சென்றமுறை நிறுத்தியிருந்த இடத்திலிருந்து விவாதங்கள் தொடர்கின்றன. பின்னால் வருவது அருணகிரி அளித்த விடை:
“தேரோட்டி மகனுக்கு, இளவரசர்களுடன் சேர்த்து வித்தை பயிற்றுவிக்கக் கூடாது என்று யார் சொன்னது, அல்லது எங்கே சொல்லப் பட்டிருக்கிறது. சூதன் (தேரோட்டி) is not a driver’s job. It is a very highly responsible position”
யார் சொன்னது, எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு எனக்கு பதில் தெரியவில்லை. அது ஒரு பொறுப்பான உத்யோகம் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும்: தேரோட்டி மகனுக்கு இளவரசர்களுடன் சேர்ந்து வித்தை பயிற்றுவிப்பது புத்திசாலிகளால் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், தேரோட்டி மகன் மிகவும் நம்பக்கத்தக்கவன் என்று உள்வட்ட ஆளாக இல்லாத பட்சத்தில் அவன் எதிரிப்படை ஆளாக நாளை மாறக்கூடும். ஆக, நம்பத்தகுந்த உள்வட்டம் என்றில்லாத பட்சத்தில் திறமை மிக்க – ஆனால் நம்பிக்கையான உள்வட்டத்தில் இல்லாத – ஒருவனுக்கு இளவரசோடு சேர்த்து தரப்படும் பயிற்சி என்பது அந்த இளவரசன் எதில் வீக் எதில் ஸ்ட்ராங் என்ற விஷயமெல்லாம் வெளியில் கசிய ஏதுவாகி அது அந்நாட்டுக்கே எதிர்காலத்தில் கேடாக முடியலாம்.
வைசம்பாயனர் சொல்வதையே எடுத்துக்கொள்ளுங்கள்: “And, O bull of the Bharata race, many other princes also flocked to that best of Brahmanas for instruction in arms. The Vrishnis and the Andhakas, and princes from various lands, and the (adopted) son of Radha of the Suta caste, all became pupils of Drona”.
மற்ற எல்லாரையும் இளவரசுகள் என பொதுமையாய்ச்சொன்னவர் கர்ணனை மட்டும் தனியாக ‘சூத ஜாதிக்காரனான கர்ணன்’ என்று தனித்துச்சொல்ல என்ன காரணமாக இருந்திருக்க முடியும்- அவனது கேஸ் ஓர் எக்ஸப்ஷன் என்பதைத் தவிர? மட்டுமல்ல கர்ணன் தவிர வேறு எந்த தேரோட்டி மகனும் இந்தக் குறிப்பில் இல்லை என்பதையும் கவனிக்கலாம். நாட்டிலேயே கர்ணனுடைய தகப்பன் மட்டும்தான் அபாரமான தேரோட்டியா என்ன- அவன் மகனை மட்டும் தனித்துப்பிரித்துப்பாடம் கற்பிக்க? எனவேதான் கர்ணனுக்கு சிறப்பு சலுகை- அவன் பிறப்பின் பின்னணி அறிந்த மூத்தோர்களால் தரப்பட்டிருக்கலாமோ எனக் கேட்டேன். தேரோட்டிகளுக்கும் வித்தை கற்றுத்தரப்படும், ஆனால் இளவரசுகளோடு சாதாரணமாகச் சேர்த்து அவர்களுக்கும் வித்தை கற்பிக்கப்பட்டது என்பது நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. இதற்கு கீழ் ஜாதி என்ற அளவுக்கெல்லாம் போக வேண்டாம். அரச பரம்பரை/ நம்பிக்கையான வட்டம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட யாருக்கும் இளவரசுகளோடு சேர்த்து வித்தை கற்றுத்தருவது என்பது practically அவ்வளவு prudent ஆக எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு கற்பிக்கப்பட வேண்டுமென்றால் ஒரே ஜாதியோ இல்லையோ ஆனால், உள்வட்டத்தில் இருக்க வேண்டும். கர்ணன் அவ்வாறு உள்வட்ட ஆளாக குருவம்சப்பெரியோர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்க வேண்டும். (இதன் பின்னணி பாண்டவ-கௌரவரில் பலருக்குத்தெரியாததால் நம்முடன் இவனுமா என்று அவன் மேல் அசூயை கூட ஏற்பட்டிருக்கலாம்). குந்தியின் அழுத்தத்தோடு என்று சொன்னது தவறாகத்தான் இருக்க வேண்டும். குந்தி தன்னைத் தாயெனச் சொன்னபோது கர்ணன் வியப்படையவில்லை என்பது மட்டும் நினைவில் இருந்ததால் அந்த முடிவுக்குத் தாவி விட்டேன். சூரியன் சொல்லித்தான் அவளுக்கு முதன் முதலில் தெரிய வருகிறது. இருந்தாலும் கவசகுண்டலங்களோடு பிறந்தவன் என்ற தனித்தன்மையைக் கேள்விப்பட்டபோதே குந்திக்கு கர்ணன் பிறப்பு குறித்த சந்தேகம் உதித்திருக்காதா என்ன? கவசகுண்டலத்தோடு பிறந்தவன் என்பதே பரவலாக யாருக்கும் தெரியாதென்றால் இந்த வாதமும் அடிபட்டுப்போகும்தான்.
மேற்கண்ட விடையின்மேல் நான் ஆற்றிய எதிர்வினை இது:
அன்புள்ள அருணகிரி,
நீங்கள் எடுத்து வைத்திருப்பவை வாதங்கள் என்றால் அவற்றுக்கு அடிப்படை என்ன, எந்த அடிப்படையில் இந்த முடிவுகளை எடுத்தீர்கள் என்று சொல்லவேண்டும். அவ்விதமாகச் சொல்லாத காரணத்தால் இவற்றையெல்லாம் ஒருவிதமான ஊகத்தின், அல்லது அனுமானத்தின், அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று நான் கருத இடமுண்டா?
நேரடியாக விடை சொல்லாமல் ஏன் இப்படிச் சுற்றி வளைக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றலாமோ என்னவோ. ஆனால், மஹாபாரதத்தில் ராஜாஜி, கிருபானந்த வாரியார் என்று தொடங்கி, மஹாபாரத ஸாரம், வர்த்தமானன் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு (இது முழுமையான வடிவமன்று. முக்கியமானவை என்று மொழிபெயர்ப்பாளருக்குப் பட்டதையெல்லாம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய விடுபட்டிருக்கிறது) எல்லாவற்றையும் படித்து, பாரதீய வித்யா பவன் வெளியிட்டுள்ள கமலா சுப்பிரமணியம் பதிப்பையும் படித்தவன் என்ற விதத்தில் ஒன்று சொல்லவேண்டும்.
கர்ணன் விஷயத்தில் ஏராளமான குளறுபடிகளை எல்லோரும் செய்திருக்கிறார்கள். குறிப்பாக கமலா சுப்பிரமணியம் சுத்தமாக கோல் (goal) விட்டுவிட்டார். இவர் பெரிதும் மதிக்கப்படும் ஆசிரியர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனாலும், நிறைய பிழைகளையும், தவறாகப் புரிந்துகொண்ட முடிபுகளையும், மூலத்தில் இல்லவே இல்லாதவற்றையும் சேர்த்திருக்கிறார்.
கர்ணன், வில்வித்தை பயில்வதற்காக துரோணரை அணுகியதாகவும், அவன் ஒரு சூதன் என்ற காரணத்தால் அவனுக்கு வில்வித்தை பயிற்றுவிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார் கமலா சுப்பிரமணியம். ஆனாலும் வர்த்தமானன் பதிப்பில், கர்ணன் துரோணரிடத்தில் பயின்றான் என்பதற்கான குறிப்புகள் இருக்கவே, மிகக் குழப்பமான நிலையில்–இதுவும் இதுபோன்ற பிற பற்பல ஐயங்கள், குளறுபடிகள் எல்லாம் கலந்த நிலையில்–மூலத்துக்கு நெருக்கமான மொழிபெயர்ப்பை வாசித்தால் ஒழிய சரியான கதையை உணர இயலாது என்ற தீர்மானத்தோடு வாசிக்கலானேன். இந்த மொழிபெயர்ப்பை இன்னமும் முற்றாக முடிக்கவில்லை சுமார் 10,000 ஏ4 பக்கங்கள் (அதற்கு மேலும்கூட இருக்கலாம்) படிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. இடையில் தென்படுகின்ற ஏராளமான ஒரேபெயர் கொண்ட பல நபர்களைப் பிரித்து அடையாளம் காணவும் வேண்டியிருக்கிறது. (யுயுத்ஸுவுக்கும் கர்ணன் என்றொரு பெயர் உண்டு.)
எதற்குச் சொன்னேன் என்றால், கர்ணன் துரோணரிடத்தில் பயின்றான் என்பது இவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும்போது, இந்த அம்மையார் நீளநெடுக தவறான ஒரு செய்தியை எப்படிச் சொன்னார் என்று புரியவில்லை. Obviously, கர்ணன் ஏதோ ஒரு பிரத்தியேகமான வித்தையைக் கற்க வேண்டி துரோணரை அணுகி, அவர் மறுத்திருக்கலாம். பரசுராமரை அவன் அணுகுவது பிரமாஸ்திரப் பயிற்சிக்காக என்பதால் விஷயம் அங்கே இருக்கலாம். சாந்தி பர்வத்தில்தான் இதற்கு விடை இருக்கிறது. கர்ணன் துரோணரை எதற்காக அணுகினான், அவர் எதைப் பயிற்றுவிக்க மறுத்தார், பின்னர் ஏன் பரசுராமரை அணுகினான் என்ற விவரமெல்லாமே ஒரு flashback உத்தியாக, நாரதர் மூலமாக தர்மபுத்திரனுக்கு விவரிக்கப்படுகிறது. இந்த விவரங்களை அடுத்தமுறை பார்க்கலாம். அப்படி, குறிப்பிட்ட ஒன்று அல்லது சில அஸ்திரத்தை/அஸ்திரங்களைக் கற்பிக்க மறுத்ததை தவறாகப் புரிந்துகொண்டு, சாதியைக் காரணம்காட்டி துரோணர் மறுத்ததாக இவ்வளவு பெரிதாக மதிக்கப்படும் இந்த அம்மையார் எழுதியிருக்கிறார்.
பேசுவது ஒவ்வொன்றும் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பது என் பிடிவாதமான, என்னாலேயே மாற்றிக்கொள்ள முடியாத போக்கு. ஆகவேதான், இவற்றை நீங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்களா, அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சொல்கிறீர்களா என்று கேட்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். எனக்கிருக்கும் ஐயங்களோடு உங்களைப் போன்றவர்களின் ஐயங்களும் சேர்ந்துகொண்டால்தான் படிக்கும்போது தேடுவதற்கான இலக்குகளின்மேல் கவனம் நிற்கமுடியும். ஆகவே, அந்தவகையில் எனக்கு உதவத்தான் செய்கிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.
Since there are conflicting versions, with trusted authors who have come out with ‘the most authentic version’ going slipshod and goofing about, I want to be sure about what I speak. நீங்கள் படித்த வர்ஷன் ஏதாகிலும் இவ்வாறான செய்திகளைச் சொல்லியிருக்கின்றனவா, அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சொல்கிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்தினால் நான் அடுத்த அடியை உறுதியாக எடுத்துவைப்பது எளிதாக இருக்கும்.
இன்னொன்று. உங்களுடைய கடிதத்தின் இந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் இப்போது பார்க்கலாம்:
2008/9/10 arunagiri a:
குந்தி தன்னைத் தாயெனச் சொன்னபோது கர்ணன் வியப்படையவில்லை என்பது மட்டும் நினைவில் இருந்ததால் அந்த முடிவுக்குத் தாவி விட்டேன். சூரியன் சொல்லித்தான் அவளுக்கு முதன் முதலில் தெரிய வருகிறது. இருந்தாலும் கவசகுண்டலங்களோடு பிறந்தவன் என்ற தனித்தன்மையைக் கேள்விப்பட்டபோதே குந்திக்கு கர்ணன் பிறப்பு குறித்த சந்தேகம் உதித்திருக்காதா என்ன? கவசகுண்டலத்தோடு பிறந்தவன் என்பதே பரவலாக யாருக்கும் தெரியாதென்றால் இந்த வாதமும் அடிபட்டுப்போகும்தான்.
இப்படி ஒரு முடிவுக்கு எப்படி வந்தீர்கள் என்பது குழப்பமாக இருக்கிறது. நான் எழுதியிருப்பது அந்தமாதிரி ஏதும் தொனிக்கிறதா? நான் மீண்டும் வாசித்த வரையில் அப்படி இல்லை.
கர்ணன் தன்னுடைய மகன்தான் என்பது விளையாட்டுக் களத்திலேயே குந்திக்குத் தெரியும். அப்போதுதான் அவனைப் பார்க்கிறாள் என்பதை, அவனைப் பார்த்தவுடன் மயங்கிவிழுவதிலிருந்து அனுமானிக்கலாம். அதற்கு முன்னால், ஆயுதப் பயிற்சி செய்யும் இடத்துக்கு அவள் வந்திருக்க முடியாது. ஆகவே பார்த்திருக்க வாய்ப்பில்லை.
கவச குண்டலத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்வதால் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த நாளில் எல்லோருமே குண்டலங்களை அணிவது வழக்கம்தான். ஆகவே, குண்டலங்கள் அணியப்பட்ட குண்டலங்களா, அல்லது பிறக்கும்போதே உடலோடு இருந்தவையா என்ற ஐயம் யாருக்கும் எழாது. இதுபோன்றே கவசம் என்பது ஏதோ இரும்புக் கவசம்போன்றதாக இருக்கும் என்றும் தோன்றவில்லை. Natural mail என்றுதான் மொழிபெயர்ப்பாளர் நெடுகிலும் குறிப்பிடுகிறார். பீமனுடைய கரங்களும் மார்பும் இப்படி, மற்றவர்களுக்கு உள்ளதைப் போன்றன்றி, இரும்புபோல இருந்தவைதாம். பீமன் வெறுங்கைகளைத் தேய்த்து நெருப்பு உண்டாக்குவதை பகவதைப் படலத்தில் காணலாம்.
கர்ணன் மட்டுமில்லை, திருஷ்டத்யும்னனும் கவசத்தோடு தோன்றியவன்தான். இப்போதைக்கு இந்தக் குறிப்பை மட்டும் சொல்லி வைக்கிறேன். எனவே, இயற்கையான கவசத்தோடு தோன்றிய ஒரே ஒருவன் கர்ணன் என்பது சரியில்லை. திருஷ்டத்யும்னனுக்கு இருந்ததும் natural mail என்றுதான் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். இயற்கையாக, உடலோடு ஒட்டிப் பிறந்த கவசம். திருஷ்டத்யும்னன், பாஞ்சாலியின் சகோதரன். அவளோடு அக்னியில் தோன்றியவன். தோன்றும்போதே இளம்பருவத்தினராக அக்னியிலிருந்து தோன்றினார்கள். உரிய இடத்தில் வியாச பாரத விவரங்களைக் கொடுக்கிறேன்.
ஆகவே, கவசம் பிறவியிலேயே இருந்தது என்பதை வளர்ப்புத் தந்தையான அதிரதனோ, தாய் ராதையோ சொல்லியிருந்தால் ஒழிய மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆயுதப் பயிற்சி பெறும் அத்தனை மாணவர்களுக்குமே மேலாடை உண்டு. ஆனபடியினாலே இந்தக் கவச குண்டலங்களைப் பற்றி எவ்வளவு தூரம் மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்கான குறிப்புகள் எதுவுமே இதுவரையில் எனக்குக் கிட்டவில்லை. பார்க்கலாம். பின்னால் எங்காகிலும் இருக்கலாம். (நீங்கள் இவற்றை ஐயங்களாகக் கேட்கிறீர்கள் என்ற அனுமானத்தில் இவ்வாறு சொல்கிறேன். அடிப்படையோடு கேட்கிறீர்கள் என்றால், இடம் சொல்வது பயனுள்ளதாக இருக்கும்.)
இதற்கு அடுத்ததாக அருணகிரி, தன்னுடைய அனுமானங்களைப் பட்டியலிடுகிறார்:
ஹரிகி அவர்களே,
முடிவுக்கெல்லாம் வரவில்லை. அதனால்தான் “கவசகுண்டலத்தோடு பிறந்தவன் என்பதே பரவலாக யாருக்கும் தெரியாதென்றால் இந்த வாதமும் அடிபட்டுப்போகும்தான்” என்றும் tentative-ஆக எழுதினேன்.
எனது அனுமானங்களை இங்கு ஸம்மரைஸ் செய்கிறேன்:
அ) மானாவாரியாக யாரை வேண்டுமானாலும் இளவரசுகளுடன் சேர்த்து வித்தை பயிற்றுவிக்கப்பட்டிருக்காது. அவர்கள் ஒரே அரச குடும்பத்தவர்களாக, நட்பு நாட்டு இளவரசுகளாக இருக்க வேண்டும். தேரோட்டுதல் என்பதை குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் தேரோட்டி மகனாக அறியப்பட்ட கர்ணன் அரச குடும்பத்துடன் சேர்த்து வித்தை பயிற்றுவிக்கப்பட்டதாலும் அவன் பெயர் மட்டும் தனித்து குறிப்பிடப்படுவதாலும் (நீங்கள் மேற்கோள் தந்த ஆங்கில உரை) இது ஒரு விதி விலக்காக இருக்க வேண்டும் என்பது என் யூகம் .
ஆ) சூதபுத்ரனான கர்ணனுக்கு பாண்டவ-கௌரவர்களோடு சேர்த்து பாடம் சொல்லித் தந்தது அவனது பிறப்பின் உண்மை ராஜகுல பெரியோர்களுக்குத் தெரிந்ததனால்தான். இல்லாவிட்டால் அவனுக்கு அரசவம்சத்தவரோடு சேர்த்து வித்தை கற்பிக்கப்பட்டிருக்காது.
இ). கர்ணன் பிறப்பு உண்மை தெரியாத பலருக்கும் தம்முடன் சேர்த்து வித்தை கற்பிக்கப்பட்ட அவன் மேல் அசூயை பிறந்திருக்கலாம். அதனால் டெமான்ஸ்ட்ரேஷனின்போது அவனைப் பொதுவில் அவமானப்படுத்த அவனது பிறப்பைப் பற்றிக் கேட்டிருக்கலாம்.
ஈ). உண்மையானால், பட்டத்து ராணி ஸ்தானத்தில் உள்ள குந்தி தேவி “விதிவிலக்காக ஒருவன் ஏன் அரச மக்களுடன் பயிற்சி பெறுகிறான்” என்று கேள்வி எழுப்பியிருக்க மாட்டாளா?
(உ). கர்ணனின் கவச குண்டல ரகசியம் எந்த அளவுக்கு பரவலாக அறியப்பட்டிருந்தது என்பதை வைத்து குந்திக்கு கர்ணன் குறித்து முன்னமே தெரிந்திருக்க வாய்ப்புண்டா இல்லையா என்று முடிவு செய்யலாமா?
(ஊ). குந்தி மூலம் தனது பிறப்பின் உண்மையை அறிகையில் கர்ணன் அதிர்ச்சியடைகிறானா? அரண்மனையில் ராஜகுலத்தோருடன் நெருக்கமாகப் புழங்கிய அவனுக்கும் தன் பிறப்பின் உண்மை அரசல் புரசலாக முன்பே தெரிந்திருக்க வாய்ப்புண்டோ? (அவ்வாறு தன் பிறப்பின் உண்மை கர்ணனுக்கு முன்பே தெரிந்திருந்தால் கூட நடந்த மஹாபாரத நிகழ்வுகள் எதிலும் எந்த மாற்றமும் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்).
இவையனைத்தும் என் யூகங்களே.
அருணகிரி.
பிகு: கர்ணன் கொடுத்துக் கை சிவந்த கொடையாளன் என்ற பிம்பம் கூட exaggerated myth – வியாச பாரதத்தில் இந்த பிம்பம் கிடையாது- என்று “மஹாபாரதம் பேசுகிறது” புத்தகத்தில் படித்திருக்கிறேன். உங்கள் கருத்து என்ன?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள் அடுத்த தவணையில் தொடர்கின்றன.
திராவிட/கம்யூனிச திரிபுவாதச் சக்திகளின் வலுவான பிரச்சாரத்தின் காரணமாக இளைய தலைமுறை நமது புராண இதிகாசங்களைப் பாரம்பரியச் சொத்துக்களாகக் கருதாமல் புளுகுமூட்டைகளாக எண்ணுகின்றனர். இந்தப் பொக்கிஷங்களை ஆழ்ந்துகற்று, உணர்ந்து, விளக்க வல்ல பெரியோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்தச் சிக்கலான தருணத்தில் நீங்கள் மிகுந்த முயற்சி எடுத்துச் செய்யும் பணி முக்கியமானது, விலை மதிப்பற்றது. உங்களுக்கு எனது வந்தனமும் நன்றியும்.
இதனைப் பதிப்பிக்கும் இந்த தளத்துக்கும் எனது பாராட்டுகள்.
இரா. கந்தசாமி
மிக்க நன்றி திரு கந்தசாமி அவர்களே. (இரா கந்தசாமி…கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது. என் ஊகம் சரிதானா?)
கர்ணன் பிறப்பு குறித்து வியாசபாரதத்தில் முதன் முதலாக ஆதிபர்வம் பகுதி 111 ல் சொல்லப்படுகிறது.
அதன் மொழிபெயர்ப்பைக் காண இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்