ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

26. आत्मनो विक्रिया नास्ति बुद्धेर्बोधो न जात्विति |
जीवः सर्वमलं ज्ञात्वा ज्ञाता द्रष्टेति मुह्यति ||

ஆத்மனோ விக்ரியா நாஸ்தி புத்தேர்போதோ ந ஜாத்விதி |
ஜீவஹ சர்வமலம் ஞாத்வா ஞாதா த்ரஷ்டேதி முஹ்யதி ||

என்றும் விகாரம் இலது ஆன்மா புத்தியும்
என்றும் அறிவின்றியதே என்றாலும் – ஒன்றிய
சீவனே எல்லாம் தெரிவான் செய்வான் காண்பான்
பாவத்தான் மாமோகி பார்.

(ஆன்மாவோ எந்தச் சமயத்திலும் எந்தவிதமான விகாரமும் இல்லாது இருக்கிறது. புத்திக்கோ என்றைக்குமே தானாக உள்ள அறிவு என்பது கிடையாது. அப்படி இருந்தும் நான் என்னும் பாவத்துடன் ஒன்றுபட்ட ஜீவனே எல்லாவற்றையும் ‘நான் தெரிந்து கொள்கிறேன்’, ‘நான் செய்கிறேன்’, ‘நான் பார்க்கிறேன்’ என்ற பாவத்தினால் மிகுந்த மோகமடைகிறான் என்பதைத் தெரிந்துகொள்.)

Atmanஆன்மாவுக்கு “இருப்பு”  என்ற ஒரு தன்மை தவிர பார்ப்பது, கேட்பது, செய்வது போன்ற குணங்கள் இல்லாததால் அது எந்த விகாரங்களையும் அடைவதில்லை. புத்தியும், தனக்குத் தானே ஊற்றெடுக்கும், அறிவற்ற ஜடப்பொருள் ஆதலால் அதுவும் தானாகவே எதையும் அறிவதில்லை.  ஆன்மாவின் ஒரே குணமாகிய ஞானத்தை ஜீவன் புத்தியிடம் இருப்பதாக பாவித்து “தான் இதை அறிகிறேன்”, “அதை அறிகிறேன்” என்று கருதும்போது அங்கு “சித்” ஆகிய அறிவு அம்சமும், “ஜடம்” ஆகிய இது-அது அம்சமும் கலந்தே வருகின்றன என்பதை அறியாது இருக்கிறான். அறிவாகிய “சித்” அம்சம், மற்றும் “நான்” எனும் இருப்பாகிய “சத்” அம்சம் இவைகளை அறியாது, “நான்” என்பதை உடலளவோடு குறுக்கும் போது மட்டுமே ஜீவனும் தெரிகிறது, உலகமும் தெரிகிறது. அதனாலேயே நமது விழிப்பு நிலையில் இவை இரண்டையும் அனுபவிக்கிறோம். ஆழ்ந்த உறக்க நிலையில் அவைகள் காணப்படாது உறக்க அனுபவம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

புத்தி எனப்படுவது ஆன்மாவின் சந்நிதானத்தில் உருவாகும் அந்தக்கரண விருத்தியாகும். ஒருவன் “அதை-இதைப் பார்த்தேன்” என்று சொல்லும்போது பேரறிவாகிய “சித்” அம்சம் ஒரு சிற்றறிவாகக் குறுகிவிடுகிறது. ஜடம் எப்போதும் ஜடமாகவே இருக்கும். அதை உணர்வதற்கு அறிவு தேவை. அந்தக் கரண விருத்தி இடையில் புதிதாக உண்டாவதால் ஒருவன் “நான் அறிகிறேன்” என்று தவறாக எண்ணி அதற்குக் காரணமான பேரறிவை உணராது சிற்றறிவைத் தான் கொண்டுள்ளதாக மயங்குகிறான்.

ஒரு பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டில் உள்ள இரும்புத் துண்டு ஜடமே. ஆனால் அது நெருப்பிலிருந்து உஷ்ணத்தைப் பெற்றதால் அது நெருப்பைப் போன்றே எவராலும் தொடமுடியாது இருக்கிறது. அங்கு நெருப்பையும், இரும்பையும் பிரித்துப் பார்க்க முடியுமா? அல்லது குறடால் பிடித்துக் கொண்டிருப்பது இரும்புதான், நெருப்பு இல்லை என்றாவது சொல்ல முடியுமா? ஆனாலும் பின்பு அதைக் குளிர வைத்துவிட்டால், இரும்பு தனது ஜட நிலைக்கே திரும்ப வந்துவிடும். அதே போன்று ஜீவன் தனது “இருப்பு” எனும் தன்மை ஆன்மாவிலிருந்து பெறப்பட்டது என்பதையும், அது ஒன்றே அறிவுமயம் என்ற  உண்மையையும் அறியாதவரை, தானே நெருப்பு என்று ஓர் இரும்புத் துண்டு தன்னைப் பற்றி நினைத்துக்கொள்வது போலத் தன்னைப்பற்றி மோகம் கொள்கிறான்.

27. रज्जुसर्पवदात्मानं जीवं ज्ञात्वा भयं वहेत् |
नाहं जीवः परात्मेति ज्ञातं चेन्निर्भयो भवेत् ||

ரஜ்ஜுசர்ப்பவதாத்மானம் ஜீவம் ஞாத்வா பயம் வஹேத் |
நாஹம் ஜீவஹ பராத்மேதி ஞாதம் சேன்நிற்பயோ பவேத் ||

தன்னைத்தான் சீவன் எனத் தாம்பிலே பாம்பு போல்
உன்னியே அச்சம் உறுகின்றான் – தன்னைத்தான்
சீவன் அலன் யான் பரமான்மா என்று தேர்ந்ததனால்
ஆவன் அஞ்சானாய் அவன்.

(கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, பரமாத்ம சொரூபமே என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்.)

பயம் என்பது எப்போது வருகிறது? தனக்கு ஒரு முடிவு உண்டு என்னும்போதும், பிறரால் தனக்கு தீது உண்டாகலாம் என்னும்போதும் வருவதுதான் அச்சம். தனக்கு ஒரு தொடக்கம் இருப்பதுபோல், ஒரு முடிவும் உண்டு என்பதை ஒருவன் உணர்கிறான். உடலுக்கு பிறப்பு உண்டு என்றதால், இறப்பு அதன் முடிவு என்று கொள்கிறான். அதாவது அவன் தன்னைத் தனது உடலோடு அடையாளம் காண்கிறான். அப்படி அவன் தன்னை உடலாகப் பார்ப்பது சரியில்லை என்றால் அவன் முடிவைப் பற்றி பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லாது போய்விடும். அதேபோல தன்னையன்றி வேறொருவர் என்பது இல்லாதுபோனால், அப்போது பிறரால் வரும் தீது என்பதும் இல்லாது போய்விடும். அதனால் ஒருவனுக்கு தான் என்ற உணர்வு அழியப்போகும் உடல் அல்ல என்றாலும், இருப்பது தான் மட்டுமே அன்றி வேறு எவருமே கிடையாது என்றாலும் பயம் எப்படி வரமுடியும்?

இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்வதால் வரும் வினைகள்தான் இந்தப் பயம், மற்றும் இவ்வுலக வாழ்க்கையில் நமக்குத் தோன்றும் பலவிதமான எண்ணங்களும். இந்த விதமான எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் நமது மனம் என்று சொல்கிறோம். ஒவ்வொருவரின் எண்ணங்களுக்கு ஏற்ப அவரவர்களுக்கு மனம் அமைகிறது. அதற்கு ஏற்ப அவர்கள் காணும் உலகமும் அமைகிறது. அதனால் உலகம் என்று ஒரே ஒரு பொருள் கிடையாது. உள்ளதை உள்ளதாகப் பார்ப்பவனுக்குத்தான் இந்த உண்மை புலப்படும்.

இல்லாத ஒன்று இருப்பதாக ஏன் தோன்றுகிறது? இதற்கு விடை தேடுவோர், தனது நனவு-கனவு அனுபவங்களைக் கூர்ந்து நோக்கவேண்டும். நனவுலகத்தில் காண்பதின் சாயல்களையும் அதன் வெவ்வேறு கலவைகளையும்தான், ஒருவன் கனவுலகிலும் காண்கிறான். முதலில் தன்னைப் போலவே ஒருவனை கனவில் உருவாக்குவதில் தொடங்கி, அதன்பின் மற்ற சம்பவங்களும் அங்கு நிகழ்கின்றன. அவை எதுவுமே உண்மை அல்ல என்பது பின்புதானே தெளிவாகிறது? கனவு காணும் வரை அவை எல்லாமே உண்மைபோலத்தானே தெரிந்தது? கனவு-நான் இருக்கும்வரை கனவில் வரும் அனைத்தும் உண்மைபோலத் தெரிந்தாலும், அவை உண்மை அல்ல என்று தெரிவதற்கு நனவு-நான் வரவேண்டியது ஆயிற்று அல்லவா? அதேபோல உள்ளதை உள்ளபடி உணர்வதற்கு நனவு-நானின் உண்மை சொரூபம் தெரியவேண்டும். அதுவரை “நான்” என்பதை எப்படிப் புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவில்தான் மற்ற எதனையும் நாம் புரிந்துகொண்டிருக்க முடியும். அது உண்மையில் உள்ளதா, அல்லது இருப்பதாக நாம் கற்பித்துக்கொண்டிருப்பதா என்பது தெரியாது.

snake_rope_vedanta

இருளில் சுருண்டு கிடக்கும் கயிறு ஒன்றை ஒருவன் மங்கிய ஒளியில் பார்க்கும்போது, அவன் எப்போதோ முன்பு பார்த்த பாம்பின் சாயலை அதில் பார்த்து கயிற்றை பாம்பு என நினைத்து பயம் கொள்கிறான். தேவையான ஒளி அதன்மேல் பட்டதும், உண்மையை உணர்ந்து தான் பார்த்தது பாம்பல்ல, கயிறு என்று தெளிகிறான். அதேபோல எங்கும் பரவியுள்ள ஆன்ம சொரூபம் என்று ஒருவன் தன்னை உணராது, தான் தற்போது காணும் உடல்தான் “நான்” என்று நினைப்பவன் தன்னை உடலளவில் குறுக்கிக் கொள்வதால், அவனுக்கு “தான்-பிறர்” என்ற பாவனை வரும். அது தவிர மற்றவர்கள் தன்னைவிட வேறு மாதிரியானவர்கள் என்ற எண்ணமும் வருவதால், அவர்களிடம் ஓர் அச்சமும் வரும். அந்த அச்சம் போவதற்கு அவன் தன்னைப் பற்றி நன்கு அறிவதுதான், ஒளி நன்கு பெருகியதும் இல்லாத பாம்பு என்ற எண்ணம் போய் இருப்பது கயிறு மட்டுமே என்பதுபோல, உள்ளதை உணரும் ஒரே வழி. அப்போது அவன் தன்னையும் அறிவான், அந்த அறிவு பெறப்பட்ட மூலமான ஆன்மாவே அறிவுமயமாய் இருப்பதிலும் தெளிவான். தன்னைப் போன்றே காணும் அனைத்தும் இருப்பதை உணர்பவனுக்கு எதைக் கண்டு அச்சம் வரும்?

28. आत्मावभासयत्येको बुद्ध्यादीनीन्द्रयाण्यपि |
दीपो घटादिवत्स्वात्मा जडैस्तैनार्वभास्यते ||

ஆத்மாவபாசயத்யேகோ புத்தயாதீநீன்த்ரயாண்யபி |
தீபோ கடாதிவத்ச்வாத்மா ஜடைச்தைநார்வபாச்யதே ||

ஒரு பொருளாம் ஆன்மா ஒளிர்க்கும் மதிமுன்
கருவிகளைத் தீபம் கடாதி – பொருவ
ஒளியில் அவற்றால் ஒருபோதும் ஆன்மா
ஒளிர்க்கப்படாது என்று உணர்.

(சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவையாவது போல, ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் பிரகாசிக்கச் செய்யும். சுய பிரகாசமற்ற ஜடமாகிய அவைகளினால் தேஜோமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்.)

நமது கண்களால் நமக்குப் புறத்தில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம். ஆனால் அந்தக் கண்ணால் நமது கண்ணையே பார்க்க முடிகிறதா? ஒரு கண்ணாடியோ அல்லது பளபளக்கும் தளமோ இல்லையென்றால் நம் கண்ணை எப்படிப் பார்க்கிறோம்? நம் மனம், புத்தி இவைகளின் துணை கொண்டு, பார்க்கும் நமக்கு அதற்கு வேண்டிய உறுப்பு இருக்கிறது என்றும், பிறருடைய கண்களைப் பார்த்து அதேபோல நமக்கும் இருக்கவேண்டும் என்றும் அனுமானம் செய்கிறோம் அல்லவா? கண் என்பது ஒரு ஸ்தூலக் கருவி. மனம், புத்தி முதலியன நமது நுண்ணிய அந்தக்கரணங்கள். கண்ணையும், கண்ணுக்கு எதிரே இல்லாதவற்றையும், வேறுபல சூக்ஷ்மமான ரகசியங்களையும் அறிவது நமது புத்தி என்றால், எதனால் அந்த புத்தி இயங்குகிறது என்று ஆராய்வதுதானே முறை?

குடம் போன்ற சாதனங்கள் இருளில் இருந்தால் அவை எங்கே இருக்கின்றன என்று பார்ப்பதற்கு ஒரு விளக்கு தேவையாகிறது. ஆனாலும் அந்த விளக்கைக் கொண்டு சூரியனைப் பிரகாசிக்கச் செய்ய முடியுமா? குடம் என்ற ஜடப்பொருளால் எப்படி விளக்கைப் பிரகாசிக்கச் செய்யமுடியாதோ, அதேபோல சூரியனின் முன்பு மற்ற ஜடப் பொருளை காட்டும் விளக்கும் ஒரு ஜடம் போல்தான் ஆகிறது. நமது நுண்ணிய புத்தியினால் காணவும் முடியாத ஜடப் பொருட்களை மானசீகமாகக் கண்டுபிடித்தாலும், அந்த புத்தியை ஒளிர்விக்கும் வஸ்து முன்பாக புத்தியும் ஒரு ஜடமாகத்தான் ஆகிறது.

“சத்” ஆகவும், “சித்” ஆகவும் அறிவுமயமாகவே இருக்கும் ஆன்மா ஒன்றினால்தான் புத்தியும் அறிவொளி பெற்று, அந்தக் கரணங்களையும் அதனால் ஒளி பெறச் செய்து பார்ப்பது, கேட்பது முதலான செயல்களில் ஈடுபடச் செய்கிறது. எப்போது அந்த ஒளி அகல்கிறதோ அப்போதே அனைத்தும் செயல் இழக்கின்றன. ஆக புத்தி என்ற நமது நுண்ணிய கருவி கூட அந்த ஆத்மாவின் முன் ஜடம் ஆகிறது என்பதைக் குறிப்பிடும் முகமாகத்தான் “புத்தி முதலான” எனப் பொருள் தரும் “புத்தயாதி” என்ற சொற்றொடர் உபயோகப்பட்டிருக்கிறது. நமது கருவிகள் அனைத்துமே ஆன்மாவினால் ஒளி பெறப்பட்டு இயங்குகின்றனவே அல்லாது, இவை எதுவுமே ஆன்மாவை ஒளிர்விக்க இயலாது.

29. स्वबोधे नान्यबोधेच्छा बोधरूपतयात्मनः |
न दीपस्यान्यदीपेच्छा यथा स्वात्मप्रकाशने ||

ஸ்வபோதே நான்யபோதேச்சா போதரூபதயாத்மானஹ |
ந தீபஸ்யான்யதீபேச்சா யதா ஸ்வாத்மபிரகாஷனே ||

விளக்கின் உருவை விளக்கிட வேறு
விளக்கை விரும்பா விதம்போல் – விளங்கும்
அறிவுருவாம் ஆன்மா அறிந்திடத் தன்னைப்
பிரிதறிவு வேண்டப் பெறாது.

(தானாகவே பிரகாசிக்கும் தன்மை உள்ள விளக்கின் உருவத்தைக் காட்டுவதற்கு இன்னுமொரு விளக்கு தேவை இல்லாதது போல, ஞான சொரூபமாகப் பிரகாசிக்கும் ஆன்மாவை அறிவதற்கு வேறொரு அறிவின் துணை அவசியமில்லை.)

adi_shankara_statueஆன்மாவே நமது அந்தக் கரணங்களை ஒளிர்விக்கச் செய்கின்றன என்றால், அவை எதனாலுமே ஆன்மாவை அறியமுடியாது என்று ஆகிறது. ஆன்மா சுயம் பிரகாச சூரியன் போல தானும் ஒளிர்கின்றது, தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஒளிர்விக்கின்றது. விளக்கு ஒன்று இருக்கிறது என்பதை அறிவதற்கு வேறு ஒரு விளக்கின் தேவை இல்லாததன் காரணம், அந்த விளக்கிற்கே சுயமாக ஒளிரும் தன்மை இருப்பதால்தானே? ஆன்மாவும் அதேபோல சுயம் பிரகாசமாக இருப்பதால் அந்தக் கரணங்களை ஒளிர்விக்கிறது, தானும் ஒளிர்கிறது. அப்படிப்பட்ட ஆன்மாவை அறிய வேறு ஒரு துணை தேவையில்லை.

இவ்வுலகில் ஒன்றைப் பார்ப்பதற்கு ஒருவனுக்குக் கண் வேண்டும். கண் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அதில் மனம் செல்லவில்லை என்றால் ஏதும் தெரியப்போவதில்லை. அது தவிர பார்க்கும் சமயத்தைப் பொருத்து சூரியனோ, சந்திரனோ, நக்ஷத்திரமோ அல்லது ஒரு விளக்கோ ஏதோ ஒன்று தரும் ஒளியின் துணையும் வேண்டும். அந்தச் சமயத்தில் அவன் தன் கண்ணை மூடிக்கொண்டால், பார்க்கும் பொருளைப் பற்றி அவன் முன்பு அறிந்ததை அவன் தனது புத்தியினால் இப்போது உணர முடியும். ஆக கண் என்பது ஒரு தூலக் கருவியாக இருப்பது போல, மனம்-புத்தி இவைகள் எல்லாம் நுண்ணிய கருவிகளாக அமைகின்றன. தூலக் கருவிகளை நுண்ணிய கருவிகள் இயக்குகின்றன அல்லது துணை செய்கின்றன. நுண்ணிய கருவிகள் இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் தூலக் கருவிகளும் பயனில்லாமல் போகின்றன. அதாவது ஒவ்வொரு கருவிக்குப் பின்புலமாக வேறு ஒன்று அமைகின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் “நான்” எனும் உணர்வு இல்லாது போது நுண்ணிய கருவிகளும் இல்லாது போகின்றன. ஆக “நான்” எனும் உணர்வே அனைத்திற்கும் ஒளி தருவதாக இப்போது சொல்லலாம். இதனையே ஆதி சங்கரர் “ஏக ஸ்லோகி” எனும் படைப்பில் குரு-சிஷ்யன் உரையாடலாக சொல்லியவற்றை ரமணர் “உள்ளது நாற்பது – அனுபந்தம்” எனும் நூலில் இவ்வாறு சொல்கிறார்:

ஒளி உனக்கு எது? பகலில் இனன் எனக்கு, இருள் விளக்கு
ஒளி உணர் ஒளி எது? கண்; அது உணர் ஒளி எது?
ஒளி மதி; மதி உணர் ஒளி எது? அது அகம்;
“ஒளி தனில் ஒளியும் நீ” என குரு; அகம் அதே.

“எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ” என குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன். அந்த “நான்” என்பது “எப்போதும் அறிவோடு கூடிய தன்மயமாக இருக்கும்” ஆன்மாவிலிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதால், அந்த சுயம் பிரகாசமான பேரறிவை அறிவதற்கு வேறு எந்த அறிவின் துணையும் தேவை இல்லை. வேறு எதுவும் அந்தப் பேரறிவுக்கு ஒளி தருவதாகவும் இல்லை என்பதே இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதனாலேயே எவரும் “நான் இருக்கிறேனா?” என்று கேட்பதில்லை. தான் இருக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அனைவரும் மற்ற விஷயங்களை அறிகின்றனர், பேசுகின்றனர்.

(தொடரும்)

2 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12”

  1. மிகத் தெளிவான விளக்கங்கள். நான் யார் என்ற ஆராய்ச்சியின் தொடர் சங்கிலியே இந்த கட்டுரை தொடர். படித்தவுடன் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

  2. முத்திக்கான வழிதேடி தவிக்கும் ஜீவர்களுக்கு தங்கள் வலைதளமூலம் கிடைக்கும் ஆன்மீக ஊற்று பெரிதும் ஆறுதல் அளிக்கின்றது .

    யோகராஜா -இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *