பாடலும் விளக்கமும்
ரஷ்யப் புரட்சியையும் பிஜித் தீவில் தமிழர் படும் பாட்டையும் தனது சொற்களால் அமர கவிதைகளாக்கிய பாரதி பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தசிங் ‘கால்ஸா’ என்ற தர்மம் காக்கும் வீரர் படையை அமைத்த அற்புத நிகழ்ச்சியையும் எழுதி வைத்திருக்கிறான். தர்மதேவதையின் தாகம் தீர்க்க ஐந்து வீரர்களை பலி கேட்ட குரு கோவிந்தசிங்கின் சோதனை, வரலாற்றின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வு. அதை பாரதியின் வரிகளிலேயே படியுங்கள்…
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்ரம நாண்டு வீரருக் கமுதாம்
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்
பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி யாவான். 5
பாஞ்சால (பஞ்சாப்) மண்ணில் பரவியுள்ள சீக்கிய குலத்தின் ‘கால்ஸா’வை உருவாக்கிய (பத்தாவது) குருமணியான குரு கோவிந்த சிங், ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறாம் ஆண்டில் (விக்ரம ஆண்டு) அனந்தபூரில் சீடர்களோடு வந்து தங்கி இருந்தான்.
ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்,
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன், மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங் கோமகன்,
அவன்திருக் கட்டளை அறிந்துபல் திசையினும்
பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்
நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்,
குரு கோவிந்த சிங் ஞானத்தின் சமுத்திரம், புகழ்வாய்ந்த கவிஞன்; வானமே இடிந்து தலைமீது விழுந்தாலும் கைவாளால் தடுத்து நிறுத்துகிற சீக்கிய வீரர்களின் தலைவன். (அனந்தபூருக்கு எல்லா சீக்கியர்களும் வந்து கூட வேண்டும் என்று) அவன் விடுத்த கட்டளையைக் கேட்டு, எல்லாத் திசைகளிலிருந்தும் பாஞ்சாலத்து வீரர்கள் நாள்தோறும் அங்கே வந்து குவிகின்றனர்.
ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்
கூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும், 15
புன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும்,
பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்,
“நல்வர வாகுக நம்மனோர் வரவு” என்று
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற
தம் குருவின் விருப்பம் என்ன என்று அறிய ஆயிரமாயிரம் வீரர்கள் அனந்தபூருக்கு வந்து சேர்ந்தனர். வளமான அந்த ஊரில் இருந்த செழிப்பான பூவனங்களும், புன்னகையணிந்த மலர்க் கூட்டமும். பசுமை படர்ந்த வயல்களும் அவர்களைப் பார்த்து ‘நம்மவர் வரவு நல்வரவு ஆகட்டும்’ என்று ஆசி கூறி ஆரவாரம் செய்வது போல இருந்தன.
புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் 20
திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்
“யாதவன் கூறும்? என்னெமக் கருளும்?
எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும்
இன்புடைத் தாக்கும்?” எனப்பல கருதி
மாலோன் திருமுனர் வந்து கண் ணுயர்த்தே 25
ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை யொத்தனர் …
குறிப்பிட புண்ணிய தினத்தில் புகழ்பெற்ற தலைவன் (குரு கோவிந்த சிங்கின்) நல்லுரையைக் கேட்க அங்கே கூடினர். ‘இவர் என்ன சொல்லப் போகிறார்? எமக்கு என்ன அருளப் போகிறார்? எந்தவொரு நற்பணியை நமக்குக் கடமையாக விதித்து அதன்மூலம் நமது பிறவிகள் ஏழும் நாம் இன்புறும்படிச் செய்யப் போகிறார்?’ என்று அவர்கள் தமக்குள் நினைத்தனர். தேவர்கள் எல்லோரும் திருமாலின் முன்னே வந்து அவனது ஆணைக்காகக் கண்ணுயர்த்தி ஆவலோடு காத்து நிற்பது போல அவர்கள் தோற்றம் அளித்தனர்.
….. …… திடுக்கெனப் பீடத்து
ஏறிநின் றதுகாண்! இளமையும் திறலும்
ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம்.
விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் 30
திருமுடி சூழ்ந்தோர் தேசிகாத் திருப்ப
தூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது
கூறநா நடுங்குமோல் கொற்றக் கூர்வாள்,
அந்தச் சமயத்தில் திடீரென்று முன்னாலிருந்த மேடையின் மீது, இளமையும் வலிமையும் மேலாண்மையும் அமைந்ததோர் உருவம் ஏறி நின்றது! அவரது கண்களில் தீக்கனல் வீசியது. தலையைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் இருந்தது. சொல்லவே அச்சம் தருகின்ற, ஒளிவீசுகின்ற கூரிய வாளொன்று அவரது கையில் இருந்தது.
எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி,
வான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச் 35
சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு
மோனமுற் றடங்கி முடிவணங் கினரால்
இந்த உருவத்தைக் கண்டதும், வானத்திலிருந்து வந்த மாயாஜாலக்காரன் ஒருவன் முன்னே சிங்கக் கூட்டம் திகைத்துப் போய் நின்றிருந்தாற்போல அமைதியாகத் தலைவணங்கினர்.
வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச்
சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலை 40
குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி
தனது வாளைக் காட்டி அந்த மாட்சிமைவாய்ந்த தலைவன் தனது மனதிலிருந்ததைக் கூறினான். அவனுடைய தெய்வீகமான சிவந்த உதடுகள் அசைந்ததும், ஒரு சினமிகுந்த எரிமலை பொங்குவது போல சொற்கள் சீறிப் பாய்ந்தன.
“வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப
விரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள்
தருமத் தெய்வந் தான்பல குருதிப்
பலிவிழை கின்றதால் பக்தர்கள் நும்மிடை 45
நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப
யார்வரு கின்றீர்!” என்னலும் சீடர்கள்
நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்.
கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது. 50
“தீராத தாகம் கொண்ட தர்ம தேவதை ரத்த பலி கேட்கிறாள். அதனால் இந்த வாளை உங்கள் மார்பில் சொருக விரும்புகிறேன். நெஞ்சைக் கிழித்து அந்த ரத்தத்தால் தேவியின் தாகத்தைத் தீர்க்க பக்தர்களான உங்களில் யார் முன்வருகின்றீர்கள்?” என்று குரு கோவிந்தசிங் கூறியதும், அங்கே ஒரு கணம் யாருக்கும் பேச நா எழவில்லை. இப்படி ஒரு சிறிய கணம் சென்றது…
ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு
வீரன்முன் வந்து விளம்புவான் இஃதே;
“குருமணி! நின்னொரு கொற்றவாள் கிழிப்ப
விடாயறாத் தருமம் மேம்படு தெய்வதத்து
இரையென மாய்வன், ஏற்றருள் புரிகவே!” 55
அங்கே கூடியிருந்த பல்லாயிரக் கணக்கானவர்களுக்குள் ஒரு வீரன் முன்னால் வந்து “குருமணி, இணையற்ற உனது கொற்ற வாளால் (என் மார்பைக்) கிழித்து (அதிலிருந்து சிந்தும் ரத்தத்தால்) தர்மதேவதை தாகம் தீர்க்க, இதோ நான் தயாராக இருக்கிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வேண்டினான்.
புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம்
கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல,
மற்றதன் நின்றோர் மடுவின்வந் தாலெனக்
குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டனர்
பார்மின்! …. …… …. 60
குரு கோவிந்தசிங்கின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அருகிலிருந்த குருத்வாரத்துக்குள் அவனை அழைத்துச் சென்றார். உள்ளேயிருந்து ஒரு குளத்தில் நீர் பாய்ந்தது போல ரத்தம் ஓடி வருவதை அங்கிருந்தோர் பார்த்தனர்.
….. சற்குரு பளீரெனக் கோயிலின்
வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்
முதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய்
மின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன்.
மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி – தூக்கிப்
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன்கோன்; 65
சடாரென்று குருத்வாரத்திலிருந்து வெளியே வந்தார் குரு. முதல் பலி முடிந்ததில் முகம் மலர்ச்சியுற்றவனாக அங்கிருந்தவர் முன்னால் மின்னலைப் போல மீண்டும் வந்தார். கையிலிருந்த ரத்தம் தோய்ந்த கத்தியை வானை நோக்கி உயர்த்திப் பிடித்தபடி குருமணி பின்வருமாறு கூறினார்….
“மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்
சித்தம்நான் கொண்டேன்; தேவிதான் பின்னுமோர்
பலிகேட் கின்றாள்! பக்தர்காள்!
நும்முளேஇன்னும்இங் கொருவன் இரத்தமே தந்துஇக்
காளியை தாகங் கழித்திட துணிவோன் 70
எவனுளன்!” …. …. ….
“இந்த வாளை மனிதர் இதயத்தில் செலுத்த நான் விரும்புகிறேன். தேவி இன்னும் ஓர் பலி வேண்டும் என்று கூறுகிறாள். பக்தர்களே! தனது ரத்தத்தைக் கொடுத்து இந்தக் காளிக்கு தாகம் தீர்க்க முன்வருகிறவன் உங்களுக்குள் இன்னுமொருவன் இருக்கிறானா?”….
… எனலும் இன்னுமோர் துணிவுடை
வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.
இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி
இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்;
குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். 75
என்று அவர் கேட்டதும் மற்றொரு வீரமிக்க ஒருவன் விருப்பத்தோடு முன்வந்தான். அவனையும் குருதேவர் குருத்வாரத்துக்கு உள்ளே அழைத்துச் சென்று தனது இரண்டாவது பலியை முடித்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது பாய்ந்து வந்த ரத்த வெள்ளம் அங்கிருப்போருக்கு நடுக்கத்தைத் தருவதாக இருந்தது.
இங்ஙன மீண்டுமே இயற்றிப்
பலியோ ரைந்து பரமனங் களித்தனன்.
அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட
மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80
வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்
அவரே மெய்மையோர் முத்தரும் அவரே
இவ்வாறு ஐந்து பேரைப் பலி கொடுத்தார் குருமணி. தர்மத்தை அறிவிலே ஏற்றக்கொண்டதால் மட்டுமே மனிதர் உயர்ந்தவராகிவிட மாட்டார். அறம் தழைப்பதற்காகத் துணிவோடு தனது மார்பைக் காண்பித்து அதில் வாளை ஏற்றுக்கொண்டு உயிர் விடுபவர்தான் பெரியோர். உண்மையானவர் அவரே. அவருக்கே முத்தியும் கிடைக்கும்.
தோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முள்ளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் 85
கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்.
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார்
எண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன்
அங்கு கூடியிருக்கும் நூறாயிரம் தொண்டர்களுக்குள் அத்தகைய உயர்ந்தோர் யார் என்று அறிவதற்காகவே கருணையில் கடலான குரு கோவிந்தசிங் அந்தக் கொடுமைமிக்க சோதனையைச் செய்யக் கருதினான். (லட்சியத்தின் மீது கொண்ட) மிகுந்த அன்பினால் தமது உயிரையும் கொடுக்கத் துணிந்தவர் ஐந்து பேரைக் கண்டான். அதே போன்ற அன்பு உடையவர் அங்கே கணக்கற்றவர் இருக்கின்றார் என்று தீர்மானித்து அவனது மனம் மகிழ்ந்தது.
வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து 90
சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும்
ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்
கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்!
ஆர்த்தனர் தொண்டர்! அருவியப் பெய்தினர்!
விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர்! 95
“ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!”
எனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர்.
தமது குருதியை இழந்து உயிர்விட்டார்கள் என்று அங்கிருந்தோர் நினைத்த ஐந்து பேரையும் குருத்வாரத்துக்குள்ளே இருந்து குரு கோவிந்தசிங் வெளியே அழைத்து வந்தார். அங்கிருந்த எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆச்சரியப்பட்டுப் போயினர். தாம் காண்பதை நம்ப முடியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பார்த்தனர். “ஜயஜய குருமணி, ஜயகுரு சிங்கம்” என்று வாழ்த்துப் பாடல்கள் பாடினர். மகிழ்ச்சியில் ஆடினர்.
அப்போழ் தின்னருள் அவதரித் தனையான்,
நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு
குறுநகை புரிந்து குறையறு முத்தர் 100
ஐவர்கள் தம்மையிம் அகமுறத் தழுவி
ஆசிகள் கூறி அவையினை நோக்கிக்
கடல்முழக் கென்ன முழங்குவன் காணீர்!
அருளே வந்து அவதரித்தது போன்ற குரு கோவிந்தசிங், ஒளிபொருந்திய சூரிய சிரித்தது போலப் புன்னகை பூத்தபின்னர், அந்த ஐவரையும் நெஞ்சோடு தழுவி ஆசிகள் கூறினான். பின்னர் அவையினரை நோக்கி, கடல் பேரொலி எழுப்பியது போல இவ்வாறு கூறினான்:
“காளியும் நமது கனகநன் னாட்டுத்
தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்! 105
நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும்
பலியிடச் சென்றது. பாவனை மன்ற,
என்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்?
ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும்
நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே! 110
“காளிதேவியும், பொன்னான பாரததேவியும் ஒருவளே என்று அறிந்த அன்பர்களே! நீங்களெல்லோரும் நடுங்கும்படியாக நான் ஐந்து முறையும் பலியிட்டது வெறும் நடிப்பு மட்டுமே. உங்கள் உயிர்களை நான் என் கையால் எடுப்பேனோ! அவர்களை (குருத்வாரத்துக்குள்) மறைந்திருக்கச் செய்து, உங்கள் மனதை நான் சோதித்தேன்.”
தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர்
என்பது தெளிந்தேன், என்கர வாளால்
அறுத்ததிங் கின்றைந் தாடுகள் காண்பீர்,
சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்,
களித்ததென் நெஞ்சம்; கழிந்தன கவலைகள்” 115
“நமது தாய்நாட்டின் உண்மையான குழந்தைகள் நீங்கள்தாம் என்பதை நான் அறிந்துகொண்டேன். நான் வெட்டியது ஐந்து ஆடுகளை மட்டுமே. நான் சோதித்த போதும் நீங்கள் துணிவோடு இருப்பதைக் கண்டேன். என் மனம் மகிழ்ந்தது. எனது கவலைகள் ஓடிப்போயின.”
தொடரும்…
அய்யா,
அற்புதமான எழுச்சிமிகு இந்த நிகழ்வை அறியத் தந்ததற்கு மனமார்ந்த நன்றி.
மகாகவிஞனின் அற்புதமான மயக்கும் கவிதையும், தமிழும் கொள்ளை அழகு. அதை நீங்கள் ரத்தின சுருக்கமாக பொருள் பொதிந்து பொருளுரை கொடுத்ததும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். மேலும், பாரதியின் வீரமிகு படைப்புகளை தளத்தில் எதிர்பார்க்கிறேன். இந்த வீரம்தான் இப்போது நமக்கு தேவை.
நன்றி
ஜயராமன்
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாரதியின் சத்ரபதி சிவாஜியும் இதே போன்று தான் வீரமுழக்கமிடுகிறார் –
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சகம் அழிக்கும் மாமகம் புரிவம் யாம்
வேள்வியில் இதுபோல் வேள்வியொன்றில்லை
தவத்தினில் இதுபோல் தவம் பிறிதில்லை.
அதர்மம் அழித்து, தர்மம் காத்த வீரர்களின் சரிதங்கள் தொடரட்டும். அவை என்றும் நமக்கும் உத்வேகம் அளிக்கும்.
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
குரு கோவிந்தசிங் தீர்க்க தரிசி.
காஷ்மீரில் 57 பண்டிதர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்று பத்திரிகையில் செய்தி வந்தால். ‘ஐயோ பாவம்.. த்சு த்சு’ என்று உச்சுக்கொட்டிவிட்டு அடுத்த பத்தியை படிக்கச் செல்லும் ஹிந்துக்களால் பயனில்லை. பக்தி எழுச்சியால் ஹிந்துக்கள் சிங்கமாக வேண்டும். கடவுள் நம்மிடம் இருந்து பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை. எழுச்சியையே எதிர்பார்க்கிறார் என்பதை அப்போதே சொல்லியிருக்கிறார் குரு கோவிந்தசிங்.
கார்கில் ஜெய்
வணக்கம்.
அற்புதமான வரிகள். அருமையான விளக்கம். வளர்க நும் பணி.
அன்புடன்
நந்திதா
நமக்கும் இருக்கிறாரே ஒரு சிங் பிரதமர் என்ற பெயரில்!