த நிலை வரைதான் கைகொடுக்கும்.

இவைகளுக்கு மேலும் உள்ள மூன்று நிலைகளை ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அதனாலேயே “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்னும் சொல் வழக்கு ஏற்பட்டது. இருந்தாலும் அனைத்தையும் உணர்ந்த முனிவர்கள் ஓர் ஆத்ம சாதகனுக்கு உதவும் பொருட்டு அவைகள் என்ன என்று கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்பவர்களுக்கு அவை புத்தி அளவிலே நிற்குமே தவிர அனுபவமாக மாறாது. அதற்குச் சாதகன் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அனுபவத்தில் உணரவேண்டிய மற்ற மூன்று நிலைகளை இப்போது காண்போம்.

ஸ்தூலமான உடம்பில் இருந்து சூக்ஷ்மமான புத்திவரை நான்கு நிலைகளைப் பார்த்தோம். உயிரின் தூல வடிவான நம் மூச்சினை உடலின் ஒரு பகுதியாக இணைத்துவிட்டு, அதற்குப் பதிலாக மனத்திற்கும் அதைக் கண்காணிக்கும் புத்திக்கும் இடையில் “நான் தனி” என்று நம்மை உணரவைக்கும் நமது அகங்காரம் எனும் சூட்சம நிலையையே ரிக் வேதம் மூன்றாவதாகக் கூறுகிறது. எந்த முறையில் பார்த்தாலும், மொத்தம் உள்ள ஏழு நிலைகளில் புத்தி நடுவில் இருந்து, இக-பர எல்லைகளைப் பிரிப்பதோடு மட்டும் அல்லாமல், இக சுகங்களைக் கடந்து பர வெளியைக் கண்டறியும் கருவியாகவும் இயங்குகிறது.

அந்த நிலையைக் கடக்க நமது இந்திரியங்களும் பயனற்றவை; புத்தியும் ஒரு கட்டத்தில் “பிணம் சுடு தடி” போல தானும் கட்டையோடு கட்டையாகக் கரைந்து போக வேண்டியதுதான். அதனால் மனம் ஒழிகிறது. மனோநிக்ரஹம் அடைந்த அந்த நிலையில் “நான் உணர்வாய் இருக்கிறேன்” என்ற அனுபவம் தானாகவே சித்திக்கும். அவ்வாறு இருப்பதை “சத்” என்றும், அனுபவ உணர்வை “சித்” என்றும், அதனால் அடையப்பெறும் நிலையை “ஆனந்தம்” என்றும் அதை உணர்ந்தவர்கள் (முதல் மூன்று நிலைகளில் நின்று கேட்போருக்கு) விளக்குவார்கள். அதுதான் ஞானம் பெறுதல் எனப்படுகிறது. இவ்வாறாக மொத்தம் ஏழு நிலைகள் உள்ளன.

இதைக் கேட்பவர்களுக்கு அந்த விளக்கம் புத்தி அளவிலேயே கேட்டது நின்றுவிடும். தீர்த்த யாத்திரை, மூர்த்தி தரிசனம், விக்கிரஹ வழிபாடு எல்லாமே ஒருவனை அந்த இக-பர எல்லை வரை அழைத்துச் செல்ல உதவும். அப்படி என்றால் ஞான நிலையை அடைவதில், ரிக் வேதம் கண்ட இந்திரன், அக்னி முதல் சோமன் வரை உள்ளவர்களின் பங்களிப்பு என்ன என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.

“தான் ஆத்மா” என்பதை உணர்வதற்கு முன்னால், தான் ஏழு நிலைகளில் இருப்பதை வேறு விதமாகப் பார்த்த சிலர், அவை ஐந்து நிலைகள் என்றும் கூறுவது உண்டு. அதாவது தான் எப்போதும் ஆன்மாவாக இருப்பதை உணர முடியாது ஐந்து திரைகள் அல்லது உறைகள் உள்ளன என்பது அதன் பொருள். அந்த ஐந்தையும் கோசங்கள் என்பார்கள். ஐந்தோ, ஏழோ இரண்டும் ஒன்றே என்பதைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.

இருப்பதிலேயே மிகவும் ஸ்தூலமான உடல் வளர்வதற்கு உணவு தேவையாக இருப்பதால் உடலை அன்னமய கோசம், அதனிலும் நுண்ணியதான சுவாச நிலையை பிராணமய கோசம், மனத்தை மனோமய கோசம், இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து அறிய உதவும் புத்தியை விஞ்ஞான மய கோசம் என்று முதல் நான்கு நிலைகளைக் குறிப்பிடுவார்கள். இந்த அளவில் உலக சம்பந்தமான விஷயங்களுக்கு ஓர் எல்லை வருவதால், இனி உணரப்படும் சத்-சித்-ஆனந்த நிலை மூன்றையும் இணைத்து ஆனந்த மய கோசம் என்பதை ஐந்தாவதாக அவர்கள் வகைப்படுத்துவார்கள். பின்னர் வந்த நூல்கள் இவ்வாறு கூறுவதால் இவை இரண்டிற்கும் வேற்றுமை இல்லை என்பதை அறிவது நல்லது என்று தோன்றியதால் இதை இங்கு எடுத்துக்காட்டினேன். சரி, மேலே செல்வோம்.

இயற்கையில் காணப்படும் அனைத்தையும், தேவையானால் உருவகப்படுத்தி, அவைகளுக்கு வேதகாலத்து ரிஷிகள் பெயர்களையும் வைத்தார்கள் என்றாலும், அவை எதனையும் அவர்கள் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. காணும் அனைத்தும் மூலமாகிய ஒன்றின் வெவ்வேறு வெளிப்பாடுகளாகவே அவர்கள் அவைகளைக் கண்டார்கள்.

அதே சமயம் நிலம்-ஆகாயம், நெருப்பு-நீர், மலை-சமவெளி என்பன போன்ற முரண்பட்ட தன்மைகளைக்கொண்டு இருந்தும், ஒன்றுக்கொன்று அவைகள் உதவி வளங்களைப் பெருக்க உதவும் ஆண்-பெண் தன்மைகளை மனத்தில் கொண்டே அவர்கள் பல தெய்வீகங்களைப் பற்றி விவரித்தார்கள். அதுவே சகல சீவராசிகள் நடுவே காணப்பட்டதையும் அறிந்துகொண்டார்கள்.

அந்த வரிசையில் அவர்கள் வளங்களைக் கொழிக்கும் பெண் தன்மை கொண்ட நிலத்தை அன்னை என்றும், அதற்கு உதவி, பரந்து காணப்படும் வானத்தைத் தந்தை என்றும் விவரித்தார்கள். நிலத்தைக் காத்து வளர்ப்பது வானத்தின் கடமை என்று கருதினார்கள். இது போன்ற எண்ணங்களே பின்னர் உருவாகிய தெய்வ வடிவங்களில் பிரதிபலித்ததே அல்லாமல், மனிதர்கள் உள்ளிட்ட சீவராசிகள் இடையே காணப்பட்ட ஆண்-பெண் பிரிவினால் அவை உருவாகவில்லை.

உயர்ந்த தத்துவத்தின் வெளிப்பாடே இந்த உலகம் மற்றும் உலகில் உள்ள அனைத்து சீவராசிகள் என்பதை உணர்ந்த வேதகால முனிவர்கள், உள்ளது-வெளிப்படுவது என்ற இரண்டு தன்மைகளையே ஆண்-பெண் என்று கூறி, எதிலும் இவ்விரண்டும் இருப்பதையே ஆண்-பெண் தெய்வங்களாக உருவகப்படுத்தினர். மற்றபடி தெய்வீகம் ஒன்றே என்றும், அந்த ஒன்றே பல விதமாக இருப்பதாக நமக்குத் தெரிவதாகவும் விளக்கினார்கள்.

சென்ற நூற்றாண்டின் படைப்பான ரமண மஹரிஷியின் “உள்ளது நாற்பது” முதல் செய்யுளிலும் “நாம் உலகம் காண்டலால் நானாவாம் சக்தி உள, ஓர் முதலை ஒப்பல் ஒருதலையே” என்பதும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. மேலும் அவர் தொடர்ந்து, “நாம உரு சித்திரமும் பார்ப்பானும் சேர்படமும் ஆரொளியும் அத்தனையும் தானாம் அவன்” என்பார். அதாவது பெயர், உருவம், காட்சி-காண்பான்-காணப்படும் பொருள் மற்றும் காண்பதற்குத் தேவையான ஒளி அத்தனையும் அந்த ஒருவனே என்று உள்ள பொருளைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார். வேத காலத்தில் இருந்து இன்று வரை பிரம்மத்தை அனுபவித்து பிரம்மமாகவே இருந்தவர்கள் கூறிய அடிப்படை உண்மை இது ஒன்றே.

அதனால் பூமி அன்னை, ஆகாயம் தந்தை என்று கூறப்படுவதை இருக்கும் ஒரு பொருளின் இரு தன்மைகளாகக் கருதவேண்டுமே அல்லாது, இருவேறு பொருட்களாகக் கொள்ளுதல் தவறாகும். அவ்வாறு அறிவதைப் பகுத்து அறிவது என்று அறிந்துகொண்டு ஒதுக்கவேண்டும்.

(தொடரும்)

One Reply to “ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3”

  1. படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *