ஆலயம் என்னும் அற்புதம்

திரு.வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘அற்புதக்கோயில்கள்‘ என்ற புத்தகத்துக்கான (வரம் வெளியீடு) முன்னுரையிலிருந்து சில பகுதிகளை புகைப்படக் கட்டுரையாக அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்.

Saptharishiswarar

திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர்

“கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான். அந்தந்த நாட்டு மதங்களைச் சார்ந்து அங்குள்ள கோயில்களை மசூதி என்றும், சர்ச் என்றும், விஹார் என்றும் சினகாக் என்றும் அழைக்கிறார்கள். இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில்கள் இருக்கின்றன தான். எல்லாம் பவித்திரமான இடங்கள் தான். ஆனால் தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும். அதிலும் தமிழ் நாட்டின் கோயில்கள் நம் மனதில், நம் வாழ்க்கையில், தமிழ் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளதற்கு இணையாக வேறு எதையும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். அதைத் தான் கோயிலே ஒரு அற்புதம் என்று சொன்னேன்.”

Srirangam Rajagopuram

திருவரங்கம் ராஜகோபுரம்

கோயில் எல்லோருக்கும் வழிபடும் இடமாக உள்ளது, உலகம் முழுதிலும். பிரார்த்தனை செய்யும் இடமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆண்டவனை நிைனைந்து கொள்ளும் இடமாக உள்ளது. அங்கு சென்று நம்மை இழக்கும் இடமாக, நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இடமாகவும் உள்ளது. இம்மாதிரியான சிந்தனைகளும் எண்ணப்போக்கும் வழிமுறையும் நம் மனதை செயல்களை அவ்வப்போது சுத்திகரித்துக் கொள்ளும் இடமாகவும் இருந்துவருகிறது. பெரும்பாலான கோயில்கள், அதாவது வழிபாட்டு இடங்கள் கட்டிடக் கலை உன்னதத்தை உணர்த்தும் சின்னமாகவும் இருக்கிறது. வானை முட்டும் கோபுரங்கள், மினார்கள் நம் மண்ணுலக அன்றாட வாழ்க்கைப் பிணைப்புகளிலிருந்துகொண்டும் அல்லது அவற்றிலிருந்து விடுபட்டும் வானை நோக்கி நம் பார்வையை இட்டுச் செல்லும் சின்னமாகவும் திகழ்கின்றன. பரந்து விரிந்து மண்ணையும், நெடிது உயர்ந்து விண்ணையும் இணைக்கும் தத்துவத்தை படிமமாக்குவது கோயில். மண்ணில் கால் பதித்து விண்ணை லட்சியமாகக் காட்டுவது கோயில். கோயிலின் உள்ளே கால் வைத்ததுமே அதன் பிரம்மாண்டம் நம்மை ஆட்கொள்ளும். நம் அகங்காரத்தை அழிக்கும். இப்பிரபஞ்சத்துள் நம் சிற்றுருவை நினைவு படுத்தும். உலகம் முழுதுக்கும் இவை பொதுவான விஷயங்கள்.

Thiruvannamalai Arunachaleswarar

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்

ஆனால் தென்னகக் கோயில்கள் அவற்றின் ஆயிரம் இரண்டாயிரம் என நீளும் வாழும் சரித்திரைத்தைப் பறை சாற்றும். வாழும் சரித்திரம் என்றேன். அழிந்து அல்லது அழிக்கப்பட்டு பின்னர் மீண்டும் புணரமைக்கப்பட்ட நீண்ட வரலாற்று நினைவுகள் கொண்ட கோயில்கள் பல இந்தியாவில் உண்டு. இன்றும் நாம் காணும் சோமநாதபுர கோயிலோ காசி விஸ்வநாதர் ஆலயமோ அவற்றின் வரலாற்றுத் தொடக்கத்தில் இருந்தவை அல்ல. ஆனால் காஞ்சி கோயில்களோ, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோ அவற்றின் தொடக்க கால உருவை இன்னும் தம்முள் கொண்டவை. அவை 1500- 2000 ஆயிரம் கால நீட்சியின் சின்னங்களை, சாட்சியங்கள் தம்முள் கொண்டவை. பூதத்தாழ்வாரும் சுந்தரரும் வழிபட்ட கோயில்கள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றன.

Tanjore Brihatheeswarar

தஞ்சை பெரிய கோயில் பிரகாரம்

 

 

ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பல பிரகாரங்களை, மண்டபங்களைத் தாண்டி கற்பக்கிரஹம் வரையிலான நம் சில நூறு காலடித் தடங்கள், இன்றிலிருந்து பல சரித்திர காலகட்டங்களைக் கடந்து தமிழ் நாகரீகத்தின் வரலாற்றுத் தொடக்கத்தைத் தொடும் நீண்ட பயணத்தின் தடங்களை நமக்கு வழியில் பல சான்றுகளோடு உணர்த்தும். கோயில் பிரகாரச் சுற்றுச் சுவர் கல்வெட்டுக்கள் கோயிலின் அவ்வக்கால நிர்மாண, நிர்வாக சரித்திரத்தைச் சொல்லும் ஆவணங்களாகும்.

Srirangam Mandapam

கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம், திருவரங்கம்

தமிழ் வாழ்க்கையே கோயிலை மையமாகக் கொண்டதுதான். கோயில் தமிழனுக்கு வாழ்வளித்தது. அவன் கலைகளுக்கு ஊட்டம் கொடுத்து வளமும் வாழ்வும் கொடுத்தது கோயில். சங்கீதமும் நாட்டியமும் ஓவியமும், சிற்பமும் வளர்ந்தது அங்கு.தமிழ் இலக்கியத்தின் பெரும் பகுதி படைக்கக் காரணமாக இருந்தது கோயில். தமிழ் நாட்டுக் கோயில்களிலிருந்து பிறந்த பக்தி இயக்கம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம் முழுதுக்குமான கலை, இலக்கிய,மொழி வளர்ச்சிக்கு ஆதர்சமாக இருந்துள்ளது. அந்த ஆதர்சத்தின் நீட்சியை காரைக்கால் அம்மையாரிலிருந்து, பூதத்தாழ்வாரிலிருந்து தொடங்கி, இங்கு பாரதி வரையும், வங்கத்தில் தாகூர் வரையும் காணலாம். தேவாரத்தையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் பிறப்பித்தவை இக்கோயில்கள் தாம். ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் தாம் நடைப்யணம் கொண்டு தரிசித்த பெருமாணை, அவன் வதியும் கோயிலையும், ஊரையும் பாடிக் கோயிலுக்கு வரலாற்றுச் சிறப்பும் தந்து, தமிழுக்கு இலக்கிய வளமும் தந்து, கலைகளை வாழச் செய்த போன்ற ஒரு மரபும் சரித்திரமும் உலகில் வேறு எங்கு காணப்படுகிறது?

Tanjore Brihatheeswarar ramparts

தஞ்சை பெரிய கோயில் வெளித்தோற்றம்

தமிழ் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அதற்குக் குணமும் வழிமுறையும் தந்த சரித்திரம் கொண்டவை நம் கோயில்கள். நம் கோயில்கள் கட்டிடகக் கலை வளர்ச்சியைச் சொல்லும் நிதர்சன ஆவணம். சிற்பக் கலைக் கூடம். ஒவியக் கலைக் கூடம். தஞ்சை பெரிய கோவிலிலிருந்து காஞ்சி மாவட்ட ஏதோ ஒரு கிராமத்து துர்க்கை அம்மன் கோயில் வரை கோயில்கள் பக்திக்கு மாத்திரம் உறைவிடமாக இல்லை. நாடகத்தையும் ஆடல் பாடல்களையும் கூத்துக்களையும் நாட்டுப் புற கலை வடிவங்களையும் வளர்த்தன. ஒரு ஊரின் மையமாக இருந்து கொண்டு அந்த சமூகத்தின் மக்களின் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒன்றாக, ஒரு நாகரீகமாக அது இருந்துள்ளது. தென்னிந்திய மனதுக்கு, இன்னும் குறிப்பாகவும் சிறப்பாகவும் தமிழ் மனதுக்கு கோயில் என்ற பதம், சப்தம், படிமம், எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கும் ஒரு அனுபவமாக இருக்கிறது. வரலாறு, அர்ப்பணம், பிரார்த்தனை, இலக்கியம், கலைகள், தத்துவம், வாழ்க்கை முறை, தெய்வம், மீட்சி என அத்தனையும் தன்னுள் கொண்ட, ஒன்றிணைந்த ஒரு அனுபவம். கோயில் வேறு எங்கும் இத்தனை அர்த்தங்களை, அனுபவங்களைத் தரும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே, கோயிலே ஒரு அற்புதம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

Thiruvalanjchuzhi

கிறுக்கல்களால் சிதைக்கப்பட்டிருக்கும் நாயக்கர் காலத்து ஓவியம் – திருவலஞ்சுழி

 

ஆனால் தமிழ் வாழ்க்கை இப்போது இந்த அடையாளங்களையெல்லாம் இழந்து வருகிறது. இன்னமும் சரியாகச் சொல்லப் போனால், முனைந்து அழிக்கப்பட்டு வருகிறது. கோயில் என்னும் அற்புதம் தன் பல திறத்த, பல வண்ண அடையாளங்கள் ஒவ்வொன்றாய் இழ்ந்து வருகிறது. அந்த அழிவின் வேகமும் அளவும் குணமும் இடத்துக்கு இடம் வேறுபட்டுக் காணப்பட்டாலும், ஒவ்வொரு கோவிலிலும் அழிவு என்பது ஒரு நிச்சயத்துடன் படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. நிகழ்த்தப்பட்டு வருகிறது. கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுவிட்டன.கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் அசுத்தப்படுத்தப்படுகின்றன. கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிகின்றன. பராமரிப்பு காணும் இடங்களில் அதன் வரலாற்று அடையாளங்கள், அதன் புனிதத்வம் அழிக்கப்பட்டு வருகின்றன.

Srirangam temple periphery

போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும் இந்தத் திருவரங்க சுற்றுச்சுவர் பல நூற்றாண்டுகள் பழமையானது

 

 

 

 

ஒரு கலையுணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட சமூகத்தில், தமிழ் நாட்டின் ஒவ்வொரு கோவிலும் அதன் முழுமையில், அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு வரும். ஆனால் இந்த இரண்டும் இன்றைய சமூகத்தில் வரண்டுவிட்டன. ஒரு போலியான பகுத்தறிவின் தாக்கத்தில், கலையுணர்வும் வரலாற்றுணர்வும் அற்ற பகுத்தறிவு அது, அழிவு தான் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.

Darasuram Temple

தாராசுரம் கோயிலில் கொடிமரம் முன் வணக்கம் செலுத்தும் பக்தர்

மனித ஜீவனில் வேதனைகளுக்கு ஏமாற்றங்களுக்கு குறையுண்டா? சில சமயங்களில் ரொம்ப சின்ன விஷயங்கள் கூட கிட்டாதவையங்கள் ஆகிவிடுகின்றன. எவ்வளவோ பெரிய தலைகள் உதவியும் கூட சாதாரண காரியங்கள் கூட நடப்பதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் முறையிட்டுக்கொள்ள தன் வேதனையைச் சொல்ல ஒரு பெரிய சக்தி வேண்டும். தெய்வ நம்பிக்கை அதைத்தான் தருகிறது. வேதனைகள், ஏமாற்றங்களிடையேயும் ஒரு நம்பிக்கை பெற்று நிம்மதி கொள்ளமுடிய வேண்டும். வறுமையிலேயே தியாகராஜர் தன் ஜீவனை முடித்துக்கொண்டவர். “ப்ரோசேவாரெவரே ரகுபதீ நினுவினா?” என்றும் “ஏமி நேரமு நன்னு ப்ரோவ எந்த பாரமு.?.” என்று எந்நாளும் முறையிட்டுக்கொண்டேதான் இருந்தார். ராமர் கேட்பார், காப்பாற்றுவார் என்ற பல மான நம்பிக்கையிலேயே அவர் ஜீவன் கழிந்துவிட்டது. அந்த நம்பிக்கை அவருக்கு பலம் தந்தது. வறுமை நீங்கவில்லை தான். ராமர் கேட்கவில்லை தான். வறுமை அவருக்கு வேதனை தரவில்லை. நாமெல்லாம் எளிய ஜீவன்கள். நமக்கு முறையிட, நம்பிக்கை தர ஒரு தெய்வம் வேண்டும். தெய்வ நம்பிக்கை நமக்கு நிம்மதியான வாழ்வு தரும்.

Lord Khumbheswara

சூரிய அஸ்தமன சமயத்தில் கும்பேஸ்வரர் கோயிலின் தோற்றம், கும்பகோணம்

 

 

 

“கோயிலின் அர்த்தங்கள் அதன் பயன்பாடுகள், தரும் அனுபவங்கள் என நிறையச் சொன்னேன். நம்மில் பலருக்கு கோயில் தெய்வத்தின் இருப்பிடமாதலால் முதன்மையாக வழிபாட்டுக்கான, வேண்டுதலுக்கான, நம் குறைகளை முறையிடுவதற்கான இடம். வாழ்க்கையில் நிம்மதி பெற அது மிக முக்கியம்.”

8 Replies to “ஆலயம் என்னும் அற்புதம்”

  1. அருமையான கட்டுரை. அற்புதமான புகைப்படங்கள்.

    கோயில் என்பது முதன்மையாக வழிபாட்டுத் தலம், அதோடு கூட அது ஒரு சமூக, கலாசார, கலைக் கூடமும் ஆகும் என்பதை பொது ஜனங்களுக்கு உணர்த்த வேண்டும். அரசும், சுற்றுலாத் துறையும் இதைச் செய்ய வேண்டும்..

    பல இடங்களி்ல் இந்த அரசுத் துறைகளே கோயிலின் புராதனத்தைப் படுகொலை செய்வது தான் காணக் கிடைக்கிறது. மதுரைப் பொற்றாமரைக் குளக் கரையில் அமைந்த மண்டபத்தின் நாயக்கர் கால ஓவியங்களை வெள்ளையடித்தே கொன்று விட்டார்கள். இங்கு புகைப் படத்தில் இருக்கும் திருவலஞ்சுழி கோயிலில் கோபுரம், தூண்கள் மாடங்கள் எல்லாவற்றிலும் அடிக்க வரும் கலர்களில் பெயிண்டுகளை அடித்து வைத்து அவற்றின் மூ்லவடிடவமே மறைக்கப் பட்டு விட்டது. என்ன கொடுமை!

  2. மிக அருமையான கட்டுரை.

    கட்டுரைக்கு ஏற்ப மிக மிக அருமையாகத் தயாரிக்கப்பட்டுள்ள படங்கள்.

    ஒரே சமயத்தில் இரண்டையும் ரசிக்க முடியாமல் திணறுகிறேன்.

    பெரியவர் சொல்லுவதுபோல கோயில்கள் என்னை வேறு ஒருவனாக மாற்றுகின்றன‍; கோயில்களில் இருக்கும் வரையிலாவது.

    இந்த அனுபவம் மிகப் பழங்காலக் கோயில்களில் அதீதமாகத் தெரிகிறது.

    மிகப் பழமையான சர்ச்சுகளிலும் ஓரளவு இதை அனுபவித்துள்ளேன்.

    நல்லவேளையாக நான் இந்துவாகப் பிறந்தேன். விதம் விதமாய் அனுபவிக்க முடிகிறது.

  3. தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கோயிலிலுக்கும் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல் உண்டியல் வருமானம் இருந்தால் அக்கோயில் தமிழக அறநிலையத் துறையின் கீழ் கையகப்படுத்தப்படும்.

    இக்கோயில்களைப் பராமரிக்க இந்து அறநிலையத் துறை எனும் மிகப் பெரிய துறை ஒன்று தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. அது இறைப் பணியைச் செய்யாமல், இறையிலி சொத்துக்களை யாருக்கோ இரையாக்கி வருகிறது.

    ஆனால், இதைப் போன்று அரசாங்கக் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் மிக அருமையாகப் பராமரிக்கப்படுகின்றன. பக்தர்களிடமும் இக்கோயில் பணியாளர்கள் மிக மரியாதையாக நடந்துகொள்கின்றனர். ஆனால், தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படும் கோயில்களில்?

    இந்தியாவில் உள்ள அனைத்துக் கோயில் சம்பந்தமான வாரியங்களில் அதீத செல்வ வளம் படைத்தத் துறை தமிழக அறநிலையத் துறை.

    ஆனால், இக்கோயில்களையும், எம் முன்னோர் உழைப்பையும், எம் உழைப்பையும் பராமரிக்க இந்து அற நிலையத் துறை பணம் செலவழிக்க முன்வராதது ஏன்?

    நான் என் அன்புக் கடவுளுக்கு அளிக்கும் பணத்தை யார் கவர்ந்து கொள்கிறார்கள்? அந்தப் பணம் எங்கே போகிறது?

    கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் பல காணாமல் போகின்றன. ஏதேனும் வெளிநாட்டுப் பணக்காரரின் வீட்டை அலங்கரிக்கின்றன.

    கோயில் நிலங்களை யார் விற்கிறார்கள்? யாரிடம் விற்கிறார்கள்?

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் சோழ, பாண்டிய, நாயக்க காலத்தைச் சேர்ந்த கோயில்கள் குட்டிச் சுவராகச் சிதறிக் கிடக்கின்றன. இந்தக் கோயில்களின் கடவுள்களுக்கு விளக்கு ஏற்றத் தேவையான‌ எண்ணை இல்லாமல் இருட்டில் இழிவு நடக்கிறது. ஆனால், இக்கோயில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் உண்டு. அவை எங்கே போயின?

    இவை தவிர தமிழக அறநிலையத் துறையால் நடத்தப்படும் கோயில்களிலும் எம் தெய்வங்களை எண்ணைக் கறை படிந்த அழுக்குத் துணிகளால் மூடியும், கரப்பான் பூச்சிகளை மேனியெங்கும் ஓட விட்டும், சாத்திர விரோதமான வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தியும் (உம்: ஆங்கிலப் புத்தாண்டிற்காக இரவு 12 மணியிலிருந்து கோயில்களைத் திறந்து பூஜை நடத்துதல், தமிழ் புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு தினத்திற்கு மாற்றி பொருத்தமற்ற பூசைகள் செய்தல், குறிப்பிட்ட தெய்வத்திற்கு உரித்தான பூஜைகள் செய்யாமல் புதிது புதிதாகப் பூஜை முறைகளை ஏற்படுத்துவது, கோயிலை கல்யாண மண்டபமாக மாற்றுவது), அந்தத் தெய்வங்களின் கண் முன்னரே பக்தர்களிடம் இருந்து பணத்தைச் சுரண்டுவது, தெய்வ சான்னியத்தியம் உணராத வெற்று மனிதர்களை வெறும் பிறப்பின் அடிப்படையில் பூஜாரிகளாகப் போடுவதுமாக நம் தாயும் தந்தையுமான அக்கடவுளர்கள் ம்யூசியத்துப் பொம்மைகளாக அவமதிக்கப்படுகின்றனர். எங்கள் கடவுளர் எங்கள் கண்முன்னே சித்திரவதை அனுபவிக்கின்றர்.

    சுரணையற்ற இந்துக்களுக்குத் தெய்வமான பாவம் தெய்வங்களைத் தகிக்கிறது.

  4. சுரணையற்ற இந்துக்களுக்குத் தெய்வமான பாவம் தெய்வங்களைத் தகிக்கிறது.

    ஹா ஹா.. நன்று சொன்னீர்கள்…

  5. excellent, very touching article. great photos! i know that venkat saaminathan is a well known literary critic. is sethupathy arunachalam a professional photographer or a media person? because he has taken pains to take unusual angles like shooting from top of kodimaram. the view of tanjore temple.. first time i am seeing such an unusual view of that temple surrounded by trees. please publish more of these meaningful photo essays.

    rajasekaran,
    united nations council,
    nairobi.

  6. மிக அருமையான கட்டுரை,

    This article makes me to feel, how temples mingled with human life and culture, good chance for me to understand philosophy behind the temple.

    Where I can get this book

    திரு.வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘அற்புதக்கோயில்கள்’

    Regards
    Mohamed ansari
    Doha
    qatar

  7. Dear friend Mr Ansari,

    I am grateful to youfor eager response and the interest you have evinced. The book that elicited the kind of response you have read here, is available with Kizhakku padhippakam, Chennai. The book is ‘Arpudhak koilkal” You may address your enquiries to these two e/mail addresses: 1) “bseshadri@gmail.com and 2)support@nhm.in

    with kind regards, swaminathan

  8. கோயில்களைப் பற்றிய சுருக்கக் கையேடு என இதை நான் சொல்வேன்.

    தமிழ் மக்களின் நகைமுரன் தீவிரமாக கோவிலுக்கு செல்வதிலும், பின்னர் அதைப் பராமரிக்க நாத்திகர்களை ஆட்சிக்கு அனுப்புவதும்தான். திராவிட கழ‌க ஆட்சியில் கோவில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. கடவுள் இல்லவே இல்லை என்பவன் கோவிலின் அதிகாரியாக பொறுப்பேற்கும் அவலம் தமிழ்நாட்டில்தான் நிகழும்.

    கமிஷன் கிடைக்கும் என்ற ஒரே காரனத்திற்க்காக கோவிலை மனல்கொண்டு சுத்தம் செய்து அழகு சிலைகளை மூளியாக்கிய பாவம் கழக அரசுகளையே சேரும். ஜடாயு அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல அழகழகான சிற்பங்களுக்கு பெயின்ட் அடித்து தனது ரசனையை ஊரறியச் செய்தும் தமிழர்களின் கலாரசனையை அவமதித்தும் கிடைக்கப்போகும் லாபத்துக்காக இந்த அராஜகத்தை அரங்கேற்றியிருக்கிறது அரசுகள். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு..இந்த அராஜகங்களை செய்யும் இவர்களுக்கு இறைவன் கூலி கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நான்..

    மனநிம்மதி தேடிச்செல்லும் சாதாரன பக்தனுக்கு இன்றும் நம்பிக்கை தரும் இடமாக கோவில்களே விளங்குகின்றன… இனியும் விள‌ங்கும்.

    ..

    வெங்கட் சாமிநாதன் அய்யாவின் இந்த அற்புதக் கட்டுரையும், அருமையான புகைப்படங்களை எடுத்துள்ள சேதுபதி அருணாச்சலமும் மதிப்பில் உயர்ந்து நிற்கிறார்கள்.

    தமிழ் இந்து தளத்திற்கு நன்றி.

    ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *