ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3

3. நாகம் தெரியாத மோனம்

~ மதுரபாரதி

செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது.

—விவேகானந்தர், திருவனந்தபுரத்தில் ஓர் உரையாடலில் (1892).

Vivekananda in Chicagoஇதுவும் நரேனின் பள்ளிப்பருவத்தில் நடந்ததுதான். அவருக்குத் தியானம் செய்வதுபோல் விளையாடுவதில் மிகவும் விருப்பம். உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டுவிடுவார். விளையாட்டுத்தான் என்றாலும் இது அவருக்குள் ஆழ்ந்த ஆன்ம உணர்வுகளை ஏற்படுத்தியது.

அப்படியே நெடுநேரம் சிலைபோல அமர்ந்திருப்பான். சில சமயம் அவரைப் பிடித்து உலுக்கித்தான் இயல்பு நிலைக்குக் கொணரவேண்டி இருக்கும். சில சமயம் உலுக்கினாலும் விழிக்க மாட்டான். மற்றச் சிறுவர்களும் இதை விளையாட்டாய் நினைத்து நரேனைப் போலவே கண்ணை மூடி உட்கார்ந்து கொள்வதும் உண்டு.

ஒரு மாலை நேரம். பிள்ளை நிலா வானில் ஏறிக்கொண்டு இருந்தது. பூஜை மண்டபத்தில் நரேனும் சில சிறுவர்களும் தியான ‘விளையாட்டில்’ இருந்தனர். சிறிது கண்விழித்த ஒரு பையன் கல் பாவிய தரையில் ஒரு பெரிய நாகம் நெளிந்துவருவதைப் பார்த்தான். ஒரே அலறல், எல்லோரும் துள்ளி எழுந்தனர். ஆனால் நரேனுக்குத் தியானம் கலையவில்லை. மற்றவர்களும் சேர்ந்து கூக்குரல் இட்டனர், பயனில்லை. ஓடிப்போய் நரேனின் பெற்றோரிடம் சொல்ல அவர்களும் அங்கு விரைந்தனர்.

பாம்பு நரேனின் முன்னே படத்தை விரித்து நின்றது அவர்களுக்கு ஓர் அச்சம் கலந்த வியப்பான காட்சி. ஆனால் குரலெழுப்பினால் பாம்பு துணுக்குற்று நரேனைக் கொத்துமோ என்ற பயம். என்ன நினைத்ததோ, தலையைக் கீழே இறக்கிய நாகராஜன் ஏதும் நடவாததுபோல வெளியேறினான். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

பாம்பைப் பார்த்தால் ஓடிப்போயிருக்க வேண்டாமா என்று கேட்ட பெற்றோருக்கு நரேனின் பதில் “எனக்குப் பாம்போ வேறெதுவுமோ தெரியவில்லை. சொல்லமுடியாத ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தேன் நான்.”

ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்ச முண்டோ டா? – மனமே!
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!
(பாரதி, ‘தெளிவு’)

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *