“எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம், ஆனால் எனக்கு எல்லாம் பயமயம்…
கவிதை பயம் எனக்கு, கதை பயம் எனக்கு… உதைக்கும் பயம், சிதைக்கும் பயம்….
கதவு பயம் எனக்கு, கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுசா மூடின கதவும்
பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு,… காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு, கூடு பயம் எனக்கு, குளம் பயம் எனக்கு, குளத்துக்குள் இருக்கும் நண்டு கண்டாலும் பயம்.. அண்டை மனுசரை அணுக பயம், அணுகிய மனுசரை இழக்க பயம். உறவு பயம், துறவு பயம், இரவு பயம்,… சோக பயம், வேக பயம், ரோக பயம், நோக பயம், போக பயம், வாழ பயம், சாகவும் பயம்!”
‘தெனாலி’ திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் பேசும் வசனம் இது. அதுபோல, காங்கிரஸ் கட்சிக்கு இப்போது எதைக் கண்டாலும் பயமயம் தான்.
மோடி ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசினாலும் பயம்; முன்னாள் தளபதி வி.கே.சிங் புத்தகம் எழுதினால் பயம்; ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினால் பயம்; கருணாநிதி அறிக்கை விட்டால் பயம்; ஆ.ராசா சாட்சி சொல்ல வருவதாக அறிவித்தால் பயம்: காமவெல்த் என்ற சொல்லைக் கேட்டாலே பயம்; சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரிக்கும் பயம்; அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நினைத்தாலே பயம்…அந்தப் பட்டியலில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ளது கருத்துக் கணிப்பு பயம்!
நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் 5 மாநில சட்டசபைத் தேர்தல்களை முன்னிட்டு, ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது தான் காங்கிரஸ் கட்சியின் குலைநடுக்கத்திற்குக் காரணம். இந்த சட்டசபைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதான அரையிறுதி ஆட்டமாகவே ஊடகங்கள் கருதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றிமுனையில் இருப்பது, சந்தேகமில்லாமல் பாஜக தான். தேர்தல் நடைபெறும் தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜகவும், மிஸோரத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறும் என்பதே பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின் முடிவாக உள்ளது. இந்த கருத்துக் கணிப்பை ஏற்க காங்கிரஸ் மறுக்கிறது.
ஊடக நிறுவனங்களை விலைபேசி இவ்வாறான கணிப்புகளை கட்சிகள் வெளியிடுவதாக காங்கிரஸ் வாலாக்கள் புலம்புகின்றனர். அவரவர் அனுபவம் தானே அடுத்தவரையும் அவ்வாறு பார்க்கச் சொல்லும்? திருடனுக்கு யாரைப் பார்த்தாலும் திருடனாகத் தோன்றுவது இயல்பே அல்லவா?
காங்கிரஸ் கட்சி இதுவரையிலும் பல தேர்தல்களில் கருத்துக் கணிப்புகளை தனக்கு சாதகமாக வெளியிட என்.டி.டி.வி. போன்ற தனியார் தொலைக்காட்சி சானல்களை நம்பியிருந்ததை நாடு அறியும். அதுபோலவே இப்போது பாஜக கருத்துக் கணிப்புகளை ஏற்பாடு செய்வதாக காங்கிரஸ் புலம்புகிறது. நாட்டில் மோடிக்கு அதிகரித்துவரும் செல்வாக்காலும், அவருக்குக் கூடும் மக்கள் கூட்டத்தாலும் அரண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. நேரு, இந்திரா, ராஜீவுக்கு கூடிய கூட்டங்களை எல்லாம் முறியடிக்கும் விதமாக, மோடி எங்கு சென்றாலும் லட்சக் கணக்கில் திரளும் மக்களைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்துள்ள அக்கட்சிக்கு, கருத்துக் கணிப்பாளர்கள் மீது மட்டும் தானே பாய முடிகிறது!
தோல்வி நெருங்குவதை உனர்ந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, தனது விசுவாச அடிமைகளான மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தேர்தல் ஆணையம் ஆகியவற்றைக் கொண்டு சதுரங்கம் ஆட முயற்சிக்கிறது. சிறுபான்மையினரைத் தூண்டிவிட்டு அக்கட்சி நடத்தும் நாடகங்கள் பல்லிளித்து வருவதால், கடைசி முயற்சியாக பாஜக தலைவர்களின் நன்மதிப்பைக் குலைக்கும் செயல்களில் அரசு நிறுவனங்களைத் தூண்டிவிட்டு காங்கிரஸ் காய் நகர்த்துகிறது. இவையல்லாமல், தேர்தல் ஆணையம் மூலமாக கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயல்கிறது. விநாச காலே விபரீத புத்தி!
அரசியல் சாசன உரிமை:
நமது அரசியல் சாசனம், பேச்சுரிமையையும் கருத்துரிமையையும் உறுதிப்படுத்துகிறது. அரசியல் சாசனத்தின் 19 (1) (அ) பிரிவு ஜனநாயகத்தின் அடிப்படையான பேச்சுரிமைக்கு வித்திடுகிறது. தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது ஊடகங்களின் கருத்துரிமையாகும். இதைத் தான் தடை செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிடுகிறது. அதையும் தானே செய்யாமல், தேர்தல் ஆணையம் மூலமாக நூல் விட்டுப் பார்க்கிறது.
1999 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்ட்து. ஆனால், தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. “தேர்தல் கருத்துக் கணிப்புகளை ஒட்டுமொத்தமாக தடை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை; வேண்டுமாயின் கருத்துக் கணிப்புகளை முறைப்படுத்த சில வழிமுறைகளையும் விதிமுறைகளையும் தேர்தல் ஆனையம் வகுக்கலாம்” என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அந்த அடிப்படையில் தான், வாக்குப் பதிவுக்கு 48 மணிநேரம் முன்னதாக கருத்துக் கணிப்புகளையும் (Opinion Poll), வாக்குப் பதிவு முடிந்தவுடனே வாக்குக் கணிப்புகளையும் (Exit Poll) ஊடகங்களில் வெளியிட ஆணையம் தடை விதித்தது.
ஒருவகையில் கருத்துக் கணிப்புகள் நமது அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்மை செய்யவே எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் அரசு குறித்த மக்களின் கருத்துக்களைத் திரட்டி அளிப்பதன் மூலமாக, மக்களின் மனநிலையை உணர்ந்து தவறுகளைத் திருத்திக் கொண்டு இயங்க, அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கருத்துக் கணிப்புகள் வாய்ப்பளிக்கின்றன. உண்மையான ஜனநாயகவாதி, இத்தகைய கணிப்புகளை முழுமனதுடன் வரவேற்பார். தேர்தல் கணிப்புகளும் கூட, நமது ஜனநாயக உருவாக்கத்தில் மக்களின் கருத்தை அரசியல் கட்சிகள் அறிய உதவுகின்றன. இது சிலருக்கு கசப்பான மருந்தாக இருக்கலாம். அதற்காக மருந்தே கூடாது என்பவரின் நோய் தீர வாய்ப்பில்லை.
அரசின் கொள்கை வடிவாக்கங்களிலும், கட்சிகளின் பிரசாரத் திட்டங்களிலும், தேர்தல் அறிக்கைகளிலும் கருத்துக் கணிப்புகளின் தாக்கம் பேரளவிலானது. மிகவும் நேர்த்தியாக எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளே நாட்டை நல்ல திசையில் கொண்டு சேர்க்கின்றன.
கணிப்புகளின் அறிவியல் முறை:
தேர்தல் கணிப்புகள் சுயவிருப்பு வெறுப்பின் அடிப்படையிலான கருத்துத் திணிப்பே என்று இப்போது காங்கிரஸ் கூறுகிறது. இவ்வாறு அனைத்துக் கணிப்புகளையும் புறந்தள்ளிவிட முடியாது. சென்ற குஜராத் சட்டசபைத் தேர்தலின்போது மோடி மீண்டும் வெல்லக் கூடாது என்ற நோக்கில் பல கருத்துத் திணிப்புகள் என்.டி.டி.வி உள்ளிட்ட முக்கிய தொலைக்காட்சி சானல்களில் அரங்கேறின. அதை மீறித்தான் மோடி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார். அப்போதும் கூட இந்தியா டுடே மட்டும் மிகச் சரியாக கருத்துக கணிப்பை வெளியிட்டதை மறந்துவிட முடியாது.
ஆக, கருத்துக் கணிப்பு எந்த ஊடகத்தால் வெளியிடப்படுகிறது என்பதே அதன் நம்பகத் தன்மைக்கு சான்று தரும். எந்த ஊடகமாயினும் நேர்மையான முறையில், கச்சிதமான மாதிரி (Sampling Methods) வாக்கெடுப்பு முறையில் கணிப்புகளை வெளியிட்டால் அது முற்றிலும் ஏற்கக் கூடியதாகவே இருக்கும். இங்கு தான் பணபலம் விளையாடிவிடுகிறது. அதிகாரபலமும், பணபலமும் கொண்டவர்கள் ஊடகங்களை விலைபேசி, அவர்களுக்குச் சாதகமாக கணிப்புகளைத் திணிக்கும் முயற்சி நடைபெறுவது ரகசியம் அல்ல. இந்தத் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான்.
இப்போதும் கூட, ‘தில்லி மாநிலத்தில் பாஜக வென்றாலும் தனித்து ஆட்சி அமைக்க இயலாது; அங்கு இன்னமும் செல்வாக்கு பெற்றுள்ளவர் ஷீலா தீட்சித் தான்; அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வாக்குகளைப் பிரித்து பாஜகவின் வெற்றியைத் தடுக்கும்’ என்றெல்லாம் கணிப்புகள் வெளியாகின்றன. ஆனால், மோடிக்கு தில்லியில் கூடிய மக்கள் கூட்டம், 20 ராகுல் கூட்டங்களில் கூடும் கூட்டத்தை விட அதிகம் என்பதை ஊடகங்கள் சொல்வதில்லை.
பாட்னாவில் மோடி பங்கேற்ற கர்ஜனைப் பேரணியில் குண்டுவெடிப்புகளையும் மீறி பங்கேற்ற மக்களின் எண்ணிக்கை 7 லட்சம். அதே நாளில் தில்லியில் ராகுல் பேசிய கூட்டத்தில் 10,000 பேர் இருந்தால் அதிகம். ஆனால், இரண்டு கூட்டங்களிலுமே 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக என்.டி.டிவி. சானல் புழுகியது. இந்த சானல் வெளியிடும் கருத்துக் கணிப்பு எப்படி இருக்கும்?
ஆக, அறிவியல்பூர்வமான கருத்துக் கணிப்புகள் நமது ஊடகங்களால் திசை திரும்புவது உண்மையே. ஆயினும் அதற்காக அவற்றைத் தடை செய்ய முடியுமா? அவ்வாறு ஊடகங்கள் திசை திருப்புவதை, மக்கள் விழிப்புணர்வால் மட்டுமே தடுக்க இயலும். இப்போது, மோடி மீதான வெறுப்பையும் மீறி பல ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமாக கணிப்புகளை வெளியிடக் காரணம் அதுவே.
மோடியின் கூட்டங்களுக்கு வரும் மாபெரும் இளைஞர் பட்டாளத்தைக் காணும்போதே, நமது ஊடகங்கள் பழைய நாடகங்கள் பயனளிக்காது என்பதை உணர்ந்துவிடுகின்றன. தவிர மாற்று ஊடகமாக வளர்ந்துவரும் சமூக வலைத்தளங்கள் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிவரும் நிலையில், அதற்கு மாறான தவறான புரளிகளையும் திணிப்புகளையும் மாயையான புள்ளிவிவரங்களையும் பரப்பினால் என்னவாகும் என்பதை இப்போதுள்ள ஊடகங்கள் உணர்ந்தே உள்ளன. எனவே தான் காங்கிரஸ் ஆதரவு தொலைக்காட்சி சானல்களும் கூட ஓரளவேனும் நியாயமாகச் செயல்பட முனைகின்றன.
இதற்கு ஓர் உதாரணம் ‘டைம்ஸ் நவ்- சி வோட்டர்’ எடுத்துள்ள கருத்துக் கணிப்பு. இந்த சானல் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகச் செயல்பட்டு வருவது. இந்த சானலே, ம.பி. (126/240), சட்டீஸ்கர் (46/90), ராஜஸ்தான் (112/200) மாநிலங்களில் பாஜக வெல்லும் என்று குறிப்பிட்டிருக்கிறது. தில்லியில் மட்டும் (25/70) ஆட்சி அமைக்க பெரும்பான்மை பாஜகவுக்குக் கிடைக்காது என்கிறது டைம்ஸ் நவ்.
மாறாக, ‘இந்தியா டுடே- ஓஆர்ஜி’ எடுத்துள்ள கருத்துக் கணிப்பு 4 மாநிலங்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்று கூறுகிறது. அதன் படி, ம.பி. (143/240), சட்டீஸ்கர் (46/90), ராஜஸ்தான் (105/200), தில்லி (36/70) மாநிலங்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக வெல்லும்; தில்லியில் கேஜ்ரிவாலின் புதிய கட்சியால் பாஜகவின் வெற்றிப்பயணத்தைத் தடுக்க முடியாது என்று தெரிய வருகிறது.
கட்சிகளின் நிலைப்பாடு:
இவ்வாறாக, கணிப்பாளர்களின் மனநிலைக்கு ஏற்ப கணிப்புகள் வேறுபடலாம்; ஆயினும், நமது ஜனநாயக உருவாக்கத்தில் ஊடகங்களின் பங்களிப்பைத் தடுக்க முடியாது. எது எப்படியாயினும், பாஜகவின் வெற்றி பவனி துவங்கிவிட்டதை இந்தக் கணிப்புகள காட்டுகின்றன. எனவே தான் பாஜக-வின் எதிரிகள் நிதானம் இழந்து புலம்பத் துவங்கி இருக்கின்றனர்.
இந்தப் பிரச்னையில் தேர்தல் ஆணையம் ஏன் இத்தனை கவனம் கொடுக்கிறது என்பது புரியாத புதிர். கருத்துக் கணிப்புகளை தடை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ள நிலையில், இதுகுறித்து ஆணையம் ஆர்வம் காட்டுவது ஏன்? கடந்த அக்டோபர் 25-ம் தேதி அனைத்து தேசிய கட்சிகளுக்கும், ‘கருத்துக் கணிப்புகளை அனுமதிக்கலாமா, வேண்டாமா?’ என்று கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியது தேர்தல் ஆணையம். இதுதான் வேலியில் போகும் ஓணானை மடியில் எடுத்துக் கட்டிக் கொள்வதென்பது!
எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ், கருத்துக் கணிப்புகளை தடை செய்யலாம் என்றது. பிற்பாடு இந்தப் பிரச்னை விவகாரம் ஆனவுடன், ’கணிப்புகளை தடை செய்யுமாறு காங்கிரஸ் கோரவில்லை; தேர்தல் ஆணையம் தான் கணிப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கோரியது’ என்று அந்தர் பல்டி அடித்தார் சட்ட அமைச்சர் கபில் சிபல். 2-ஜி ஊழல் விவகாரத்தில் இவர் அடிக்காத பல்டியா?
எனினும், காங்கிரஸ் கட்சியின் பல செய்தித் தொடர்பாளர்கள் தேர்தல் கணிப்புகளுக்கு எதிராக பல இடங்களில் முழங்கினார்கள். ‘கணிப்புகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; சுயநல நோக்குடன் சில கணிப்புகள் வெளியிடப்படுகின்றன; மிகப் பெரிய நாடான பாரதத்தில் அனைத்து மக்களின் எண்ணங்களை கணிப்புகள பிரதிபலிப்பதில்லை’ என்றெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு வக்காலத்து வாங்கினர் காங்கிரஸ் வாயாடிகள்.
காங்கிரஸ் சார்பு கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம் (இக்கட்சியின் பெரும் வீழ்ச்சி மிகப் பரிதாபமானது) பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, திமுக போன்றவை கருத்துக் கணிப்புகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. வழக்கம் போல தேர்தல் கணிப்புகளுக்கு 5 மாநிலத் தேர்தலை காரணம் காட்டி (நவம்பர் 11 முதல்) தடையும் விதித்துவிட்டது தேர்தல் ஆணையம்!
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதை எதிர்க்கவும் முடியவில்லை; ஆதரிக்கவும் முடியவில்லை. மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை என்ற் பழமொழிக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்கள் இடதுசாரிகள். தேர்தல் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதால் அதை ஏற்கவும் மனமில்லை; அதை தடை செய்யக் கோரி தங்கள் போலி ஜனநாயக்க் காவலர் முகமூடியை இழக்கவும் மனமில்லை. எனவே, ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கருத்துக் கணிப்புகளை தடை செய்யலாம்’ என்று கூறி இருக்கிறார் இடதுசாரிகளிலேயெ தனக்குத் தான் அதிக அறிவு இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் சீதாராம் யெச்சூரி.
வழக்கம் போல, பாஜக தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் இதே கணிப்புகளால் பலமுறை பாதிக்கப்பட்ட போதிலும், இப்போது நாட்டில் நிலவும் புத்தெழுச்சியால் பாஜக தேர்தல்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் அணுகுகிறது. “கருத்துக் கணிப்புகளையே எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது?” என்று காட்டமாக வினவி இருக்கிறார், பாஜக செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியோ, கேள்விகளால் காங்கிரஸ் கட்சியைத் துளைத்தெடுத்திருக்கிறார். “இன்று கருத்துக் கணிப்பை தடை செய்ய விரும்பும் ஜனநாயக விரோதமான காங்கிரஸ் நாளை தேர்தல் குறித்த கட்டுரைகளையும் செய்திகளையும் கூட தடை செய்யக் கோரலாம். தேர்தலில் தோற்றால் தேர்தல் ஆணையத்தையும் கூட தடை செய்ய முயலலாம்; அதற்கு உதவாவிட்டால் நீதிமன்றங்களையும் கூட முடக்க முயலலாம்” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார் மோடி.
“பல்வேறு கருத்துக் கணிப்புகளையும் மீறித் தான் குஜராத்தில் பாஜக தொடர்ந்து வென்றுள்ளது. கணிப்புகளின் எல்லையை நான் அறிவேன். அதற்காக அதை தடை செய்யுமாறு நான் கோர மாட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு சாதகம் என்றால் கணிப்புகளை ஆதரிக்கும்; பாதகம் என்றால் எதிர்க்கும். இந்த இரட்டை நிலையை ஏற்க முடியாது” என்றும் மோடி பொறுப்புணர்வுடன் கூறி இருக்கிறார்.
அவருக்கென்ன கூறிவிட்டார், அகப்பட்டது காங்கிரஸ் கட்சி அல்லவா? எனவே தான், கருத்துக் கணிப்பு தொடர்பான விவாதங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் அஜய் மக்கான். இனி தொலைக்காட்சி விவாதங்களில் அக்கட்சி பங்கேற்று ஆக வேண்டியது ஏதுமில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
முக்கிய விளக்கம்: இக்கட்டுரை தேர்தல் கருத்துக் கணிப்பு அல்ல; தேர்தல் கருத்துக் கணிப்பு தொடர்பான அலசல் மட்டுமே.
.
.
The start to the article was just dramatic; it was a real good comparison between Kamal Hassan character in “Tenali” and the present state of the Congress. They are afraid of everything from Election forecasts, Lotus Ponds and what not. With growing time and the stature of Modi vis-a-vis Rahul Gandhi of the Congress (who cannot even read a written script properly) I feel that the Congress and the UPA it leads will be decimated in the Lok Sabha Polls.
A serious article with sufficient humour. In Tamil we have proverb like ‘Aada theriyathava theru konainnu sonnalam’. Likewise the congress stand against prepooling surveys by media. What to do? As congress sow so they reap. Continue your good work with awakening article Ji. Jai hind.
The party which can get support from Tamilnadu & Andhra MPs will only capture power in 14…. Now please check up the bjp status on this.
ஜவஹர்லால் நேரு தன்னையே விமரிசனம் செய்த சங்கர்ஸ் வீக்லி கார்டூன்களை ரசித்தார் என்று சொல்லி சில விவரம் தெரியாத காங்கிரஸ்காரர்கள் புளகாங்கிதம் அடைவார்கள். நேரு மாமாவுக்கு அப்படி ஒன்றும் ஜனநாயகத்தில் ஈடுபாடு கிடையாது. சோஷலிசம், கம்யூனிசம் இவற்றுக்கிடையே இன்னும் புதியதாக வேறு ஏதாவது ஒரு கவர்ச்சியான சொல்லிப்போட்டு , மக்களை கவர்ந்து ஒட்டு வாங்க முடியுமா என்பதே அவரது கவலை ஆக இருந்தது. பொருளாதாரம் பற்றிய பல விஷயங்கள் அவருக்கு கசப்பாகவே இருந்தன. நேரு பிரதமராக இருந்தபோதே அவரது மகள் இந்திரா பெரோஸ் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார். இது வாரிசு அரசியல் இல்லையா ? இந்திராகாந்தியை அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் ஆக்கியவுடனேயே நேரு பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தால் , ஒரு நல்ல முன் மாதிரியாக இருந்திருக்கும். அவ்வாறு செய்ய எங்கள் நேரு மாமா தவறி விட்டார். என்ன செய்வது அவர் எங்கள் மாமா தான். இருந்தாலும் அவர் செய்ததை எங்களால் நியாயப்படுத்த முடியவில்லை.
அவரது மகள் இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்து, எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்பு வன்கொடுமைகள் பல செய்தார். மொரார்ஜி தேசாய் , ஜே பி நாராயண் போன்ற புனிதர்களை கூட சிறையில் ஒன்றரை வருடம் அதாவது 18-19 மாதங்கள் காவல் வைத்தார். பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டார். நம்ம தமிழகத்தில் கூட அப்போது ஒரு பெரிய அரசியல் கட்சித்தலைவர் ” பிணந்தின்னி இந்திராவே, சாத்தூர் பாலகிருஷ்ணனைக் கொன்றாயே, மேயர் சிட்டிபாபுவைக் கொன்றாயே, ரத்தம் குடித்தது இன்னும் போதவில்லையா, ரத்தவெறி உனக்கு இன்னும் அடங்கவில்லையா “-என்றெல்லாம் பேசி மக்கள் மனம் கவர்ந்தார். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு போராடிய காங்கிரஸ் கட்சி 1969-லேயே செத்துப் போய்விட்டது. இப்போது இருப்பது, இந்திரா குடும்ப விசுவாசிகளுக்கு பல்லக்கு தூக்கும் டாபர் மாமாக்கள் மட்டுமே இருக்கும் குடும்ப ஏவல்காரர்களின் கூட்டம் அவ்வளவு தான். பத்திரிகை சுததிரத்துக்கு தணிக்கை கொண்டுவந்த காங்கிரஸ்காரர்கள் எப்படி கருத்துக் கணிப்புக்களை விரும்புவார்கள் ? காங்கிரஸ் காரர்களின் பெரிய வருத்தமே, இன்னமும் நம் நாட்டை முழுவதுமாக அழிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டுமே. என்ன செய்வது விதி வலியது.
தண்ணீரில் கிடக்கும் மீனை எடுத்துக் கரையில் போட்டால் துடிக்கும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அதுபோலத்தான், பதவி எனும் நீரில் எப்போதும் கிடந்தது சுகம் அனுபவித்த காங்கிரசுக்கு இனி தோல்வி நிச்சயம் என்பதை அறிந்ததும் துடிக்கிறார்கள். அவர்கள் செய்த ஊழல்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடுமே, லல்லுவை சிறையில் போட்டது போல ஊழல் செய்த அத்தனை பேரும் இனி காராக்கிரகத்தில் அடைபட நேருமே என்கிற உதறல், இவர்கள் வாய் கூசாதபடிக்குப் பேசச் சொல்கிறது. நேரு சங்கர்ஸ் வீக்லி கார்ட்டூனை ரசித்த விவரம் எத்தனை காங்கிரஸ் காரர்களுக்குத் தெரியும், இத்தனைக்கும் சங்கர் நேருவை அதிகமாக வறுத்து எடுத்தவர். ஆனால் நேரு அவருக்கு அதிக ஆதரவு கொடுத்துப் பாராட்டினார் என்பது வரலாறு. கார்ட்டூன்களைக் கேலிச்சித்திரம் என்கிறோம் தமிழில். கேலிச்சித்திரம் வரைந்து ஒரு கருத்தை வெளியிடுவது மக்களின் உரிமை. அதைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத சர்வாதிகார மனப்பான்மை உள்ளவர்கள் இவர்கள். தோல்வி நிச்சயம் என்று கூறும் கருத்துக் கணிப்பையே தாங்கிக்கொள்ள முடியாத இவர்கள், நாளைக்குத் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் கிடைக்கப்போகிற தோல்வியை எப்படி எதிர் கொள்வார்கள். எல்லோரும் ஒரு முகமாகக் கிளம்பி நாட்டை விட்டு ஓடிவிடுவார்களா? இங்குதானே அரசியல் செய்ய வேண்டும். அதற்கு நாகரிகம் வேண்டாமா? எதிர்ப்பே கூடாது என்கிற நாசிச, பாசிச, காங்கிரசிச கொள்கைகள் இவர்கள் இருந்த இடமே தெரியாமல் ஆக்கப் போகிறது. அழியப் போகிற காலத்தின் அறிகுறிகளே இவர்களது அடாவடித்தனம்.
Site for who is best suited;
Please add Advani votes+ NAMO votes.
Please add Rahul+ MMS+ Sonia+ Nitish votes. both are almost equal…:)
மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் ..
காங்கிரஸுக்கு பயம் வந்து உளர ஆரம்பித்துவிட்டதும், எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற கணக்கில் ஸ்ரீமான்.மோடியை எப்படியாச்சும் எதிலாவது சிக்க வைக்க முடியாதா என நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைவதிலும் நன்றாய் தெரிகிறது. இந்த சூழலில் இணையத்திலும் காங்கிரஸீன் கைக்கூலிகளான கம்யூனிஸ்டுகளும் குஜராத வளரவே இல்லை என புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் புலம்பல் எனக்கு அமிர்தமாய் இருக்கிறது. நம்மைவிட காங்கிரஸுக்குத்தான் பா.ஜ.க இம்முறை ஆட்சியை பிடித்துவிடும் என நன்றாக தெரியும்.
https://tamilhindu.com/2011/02/politics-poll-statistics-2/
If the statistics outcome doesnot favour your choice, then the statistics is not correct…. If it favours, then it is different….