கவிதை: காலின் வலிகள்…

sandfeet1விண்ணைப் பார்த்த விதையெல்லாம்
வினாக்குறியாய்த்தான் விழிக்கிறது
வீழும் மழையின் துளியெல்லாம்
வியந்து வியந்தே விழுகிறது!
கண்ணைப் பறிக்கும் தொடுவானம்
கடைசி வரைக்கும் ஏய்க்கிறது
கவிதை ஒன்று காணாததனைக்
கண்டேன் என்றே சொல்கிறது!

காலின் சுவடைக் கள்ள அலையோ
கண்ணின் முன்பே அழிக்கிறது
காலம் எத்தனை பெரிதானாலும்
கணங்களாய்த்தான் நகர்கிறது
காலின் வலியே மணலாய்த் துகளாய்க்
கதையாய் உதிர்ந்து கிடக்கிறது
கரைத்த அலைகள் காணா மடியில்
கனவில் கனவாய்த் தொடர்கிறது!

யார்தான் எதனைத் துவங்க முடியும்?
யாரெதை முடிக்க முடியும்?
வானே ஆறாய் விரையும் களரியில்
வழியா பிரிக்க முடியும்?
ஊர்தான் உண்டா? உறவொன்றுண்டா?
உரிமைக் குப்பொருள் உண்டா?
ஊசி முனையில் உலகே குமிழாய்
உட்கார்ந்திருக்கும் நன்றாய்!

காலின் வலிகள் வழிக்குத் தெரியுமா?
சாவு, வாழ்வுக்குப் புரியுமா?
தனையறி யாத தத்துவங்களின்
வசத்தில்தாம் நாம், தெரியுமா?
சாலையில் புரளும் சருகுகள் சொல்லும்
சரித்திரம் எந்தக் காதுக்கு?
சரிந்து விழுந்த சாம்ராஜ் யங்களின்
புழுதிகள் எந்தக் காற்றுக்கு?

பட்டாம் பூச்சியின் சுவாசத்தில்
பதறும் புல்நுனி நெஞ்சம்
பாகை கட்டிப் பாண்டி விளையாடப்
பரவெளி தேடிக் கெஞ்சும்!
விட்ட மூலையில் சிலந்தி துறந்த
வெற்று வலைகள் மிஞ்சும்
வெளிறிப் போன விட்டில் சிறகை
வீணே காற்று கொஞ்சும்!

வானின் வரம்பு தெரிந்து கொண்டா
வண்ணச் சிறகு விரிகிறது?
வந்தவர் சென்றவர் நடுவே என்ன
வழக்கு மன்றமா நடக்கிறது?
ஏனோ கேள்வி இல்லாமல்தான்
எல்லாம் இங்கே நடக்கிறது
எங்கோ விழுந்த எதோ துளியில்
எதுவோ எதற்கோ விழிக்கிறது

4 Replies to “கவிதை: காலின் வலிகள்…”

 1. கவிதையின் சொற்களை, கண்ணை மூடி சிந்தித்தால்,
  அது காட்டும் சொற்களில் அவ்வடிவம் காணலாம்.

  “கவிதை ஒன்று தான் காணாததனையும் காட்டுகிறது!”

 2. சொல்லாமல் சொல்லுவது தான் கவிதை என்பார்கள்.

  சொல்லாமலே சொல்கின்றார் ரமணன். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  அன்புடன்

  தமிழ்செல்வன்.

 3. சொல்ல நினைத்தால் சொற்கள் வரிசையில் துள்ளி வரவேண்டும்
  சொல்லுக் கடியில் சுகமாய்ச் சுவடுகள் தொடர்ந்து விழவேண்டும்
  எல்லை தாண்டும் சிறகுகள் வேண்டும்‍‍‍‍‍‍‍‍‍…எல்லாம் கிடைத்தபின்னால்
  வல்லான் இவனைப் போலே நானும் வரைந்திட மாட்டேனோ!

 4. TaMILHINDU IS AN EXCELLENT ENDEAVOUR IN PROMOTING HINDUSIM IN TAMIL. IF SUCH AN ERNEST ATTEMPT IS MADE IIN ALL OUR OTHER MAJOR INDIAN LANGUAGES IT WOULLD GIVE A GREAT BOOST AND PROVIDE IMPETUS TO OUR RELIGION AND CULTURE WHICH FACE INDIRECT ONSLAUGHT FROM RULERS OF THE LAND AND OTHER FORCES INIMICAL TO US.
  MAY GOD HELPUS TO ACHIEVE THIS SOON.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *