ஒழியுமா ஊழலுக்கு ஆதரவு?

சமீபத்தில் நண்பன் ஒருவன் மோசடிக் குற்றத்தில் கைதாகும் நிலைக்கு ஆளானான். மனதை பாதித்த சம்பவம் இது. கல்லூரி காலத்திலிருந்து பழகிய பழக்கத்தில், அப்படி ஒன்றும் மோசமானவன் இல்லை – சற்று விளையாட்டுத் தனமாக இருப்பான் – ஆனால் மோசடிக் குற்றம் புரிகிற அளவுக்குப் போவான் என்று நினைக்கவில்லை. அவனைச் சென்று சந்தித்து, நடந்தது என்ன என்று கேட்டறிந்து, அவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்பதால் ஆறுதல் அளிக்க முயன்றேன்.

ஆனால் அங்கே நடந்தது வேறு. முதலில் அவன் ஆழ்ந்த வருத்தத்தில் ‘யாரோ வந்ததற்கு அழைப்பு மணி ஒலித்தாலும் மனது பயந்து சஞ்சலப்படுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று புலம்பினான். அவன் வேலை பார்க்கிற இடத்தில் கையூட்டு பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப் பட்டிருப்பதாக சொன்னான். பிறகு அவன் உறவினர் ஒருவர் அவரது நண்பர்கள் மூலமாக பெரிய போலிஸ் அதிகாரிகளை அணுகி இருப்பதாகவும், அரசியல்வாதிகள் மூலமாகவும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயன்று வருவதாகவும் சொன்னான்.

“ஏன் இப்படிச் செய்தாய்? நேர்மையாக இருந்து முன்னேற முயற்சிக்கக் கூடாதா?” என்று கேட்டபோது, “அட போடா… என்மேல் குற்றம் சாட்டுகிற நிறுவனம் மட்டும் மிக ஒழுங்கான நிறுவனமா? அதன் முதலாளிகள் அடிக்காத கொள்ளையா? அவர்களே திருடர்கள் – அவர்கள் என்னைக் குறை சொல்கிறார்கள்” என்று அலட்சியமாகச் சொன்னான்.

“உன் தந்தை என்ன நினைப்பார்? உன் உறவினர்களை ஊர்க்காரர்கள் என்ன நினைப்பார்கள்?” என்று கேட்டபோது, “எங்க அப்பாவே லஞ்சம் வாங்குவார். மற்றவர்கள் எல்லாம் என்ன ஒழுங்கு?” என்று கேட்டுவிட்டான்.

ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் வேறோரிடத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னான். பழைய பிரச்சனை என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு “நான் சொல்லவில்லை! அந்த நிறுவனமே ஒரு மோசடி நிறுவனம். அதனால் அவர்களே பயந்து என்மீது வழக்கு எதுவும் போடவில்லை,” என்று சிரித்தான்.

பொதுவாகவே ஊழலையும், நேர்மையின்மையையும், சுயநலத்தையும், சுரண்டலையும் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து நாட்டு அதிபர் வரை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். ஒருவன் செய்யும் குற்றத்தை இன்னொருவன் தட்டிக் கேட்கத் தகுதி இல்லாத அளவு, ஒட்டு மொத்த சமுதாயமும் நேர்மையற்றதாக மாறிக்கொண்டு இருக்கிறது.

சாதாரண கிரிக்கெட் விளையாட்டுக் குழுவில் ஆரம்பித்து, கல்வி, காவல், பாதுகாப்பு, நீதி என்று ஒரு துறை மிச்சம் இல்லாமல் ஊழல் விஸ்வரூபம் எடுத்து ஆடுகிறது. தேசிய அளவில் நேர்மையின்மை தலைவிரித்து ஆடுகிறது. ‘சுதந்திர’ நாடு என்று சொல்வது போய், வெறும் ‘தந்திர’ நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஃபோர்ப்ஸ் இதழில் ஊழலை அடிப்படையாக வைத்து உலக மேப் ஒன்று வெளியிட்டார்கள்.

இதில் பல்வேறு உண்மைகள் பதிந்து இருக்கின்றன. பல்லாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட பாரதம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஈடாக ஊழலில் மூழ்கி இருப்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

இதற்கெல்லாம் காரணம், தனி மனிதர்களின் பேராசை, ஒழுக்கமற்ற ஆட்சியாளர்கள், நெரிசல் மிகுந்த வாழ்க்கை முறை என்று பல காரணங்களைக் கூற முடியும். காரணம் எதுவானாலும் விளைவு பயங்கரமாகிக் கொண்டே போகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர் ஒருவர் கேட்டார், ஒரு அலுவலகத்துக்குச் சென்றால் க்யூவில் நிற்க ஏன் இப்படி முண்டி அடித்துக் கொள்கிறார்கள். குறுக்கு வழியில் லஞ்சம் கொடுக்கலாமா என்று ஏன் பொதுமக்களே முயன்றுவிட்டு, பின் லஞ்சம் வாங்கப்படுவதாகக் குறை சொல்கிறார்கள், இதே அளவு கூட்டம் இருந்தாலும் எங்கள் நாட்டில் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களே என்றார்.

இதற்கு பதில் சொன்ன நண்பர், உங்கள் நாட்டில் நூறு பேர் க்யூவில் நின்றால் நூறாவது ஆசாமிக்கு, தான் தேடிவந்தது நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். இங்கே முதல் பத்து ஆட்களுக்கு வேலை ஒழுங்காக நடந்து முடிவதே பெரும் பாடாக இருக்கிறது. அதனாலேயே முண்டி அடித்துக் குறுக்கு வழி தேடி மக்கள் அலைகிறார்கள். மக்கள் நெரிசலுக்கேற்ப வசதிகள் பெருகவில்லை என்றார். அதுவும் உண்மைதான். இப்போதெல்லாம் தபால் அனுப்பவும், தொலைபேசித் தொடர்பு வாங்கவும் லஞ்சம் யாராவது கொடுப்பார்களா? தேவையை நிறைவு செய்யுமளவு பொருள்கள் கிடைக்கும்போது ஊழல் குறைகிறது.

அதே நேரத்தில் ஊழலைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த எண்ணப் போக்கு சமூகத்தில் மாறவேண்டும். அதற்கு அரசு தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கிற தனிமனிதர்கள் செய்யும் ஊழலைக் கூட மன்னித்து விடலாம். சமூகத்தின் மேல் நிலையில் இருப்பவர்கள், ஆட்சியாளர்கள் ஊழலில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் குருஜி கோல்வல்கர்! அவரது கூற்றுப்படி, நன்னடத்தை என்பது சமூகத்தின் உச்சியிலிருந்து தொடங்க வேண்டும். அரசியலிலும் இன்ன பிற துறைகளிலும் உச்சாணிக் கிளையில் இருக்கிற மனிதர்கள் நேர்மை மிகுந்தவர்களாக, உதாரண மனிதர்களாக இருப்பது அவசியம்.

ஒவ்வொரு தனிமனிதனும், அந்தச் சமூகத்தின் உச்சியில் உதாரண மனிதர்களாக இருக்கக் கூடியவர்களை பார்த்துத் தன்னைச் சீர்படுத்திக் கொள்ள முயல வேண்டும். அதே நேரத்தில், சலுகைகளும், சுதந்திரங்களும் அடித்தளத்திலிருந்து துவங்கப்படவேண்டும். அடித்தட்டு மக்களுக்கு உணவளியுங்கள் – மேல்தட்டு மக்கள் ஒரு வேளை பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்கிறார்.

ஆனால் குற்றப் பின்னணி உள்ள மந்திரிகளும், தலைவர்களும் கோலோச்சும்போது நேர்மைக்கு அங்கே இடம் எது? கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் நாட்டை ஆளப் புகும்போது சட்டமே ஒதுங்கி நிற்க வேண்டி இருக்கிறது. ஊழலுக்கு எதிரான குரல் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். பொதுமக்களின் எண்ணப் போக்கை மாற்றும் முயற்சியில் படித்தவர்கள் தம் பங்கைச் செய்ய வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ‘எல்லோரும் தவறாமல் தமது ‘ஜனநாயகக் கடமை’யைச் செய்ய வேண்டும்’ என்று ஒரு பிரசாரம் செய்யப்படுகிறது. வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகக் கடமை என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப் படுகிறது. சரியான, ஒழுக்கமான, இந்துக்களை மதிக்கின்ற, பதவிக்காக வெளிநாட்டவரின்/குற்றவாளிகளின் பாதங்களில் படுத்துக் கிடக்காத, இந்திய கலாசாரத்தில் நம்பிக்கை கொண்ட, மக்களுக்குச் சேவை செய்வதில் அக்கறை கொண்ட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நம்மாலான அனைத்தையும் செய்வதே ‘ஜனநாயகக் கடமை’ என்ற சொற்றொடருக்குத் தகுதி உள்ளதாகும்.

குறைந்த பட்சம் தேர்தலில் ஊழல் மலிந்த அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. பொய் புரட்டுகளைத் தொகுத்து உண்மையைத் திரித்து கூறும் ஊடகங்களைக் கண்டித்து மறுப்பு எழுத வேண்டும். ஊழலும் நேர்மையின்மையும் ஒழிய அடித்தளத்திலிருந்தே முயற்சியைத் தொடங்குவோம். நேர்மையான அரசியல்வாதிகளுக்கும், தம் உயிரைப் பணயம் வைத்து நமக்காகப் போராடுகிற ராணுவ வீரர்களுக்கும், கடமையைச் சரிவரச் செய்ய முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் அதுவே ஊக்கமாக அமையும்.

13 Replies to “ஒழியுமா ஊழலுக்கு ஆதரவு?”

  1. சரியான நேரத்தில் வந்துள்ள அருமையான கட்டுரை. ஒவ்வொரு இந்தியனும் வாக்கு அளிக்கும் முன்னர் கொஞ்சம் சிந்தித்தாலே மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியும். ஊழல் குற்றம் என்ற நிலையிலிருந்து இனு அரசியல்வாதிகளின் உரிமை என்ற நிலையை எட்டியுள்ளது. அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி.

    நன்றி

  2. ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் இந்தியாவைக் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். விலைப்பணம் ஸ்விஸ் வங்கியில் போட்டுவிட வேண்டும். ராம் விலாஸ் பாஸ்வன் இந்தியாவில் ஊடுருவிய, ஊடுருவ ஆசைப்படும் அத்தனைபேருக்கும் இந்திய நாட்டுரிமை வழங்கப்போவதாக சொல்லியிருக்கிறார். இவர்கள் இந்தியாவை நடத்தினால் வேறு எப்படி இருக்கும்! மன்மோகன் சிங் போன்ற முதுகெலும்பில்லாத பிரதம மந்திரிகள் கோடி கோடிகளாய் ஊழல் பணத்தைக் கொட்டிக்கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள் என்றால் எதற்காக? ‍ இந்தியாவில் கங்கையில் குப்பை வாரவா என்ன, பணம் பண்ணத்தானே! ஊழலுக்காக பெயிலில் இருக்கும் லாலு பிரசாத் தான் இந்த அரசாங்கத்தின் முக்கிய வெற்றிகரமான மந்திரி. விஞ்ஞான ஊழல் கருணாநிதியின் கட்சிக்கார கூஜாதான் இன்றும் கின்னஸ் ரெகார்ட் பண்ணி அறுபது ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கும் சாம்பியன். இவர்களுக்கெல்லாம் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை!! சிபிஐ என்பது போபார்ஸ் ஊழல் செய்தவர்களை அப்பாவிகள் என்றும் தனக்கு வேண்டப்படாத அரசியல்வாதிகளை பிடித்து உள்ளே போடவும் தான் பயன்படுகிறது.

    முஸ்லிம்களும், மிஷனரி கிருத்துவர்களும் எப்படியாவது இந்தியாவை வீழ்த்தி விட வேண்டும் என்று கர்ணம் கட்டிக்கொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஐ.ஐ.டி. அல்லது ஐ.ஐ.எம்.மில் படிக்க முழுப்பணமும் அரசாங்கம் கொடுக்குமாம். பீஸ் எத்தனை தெரியுமா? 12 லட்ச ரூபாய். ஆனால், அதே ஒரு இந்து மாணவன், அவன் தாழ்த்தப்ப்ட்ட பழங்குடியாக இருந்தால் கூட ‍அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாயாம். இதெல்லாம் ஒரு விதத்தில் சட்டமாக்கப்பட்ட சுரண்டல், ஊழல்தான்.

    கருணாநிதி கொடுத்த ப்ரீ டிவியும், அரிசியும் ஒரு விதத்தில் ஊழல்தான். எத்தனை வேலை வாய்ப்பு கொடுத்தோம், எத்தனை கட்டமைப்பு செய்தோம், மக்களின் ஏழ்மை எத்தனை குறைந்தது என்றெல்லாம் தன் சாதனைகளைச் சொல்ல வக்கில்லாதவர்கள் இப்படி ஊழலாக ஆரம்பித்து விடுகிறார்கள். சோத்துக்கில்லாதவன் என்ன செய்வான்? டிவிக்காக ஓட்டுப் போடுகிறான். தேசம் குப்பையாய்ப் போகிறது!! அன்னிய மதங்களின் கூட்டுக் களவாணித்தனமும், அரசாங்க சட்டமுறைப்படுத்தப்பட்ட அநியாயச் சலுகைகளும், தேசத்துரோகிகளிடம் அரசாங்கம் போனதும் ஊழலுக்குக் காரணங்கள்.

    நல்ல கட்டுரை. நன்றி.

  3. நன்றாக எழுதப்பட்ட கட்டுரை. தமிழகத்தில், விஜய் டிவியின் “நடந்தது என்ன” மற்றும் “நீயா நானா” நிகழ்சிகள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதமே ஒரு மூட நம்பிக்கைகள் சார்ந்த மதம் என்ற மனப்பான்மையை ஏற்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    நீயா நானாவின் இயக்குனர் அந்தோனி நான்கு வாரம் சமூகப் பிரச்சனைகளை அலசிவிட்டு ஐந்தாவது வாரம் மந்த்ரம் உண்மையா, ஜோசியம் உண்மையா, பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சரியா என்று பட்டி மன்றம் வைப்பார். பிறகு ஜோஷியம், ஜாதகம், மந்த்ரம் இது எல்லாம் மூடநம்பிக்கை என்பது போல கொண்டுசென்று ஒரு (கிறிஸ்துவ) மனோதத்துவ மருத்துவரை கொண்டு நிருபணம் செய்வதாக உளறுவார்கள்

    இந்த பட்டி மன்றத்தில் விவாதத்தில் ஈடுபடும் பலர் அந்த நேரத்தில் சொல்லப்பட்ட கட்சிக்காக பேசுபவர்களே. இந்து மதத்தை பற்றிய ஆழ்ந்த விஷய ஞானம் இல்லாதவர்களே.

    விஜய் தொலைக்காட்சி (அந்தோனியும்) ஒரு முறையேனும் கிறிஸ்துவத்தையும், இஸ்லாமையும் சீன்டிபார்க்குமா?

    இப்படி பட்ட கேள்விகளை சிறுபான்மையினரையும் அவர்களின் நம்பிக்கைகளையும் பார்த்துக் கேட்குமா?

    நடந்தது என்ன நிகழ்ச்சியில் சிறு தெய்வ வழிபாடை குறைகூறுவது போல் இந்துமதத்தை பற்றி இந்துக்களே அதிரும் விதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்.

    இவர்களின் நரித்தனத்தை உணராமல் நம் மக்கள் வார இறுதியில் கோவிலுக்கு செல்லாமல் இந்த நிகழ்ச்சியினை பார்த்து மனம் குழம்புவார்கள்.

    இந்த நரித்தனத்தை கேட்க ஒரு இந்து அமைப்புக்கூட முன்வராதது வருத்தத்தை அளிக்கிறது.

  4. முன் குறிப்பு: நான் எப்போதும் ஊழலோ, சார்புத்தன்மையோ, லாபத்துக்காக எதையுமோ செய்தது இல்லை.

    திரு. ஸ்ரீகாந்தின் கட்டுரை சிறப்பாக இருந்தது. ஆனால் நாம் சில உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டின் தந்தை காந்தியோ, நேருவோ, வாஜ்பாயியோ அல்ல. நம் நாட்டின் தந்தை ஊழல்தான். ஊழல்தான் நம் நாட்டை வழிநடத்திச் செல்கிறது. ஊழல் இல்லையென்றால் நம் நாட்டில் எதுவுமே நடக்காது.

    ஒரு உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்: ஒரு முறை உடைந்த காஸ் சிலிண்டர் எங்கள் வீட்டுக்கு சப்ளை செய்யப் பட்டது. அதில் அடிப்பக்கம் விரிசல் இருப்பதைக் கண்டுபிடித்த நான், மணலி இண்டேன் ஆபீஸுக்குப் போன் செய்து காஸ் லீக் ஆகும் அபாயத்தைச் சொன்னேன். அதற்கு இண்டேன் சொன்ன பதில் இதுதான் : ‘அப்படியே வைத்து இருங்கள். அடுத்த வாரம் சப்ளைக்கு வரும்போது வேறு வாங்கிக் கொள்ளுஙகள்; பொதுவாக நாங்கள் 3 வாரம் கழித்துப் புது ஆர்டர் வந்தால்தான் சப்ளை செய்வோம். 163க்கு மேல‌ நாப்பதோ ஐம்பதோ மேலே கொடுத்து அனுப்புங்கள். . அடுத்து தீயணைப்பு ஆபீஸுக்கு போன். ‘அதுக்கு நாங்க இன்னா செய்றது? அய்ய.. தீ புச்சா சொல்லு.. மின்னாடியே கூவற?’. அடுத்து எண் 100க்கும் , 103க்கும் போன் செய்தேன். போலீஸார் யாரும் போனை எடுக்கவில்லை. அதற்குள் மேலும் வேகமாக காஸ் லீக் ஆக விரிசலைச் சுற்றி இரண்டு அங்குலத்திற்க்கு வெண்மையாக பணி ரசாயனம் படிந்தது. ஒரு சணல் கோணிப்பையையும், ஜமுக்காளத்தையும் நீரில் முக்கி, சிலிண்டரை சுற்றி கால் மைல் நடந்து சென்று கழனியில் போட்டுவிட்டு வந்தேன். அடுத்தநாள் நான் ஒரு வக்கீல் என்று சொல்லி மிரட்டியவுடன் உடனடியாக சிலிண்டர் வந்து சேர்ந்தது. லஞ்சமாக 40ரூ கொடுத்து ‘இலவச’மாகவே பெற்றுக்கொண்டேன். இது நடந்தது 1999ல்.

    இப்போது 2009. எதுவும் மாறவில்லை. நேற்று இந்தியாவில், காதலிகளை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து இன்டெர்னெட்டில் போடுபவர்கள் பற்றி விசாரணைக்கு https://www.cybercellmumbai.com/ ல் உள்ள ஐ.டி officer@cybercellmumbai.சொம் க்கு மெயில் செய்தேன். அப்புற‌ம்தான் தெரிந்த‌து அப்ப‌டி எதுவும் ஈமெயில் முக‌வ‌ரியே இல்லை என்று. ‘அப்றம் சிலிண்டர் காணாம்ணா நீதான் பொறுப்பு.. வித்துட்டன்னு கேஸாயிரும்..ஆமா’ என்று இண்டேன் ஆப‌ரேட்டர் அன்று சொன்னதால் விடியும் வரை சிலின்டரை தூரத்தில் இருந்து காவல் காத்திருந்தேன். 2009 ஆகிவிட்ட‌து. இன்றும் விடிய‌வில்லை. ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும், ரவுடிக‌ளுக்கும்தான் அர‌சு, போலிஸ் எல்லாம். ந‌ம‌க்கு போளிஸ் ம‌ட்டும்தான்.

    ஊழ‌ல், ல‌ஞ்சம், அசட்டை இதெல்லாம் ந‌ம் நாட்டின் ப‌ண்பாடு. இதை உடைக்க எந்த சக்தியாலும் முடியாது.

  5. //சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கிற தனிமனிதர்கள் செய்யும் ஊழலைக் கூட மன்னித்து விடலாம். சமூகத்தின் மேல் நிலையில் இருப்பவர்கள், ஆட்சியாளர்கள் ஊழலில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் குருஜி கோல்வல்கர்! //

    குருஜி கோல்வல்கரின் கூற்றுப்படி நடந்து காட்டி குஜராத் மாநிலத்தில் பெருமளவு ஊழலைக் குறைத்துள்ளார் முதல்வர் நரேந்த்ர மோடி. {கார்கில் ஜே கவனிக்க[(:-)))}. மோடியைப் போல் பல முதல்வர்களை நாம் தான் உருவாக்க வேண்டும், பதவியில் அமர்த்த வேண்டும். அவ்வாறு செய்தால் நம் காலத்தில் இல்லாவிட்டாலும் நம் அடுத்த தலைமுறையினர் காலத்திலாவது ஊழல் குறைந்துவிடும்.

    வெங்கடராமன்!

    விஜய் டி வி யின் “நடந்தது என்ன” மற்றும் “நீயா நானா” போலவே சன் டி வி யின் சன் நியூஸ் சானலில் “நிஜம்” என்றொரு நிகழ்ச்சியிலும் இதே மாதிரி ஹிந்து கலாசாரத்தைக் கன்னா பின்னாவென்று காண்பிக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் எந்த ஹிந்து இயக்கங்களும் அவற்றைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

    ஸ்ரீகாந்த்! நல்ல கட்டுரை அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  6. I mean, what I missed to say was ‘Even cybercrime department which operates only on internet related stuff has no email id to contact thru internet’. Sorry for missin it.

  7. மிக நல்ல கட்டுரை. சரியான சமயத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள்.
    ஒரு சமயம் ராஜாஜி பேசும்பொழுது சொன்னார்: “ஏன் எல்லோரும் திருட்டுத்தொழிலில் ஈடுபடவில்லை? பயம்! ஏன் எல்லோரும் பொய் சொல்லுவதில்லை? பயம்! ஏன் கடைக்காரர்கள் எடை குறைத்து விற்பதில்லை? பயம்!” என்று அடுக்கிக்கொண்டே போய், “ஏன் கையில் வெறும் லாடியைமட்டும் வைத்துக்கொண்டு வரும் போலீஸ்காரனைக் கண்டு கையில் துப்பாக்கி வைத்திருப்பவன் ஓடுகிறான்? பயம்!” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்பொழுது இந்த்டப் பயம் இல்லை. தருமத்துக்குப் பயம் இல்லை. சட்டத்துக்குப் பயம் இல்லை.
    அதனால் தான் கையூட்டும் லஞ்சமும் தலைவிரித்துப் பேயாட்டம் ஆடுகிறது.
    தருமத்தின் வாழ்வதனை சூது கவ்விக்கொண்டிருக்கிறது. ஆனால் தருமம் வெல்லும் என்று நம்பிக்கையுடன் செயல்படுவோமாக!
    முகில்வண்ணன்

  8. கீதையில் பகவான் சொல்வது தான் தீர்வு : முடிவைப் பற்றி கவலைப் படாதே! கட‌‌மையை செய் ! பலனைத் தரும் பொறுப்பை என்னிடம் விட்டு விடு !
    முடிவைப் பற்றிய கவலை தான் பல தவறுகளுக்கும் காரணம்! தேர்தல் முடிவு பற்றிய கவலையால் கள்ள ஓட்டு: இன்டெர்வியு முடிவு பற்றிய கவலை, வேலை நமக்கு கிடைக்காதோ என்பதால் லஞ்சம் : தேர்வு முடிவு பற்றிய பயம் காப்பி அடித்தல் : டெண்டர் முடிவு பற்றிய கவலை அரசியல் வியாதிக்கு லஞ்சம்: இப்படி பல்வேறு தவறுகளுக்கும் காரணம் நாட்டில் social values பற்றிய சிந்தனை குறைவுதான் காரணம்.

    ஒரு காலத்தில் நேர்மை என்பது லஞ்சம் வாங்காததுதான்! இன்றோ, அவர் மிகவும்(!) நேர்மையானவர்; காசை வாங்கி விட்டால் வேலையை சரியாக செய்து தந்து விடுவார். ஆக, காசை வாங்கி விட்டு ஏமாற்றுவது என்ற நிலையும் வந்து விட்டது.

  9. Nice and brainstorming Article. Actually this degradation of the values starts at the bottom of the hierarchy (i.e) the people. They want their needs to be satisfied at any cost. If someone helps, they support and vote them. People at the top saw this and they also start doing the illegal activities as the people loses their moral rights to question them. If we want to change the scenario, we shd start at the bottom. it’s very difficult now to be ethical(!) when we r dealing with govt offices, but we shd strive to accomplish this. Let we change ourselves, soon the nation will change.

  10. நம் நாட்டில் லஞ்சம் ஒழிய வெண்டுமென்றால் பெரும்பாலான இந்தியர்களே சமுத்திரத்தில் போய் குதிக்க வெண்டும். இதில் பெரும்பங்கு அரசியல்வாதிகளுக்குத் தான். அதே சமயம், தற்போது உள்ள நிலவரத்தில் எந்த ஒரு தனி மனிதனும் யாரையும் எதிர்த்துப் போராடும் நிலையில் இல்லை. தெருவோரம் போகும் ஒரு விடலைப் பையனை ஒரு சில வினாடிகள் பார்த்தாலே, அவன் ‘ஏய், ன்னா?’ எனுமளவிற்கு ரவுடியிஸம். நம் பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணம் நம்மிடையே ஒற்றுமை இல்லாமை. இதுவே பல நூற்றாண்டுகளாக நம்மை வாட்டி வருகிறது. நம் மக்களிடையே ஒரு நல்ல ஆட்டிட்யூட் இல்லை. நம்மிடையே குறை இருக்கும் போது நாம் அரசியல்வாதிகளையும், மதமாற்றிகளையும் குறை சொல்லி என்ன பிரயோஜனம்? சுவாமி விவேகாநன்ந்தர் அளசிங்கப் பெருமாள் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘வியாதி வந்தால், வியாதியே, மரியாதையாகப் போய்விடு, ஆமாம்’ எனக் கூவுவதில் பயனில்லை. உனக்கு வேண்டியது பலம், வியாதியை விரட்டும் பலம். பாதிரி மார்கள் குரைத்தால் நீ ஏன் நடுங்குகிறாய்? உன் பலத்தினைக் கொண்டு எதிர், பலத்தைப் பெருக்கு’ என்று. எத்தனை ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து சமூக நல வழக்குத் தொடருவார்கல் விஜய் டீவியை எதிர்த்து? சொல்லுங்கள்?

  11. பேயரசு செய்தால் பிணம் தினனும் சாத்திரஙகள் என்றார் பாரதியார்.அதுதான் இப்பொழுது எல்லா இடத்திலும் நடக்கிறது. நானும் எனது நண்பரும் போக்குவரத்து அலுவலகத்துக்கு பழகுநர் உரிமம் பெற விண்ணப்பித்துக் காத்திருந்தோம். எங்களைக் கண்ட இடைத்தரகர் ஒருவர் வெகுநேரமாகக் காத்திருக்கிறீர்கள் அந்த அம்மாவிடம்(அலுவலக ஊழியர்) 50 ரூபாய் வெட்டுங்க. உடனே வரும் என்று சொன்னார்.ஆனால் நாங்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருந்து வாங்கிச் சென்றோம். லஞ்சம் ஊழல் என்று புலம்புகிறோம், காசு கொடுத்துவிட்டால் எல்லாம் நடக்கும் என்கிற மனப்பான்மையும் தவறே. நல்ல வேளையாக எங்கள் அலுவலகத்தில்99.99% ஊழல் இல்லையென்று உறுதியாகக் சொல்ல முடிகிறது. அந்த .01% என்ன என்கிறீர்களா? ஒருசில கடை நிலை ஊழியருக்கு வருகிற சிலர் காப்பி வாங்கிதருவதுதான்.

  12. Corruption, by virtue of its nationwide presence, qualifies to be the best factor for national integration! We do not know how we won freddom from colonial rulers. Our youths do not prefer studying history or language at school/college. In fact, there are no takers for these subjects. The intelligentsia of the land is extremely indifferent and selfish. Most of them don’t think there is anything wrong at all in bribing and the rest do not beleive that things should or can change!
    Fear is the only principal emotion that steers our life. You raise your voice against corruption in RTO office or any Govt. department. You will be all alone like Abhimanyu in Mahabaharath. People around you will look the other way and may even think you are mad.
    As long as somebody else tries to bell the cat, it is fine with them.
    Even today, in some villages postman takes a hefty commission for delivering old age pension from senior citizens. The BSNL lineman after attending to a fault, lingers for minimum 50Rs. for ‘tea expenses’. commercial establishments have to pay a larger amount to BSNL & TNEB staff. We want everything the easy way

  13. நரிகளை பற்றியே என் சிந்தித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
    உங்களுக்கு வேறு வேலை இல்லையா?
    நரிகளின் தந்திரம் காட்டில்தான் செல்லுபடியாகும்
    நாட்டில் செல்லுபடியாகாது
    நாட்டில் நரிகள் வந்ததற்கு காரணம்
    நாடு காடாக மாறி நாட்டிலுள்ள மக்கள் விலங்குகளாக மாறியதே
    நோய்க்கு மருந்திடாமல் நோய்களையே எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பது
    என்றும் நோயை தீர்க்கபோவதில்லை

    வெளியே இருக்கும் பகைவர்களை பற்றியே சிந்தித்து
    உங்கள் வாழ்நாளை வீணடிக்காதீர்கள்
    உங்கள் உள்ளே இருந்துகொண்டு உங்களை
    அழித்துகொண்டிருக்கும் ஆறு பகைவர்களை
    முதலில் அழியுங்கள். பிறகு உங்களுக்கு
    வெளியிலும் பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *