வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

அறிமுகம்

1962ம் ஆண்டு. அப்போது எனக்கு வயது 12. நான் தர்மபுரியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். என் தந்தையாரின் நண்பர் திரு. ரெங்கநாத செட்டியார் என்பவர் என் தந்தையிடம் வந்து, “பையனைக் கொஞ்சம் என் கூட அனுப்பி வை. சாமியார் வரார் ! மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். சமரச சன்மார்க்க சங்கம் சார்பாகக் கூட்டம் ஸ்கூலில் நடந்தது. எங்க அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார்.

நான் எங்க ஸ்கூலுக்கு (ஜில்லா போர்ட் உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் க்ளாத் மேலே போட்டு, நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக் கொண்டிருந்தேன்.

”இவ்வளவு அலங்காரம் தேவையோ?!” என்று எனக்குப் பின்னால் ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தேன். ஒரு சாமியார் எனது கன்னத்தில் தட்டினார். அதுதான் முதல் ஸ்பரிசம்.

வெல்வெட் துணி அப்புறப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. திரு. கிரிதாரிபிரசாத் ஒரு மணிநேரம் முழங்கினார்.

ஆரவாரமான, உணர்ச்சிப் பிழம்பு போன்ற கிரிதாரி பிரசாத்தின் பேச்சுக்குப் பிறகு சாமியார் பேசினார்: “மழை பெய்து ஓய்ந்தது. சற்றே ஈரம் வற்றியபின், உங்கள் மனவயலை உழுது, விதை விதைக்கலாம் என்று இருக்கிறேன்” என்று தன் பேச்சைத் துவக்கினார்.

அந்த இரண்டு வரிகள் ஐம்பது ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் நினைவில் உள்ளன. ஒரு மணி நேரம் பேசினார் அவர்.

இதுதான் முதல் சந்திப்பு.

ஒவ்வொரு ஆண்டும் அந்தர் யோகமும், சன்மார்க்க சங்கக் கூட்டமும் நடக்கும். அதற்கு வருவார். அப்போது எனக்கு அழைப்பு வரும். வேலை செய்ய !

அவர் பெயர் சித்பவானந்த சுவாமிகள் என்று சொன்னார்கள். என்னுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். ஓரளவு பழகினார். ரொம்ப ரிசர்வ்டாக இருந்தார். மேடையில் கூடக் கடிவாளம் போட்ட குதிரைதான். வாரியார் பேச்சுப் போல அங்கிங்கு திரும்பாமல், ஸ்பின்னிங் மில் ஓடுவது போல ஒரே சீராக இருக்கும். எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றி மட்டுமே பேச்சு இருக்கும்.

மிராக்கிள்

நான் டிகிரி படித்த முடித்த உடன் அவரிடம் சொன்னேன். அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்குச் சென்று சேருங்கள் என்றார். அவர் பேச்செல்லாம் ஒரே ஆர்டர் மயம்தான்.

“நான் இந்த வருஷமே போய்ச் சேருகிறேன்” என்று சொன்னேன்.

“இரண்டு வேலைகள் பாக்கி இருக்கு. அவை முடியட்டும்” என்றார் அவர்.

அந்த ஓராண்டில் என் தகப்பனாரும், அதன் பின் தொடர்ந்து என் தாயாரும் வைகுண்ட பதவியை அடைந்தனர். நிஜமாகவே அங்கு போனார்களா என்பது எனக்குத் தெரியாது ! ஆனால், சுவாமி சொன்ன இரண்டு வேலைகள் இவைதான் என உணர்ந்து கொள்ள முடிந்தது.

இது மிராக்கிளாக இருந்தாலும் கையில் மாயமாக திருநீறு வரவழைக்கும் அளவுக்கு இவரை நினைக்க முடியவில்லை. அந்தச் சிறிய வயதில் மிராக்கிள் என்னைக் கவர்ந்திருக்கலாம்.

என்னுடைய டிகிரியை எடுத்துக் கொண்டு கோவை பெரிய நாயக்கன்பாளையம் இராமகிருஷ்ண மிஷனுக்குச் சென்று சுவாமி சோமானந்தா முன்னால் ஆஜர் ஆனேன். அவர் கேட்டார்: “உன்னை யார் அனுப்பியது?”

“சுவாமி சித்பவானந்தர்”.

“ஓ ! அப்படியா ! சரி. அப்பிளிகேஷன் போடு. கிடைக்கும்”.

இந்த சுவாமி ஊட்டி ஆசிரமத்தில் சித்பவானந்தரிடம் பிரம்மச்சாரியாக இருந்தார் எனப் பின்னால்தான் தெரிந்தது. அங்கு சேர்ந்து விட்டேன்.

அதன்பிறகு அவினாசிலிங்கம் ஐயா பழக்கமானார். ஆனால் அவரும் சித்பவானந்தரும் முப்பது ஆண்டுகளுக்கு முன் தோழர்களாக இருந்தவர்கள் எனத் தெரியாது. ஒரு நாள் திரு. பி.கே. நடராஜன் அவர்கள் இருவரும் இணைவதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது சுவாமி சித்பவானந்தர் அங்கு வந்திருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றேன்.

சுவாமி: “படிப்பு நடக்குதோ?”

நான்: “ஆம், சுவாமி”.

சுவாமி: “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”.

நான்: “அங்க இடம் இருக்கா?”

சுவாமி: “தானாக வரும்.”

இந்த உரையாடலின் போது சுவாமி குகானந்தர் உடனிருந்தார்.

அதன்பின் வித்யாலயா ஆடிட்டோரியத்தில் இணைப்பு விழா நடந்தது. அனைவரையும் சேர்த்து 4000 ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் வந்திருந்தனர்.

அமரர் அவினாசிலிங்கம் அந்த மேடையில் சுவாமியை விட்டு அவர் பிரிந்தது குறித்துத் தேம்பித் தேம்பி அழுதார்.

உடனே சுவாமி:

“இங்கு அழுகை, கூக்குரல், ஒப்பாரி வைக்க அனுமதில்லை. பேசவேண்டிய விஷயத்தைப் பேசிவிட்டு வந்து அமரலாம்” என்றார்.

அவினாசிலிங்கம் ஐயா அடங்கிப் போனார். அந்தக் கேம்பஸில் ஐயா அடங்கிப் போனது அதுவே முதல் முறை.

நிற்க. நம் கதைக்கு வருவோம். என் படிப்பு முடிந்தது. ரிசல்ட் வருவதற்கு முன்பே சுவாமி நித்யானந்தரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆசிரியர் ஒருவர் இறந்து விட்டதால் காலியான வேலைக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு.

“தானாக வரும்” என சுவாமி சொன்னது நினைவுக்கு வந்தது. மீண்டும் மிராக்கிள்.

சென்றேன். சுவாமியைப் பார்த்தேன்.

சுவாமி: “என் மூலமாக வருகிறீர்கள் என்று தலைமையாசிரியரிடம் கூறக்கூடாது. தகுதி இருந்தால் செலக்ட் ஆகலாம்”.

பள்ளிக்குச் சென்று குளோரின் என்ற பாடம் சொல்லிக் கொடுத்தேன். 14 பேர் வந்திருந்தார்கள். எனக்குப் போட்ட மதிப்பெண்கள் அதிகமாக இருந்ததால் பணிக்குச் சேர்ந்தேன். சுவாமியிடம் போய் ஆசி வாங்கினேன். அப்போதும் கேட்டார்:

“தலைமையாசிரியரிடம் எதாவது சொன்னீர்களா?”

நான்: “இல்லை”.

தினந்தோறும் காலையில் சென்று பாத நமஸ்காரம் செலுத்துவேன். “ஊம்” என்று ஒரு சிங்க கர்ஜனை மட்டும் கேட்கும். நம் மேல் பார்வை விழும். அவ்வளவுதான். அதற்கு மேல் நேரம் ஒதுக்க மாட்டார். என் பிறந்த நாள் அன்று மட்டும் “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ்” என்று சொல்லுவார்.

துறவியும் எம்.ஜி.ஆரும்

ஒவ்வொரு நிமிஷமும் உபயோகமாகச் செலவிடுவார். காலையில் 2.30 மணிக்கு எழுந்திருந்து, தன் துணிகளைத் தானே துவைத்து, குளித்து முடித்து, கோயிலைத் திறந்து, திருப்பள்ளி எழுச்சி, கீதை, நாமாவளி, தியானம் முடித்து, சிறுவர்கள் உடற்பயிற்சியைப் பார்வையிட்டு, அதன்பின் நடைப்பயிற்சி முடிந்து, ஆஜர் எடுத்து, மாணவர்களோடு சாப்பிட்டு, ஹிந்து எக்ஸ்பிரஸ் இரண்டும் படித்து முடித்து, பின் கடிதங்களுக்குப் பதிலெழுதி, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, கடிதங்களுக்குப் பதிலெழுதி, உச்சிகால வழிபாட்டில் கலந்துகொண்டு, உணவும் ஓய்வும் முடித்து, மீண்டும் படித்தல் எழுதுதல் முடித்து, மாலை நடைப்பயிற்சி, வழிபாடு, தியானம், உணவு, சத்சங்கம் முடித்து, இரவு 10.30 மணிக்கு உறங்கச் செல்வார்.

கிழக்கு நோக்கி உள்ள இராமகிருஷ்ணர் கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்வார். வடக்கு நோக்கி ஸ்நானம் செய்வார். தெற்கு நோக்கி உணவு உட்கொள்வார். மேற்கு நோக்கி அலுவல் புரிவார். இறுதிவரை இந்த திசைகள் மாறியதில்லை.

இந்த நடைமுறைகள் இறுதிவரை மாறவில்லை. சுகவீனம் அடைந்தபோதும் தொடர்ந்தன.

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில் மிகக் கண்டிப்பானவர் சுவாமி சித்பவானந்தர். ஒருமுறை சேலம் சாரதா கல்லூரி விழாவுக்குக் காலதாமதமாக வந்தார் ஒரு பிரதம விருந்தாளி. வந்தவர் சாதாரணமானவர் அல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தான் அந்தப் பிரதம விருந்தாளி.

ஆனால், சித்பவானந்த சுவாமியோ நேரத்தை மிக முக்கியமானதாகக் கருதுபவர். எதையும் யாருக்காகவும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காத உறுதிப்பாடு உடையவர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் மேடையில் எல்லார் முன்னிலையிலும் வைத்தே கேட்டு விட்டார்:

“ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் 15 நிமிடங்கள் தாமதமாக ஒரு நிகழ்ச்சிக்கு வருவது நல்ல எடுத்துக்காட்டாக அமையுமா?”

உடனடியாக எம்.ஜி.ஆர். மன்னிப்புக் கேட்டார்: “சாமி உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் குறித்த நேரத்துக்குள் வரவே முயன்றேன். ஆனால், என்னுடைய தொண்டர்களால் இந்த தாமதம் ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு மூளையே இல்லை. அதனால்தான் அவர்களுக்குத் தலைவனாக இருக்கிறேன்” என்று சொன்னதும் சுவாமி சிரித்து விட்டார்.

பின்பு எம்.ஜி.ஆர் அவருக்குப் பாத நமஸ்காரம் செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

“விவேகானந்தரைத் தேடுகிறேன்”.

டைனிங் ஹாலிலும் சரி, அட்டெண்டன்ஸ் எடுக்கும்போதும் சரி மாணவர்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்குவார். பொறுமையிழந்த நான் ஒரு நாள் அவரிடம் சென்று,

“அப்படியென்ன தேடுகிறீர்கள் ? யாரைத் தேடுகிறீர்கள்” எனக் கேட்டேன்.

“விவேகானந்தரைத் தேடுகிறேன்”.

“கிடைத்தாரா?”

அவர் உதட்டைப் பிதுக்கினார். இல்லையென்றும் சொல்லவில்லை.

ஒரு நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாகக் குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன்கூடத் துறவியாக வரவில்லையே? இவர்களைத் துறவி ஆக்கும் அளவுக்கு நமக்குத் தகுதி இல்லையோ?” என அங்கலாய்த்துக் கொண்டார்.

ஊக்கமுடைமை

பள்ளியில் 75-76ம் கல்வியாண்டில் ஓர் அறிவியல் பொருட்காட்சி வைத்திருந்தேன். சுவாமி உள்ளிட்ட பெரியவர்கள் அனைவரும் பாராட்டினர். சுவாமி என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். அதைத் தொடர்ந்து பரமஹம்சரின் விஞ்ஞான விளக்கங்களை “தர்மசக்கரம்” பத்திரிக்கையில் எழுதச் சொன்னார்.

நான் “விஞ்ஞானமும் மெய்ஞானமும்” என்ற தலைப்பில் 15 மாதங்கள் எழுதினேன். ‘செய்து கற்றல்’ என்ற தத்துவ அடிப்படையில் 8ஆம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி வகுப்புகளை சுவாமியை வைத்துத் ஆரம்பித்தேன். பி.எச்.இ.எல். தலைவர் திரு. தீனதயாளன் இதைத் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் மெடிக்கல் காலேஜ் டீன், கல்லூரித் துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வித்தகர்கள் என இப்படி ஏதாவது ஒருவரை அழைத்து வருவேன்.

எஸ்.எஸ்.எல்.ஸி மாணவர்களுக்கு விஞ்ஞானத் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. பள்ளியில் போட்டோ கிராஃபிக் கிளப் செயல்பட்டது. ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ செய்ய மாணவர்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் இந்த வசதி அந்தக் காலகட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வளவுக்கும் சுவாமிதான் எனக்கு ஊக்கம் கொடுத்தார்.

கிருபானந்த வாரியாரும் சுவாமியும்

ஒருமுறை சக்திசங்கத்தின் சார்பாகப் பொள்ளாச்சியில் தொடர் சொற்பொழிவுகள் நடந்தன. சுவாமி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பேச்சாளரை ஒவ்வொருவராக அழைத்துப் பேசுமாறு கூறினார். வாரியாரின் முறை வந்தது.

சுவாமி: “இங்கு கேலி, கிண்டல், நையாண்டி செய்து பேசுதல் கூடாது. எடுத்துக் கொண்ட தலைப்பில் இருந்து விலகி வேறு எங்கோ சென்று விடலாகாது. அடுத்து கிருபானந்தவாரி பேசுவார்.”

வாரியாருக்குக் கற்பூர புத்தி. தன்னைத்தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொண்டு விட்டார். சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கி, “கைலாசம் கண்ட திருவடிகளுக்கு வணக்கம்” என்று கூறித் தன் சொற்பொழிவை வழக்கமான பாணியில் இல்லாமல் சீரியஸாகப் பேசி நல்ல கைத்தட்டல்களைப் பெற்றார்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர்

விவேகானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் 3 விவேகானந்தர் சிலைகள் செய்யப்பட்டன. ஒன்று திருப்பராய்த் துறையில் வைக்கப்பட்டது. மற்றொன்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் பிரகாரத்தில் உள்ளது. மூன்றாவது திருவேடகத்தில் வைக்கத் தயாரானது. அதில் ஒரு சிறு குறை இருந்தது. சிலையின் கண்ணுக்கு அருகில் மெல்லிய கோடு ஒன்று ஏற்பட்டு இருந்தது.

“தொலைவில் இருந்து பார்த்தால் இந்தக் குறை தெரியாது” என்று ஒருவர் சொன்னார்.

சுவாமி: “அப்ப தொலைவாக இருந்து ஒழுக்கம் கெட்டு வாழலாமா? சிலையை உடைத்து விடுங்கள்”.

ஒரு நிமிடம் உலகம் ஸ்தம்பித்தது.

“என்ன சாமி சொல்றீங்க? விவேகானந்த சாமி சிலையைப் போய்… எப்படி சாமீ…எப்படி சாமி உடைப்பது?” என்றனர்.

“இப்படித்தான்” என்ற சுவாமி கடப்பாரையை எடுத்து சிலையின் கழுத்தில் ஒரு போடு போட்டார். தலை உருண்டது.

“இந்தச் சிலையை உடைத்துக் கல்லூரி கட்டிடத்திற்கு அஸ்திவாரமாகப் போடுங்கள்” எனக்கூறிச் சென்றார்.

இதே போல மற்றொரு நிகழ்ச்சி. ஒருமுறை சுவாமியும், குகானந்தரும், சாந்தானந்தரும் ஒரு ஊருக்குச் சென்றிருந்தனர். அங்கு ஒருவன் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட விவேகானந்தர் சிலைகள் இரண்டை விற்றுக் கொண்டிருந்தான். அந்த 2 சிலைகளையும் சுவாமி விலைக்கு வாங்கினார். குகானந்தர் மற்றும் சாந்தானந்தர் இருவருக்கும் அந்தச் சிலைகள் பிடிக்கவில்லை.

“நன்றாக இல்லாத சிலைக்குப் பணம் கொடுத்து வாங்கி இருக்க வேண்டாம்.” என்றனர்.

அதற்கு சுவாமி “அதனால்தான் வாங்கினேன். இதை வாங்குபவர்கள் விவேகானந்தர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று நினைத்துவிடக் கூடாது என்பதால்தான் வாங்கினேன். அவற்றை உடைத்து விடுங்கள்” என்றார்.

இராமநாதபுரத்தில் தாயுமானவருக்கு சமாதி கோயில் கட்ட ஏற்பாடு ஆனது. அதில் வைக்க தாயுமானவர் சிலைக்கான வடிவமைப்புப் பற்றி சுவாமி யோசித்தார். வித்யாவன மாணவர்கள் அனைவரையும் வரிசையாகப் பரிசோதனை செய்து சிலரைத் தேர்ந்தெடுத்தார். கண்ணுக்கு ஒரு மாணவனையும், காதுக்கு ஒருவனையும், மூக்கிற்கு ஒருவனையும், கழுத்துக்கு ஒருவனையும், மண்டைக்கு ஒருவனையும், உடல் வாகுக்கு ஒருவனையும் தேர்ந்தெடுத்தார். சிற்பியை அழைத்து இந்த சாமுத்ரிகா லக்‌ஷணப்படி சிலை அமைக்கச் சொன்னார். அதன்படி சிலையும் நன்கு அமைந்தது.

ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு

சுவாமிக்கு உடல்நலம் குன்றியபோது மருத்துவர்கள் கொடுத்த குழாய் மாத்திரைகளை பிரம்மச்சாரி நாகசுந்தரம் கொடுத்தார். ஒரு நாள் கருப்பு சிகப்பு வண்ணத்தில் இருந்த குழாய் மாத்திரைகள் இரண்டு கொடுக்கப்பட்டன. அவற்றை சுவாமி வாயில் போட்டுத் தண்ணீர் குடித்தார்.

“ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு” என்று சொல்லி சிரித்தார். உடன் இருந்தவர்களும் சிரித்தனர். அதாவது நாத்திக வாதத்தை சுவாமி விழுங்கி விட்டதாகப் பொருள்.

செப்டிக் டேங்க் சுத்தப்படுத்த ஆட்கள் வரவில்லை. பள்ளி திறந்து விட்டால் குழந்தை வந்தபின்பு இந்த வேலைகளை வைத்துக் கொண்டால் அவர்களுக்குச் சிரமம். “ஆட்கள் வரவில்லையே. எப்படி சுவாமி சுத்தப்படுத்துவது?” என்றனர்.

“இதோ இப்படித்தான்” என்று கூறி சுவாமி மலக்குழிக்குள் குதித்து விட்டார். பக்கெட்டில் மனிதக் கழிவுகளைத் தானே எடுத்து அப்புறப்படுத்தினார். அதன்பின் மற்றவர்களும் வேலையில் இறங்கினர். பூர்வாசிரமத்தில் சுவாமி மாபெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.

நமக்கேற்ற கோலத்தில் முருகன்

ஒருமுறை பழனி முருகனைத் தரிசிக்க சுவாமி மலையேறிக் கொண்டிருந்தார். அப்போது வின்ச், ரோப் கார் போன்றவை கிடையாது. பாதி தூரம் கடந்து விட்டார். ஸ்ரீ சாது சுவாமிகள் மேலேயிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். சுவாமியைப் பார்த்து

“தரிசனத்துக்கோ?” என்றார்.

சுவாமி: “ஆமாம் சுவாமி”.

சாது: “சரி. வாருங்கள். உங்களுக்காக நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார்.

“உமக்கு எந்தக் கோலத்தில் தரிசனம் வேண்டும்?” என்று கேட்டார்.

சுவாமி: “நமக்கேற்ற கோலத்தில்தான் !”

முருகனின் ராஜ அலங்காரம் மாற்றப்பட்டு ஆண்டிக் கோல அலங்காரம் செய்யப்பட்டது. பொதுஜன தரிசனம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. மூலஸ்தானத்தில் சுவாமி அமர்ந்து தியானம் செய்ய வசதி செய்து தரப்பட்டது.

சில அனுபவங்கள்

தபோவன பிரார்த்தனை மண்டபத்தில் சுவாமி யோகானந்தர் அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் பாடி முடித்தவுடன் சுவாமியிடம் சென்று, “சுவாமி, நான் பாடினேனே, கேட்டதா?” என்று கேட்டார்.

“கேட்டேன்”

“என் பாட்டு நன்றாக இருந்ததா சுவாமி?”

“நீ பாடியது நன்றாக இருந்தது. நீ பாடாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.”

சுற்றி இருந்தவர்கள் சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று.

ஒருமுறை ஓர் அழகான கலைநயமிக்க பூந்தோட்டத்தை உருவாக்கி இருந்தேன். குருதேவர் (ராமகிருஷ்ண பரமஹம்ஸரின்) ஜெயந்தி விழாவுக்காக அதைச் செய்திருந்தேன். அதனருகில் ‘தோட்டத்தை ரசிக்கும் மக்கள் தோட்டக்காரனை நினைத்துப் பார்ப்பதில்லை. உலகை அனுபவிக்கும் மக்கள் அதைப் படைத்த இறைவனை நினைப்பதில்லை’ என்று ஒரு போர்டு வைத்திருந்தேன்.

சுவாமி அந்தப் பக்கமாக வந்தார். தோட்டத்தை ரசித்துப் பார்த்தார். பலகையில் எழுதி இருந்ததையும் படித்தார். என் அருகில் வந்து “நான் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறி விட்டுச் சிரித்தார்.

குருகுலத்தில் சின்னப்பா என்ற ஆசிரியர் நாடகத்துறைக்குப் பொறுப்பாளராக இருந்தார். ஒருநாள் சுவாமியிடம் அவர், “சும்மா போட்ட நாடகத்தையே திருப்பிப் போட்டு அலுத்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பது சலிப்பாக உள்ளது. புது நாடகம் தேவை” என்றார்.

“சின்னப்பா ! நமது அடுத்த நாடகம் வேடன் கண்ணப்பா !” என்றார். அதைக் கேட்டு சின்னப்பாவும் சந்தோஷப்பட்டார். ஆனால், கடைசிவரை சுவாமி அந்த நாடகத்தை எழுத முடியவில்லை.

திரிகாலஞானி

1980ல் தபோவனத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் காவிரியில் குளிக்கும்போது அகால மரணம் அடைந்திருந்தார். அந்தச் சமயத்தில் ஒருமுறை மாணவர்கள் வரிசையாக நின்று சாமியிடம் ஆஜர் கொடுத்துக் கொண்டிருந்தனர். இளம்பிள்ளைகள். கள்ளமறியாத கன்றுகள். ஒரு மாணவன், “சுவாமி. அந்த சாமி செத்துப் போயிட்டார். நீங்க எப்ப செத்துப் போவிங்க?” என்று கேட்டு விட்டான்.

அதற்கு சுவாமி சிறிதும் அதிர்ச்சி அடையாமல், “இன்னும் 5 வருஷம்” என்றார். அதே போல் 5 வருஷம் தான் இருந்தார்.

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார். www.rktapovanam.org மற்றும் https://rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

33 Replies to “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1”

  1. படிக்க சந்தோஷமாக இருந்தது. இப்பவும் தமிழ் இத்தகைய ஜீவன்களைப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறதே. சந்தோஷம்.

    அவிநாசிலிங்கம் செட்டியாரும் ஒரு நல்ல ஜீவன். நம் மரியாதைக்குரிய ஜீவன். அவர் கல்வி மந்திரியாக இருந்த போது, திராவிட கழ்கத்தவர்க்ள் ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லி என்ன மா திட்டினார்கள், நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. அவரை வசை பாடியவர்கள் யாரையும் நான் இப்போது மரியாதையுடன் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

  2. மிகவும் ரசனைக்குரியதாக இருக்கிறது… பல பல நல்ல விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்பெறுகின்றன.. இன்று காலையில் தான், யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் கிளை மடம் ஒன்றின் திறப்பு வைபவத்தில் கலந்து கொண்டு வந்தேன்.. அருளாளராகிய குருதேவரின் திருநாமத்தில் இயங்குகிறவர்களின் தூய வாழ்வும் பணிகளும் நினைக்க நினைக்க …போற்றுதற்குரியனவாக இருக்கின்றன..

    இக்கட்டுரை ஆசிரியரை பன்முறை பணிந்து போற்றுகிறேன்..

    கட்டுரையின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்..

  3. திமிரிலேயும் அகம்பாவத்திலேயும் வெட்டி பந்தாவிலேயும் வளர்ந்த ஒரு இயக்கத்திலிருந்து வந்த ஒரு முதலமைச்சரைப் பார்த்து ஒரு சில பள்ளிக்கூடங்களை நடத்தும் ஒருவர், முதல்வர் தாமதமாக வந்ததை மேடையிலேய வைத்துக் கண்டிக்கும் திண்மை……நினைத்துப் பார்க்கவே முடியவில்லை; உண்மையான துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பது இக்காலத்திலும் நிரூபணமாகிறது.

  4. திருப்பராய்த்துரை ராமக்ருஷ்ண தபோவனம் என் வாழ்வில் மறக்க முடியா அனுபவங்கள் அடங்கியது. 1981 ம் வருஷம் அல்லது 1982 என நினைவு. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் ப்ரதம வர்ஷ சங்க சிக்ஷா வர்க ( முதலாண்டு சங்க நிர்வாகிகள் பயிற்சி முகாம்) ஒரு மாதம் தங்கியிருந்து சங்கத்தின் பயிற்சியைப் பெற்றேன். வாழ்வில் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, பண்பாடு பிறழா பேச்சு போன்றவற்றை நான் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க அடிகோலிய பயிற்சி முகாம். தபோவனத்து துறவிகள் மற்றும் நான் மறக்கவொண்ணா பெருந்தகைகளாம் ஸ்ரீமான்கள் இராமகோபாலன்ஜி, சூரியநாராயணராவ்ஜி, ஷண்முகநாதன்ஜி, ஸ்தாணுலிங்கநாடார்ஜி, போன்றோரின் பௌதிக் (சொற்பொழிவுகள்) ஸ்ரீமான்கள் வீரபாஹுஜி, பீஷ்மாசார்யாஜி,பத்மனாபன்ஜி (விபத்தில் இறைவனடி சேர்ந்து விட்டவர்) போன்றோரின் வ்யாயாம், தண்ட (உடற்பயிற்சி மற்றும் சிலம்பு பயிற்சி) என் மனதில் என்றும் நினைக்கும் எனக்கு கோஷ் விபாகில் (வாத்ய்க்குழு) வம்சி (புல்லாங்குழல்) பயிற்சி அளித்த ஸ்ரீ சிவராம்ஜி இவர்களை ஒருங்கே நினைத்து வணங்கத் தோன்றுகிறது. அழகான சூழலும் பின்புறம் காவிரியும் பக்கவாட்டில் காவிரி வாய்க்காலும் சற்று தூரத்தில் இருந்த ராமக்ருஷ்ண குடில் என்ற இன்னொரு ராமக்ருஷ்ண ஆச்ரமமும் ஞாபகம் வருகிறது. தமிழகம் வரும்போது என்னை கண்யமான மனிதனாக்கிய பெரும் சான்றோர்களை நினைவுருத்தும் இப்புண்யபூமியை காண அவாவெழுகிறது. தமிழ் ஹிந்துவுக்கு என் மனமார்ந்த நன்றி.

  5. அற்புதமான கட்டுரை. அருமையான புகைப்படங்கள். வ.சோமு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  6. தமிழ் ஹிந்து தளம் பக்கம் வருவதே இந்த மாதிரி கட்டுரைகள் அவ்வப்போது வருவதால்தான். சோமு போன்றவர்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துக்கள்.

  7. Very interesting, revealing,informative and absorbing narration. Looking forward to the forthcoming episodes. Pranams.

  8. நன்றி.
    மிகவும் அருமையாக இருக்கிறது தெரிந்து கொள்ள.
    இதுபோல் நம்மிடையே இருந்த + இருக்கிற சிகரம் தொட்டு வளம் வரும் சிம்மங்களை தொடர்ந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள். அவர்கள் எங்களின் வசம் வந்து தங்கி எண்களின் எண்ணங்களையும் செயல்களையும் வளப் படுத்தி வழி நடத்தட்டும்.
    நமஸ்கரிக்கிறேன்.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  9. Dear Tamilhindu Team,

    A classic article and am eagerly awaiting for the second part.

    Please accept my heartiest thanks

  10. //செப்டிக் டேங்க் சுத்தப்படுத்த ஆட்கள் வரவில்லை. பள்ளி திறந்து விட்டால் குழந்தை வந்தபின்பு இந்த வேலைகளை வைத்துக் கொண்டால் அவர்களுக்குச் சிரமம். “ஆட்கள் வரவில்லையே. எப்படி சுவாமி சுத்தப்படுத்துவது?” என்றனர்.

    “இதோ இப்படித்தான்” என்று கூறி சுவாமி மலக்குழிக்குள் குதித்து விட்டார். பக்கெட்டில் மனிதக் கழிவுகளைத் தானே எடுத்து அப்புறப்படுத்தினார். அதன்பின் மற்றவர்களும் வேலையில் இறங்கினர். பூர்வாசிரமத்தில் சுவாமி மாபெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.//

    கண் நிறைந்து படித்தேன்… உண்மையான வேதாந்தி. இக்கட்டுரையை எழுதியவருக்கு […] பாத பூஜை செய்ய வேண்டும்.

  11. படித்து விதிர்த்துப் போய் இருக்கிறேன். மீண்டும் மீண்டும் படிப்பது என்னை முன்னேற்றும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

    இத்தொடரை எழுதுவதன் மூலம் வ. சோமு அவர்கள் சித்பவானந்தரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.

    இத்தொடரால் பல இளைஞர்கள் மேன்மையாக வாழ வேண்டும், வாழ முடியும் என்ற நம்பிக்கை பெறுவார்கள்.

    வேதாந்தம் பயில்வோரை வெற்றி நாடி வரும்.

    .

  12. அன்புள்ள கண்ணன்,

    நீங்கள் எழுதியபடி, திமிர், அகம்பாவம், வெட்டி பந்தா எல்லாம் அந்த இயக்கத்துக்கு உண்டு தான். ஆனால் எம்.ஜி.ஆர் வித்தியாசமான ஆள். அண்ணாவும் ஐந்து நிமிஷம் என்ன ஒரு ம்ணி நேரம் தாமதமாக வருவார். ஆனால் எம்.ஜி.ஆரைப் போல மன்னிப்புக் கேட்டிருப்பார். இப்போதுள்ள கருணாநிதியிலிருந்து மாவட்டம் வரை எவரிடமும் அந்த பண்பை எதிர்பார்க்க முடியாது தான். அவர்கள் தான் அந்த இயக்கத்துக்கேற்ற வண்ணம் கொண்டஃவர்கள்.

  13. Book: ஈரோட்டுப் பாதை சரியா?
    Author ப ஜீவானந்தம்
    மற்றும்
    பி.ராமமூர்த்தி எழுதிய “ஆரிய மாயையா திராவிட மாயையா”
    *****************************
    இரண்டு புத்தகங்களும் எங்கு கிடைக்கும் என தயவு செய்து சொல்ல முடியுமா?நன்றி.

  14. சுவாமி பற்றி இன்னும் நீங்கள் அறிந்த​தை​யெல்லாம் எழுத ​வேண்டுகி​றேன்.
    அன்பன்
    கி.கா​ளைராசன்

  15. Pingback: Indli.com
  16. என்னுடைய வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இடம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம். அங்கு நான் பல முறை சென்று வந்துள்ளேன். நான் சார்ந்திருந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் பலவற்றை அங்கு நடத்தியிருக்கின்றேன். எனது தந்தையார் அப்பள்ளியில் படித்தவர். அவர் சுவாமி சித்பவானந்தர் அவர்களைப் பற்றி பல விஷயங் களை என்னிடம் சொல்லியிருக்கின்றார். சுவாமிஜி முக்தி அடைந்த அன்று அங்கு சென்று இறுதி சடங்குகளில் பங்கேற்றுள்ளேன். பகவத் கீதைக்கு மிக எளிமையான உரை எது என்று கேட்டால் பலருக்கு நான் சொல்லுவது சுவாமிஜியின் நூலினைத்தான். மிக எளிமையும் அதே நேரத்தில் ஆழமான கருத்துக்களையும் உள்ளடக்கியது. தமிழகம் கண்ட மாபெரும் மகான் அவர். அவரைப் பற்றி கட்டுரை எழுதியவருக்கும் அதை வெளியிட்ட தமிழ் ஹிந்துவிற்கும் கோடானு கோடி வணக்கங்கள்.

    வித்யா நிதி

  17. சுவாமி சித்பவானந்தரின் தாயுமானவர் பாடல் விளக்கங்களைப் படித்து மனம் பறி கொடுத்தவன் நான். அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. அடுத்த பகுதியையும் படிக்க மிக்க ஆவல். நன்றி.

  18. நான் நேரில் ஆசி பெறும் பாக்கியத்தை அருளிய பெரியோரில் சுவாமி சித்பவானந்தர் முக்கியமானவர்.
    அவரைப் பற்றிய கட்டுரைத் தொடர் மிகுந்த மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.
    அண்ணா, எம். ஜி. ஆர். ஆகியோருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் கூறுகிறேன்: எம். ஜி. ஆர். ஹிந்து உணர்வு மிக்கவர். திராவிட இயக்கச் சாயல் ஏதும் அவரிடம் இருந்ததில்லை. அண்ணாவின் மீது இருந்த அபரிமிதமான அன்பே அவரை தி.மு.க.வில் இருக்கச் செய்தது. ஹிந்து சமயத் துறவிகளிடம் தனி மரியாதை செலுத்துபவர் எம். ஜி.ஆர். அவர் குறிப்பாக ஆன்மிகத் துறவிகள் ப்ங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்குத் தாமதமாகப் போக நேர்வதற்கு அவ்ர் காரணமாக இருந்ததில்லை. தொண்டகளிடமிருந்து விடுபட்டு வருவது எப்போதுமே ஒரு அருஞ் சாதனையாகவே அவருக்கு இருந்து வந்தது. அண்ணாவின் நிலைமையும் அதுபோலதான். தம்பிமார்களால் ஏற்படும் சோர்வின் காரணமாகவே துவண்டு போய் விடுவார். மேலும் அவர் ஹிந்து சமய துவேஷி அல்ல. காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவைத் தொடங்கி வைத்து அவர் ஆற்றிய உரை குறிப்பிடத் தக்கது. எந்தக் கூட்டத்துக்கு நான் போனாலும் மற்றவர்களுக்குப் பேசப் போதிய அவகாசம் கிடைக்காமல் போய்விடுகிறது, என்னையே பேசச்சொல்லிக் குரல் எழுப்பத்தொடங்கி விடுகிறார்கள். அதற்கு இணங்க நான் பேசினால் நான் பேசி முடித்ததுமே கூட்டம் கலைந்து விடுகிறது. அதனால் சிறிது தாமதமாகவே கூட்டங்களுக்குப் போகிறேன் என்று ஒருமுறை சொன்னார். ஆனால் ஆன்மிகப் துறவிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்குத் தாமதமின்றிச் செல்வார். சமணத் துறவி ஆசாரிய துளசி, போன்றவர்க்ளின் நிகழ்ச்சிகளுக்கும் வினோபா போன்றவர்களைச் சந்திக்கவும் தாமதம் செய்யாமல் சென்றவர் அண்ணா.
    ஸ்ரீ வெ.சா. வின் கருது முற்றிலும் சரி.
    -மலர்மன்னன்

  19. 1982-83-ல் திருப்பராய்த்துறை தபோவனக் கிளையான குற்றாலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற நின்வை இக்கட்டுரை அளிக்கிறது. நடு நிசியில் அருவியில் குளித்து தியானம் செய்த இனிய நினைவு வருகிறது. கட்டுரை ஆசிரியருக்கு மிக்க நன்றி.
    -மலர்மன்னன்

  20. வணக்கம் வேறு எந்த மாநிலத்திலும், வேறு எந்த மொழி காரர்களுக்கும் இல்லாத
    மொழியின உணர்வு தமிழகத்தில் எப்படி வந்தது , இது இயற்கையானதா அல்லது அரசியல் லாபத்திற்காக உருவாக்கப்பட்டதா என்பதில் எனக்கு பெரிய குழப்பமாக உள்ளது . கன்னட மொழி பேசும் நாயக்கரால் உருவாக்கப்பட்ட தமிழ் அடிப்படைவாதம் , பல மொழி பேசுபவர்களால் இழுத்து வரப்பட்டு இன்று மலையாள பூர்விகம் கொண்ட நாஞ்சில் சம்பத் மற்றும் தெலுங்கு மொழி பேசும் (வீட்டில்) வைகோ வரைக்கும் கொண்டு பொய் விட்டிருக்கிறது . இது உண்மையான இன உணர்வா அல்லது அரசியல் வாயிற்று பிழைப்பா என்பதை
    இன்றைய இளைய தலைமுறை நன்கு சிந்திக்க வேண்டும் , யாரையும் கோபப்படவோ , காயப்படுத்தவோ நான் இதை இங்கு குறிப்பிடவில்லை , சிந்தித்து பார்க்கவேண்டும் ” பெரியார் கற்று தந்த பகுத்தறிவோடு” சிந்தித்து பாருங்கள்.

  21. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். ஏன் என்றால் சுவாமி சித்பவானந்தரும், ஆசிரியர் வ. சோமுவும் எனது குருமார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு சுவாமி விவேகனந்தர். ஸ்வாமி சித்பவானந்தருக்கோ ஆசிரியர் வ. சோமு.

    வாழ்க குருவின் புகழ்.தமிழ் ஹிந்து.காம்கு thanks.

  22. க்ருஷ்ணகுமார்m நீங்கள் பிராசரக்காக இருந்தீர்களா?

  23. திரு சோமு சார் (சார் என்று அளிப்பதுதான் வழக்கம்) கட்டுரை படித்ததற்கு மிகவும் சந்தோசம் ஆக இருக்கிறது. இவர்கள் எங்களை உருவாக்கினார்கள் என்பது தான் உண்மை .நன்றி சார் .

  24. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். ஏன் என்றால் சுவாமி சித்பவானந்தரும், ஆசிரியர் வ. சோமுவும் எனது குருமார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு சுவாமி விவேகனந்தர். ஸ்வாமி சித்பவானந்தருக்கோ ஆசிரியர் வ. சோமு.

    வாழ்க குருவின் புகழ்.தமிழ் ஹிந்து.காம்கு thanks.

    R.Vnekitakrishnan(181)
    1980 March Batch

  25. ஏன் என் கண் நிறைந்துள்ளது. மனது நிறைந்தால் கண்ணும் நிறையுமோ! காத்திருக்கிறேன் மேலும் அறிய.

  26. Respected Sir, Some time I used envy my daughter that she born in 2000 and she got better oppurtunity to learn with so many facilities. While reading the articles I vertually wept profusely with full of happiness in my life that I got the oppurtunity to be with our Swamiji. In the same time, with the poor back ground my father put me with milk income and I happened to serve indian Milk Producers. I daily cry and thank my father for his noble action to learn under Swamiji. So, I pitty for the todays Kids and even 1000 yeras latter too, they can not get such person like our Swamiji to learn the discipline and with this I used tell my daughter charecter and discipline is more important than education. Nallavargal kettthaha sarithiram illai and that is the life of our Swamiji. the last one, pl mail me this message to continuously and after reading thas, i got the satisfaction of doing the prayer for 10 Hrs. When are Sir, going the say that our only school was run in the Hostel when CM Annadurai death?
    My sinceare thanks under your noble feet C Balamurugan at Hyderabad 354 74-75 Batch

  27. ஜெய் ஹிந்த்…

    நான் சோமு சார் அவர்களிடம் நேரடியாக பயில வில்லை ஆயினும், அவரை நன்கு அறிவேன்… அவருக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு… எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு… மிக நல்ல வழி காட்டி.

    சோமு சாருக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உண்டு…

    சோமு சார்… அருமையான கட்டுரை…..

  28. என் மனதில் சில கேள்விகள்,

    குரு என்பவர் ஏன் பல miracles பண்ண வேண்டும்? அதாவது தனது சீடர்களின் எதிகாலத்தில் நடக்கவிருக்கும் சில விசயங்களை சொல்வது,\\ “நான் இந்த வருஷமே போய்ச் சேருகிறேன்” என்று சொன்னேன்.

    “இரண்டு வேலைகள் பாக்கி இருக்கு. அவை முடியட்டும்” என்றார் அவர்.//.

    இது போல் பலர் பல விசயங்களை தனது குருமார் தான் செய்தார், அவர் அன்று சொன்னது சரியாகி விட்டது. ஆ என்ன அற்ப்புதம்! என்ன குருவின் ஞானம் ! என்று புகழாரம் சூட்டுகிறார்கள். எனக்கு இதுதான் புரியவில்லை. உண்மயில் ஒரு குரு அவ்வாறு சொல்ல அவசியம் என்ன ? எது நடக்குமோ அது நடக்கத்தான் போகிறது அவ்வாறிருக்க ஒரு குரு தன் சீடனிடம் மறைமுகமாக நடக்க இருப்பதை சொல்வதன் அவசியம் என்ன? (அல்லது சொல்கிறார் என்று நாம் நினைக்கிறோமா).

    இதை நான் யாரிடமாவது கேட்டால், நீ குருவின் அருளை இன்னும் உணர வில்லை என்கிறார்கள், இருக்கலாம் அது உண்மையாகவே இருக்கலாம், உணர்தலை ஒருவர்க்கு உணர்த்த முடியாது. ஆனால் இதற்கும் ஒரு விளக்கம் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்?

    – அருண் பிரகாஷ்

  29. குரு அற்புதங்களை நிகழ்த்துவதில்லை. ஆனால் அவருடைய அன்பைப் பெற்ற மாணக்கன் அவருடன் தொடர்புடைய ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் அவருடைய அருளை அனுபவிக்கின்றான். பிறருக்குச் சாதாரண நிகழ்ச்சியாகத் தோன்றுவதும் நடக்கவிருப்பத்து நடந்ததாகத் தோன்றுவதும் குருவின் அன்பினைப் பெற்றவனுக்கு உளம் சிலிர்க்கும் அற்புதமாகத் தோன்றும். இது குருவுக்கும் சீடனுக்கும் அமைத்துகிடக்கும் அந்தரங்கத் தொடர்பு. அனுபவம் வேறு; அறிவு வேறு.

  30. அருமையான நெகிழ்ச்சியூட்டும் கட்டுரை.

    வ. சோமு அவர்களுக்கு என் வனக்கங்கள்.

  31. ஸ்ரீ கண்ணன் தாமதமான உத்தரத்திற்கு க்ஷமிக்கவும். பிரசாரக் ஆக இருந்ததில்லை. ஆனால் ஷாகா நிர்வாகப்பொறுப்பு (கார்யவாஹ்) வகித்திருக்கிறேன். சிக்ஷாவர்க்க முகாமில் பயிற்சிகள் பள்ளியிலும் ஆகாரம் திருப்பராய்த்துறை ஆஷ்ரமத்திலும் அப்போது. தினமும் மதியம் ஆகாரத்திற்காக ஆஷ்ரமம் செல்லும் பொது எனது பெருமதிப்பிற்குரிய காலம் சென்ற மானனிய ஸ்ரீ சிவராம்ஜி அவர்கள் கோஷ் ரசனா (root march songs) புஸ்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வம்சி (புல்லாங்குழல்) ரசனாவாக முகாம் முடிவதற்கு முன் அனைத்து ரசனாக்களையும் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது.

  32. I while reading the script, I myself went back to the timings when I was with Swamiji when I joined the Tiruvedakam college. Once when he was very weak and could not bend and took the slipper, after the antharyogam, while he enters the ashram premises, just he was about to bend to took his cheppal. At that time when I was about to do the same in taking his slipper to the rack, immediately he roared and told mind your work. Let me do. I was shocked and stunned. You are great and fortunate to be with him. Let us pray Almighty, many more like Him to come and serve with Tapovanam. Yours sincerely Major P.Chandrasekaran, Principal, MS University Mano college,Nagampatty, Pasuvanthanai Post, Tuticorin dt

  33. இன்று நல்லவர்களாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்டு, punctuality பற்றிப் பேசினால், குற்ற உணர்வுகூட இல்லாமல் திரியும் பலரைப் பார்க்க முடிகிறது எல்லாத் துறைகளிலும்). நல்லவற்றைத் தேடிப் போக வேண்டுமானால், குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் நம்பிக்கையோடு போகலாம் என்பதற்கு சுவாமி சித்பவானந்தர் ஒரு உரைகல். ‘துறவிக்கு வேந்தன் துரும்பு’, என்னும் முது மொழியின் இலக்கணம் அவர் MGR அவர்களிடம் நடந்துகொண்ட விதம். உண்மைத் துறவிக்குத் தானே இத்தகைய (இ)எடுத்துரைக்கும் பண்பு இருக்கும் ! ஸ்ரீ ராமகிருஷ்ண குருதேவர் இத்தகைய நற்சான்றோரை எப்போதும் இப்பூவுலகுக்கு அருளிக்கொண்டிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *