ஜயத்யா ச்’ரிதஸந்த்ராஸ த்⁴வாந்த வித்⁴வம்ச’னோத³ய: |
ப்ரபா³வான் சீ’தயா தே³வ்யா பரமவ்யோம பா⁴ஸ்கர ||
– மஹா வீர வைபவம் தனி ஸ்லோகம்
ஆச்’ரித – பக்தர்களுடைய, ஸந்த்ராஸ: – பயமாகிற, த்⁴வாந்த – இருளை வித்⁴வம்ச’னோத³ய – போக்கடிப்பதற்காக உதித்தவனும், சீ’தயா தே³வ்யா – சீதா தேவியினாலே, ப்ரபா³வான் – ஒளி பொருந்தியவனும், பரமவ்யோம – பரமபதமான ஸ்ரீவைகுண்டத்தில் பா⁴ஸ்கர – சூரியனைப்போல, ஜயதி! – வெற்றிமுகமாக விளங்குபவனாக ஸ்ரீராமன் காட்சியளிக்கிறான்.
ஸ்ரீ ராம ஜெயம்! வேதாந்த மஹா தேசிகரின் உள்ளம் முழுவதும் ராம நாமம்! எதிரே கோவில் சந்நிதியில் உயர்த்தி பிடித்த கோதண்டம் என்னும் வில், புருவ நேரிப்பில் புவனமே மயங்கும் பேரெழில், பரந்த மார்பு, நீண்ட கைகள், கருணை நிறைந்த பார்வை, பரப்ரம்மமே இவன் என்று எடுத்துக்காட்டும் தெய்வீக ஒளியுடன் ராமன்! பக்கத்தில் பிராட்டி சீதை. அவன் ஒளி பொருந்தி இருப்பதற்கு காரணமே அவள்தான். அவளே ஸ்ரீவைகுண்டத்தில் மஹா லக்ஷ்மி! ராமன் சூரியன் – சீதை அந்த சூரியனின் ஒளி. அவள் அருகிலிருக்கும் போதுதான் ராமன் உயிர்ப்புடன் இருக்கிறான்.
அதோடு இந்த உலகில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் ஒற்றை சூரியனே இவ்வளவு பிரகாசமாக இருக்கிறதே! இவனோ இந்த அண்ட ப்ரபஞ்சங்களை கடந்த பிரம்மாண்டமான வெளியில் சூரியனுக்கெல்லாம் சூரியனாக பிரகாசிக்கும் மஹா விஷ்ணுவாயிற்றே! இப்படி இவன் இவ்வளவு சீருடன் விளங்க எது காரணம் என்று நினைத்து மஹா லக்ஷ்மியான சீதையே அந்த பிரகாசமாக இருப்பதற்கு காரணம் என்று முடிக்கிறார் தேசிகர். விஷ்ணுவை மட்டும் வழிபடுவது முறை அல்ல – மஹா லக்ஷ்மியையும் சேர்த்தே வழிபட வேண்டும். அதனால் தான் பெரியோர் ஸ்ரீவைஷ்ணவம் என்றே இந்த சமயத்தை சொல்லுவார்கள். இதில் ஸ்ரீ என்பது மஹா லக்ஷ்மியையே குறிக்கிறது.
தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அ•தே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? –
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.
– கம்பராமாயணம், உலாவியற்படலம்
ராமனுக்கு இன்னொரு பக்கத்தில் இளைய பெருமாள் என்ற பெருமையுடன் லக்ஷ்மணன். ராமனுக்கு ஒரு தீங்கு என்றால் தன்னையே கொடுக்க தயங்காதவன். சரணாகதி தத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டவே ஏற்பட்ட அவதாரம்.. ராமன் குழந்தையாய் இருக்கும்போது, அவன் தூங்கும் தொட்டிலை அணைத்து தன் தொட்டிலை போடாவிட்டால் தூங்கமாட்டானாம் இலக்குவன். ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்ற நம்மாழ்வார் வாக்கு போல அவர்களுக்குள் சகோதர பாசத்தை மீறிய அதீத அன்பு. முதன்முதல் ராம பக்தன் என்றால் அது லக்ஷ்மணன் தான்.
வனப்பு மிகுந்த இந்த ஸ்ரீராம தரிசன காட்சியை கண்ணுற்ற தேசிகரின் உள்ளம் கசிந்து உருகுகிறது. தேசிகரும் இளைய பெருமாளைப் போலத்தான். உலக விவகாரங்கள் பற்றிய அறிவு ஏற்படும் முன்னரே அவருக்கு பக்தி, பரம்பொருள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. “த்வமேவமாதாச பிதாத்வமேவ” என்ற கீதா வாக்யத்தை அடியொற்றி பரம்பொருளான நாராயணனையே தாயாகவும் தந்தையாகவும் உளமாற நினைத்து உருகி பல பாசுரங்கள் இயற்றியிருக்கிறார்.
பயின்மதி நீயே பயின்மதிதருதலின்
வெளியும் நீயே வெளியுறநிற்றலின்
தாயும் நீயே சாயைதந்துகத்தலின்
தந்தையும் நீயே முந்திநின்றளித்தலின்
உறவும் நீயே துறவாதொழிதலின்
உற்றது நீயே சிற்றின்பமின்மையின்
ஆறும் நீயே யாற்றுக்கருள்தலின்
அறமும்நீயே மறநிலைமாய்த்தலின்
துணைவனும்நீயே செய்யாளுறைதலின்
காரணம்நீயே நாரணனாதலின்
கற்பகம்நீயே நற்பதந்தருதலின்
இறைவனும்நீயே குறையொன்றிலாமையின்
இன்பமும்நீயே துன்பந்துடைத்தலின்
யானும்நீயே யென்னுளுறைதலின்
எனதும் நீயே யுனதன்றியின்மையின்
நல்லாய்நீயே பொல்லாங்கிலாமையின்
வல்லாய் நீயே வையமுண்டுமிழ்தலின்
எங்ஙனமாகு மெய்யநின்வியப்பே
அங்ஙனேயொக்க வறிவதாரணமே!
– தேசிகரின் மும்மணிக்கோவை
எந்த பரம்பொருளான நாராயணனின் மீது அதீத அன்பு வைத்திருக்கிறாரோ, அந்த தெய்வமே எதிரில் ராமனாக நின்று தரிசனம் தருகிறான். ராவணனுடன் யுத்தங்கள் முடிந்து வெற்றி வீரனாக திரும்பி வந்து காட்சி தருகிறான்.
இந்த வாழ்க்கையில் கண்ணால் காணமுடியுமா என்று தவித்திருக்க, ராவணாதி அரக்கர்களை வெற்றிகொண்டு விஜயலக்ஷ்மியாக சீதை பின் தொடர ஜெயராமனாக காட்சியளிக்கிறான். ஆசைதீர கண்ணாரக் கண்டு உளம் உருகி தேசிகன் மகிழ்கிறார். அவனிருக்கும் இடம் தேடி நாம் போவதிருக்க, அந்த ராமனே நம் இடத்திற்கு வந்தானே என்று ஆர்ப்பரிக்கிறார். அப்போது, தான் பார்ப்பதாலேயே சுந்தர வில்லியாக வந்திருக்கும் ராமனுக்கு கண்ணேறு படுமோ என்ற அச்சம் அவருக்கு வருகிறது.
“கஞ்சன் கருக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையுமுண்டு” என்ற பாசுரத்தில் பெரியாழ்வார் கம்சன் யாரோ அரக்கியை அனுப்புகிறான் என்ற வதந்தி கேட்டு பயந்ததைப்போல தன் கண்ணே பட்டு விடுமோ என்று அஞ்சி “ஜய ஜய” என்று ஜய கோஷம் எழுப்புகிறார்.
ராவணனை வென்ற பின்பு, விபீஷணன் முடிசூட்டிக்கொண்டு ராமன் எதிரில் வந்து, ராமன் இன்னமும் மரவுரி தரித்து வனவாசியாகவே இருக்கிறானே என்று வருந்தி, ராமனையும் நல்ல பட்டு பீதாம்பரங்களையும், அவன் எழிலுக்கேற்ற நகைகளையும் அணிந்து வரவேண்டும் என்று வேண்ட ராமன் மறுத்துவிடுகிறான். “என் தம்பி பரதன் அங்கே காத்திருப்பான். அவனை கண்டபின் தான் நான் எந்த இன்பத்தையும் விரும்புவேன் ” என்றது போல, இங்கே என்னைக்கண்டபின் தான் உனக்கு சந்தோஷமோ என்று குதூகலிக்கிறார். ராவண ஜெயம் அடைந்ததோடு அல்லாமல் ராமனுக்காகவே காத்திருந்த இந்த ஜீவனையும் தன்னோடு சேர்த்துக்கொண்ட பின் அதனால் ஏற்பட்ட சந்தோஷத்துடன் விளங்குகிறான் என்கிறார்.
ஸ்ரீ ராம ஜெயம்!
மஹா வீர வைபவம் கேட்டு ரசிக்க! (நன்றி: சுந்தர் கிடாம்பி அவர்கள்)
ஆஸ்ரிதஹ – என்றால் அண்டியவர்கள் – அவர்கள் பக்தர்களாக இருக்க தேவையில்லை. இராவணன் கூட ஓக்கே.
பயத்தை களைகிறேன் என்பதுதான் இராமபிரானின் சிக்னெச்சர் பிராமிஸ். இதுதான் அடைக்கல தத்துவம் (சரணாகதி).
இதைக்கொண்டே இந்த பாமாலை தொடங்குவது அறிந்து மிக்க மிக்க மகிழ்ச்சி.
தங்கள் விளக்கங்கள் மிகவும் சுவையாக இருக்கின்றன. நீங்கள் கொடுக்கும் பல்வேறு உதாரணங்களும் மிக அருமை.
மேலும் எழுதுங்கள்.
நன்றி
ஜயராமன்
// ராமன் குழந்தையாய் இருக்கும்போது, அவன் தூங்கும் தொட்டிலை அணைத்து தன் தொட்டிலை போடாவிட்டால் தூங்கமாட்டானாம் இலக்குவன். ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்ற நம்மாழ்வார் வாக்கு போல //
“கருவுற்ற நாள்முதலாக நின்பாதமே காண்பதற்கு” என்கிறார் அப்பர். இறையன்பில் திளைத்தவர்கள் வாக்கு.
பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதுகிறீர்கள். அருமை.