[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை

சுவாமி சித்பவானந்தர் குறித்த தொடர். முந்தைய பகுதிகள்:

(தொடர்ச்சி…)

மகாபுருஷ்மகராஜ் அவர்களால் ஸந்யாஸம் செய்து வைக்கப்பட்ட சித்பவானந்தர் 1930 ல் உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு தலைவரானார். 1940 ஆம் ஆண்டு வரை அவர் உதகை ஆஸ்ரமத்துக்கு தலைவராக இருந்தார். ஊட்டி மக்கள் சிறு சிறு ஹட்டிகளில் வசித்து வந்தார்கள். சுவாமி எல்லா ஹட்டிகளுக்கும் சென்று சிறு சிறு கதைகளைக் கூறி அம்மக்களுக்கு அருளுரை கூறி வந்தார். சிலநேரங்களில் பகவத் கீதை வகுப்பு நடத்தினார். அந்த கால கட்டத்தில் பேருந்து வசதி, மின்விளக்கு வசதிகள் கிடையாது. ஹட்டி மக்கள் பகலில் தோட்ட வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்கள் தோட்ட வேலைக்கு செல்வதற்கு முன்பு அவர்களுக்கு அருளுரைகள் சென்று சேர வேண்டும். ஆகையால் கடுங்குளிரில் காலை 4 மணிக்கே கால்நடையாக மலையின் ஏற்ற இறக்கங்களையயல்லாம் கடந்து சென்று ஹட்டி மக்களுக்கு அருளுரை ஆற்றி வந்தார்.

அம்மக்களும் சுவாமிகள் வருகைக்காக காத்திருப்பார்கள். ஆண்டுதோறும் ஊட்டி இராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண ஜயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார். அதற்கு ஹட்டி மக்கள் தரும் 4 அணா, எட்டணா, 1 அணா, 2 அணா காசுகளை நன்கொடையாகப் பெற்றுக் கொள்வார். ஜயந்தி விழாவுக்கு எல்லா ஹட்டி மக்களையும் மடத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு அன்று முழுவதும் உணவு வழங்கி ஆனந்தப்பட்டார். மாலையில் நாடகங்கள் போட்டுக் காட்டி அவர்களை நல்ல பாதைக்கு கொண்டு சென்றார். நாடகத்தின் மூலம் மக்கள் மனதை மாற்றினார்.

இதற்கிடையில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்னும் மாதப்பத்திரிக்கைக்கு சுவாமி சித்பவானந்தர் 5 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். தாம் கயிலை மலைக்கு சென்று வந்த அனுபவங்களை அப்பத்திரிக்கையில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். அதேபோல ஸ்ரீராமகிருஷ்ணரது சரிதம், அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம், சுவாமி விவேகானந்தர் ஜீவிதம் ஆகிய மூவருடைய வரலாறுகளையும் இப்பத்திரிகையில் எழுதினார். இவைகள் எல்லாமே புத்தகங்களாக மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தினால் வெளியிடப்பட்டது. 1936ல் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நூற்றாண்டு விழா நாடெங்கிலும் கொண்டாடப்பட்ட போது உதகை மடத்திலும் சித்பவானந்தர் அவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்.

சில ஆண்டுகள் பெரிய நாயக்கன் பாளையம் வித்யாலய நிர்வாகத்தையும் அவர் பார்க்க வேண்டியிருந்தது. ஊட்டியில் இருந்தபோது காந்தியடிகள், நாராயணகுரு, காந்தள் சுவாமிகள் போன்ற மேலோர்களின் சந்திப்பு கிட்டியது. நாராயண குருவின் தூண்டுதலால் திருவாசகத்துக்கு உரை எழுதத் துவங்கினார். ஊட்டி மடத்தில் சுவாமியின் வேலைகள் விறகு உடைப்பது, தோட்டக்கலை, கழிப்பறை சுத்தம் செய்வது, சில நேரங்களில் சமையல் வேலை ஆகியன ஆகும். அவர் ஊட்டி ஆஸ்ரமத்தில் இருந்தபோது ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த பெரிய சாதுக்கள் அங்கு விஜயம் செய்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் விவேகானந்தரின் நேர் சீடரான விரஜானந்தர் ஆவார். ஊட்டியில் இருந்தபோது சுவாமிஜி நூல் ஆராய்ச்சியில் ஈடுபடலானார். அங்கிருந்து மைசூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார்.

இப்படித் தவவாழ்க்கை வாழ்ந்து வரும் மயத்தில் 1934 ஆம் ஆண்டு இவரது குருநாதர் சிவானந்த சுவாமிகள் மகாசமாதி அடைந்தார். அதற்குமுன் சித்பவானந்தர் அவரிடம் கேட்டார்‡ எங்களுக்கு வழிகாட்டுபவர் யார்? ‡ சிவானந்தர் சொன்னார் : சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவியார், குருநாதர் ராமகிருஷ்ணர், நாங்கள் உங்களிடம் குடிகொண்டு இருக்கிறோம். தொடர்ந்து தமிழ்நாட்டுக்குப் பணி செய்து வரவும் என்று. தமிழ்நாட்டில் மூலை முடுக்கு எங்கும் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம் பரவ வேண்டும் என்ற எண்ணத்தை சுவாமி சித்பவானந்தர் உள் வாங்கிக் கொண்டார். ஆகவே இந்தப் பணியைச் செய்ய ஓர் இடத்தில் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டும் என்று ஆழ்ந்து ஆலோசிக்கலானார். பிறகு வழக்கம் போல் தவத்தில் ஈடுபடலானார். தாம் எண்ணியபடி ஒரு ஸ்தாபனம் அமைக்கத் தகுந்த இடம் அவர் கண்களில் பட்டது. அதுதான் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர் ஆகிய மூவரால் பாடப்பட்ட, தாருகாவன ரிஷிகள் தவம் செய்த இடமான திருப்பராய்த்துறை ஆகும். காவிரியின் தென்கரையில் இவ்வூர் இருந்தது.

1940 ஆம் ஆண்டு இங்கு வந்த சித்பவானந்தர் பராய்த்துறை நாதரின் ராஜகோபுரத்தின் கீழ் அறையில் தங்கினார். அங்கு 2 ஆண்டுகள் தனித்திருந்து வாழும் தவமணியாக தவம் செய்து வந்தார். காலை 3 மணிக்கு எழுந்து ஜபம், தியானத்தில் ஈடுபட்டு, காவிரியில் நீராடி, பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரை வழிபட்டு வந்தார். இடையே தம்மை சந்திக்க வரும் பக்தர்களுடன் அளவுடன் உரையாடுவார். கோயிலில் தங்கிக்கொண்டு திருச்சி தாயுமானவர் கோயில் நூற்றுக்கால் மண்ட பத்திலும், சி.யூ உயர்நிலைப்பள்ளியலும், தேசியக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியிலும் மற்றும் சேலம், கரூர் முதலிய இடங்களிலும் தாயுமானவர் பாடலுக்கும், பகவத் கீதைக்கும் விரிவுரைகள் நிகழ்த்தி வந்தார். மாணவர்களை நல்வழிப்படுத்த குருகுலம், பெரியவர்களை நல்வழிப்படுத்த அந்தர்யோகமும், இளந்துறவிகளை உருவாக்க பயிற்சி முறையும் உருவாக்க மனதில் தீவிரமான எண்ணங்கொண்டார். செட்டி நாட்டைச் சார்ந்த திரு. ராமநாதன் செட்டியாரிடம் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். 1940 ஆம் ஆண்டு மே 26 ம் தேதி திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்று சுவாமியுடன் ராமமநாதன் செட்டியாரும், கானாடு காத்தான் அருணாசலம் செட்டியார் இருவரும் சந்தித்து அவரை திருப்பராய்த்துறையிலேயே தங்கும்படி செய்தார்கள்

தாம் திருப்பராய்த்துறையில் புதியதொரு ஸ்தாபனம் அமைக்க இருப்பதாக தலைமை நிலையமான பேலூர் (கல்கத்தா) ஸ்ரீராமகிரூஷ்ண மடத்துக்கு கடிதம் ஒன்று எழுதினார். அன்னதானம், அறிவுதானம், ஆன்ம தானம் மூன்றும் கிடைக்கும்படியாக ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க சங்கல்பம் செய்தார். அவ்வூரிலுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு திருப்பராய்த்துறை ஆலய நூற்றுக்கால் மண்டபத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை முதன்முதலில் தொடங்கினார். ஊருக்குப் பக்கத்தில் இருந்த மயான பூமியில் 2 ஏக்கர் நிலம் முறைப்படி ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஒரு தபோவனம் அமைக்க விரும்பினார். இவரிடம் இருந்த 4 அணா மூலதனத்தில் இப்பொழுது அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் உருவெடுக்க ஆரம்பித்தது.

மக்களுடைய உடற்பிணி தீர்க்க இலவச வைத்தியசாலை ஒன்று தொடங்கினார். திருப்பராய்த்துறையில் இருந்த சத்திரம் தற்காலிகமாக சுவாமிஜியால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது விடுதியாகப் பயன்பட்டது. 1943ல் 36பேர் இருந்த விடுதி 45ல் 60 ஐ எட்டியது. 1946 ஆம் ஆண்டு மாணவர் இல்லம் கட்டி முடியும் வரை VVயூ நாகப்ப செட்டியார் அவர்களின் விடுதியில் தான் வெளியூர் மாணவர்கள் வசித்தனர். கோயில் மண்டபம் வகுப்பறைகளாகப் பயன்படுத்தப்பட்டது. கூட்டம் பெருகிக் கொண்டே வந்ததால் பள்ளியை வனத்துறைக்கு சொந்தமான தற்போதுள்ள இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திரு. வேங்கடராமன் என்பவர் முயற்சியால் இது சாத்தியமாயிற்று. பள்ளிக்கு கட்டடவேலை நடந்த போது கட்டடத்துக்கு வேண்டிய மரங்களும், கர்டர்களும் ரயிலில் எலமனூர் ரயில் நிலையம் வந்து சேரும். அங்கிருந்து அரை மைல் சுவாமி சித்பவானந்தரும், மாணவர்களும் அவற்றைச் சுமந்து வருவார்கள். சுவாமி தினமும் மாணவர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்தார்.

1947 ஆம் ஆண்டு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. அப்போது இருந்த முதலமைச்சர்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பள்ளியை திறந்து வைத்தார். இப்பள்ளிக்கு ஸ்ரீ விவேகானந்த வித்யாவன உயர்நிலைப்பள்ளி என்று பெயர். இதைக் குருகுலப் பள்ளியாக மாற்ற விரும்பிய சுவாமிஜி திருப்பராய்த்துறை உள்ளூர் மாணவ மாணவிகளுக்கு ஒரு dழிதீ விஉஜுலியிழிr பள்ளியை அமைத்துத் தந்து விட்டு, வித்யாவனப் பள்ளியை குருகுலப் பள்ளியாக மாற்றினார். குருகுல மாணவர்களை ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு வழிபாடுகள் நிகழ்த்தி வந்தார். அக்காலத்திலேயே பள்ளியில் நீச்சல்குளம் கட்டியிருந்தார். அனைவர்க்கும் நீச்சல் கற்றுத்தந்தார். ஆண்டுக்கு 2 முறை தேநீர் விருந்து அளித்தார். தாய், தந்தை, குரு ஆகிய 3 பொறுப்புகளையும் தாமே ஏற்று குலபதியாக விளங்கினார். அவரது கவனம் முழுவதும் இந்தப் பள்ளியின் மீதுதான் இருந்தது. முதல் சுதந்திர தினம் 1947ல் திருப்பராய்த்துறையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி தம்முடைய ஸ்தாபனத்துக்கென்று தர்ம சக்கரம் என்ற பத்திரிகையை 1951ல் துவக்கினார். அதற்கான அச்சுப்பள்ளியையும் ஆரம்பித்தார். 1953‡54 ல் நடந்த சாரதா தேவியார் நூற்றாண்டு விழாவுக்கு தமிழ்நாடு முழுவதும் நாடகங்கள் நடத்தி ரூ 1 லட்சம் ஸ்ரீ சாரதா மடம் அமைக்க நன்கொடை அளித்தார். தர்ம சக்கரம் பத்திரிகை வெளியிடவும், தம்மால் எழுதப்பட்ட நூல்களை வெளியிடவும் தம் தபோவனத்தில் ஓர் அச்சுப்பள்ளியும், தபோவன பிரசுராலயமும் துவக்கப்பட்டது. இவரது நூல்கள் அனைத்தும் குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன. தபோவனத்தில் ஆண்டுதோறும் நடக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண ஜயந்தி விழாவும், அந்தர்யோகங்களும் அனைவரையும் கவர்ந்தன. மத்திய அரசின் ரயில்வேத்துறை திருச்சியிலிருந்து எலமனூருக்கு விசேட ரயில் விடுமளவிற்கு அக்காலம் விளங்கியது. அரசு அளித்த நிலத்தில் விவசாயம் அமோகமாக நடந்தது. மாட்டுப்பண்ணையில் அபூர்வமான பசுக்கள் பராமரிக்கப்பட்டன. சுவாமிஜி கோசாலைக்குப் போகும் போதெல்லாம் அப்பசுக்கள் அவரை மண்டியிட்டு வணங்கியது கண்கொள்ளாக் காட்சியாகும்.

1955‡56ல் திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றாலம் ஐந்தருவிக்கு அருகில் வசீகரமான இயற்கைச்
சூழலில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் இலஞ்சி திரு. ணூ.றீ. குற்றாலலிங்கம் பிள்ளை அவர்களால் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அமைத்துத் தரப்பட்டது. ஒருநாள் சுவாமிகளும் பிள்ளையவர்களும் ஐந்தருவிக்கு குளிக்கச் சென்றபோது ஒரு இடத்தில் நின்று சுவாமி, இந்த இடத்தில் ஓர் ஆஸ்ரமம் அமைத்தால் ஆன்மிக வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும் என்றார். உடனே திரு. குற்றாலலிங்கம் பிள்ளை சுமார் 160 ஏக்கருக்கு உள்ள பத்திரங்களை சுவாமிஜி வசம் ஒப்படைத்து, அது தம்முடைய நிலம் தான் என்றும், பெற்றுக் கொள்ளும்படியும் வேண்டினார். சுவாமி 160ல் இருந்த பூச்சியத்தை (0) அழித்து விட்டு இது போதும் என்றாராம். இதுதான் இந்த ஆஸ்ரமம் வந்த வரலாறு. குற்றாலம் சீசன் நேரத்தில் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 15 வரை 2 மாதங்களுக்கு இங்கு பருவ கால அந்தர்யோகம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இங்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175வது ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் திருப்பராய்த்துறைப்பள்ளிக்கு டாக்டர்.அழகப்ப செட்டியார் வந்திருந்து குருகுல வாழ்க்கை முறையை பாராட்டிச் சென்றார். அது போலவே ராஜாஜி அவர்களும் ஒருநாள் முழுவதும் இருந்து குருகுலப் பெருமைகளை சொற்பொழிவாற்றிச் சென்றார்.

சுவாமி, மாணவர்களை நன்முறையில் உருவாக்க தேவையான ஆசிரியர்களை உருவாக்க
வேண்டும் என்று விரும்பி திருப்பராய்த்துறையில் ஆசிரியர் கல்லூரி ஒன்றைத் துவக்கினார். 1955ல் டாக்டர். ஏ. லட்சுமண சுவாமி முதலியார் வந்து துவக்கி வைத்தார். கட்டடங்கள் பூர்த்தியான பின் டாக்டர். ராதாகிருஷ்ணன் வந்து புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். இக்கல்லூரி சுமார் 10 ஆண்டுகள் தான் இயங்கியது. தம்மால் விரும்பியபடி ஆசிரியர்கள் தயாராக வில்லை என்ற வருத்தத்தில், சமுதாயத்துக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது என்று கருதி அக்கல்லூரியை மூடிவிட்டார். இக்கல்லூரி கட்டுவதற்கு அரசு அனுப்பிய பணத்தில் தாமே செங்கல் சூளை போட்டு தரமான செங்கற்களைத் தயாரித்தார். சுண்ணாம்புக் கலçயை மாடுகளை கொண்டு ஓட்டச் செய்து தாமே தயாரித்தார். பெரும்பான்மையான வேலைகளை தம் மேற்பார்வையிலேயே செய்து அரசு அனுப்பிய பணத்தில் 1955களில் 1 லட்சத்து 25 ஆயிரம் மிச்சப்படுத்தி, அரசுக்குத் திருப்பி அனுப்பினார். இப்படியும் ஒரு மனிதரா என பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறையினர் வியப்படைந்தனர்.

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

2 Replies to “[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை”

  1. முன்பே திருப்பராய்த்துறையில் தங்கியிருந்த எனது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறேன். 1957- ல் நான் மூன்று நாட்கள் சுவாமிஜி இருந்த இடத்திற்கு அருகில் இருந்த தபால் அலுவலகத்தில் தங்கியிருந்தேன். முதல் நாளே சுவாமிஜி மற்றும் மாணவர்களுடன் உணவு அருந்தியதும், மறுநாள் அருகில் அவர் அமைத்திருந்த மாணவர் இல்லத்துக்கும் சென்று வந்தது ஞாபகம் வருகிறது. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாருக வனமும், ஆன்மிக மூவர் பாடல் பெற்ற தலம் அது என்பதும் எனக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. அதனால் அப்போது அங்கு கோவிலைத் தேடி நான் செல்லவில்லை. மேலும் அந்தக் காலக் கட்டத்தில் கம்யூனிச சித்தாந்தங்களிலும் எனது மனம் ஈர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் கோவிலுக்குச் சென்று வந்தவன்தான். 1969-ல் தான் நான் முதன்முறையாக ஆன்மிக, தத்துவப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். சென்னையில் அப்போது நான் வாங்கிய முதல் புத்தகம் சுவாமிஜியின் பகவத் கீதை தான். அங்கு மூன்றே நாட்கள் இருந்த எனக்கும் அவர் அருள் கிடைத்து, இன்னமும் நல்வழியில் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை இன்று உணர்கிறேன். அங்கேயே இருந்தவர்கள் இன்னும் பாக்கியம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

  2. இத் தொடர் புத்தகமாக வந்தால் வரும் தலைமுறைகளுக்கு மகத்தான வழிகாட்டியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *