கவிதை: குருநாதன்…


ஊசிமுனை உள்ளத்தில்
ஓரினிய வெள்ளமாக
நேசமெனும் இழையொன்று
நிழலாடும் நிஜமாக
வாசிக்குள் ரகசியமாய்
வளருமொரு வகுப்பாக
தேசிகன் புகுந்தென்னுள்
தினமிதமாய் விரிகின்றான்!

நித்திரைக்கும் பிரக்ஞைக்கும்
நேரத்தில் வசப்படாத
ஒத்திகையால் தாண்ட
ஒண்ணாத ஒருகோட்டில்
சத்திரத்துத் திண்ணையிலே
சாய்ந்துறங்கும் முதியோன்போல்
அத்தனவன் என்னுள்ளே
அரிதுயிலாய்க் கவர்கின்றான்!

மனமென்னும் சஞ்சலத்தின்
மவுனமெனும் பின்னணிபோல்
அனுபவங்கள் அனத்துக்கும்
அடிநாத மாயிருப்பான்
தினவெடுக்கும் நினைவிடையே
தீபமெனத் தனித்திருப்பான்
எனதென்னும் பொய்களைந்து
என்னில்தா னாயிருப்பான்!

தினம்வளரும் அதிசயமாய்
தெவிட்டாத தித்திப்பாய்
மனம்முழுதும் மலர்ந்திருக்கும்
மகத்துவத்தின் தனித்துவமாய்
கனம்முழுதும் களைந்தென்னைக்
ககனவெளி யில்கரைக்கும்
இனம்காண முடியாத
இன்பமாக இணைந்திருப்பான்!

அனைத்துக்கும் அவன்சாட்சி
அவனேஎன் அகக்காட்சி
மனைதொட்டு முக்திவரை
மண்டுவது அவனாட்சி
நினைப்பற்ற முனையினின்று
நீள்கிறது அவன் வீதி
கனைப்பற்ற சித்தத்தில்
கண்ணிமைக்கா தவனிருப்பான்!
கண்டிக்கும் தந்தையாகக்
கருணைமிகு தாயாக
தண்டிக்கும் சட்டமாக
மன்னிக்கும் அரசனாக
வண்டிக்கச் சாணியாக
வல்வினையின் பிடியிருந்து
துண்டித்தான் இதயத்துத்
துளைநடுவே குழலிசைப்பான்!

உள்நுழைந்தான்; கணந்தோறும்
ஓங்கி வளர்கின்றான்
முள்முனையில் உயிர்வைத்து
முகையவிழ்த் தான்மனதை
மெள்ளமெள்ள வெளிப்பட்டு
மெல்லெமெல்ல எனைக்கரைத்துக்
கொள்ளமுடி யாதவொரு
கோலவெறி யாகநின்றான்!

யுகயுகமாய்த் தலைசுமந்து
கூத்தாடும் தத்துவங்கள்
தகர்ந்தனவே! பிடியெல்லாம்
தளர்ந்தனவே! துயரென்றும்
சுகமென்றும் நான்தவித்த
சூழ்ச்சியெலாம் வீழ்ந்தனவே!
அகமெல்லாம் புறமாக
அவனெதிரே சிரிக்கின்றான்!

சொல்தந்த ஒருமாயம்
சொல்வந்து தோயாது
சொல்லோவே றெதையும்போய்ச்
சொந்தமென நாடாது
புல்நுனியின் பனித்துளிபோலப்
பூரணமாய்ச் சூரியனை
மெல்லநான் விழுங்கி
மிளிர்கையில்கண் பனிக்கின்றான்!

6 Replies to “கவிதை: குருநாதன்…”

  1. அன்பரே, உங்கள் எழுத்து வெறும் கவியாக மட்டுமில்லை, எழுதியிருப்பதை நீங்களே உணர்ந்து பின் எழுதியது போலுள்ளதே! என் இனிய ஐயம் நிஜமா?

  2. ரமணன் என் பள்ளிநாள் நண்பன். 42 வருடப் பழக்கம் போதுமானது என்றால் இதை என்னால் சொல்ல முடியும்: ‘ஆம். இந்தக் கவிதை, இது மட்டுமல்லாமல் அவன் எழுதும் ஒவ்வொரு எழுத்துமே, தான் உணர்ந்த பிறகு எழுதப்படுபவைதாம்.

  3. Shri Ramanan

    You are indeed blessed.The deeply felt lines brought tears to my eyes.May the divine Father bless us all with his knowledge.
    Regards

  4. திரு ரமணன்
    மன்னிக்கவும். படித்தவுடன் ஆங்கிலத்தில் பதிவு செய்து விட்டேன்.
    தங்கள் ஆழ்ந்த , அனுபவம் சார்ந்த வரிகளின் தாக்கத்தினால்…
    “யுகயுகமாய்த் தலைசுமந்து
    கூத்தாடும் தத்துவங்கள்
    தகர்ந்தனவே! பிடியெல்லாம்
    தளர்ந்தனவே! துயரென்றும்
    சுகமென்றும் நான்தவித்த
    சூழ்ச்சியெலாம் வீழ்ந்தனவே!
    அகமெல்லாம் புறமாக
    அவனெதிரே சிரிக்கின்றான்!”
    இவ்வரிகள் நம் எல்லாருக்கும் ஒரு நம்பிக்கையின் செய்தியை தருகின்றன

  5. என்ன ஒரு ஒலிநயம், கருக்கெழுத்து.
    இக்கவிதை உண்மை அனுபவமா இல்லையா என்று கேட்பது தேவையற்றதாகவே எனக்குத் தெரிகிறது. நித்த நித்தம் இந்த அனுபவமே தொடரவில்லை என்றால் கூட ஒரு நொடியே ருசித்த பின் கூட மறக்குமா இத்துளியின் தொடுகை?

    இந்த வகை அனுபவம் துளி கைவசப்பட்டாலும் பின் வாழ்வில் எத் துன்பமும் நம்மைக் கொல்லாதே. மரணத்தைக் கொல்லும் ஞானம் என்பது இந்த வகை ஸ்பரிசம் கொடுத்த அறிவு போலும்.

  6. ரமணன் அவர்களே

    தன் ஜீவனை நேருக்கு நேர் சந்தித்த அனுபவம் மட்டுமே இவ்வார்த்தையாய் வரும். தங்கள் குருபரன் யாரென அறியாலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *