பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது. பெண் தான் கர்ப்பம் தரிக்கின்றாள். குழந்தையைப் பெற்று எடுத்து வளர்க்கின்றாள். அத்தகைய ஒரு மாபெரும் சக்தியை நம் இதிகாசங்களோ, புராணங்களோ இழித்துப் பேசி இருக்கின்றது என்ற கூற்றே தவறு அல்லது தவறான புரிதல் என்று சொல்லலாம்.

முந்தைய பகுதிகள்:
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்!
பெண்மைக்குப் பெருமை சேர்த்த தமிழ் மகளிர்

ஆண் சார்புடையவன். பெண்ணின் துணை இல்லாமல் ஒரு ஆணால் வாழ்க்கை நடத்த முடியாது. ஆனால் ஆணின் துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியும். இன்னும் சொல்லப் போனால் திருமணமே செய்து கொள்ளாமல் பெண் தனித்து வாழ்வாள். ஆனால் ஆண் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் கூட எந்த விதத்திலாவது ஏதாவது ஒரு உறவின் முறைப் பெண்ணை ஏதோ ஒரு சமயம் நாட வேண்டி உள்ளது என்பதே உண்மை. கணவனை இழந்த பெண்களோ, அல்லது சிறு வயதிலேயே கணவன் விட்டு விட்டுச் சென்றாலோ பெண்கள் அஞ்சுவதில்லை. தன் மக்களைத் தாங்களே எப்பாடு பட்டாவது தாங்கி வளர்க்கின்றார்கள். அதே ஒரு ஆணால் தன்னந்தனியாக மனனவியோ, அல்லது வேறு ஒரு பெண்ணின் துணையோ இல்லாமல் தன் மக்களை வளர்க்க முடியாது என்பதும் உண்மை. கணவனை இழந்த பெண்களை விடவும், மனைவியை இழந்த ஆண்களே மனதளவில் மிகவும் பாதிக்கப் படுவது, ஆய்வில் மட்டுமில்லாமல் கண் கூடாகவும் தெரியும் ஒரு உண்மை.

பெண் தன் சக்தியை முழுமையாகக் காட்டினால் ஆண்களால் தாங்க முடியாது என்பதே உண்மை. ஆனால் பெருமளவும் பெண்களின் சக்தி சரியான முறையில் பிரயோகம் செய்யப் படுவதும் இல்லை. தவறான உள் நோக்கத்துடனேயே பிரயோகம் செய்யப் படுகின்றது. வியாபார நோக்கில் இன்றைய நாட்களில் பெரும்பாலும் தன் சக்தியைப் பெண் விரயம் ஆக்குகின்றாள். ஒரு போகப் பொருளாகத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டு விட்டாள்.

தன்னிடம் உள்ள ஆத்ம சக்தியைப் பெரும்பாலான பெண்கள் உணரவே இல்லை. ஆத்ம சக்தியை உணர்ந்த பெண்கள் தொழுவதற்கு உரியவர்களாக ஆகிறார்கள். அவர்கள் மீது அனைத்து ஆண்களுக்கும் ஒருவித பயம் கலந்த பக்தி உண்டாகிறது. ஆனால் அதே ஒரு பெண்ணாக இருந்தால் தன் கணவனின் ஆத்மசக்தியைத் தனக்கும் சேர்த்துத் துணையாக்கிக் கொண்டு தன் இல்லறத்தை நல்லறமாக்கிக் கொள்ளுவது மட்டுமில்லாமல், தன் குலத்தையே தழைக்கச் செய்வாள். உண்மையில் பெண்கள் ஆண்களை விடப் பலம் படைத்தவர்கள் மனோரீதியாக.

முதலில் சொன்னதற்கு உதாரணம் புனிதவதியார். கணவன் கொடுத்த மாம்பழத்தை சிவனடியார்க்குப் படைத்த அவர், பின்னர் இறை அருளால் மற்றொரு மாம்பழத்தை வரவழைக்கக் கண்ட அவரது கணவன் பரமதத்தன், அவரிடம் இருந்து ஒதுங்கினான். ஏனெனில் அவரின் இறைத் தன்மையைக் கண்டு அவன் பயமும், மரியாதையும் கலந்த ஒரு உணர்வு அவனிடம் உண்டாகியது. பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா???இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? தானே மலர்ந்து, தானே உதிரும் அந்தப் பூவைப் பொறுக்கி இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்க முடியும் அல்லவா?? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை. பிறப்பால் மட்டுமின்றி அவர்களின் புனிதத்தன்மை ஏதோ ஒரு காலகட்டத்தில் வெளிப்பட, அவர்கள் பிறந்ததின் நோக்கம் புலப்பட, சாதாரண வாழ்வு வாழ அவர்கள் படைக்கப் படவில்லை என்பது புலனாகின்றது.

இதைப் போய்த் தவறு என்று சொல்லி, புனிதம் என்று பெண்ணை ஒதுக்கிய ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள். அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது. என்றாலும் முதலில் கலங்கிய அந்த அம்மையார் பின்னர் தெளிந்தார் அல்லவா? தன் வாழ்வின் நோக்கம் புரிந்து கொண்டார் அல்லவா?? ஒருவேளை இதைப் புரிந்து கொண்டு, அதனாலேயே ஒளவை திருமணத்திற்கு முன்பே, மூப்பை வேண்டிப் பெற்றாளோ???

(இந்த வரலாற்றில் புனிதவதியாரின் தூய ஆன்மிக உணர்வோடு கூட, அவரை மதித்து, அவர் விரும்பிய படி வாழ இடம் அளித்து, அவரது வாழ்க்கையில் இருந்து தானாகவே கழன்று சென்று விட்ட பரமதத்தனின் பெருந்தன்மையும் புலப்படுகிறது. வேறோர் நகருக்குச் சென்று இன்னொரு மங்கையை மணந்து வாழ்ந்த போதும், முன்பு தன் வாழ்க்கையில் வர நேர்ந்துவிட்ட புனிதவதி என்ற தெய்வப் பெண்ணை அவன் மறக்கவில்லை. நெஞ்சில் வைத்துப் போற்றவே செய்தான். தனக்குப் பிறந்த மகளுக்கும் “புனிதவதி” என்றே பெயரிட்டு வளர்த்தான். என்னே ஒரு உன்னதமான பண்பாடு! – ஆசிரியர் குழு)

அடுத்த உதாரணம் வள்ளுவனின் வாசுகி. வள்ளுவர் எப்படிப் பட்ட மனிதர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. வள்ளுவரோடு வாழ வந்த வாசுகியோ, கணவனின் தனித்தன்மையை உணர்ந்து, அவரின் ஆன்மீகத்தையும், இறை உணர்வையும் புரிந்து கொண்டதோடு அல்லாமல், அதற்கு உறுதுணையாகவும் இருந்து வந்திருக்கின்றாள். அதனாலேயே வள்ளுவரின் திருக்குறள் பெற்ற பெருமை இன்றளவும் பேசப் படுகின்றது.

இது போலவே அகத்தியரின் மனைவியான லோபாமுத்திரை. அழகியும், அரசகுமாரியும் ஆன அவள் இயற்கையாகவே பேரறிவு வாய்ந்தவள். அதோடு அம்பிகையை நாள் தோறும் வணங்கி அம்பிகையின் மகாமந்திரம் ஆன ஸ்ரீவித்யா மந்திரத்தைப் பரிபூர்ணமாய் அறிந்து அதன்படி தவம் செய்தவள். எனினும் ஒரு குள்ள முனிக்கு வாழ்க்கைப் பட்டதோடு அல்லாமல், அதே ஸ்ரீவித்யா மந்திரத்தை தன் கணவர் ஆன அகத்தியருக்கு ஹயக்ரீவர் மூலம் வழங்கச் செய்தவள். ஆம், லோபாமுத்திரையின் கணவன் என்பதாலேயே அகத்தியருக்கு அந்த யோகம் கிட்டியதாய்ச் சொல்லுகின்றது புராணம்.

குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி சமூகத்துக்கே பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள். கணவனது உடல், உள்ளம் மட்டுமில்லாமல் அவனின் ஆன்மாவையும் காப்பது பெண்களே.

6 Replies to “பெரிது பெரிது பெண்மையின் சக்தி!”

 1. //ஆண் சார்புடையவன். பெண்ணின் துணை இல்லாமல் ஒரு ஆணால் வாழ்க்கை நடத்த முடியாது. ஆனால் ஆணின் துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியும். இன்னும் சொல்லப் போனால் திருமணமே செய்து கொள்ளாமல் பெண் தனித்து வாழ்வாள். ஆனால் ஆண் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் கூட எந்த விதத்திலாவது ஏதாவது ஒரு உறவின் முறைப் பெண்ணை ஏதோ ஒரு சமயம் நாட வேண்டி உள்ளது என்பதே உண்மை.//

  //பெண் தன் சக்தியை முழுமையாகக் காட்டினால் ஆண்களால் தாங்க முடியாது என்பதே உண்மை. ஆனால் பெருமளவும் பெண்களின் சக்தி சரியான முறையில் பிரயோகம் செய்யப் படுவதும் இல்லை.//
  —————
  திருமதி கீதா சாம்பசிவம் அவர்களே,

  பெண்மையின் பெருமையைப் பேசுவதாக எண்ணிக்கொண்டு ஒட்டுமொத்த ஆணினத்தின்மீதே தவறான கண்ணோட்டத்தையும் வெறுப்பையும் காட்டியிருக்கிறீர்கள்.

  உங்கள் இந்த அணுகுமுறை நிச்சயமாக பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்காது.

  உங்கள் எழுத்து ஒரு இணக்கமான சூழலைத் தோற்றுவிக்க உதவவேண்டுமேயன்றி வெறுப்பையல்ல.

  எஸ்.கே

 2. தங்களின் தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன். வெறுப்பு என்று இதை எடுத்துக் கொள்வது அவரவர் கண்ணோட்டமே அன்றி வெறுப்பு என்பது அடிமனத்தில் இருந்து வருவதே. இங்கே உண்மையைத் தான் சொல்லி இருக்கின்றேன். மன்னிக்கவும் உங்கள் மனம் புண்பட்டதற்கு என் மன்னிப்பைக் கோருகின்றேன். பின்னூட்டத்திற்கு நன்றி. மேலும் இதை என் கணவரும் படித்திருக்கின்றார். இருவரும் கலந்து ஆலோசித்தே எழுதுகின்றேன் என்பதை உங்கள் புரிதலுக்காக இங்கே சொல்லுகின்றேன். பெண்ணுக்கு என்று தனியாகப் பெருமையும், இல்லை, ஆணுக்கு என்று சிறுமையும் இல்லை. இது உளவியல் ரீதியாக நாங்கள் கண்டு, கேட்டு,பார்த்த சில அனுபவங்களின் வாயிலாக ஏற்பட்ட எண்ணமே. ஒருவேளை எங்கள் தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை எப்போதுமே சரி இல்லை. புரிதலுக்கு நன்றி. மீண்டும் உங்கள் மன்னிப்பைக் கோரும்

 3. குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி சமூகத்துக்கே பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள். கணவனது உடல், உள்ளம் மட்டுமில்லாமல் அவனின் ஆன்மாவையும் காப்பது பெண்களே.

  – Wonderful! Women in indian freedom fighting, politics also worth to mention. The Mother in Auroville, Mother Teresa, Mata Amirtanandamayee are some of the great women in this era.

 4. கீதா சாம்பசிவம் அவர்களே,

  நீங்கள் சொல்வதை பார்த்தால் இந்தகாலத்தில் எந்த பெண்களும் புனிதவதி இல்லை போலிருக்கிறது. ஏனென்றால் யாராலும் இப்போது மந்திரத்தில் மாம்பழம் வரவைக்க முடியாது. லோபாமுத்திரை, வாசுகி போன்ற பூரண பெண்கள் மட்டும் தான் உதாரணமா?….

  ஏன் ?..நீங்களோ, உங்கள் குடும்பத்திலோ நல்ல பெண்களே இல்லையா?…

  இந்த காலத்திர்க்கு ஏற்றவாறு உதாரணம் சொல்லி எழுதங்கள்.

 5. 2016 தமிழ் இந்து பத்திரிகையில் ஒரு ஆய்வு கட்டுரையில் தமிழகத்தில் ஆண் துணையில்லாமல் வாழும் பெண்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று வந்திருந்தது. அதில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *