ஆவணி அவிட்டம் எனும் வேதத்திருநாள் சிந்தனைகள்

ௐ. பிராம்மண தர்மம் செழிக்கட்டும்; அது எனக்கருள் புரியட்டும். க்ஷத்திரிய தர்மம் செழிக்கட்டும்; அது எனக்கருள் புரியட்டும். அன்ன ரஸம் செழிக்கட்டும்; அது எனக்கருள் புரியட்டும். செல்வம் செழிக்கட்டும்; அது எனக்கருள் புரியட்டும். உடல் வளம் செழிக்கட்டும்; அது எனக்கருள் புரியட்டும். பிரஜைகள் செழிக்கட்டும்; அவை எனக்கருள் புரியட்டும். பசுக்கள் செழிக்கட்டும்; அவை எனக்கருள் செய்யட்டும்

– யஜுர்வேதம், தைத்திரீய ப்ராஹ்மணம், முதல் மந்திரம்.

ब्रह्म॒ संध॑त्तं॒ तन्मे॑ जिन्वतम् । क्ष॒त्रꣳ संध॑त्तं॒ तन्मे॑ जिन्वतम् । इष॒ꣳ॒ संध॑त्तं॒ तां मे॑ जिन्वतम् । ऊर्ज॒ꣳ॒ संध॑त्तं॒ तां मे॑ जिन्वतम् । र॒यिꣳ संध॑त्तं॒ तां मे॑ जिन्वतम् । पुष्टि॒ꣳ॒ संध॑त्तं॒ तां मे॑ जिन्वतम् । प्र॒जाꣳ संध॑त्तं॒ तां मे॑ जिन्वतम् । प॒शून्थ्संध॑त्तं॒ तान्मे॑ जिन्वतम् । स्तु॒तो॑सि॒ जन॑धाः । दे॒वास्त्वा॑ शुक्र॒पाः प्रण॑यन्तु ॥

– यजुर्वेद, तैत्तिरीय-ब्राह्मणम् १.१.१.१

ௐ. தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். பூஜைக்குரியவர்களே! கண்களால் நாங்கள் நல்லனவற்றைக் காணவேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடல்களுடன் துதித்துப் போற்றிக் கொண்டு தேவர்களுக்கொப்பான ஆயுள் எவ்வளவோ அதனை அடைவோமாக. பெரும்புகழ் வாய்ந்த இந்திரன் நமக்கு நன்மை (அளிக்கட்டும்). எல்லாவற்றையும் அறியும் சூரியன் நமக்கு நன்மை (அளிக்கட்டும்). தடைபடாத கதியுடைய பெரும்புள் [கருடன்] நமக்கு நன்மை (அளிக்கட்டும்). பிருஹஸ்பதி நமக்கு நன்மை (அளிக்கட்டும்).

– யஜுர்வேதம், தைத்திரீய ஆரண்யகம், முதல் மந்திரம்.

भ॒द्रं कर्णे॑भिः शृणु॒याम॑ देवाः । भ॒द्रं प॑श्येमा॒क्षभि॒र्यज॑त्राः। स्थि॒रैरङ्गै᳚स्तुष्टु॒वाꣳस॑स्त॒नूभिः॑ । व्यशे॑म दे॒वहि॑तं॒ यदायुः॑ । स्व॒स्ति न॒ इन्द्रो॑ वृ॒द्धश्र॑वाः । स्व॒स्ति नः॑ पू॒षा वि॒श्ववे॑दाः । स्व॒स्तिन॒स्तार्क्ष्यो॒ अरि॑ष्टनेमिः । स्व॒स्ति नो॒ बृह॒स्पति॑र्दधातु ॥

– यजुर्वेद, तैत्तिरीय-आरण्यकम् १.१.१

இன்று ஆவணி அவிட்டம் யஜுர்வேத உபாகர்மா நாளன்று மகா சங்கல்பம், ரிஷி தர்ப்பணம், ஹோமம், வேதாரம்பம் ஆகிய புனித சடங்குகளை சிரத்தையுடன் செய்து வைதிக தர்மத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கும் அனைத்து வேத நெறியாளர்களுக்கும் வந்தனம்.

ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படும் உபாகர்மா என்ற புனித சடங்கானது தற்காலத்தில் பெரும்பாலும் வைதிக நெறிப்படி வாழும் அந்தணர்களாலும், கூடவே, பாரம்பரியமாக பூணூல் அணியும் வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துவரும் மற்ற சமூகத்தினர்களில் சிலராலும் வருடந்தோறும் சிரத்தையுடன் அனுசரிக்கப் படுகிறது. ஆண்களும் பெண்களும் அனைத்து வர்ணத்தினரும் வேதம் கற்ற பண்டைய காலகட்டங்களில் இத்தகைய புனிதச் சடங்குகள் அனைவருக்குமானவையாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமில்லை. இதற்கான சான்றுகள் வேத, உபநிஷதங்களிலும், இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலும் உள்ளன.

வெறும் “பூணூல் மாற்றும்” சடங்கு மாத்திரம் அல்ல இது. அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கான பிராயச்சித்தம், வேத ரிஷிகளுக்கான தர்ப்பணம், ஹோமம் மற்றும் வேதாரம்பம் ஆகியவை இதனுள் அடங்கியுள்ளன. மழைக்காலத்தில் வேத குருகுலங்களில் கல்வி கற்பது தடையுறும். பின்பு அப்பருவம் கழிந்தபின் தொடரும். அந்த இடைவேளையின் தொடக்கமாக இச்சடங்கு அமைந்துள்ளது எனலாம். வேதாரம்பம் என்பதில் குறிப்பிட்ட வேத சாகையின் ஸம்ஹிதா, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத் என்ற நான்கு பாகங்களிலும் உள்ள முதல் சில மந்திரங்கள் சம்பிரதாயமாக குருமுகமாக ஓதப்படும். கூடவே வேதக்கல்வியின் அங்கமாக உள்ளவையான கிருஹ்ய, ஶ்ரௌத, தர்ம ஸூத்ரங்கள் (ஆபஸ்தம்பம் போல), ஜைமினி தர்மஸூத்ரம், பிரம்மஸூத்ரம், சம்ஸ்கிருத இலக்கணம் முதலானவற்றிலிருந்து ஆரம்ப வாசகங்கள் ஓதப்பெறும். ஆவணி அவிட்டத்தின் மிக முக்கியமான பகுதி இந்த வேதாரம்பம். மேலே கொடுத்துள்ள இரண்டு மந்திரங்களும் இதில் வருபவை.

வேத ரிஷிகளின் விசாலமான ஞானமும், உலக நன்மையையே எப்போதும் கருதும் அவர்களது அருள் நெஞ்சமும் இந்த மந்திரங்களில் வெளிப்படுகின்றன. முதல் மந்திரத்தில் பிராம்மண, க்ஷத்ரிய வர்ணங்கள் அந்தப் பெயர்களின் வாயிலாகவும், வைஶ்ய, ஶுத்ர வர்ணங்கள் அன்ன ரஸம், செல்வம் ஆகிய சொற்களின் மூலமும் சுட்டப் படுகின்றன. வேதத்தின் நால்வர்ணம் குறித்து மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் கூறிய கீழ்க்காணும் கருத்து இந்த மந்திரத்திலிருந்தே பெறப்பட்டது என்று கருதலாம்.

“இங்கு சமூகத்தின் நான்கு பிரிவுகள் சிருஷ்டிக் கடவுளின் உடலில் இருந்து, அவரது சிரம், புஜங்கள், தொடைகள் மற்றும் பாதங்களில் இருந்து உதித்ததாக சித்தரிக்கப் படுகிறது. நமக்கு இது ஒரு கவித்துவமான உருவகமாகத் தோற்றமளிக்கிறது – பிராமணர்கள் அறிவின் மக்கள், க்ஷத்திரியர்கள் ஆற்றலின் வடிவம், வைசியர்கள் உற்பத்தி செய்பவர்கள், சூத்திரர்கள் பணி செய்பவர்கள். ஆனால், ரிஷிகளுக்கு சிருஷ்டிக் கடவுளின் உடல் என்ற இந்தக் குறியீடு, ஒரு உருவகம் மட்டுமல்ல, அதை விட மேலானது. தெய்வீக சத்தியத்தை வெளிப்படுத்தி நிற்பது. அவர்களைப் பொறுத்த வரையில் மனித சமுதாயம் என்பது பிரபஞ்ச வடிவான புருஷனைத் தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்தும் முயற்சியே ஆகும். ஏனெனில் புருஷனே தன்னை பௌதீக உலகமாகவும், பருவெளிக்கு அப்பாலான பிரபஞ்சமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இங்கு நாம் காணும் கருத்து என்ன? நான்கு பிரிவுகளும் எதை வெளிப்படுத்துகின்றன? தெய்வீகத்தை அறிவாகவும், தெய்வீகத்தை ஆற்றலாகவும், தெய்வீகத்தை உற்பத்தி – துய்த்தல் – ஒத்துழைப்பு என்பதாகவும், தெய்வீகத்தை தொண்டு – பணிதல் – வேலை என்பதாகவும் அவை வெளிப்படுத்துகின்றன. இந்த நான்கு பிரிவுகளும் நான்கு பிரபஞ்ச விதிகளுக்கு பொறுப்பாகின்றன”.

இப்புனித நாளில் வெற்றுச் சடங்கோடு நின்றுவிடாமல் வேதம் உணர்த்தும் இந்த மகத்தான, தெய்வீக உண்மைகளைக் கற்போம், சிந்திப்போம், தியானிப்போம்.

. பசுக்கூட்டத்தின் நடுவில் ரிஷபம் போல மந்திரங்களிடையில் சிறந்து எங்கும் விளங்குவதும், வேதங்களில் காயத்ரீ முதலான சந்தஸ்களில் புகுந்து உறைவதும், நல்லோர்களால் அடைதற்குரியதும், உபநிஷத ரஹஸ்யத்தை ஆதியில் விளக்குவதுமான அந்த (அனைத்தையும் அளிக்கும் ஓங்காரமாகிய) இந்திரன் மூத்தோன் ! ஞான சாதனமான இந்திரியங்களின் வலிமையின் பொருட்டு ரிஷிகளுக்கு நமஸ்காரம். தேவதைகளுக்கு நமஸ்காரம். பித்ருக்களுக்கு ஸ்வதா என்று வணக்கம். பூ: புவ: ஸுவ: என்ற வியாஹ்ருதிகளும் வேதம் அனைத்தும் ஓம்.

பிரம்மத்திற்கு நமஸ்காரம். ஞாபக சக்தி என்னிடம் நிலைத்திடுக. மறதி இல்லாமல் தரிப்பவனாக யான் ஆகுக. காதுகளால் கேட்டது என்னைவிட்டு விலகாமல் இருந்திடுக. ஓம்.

– மஹாநாராயண உபநிஷத் 8-9, தைத்தியாரண்யகம் பத்தாவது ப்ரபாடகம், கிருஷ்ண யஜுர்வேதம்.

यश्छन्दसामृषभो विश्वरूपश्छन्दोभ्यश्चन्दाꣳस्याविवेश । सताꣳशिक्यः प्रोवाचोपनिषदिन्द्रो ज्येष्ठ इन्द्रियाय ऋषिभ्यो नमो देवेभ्यः स्वधा पितृभ्यो भूर्भुवस्सुवश्छन्द ओम् ॥ नमो ब्रह्मणे धारणं मे अस्त्वनिराकरणं धारयिता भूयासं कर्णयोः श्रुतं मा च्योढं ममामुष्य ओम् ॥

– महानारायणोपनिषत् ८.१, ९.१

மேற்குறிப்பிட்டது முறையாகக் கற்ற வேதமந்திரங்கள் மறவாமல் இருக்க ஜபிக்கும் மந்திரம் (वेदाविस्मरणाय जपमन्त्रा:). இதை ஒருவரிடம் கூறியபோது, இதுவரை ஒரு ஸுக்தத்தைக் கூட கற்றுக் கொள்ளவில்லை, அதனால் மறப்பது பற்றிய பேச்சே இல்லை என்று நிறைய அசட்டையும், சிறு வருத்தமும் கலந்த குரலில் கூறினார்.

இத்தகைய பிரம்ம பந்துக்கள் ஒவ்வொரு ஆவணி அவிட்டத்திற்கும் வந்து “பூணூல் மாற்றுவது” என்பதோடு நின்றுவிடாமல், நித்ய சந்தியாவந்தனம், சில அடிப்படையான வேத மந்திரங்களைக் கற்று ஓதுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கான தூண்டுதலைப் பெற அன்னை பராசக்தி அருள்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *