ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

தொடர்ச்சி…

இன்றைக்கும் தங்கள் ஹிந்து அடையாளத்தின் மீது பலவகையான ஹிந்துக்களுக்கும் ஒருவித சுய விலகலும் ஒவ்வாமையும் சங்கடமும் இருப்பதைக் காண முடியும். ஒரு கிறிஸ்தவரால், இஸ்லாமியரால் தன்னை இயல்பாக தன் மதத்தின் பெயருடன் பொதுத் தளங்களில் அடையாளப் படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, ஹிந்து என்ற தங்கள் அடையாளத்தை மிகுந்த தயக்கத்துடனேயே இந்துக்கள் முன்வைக்க வேண்டியுள்ளது. இன்றும் இந்து மனதில் நீடித்து வரும் பிரிட்டிஷ் காலனிய கருதுகோள்களும், அதைத் தொடர்ந்து வந்த நேருவிய, போலி மதச்சார்பின்மைக் கொள்கைகள் செலுத்திய தாக்கமும் தான் இந்த நிலையை உருவாக்கியுள்ளன.

பிரிட்டிஷ் காலனியம் இந்தியாவில் வேரூன்றிக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்த ஆங்கில ஆவணங்கள் எல்லாவற்றிலும் Hindoo என்ற சொல்லே புழக்கத்தில் இருந்தது. இந்தச் சொல் அதன் பயன்பாட்டிலேயே ஒரு கீழான நாகரிகத்தை, மக்களை, சமுதாயத்தைக் குறித்தது (ஏறக்குறைய nigger என்ற சொல்லைப் போல). கிறிஸ்துவ மிஷநரிகள் இந்தியாவையும் இந்து மதத்தையும் குறித்து உருவாக்கியிருந்த வக்கிரமான மனப்பிம்பங்களே உலகெங்கிலும் அப்போது அறியப் பட்டிருந்தன. இது 1860கள் வரை நீடித்தது.

1857ம் வருடத்திய முதல் சுதந்திரப் போர் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்குப் பிந்தைய பிரிட்டிஷ் அரசாட்சியின் போது தான் திறந்த மனத்துடன் இந்துப் பண்பாட்டை அறியும் முயற்சிகளை வில்லியம் ஜோன்ஸ் போன்ற சில மேற்கத்திய அறிஞர்கள் மேற்கொண்டார்கள். சம்ஸ்கிருத மொழி மீதும் இந்து நூல்கள் மீதும் பெரும் ஆர்வம் மேற்குலகில் ஏற்பட்டது. இந்தத் திருப்பத்தின் போது Hindoo என்ற சொல் மிக வேகமாக வழக்கொழிந்து, அதற்குப் பதிலாக Hindu என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தச் சொல் இழிசொல்லாக அல்ல, மாறாக இந்துப் பண்பாட்டை மேற்குலகம் புரிந்து கொள்ள உதவும் ஒரு திறவுகோலாக, வாயிலாகவே அமைந்தது.

இன்றைய இணையத் தொழில்நுட்பம் இத்தகைய சொல்லாராய்ச்சிகளை மிகவும் எளிமையாக்கியிருக்கிறது. Google Ngram என்ற கூகிள் மென்பொருளின் உதவியால் 1790 முதல் 2010 வரை பதிப்பிக்கப் பட்ட ஆங்கில நூல்களில் Hindoo, Hindu ஆகிய சொற்களின் பயன்பாடு எப்படி மாறிவருகிறது என்பது குறித்த கீழே உள்ள வரைபடத்தை ஒரு நொடியில் பெற முடிகிறது!

(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

(இந்த வரைபடம் கூகிளின் புத்தகக் களஞ்சியமான Google Booksக்கு உள்ளே உள்ள புத்தகங்களை மட்டுமே கணக்கில் கொண்டு அவை பதிப்பிக்கப் பட்ட வருடங்களின் அடிப்படையில் தேடிப் பெறப்பட்டது. உலகின் அனைத்து நூலகங்களையும் அலசித் தேடினாலும் இந்த வரைபடம் குறிப்பிடும் பொதுப் போக்கில் மாற்றமிருக்காது)

வரைபடத்தைக் கவனித்தால் சில முக்கியமான விஷயங்கள் புலப்படும். 1840களில் இந்துமதத்தைக் குறிக்கும் இரண்டு சொற்களுமே ஆங்கில நூல்களில் குறைவதற்குக் காரணம், பிரிட்டிஷார் இந்தியாவின் மீதான தங்களது அதிகாரம் உறுதியாகி விட்டது என்று கருதியது தான். ஆனால் 1857 போர் அந்த எண்ணத்தைத் தகர்த்து விட்டதால், அதன் பின்வந்த காலகட்டங்களில் ஆங்கில நூல்களில் மேலும் மேலும் அதிகமாக இந்து மதம் பற்றி எழுதப் படுவது தெரியவருகிறது. 1860 தொடங்கி 1960 வரை ஏறத்தாழ நூறாண்டுகள் இது நீடிக்கிறது. மேற்குலகம் இந்துமதத்தைத் தீவிரமாக கவனித்து, கண்காணித்து புரிந்து கொள்ள முயன்ற காலகட்டம் இது. 1960ல் தொடங்கி குறிப்பாக 1980களில் இந்து என்ற சொல்லின் பயன்பாடு பெரிதும் குறைய ஆரம்பிக்கிறது. இவ்வாறு குறைவதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம் – இந்து என்ற சொல்லின் பரவலான பொருள் குறுகிக் கொண்டே வந்தது, இந்து குருமார்கள் மீது பல உள்நோக்கம் கொண்ட அவதூறுகள் சுமத்தப் பட்டது, இந்துமதம் பற்றிய ஆய்வுகள் கல்விப்புலங்களில் உலக அளவில் குறைவது, இந்து ஞானத்தின் ஒரு சில அம்சங்களை ரீபேக்கேஜ் செய்யும் புதுயுக ஆன்மிக குருமார்கள் தங்கள் சொல்லாடல்களில் Hindu என்ற சொல்லை கவனமாகத் தவிர்ப்பது இத்யாதி  இத்யாதி.

(வரைபடத்தையும் அது குறித்த புரிதல்களையும் அளித்த Manasatarangini வலைப்பதிவிற்கு நன்றி).

இன்றைய சூழலில் ஹிந்து அடையாளத்தை மறுதலிக்கும் இரண்டு கருதுகோள்களை பொதுவாகக் காணமுடிகிறது. ஒன்று ஹிந்து அடையாளமின்மை வாதம் (Negation of Hindu identity), மற்றது ஹிந்துத் தாக்க நீக்கம் (De-hinduization). இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.

ஹிந்து என்ற பொது அடையாளம் ஒன்று வரலாற்று ரீதியாக இல்லவே இல்லை. இந்து மதத்தின், சமுதாயத்தின் உறுப்புகளாக உள்ள ஒவ்வொன்றும் தனிப்பட்டவை. இவற்றை “ஒற்றை பொது அடையாளத்துக்குள்” கொண்டு வருவது கருத்தியல் வன்முறை என்பது முதலாவது வாதம்.

ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையான அம்சங்களை ஒவ்வொன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றின் ஹிந்து இயல்பை மறுதலித்து, அவற்றை தனித்தனியாக முன்னிறுத்துவது இரண்டாவது வாதம். அதோடு விட்டுவிடாமல், இந்து சமுதாயத்தில் உள்ள எல்லா சீர்கேடுகளையும் மூட்டை கட்டி அதற்குத் தவறாமல் “இந்து” என்ற லேபிளை ஒட்டுவதும் இந்த வாதத்தின் இன்னொரு பரிமாணம். உதாரணமாக, யோகம் இந்து அறிவியலேயே அல்ல. அது உருவாகும்போதே மதத் தீட்டு எதுவும் இல்லாமல் சுத்திகரிக்கப் பட்டு “பொது” சொத்தாகவே பிறந்தது என்று இத்தரப்பினர் ஒரு கருதுகோளை முன்வைப்பார்கள். பதஞ்சலியின் யோக சூத்திரமும், பகவத்கீதையும் இல்லாமல் ஏது யோகம்? அவை இந்து நூல்கள் இல்லாமல் கிறிஸ்தவ நூல்களா என்ன? என்று எதிர்க்கேள்வி வந்தால், உடனே பதஞ்சலியும் இந்து அல்ல, பகவத்கீதையும் இந்து அல்ல என்று தங்களது அடுத்த கருதுகோளை எடுத்து வைப்பார்கள். இன்னொரு சாரார், பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல, தமிழர் திருநாள் என்று ஒரு ஜல்லியை எடுத்து விட்டு, பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவம் லாகவமாகத் திருட வழிவகுப்பார்கள். இந்த வாதத்தின் படி பரதமும், கதகளியும், ஆயுர்வேதமும், பாரம்பரிய சிற்பக் கலையும்,  யோகமும், காந்தியமும் எல்லாம் ”இந்து” கிடையாது, அவை எல்லாம் வேறு ஏதோ ஒரு ஜந்து! ஆனால் இந்தியாவின் ஏழ்மை, சாதியம், சில பெண்ணடிமை செயல்பாடுகள், சில மூட நம்பிக்கைகள் எல்லாம் சந்தேகமே இல்லாமல் ”இந்து” தான்.

மேற்சொன்ன ஹிந்து அடையாள மறுப்பு வாதங்களை வைப்பவர்கள் உலகின் மற்ற பூதாகாரமான “ஒற்றை பொது அடையாளங்கள்” எவற்றையும் இது போன்று கேள்விக்கு உட்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல, அவற்றின் ஆக்கிரமிப்புகளையும், நேரடி வன்முறையையும் நியாயப் படுத்துபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண் நகை.

******

சைவம், வைணவம், சாக்தம் ஆகியவை சமயப் பிரிவுகளுக்கான அடையாளங்கள். சாதிகள், குலங்கள் ஆகியவை சமூகப் பிரிவுகளுக்கான அடையாளங்கள். தமிழர், தெலுங்கர், வங்காளி, மலையாளி போன்றவை மொழி/பிரதேசம் சார்ந்த அடையாளங்கள்.  இவை அனைத்தும் ஹிந்து என்ற பொது அடையாளத்திற்கு எந்த வகையிலும் விரோதமானவை அல்ல, மாறாக அதன் உள் அடங்கியவை. ஹிந்து அடையாளம் என்பது இவற்றை அழித்து உருவானதல்ல, தொகுத்து உருவானது. இந்தியர், இலங்கையர், அமெரிக்கர், ஆஸ்திரேலியர் போன்ற தேசிய அடையாளங்களும் ஹிந்து அடையாளத்திற்கு முரணானவை அல்ல, சார்பு நிலை கொண்டவை.

மேலும்  இவை ஒவ்வொன்றுமே தங்களுக்குள் இவற்றை விட குறுகிய அடையாளங்களைத் தொகுத்து உள் அடக்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அலைகடலெனத் திரண்டு வருமாறு அறைகூவி புஜபலம் காட்டும் யாதவர், வேளாளர், நாடார், வன்னியர் போன்ற எல்லா சாதி அடையாளங்களும் இவ்வாறு உருவானவையே. பல உபசாதிகள் ஒன்று கூடி ஒரு பொது சாதி அடையாளத்துடன் முன் நிற்பது இந்திய, தமிழக சமூக வரலாற்றில் நெடுகக் காணக் கிடைப்பது, இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பது. இதே போலத் தான் சமயப் பிரிவுகள் தங்களுக்குள் திரண்டு அதைவிடப் பெரிய சமயப் பிரிவுக்குள் இணைகின்றன. காணாபத்யமும், கௌமாரமும் தத்துவ ரீதியாக சைவத்துள் அடங்கும். சைதன்யரின் கௌடிய மரபும், மாத்வரின் துவைதமும், ராமானுஜ சித்தாந்தமும் எல்லாம் வைணவத்துக்குள் அடங்கும். அதே விதிகளின் படி சைவமும், வைணவமும் இந்துமதத்துள் அடங்கும்.

உலகெங்கும் சமய,சமூக,கலாசாரப் பொது அடையாளங்கள் இவ்வாறு தான் அடுக்கு முறையில் உருவாகித் திரள்கின்றன.

இந்த சமூக இயங்கியலைப் புரிந்து கொள்ளாமல், ஹிந்து என்ற அடையாளம் அடித்தளமற்றது என்று கூறி, அந்த பொது அடையாளத்தைத் துறந்து உட்பிரிவு அடையாளங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது தற்கொலைக்கு ஒப்பான செயல். இந்து சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல் அது. இதைத் தான் இந்திய தேசிய விரோதிகளும், மார்க்சிஸ்டுகளும், இந்தியாவை “கட்டுடைக்கும்” மேற்கத்திய அறிவுஜீவிகளும் காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரசாரத்தில் மதிமயங்கும் ஹிந்துக்கள் தங்களுக்கும் தங்கள் சந்ததியினருக்கும் பெரும் தீமையையே கொண்டு வருகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

முதலாவது நைஜீரியா. நைஜீரியப் படுகொலைகள் குறித்து ஜெயமோகன் எழுதுகிறார் –

”நைஜீரியாவில் இருந்த தொன்மையான மதத்தையும் பண்பாட்டையும் எப்படி விவரிக்கலாம்? வைதிகம், வேதாந்தம்,சமணம்,பௌத்தம் போன்ற பெருமதங்களால் மையத்தில் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டு, சமரசப்படுத்தப்படாத இந்துமதப்பிரிவுகள் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது அது. அதாவது பல்வேறு வகையான பழங்குடிகள் அவரவர் தெய்வங்களை வழிபட்டுக்கொண்டு அவரவர் ஆசாரங்களின்படி வாழ்ந்தார்கள்.

அங்கே பலதெய்வக் கோட்பாடு வலுவாக திகழ்ந்தது. அவற்றில் பல இனக்குழுக்கள் உயர்ந்த நாகரீகத்தை அடைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நடுவே தத்துவப் பரிமாற்றம் நிகழவில்லை. ஒருசாராரின் தெய்வங்கள் இன்னொரு சாராருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. காரணம் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருந்தனவே ஒழிய அவற்றுக்கு தத்துவார்த்தமான உயர் விளக்கம் அளிக்கப்படவில்லை. அப்படி அளிக்கப்பட்டால் மட்டுமே ஒரு தெய்வம் இன்னொரு இனக்குழுவுக்குச் செல்ல முடியும். இருபது நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் நிகழ்ந்தது அதுவே.

இந்தச் சூழலில் அங்கே அரேபியாவில் இருந்து இஸ்லாம் வந்தது. இஸ்லாம் எல்லா பழங்குடி தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் அழித்து ஒற்றைநம்பிக்கையை முன்வைத்தது. நைஜீரிய வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டு முதல் எண்ணூறு வருடம் ஒவ்வொருநாளும் குருதி கொட்டியிருக்கிறது..”

இஸ்லாமிய ஆதிக்கத்திற்குப் பின்பு, கிறிஸ்தவ மிஷனரிகளும் காலனியாதிக்காவும் நைஜீரியாவைச் சூறையாட, இன்றைக்கு அமைதிக்கான எல்லாக் கதவுகளும் அடைபட்டு ரத்தவிளாறாகி நிற்கிறது அந்த தேசம். அது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை என்றும் ஜெயமோகன் வார்த்தைகளிலேயே கேட்போம் –

”.. இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான். ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.

அவ்வாறு இந்து,பௌத்த,சமண மதங்கள் செய்தது பெரும் வரலாற்றுப்பிழை என்று இப்போது மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆய்வேடுகள் உருவாக்குகிறார்கள். கருத்தரங்குகள் நிகழ்த்துகிறார்கள். இந்தியப்பண்பாட்டின் வேர்களை அழித்துவிட்டார்களாம். சொல்லாமல் இருப்பார்களா என்ன?”

அடுத்த உதாரணம் இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவு. இந்தத் தீவில் வாழும் பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் இதழில் சமீபத்தில் வந்த ஒரு கட்டுரை விவரிக்கிறது. இந்தப் பழங்குடியினர் இயற்கை வழிபாட்டையும், குறிசொல்லுதல் போன்ற சடங்குகளையும் கைக் கொண்டவர்கள். இவர்களுக்கு இந்து புராணங்களையோ, சிவன், விஷ்ணு,சக்தி போன்ற தெய்வங்களையோ பற்றி எதுவும் தெரியாது. இவர்கள் எப்படி இந்துக்களாவார்கள்? இந்தோனேசிய அரசு இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், இந்துமதம் ஆகிய பெருமதங்களையே அங்கீகரிக்கிறது; உதிரியான பழங்குடி நம்பிக்கைகளுக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடையாது; இவர்கள் ஏதாவது ஒரு பெருமதத்துடன் தங்களை இணைத்துக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயம். எனவே தங்களை இந்துமதப் பிரிவாக அழைத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் தங்கள் சுதந்திரத்தையும் கலாசாரத்தையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் இழக்கவில்லை என்பதே. மற்ற ஆபிரகாமிய மதங்களுக்கு மாறுவது பொருளாதார ரீதியாக அவர்கள் முழுவதும் சுரண்டப் படுவதற்கே வழிவகுத்திருக்கும். தங்கள் மரபையும் தனித்துவத்தையும் முற்றாகவே இழந்து ஒரு தீராத ரணத்தையும், நிரந்தர வடுவையும் சுமக்கும் நிலைக்கு அவர்கள் ஆட்பட்டிருப்பார்கள்.

கிறிஸ்தவ மிஷநரிகள் எங்கள் சமுதாயத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்து அதை அடிமைப் படுத்தத் துடித்தார்கள். அப்போது இந்தோனேசியாவின் மற்ற இந்துக்கள் தான் எங்களுக்கு ஆதர்சமாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள் என்று இந்த பழங்குடி சமுதாயத்தின் குலகுரு கூறுகிறார். சந்தர்ப்பவாதம் தங்களை ஹிந்துக்களாகியது என்பதை மறுக்கிறார் அவர். “பல நூற்றாண்டுகளாக நாங்கள் இந்துக்களாகத் தான் இருந்து வந்திருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக, 20-30 ஆண்டுகளாகத் தான் அதை அறிந்து கொண்டோம்” என்கிறார். Dayak என்ற அந்தப் பழங்குடியினர் பின்பற்றும் சமயம் 4ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்தோனேசியாவிற்கு வந்த இந்து மதத்தின் ஆதார நம்பிக்கைகளில் இருந்து தான் உருவானது என்று வரலாற்று ஆதாரங்களையும் அவர் அளிக்கிறார்.

மொத்தத்தில் ஹிந்துமதமே தங்கள் சமூக, ஆன்மிக விடுதலைக்கும், உரிமைகளுக்கும் அரணாக நின்று காக்க வல்லது என்பதில் அந்தப் பழங்குடியினர் சமூகம் மிக உறுதியாக நின்று கொண்டிருக்கிறது. இந்தோனேசியாவின் மற்றொரு பகுதியான பாலித் தீவின் இந்துக்கள் ராமாயணம், மகாபாரதம், கோயில்கள்,பூஜைகள்,விரதங்கள் ஆகிய கூறுகள் கொண்ட புராண இந்துமதத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இந்த இரண்டு தீவுகளிலும் வாழும் இந்துக்களுடையே இணக்கமான கலாசாரப் பரிவர்த்தனைகளும் நடந்து வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இன்னும் சில வருடங்களில் Kaharingan பிரிவினர் தங்கள் மரபிலிருந்தே சிவலிங்க வழிபாட்டுக்குள் வரக் கூடும். தங்களுக்கான ராமாயணத்தைக் கண்டடைந்து அதை நாடகமாக நடிக்கவும் கூடும்!

மற்றொரு உதாரணம் ஐரோப்பிய யூனியன். இரண்டாம் உலகப் போரில் தங்களை ஜன்ம விரோதிகளாகக் கருதி ரத்தக் களறியில் ஈடுபட்ட தேசங்கள், இன்று ”ஐரோப்பிய யூனியன்” என்ற பெயரில் அரசியல், பொருளாதார, வர்த்தக லாபங்களைக் கருதி ஒன்றிணைந்து நிற்கின்றன. இன்றைய உலகில் இந்த அடையாளம் ஒரு மாபெரும் வலிமையையும் பாதுகாப்பையும் அந்த தேசங்களுக்கு அளிக்கிறது. ஐரோப்பிய யூனியனின் உருவாக்கத்திற்கு என்ன “வரலாற்று நியாயம்” உள்ளது என்று எந்த மேதாவியும் வாயைத் திறப்பதில்லை. ஆனால் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப் படும் “இன மோதல்களின்” அடிப்படையில் தான் இந்தியாவும், இந்து மதமும் என்றென்றும் இயங்க வேண்டும் என்று இவர்கள் உபதேசம் செய்கிறார்கள். இது என்ன நியாயமோ?

இந்த உதாரணங்களில் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளப் போகிறோம்? உலகளாவிய சூழலில் நம்மை பகாசுர சக்திகள் விழுங்கக் காத்துக் கொண்டிருக்கையில் அவற்றுக்கு ஈடாக அவற்றை விழுங்காவிட்டாலும், சமமாக நின்று போரிடும் அளவுக்கு வலிமையுள்ள பீமசேனனாக ஆவது தான் நாம் வாழும் வழியே தவிர, ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அவற்றிற்குத் தீனியாக ஆகிக் கொண்டிருப்பதல்ல.

ஹவாய் தீவுகள் முதல் நியூசிலாந்து தீவுகள் வரை உலகின் 92 நாடுகளில் இந்துக்கள் வசிக்கிறார்கள். உலக அளவில் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 100 கோடி (1 பில்லியன்). எண்ணிக்கை அளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மதமாக இந்து மதம் விளங்குகிறது. இந்த மாபெரும் உலகளாவிய அடையாளம் அளிக்கும் வலிமையும்,பெருமிதமும் சாமானியமானதா என்ன? தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு இந்து, ஏதோ கிறுக்கர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தனது இந்து அடையாளத்தை மறுதலிப்பது என்பது உலகளவில் தனக்கான இடத்தை ஒரு மாபெரும் வட்டத்திலிருந்து ஒரு சிறு புள்ளிக்கு நகர்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அத்தகைய புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி.

அதனால் தான் ”திருப்பெருந்துறையுறை சிவபெருமானே” என்று பாட ஆரம்பித்த மாணிக்கவாசகர் அங்கேயே நின்றுவிடவில்லை. “தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை” என்றும், “தென்னவன் சேரலன் சோழன் சீர்பதங்கள் வரக் கூவாய்” என்றும்,  “தென்னாடுடைய சிவனே போற்றி” என்றும்,  ”கயிலை மலையானே போற்றி” என்றும் பாடி, இறுதியில் “என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று முடிக்கிறார். ”சேர வாரும் செகத்தீரே” என்று தான் திருச்சிக்காரர் தாயுமானவர் அறைகூவுகிறார். பாண்டிச்சேரியில் கனகலிங்கம் வசித்த தாழ்த்தப் பட்டவர் குடியிருப்புக்குச் சென்ற மகாகவி பாரதி, அங்குள்ள முத்துமாரி அம்மனைக் கண்டு மெய்மறந்து “உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா” என்று பாடினார்; ”உள்ளூர் தெய்வமே” என்று பாடவில்லை.

ஹிந்து மதம் உலக மதம்.
ஹிந்து அடையாளம் தனித்துவமிக்கதொரு உலக அடையாளம்.
அதனை மறுக்காதிருப்போம்.
மறவாதிருப்போம்.

*******

“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன், ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மை என் சிந்தனை முறைக்கு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஹிந்துத்வம் என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? நான் ஹிந்துத்வத்தை எதிர்க்கிறேன் (என்று நினைக்கிறேன்). இது என்னவோ எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் ஒருவராலும் வரையறுக்க முடியாத விஷயம் போலிருக்கிறது”- சில வாரங்கள் முன்பு ஒரு கூகிள் குழும விவாதத்தில் நண்பர் ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார்.

அந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

(தொடரும்)

18 Replies to “ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்”

  1. \\உலகளாவிய சூழலில் நம்மை பகாசுர சக்திகள் விழுங்கக் காத்துக் கொண்டிருக்கையில் அவற்றுக்கு ஈடாக அவற்றை விழுங்காவிட்டாலும்\\

    இதற்காக நாம் ரொம்ப யோசிக்க வேண்டாம். ஒன்றாம் வகுப்பில் நான்கு பசுமாடு மற்றும் சிங்கம் கதை படித்தாலே போதும். இதற்கான பதில் கிடைத்துவிடும் 🙂

    உலகின் எல்லா நாடுகளிலும் ஆப்பிரகாமிய வைரஸ்கள் இதை தானே செய்தார்கள்.

  2. Your statistical & graphical explanation is fantastic. We have to analyze why the up trend started dipping from 1980 onwards. Starting from Swami Vivekananda voice at Chicago about Hindustan and Hinduism and his subsequent lectures at various religious meet at several places in the world. Iskon made a strong foot hold throughout the world followed by Rajneesh. Then a chain of institution headed by some religious gurus started spreading everywhere and posed a big threat to Abrahamic religion. People started realizing the fraud dogmas forced on them by the respective religion. To-day yoga turned into a multi billion business. People stopped going to Churches for prayers. Many of them changed as atheist Due to introduction of internet people started studying every religion and started investigating the hidden facts and the true color of the Abrahamic religion. It is now exposed every nook & corner of the world. The sex crimes of Church padres being buried under the carpet by the Vatican for a longer period. Now every thing exposed and the Pope visited every country to console the affected person and paying compensation. Churches are sold to meet the sex abuse cases. To-day in Canada alone around 35 Hindu Temple standing upright as a symbol of Hindu belief. Now the mafia Vatican troops started taping all the avenues like human right, mix of cultural practices, inter religious meet, academic attack, media attack, economic sanctions etc., to revive the diminishing faith

  3. அருமை !

    எப்போது புத்தகமாக வரப்போகிறது ?

    .

  4. //இன்றைய சூழலில் ஹிந்து அடையாளத்தை மறுதலிக்கும் இரண்டு கருதுகோள்களை பொதுவாகக் காணமுடிகிறது. ஒன்று ஹிந்து அடையாளமின்மை வாதம் (Negation of Hindu identity), மற்றது ஹிந்துத் தாக்க நீக்கம் (De-hinduization). இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.//

    ஆழச் சிந்திக்க வைக்கும் இரு கருதுகோள்கள்

  5. வித்யாசங்களை மட்டும் முன்னிறுத்தும் இன்றைய நிலையில் சாம்யதைகளை முன்னிறுத்தும் வ்யாசத்திற்கு வாழ்த்துக்கள்

    \\\\\\\\தமிழர், தெலுங்கர், வங்காளி, மலையாளி போன்றவை மொழி/பிரதேசம் சார்ந்த அடையாளங்கள். இவை அனைத்தும் ஹிந்து என்ற பொது அடையாளத்திற்கு எந்த வகையிலும் விரோதமானவை அல்ல, மாறாக அதன் உள் அடங்கியவை.\\\\\\

    வாழ்க்கையில் இது புரியாது ச்ரமப்பட்டு, உணர்வு பூர்வமாக இந்த நிதர்சனத்தை புரிந்து கொண்டபடி இதை பகிர்கிறேன். தமிழகத்திலிருந்து பெயர்ந்து ஹைதராபாத் பின்னர் தில்லி போன்ற நகரங்களில் வசித்த போது பெரும்பாலும் இவை தமிழர்களும் அதிகமாக வசிக்கும் நகரங்கள் என்பதாலும் தமிழ் பேசுவோருடன் அதிகம் பழக்கம் இருந்ததாலும் வித்யாசம் அதிகம் தெரிந்ததில்லை.

    அங்கிருந்து நேபாள எல்லையில் உத்தராகண்ட் மாகாணம் ( அப்போது உ.பி) சென்ற போது பெரும் மாற்றம். முதலில் எதுவும் பிடித்ததில்லை. கடுகெண்ணையில் அவர்கள் ஆசையாக ஏதும் தின்பண்டம் சமைக்கும் போது குமட்டிக்கொண்டு வரும். அதுவரை சாப்பிட்டு பழக்கமாகாத Cauli flower என்ற காய்கறி அதிகம் சாப்பிட வேண்டிய மஜ்பூரி இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு மேலாக முதன் முறையாக வாயைத்திறந்து தமிழில் பேச ஆளே கிடையாது. ஆக பார்ப்பது பேசுவது உண்பது என ஒட்டு மொத்தமாக அன்யமாய் விட்டோமா என ஒரு சமயம் ஆயாசமாய் இருந்தது.

    ஆனால் மனிதர்களுடன் பழகப்பழக அட மொழி தானே வேறு. அதே ராமாயணம் அதே மஹாபாரதம் அதே பாகவதம். அதே சிவபுராணம். அதே நம்பிக்கைகள். அப்போது ( 1990 களில்) நேபாளத்தில் மன்னராட்சி. எல்லை தாண்டி அங்கும் இப்படியே தான். எப்படி தமிழும் மலையாள பாஷையுமோ அதே போல் குமாவுனியும் நேபாள பாஷையும். வித்யாசங்கள் எப்படி அதன் இடத்திலோ அதேபோல் ஊடே பெருமளவில் சாம்யதைகளையும் கண்டு பெரிதும் மகிழ்ந்துள்ளேன். துளசி ராமாயணம் பற்றி அளவளாவுகையில் கம்ப ராமயணம் பற்றி கேட்டறிந்ததைப் பகிர்ந்தாலோ வால்மீகி ராமாயணம் பற்றி பேசினாலோ மிகவும் ரசித்து ருசித்து கேட்பார்கள். பஞ்சாப், ஹிமாசலம் மற்றும் காஷ்மீரம் என்று எங்கும் அதன் பின் வித்யாசங்களை விட சாம்யதைகளை பின்னர் ரசித்து மகிழ்ந்து வருகிறேன்.

    எப்படி ஒரு மாலையில் ஒவ்வொரு முத்தும் மணியும் அதன் நிலையில் தனியாக இருந்தாலும் கூட ஒரு நூலால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ஒரே ஹாரமாக விளங்குகிறதோ அதுபோன்று தான் இதுவும் என்று தோன்றுகிறது.

    \\\\\ஆனால் அவர்கள் நடுவே தத்துவப் பரிமாற்றம் நிகழவில்லை. ஒருசாராரின் தெய்வங்கள் இன்னொரு சாராருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. காரணம் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருந்தனவே ஒழிய அவற்றுக்கு தத்துவார்த்தமான உயர் விளக்கம் அளிக்கப்படவில்லை.\\\\\\

    மேலை நாடுகளில் அந்த போக்கானது எங்கே இட்டு சென்றது என்பது சரித்ரம். நடப்பில் ஹிந்துஸ்தானத்தில் என்ன நிகழ்கிறதோ அது இந்த சாலையில் தான் ஆப்ரஹாமியர் பயணிக்கிறார்கள் என தெரிகிறது தங்களது கீழ்க்கண்ட வாசகத்தால்.

    \\\\\\\\இந்து சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல் அது. இதைத் தான் இந்திய தேசிய விரோதிகளும், மார்க்சிஸ்டுகளும், இந்தியாவை “கட்டுடைக்கும்” மேற்கத்திய அறிவுஜீவிகளும் காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\\\\\\\\\

    \\\\\\\\\காணாபத்யமும், கௌமாரமும் தத்துவ ரீதியாக சைவத்துள் அடங்கும். சைதன்யரின் கௌடிய மரபும், மாத்வரின் துவைதமும், ராமானுஜ சித்தாந்தமும் எல்லாம் வைணவத்துக்குள் அடங்கும். அதே விதிகளின் படி சைவமும், வைணவமும் இந்துமதத்துள் அடங்கும்.\\\\\இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன\\\\\\\\

    ச்ருதி பேதமாக தயவுசெய்து காண வேண்டாம்.

    அதே விதிகளின் படி சைவமும், வைணவமும் எப்படி இந்துமதத்துள் அடங்குமோ அப்படியே அதே விதிகளின் படி பௌத்தமும் ஜைனமும் சீக்கியமும் ஹிந்து மதத்தினுள்ளேயே அடங்கும்.

    டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் முன்னாள் பத்திரிகாதிபர் அமரரான ஸ்ரீ கிரிலால் ஜைன் அவர்கள் ஜினமத தத்வ தர்சனத்திற்கும் வேதக் கருத்துகளுக்கும் உள்ள சாம்யதையை தொலைக்காட்சியில் பேசி கேட்டிருக்கிறேன்.

    பௌத்தத்திற்கும் பூர்வமீமாம்சத்திற்கும் பௌத்தத்திற்கும் அத்வைத தத்வ தர்சனத்திற்கும் இடையேயான சம்வாதங்கள் இந்த தர்சனங்களும் ஹிந்து என்ற ஹாரத்தில் உள்ள முக்தாமணிகளே என்பதைக் காட்டுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

    பின் வந்த மற்றைய வைதிக தத்வ தரிசிகள் அத்வைத தத்வ தர்சனத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ப்ரச்சன்ன பௌத்தர் என்று சங்கராசார்யரை சாடியது அவர்கள் அவரது கருத்துகளில் பௌத்தக் கருத்துக்களின் சாம்யதையைக் கண்டதால் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    குருக்ரந்த் சாஹேபில் ராம, க்ருஷ்ண, கோவிந்த, ஹரி நாமங்கள் எத்தனை முறை திரும்பத் திரும்ப வருகின்றன.

    மேலும் நம்பிக்கை என்ற மிரட்டுப்பிரம்பின் துணை கொண்டு மட்டுமல்லாது மற்றைய வைதிக தரிசனங்கள் போலவே அறிவுபூர்வமாகவே ப்ரக்ருதி புருஷ சம்பந்தத்தை அவைதிக தர்சனங்களும் அணுகுவது முக்யமான சாம்யதை என்ற ரீதியிலும் இவைகளும் ஹிந்து என்ற ஹாரத்தின் மணிகள் என்று கொளல் சரியல்லவா.

    சட்ட ரீதியாக ஹிந்து திருமணச்சட்டப்படி ஜைன, பௌத்த மற்றும் சீக்கியர்கள் ஹிந்து என்பது மட்டுமல்ல காரணங்கள் வேறாயினும் அதே நாளில் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைகளையும் இவர்கள் கொண்டாடுகிறார்கள். உண்ணும் உணவு உடுக்கும் உடை பேசு மொழி இவற்றிலும் இவர்களுக்கும் மற்றைய ஹிந்துக்களுக்கும் வித்யாசங்களும் இல்லை. (அராபியர் போன்றோ ஐரோப்பியர் போன்றோ இவர்கள் உடைகளணிவதில்லை).

    நம் தர்மத்தை முரட்டு படானிய முஸல்மாணியரிடமிருந்து காப்பாற்றி ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் ரக்ஷித்த குருநானக் மஹராஜின் ஜெயந்தியில் எமது சீக்கிய சஹோதரர்களுடன் சேர்ந்து அவர்களது அமைப்பான கால்ஸாவையும் தசமேஷ் என்ற அவர்களது பத்து குருமார்களுடைய வெற்றியையும் குறிக்குமாறு அவர்களிடும் கோஷத்தில் சேர்ந்து கொண்டேன்.

    வாஹே குரு தீ கால்ஸா. வாஹே குரு தீ ஃபதே

    நற் குருவிற்கும் அவரது அமைப்பிற்கான கால்ஸாவுக்கும் வெற்றி உண்டாகுக.

  6. காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை.. தனக்கே உரிய நடையில் கட்டுரையை எழுதியிருக்கிற மதிப்பிற்குரிய ஜடாயு அவர்களுக்கு நன்றிகள்..

    மதிப்பிற்குரிய ஸ்ரீ கிருஷ்ண குமார் அவர்கள் குறிப்பிடுகின்ற வகையில் இன்றைய சூழலில் ஹிந்து மதம் என்ற பரந்த உருவாக்கத்தினுள் பௌத்தம், ஜைனம், சீக்கியம் ஆகியவற்றையும் உள்வாங்கிக் கொள்ளலாமா..? என்பது நீண்ட உரையாடலுக்குரிய விஷயம்.. ஆனால், இவ்வுரையாடல் கட்டாயம் இன்று அவசியமானது..

    இக்கட்டுரையை தொடர்ந்து இவ்வாறான ஒரு சீரிய வாதங்கள் சார் .. நடைமுறை சார் உரையாடலை விரும்புகிறேன்..

  7. அன்புள்ள ஜடாயு,

    // இன்றைக்கும் தங்கள் ஹிந்து அடையாளத்தின் மீது பலவகையான ஹிந்துக்களுக்கும் ஒருவித சுய விலகலும் ஒவ்வாமையும் சங்கடமும் இருப்பதைக் காண முடியும். // எனக்கு இப்படித் தெரியவில்லை. அப்படி நினைப்பவர்கள் சிறுபான்மையினர் என்றுதான் தோன்றுகிறது. தங்கள் ஹிந்து அடையாளத்தைப் பற்றி பெரிதாக அக்கறை இல்லாதவர்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். பெரும்பான்மை மேலை நாட்டினரும் தங்கள் கிருஸ்துவ அடையாளத்தைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

    // அதற்குப் பிந்தைய பிரிட்டிஷ் அரசாட்சியின் போது தான் திறந்த மனத்துடன் இந்துப் பண்பாட்டை அறியும் முயற்சிகளை வில்லியம் ஜோன்ஸ் போன்ற சில மேற்கத்திய அறிஞர்கள் மேற்கொண்டார்கள். // தகவல் பிழை. வில்லியம் ஜோன்ஸ் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இறந்துவிட்டார். வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தவர் என்று நினைக்கிறேன். அப்படி அவர் காலத்தால் முந்தியவர் என்னும்போது // கிறிஸ்துவ மிஷநரிகள் இந்தியாவையும் இந்து மதத்தையும் குறித்து உருவாக்கியிருந்த வக்கிரமான மனப்பிம்பங்களே உலகெங்கிலும் அப்போது அறியப் பட்டிருந்தன. இது1860கள் வரை நீடித்தது. // என்று கருத்து கொஞ்சம் பலவீனப்படுகிறது. நான் மொழி வல்லுனன் இல்லை, ஆனால் hindoo என்ற பயன்பாடு // ஒரு கீழான நாகரிகத்தை, மக்களை, சமுதாயத்தைக் குறித்தது // என்பது சரிதானா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது.

    மேலும் அந்த கிராஃப்பிலிருந்து நீங்கள் அடையும் முடிவுகள் எனக்கு சரியாகத் தெரியவில்லை. புத்தகத்தில் ஹிந்து என்ற வார்த்தைப் பிரயோகம் குறைந்து அதிகரிப்பது ஹிந்து கலாசாரம், இந்தியா போன்றவை அந்த காலகட்டத்தில் ஹாட் trending டாபிக்கா இல்லையா என்பதைப் பொறுத்தது. இரண்டு மாதங்களுக்கு முன் அண்ணா ஹசாரே ஹாட் trending டாபிக். அன்று டிவிட்டரில் அவரைப் பற்றி நிறைய செய்தி வந்தது, இன்று வரவில்லை என்பதால் இன்று ஊழல் குறைந்துவிட்டது என்றா பொருள் கொள்ள முடியும்?

    // இன்றைய சூழலில் ஹிந்து அடையாளத்தை மறுதலிக்கும் இரண்டு கருதுகோள்களை பொதுவாகக் காணமுடிகிறது. ஒன்று ஹிந்து அடையாளமின்மை வாதம் (Negation of Hindu identity), மற்றதுஹிந்துத் தாக்க நீக்கம் (De-hinduization). // இரண்டுமே பெரிய அளவில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் உள்ளூர்க்காரர், இந்த தளத்தில் இயங்குபவர், உங்களுக்கு அதிகம் தெரியும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

    // யோகம் இந்து அறிவியலேயே அல்ல. அது உருவாகும்போதே மதத் தீட்டு எதுவும் இல்லாமல்… // இதே தளத்தில் ஜாதி என்பது மதம் சார்ந்த கருதுகோளே அல்ல, அது ஒரு சமூக நியதி, அதை ஹிந்து மதத்தின் ஒரு கூறு என்று சொல்லக் கூடாது என்று நிறைய படித்திருக்கிறேன். :-):-):-):-) (நீங்கள் கூட அப்படி வாதாடி இருக்கிறீர்கள் என்று நினைவு. என் நினைவு தவறாக இருந்தால் மன்னிக்கவும்.)

    // நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன்,… // அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

  8. அன்புள்ள ஆர்.வி,

    // எனக்கு இப்படித் தெரியவில்லை. அப்படி நினைப்பவர்கள் சிறுபான்மையினர் என்றுதான் தோன்றுகிறது. தங்கள் ஹிந்து அடையாளத்தைப் பற்றி பெரிதாக அக்கறை இல்லாதவர்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். //

    மெஜாரிட்டி பெரும்பாலும் அப்படித் தான் இருப்பார்கள்.. நிலைமை அத்துமீறிப் போகும்போது தான் அவர்களுக்கு உறைக்கும், ஆனால் அப்போது காலம் கடந்திருக்கும்.

    கடந்த 20 வருடங்களில் ”ஹிந்து” என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையையே தகர்க்கும் நோக்கத்துடன் எழுதப் பட்டிருக்கும் புத்தகங்களையும், நடத்தப் படும் கருத்தரங்குகளையும் பாருங்கள். 2011ம் வருடத்திலும் ஹிந்து என்ற அடையாளம் அங்கீகாரத்திற்குரியதா என்று பேசவேண்டியிருப்பதே நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. கிறிஸ்தவம்/இஸ்லாம் பற்றி பேசும்போது அதன் நன்மை தீமை பற்றி விவாதிக்கிறார்கள். அவற்றின் “இருப்பு” பற்றி பேச்சே எழுவதில்லை. ஆனால் இந்துமதம் பற்றி பேசத் தொடங்கும் போது அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதேயே முதல் வாதமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. “இந்துமதம்” என்று இருப்பதாக சொல்வதே கருத்தியல் வன்முறை என்று அலறுகிறார்கள். தமிழ் இணையச் சூழலிலேயே நீங்கள் இதைப்பார்த்து வருகிறீர்களே.. ”இந்து ஞான மரபு” என்ற சொல்லாட்சிக்காகவே இன்று வரை ஜெ.மோ வசைபாடப் பட்டு வருவதும் நீங்கள் அறிந்தது தானே? பிறகு எப்படி சொல்கிறீர்கள் இது பிரசினை இல்லை என்று? இன்றும் ஹிந்து என்ற சொல்லைப் பயன்படுத்தவே இந்தியாவில் பெரும்பாலான “ஹிந்து” அமைப்புகளே தயங்குகின்றன. முந்தைய பாகத்தில் முதலில் எனது அனுபவம் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறேன், பாருஙக்ள்.

    நீங்கள் சொந்த அனுபவம் & உங்களுக்குக் கிடைத்த சில தகவல்களை மட்டும் வைத்து சொல்கிறீர்கள். சொல்லப் போனால் அமெரிக்காவில் உங்களை ஹிந்து என்று சொல்லிக் கொள்வது மிக எளிது, அது ஒரு நேச்சுரலான, இயல்பான மத/பண்பாட்டு அடையாளமாகவே அங்கு பார்க்கப் படுகிறது. Hindu temple & cultural center கள் அங்கு ஊருக்கு ஊர் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் போலி மதச்சார்பின்மை விளைவித்த தாழ்வுனர்ச்சி காரணமாகவும், அப்பட்டமான ஹிந்து விரோத சட்டங்களின் காரணமாகவும், ஒரு ஹிந்து பள்ளி கூட இயல்பாக தன்னை அப்படி அழைத்துக் கொள்ள முடியாது.

    இந்தியாவின் இந்த “ஹிந்து சுய விலகல்” உலகளவில் ஹிந்து மதத்தை பாதிக்கக் கூடியது. எனவே தான் அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன்.

    // பெரும்பான்மை மேலை நாட்டினரும் தங்கள் கிருஸ்துவ அடையாளத்தைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை //

    மத அளவில் அப்படித் தான். ஆனால் மேற்கத்தியா பண்பாட்டுடன் ஒன்றுகலந்து விட்ட கிறிஸ்தவ அம்சங்களை அவர்கள் ம்றுதலிப்பதில்லை. ரிச்சர்ட் டாவ்கின்ஸ் கூட பைபிளுக்கும் ஆன்கில மொழிக்குமான தொடர்பை தன் புத்தகத்தில் பதிவு செய்கிறார்.

    மேலும், காலனயாதிக்கத்தில் இருந்து அரசியல்ரீதியாக மீண்டு விட்டாலும், கருத்தளவில் அதன் கடும் விஷக் கரங்களில் இன்னும் சிக்கியிருக்கும் இந்து மனநிலையை மேற்கத்திய மன்நிலையுடன் ஒப்பிட முடியாது. இந்துக்கள் வாழும் பெரும்பாலான இடங்களில் அடையாள அரசியல் அவர்களை இறுக்கிப் பிடித்தே தீரும், உங்களைப் போன்ற அறிவுஜீவி/சிந்தனாவாதி ஹிந்துக்கள் தனிப்பட்ட அளவில் அதுபற்றிப் பொருட்படுத்தாத போதும்.

  9. ஆர்.வி, வில்லியம் ஜோன்ஸ் பற்றிய தகவல் தவறு தான். ஆசிரியர் குழு திருத்தி விடும். நான் குறிப்பிட்டது மாக்ஸ் முல்லரை முன்வைத்து Orientalism என்ற கருதுகோள் வளர்ந்த காலத்தை.

    // // இது1860கள் வரை நீடித்தது. // என்று கருத்து கொஞ்சம் பலவீனப்படுகிறது. நான் மொழி வல்லுனன் இல்லை, ஆனால் hindoo என்ற பயன்பாடு // ஒரு கீழான நாகரிகத்தை, மக்களை, சமுதாயத்தைக் குறித்தது // என்பது சரிதானா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது //

    1860 என்பது ஒரு பொதுப்போக்குக்காகச் சொன்னது. 1910-20கள் வரைகூட இது கன ஜோராகத் தொடர்ந்தது. 1893ல் விவேகானந்தர் சிகாகோ பயணத்தின் போது அமெரிக்காவில் தான் கண்ட அதிர்ச்சியூட்டும் இந்துமதச் சித்தரிப்புகளை விரிவாகவே பதிவு செய்திருக்கிறாரே.. ”உலகிலேயே மிகவும் கொடூரமானவர்களாகவும் கீழானவர்களாகவும் இந்துக்களை சித்தரிக்கிறீர்களே! உங்களுக்கு இந்துக்கள் செய்தது தான் என்ன?” என்று வேதனையுடன் கிறிஸ்தவப் பாதிரிகளை அவர் கேட்டது வ்ரலாற்றில் பதிவாகியுள்ளது. (“சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டையும்” என்ற அ.நீ கட்டுரையில் மேலும் தகவல்கள் உண்டு).

    Hindoo என்ற சொல் தெளிவாகவே இழிவுநோக்கு கொண்டது, அதனால் தான் மேற்குலகம் முனைந்து அதைக் கைவிட்டது. இதே காலகட்டத்தில் தான் Sanscrit என்ற வடிவம் மறைந்து Sanskrit என்று எழுத ஆரம்பித்தார்கள். இந்து மதத்தின் மீது ஒருவித மரியாதை ஏற்பட்டு அதன் சொற்களைச் சரியாக எழுதவேண்டும் என்ற பிரக்ஞையும் உண்டாயிற்று. இது எனது கருத்தல்ல, பல வரலாற்றாசிரியர்கள் ஏற்கனவே சொன்னது. ஏ.கே.ராமானுஜன் 60களில் எழுதிய The Hindoo: the only risk என்ற கவிதையைப் படித்திருந்தால் உங்களுக்கு இது புரியும்.

    அந்த கிராஃப் மேற்குலகில் இந்துமதம் பற்றிய பிம்பங்கள் குறித்த ஒரு சித்திரம். நீங்கள் சொல்வதையே தான் நானும் சொல்கிறேன்.. ”ஹிந்து” ஏன் hot topic ஆக குறிப்பிட்ட காலகட்டத்தில் இருந்தது, பிறகு ஏன் குறைந்தது என்று. அதை லிடரலாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

  10. // // யோகம் இந்து அறிவியலேயே அல்ல. அது உருவாகும்போதே மதத் தீட்டு எதுவும் இல்லாமல்… // இதே தளத்தில் ஜாதி என்பது மதம் சார்ந்த கருதுகோளே அல்ல, அது ஒரு சமூக நியதி, அதை ஹிந்து மதத்தின் ஒரு கூறு என்று சொல்லக் கூடாது என்று நிறைய படித்திருக்கிறேன். :-):-):-) (நீங்கள் கூட அப்படி வாதாடி இருக்கிறீர்கள் என்று நினைவு. என் நினைவு தவறாக இருந்தால் மன்னிக்கவும்.) //

    இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது ஆர்.வி,

    நானும், எனது தரப்பினரும் சாதியை De-Hinduize செய்யவில்லை. இதோ இந்தக் கட்டுரையில் கூட சாதி அடையாளங்களை ஹிந்து அடையாளத்திற்கு *உள்ளே* உள்ளதாகத் தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். அது ஒரு *ஹிந்து* “சமூக” அமைப்பு என்பதை என்றுமே மறுக்கவில்லை. ஹிந்து மத இலக்கியங்களின் வாயிலாகவே அதைப் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முயல்கிறோம். உதாரணமாக, சுருதி/ஸ்மிருதி என்ற கருதுகோளை வைத்து பிரம்மம்/ஞானம்/பக்தி/யோகம் ஆகியவை எக்காலத்திலும் மாறாத உண்மைகள் என்றும், சமூக சட்டங்கள் காலம்தோறும் மாறுபவை என்றும் சொல்கிறோம். கீதை போன்ற இந்து ஞான நூல்களிலிருந்தும் மகான்களின் வாழ்விலிருதும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் ஆதாரங்களை பதிவு செய்கிறோம்.

    சாதி தன்னளவில் ஒரு “சீர்கேடு” என்று சொன்னதாக ஞாபகமில்லை. ”சாதியம்” என்பது தான் சீர்கேடு என்று சொல்லியிருக்கிறேன். நவீனத்துவத்திற்கு முந்தைய (pre-modern) சமூக அமைப்பு இன்றைய காலகட்டத்திலற்கு ஏற்றதாகுமா என்றும் கேட்டிருக்கிறேன். (சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி என்ற கட்டுரையைப் பார்க்கவும்). சாதிகள் பற்றிய புத்தகத்தில், இன்றைக்கு நாம் இந்தியாவில் கடைப்பிடிக்கவேண்டியது அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்ட ஸ்மிருதி என்று சொல்லியிருக்கிறேன்.

    ஆனால் யோகத்தையும், மற்ற பல விஷயங்களையும் இந்துமதத்திலிருந்து நீக்கம் செய்யும் முயற்சிகள் இப்படிப் பட்டதல்ல. யோகத்துக்கும் “ஹிந்து”வுக்கும் தொடர்பே கிடையாது என்று சொல்லும் ஏராளமான வாசகங்களை நீங்கள் பார்க்கலாம்.. இது அப்பட்டமான பொய் அன்றி வேறில்லை.யோகம் நல்லதாக இருக்கிறது, அதைக் கடைப்பிடிக்க வேண்டும், ஆனால் “ஹிந்து” என்றால் அசிஙக்ம்,. என்ன செய்வது? உடனே யோகம் ஹிந்து அல்ல என்று நிறுவ வேண்டியது,. அது தான் நடந்து கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களையும், கிறிஸ்தவ, முஸ்லிம்களையும் comfortable ஆக உணரச் செய்வதற்காக வேண்டுமென்றே இந்துக் கூறுகளை இந்து அல்ல என்று சொல்ல்லும் தற்க்கொலைப்போக்கு உருவாகி வருகிறது.

    அடிப்படையில் “ஹிந்து” என்றால் அதில் நல்லது ஏதும் இருக்க முடியாது என்ற காழ்ப்பு எண்ணத்திலிருந்து தான் இதெல்லாம் வருகிறது. அதை மாற்ற வேண்டும்.

    நான் சீன உணவை, ஃபிரெஞ்சு வைனை அருந்துகிறேன். இத்தாலிய செண்ட் பூசுகிறேன். அமெரிக்க கவிதை படிக்கி்றேன். கிறிஸ்தவ கதீட்ரலின் சிற்பக் கலையை ரசிக்கிறேன். அவற்றின் அடையாளங்களை அங்கீகரித்துத் தான் அதையெல்லாம் செய்கிறேன். எனக்கு இதெல்லாம் வேண்டும் என்பதற்காக அவற்றின் அடையாளஙக்ளை மறுப்பதில்லையே.

    அதே போல யோகா ஹிந்து அறிவியல் தான், கோலமும், குங்குமமும், மஞ்சளும் ஹிந்துப் பண்பாடு தான் என்று ஏற்றுக் கொண்டு அதைக் கைப்பிடிக்கலாமே.

    மகரசங்கிராந்தி / பொங்கல் என்ற ஹிந்துப் பண்டிகையில் இயற்கையைக் கொண்டாடும் உயர்ந்த தன்மை இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டு கொண்டாடட்டும். வாழ்த்தி வரவேற்போம். அது ஹிந்துப் பண்டிகையே அல்ல, அதனால் நானும் பானையில் மனித விரோத சின்னமான சிலுவைக் குறியைப் போட்டு கொண்டாடுவேன் என்பது என்ன வாதம்?

    புர்யும் என்று நினைக்கிறேன். பலமுறை கரடியாகக் கத்தி இதைச் சொல்லியாச்சு 🙂

  11. //புர்யும் என்று நினைக்கிறேன். பலமுறை கரடியாகக் கத்தி இதைச் சொல்லியாச்சு
    //

    ஜடாயு அப்பப்போ ஜாம்பவானாகவும் அவதாரம் எடுக்குறீர்கள் போல 🙂

  12. இந்துக்களின் அடையாளங்களை களவெடுக்கும் ஈனபுத்தியுடைய சில பாதிரிமார்கள் இந்தியாவில் உலாவுகின்றனர்,அதில் முக்கியாமன் ஒரு மோசடி பேர்வழி சாது சுந்தர் செல்வராஜ்….அவரின் சில காமெடி கருத்துக்கள்,
    கருத்து 1
    பொங்கல் பண்டிகை தமிழர்கள் உடையதாம்,இந்து மதத்திகும் அதற்கும் தொடர்பில்லையாம்,கிறிஸ்தவர்களும் தங்கள் பண்டிகையாக கொண்டாட வேண்டுமாம்…….//எப்புடி இயேசு படத்தை அடுப்பு முன்னால் வைத்து அவருக்கு சந்தன குங்குமம் வைத்து படைத்து வழிபடலாமா?
    கருத்து 2
    கிறிஸ்தவ திருமணங்கள் பாஸ்டர் தாலி எடுத்து கொடுத்து அக்னி சாட்சியாக பைபிள் வாசிக்கப்பட்டு இடம்பெற வேண்டுமாம்,அனால் குங்குமம் வைக்க கூடாதம்…அது இயேசுவின் இறப்பை அவரின் இரத்தத்தை நெற்றியில் வைத்து கொண்டாட உருவாக்கப்பட்ட பாரம்பரியம் அதாம்.அத்துடன் அவர் அடுத்ததாக எடுக்க போகும் காணொளி பாடலில் இவ்வகை திருமணத்தை நடத்த போகிறாராம்.
    கருத்து 3
    உலகத்திலேயே இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உண்டாம்,அப்போ இவனுங்கட ஆர்.சி,நொன் ஆர்.சி,பெந்தகோஸ்தே டிஸ்கோதே ,ஜெகோவாட சாட்சிங்க இவங்க என்னவாம்???ஒரே சர்ச்ல கும்புடுற ஒரே குல மக்களா ???
    கருத்து 4
    இந்து மதம் தேவையில்லை,அனால் இந்து மத துறவிகள் அணியும் காவிஉடை மீது மட்டும் மோகம் தீரவில்லை,அதையே அணிந்து தன்னை எளியவனாக காட்டி கொள்கிறார்

  13. //உலகளவில் தனக்கான இடத்தை ஒரு மாபெரும் வட்டத்திலிருந்து ஒரு சிறு புள்ளிக்கு நகர்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அத்தகைய புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி.//

    ஆக…. சாதியை நிலை நிறுத்தி தங்களின் ஆளுமையை மேலும் இறுக்கமாக்கி அப்பாவி சூத்திரர்களை இந்து மதம் என்ற பெயரைச் சொல்லி இழுத்து வைத்துக் கொள்ளப்பார்க்கிறார் கட்டுரையாளர். ஆனால் காலம் கடந்து விட்டது…..இந்து மதத்தில் பிராமணர்களை தவிர மற்ற சாதியார் ‘இந்து மதம் என்றால் என்ன?’ அங்கு அவர்களின் நிலை என்ன என்பதை நன்றாகவே விளங்கி வைத்துள்ளனர். இதில் Hindu என்றாலோ அல்லது Hindoo என்றாலோ என்ன மேன்மையை அந்த மக்கள் அடைந்து விடப் போகிறார்கள்?

    ஹிநது என்ற பெயரே மொகலாயர்கள் வைத்தது என்றுதான் நான் படித்திருக்கிறேன்.

  14. இந்து மக்களின் உரிமை,விழுமியங்களை அந்நிய சக்திகள் களவாட இனியும் அனுமதி தராதீர்,நாம் அனைவரும் ஒரு கடவுளின் பிள்ளைகளே,அணைத்து மதமும் ஒரு மதமே ….என கூறி மதமாற்ற வரும் அன்பர்களிடம் அனைவரும் ஒரு மதமே எனின் கோவிலுக்கு வந்து பிள்ளையார் முன்பு தோப்புகரணம் போடா அழையுங்கள்,

    சாமி பிரசதாதை உன்ன கூறுங்கள்,சாத்தன் உண்டெனின் அதன் வடிவத்தை கூற சொல்லுங்கள்,இயேசு தேவன்,அனால் இயேசுவின் புகைப்படம் மட்டும் எப்படி சாத்தன் ஆகும் ????இது போன்ற கேள்விகளை அடுக்கி அவர்களின் கருத்துக்களை கேட்டு பாருங்கள்…அப்போதும் அவர்களின் பதில் ….சாத்தன் தான் உங்களை இப்படி ஆட்டுவிக்கிறான்

  15. நாம் மட்டும் ஹிந்து அல்ல நமது தேசத்தில் உள்ளவர்கள் எல்லோருமே ஹிந்துக்கள்தான் .எதோ ஒரு காரணத்துக்காக தடம் மாறி விட்டார்கள் .அவர்களையும் மீண்டும் நம்மிடம் கொண்டு வரவேண்டியது நமது கடமை . முதலில் நமது மதத்தின் பெருமைகளை நாம் உணர்ந்து கொள்வோம்.தடம்மாறிப் போனவர்களையும் மீட்டுக்கொண்டு வருவோம்.
    ஈஸ்வரன்,பழனி.

  16. சிறந்ததொரு கட்டுரையைக் காலத்துக்கேற்ப வடிவமைத்திருப்பதற்கு உங்களுக்கு என் நன்றிகள். நான் அறிந்துள்ளவரை இன்றைய மனிதர்கள் தங்களை ‘ஹிந்து’ என்று குறிப்பிட்டுக் கொள்வது பள்ளி Record களில் மட்டும்தான். சிலர் அதற்கும் தயாரில்லை. நம் சம காலத்திய சகோதரர்களின் இந்த மனோ நிலையை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். உண்மைகள் தெரியாமல்தான் பலர் இவ்வாறு இருக்கிறார்கள் என்பது என் மனோ நிலை. ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசும்போது பலவற்றை ஏற்கிறார்கள்; உணர்கிறார்கள். அதுவே ஒரு நான்கு பேர் சேர்ந்து இருக்கும் இடமாக இருந்தால் ‘ஹிந்து’ என்கிற பதத்தைத் தவிர்ப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

    ‘ஸ்ரீ கிருஷ்ணா’ என்று ஒரு tv இயங்குகிறது. ‘சங்கரா’, ‘தர்சனா’, ‘ட்டத்’ உள்ளிட்ட tv க்களும் இயங்கி வருகின்றன. இவற்றுள் ‘TTD’ மட்டும் ஓரளவு பிரச்சினையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ‘ஸ்ரீ கிருஷ்ணா’ அரசு cable corporation மூலம் ஒளிபரப்பாவதாக விளம்பரங்கள் கண்டேன். ஆனால், விநியோகஸ்தர்களை அணுகினால், அவர்கள் அந்த channel ஐத் தரத் தயாராக இல்லை. ‘தர்சனா’ tv நடைமுறைக்கே விளம்பரங்கள் கிடைக்காமல் தவிப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன்.

    தொலைக் காட்சிச் சேனல்கள் வியாபார நோக்கத்துடன் செயல்படுவது உண்மையே. ஆனால், சமய அறிவை வழங்கும் நல்ல சேனல்களை ஹிந்துக்கள் (பெரும்பாலோர்) ஆதரிப்பதில்லை. ‘viewers கம்மி’ என்று காரணம் காட்டி, இந்தச் சேனல்களைத் தர விநியோகஸ்தர்கள் மறுக்கிறார்கள். அதே நேரம் ‘ஆசீர்வாத்’, ‘மூன் tv’ உள்ளிட்ட ‘கிறிஸ்துவ’ மற்றும் ‘இஸ்லாமிய’ச் சேனல்கள் தடையின்றி எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

    அவர்களுக்கெல்லாம் பொழுதுபோக்கில் விருப்பம் இல்லையா என்ன? என்னதான் பொழுதுபோக்குச் சேனல்கள் இருந்தாலும் தங்கள் மதம் குறித்த ‘அறிவை !’ வழங்குகிற சேனல்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள். தவறு அவர்களிடம் இல்லை. ஆனால், ஹிந்துக்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    கல்விக்கூடங்களே இல்லாவிட்டால் எப்படி கற்றறிந்தோராவது? அதுபோல் சமய அறிவு வழங்கும் ஊடகங்களே இல்லாது போனால் பின்னர் எப்படி ஹிந்துக்கள் தெளிவு பெறுவது? ‘வெற்றிடத்தில் பேய் குடியேறும் கதை’யாக, ஒன்றுமே தெரிந்துகொள்ளாத ஹிந்துக்களிடம் ‘பல சரக்குகள்’ விற்பனையாகி, அவர்கள் பாதை மாறுகிறார்கள். பின்பு ‘ஹிந்து’ என்று சொல்லவே தயங்குகிறார்கள். இது பெரிய ‘ஹிந்து’ அமைப்புகளுக்குக் கூடப் பொருந்துகிறது. அவை தங்களை ‘ஹிந்து’ அமைப்புகள் என்று பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளவே தயங்குகின்றன என்பது உண்மையே.

    தேவை உழைப்பு. இந்திய மண்ணின் மேலும் இந்தியப் பாரம்பரியத்தின் மேலும் மதிப்பிருப்பவர்கள் ஊடகங்களில் தங்கள் பங்கை நன்கு ஆற்ற வேண்டும். மேலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடமும் பரந்துபட்டு விளங்குகிற ‘ஹிந்து’ சிந்தனையைப் பற்றிய விஷயங்களைப் பரப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

  17. @
    //பெருந்துறையான் on March 25, 2012 at 5:11 pm//
    மேற்படி மறுமொழியில் ‘ட்டத்’ என்பதை ‘ TTD ‘ என்று வாசிக்க வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *