வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர். உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர்.
இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது.
முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில் வாழ்ந்த பலருக்கும் நெற்றிக்கண் இருந்தது என்றும் அவர்களே ‘உருத்திரர்’ எனப்பட்டனர் என்றும் கூட, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வடமொழியில் ருத்ரன் என்றால், ‘அழச்செய்பவன்’ என்பது பொருளாகும். யாரை..? என்ற வினா எழும்புகிற போது, தீயவர்களை என்று குறிப்பிடுவர். இதைவிட, ருத்ரன் என்பவன் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் குறிப்பிடுவர்.
சிவனால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டது பாசுபதாஸ்திரம், ஆனால், சிவனால் முருகனுக்கு வழங்கப்பெற்றது “ருத்ரபாசுபதாஸ்திரம்” என்ற மஹாஸ்திரம் என்று கந்தபுராணம் சொல்வதும் இங்கு சிந்திக்கத்தக்கது.
View More ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்