ஓடிப் போனானா பாரதி? – 05

தயிர் கடைபவன் கையைப் போல்…

bharati1இந்தத் தொடரின் மூன்றாம் பகுதியில் நாம் ‘இந்தியா’ பத்திரிகையின் பதிவுபெற்ற உரிமையாளரையும் ஆசிரியரையும் பற்றிய ஒரு விவரக் கோவையைக் கொடுத்திருந்தோம். பத்திரிகையைத் தொடங்கிய முதல் ஒரு வருடத்திற்கு (மே 1906-மே 1907) எஸ் என் திருமலாசாரியாரே உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பதிவு செய்துகொண்டுள்ளார். பத்திரிகை தொடங்கப்பட்ட முதல் ஒரு மாதத்துக்குப் பிறகே பாரதி அதில் எழுத ஆரம்பிக்கிறான். முதல் வருட முடிவில் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மாறுகிறார். 1907 மே மாதம் 31ஆம் தேதியன்று மு. சீனிவாசன் எனப்படும் முரப்பாக்கம் சீனிவாசன் பத்திரிகை உரிமையாளராகப் பதிவு செய்யப்படுகிறார். சி. சுப்பிரமணிய பாரதி ஆசிரியராகப் பதிவு செய்யப்படுகிறார்.

‘இந்தியா’ பத்திரிகைக்கு பாரதியே ஆசிரியர் என்று ‘பாரதி தரிசனம்’ பதிப்பித்த இளசை மணியன் முதல், பெ சு மணி வரையிலான பலர் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். சொல்லப் போனால் பாரதி வாழ்ந்த காலத்திலேயே, அப்போதைய காவல் துறையே அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தது. ‘Meetings have been held on the Tuticorin beach every evening during the week. The meeting on 8th was presided over by C. S. Bharati, Editor of India, published at Madras…’ என்றுதான் 8.2.1908 தேதியிட்ட சி ஐ டி டைரிக் குறிப்பு சொல்கிறது. (Police Abstract, Vol. XXI, page 113) முரப்பாக்கம் சீனிவாசனுடைய வாக்கு மூலமும் ‘பாரதியே உண்மையான ஆசிரியர்,’ என்று சொல்கிறது. ஆனால் இவையெல்லாம், ‘பத்திரிகை ஆசிரியர்’ என்ற செயல்பாட்டைக் குறிப்பவையே அன்றி, ‘பத்திரிகை ஆசிரியர்’ என்ற பதவியை அல்ல. In other words, Bharati was an Editor by function and NOT and Editor by Designation.

இதில் என்ன வேடிக்கை என்றால், பத்திரிகையின் ஆசிரியர் யார், உரிமையாளர் யார் என்ற விவரங்கள் பத்திரிகையில் அச்சடித்து வெளியிடப்பட வேண்டும் என்ற சட்டம் 1867லேயே அமலுக்கு வந்துவிட்டது. சொல்லப் போனால், இந்தச் சட்டம் அதற்கு முன்னால் 1835ல் ஒரு முறை வந்து, பின்னால் திரும்பப் பெறப்பட்டு, மறுபடியும் 1867ல் கொண்டுவரப்பட்டது. ‘இந்தியா’ பத்திரிகையில் இந்த விவரங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இவ்வளவு இருந்தும் காவல் துறையினர் பாரதியே அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியில் இருப்பவர் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.

1907 மே மாதம் 31ஆம் நாள் பாரதி ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராகவும், சீனிவாசன் உரிமையாளராகவும் பதிவு பெறுகின்றனர். இந்த மாற்றம் நடந்த நான்காம் நாள் (அதாவது 3.6.1907) அன்று இந்திய அரசாங்கம், பத்திரிகைகளில் ‘ராஜத் துரோகமாக’ எழுதப்படும் கட்டுரைகள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரமளித்தது. இது ஒரு தற்செயலான நிகழ்வு. அதாவது, பாரதி இந்தியா பத்திரிகையின் ஆசிரியராகப் பதிவு பெற்றதற்கும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதற்கும் தொடர்பு எதுவும் இருந்திருக்க முடியாது என்ற பொருளில் சொல்கிறேன். இந்தத் தீர்மானம் கொடுத்த அதிகார விரிவினால் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் பத்திரிகைகள் மீது போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதாவது, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அதிகரித்த கால கட்டம் ஜூலை மாதம் 1907.

நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், எம் பி திருமலாசாரியாரே மறுபடியும் உரிமையாளராகவும், ஆசிரியராகவும் தன்னைப் பதிவு செய்துகொள்கிறார். (ஆகஸ்ட் 1907) பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை. நவம்பர் 1907ல் (அதாவது சுமார் மூன்று மாதங்கள் கழித்து) பத்திரிகை மறுபடியும் மு. சீனிவாசனையே பதிவு செய்யப்பட்ட உரிமையாளராகவும், ஆசிரியராகவும் கொண்டு வெளிவருகிறது.

யார் இந்த சீனிவாசன்? பெ சு மணி சொல்கிறார். “எம். சீனிவாச ஐயங்கார் 1904ல் மெட்ரிகுலேஷன் தேர்வு பெற்றார். ரயில்வே ஆடிட்டர் அலுவலகத்தில் மாதம் ரூ.15 சம்பளத்தில் வேலை பார்த்தார். இந்த வேலையை விட்டு விட்டு, மண்டயம் குடும்பத்தினரால் நடத்தப் பெற்று வந்த ‘இந்தியா’ பிரின்டிங் ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தில் மாதம் ரூ.20 சம்பளத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். பிறகு, ‘இந்தியா’வின் ஆசிரியராகப் பெயரளவில் நியமிக்கப்பட்டார்.” (பத்திரிகையாளர் பாரதியார் – பெ சு மணி)

தமிழ்நாட்டில் இந்தக் காலகட்டம் அரசியல் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவிலும். பாரதியின் அரசியல் குருவான திலகர் கைது செய்யப்பட்டதும், அவர் மீது வழக்கு நடந்ததும், அவர் நாடு கடத்தப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான். இந்தக் கால கட்டத்தில்தான் (30 ஏப்ரல் 1908) வங்காளத்தில் கிங்ஸ்போர்டு என்ற ஆங்கிலேயே அதிகாரியின் நடவடிக்கைகளால் கொந்தளித்துப் போயிருந்த சில இளைஞர்கள் அவனைக் குண்டு வீசிக் கொல்ல முயன்றார்கள். கிங்ஸ்போர்டும் அவனுடைய மனைவியும் சென்று கொண்டிருந்த கோச்சின் மீது அவர்கள் வீசிய குண்டு, அந்த வண்டிக்கு முன்னால் கிளம்பிய, திருமதி கென்னடி என்ற ஐரோப்பியப் பெண்மணியும் அவரது மகளும் வீற்றிருந்த வண்டியின் மீது தவறுதலாக விழுந்துவிட்டது. கிங்ஸ்போர்டுக்குப் பதிலாக இந்த இரண்டு பெண்மணிகளும் மாண்டார்கள். இந்தப் பயங்கரவாத நிகழ்ச்சியை நடத்திய பிரபுல்லா சக்கி, குதிராம் போஸ் ஆகியோர் அடங்கிய குழுவுக்குத் தலைமை ஏற்றிருந்தவர் பீரேந்திர குமார் கோஷ். (பாண்டிச்சேரி ஆரோவில்) அரவிந்தருக்கு சகோதரர் முறை. (‘நான் ஸுரேந்திர நாத் கோஷ், பீரேந்திர நாத் கோஷ், சிசிர்குமார் கோஷ் என்ற மூவரும் என் மனைவியின் தூர பந்துக்கள் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் பிடிப்பதற்கு முன் நான் அவர்களைப் பார்த்ததில்லை,’ என்று அரவிந்தர் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார். இதைத் தமிழில் பாரதி மொழிபெயர்த்து ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறான்.)

வங்க தேசத்தில் அப்படி ஒரு வெடிகுண்டு பயங்கர வாதம் கிளம்பியது. அதன் தொடர்பாகத்தான் அரவிந்தர் கைதானார். பாரதிக்கும் அரவிந்தருக்கும் இந்த ‘வெடிக்காய் வியாபாரத்தில்’ கொஞ்சம் கூட நம்பிக்கை இருந்திருக்கவில்லை. (தமிழோவியத்தில் வெளிவந்த என் ‘வெடிக்காய் வியாபாரம்’ கட்டுரையைக் காண்க.) இருந்த போதிலும் அரவிந்தர் அந்த வழக்கில் கைதானார்.

வடக்கில் அப்படியொரு கொந்தளிப்பு நடந்துகொண்டிருந்தால், தெற்கில் அதற்குச் சற்றும் குறைவில்லாத நெருப்பு பரவத் தொடங்கியிருந்தது. பிரசித்தி பெற்ற தூத்துக்குடிக் கலவரங்கள் நடந்ததும், வ உ சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைதானதும் 1908ன் தொடக்கத்தில்தான். தூத்துக்குடியில் நடந்த கலவரங்களைப் பற்றிய செய்தி வெளியிட்ட ஹிந்து பத்திரிகை, தான் வெளியிட்ட செய்தியில் ‘மிகக் கடுமையான அவதூறு அடங்கிய ஒரு பத்தி’ இருந்ததாகக் குறிப்பிட்டுக்கொள்கிறது. ‘அந்தச் சூழ்நிலையின் கொந்தளிப்பாலோ, அல்லது அந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டோ, இந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியரும், செய்தியாளரும், இப்படி ஒரு கடுமையான அவதூறு கொண்ட பத்தியை வெளியிட்டுவிட்டனர்,’ என்று A Hundred Years of The Hindu என்று அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள தொகுப்பில் குறிக்கிறது. அது என்ன அப்படிப்பட்ட பத்தி? அதையும்தான் பார்ப்போம்:

‘Incidentally, perhaps because of the emotionally surcharged atmosphere, both the Tuticorin Correspondent and the Sub-Editor who tasted his copy allowed this highly defamatory paragraph in a report of a political case to appear: “The Magistrate has not been fair to the accused and has passed some remarks against some of them. The Magistrate has gone out of his way to justify the quartering of punitive police.” (A Hundred Years of The Hindu, page 188)

இப்படி ஒரு ‘வெது வெதுப்பான வாக்கியத்தைக்’ கடுமையான அவதூறு என்று அந்தப் பத்திரிகை சொல்லிக்கொண்டால், இந்தச் செய்தி வெளியான சமகாலத்தில் பாரதியின் எழுத்தின் தன்மையை என்னவென்று சொல்வது? ஓர் எடுத்துக்காட்டு வேண்டுவோர் இந்த இலக்கில் சென்று பார்க்கவும். இந்தக் கட்டுரை (எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஒரு கொள்ளை) ராஜ துரோக எழுத்தாகக் கருதப்பட்டு, ‘இந்தியா’ பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசு 11.8.1908 அன்று வெளியிட்ட இருபது கதை, கட்டுரை, கவிதைகளின் பட்டியலில் ஒன்று. படித்துப் பாருங்கள். மேற்படி வாக்கியத்தை ஹிந்து பத்திரிகை “highly defamatory” என்று கூறிக்கொண்டால், பாரதியின் இந்தக் கட்டுரையை எந்த வகையில் சேர்ப்பது!

எழுத்தில் மட்டுமல்லாமல், பேச்சிலும் பாரதியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. அவனுடைய பேச்சுகள் எல்லாம் வேவுகாரர்களால் கண்காணிக்கப்பட்டு, குறிப்பெடுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டன. காவல் துறை உளவுக்காரர்களால் குறிப்பெடுக்கப்பட்டு, சீனி. விசுவநாதன் தந்திருக்கும் பாரதியின் பேச்சில் ஒரு பகுதி இது: (10.5.1908 அன்று திருவல்லிக்கேணியில் நடந்த சென்னை ஜன சங்கக் கூட்டம்)

‘போலீஸ் போக்கிரிகளின் ஒரு கூட்டத்தார் வண்டிக்காரர்களாகவும், ஜட்கா ஓட்டிகளாகவும் வேடம் புனைந்துகொண்டு நேர்மையான மனிதர்களை யெல்லாம் உளவறிய முற்படுகிறார்கள். நல்லோர்கள் செல்லும் இடமெல்லாம் நிழல்போல் தொடர்ந்து சென்று வேவு பார்க்கிற இந்த அரசாங்கம் காட்டுமிராண்டி அரசாங்கம்தானே!

… … … வேவுகாரத் துறையைச் சார்ந்த போலீஸ் கூட்டம் தவறான குறிப்புகளைத் தயார் செய்கிறது. இங்குக் கூடியிருக்கும் பத்திரிகையாளர்களையும் வேவு பார்ப்போர்களையும் பேச்சுகளை முழுமையாகப் பதிவு செய்யக் கேட்டுக்கொள்கிறேன்…’

தவறான முறையில் பதிந்து குழப்பங்களை உருவாக்க வேண்டாம். ஏனென்றால், ‘போலீஸ் சட்டங்களின் எந்த விதிகளுக்கும் எதிரானவை என்று கருதும்படியாக இல்லாமல், கலவரத்தை உண்டுபண்ணுவனவாகவும் அமையாமல் நாம் எடுக்கும் செயல் நடவடிக்கைகள் எல்லாம் இருக்கும்,’ என்று பேச்சினிடையே பாரதி குறிப்பிடுகிறான். போலீஸார் பேச்சுகளைப் பதியும் முறையில் ‘தெரிந்தெடுத்த வன்மம்’–selective vengeance–இருந்திருக்கிறது என்ற குறிப்பு நமக்கு பாரதியுடைய பேச்சின் இந்தப் பகுதியில் கிட்டுகிறது.

இந்தப் பேச்சு அப்படியே குறிப்பெடுக்கப்பட்டு போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. (மேற்படி மேற்கோள், நீண்ட ஆங்கிலச் சொற்பொழிவின் ஒரு பகுதி மட்டும்தான்.) காவல் துறையின் திருப் பார்வை பாரதியின் மீது படியத் தொடங்கிவிட்டது. ‘இந்த ஆசாமியை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும்,’ என்று காவல் துறை படாதபாடு படத் தொடங்கியது. போலீஸ் சுட்டிக் காட்டிய காரணங்களில் ஒன்று, ‘காயலிக் அமெரிக்கன்’ என்ற தடைசெய்யப்பட்ட ஐரிஷ் பத்திரிகையின் பதின்மூன்று சந்தாதாரர்களில் பாரதியும் ஒருவன் என்பது!

1908 மார்ச் மாதத்திலேயே அரசாங்கத்தின் ‘கனிவான, தனிப்பட்ட’ பார்வை பாரதியின் மீது விழத் தொடங்கிவிட்டது. சென்னை அரசாங்கத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் (ஆக்டிங்), அப்போதைய போலீஸ் கமிஷனருக்கு எழுதிய டெமி அஃபிஷியல் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘I am to tell you that you should take steps to bind over Subramanya Bharathy and Ethiraj Surendranath Arya to keep the peace, if you think that there is sufficient evidence to prove that they incited the crowd to break the law.” (16.3.1908 தேதியிட்ட கடிதம்.)

இதற்கு இரண்டே நாள் கழிந்தவுடன், தலைமைச் செயலாளருக்குத் திடீரென்று ஞானோதயம் ஏற்படுகிறது. ‘…. I am now in opinion that after the lapse of time, it would perhaps be better to let sleeping dogs die. It will serve no useful purpose if we were to run them in under Section 108.” (18.3.1908 தேதியிட்ட கடிதம்.)

காட்டில் தமயந்தியைக் கைவிட்டுவிட்டுத் தனியே பிரிந்தேகத் துணிந்தானாம் நளன். அவள் உறங்கிக் கொண்டிருக்கையில் எழுந்து போக நினைத்தானாம். போக முடியவில்லையாம்.

போயொருகால் மீளும்; புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் – தோயல்
கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்.

தயிர் கடைபவர்களுடைய கை எப்படி, தொடர்ந்து முன்னால் போவதும், பின்னால் வருவதுமாக இயங்குகிறதோ, அப்படி நளனுடைய மனமும் ஆனதாம். போகும். போக முடியாமல் திரும்பி வரும். இப்படியே கொஞ்ச நேரத்துக்கு நடந்ததாம்.

பாரதியைக் கைது செய்ய நினைத்த அரசாங்கமும் அப்படித்தான், ‘போயொருகால் மீளும், புகுந்தொருகால் மீண்டேகும்,’ என்று வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. ‘ஒரே ஒரு தட்டாவது தட்டி வைக்க வேண்டும்,’ என்றெல்லாம் கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. கடைசி கடைசியாக ஜூன் மாதம் 1908ல் இயற்றப்பட்ட செய்திப் பத்திரிகைகள் சட்டத்தின்படி ‘இந்தியா’ பத்திரிகை ஆசிரியரை மடக்கலாம் என்று திட்டமிட்டனர். மிகக் கடுமையான சட்டம் என்று வருணிக்கப்படும் சட்டம் அது. ஹிந்து பத்திரிகை எழுதுகிறது:

“The Newspapers Act was passed by the Imperial Legislative Council in June 1908 and The Hindu said: ‘A terrible means has been devised for the strangling of newspapers in the country. An undesirable newspaper may now be effectively killed by any District Magistrate, its press, plant, machinery and tools may and every printing or other material connected with it confiscated and the very name of the paper obliterated for ever, It has only to be made out that the paper contained an ‘incitement to violence’ and woe to the owner and proprietor of the press in which the paper was printed. Violence may easily be made to mean resistance and resistance to include passive resistance, which latter expression may mean anything to constitute an act of violence, which term the Act has left carefully undefined.”

எந்த மாகாண நீதிபதியும் ஒரு பத்திரிகையை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடலாம். அது வன்மு¨றையைத் தூண்டும்படியான எழுத்துகளைக் கொண்டிருந்தது என்று நிறுவிவிட்டால் போதும். ‘வன்முறை’ என்றால் எதை வன்முறை என்று சொல்லப்படுகிறது என்பதை மட்டும் விளக்காமல் விட்டுவிட்டது இந்தச் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியரையும், உரிமையாளரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்கள். ‘இந்தியா’ பத்திரிகை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. ‘எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஒரு கொள்ளை’ போன்ற தீவிரமான கட்டுரைகளும், ‘மகாபாரதக் கதைகள்,’ போன்ற கூடார்த்தக் கதைகளும், ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்,’ கவிதை உட்பட இருபது தலைப்புகளில் பாரதியின் எழுத்து ‘ராஜ துரோக எழுத்தாகப்’ பட்டியலிடப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற செய்தி ‘இந்தியா’ பத்திரிகைக்கு எட்டியிருக்கிறது. காவல் துறையில் உயர் பதவியிலிருந்த கிருஷ்ணசாமி ஐயரும், பின்னால் நீதிபதியாப் பொறுப்பேற்று, அதற்காக பாரதியால் கடுமையாக விமரிசிக்கப்பட்டவருமான (இன்னொரு) கிருஷ்ணசாமி ஐயரும் இந்த விவரத்தைச் சொல்லிவிட்டனர். முரப்பாக்கம் சீனிவாசன் பயந்து விட்டார். ஏனெனில், 1907ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவரே ‘இந்தியா’ பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமாகப் பதிவு செய்துகொண்டிருந்தார் – பத்திரிகையின் உண்மை உரிமையாளரான எம் பி திருமலாசாரியாரின் சொற்படி. இதனை மு. சீனிவாசனின் வாக்குமூலமும் தெரிவிக்கிறது. உண்மை உரிமையாளர் என்பதும் ஒரு பெயரளவுக்குத்தான். ஏனெனில் இந்தியா பத்திரிகை ஒரு தனிப்பட்ட நபர் பணம்போட்டு நடத்திய பத்திரிகையன்று. அது பங்குதாரர்களால் (partnership) நடத்தப்பட்ட நிறுவனம். முரப்பாக்கம் சீனிவாசனும் முதல் போட்ட பங்குதாரர்களில் ஒருவர்தான்.

இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை எழுந்தவுடன், எம் பி திருமலாசாரியார் உடனே முரப்பாக்கம் சீனிவாசனை உரிமையாளர் மற்றும் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தன்னையே அந்த இரண்டு பொறுப்புகளுக்கும் பதிவுசெய்துகொள்கிறார். அதாவது 1908ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள். இதற்குப் பத்து நாளைக்கு முன்னால் – ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று – ஒரு விசித்திரமான பத்திரம் கையெழுத்தாகியிருக்கிறது. ‘இந்தியா’ பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமான மு. சீனிவாசன் அப்பத்திரிகையின் குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார். சி ஐ டி குறிப்பில் இதுவும் பதியப்பட்டிருக்கிறது. இந்தியா பத்திரிகை அலுவலகத்துக்குள் நடந்த ஒரு சம்பிரதாயமான அலுவலக நடவடிக்கைதான் என்றாலும், இதையும் சிஐடி போலீசார் கவனித்துதான் இருக்கிறார்கள்; பதிந்தும் இருக்கிறார்கள். ஒரு சிறு நடவடிக்கையும் அவர்கள் கண்ணுக்குத் தப்பவில்லை. இருந்தபோதிலும் யார் உண்மையான பதிவுபெற்ற ஆசிரியர், யார்மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க முடியும் என்பன போன்ற விவரங்களைச் சரிபார்ப்பதில் கோட்டை விட்டுவிட்டார்கள்.

“A document dated the 6th August 1908 in which M P Thirumalachari signing as proprietor, the INDIA premises to employ M Srinivasan (whom he callse formerlly proprietor, The INDIA) in his office of the paper. This docuent was witnessed by S N Thbirumalachari and C S Bharati.” (Extract from G. O. No.1143, Judicial Confidential Department dated 31.8.1908)

பெ சு மணி அவர்கள் இந்த வினோதமான ஆவணத்தைத் தன்னுடைய ‘பத்திரிகையாளர் பாரதியார்’ என்ற நூலில் தந்திருக்கிறார். ‘இந்தியா’ பத்திரிகையின் முன்னாள் உரிமையாளரும், ஆசிரியருமான முரப்பாக்கம் சீனிவாசன், மாதம் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில், ஆண்டொன்றுக்கு மூன்று ரூபாய் சம்பள உயர்வில், குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார்,’ என்று சொல்கிறது அந்த ஆவணம். எம் பி திருமலாசாரியார் கையொப்பமிட்டிருக்கிறார். இந்தியா அச்சகத்தின் உரிமையாளர் என்று பதவி குறித்து எஸ் என் திருமாலாசாரியாரும், பால பாரதா பத்திரிகையின் ஆசிரியர் என்று பதவி குறித்து சி. சுப்பிரமணிய பாரதியும் சாட்சிக் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்.

நடவடிக்கை எடுக்கப்பட்டால் சீனிவாசன் அகப்படாமல் போகட்டும் என்ற நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் காலம் வேறு விதமாக நினைத்திருந்தது.

2 Replies to “ஓடிப் போனானா பாரதி? – 05”

  1. படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தளராமல் எழுதி முடியுங்கள். விவரங்களின் பெருக்கத்தில் தொலையாமல் முனைப்பை ஊசியில் கோர்த்த நூலாகத் தொடர்ந்து வெளிக் கொணர்கிறீர்கள். அருமை.
    மொத்தத்தையும் முடித்து, பின் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் இது நாள் வரை பல அரசியல் உந்துதல்களுக்கு வேண்டி இழுத்துக் கட்டப்பட்ட அவதூறே வரலாறாக நிலைத்து விடாமல், உங்களுடைய தெளிவான எதிர்ப்பும், ஆதாரங்களோடு இணைந்த சரியான வரலாறும் இக்கால கட்டத்திலாவது பதிவாகும். அவதூற்றை அழிக்க இன்னும் எத்தனை முயற்சிகள் நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்குமோ. உங்களுக்கு மன, உடல் வலு நிறைய வேண்டும், அது கிட்டும் என்று நம்பிக்கை கொண்டு நாங்கள் இருக்கிறோம்.
    மைத்ரேயன்

  2. மைத்ரேயா, நன்றி. நிறையபேர் படிக்கிறார்கள் போலிருக்கிறது. ஒருவருக்கும் ஒரு கருத்தும் இல்லை போலிருக்கிறது. என் குரல் மட்டுமே இந்தப் பத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ‘படித்துக்கொண்டுதான் இருக்கிறோம்’என்ற உங்களுடைய மறுமொழி ஆறுதலளிக்கிறது.:‍)

    பாராட்டி மறுமொழி இடுபவர்கள் அனைவருக்கும் நன்றி. ஐயங்களை எழுப்பினாலும் மகிழ்வேன். உண்மையில் அதுவே ஆக்கபூர்வமான திசைக்கு இட்டும் செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *