உதம் சிங்கின் சபதம்

1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. தற்காப்பு ஏதுமின்றி அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் ஓ டயர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்றனர். 90 துப்பாக்கி வீரர்கள் கொண்ட படையும், ஒரு பீரங்கி வண்டியும் இதில் பயன்படுத்தப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் எந்த முன்னறிவிப்புமின்றிச் சுட்டுக் கொல்லப்படனர் என்பது நிதரிசனம்.

உதம் சிங்கின் சபதம்

இப்படுகொலையைக் கண்டு மனம் கொதித்த உதம் சிங், அமிர்த சரஸில் நீராடி, ஹரிமந்திர் சாகிப்பில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரைக் கொல்லுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார். 1899ல் பிறந்த உதம் சிங் ஆசாத் இளவயதிலேயே தம் பெற்றோரை இழந்தவர். சீக்கிய தர்ம கால்ஸா அனாதை இல்லத்தில் தன் சகோதரருடன் வளர்ந்தவர். 1917ல் அவரது சகோதரர் சாது சிங் மரணமடைந்தார். 1918ல் அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். பலமுறை ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே இந்திய தேசிய நடவடிக்கைகளில் தீவிரப் பங்கு பெற்றார் உதம்சிங். 1910களில் எவ்வாறு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இங்கிலாந்தில் இந்தியா ஹவுஸ் மூலம் இளைஞர்களை ஆயுதமேங்கிய புரட்சிக்குத் தயார் செய்து வந்தாரோ அதேபோல லாலா ஹர்தயாள் எனும் சிந்தனையாளர் அமெரிக்காவில் பாரத தேசியவாத இளைஞர்களை அரசியல் சித்தாந்தங்களில் பயிற்றுவித்து புரட்சியாளர்களாக்கிடச் செயல்பட்டு வந்தார்.

ஆரிய சமாஜம், சீக்கிய தருமம், மார்க்ஸியம் ஆகியவற்றால் லாலா ஹர்தயாளின் அரசியல் சித்தாந்தம் உருவாக்கப் பட்டிருந்தது. குருகோவிந்த சிங் பெயரில் மாணவர் உதவி நிதி நிறுவி அவர் தேசபக்தி கொண்ட பாரத இளைஞர்களுக்கு உதவி செய்து வந்தார். இவரது கதர் (புரட்சி) எனும் இயக்கத்துடன் உத்தம் சிங் இணைந்தார். 1927ல் பகத்சிங்கிற்காகத் துப்பாக்கிகளையும் தளவாடங்களையும் பாரதத்துக்குள் கடத்தி வந்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் தாம் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை கொலை செய்யப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்த காலத்தில் (1931) பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1931ல் உதம் சிங் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் போலிஸ் கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்காகத் தமது பெயரை முகமது சிங் என மாற்றிக்கொண்டார். மிகத் தெளிவான திட்டத்துடன் அவர் வேலை செய்தார். அவரது உடனடி நோக்கம் இங்கிலாந்து செல்வதாக இருந்தது. அங்கே அவரது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்தது. பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார். எண் 9, அட்லர் தெரு, கமர்ஷியல் ரோடு, அவரது முகவரியாயிற்று. அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல் டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டயரைக் கொல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.

“அதற்கு வாய்ப்பில்லை சர். டயர்”

1940 மார்ச் 13 – ஏறக்குறைய இருபது ஆண்டுகள் – சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் டயர். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கி. பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டயர் குறிப்பிட்டான். இத்தருணத்தில் கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் எழுந்தார். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர். மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட மைக்கேல் டயர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது.

சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங். காவல் நிலைய விசாரணையில் உதம் சிங் தமது பெயராக “ராம் முகமது சிங் ஆஸாத்” என கூறினார். குறுகிய மதவாதம் நாட்டை உலுக்கியபடி இருந்த காலகட்டத்தில் அவரது இந்த பெயரே குறுகிய எல்லைகளைக் கடந்த பாரதிய தேசியம் எழும்புவதைக் கட்டியம் கூறுவதாக அமைந்தது.

உதம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள். பண்டித நேரு, மகாத்மா காந்தி ஆகிய இருவருமே இச்செயலினால் தமது இயக்கம் பிரிட்டிஷ் அரசிடம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் பொதுக்கூட்டங்களில் மக்களிடையே உதம் சிங்கின் செயல் பெருமதிப்போடு பேசப்பட்டது. “தேசத்தின் மீதிருந்த களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது” என்பதே மக்கள் மனதின் கீதமாக இருந்தது. பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் உத்தம்சிங்கின் தீரச்செயலைப் பாராட்டின. 1940ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு தினத்தன்று உதம் சிங் ஜிந்தாபாத் எனும் கோஷம் எழுப்பப்பட்டது. அதே நேரம் பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் பிதாமகர்களால் ஓரங்கட்டப்பட்டு அதனை விட்டு விலகிச் சென்று பாரத விடுதலைக்குப் போராடத் தீர்மானித்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உதம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.

“நான் மரணத்துக்கு அஞ்சவில்லை”

பிரிட்டிஷாருக்குத் தமது கோட்டையிலேயே தமது சாம்ராஜ்யத்தின் வலிமை வாய்ந்த தளபதியை ஓர் இந்தியன் கொன்றான் என்பது அவமானகரமாக இருந்தது. “உதம் சிங் மனநிலை பிறழ்ந்தவர்” என ஒரு பிரச்சாரத்தை அவர்கள் தொடங்கினார்கள். இந்நிலையில் பஞ்சாப் பிரமுகர்கள் பலர் உதம் சிங்கை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என வக்கீல்களைத் தேடி அலைந்து இறுதியில் கிருஷ்ண மேனனை வக்கீலாக அமர்த்தினர். கிருஷ்ண மேனன் உதம் சிங்கைத் தான் பைத்தியம் என ஒப்புக்கொள்ளும்படியும் அப்படிச் சொன்னால் தப்பித்துவிடலாம் என்றும் கூறினார். உதம் சிங் வேதனையுடன் அதனை மறுத்துவிட்டார். நீதிமன்ற விசாரணையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கோர்ட்டுக்குத் தம்மை விசாரிக்க உரிமையோ தகுதியோ இல்லை என்று கூறியதுடன் பிரிட்டிஷ் நீதிபதியையும் அங்கிருந்த இதர பிரிட்டிஷாரையும் நோக்கி கூறினார்:

“நான் மரணத்துக்கு அஞ்சவில்லை. நான் உயிர் துறப்பதில் பெருமைப்படுகிறேன். என் தாய் நாட்டை விடுவிக்க உயிர்துறப்பதில் பெருமை அடைகிறேன். நான் போனபிறகு என்னுடைய இடத்தில் என் தேச மக்கள் வருவார்கள். வந்து அசிங்கம் பிடித்த நாய்களான உங்களை விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவுக்கு வருவீர்கள், பிறகு பிரிட்டனுக்குத் திரும்பிப் பிரபு ஆவீர்கள், பாராளுமன்றத்துக்குப் போவீர்கள். நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் எங்களைத் தூக்கில் போடுவீர்கள். ஆனால் நீங்கள் பாரதத்திலிருந்து வேரும் வேரடி மண்ணுமின்றிக் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுக்கு நூறாகச் சிதறும். பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும் மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”

இத்தகைய உணர்ச்சி மயமான உரையின்மூலம் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர், பார்வையாளர்களுக்கு அவர் ஒரு பைத்தியம் என்கிற பிரிட்டிஷ் பிரச்சாரம் எத்தனை பொய் என்பதையும் தான் ஒரு தேசபக்தர் என்பதையும் புரிய வைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவரை நீதிமன்றத்திலிருந்து காவலாளர்கள் இழுத்துச் செனறனர். இறுதியாக அவர் “பாரத மாதா கீ ஜே!” என முழக்கமிட்டபடி இழுத்துச் செல்லப்பட்டார். நீதிபதி அட்கின்ஸன் அங்கிருந்த பத்திரிகையாளர்களையும் பார்வையாளர்களையும் அங்கு நிகழ்ந்தவற்றை வெளியே சொல்லக்கூடாதென உத்தரவிட்டார். ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார். “தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

1962ல் நேரு உதம் சிங்கை தேசபக்தர் என அறிவித்தார். 1974ல் உதம் சிங்கின் உடல் பாரதம் கொண்டு வரப்பட்டு அவரது மாநிலமான பஞ்சாபில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

14 Replies to “உதம் சிங்கின் சபதம்”

  1. Revolutionaries like Udham Singh, Azad (I mean Chandrashekhar Azad and not Ghulam Nabi or Abul Kalam!), Madhanlal Dhingra, Khudhiram Bose have all been forgotten by this ungrateful nation.How many among the younger generation know anything at all about these great heroes who made the supreme sacrifice just to see the country attain independence.
    Other than the perfunctory and occasional two-line reference to them in our textbooks written by JNU-trained Leftist academicians, their names or deeds hardly mean anything to our youth. Nobody gives a damn about history,which is taught and studied in a listless manner.

    The freedom movement was hijacked by Gandhi-Nehru combine which was steeped in the liberalism given by their western education and thought. In a cold and calcualted manner they obfuscated the role of the revolutionaries and worse, projected them as bunch of misguided extremist sworn to violence! Consequently, our children are taught in their schools that freedom was won by Mahatma’s non-violent approach (‘Katthi indri, rattham indri vandha yudhham’)
    It all boils down to one thing only. History should be re-written by people who are familiar with the land, its people and their ethos, not by people who have been taught and paid to propagate hatred towards anything Indian.

  2. உதம் சிங் போன்ற பல வீரர்களைப்பற்றி நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்தியையும் நேருவையும் விட்டால் வேறு யாரும் நம் சுதந்திரத்திற்குப் பாடுபடவில்லையோ என்று குழந்தைகள் நினைக்கும் அளவிற்கு பாடத் திட்டங்கள் பள்ளிகளில் இருக்கின்றன. பகத் சிங்கை பயங்கரவாதி என்று சித்தரித்த என் சி இ ஆர் டி (NCERT) -யை என்னவென்று சொல்ல? நேதாஜியை மறந்தவர்கள், பகத் சிங்கை கேவலப் படுத்தியவர்கள், உதம் சிங் போன்றவர்களை நம் அடுத்தத் தலைமுறைக்குக் காட்டுவார்களா? ……

    நல்ல கட்டுரை வெற்றிச்செல்வன். மிக்க நன்றி.

    அன்புடன்

    ப.இரா.ஹரன்

  3. உதம் சிங் செய்ததைக் கண்டித்து அறிக்கை விட்டதாம் காங்கிரஸ். ஆனால், அவர் தூக்கில் போடப்பட்டபின் அவரை தேசபக்தர் என்று புகழ்ந்து அறிக்கை விட்டாராம் நேரு! காங்கிரஸையும், நேருவையும் சரியாகப் புரிந்துகொள்ள இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும்!

  4. சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் என்கிற புத்தகத்தில் முன்னர் நான் உதம்சிங்கின் வழக்கைப் படித்ததுண்டு. ஆனாலிவை போன்ற சரித்திரச் சம்பவங்கள் மறைக்கப் பட்டுவிடுகின்றன.கம்யூனிச சித்தாந்திகளும், காங்கிரஸ் போலிகளும் அறைகுறை அறிவு ஜீவிகளும் பாடத்திட்டத்தை தீர்மானிக்கிறார்கள். பொயகளே சரித்திரம் ஆகிவிடுகின்றன. வலைத்தளத்திற்கும் அப்பால் இவ்வுண்மைகள் செல்லவேண்டும்.

  5. Very good article. We do not deserve the sacrifices of Bhagat or Uttam. This country is completely divorced from its past. We will not see Utam in any of the History books of Independent India. The irony is we will have lessons about queen victoria and not about Uttam.

    Regards
    S baskar

  6. நான் வலைபதிவில் உள்ள எல்லா கட்டுரைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இப்பொழுதுதான் படித்துகொண்டு வருகின்றேன். சுதந்திரத்திற்காக தன இன்னுயிரைத் தந்த மஹா உத்தமர்கள் பல பேரை அறிய தங்கள் தளம் ஒரு அறிய வாய்ப்பை தந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள்
    என்று ஒரு தனி புத்தகம் வெளியிட முயற்சி செய்யலாம். மேலும் அவர்கள் பிறந்த தினம் மற்றும் உதிர்த்த தினம் கொண்ட ஹிந்து நாள் கட்டி ஒன்றும் இணைய தளத்தில் வெளியிடலாம்
    கட்டுரைகள் தந்த பல பெரியவர்க்கும் எனது நன்றி.

  7. என் வயது 60. உதம்சிங்கின் வீர வரலாற்றை இது வரையில் நான் கேள்விபட்டதே இல்லை. வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். ஜாலியன்வாலா படுகொலைக்குக் காரணமான டயர் பழி வாங்கப்பட்டார் என்ற செய்தியாவது பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்காக இளைஞர்கள் எப்படி எல்லாம் பாடுபட்டார்கள் என்பது நமது இளைஞர்களுக்குப் பாடமாகப் புகட்டப்பட வேண்டும். திரைப்படமாக வெளி வரவேண்டும். அப்போது தன இளைஞர்கள் தடம் புரண்டு போக மாட்டார்கள். தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி.

  8. வணக்கதிற்குரிய (சுதந்திர) தெய்வங்கள்!
    – கே.என்.வடிவேல் இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது. கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் …suthakarnatarajan@yahoo.com

  9. 1947 இல் வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெற்றசுதந்திரம் இந்திய முதலாளிகளின் கைகளில் சென்று விட்டாலும் அந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல சுதந்திரபோராட்ட வீரர்கள்தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து தாய்நாட்டின் அடிமை தலையை அறுத்தெறிய களம் இறங்கினர். இந்தியாவின்வடக்கே பகத்சிங் , ராஜகுரு,சுகதேவ் ,சந்தரசேகர் ஆசாத் போன்ற ஈடு இணையற்ற சுதந்திர போராட்டவீரர்களை போலவே தெற்கில் பாரதியார், வ.உ.சிதம்பரனார்,வா.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் சமகாலத்தில் வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.

  10. தியாகி உதம் சிங்கின் நினைவைப்போற்றுவோம். மத்திய அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் மனு செய்து , உதம் சிங்கின் வாழ்க்கை வரலாறு இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு கற்பிக்கப்படவேண்டும். இறைஅருள் கை கூட்டட்டும்.

  11. This informed is very very thanks. I am searching for general dyer photo and he is murden details.
    utham sing details very very thanks.I am very happy.

  12. நான் பள்ளி ஆசிரியர், என் மாணவர்களிடம் இந்த மாவீரனை எடுத்து செல்வேன், பாரத அன்னை வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *