4. செண்பக மரத்து பிரம்மராட்சதன்
“நான் இன்ன மடத்தைச் சேர்ந்த துறவி’ என்பதை நினைத்துப் பெருமைப்படுவது பாபச் செயலாகும். தொடக்க காலத்தில் வேண்டுமானால் அதில் பயன் இருக்கலாம். அவர் முழு வளர்ச்சி அடைந்தபின் அது தேவையில்லை. இவன் சன்யாசி, இவன் குடும்பஸ்தன் என்கிற பேதம் பார்க்காதவனே உண்மையான சன்யாசி.”
— சுவாமி விவேகானந்தர்
நரேன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். சில சமயம் எல்லாமே பிடிக்காமல் போய்விட்டால் ஒரு நண்பன் வீட்டுக்குப் போவது வழக்கம். அந்த வீட்டில் ஒரு சண்பக மரம் இருந்தது. “தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை ஊரர்” என்று அபிராமி அந்தாதி சொன்னாற்போல அது சிவனுக்குப் பிடித்த மலரைத் தரும் மரமல்லவா? அதில் ஏறித் தலைகீழாகத் தொங்குவது நரேனுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று.
அந்த வீட்டிலிருந்த கண்தெரியாத பெரியவருக்கு நரேனின் குரல் கேட்டது. சிறுவன் விழுந்துவிடப் போகிறான் என்றோ அல்லது தனது சண்பகப் பூக்கள் கொள்ளை போய்விடப் போகின்றன என்றோ நினைத்த பெரியவர் நரேனைக் கூப்பிட்டார். “இன்னோரு தடவை சண்பக மரத்தில் ஏறாதே” என்றார். நரேன் ஏனென்று கேட்டான்.
“இந்த மரத்தில் ஒரு பிரம்மராட்சசன் வசிக்கிறான். இரவு நேரத்தில் காலோடு தலை வெள்ளைவெளேரென்று உடையணிந்து வருவான். பார்க்கவே பயங்கரமாய் இருக்கும்” என்றார். பெரியவர். நரேந்திரனுக்கு இது புதுச் செய்தி. பிரம்ம ராட்சதன் இரவில் உலாவருவதைத் தவிர வேறென்ன செய்வான் என்று கேட்டான்.
“இந்த மரத்தில் ஏறுகிறவர்களின் கழுத்தை முறிப்பான்.” நரேன் ஒன்றும் சொல்லவில்லை. பெரியவர் ஒரு வெற்றிப் புன்னகையோடு அகன்றார். அவர் சற்றுத் தூரம் போனதுமே மீண்டும் நரேந்திரன் மரத்திலேறினான். “டேய், உன் கழுத்தை முறிக்கத்தான் போகிறான் பிரம்மராட்சசன்” என்று எச்சரித்தான் நண்பன்.
“யாரோ ஒருவர் சொல்கிறார் என்று எல்லாவற்றையும் நம்பாதே. பிரம்மராட்சசன் இதில் இருப்பது உண்மையானால் என் கழுத்து எப்போதோ முறிந்துபோயிருக்கும்” என்றான் சிரித்துக் கொண்டே நரேன்.
சுவாமி விவேகானந்தர் பின்னாளில் தன் சீடர்களுக்குச் சொல்லுவார், “நான் சிறுவயது முதலே துணிச்சல்காரன்தான். இல்லாவிட்டால் கையில் காலணா இல்லாமல் உலகை சுற்றிவரப் புறப்பட்டிருப்பேனா?”
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு
(திருக்குறள்: 534)
ஸ்வாமிஜியை அங்கனம் பயமுறுத்தியவரின் பேரன் பிற்காலத்தில் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவியானார். ஸ்வாமி விரஜானந்தர் என்ற பெயரில் ஆன்மீக சக்தி வாய்ந்த பொறுப்பில் இருந்து பலரை வழிநடத்தினார்.
விவேகானந்தரைப் பற்றி மேலும் மேலும் படிக்க தூண்டும் வகையில் சுவையாக எழுதுகிறார் மதுரபாரதி அவர்கள்.