பா.ஜ.க. கைவிட்ட ‘சமரசதா’

[ஆர்.எஸ்.எஸ் பதிப்பகத்தின் ‘விவேக்’ மராத்தி வாரந்திர இதழ் எடிட்டர்– ரமேஷ் பதங்கே அவர்கள் எழுதியதன் மொழிபெயர்ப்பு.]

rahul-bdayகடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி வெளிவந்த ‘தைனிக் ஜாகாரன்’ என்ற தினசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியான செய்தி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ‘ராகுலின் பிறந்தநாளை பகுஜன் சமாஜ் கட்சி வெட்க தினமாகக் கடைப்பிடிக்கும்’ என அச்செய்தித் தலைப்பு கூறியது. உத்திரப்பிரதேச அரசியலில் தலித் ஓட்டு வங்கி ஒரு போர்க்களமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் உற்சாக மிகுதியுடன் தங்களுடைய பழைய ஓட்டு வங்கியை திரும்பப் பிடித்து நிலைநிறுத்த ராகுலின் 39ஆவது பிறந்த நாளை (ஜுன் 19) ‘சமரசதா தினம்’ – நல்லிணக்க நாள் எனக் கொண்டாடுவதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள். உடனே பகுஜன் சமாஜ் கட்சி அன்றைய தினத்தை ‘வெட்க தினமாக’ (லஜ்ஜா தின்) கடைப்பிடிப்போம் என பதில் கொடுத்தார்கள். மாயாவதியின் கட்சி தங்களது தலித் அஜண்டாவிற்குத் திரும்பிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்டபத் தொடங்கியுள்ளது.

ராகுலின் பிறந்த நாளை சமரசதா தினமாகக் கடைப்பிடிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு மனதில் மகிழ்ச்சி பொங்கியது. கடந்த 1983ல் இருந்து சமுதாய நல்லிணக்க அமைப்புப் பணிகளை நேரடியாக நான் செய்து வருகிறேன். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சமுதாய சிந்தனையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் ‘சமரசதா’ என்ற வார்த்தையைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரச் செய்ய நாம் மிகுந்த முயற்சியை எடுக்க நேர்ந்தது. இன்று இந்த வார்த்தையை அகில பாரத அளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள். மும்பையிலிருந்து ஹவுரா நோக்கிச் செல்கின்ற ஒரு ரயிலுக்கு கூட ‘சமரசதா எக்ஸ்பிரஸ்’ (நல்லிணக்க விரைவு வண்டி) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமரசதா எனும் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தி அங்கீகாரம் கொடுத்து, ராகுலின் பிறந்த நாளுடன் அதை இணைத்துக் கொண்ட காங்கிரசுக்கு நமது பாராட்டுக்கள்.

ஆனால் இவ்வேளையில் எனக்குள் வேறு ஓர் எண்ணம் கூட எழுகிறது. சமரசதா (நல்லிணக்கம்) என்ற வார்த்தையானது ஆர். எஸ். எஸ். சிந்தனைக் களஞ்சியத்தில் இருந்து உருவான வார்த்தை ஆயிற்றே! பண்டித தீனதயாள் உபாத்யாயா அவர்களால் இயற்றப்பட்ட ‘ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற நூலில் ஒரு அத்தியாயத்தினுடைய தலைப்பே ‘சமரசதா – வ்யஷ்டி, சமஷ்டி (நல்லிணக்கம் – தனி நபர் சமுதாயம்) என்பதாகும். ஆகவே இந்த வார்த்தைக்கு முதல் வாரிசுதாரர்களாகக் கூடிய உரிமை பா.ஜ. கட்சிக்கு மட்டும் சொந்தமல்லவா…? அரசியல் துறையில் இவ்வார்த்தையைப் பயன்படுத்தி இதன் மீது மக்களுக்கு விருப்பம் உருவாக்கிட பா.ஜ.க. சிறப்பு கவனம் கொடுத்திக்க வேண்டாமா? ஏதாவது ஒரு மகாபுருஷருடைய பிறந்த நாளை சமரசதா தினமாகக் கடைப்பிடித்துக் கொண்டாடி மக்களுக்கும் பழக்கப்படுத்தி இவ்வார்த்தையைப் பிரபலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த உரிமையை பா.ஜ.க. கைவிட்டுவிட்டது. காங்கிரஸ் அதை ராகுலின் பிறந்த நாளுடன் இணைத்துக் கொண்டது.

அரசியல் லாபத்தை இலக்கு வைத்தே காங்கிரஸ் இதைச் செய்திருக்கக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. அதில் தவறும் இல்லை. சாதாரணமாக எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் லாபத்தை மையக்கருத்தாகக் கொண்டுதான் பணியாற்றுகிறது. காங்கிரஸ் மட்டும் விதிவிலக்கா என்ன? உத்திரப்பிரதேசத்தில் மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. ஜெகஜீவன்ராம் உயிருடன் இருந்த காலத்தில் வட இந்தியாவில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் உட்பட அனைத்து தலித்துகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தார்கள். காலம் மாறிப்போய்விட்டது. மீராகுமார் அந்த ஜெகஜீவன் ராமின் மகள் ஆவார். தற்பொழுது நாடாளுமன்ற சபாநாயகராகவும் அவர் இருக்கிறார்.

அவரை சபாநாயகராக அறிவித்ததன் பின்னணியில் உள்ள அரசியல் பலருக்கும் தெளிவாகத் தெரியும். உத்தரப் பிரதேசத்தில் மாயாவதிக்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்தவேண்டியிருக்கும். அப்பொழுது ஜெகஜீவன் ராமின் மகள் அப்போராட்டத்தில் முன்னணியில் இருக்க வேண்டும். மீராகுமாருக்கு அந்தத் திறனும் உள்ளது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தன்னை விட அதிகமான திறமையுடையவர் மீராகுமார் என்பது மாயாவதிக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் வேடிக்கை என்னவென்றால், இதெல்லாம் தெரிந்தும் கூட பா.ஜ.க. அங்கே இத்தனை ஆண்டுகளாக எந்தவித ஆக்கபூர்வச் செயலிலும் இறங்கவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கும் ராகுலுக்கும் இந்த அரசியல் உண்மைகள் rahul-bday2நன்றாகத் தெரிந்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் தங்களுடைய அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்த வாக்காளர்களைத் தங்களின் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும், வாக்கு சதவீதத்தை கணிசமாக உயர்த்த வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொண்டு தலித் மக்களைக் கவர்ந்திழுக்க திட்டம் தீட்டியுள்ளது காங்கிரஸ். அதற்குப் பொறுப்பாளராக ராகுல் உள்ளார். அவர் தலித் குடிகளுக்குச் சென்று அவர்களுடன் ஒன்றாக உணவைச் சாப்பிட்டு, அங்கேயே படுத்து உறங்கி தனது பணியைத் துவங்கிவிட்டார். அதை அரசியல் ஸ்டண்ட் என யாரும் கூற முடியாதபடி அவர் தொடர்ந்து பணியாற்றுகிறார். சமரசதா எனும் செயலை உண்மையான மனசாட்சியுடன் செய்ய வேண்டுமே என நீங்கள் கருதலாம். அது இதயத்தின் அடிமட்டத்திலிருந்து எந்த எதிர்பார்ப்புமின்றி வரவேண்டியது எனவும் கூறலாம்.

ஆனால் இப்படி நாடகம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசியல்வாதிகள் உள்ளனரே? அதைத் தானே ராகுலும் செய்கிறார். சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். ஜாதி வேறுபாடுகள் இல்லையென்றாக்க வேண்டும் போன்ற விஷயங்களை, ஒரு அரசியல் கட்சியும் தங்களது கொள்கையாக அறிவித்து கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் ஜாதி மோதல்ளையும், வேறுபாடுகளையும் விரும்புகிறார்கள். அதன் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் ஓட்டுச் சதவீதத்தைக் கணக்குப் போடுகிறார்கள்.

‘அரசியல் ரீதியாக நீங்கள் எங்களுக்கு தீண்டத் தகாதவர்கள் அல்ல. உங்களைப் பற்றி எங்கள் மனதில் தீண்டாமை இல்லை’ என்ற செய்தியை நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நற்செய்திகள் சமுதாய மனங்களின் அடிமட்டம் வரை சென்றடைய வேண்டும். ராகுல் இதைச் செய்ய விரும்புகிறார்.

சமரசதா தினமாக ராகுலின் பிறந்த நாளை காங்கிரஸ் mamata-banerjeeகடைப்பிடிக்கப் போவதை அறிந்த மாயாவதி கோபப்படுவது நியாயம்தான். அதற்காக ராகுலின் பிறந்த நாளை வெட்க தினம் என அறிவித்தது நமது கண்ணோட்டத்தின்படி முட்டாள்த்தனமாக உள்ளது. என்ன செய்வது, ”அம்மா நீங்கள் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடக்கூடாது,” என அவரை நோக்கி துணிச்சலுடன் கருத்துக் கூற அக்கட்சியில் எவருமே தைரியப்படமாட்டார்கள் அல்லது அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த இடத்தில் மகாராணியைப் போன்று மாயாவதி வீற்றிருக்கிறார் எனக் கூறுலாம். அவர் மட்டும் சர்வ வல்லமை பொருந்திய மகாராணியாகவும் மற்ற அனைவருமே (அமைச்சர்கள், கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் உட்பட) வெறும் சபையினர்களாகவும் இருப்பதைப் போன்ற நிலைமை அங்கு உள்ளது. இந்த மகாராணி அரசியல் கொஞ்சகாலம் கூட நீடிக்கலாம். ‘மாயாவதி உத்தரப்பிரதேசத்தினுடைய முதல் அமைச்சராக இருந்தார்’ என எழுதும் காலம் கூடிய விரைவில் வந்துவிடும். சூழ்நிலை அதற்கேற்ப வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.

தலித் சமுதாயம் என்றால் அது தனக்கு மட்டும் சொந்தமான ஓட்டு வங்கி என மாயாவதி நினைக்கிறார். எல்லா தலித் இன மக்களும் தனது ஏவல் ஆட்கள் என்ற மமதையில் அவர் வாழ்கிறார். ஆகவே தலித் ஓட்டு வங்கிக்கு வேறொரு சொந்தக்காரர் வரும்பொழுது மாயாவதியால் தாங்கிக் கொள்ளமுடியாது. ஆனால் இன்று நிலைமை மாறிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘எந்த ஒரு தலைவருக்கும் கீழ் அடிமைகளாக நாங்கள் இல்லை’ என தலித்துகள் பேசத் துவங்கியுள்ளது மாயாவதியின் செவிக்கு எட்டியதாகத் தெரியவில்லை. ”நாங்கள் மாயாவதியின் வீட்டு வேலைக்காரர்கள் அல்ல. எங்களுக்காக வாதாடுங்கள் என ஒரு தலைவரையும் நாங்கள் கேட்டுக்கொண்டதில்லை,” என அம்மக்கள் கூறுவதை நாம் மிக விரைவில் கேட்கப்போகிறோம்.

அரசியல் களத்தில் வெற்றி எப்போதுமே ஒரே அணிக்குக் கிடைப்பதில்லை. மக்கள் அதை விரும்பவில்லை. மாயாவதி போடுகின்ற வேஷங்களும் கோஷங்களும் அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. பா.ஜ.க. இதைப் புரிந்து கொண்டதாக எந்த அறிகுறியும் காணவில்லை.

ராமஜென்ம பூமிக்காக நடத்திய போராட்டங்கள் மூலம் உத்தரப்பிரதேசத்தினுடைய வரலாற்றில் பா.ஜ.க.விற்கு மிகப் பெரிய சக்தி கிடைத்தது. 1992ஆம் ஆண்டு ஹிந்து சமுதாயத்தினுடைய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஆண்டு. சுமார் 450 ஆண்டு காலமாக இருந்து வந்த அவமானச் சின்னத்தை 1992, டிசம்பர் 6ந் தேதி அகற்றிவிட்டோம். பாரதத்தில் மட்டுமின்றி உலகின் எல்லா மூலைமுடுக்குகளிலும் வாழ்கின்ற ஹிந்துக்களை அச்சம்பவம் தலைநிமிரச் செய்தது. ஆனால் ஹிந்து அரசியல் தலைவர்கள் சஞ்சலம் அடைந்தவர்களாக இம்மாபெரும் வெற்றியைத் தரம் தாழ்த்திவிட்டார்கள். அதிலிருந்து ஓடிச்சென்று மறைவிடத்தில் ஒளிந்து கொள்ள முற்பட்டார்கள. அதன் விளைவாக, உத்திரப்பிரதேசத்தில் இப்போராட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்த கல்யாண் சிங்கின் அரசியல் இறகை வெட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ரகசிய திட்டம் தீட்டியதாக அஜய்போஸ் எழுதிய புத்தகம் விளக்கமாகக் கூறுகிறது.

அறுதிப் பெரும்பான்மை பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைத்துக் கொண்ட பா.ஜ.க. கட்சி, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நான்காவது இடத்திற்குப் பின்னோக்கிச் செல்லநேர்ந்தது. இவ்வளவு பெரிய தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாக பா.ஜ.கட்சியைப் பார்த்தால் தெரியவில்லை. ஆனால், பாடம் கற்றுக்கொண்ட காங்கிரஸ், அதற்கான அடுத்த கட்ட வேலையில் இறங்கிவிட்டார்கள். தலித் சமுதாயத்தை தங்களின் பக்கம் கவர்ந்திழுக்காமல் இருந்துவிட்டால் உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் வெற்றி என்பது எட்டாக் கனியாக இருந்துவிடும் என அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே, சமரசதா என்ற வழியைத் தேர்ந்தெடுத்து, அதைத் தங்களுடையது என ஆக்கிவிட முற்பட்டுக்கொண்டிருக்கிறது.

deenadayal-upathyaya
தீனதயாள் உபாத்யாயா

சமரசதா என்ற வார்த்தையை காங்கிரஸ் கைப்பற்றி விட்டதால் பெரும் தீங்கு ஏற்படும் எனக் கருதவேண்டாம். ஒரே வம்சாவளியைச் சேர்ந்த தலைமையையோ, அல்லது ஒரு வம்சாவளியைச் சார்ந்த அரசியல் அதிகாரத்தையோ இன்று நாடு எதிர்ப்பார்க்கவில்லை. மாயாவதியின் தலைமை என்பது ஜாதியை அடிப்படையாகக் கொண்டது. வம்சாவளியை அடிப்படையாக்க முனைவது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை மட்டும் குறிவைத்து அதிகாரப் பேராசையின் அடிப்படையில் உருவான அத்தலைமைக்கு முழு மக்களுக்கும் நன்மை பயக்கும் செயல் திட்டங்களைத் தீட்டமுடியாது. ஆம், அவர் எல்லா தரப்பட்ட மக்களுடைய மொழிகளிலும் பேசுவதில் வல்லமை படைத்தவர் என்பது உண்மை. ஆனால் எல்லா தரப்பட்ட மக்களுக்கும் நன்மையை விழைகின்ற ‘சர்வ ஜன க்ஷேம’ சிந்தனை அவர்களிடம் இல்லை. அவர்களால் அப்படி சிந்திக்கவும் முடியாது. கொள்கை என ஒன்று ஏட்டளவில் மட்டும் இருந்து என்ன பயன்? இன்று ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை ஏற்படும் விதமான உலகளாவிய லட்சியமும் சிந்தனையும் தேவைப்படுகிறது. மாயாவதி இன்று வரை அதுபற்றிப் பேசவில்லை. அல்லது, அவரால் அப்படிப் பேசமுடியாது. ஜாதிப் பிரிவுகளைத் தூண்டிவிட்டு அவர் அரசியல் ஆதாயம் தேடுகிறார். இந்தப் போக்கு தேசிய அளவில் பெரும் தீங்கை விளைவிக்கும். காரணம் மிக எளிமையானது. பாரதத்தினுடைய உணர்வு ஒன்றாக உள்ளது. பாரதத்தினுடைய ஊனும் உதிரமும் ஒன்று. பாரதத்தினுடைய வாழ்க்கை நெறிகளும் ஒன்றே.

ஆகவே அகில பாரதக் கண்ணோட்டத்துடன் செய்கின்ற பணிகள் மட்டுமே தேசத்திற்கு நன்மை கொடுப்பதாக அமையும். பண்டித தீனதயாள்ஜி அப்படிப் பணியாற்றியவர். சமரசதா என்ற வார்த்தையை அறிமுகம் செய்து பயன்பாட்டிற்கு நல்கியதும் அவரே. அவருடைய தத்துவ சாஸ்திரங்களை பிரமாணமாகக் கொண்ட பா.ஜ.க. உத்திரப்பிரதேசத்தில் சமரசதா விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் பின்னால் நிற்கிறது. அதைத் தற்பொழுது ராகுலின் பிறந்த நாளுடன் இணைத்துக் கொண்டுள்ள காங்கிரஸ், அவர்களின் தன்மைக்கேற்ப பிரசார இயந்திரங்களின் உதவியுடன் புயல் வேகத்தில் இவ்விஷயத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி பறித்துச் சென்றுவிடாமல், தனது ஓட்டு வங்கியை எப்பாடுபட்டும் கட்டிக் காப்பாற்ற மாயாவதியும் கச்சை அணிந்திருக்கிறார். ஓட்டுக்களை விட பல லட்சம் மடங்கு விலை உயர்ந்த அரிய நிதியை வெட்ட வெளிச்சத்தில் பட்டப்பகல் வேளையில் காங்கிரஸ் கொள்ளையடித்துக் கொண்டு செல்கின்ற காட்சியை பா.ஜ.க. கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது.

இந்தக் கொள்கையைக் கண்டு வருந்துவதா அல்லது ராகுல் சமரசதா எனும் அரிய நிதியைச் சொந்தமாக்கிக் கொள்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதா என்ற மனமயக்கத்தில் நாம் இருக்கிறோம்.

நன்றி: விஜயபாரதம்

2 Replies to “பா.ஜ.க. கைவிட்ட ‘சமரசதா’”

  1. கட்டுரை ஒரு மொழிபெயர்ப்பு போல இல்லாமல் சரளமாக உள்ளபடியால் படிக்க வெகு சுவராஸ்யம். பிஜேபி தமிழ் நாட்டிலும் ஒரு உறக்கத்தில் தான் உள்ளது. நல்ல தலைவர்கள் இருந்தாலும் கட்சியை வெகு ஜன இயக்கமாக மாற்ற குறைந்த பட்சம் சிறு நகரங்கள் அளவில் அறிமுகம் செய்ய திரு, திருநாவுக்கரசரை வெகு அழகாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் வியாதியான கோஷ்டி மனப்பான்மை பிஜேபியில் வெகுவாய் பீடித்துள்ளது. இதற்கு மருந்து கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். நல்ல கட்சியாகவிருந்தால் மட்டும் போதுமா? கொஞ்சம் சாமர்த்தியமான போக்கும் வேண்டும். தமிழ் நாட்டுக்கட்சித் தலைமயும் அகில இந்திய தலமையும் கொஞ்சம் சிந்தித்தால் கட்சி வெகுவாக முன்னேறும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *