ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

rajamarthadan

கவிஞர் ராஜமார்த்தாண்டன் நேற்று அகால மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். 60ம் கல்யாணம் முடிந்து ஒரு வருடம் கழியாத நிலையில், அவரது மகனின் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடியாத நிலையில், அவர் குடும்பத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர்.

நூல்கள்: அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்), என் கவிதை (கவிதைகள்), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு), கொங்குதேர் வாழ்க்கை – 3 (தொகுப்பு, தமிழினி), புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி), புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள்.

நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். மனமாச்சரியங்களுக்கு ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் ஒட்டுமொத்த மரபு/புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார். அத்தொகுப்பில் தி.சோ. வேணுகோபாலன், நாரணோ ஜெயராமன், என்.டி. ராஜ்குமார், லக்ஷ்மி மணிவண்ணன், பிரம்மராஜன் போன்ற கவிஞர்களை அவர் சேர்க்கவில்லை. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தான் அவர்களைத் தேர்ந்தெடுக்காததன் காரணத்தைத் தெளிவாக முன்வைத்தார் ராஜமார்த்தாண்டன்.

“தி.சோ. வேணுகோபாலனைப் பொருத்த வரை பிச்சமூர்த்தியைப் படித்த கவிதை வாசகனுக்கு வேணு கோபாலனைப் படிக்கவேண்டியதில்லை. அதுபோலவே பசுவய்யாவின் அபரிமிதமான பாதிப்புக்கொண்டவர் நாரணோ ஜெயராமன் என்பதாலேயே சேர்க்கப்படவில்லை.”

பிரம்மராஜனின் கவிதைகளை அவர் புறக்கணித்ததற்கான காரணம் முக்கியமானது. கவிதைகளை ஒரு பொது சாதனமாகப் பார்க்காமல், அக்கவிதை எங்கிருந்து எழுகிறது, அதன் போக்கு என்ன என்பதைப் பற்றிய தெளிவான எண்ணம் ராஜமார்த்தாண்டனுக்கு இருந்தது. அவ்வகையில் பிரம்மராஜனின் கவிதைக்குத் தமிழ்ப்பரப்பில் என்ன இடம் என்பதைப் பற்றி யோசித்து, பிரம்மராஜனின் கவிதைகளைப் புறக்கணித்ததற்கான காரணத்தை அவரால் தெளிவாகக் கூற முடிந்தது.

“பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன். புதுக்கவிதைகளில் அவருக்குள்ள ஈடுபாடு, உலகக் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் அவர் பங்களிப்பு, அவர் நடத்திய ‘மீட்சி’ பத்திரிகை குறித்தெல்லாம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எண்பதுகளில் புதுக்கவிதையில் நவீனத்துவத்தை அதிகமும் வலியுறுத்தியவர் பிரம்மராஜன். ஆனால், அந்த நவீனத்துவம் தமிழ் மனம் சார்ந்ததாக இல்லாமல் மேலைநாட்டுக் கவிதைப் போக்கின் அதீதத் தாக்கத்தாலும் படிப்பறிவின் மூலமான அனுபவ வெளிப்பாட்டினாலும் உருவானது. சோதனை முயற்சிக்காகவே சோதனை என்றானதாலும் திருகலான மொழி நடையினாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிப்பது போன்ற உணர்வை, அந்நியத் தன்மையை இவரது கவிதைகள் தோற்றுவித்துவிடுகின்றன. இதனாலேயே அவரது கவிதைகள் குறித்து மேலான அபிப்பிராயம் ஏதும் எனக்குக் கிடையாது.”

அதுமட்டுமின்றி, சி.சு. செல்லப்பாவின் கவிதைகளையும் அவர் புறக்கணித்தார். இன்றைய நவீன கவிதைகளின் செழிப்பில் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை. அதே சமயம், சி.சு.செல்லப்பாவின் கவிதையை, நவீன கவிதைகளின் சிறந்த ஒரு முகமாக அவர் ஏற்கவில்லை. இப்படி ஒரு தெளிவான நிலையை எடுக்க, தான் கவிதைகள் குறித்துக் கொண்டிருக்கும் கருத்துகளின் மேலே சற்றும் குன்றாத நம்பிக்கையும், கவிதைகள்/கவிஞர்கள் குறித்த தொடர்ந்த அவதானிப்பும் வேண்டும்.

“தமிழ்ப் புதுக்கவிதையைப் பொருத்தவரையில், சி.சு. செல்லப்பாவின் தீவிரமான முயற்சியும் அவரது ‘எழுத்து’ பத்திரிகையும்தான் தமிழில் புதுக்கவிதை இந்த அளவில் வேரூன்றி வளர்வதற்குக் காரணமாக இருந்தன. புதுக்கவிதை வளர்ச்சியோடு இரண்டறக் கலந்துவிட்ட சிறுபத்திரிகை இயக்கங்கள்கூட செல்லப்பாவின் தொடர்ச்சியே. அவரும் தமிழில் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். புதுக் கவிதைகள் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சுயமாக நிறையக் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் அவரது கவிதைகள் என்னுள் எவ்விதமான பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. புதுக்கவிதை வளர்ச்சியில் அவரது ‘எழுத்து’ பத்திரிகையின் பங்களிப்புக் காரணமாக அவரது கவிதைகளையும் நான் மேலான கவிதைகள் எனக் கருத வேண்டியதன் அவசியமென்ன?”

ராஜமார்த்தாண்டன் கவிதைகளை கோட்பாட்டளவில் அணுகாமல், தன் மனத்தினாலேயே அணுகினார். அவரது ரசனை சார்ந்தே கவிதைகளை வகைப்படுத்தினார். ஜெயமோகன் ராஜமார்த்தாண்டனை ‘கவிதைகளை நேரடியாக மனதால் வாங்கிக்கொண்டவர்’ என்கிறார். ராஜமார்த்தாண்டனுடன் மாறுபட பல கருத்துகள் இருந்தாலும், அவர் கவிதைகளை ஏற்றுக்கொண்டதற்கும், நிராகரித்ததற்கும் பின்னால் வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். அஜெண்டாக்களுடன் கவிதைகளை அணுகாமல் இருந்ததையும் பார்க்கமுடிகிறது. இன்றைய நிலையில் தலித் கவிஞரொருவரை நிராகரித்தால் எழும் முத்திரைகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

“தலித் கவிஞர் எனப் பரவலாக அறியப்படுகிற என்.டி. ராஜ்குமார் கவிதைகள்கூட எதையோ பிரமாதமாகச் சொல்லும் பாவனையில் ஆரம்பித்து எந்த அனுபவத்தையும் தராமல் சிதைந்துபோய்விடுகின்றன.”

ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் அவரது விமர்சனத்தைச் சார்ந்தே அமைந்துள்ளதையும் காணலாம். மேல்நாட்டுக் கோட்பாட்டுகளுக்கிணங்க கவிதைகளை அவர் செய்யவில்லை. மனதில் தோன்றும் உணர்வுகள், அனுபவங்கள், இயலாமைகளையே அவர் கவிதையாக்கினார். எஸ். வைதீஸ்வரனின் ‘கால் மனிதன்’ கவிதை நூல் பற்றிய விமர்சனத்தில், “மனிதனுக்கும் அல்லது அவன் மனத்துக்கும் வாழ்க்கைக்குமான முரண்பாடே ஆரம்பம்முதல் இன்றுவரையிலான வைதீஸ்வரன் கவிதைகளின் அடிச்சரடாகத் தொடர்கிறது.

இந்த முரண்பாடு ஒரு பார்வையாளனுடையதாக அல்லாமல், தன்னையும் உட்படுத்தியதாக, அதனால் தவிர்க்கவியலாத எள்ளல் கலந்ததொரு விமர்சனப் பார்வையாக வெளிப்படுவது இவரது கவிதைகளின் தனிப்பண்பாக அமைகிறது” என்கிறார். இதையே இவரது கவிதைகளுக்கும் சொல்லலாம். ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் பெரும்பாலும் அவரைப் பற்றியே பேசுகின்றன. தனது கோபம், சோகம், பயம் என எல்லாவற்றையும் அவரது கவிதைகளில் பார்க்கமுடிகிறது. தனது திறமையின்மை என்பதை அவர் பொருளாதாரத்தின் மூலமாக ஒரு காக்கையில் கண்டுகொள்கிறார் என்று தோன்றுகிறது. அவரது கவிதைகள் பறவைகளைப் பற்றிக் கொண்டே சுற்றுகின்றன. எவ்வித கட்டுகளுமில்லாத பறவையாக, பருந்தாகவும் அதன் எதிர்முனையில் காக்கையாகவும் அவர் தன்னைக் கண்டுகொண்டிருந்திருக்கிறார் என்று படுகிறது.

ஒரு விமர்சகராக இருந்ததால், அவரது விமர்சனத்தின் மீதான விமர்சனமாகவும் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். (விமர்சனம் கவிதை.) கிராமத்திலிருந்து பிரித்து நகரத்தில் நடப்பட்ட ஒரு மனிதரின் அதிர்ச்சியும், அதை எதிர்கொள்ளமுடியாது தவிக்கும் தவிப்பும் அவரது கவிதைகளில் கிடைக்கின்றன. மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையைப் பல கவிதைகளில் பார்க்கமுடிகிறது. தான் பருந்து என்றாலும் காக்கையாகும் துருவங்களை அவர் வேறொரு விதத்தில் ‘அதுவொரு பறவை’ கவிதையில் பதிவு செய்கிறார் என்று சொல்லலாம். காக்கை என்றாலும் அதன் மண் சார்ந்த உறவில் அவருக்கு பெருமிதமும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. கிளி, பருந்து, காக்கை, மைனா, குயில் என்று பறவைகளின் வழியாக அவரது கவிதைகளை மீண்டும் வாசிப்பது பல புதிய அர்த்தங்களை ஏற்படுத்துகிறது.

‘எனது வாள்’ கவிதையில் வாளின் செயல்களைப் பட்டியலிடும் ராஜமார்த்தாண்டன், அதை விட்டெறியும் மார்க்கம் தெரியவில்லை என்கிறார். ‘மனப்பறவை’ கவிதையில் மலைச்சிகரம் நோக்கிப் பறக்கும் கவிதையைப் பற்றிப் பேசுகிறார். அந்த மனப்பறவை ராஜமார்த்தாண்டனே அன்றி வேறல்ல. ‘எல்லாமே நம்பிக்கையில்தான்’ கவிதையில், தன் கவிதை நம்மாலோ நம் வாரிசாலோ எப்படியும் உணரப்படும் என்கிறார். அவர் இறந்த செய்தி கேட்டு, ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, அவரது நம்பிக்கை உண்மையாவதை உணர்ந்தேன். அதை உணர அவரில்லை. அஞ்சலி.

1. எல்லாமே நம்பிக்கையில்தான்


உங்களிடம்
ஒரு கவிதை சொல்லப் போகிறேன்
காதுகளை மூடிக் கொள்ளலாம் நீங்கள்
வருத்தமில்லை எனக்கு
உதட்டசைவிலும் என் கவிதை
உங்கள் கண் வழியே புகுந்துவிடும்
கண்களையும் மூடிக் கொள்ளலாம்
அப்போதும் வருத்தமில்லை
காற்றிலே அலைந்து திரியுமென் கவிதை
என்றேனும்
கண்களை விழித்தீரெனில்
உள் புகுந்து அதிர்ச்சியூட்டும்
பிடிவாதமாக மூடிக் கொள்ளலாம் நீங்கள்
அப்போதும் வருத்தமில்லை எனக்கு
உம் வாரிசாலோ வாரிசின் வாரிசாலோ
உணரப்படும் என் கவிதை
என்றேனும் ஒரு நாள்
எனவேதான்
வருத்தமில்லை எனக்கு
நஷ்டமில்லை.

2. எனது வாள்

கூர்வாளொன்று
எப்போதும என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்
முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்து
கம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்
நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்
பிரியம் காட்டுவதாய் நினைத்து
குரல்வளையை கீறிவிடும்
ரோஜாக்களைக் கொய்து
கைப்பிடியில் சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.

விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்
கூர்வாளொன்று…

3. மனப்பறவை

விண்ணிலேறிப் பறந்தொரு புள்ளியாகி
விருட்டெனத் தரையிறங்கியதென் சினேகப் பறவை
சாலையோரக் கண்ணாடித் துண்டுகள் பொறுக்கி
குப்பைத் தொட்டியில் போட்டது

எதிர்வீட்டுத் தோட்டத்தில் ரோஜாப்பூ கொய்து வந்து
பள்ளிச் சிறுமியின் தலைசூடி மகிழ்ந்தது

சுடிதார் மாணவியிடம் குறும்பு செய்த
காலிகளை கூரலகால் கொத்தி எச்சரித்தது

நடைபாதைக் குடியிருப்பில் அழும் குழந்தையின் கையில்
கொய்யாப்பழம் கொத்தி வந்து வைத்தது

பஸ் நிறுத்தக் கிழவனின் வீங்கிய காலுக்கு
மூலிகை கொண்டு ஒத்தடம் கொடுத்தது

அரிசிமணிகள் பொறுக்கி வந்து
அவன் பாத்திரத்தில் கவனமாய் இட்டது

தந்திக் கம்பத்தில் பறந்தமர்ந்து
சுவாசமாய் அங்குமிங்கும் நோக்கியபின்
பாட்டிசைத்துப் பறந்தது மலைச்சிகரம் நோக்கி.

4. இப்படியும் சில விஷயங்கள்

பறவைகளில் காகங்கள் மீது
அலாதி பிரியம் எனக்கு

குழந்தைகள் கைப்பண்டத்தை
லாகவமாகப் பறித்துச் செல்லும்
திருட்டு ஜென்மம்தான்

வீட்டு மதில்மேல் வந்தமர்ந்து
சமயா சந்தர்ப்பம் அறியாது
கத்தித் தொலைக்கும் மூடப்பிறவிதான்

எனினும்

நான் தவழ்ந்து வளர்ந்த கிராமத்திலும்
இன்று பிடுங்கி நடப்பட்ட இந்த நகரத்திலும்
தினமும் என்னைப் பார்த்து

கரைந்தழைக்கும் நண்பனல்லவோ அது.

5. அது ஒரு பறவை

ஒற்றைப் பனைமர உச்சியில்
தனித்தொரு பருந்தின் தவசு
அரைவட்டக் கோணத்தில்
தரைநோக்கி அலையுமதன் பார்வை
அவ்வப்போது வான் நோக்கியும்
இரை கண்டால் தரைநோக்கிப் பாய்ச்சல்
இல்லையேல் விண்ணோக்கிப் பறந்து
வட்டமிட்டு மிதக்கும்

அதுவொரு பறவை
இரை அதற்குத் தேவை மட்டும்
பறந்து களித்தலே அதன் இலக்கு.

6. தூரத்துப் பார்வை

நேற்று என்னூரில் பார்த்த
அதே காக்கைகள்
அதே ஜோடி மைனாக்கள்
அதே வண்ணப் புறாக்கள்
அதே பச்சைக்கிளிகள்
அதே சிட்டுக் குருவிகள்

மரங்களும்
கிளைதாவும் அணில்களும்
அப்படியேதான்

மனிதர்கள் மட்டும்
வேற்று முகங்களுடன்

7. வால் மனிதன்

இப்போதெல்லாம் அவனுடன் ஒரு வால்
ஏதேனுமொரு வால்
சிலபோது குரங்கின் வால்
சிலபோது சிங்கத்தின் வால்
சிலபோது நரியின் வால்
சிலபோது குதிரையின் வால்
சிலபோது எலியின் வால்
சிலபோது ஆட்டின்வால்
சிலபோது பன்றியின் வால்

என்றிப்படி எப்போதும்
ஏதேனுமொரு வால்

ஒரு வால் மறைந்த கணம்
ஒட்டிக்கொள்ளும் இன்னொரு வால்
விரைவாக
இப்போதெல்லாம்
அரிதாகி வருகின்றன
வாலில்லாமல் அவன்
நடமாடும் கணங்கள்

8. எனினும்

இல்லாமல் போக
இப்போதும் மனமில்லை

நூறாண்டு வாழ்ந்துவிட்டபோதும்

கொஞ்சம் நேசம்
அநேகம் துரோகங்கள்
கொஞ்சம் சந்தோஷம்
அநேகம் துக்கங்கள்
கொஞ்சம் நிம்மதி
அநேகம் பதற்றங்கள்
கொஞ்சம் நம்பிக்கை
அநேகம் அவநம்பிக்கைகள்
கொஞ்சம் செல்வம்
அநேகம் கடன் சுமைகள்

எனினும்
பூக்களின் புன்னகை
மரஙக்ளின் ஸ்நேகம்
பறவைகளின் சங்கீதம்

எனவேதான்…

9. கணிப்பு

நீ ஒரு அயோக்கியன்
நீ ஒரு சந்தர்ப்பவாதி
என்றெனக்குச்
சான்றிதழ் வழங்கிவிட்டாய்

அவசரப்பட்டுவிட்டாய் நண்பனே
என் நிழலாய் என்னைத்
தொடர்ந்தவன் போலும்
என் மனக்குகை இருளில்
துழாவித் திரிந்தவன் போலும்.

என்னை நானே
இன்னும் தேடிக்கொண்டிருக்கையில்
அவசரப்பட்டுவிட்டாய்.

சற்றே
நிதானித்திருக்கலாம் நண்பனே
என்னைப்போலவே.


10. தாமதமாகவே என்றாலும்…

தொடங்கியாயிற்று
தாமதமாகவே என்றாலும்
தீர்மானத்டுடன்.

திட்டமிட்ட பயணங்கள்
ஆயத்த மூட்டை முடிச்சுகளுடன்
விவாதச் சுமைகளுடன்
அறை மூலையில் கிடக்க

தொடங்கியாயிறு பயணத்தை
இலக்கற்று
பாதைகளற்று
தன்னந்தனியாக
சுதந்தரமாக.

11. விமர்சனம்

எழுது எழுது என்றாய்
எழுதினேன்

உன் மீசையின் கம்பீரத்தைப்
போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்
மீசையின் வரலாறு தெரியுமா?
அதன் வகைகள் அறிவாயா?
மீசையைப் பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன் எழுதிய
சர்ரியலிசக் கவிதை படித்திருக்கிறாயா?
கேள்விகளை அடுக்குகிறாய்.

நண்பனே
உன் கற்பனை மீசையைத் திருகி
நீ கொள்ளும் பரவசம்
எவ்விதம் நானறிவேன்
எங்கனம் அதுகுறித்து எழுதுவேன்.

படங்கள், கவிதைகள் – நன்றி: தமிழினி பதிப்பகம்.

15 Replies to “ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்”

 1. தமிழ் ஹிந்து திரும்பவும் உயிர்ப்பிக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. நிறைய விட்டுப் போனவற்றைத் திரும்பப் படிக்கலாம். அவ்வப்போது வெளிவருவன்வற்றை உடனுக்குடன் படிக்க பழ்க்கப் படுத்திக்கொள்ளவேணும்.

  ராஜமார்த்தாண்டனுக்கு அஞ்சலியாக உடனுக்குடன் எழுதிவிட்ட ஹரன் ப்ரசன்னாவின் எழுத்து நன்றாகவே இருக்கிறது. அவசரத்தில் எழுதியது என்று சொலல் முடியாத ஆத்மார்த்தமான அஞ்சலி. ராஜமார்த்தாண்டனுக்கு இப்போதாவது மகிழ்ச்சி தரும்.

  ஒரு கவிஞ்ரை இன்னொரு கவிஞர் அறிந்து பாராட்டி அஞ்சலி செய்துளளது தமிழ் கவிஞர் அறியாதது.

 2. இதயபூர்வமான அஞ்சலிக் கட்டுரை. தந்திருக்கும் கவிதைகள் அனைத்தும் முத்துக்கள், சுடர்மணிகள்.

 3. கவிதை என்பது மனம் கண்டடையும் அனுபவம். அந்த மனம் தன் இயல்பான சூழலிலிருந்து வேறுபட்டு இயங்க இயலாது.

  எனவே, தமிழ் மனம் சாராத, அந்நியப்பட்டு போய்த் தொலையும் முயற்சிகளின் குறைபாட்டை வெளிப்படையாகச் சொன்ன ஒருவர் இன்று இல்லாதிருப்பது, நம்மை நமக்கு அந்நியமாக்கும் தற்கால வரலாற்றுப் போக்கில் எவ்வளவு பெரிய இழப்பு என்பதைக் கட்டுரை சொல்லுகிறது.

  கவிதை படிக்காதவர்களுக்கும் ராஜமார்த்தாண்டனின் பிரிவு துக்கம் தருகிறது.

 4. ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைப் படித்ததில்க்லை. ஆனால் இந்தக் கட்டுரையில் தரப்பட்டிருக்கும் கவிதைகளைப் படித்தாலே எவ்வளவு இயல்பாய் கவிதைகளை எழுதி இருக்கிறார் எனத்தெரிகிறது.

  மனப்பறவையும், கணிப்பும் அருமை. இவரை முழுதும் படிக்க வேண்டும். ஒரு சிறந்த கவிஞனுக்கு எழுதப்பட்ட சிறப்பான அஞ்சலி இது. ராஜமர்த்தாண்டனுக்கு எனது அஞ்சலிகள். அன்புடன், ஜெயக்குமார்

 5. ராஜ மார்த்தாண்டனுக்கு அஞ்சலிகள்…ஒரு சோகமான இழப்பினை ஆழமாக உணரவைத்த கட்டுரைக்கு நன்றி.

 6. ஹரன்ப்ரசன்னாவின் அஞ்சலி சுருக்கமாக நிறைவாக இருக்கிறது. தமிழ் இந்துவின் புனர் நிர்மாணம் அதே போல நிறைவாக உணர வைக்கிறது. ராஜமார்த்தாண்டன் ஒரு நண்பர் என்றாலும் அவரது சொந்தக் கவிதைகளை விட அவர் முன்வைத்த பிற கவிஞர்கள் மூலம்தான் அவரை அறிந்திருந்தேன். ஹரன் பிரசன்னாவின் அஞ்சலியுடன் ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைக் கொடுத்ததன் மூலம் மறைந்த நண்பரை மறுபடி தெரிந்து கொண்டேன். சில கவிதைகள் எனக்கு மிக அருகில்தான் அவர் இருந்திருக்கிறார், நான் கூடுதலாக முயற்சி செய்து அவரிடம் இருந்து தமிழ் கவிதை உலகைப் பற்றி இன்னும் தெரிந்து கொண்டிருக்கலாம் எனப் புரிகிறது. சுய வாசிப்பு என்பதுடன் நம்பகமான வாசகர்களுடன் கலந்து பேசுகையில் கூடுதலாகப் பரிமாணங்கள் புலப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. தளம் உயிர்த்த நிறைவு, மறைந்த கவிஞனுக்கு அஞ்சலி அமைந்த நேர்த்தியில் கிட்டிய ஆறுதல், ராஜமார்த்தாண்டனின் அகால மரணத்தால் சிறிது கசந்தே போகிறது என்பது வாழ்க்கையின் கதியால்தான், அதை என்ன செய்து விட முடிகிறது, எல்லாரும் மார்க்கண்டேயராக இருந்தால் பூமிக்கல்லவா பாரம்?

  தளத்திற்கு பன்முகம் கொடுத்து தமிழகத்தின் கலாசார சக்திகளில் ஒன்றாக இதை மாற்றுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மறைந்த கவிஞரின் மனிதாபிமானம் கூட கத்தியைக் கீழே போட வைக்கவில்லை என்று சுட்டுகிறேன். குறைந்தது தர நிர்ணயத்துக்காவது அவர் அதைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதையும் நினைவு படுத்துகிறேன்.
  மைத்ரேயன்

 7. // நவீன கவிதைகளின் செழிப்பில் ந.பிச்சமூர்த்தி நடத்திய ‘எழுத்து’ இதழின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை //

  சி.சு.செல்லப்பா நடத்திய “எழுத்த்து” இதழின்… என்று இருக்க வேண்டும்.

 8. //உம் வாரிசாலோ வாரிசின் வாரிசாலோ
  என்றேனும் ஒரு நாள் உணரப்படும் என் கவிதை// என்று தீர்க்க தரிசன வார்த்தைகளை தமிழுலகிற்கு விட்டுச் சென்றுள்ள அமரர் கவிஞர் ராஜமார்த்தாண்டனின் வார்த்தைகள் சாகாவரம் பெற்றவை. அஞ்சலிக்கின்றேன் அவரது கவிதை ஆத்மாவிற்கு.. ராஜமர்த்தாண்டனுக்கு எனது அஞ்சலிகள்.
  தமிழ்சித்தன்

 9. ஒரு கவிதைத் திறனாய்வாளர் என்ற முறையில் ராஜமார்த்தாண்டனுடைய பார்வை பெரும்பாலும் சுந்தர ராமசாமியால் கட்டமைக்கப்பட்டது. சு.ரா.வின் இலக்கியக் கோட்பாடுகளை ஓரளவேனும் அறிந்தவர்களுக்கு ராஜமார்த்தாண்டனின் கவிதைத் தேர்வுகள் ஆச்சரியமளிக்காது.

  கண்ணன் நடத்தும் ’காலச்சுவடு’டனான தொடர்பு ராஜமார்த்தாண்டனின் நம்பகத்தன்மையைக் குலைத்தாலும், ராஜமார்த்தாண்டன் சு.ரா.வின் கோட்பாட்டுப் போர்வையைத் தானும் இழுத்துப் போர்த்துக்கொண்டது, குறைந்தபட்சம் சு.ரா. இலக்கியக் கோட்பாட்டுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் மத்தியிலாவது அவருக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்க உதவியது.

  அப்படி இல்லாத பட்சத்தில் தினமணி என்ற பெரும் பத்திரிகை ஒன்றினால் ‘சுயம்’ அழிக்கப்பட்ட பலருள் ஒருவராகவே அவரும் இருந்திருப்பார். ஆனாலும், அவர் ஏற்கெனவே சு.ரா.வால் ’சுயம்’ அழிக்கப்பட்டவர் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

 10. உங்கள் கட்டுரை மூலம் விரிவாக அறியக் கிடைத்ததுடன், அவரது கவிதைகளையும் வாசிக்க முடிந்தது.

  பகிர்வுக்கு நன்றி !

  அன்னாருக்கு எனது அஞ்சலிகள் !!!

 11. கொல்லிப்பாவை வழியேயும், என்னுடன் தினமணியில் பணியாற்றியவர் என்ற வகையிலும் ராஜமார்த்தாண்டனின் இலக்கிய மனத்தை அறிவேன். அவ மறைவு வருத்தமளிக்கிறது.

  வாசிக்கலாம், ஏற்கலாம், நிராகரிக்கலாம், சிலாகிக்கலாம், புறக்கணிக்கலாம் என்பதற்கு மேல் கவிதைகளில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பது எப்போதும் என் கருத்து. ஏனெனில் கவிதை என்பது, உரைப் புனைவுகளைப் போலல்லாமல், மனதின் மொழியில் எழுதப்படுபவை. அது இருவருக்கு அல்லது பலரிடையே நடக்கிற உரையாடல் அல்ல. உள்மனதுடனான தியானம்.
  ஆனால் ரா.மா. கவிதையை வேறு முனையிலிருந்து அணுகுபவர். கவிதையை பாரதிதாசனும், செல்லப்பாவும், அதன் பக்க விளைவாக கசடதபறர்களும் எதிர்விளைவாக வானம்பாடிகளும் இயக்கமாக மாற்ற முயன்ற Processல் உருவானவர் ரா.மா.

  அவர் கருத்துக்களோடு முரண்பட்டாலும் எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவர் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்
  மாலன்

 12. with due respect to mr.rajamarthandan,

  His omission of poet brammarajan from his anthology doesn’t speak well of him as a critic or compiler or co-poet, to say the least. Poet Brammarajan’s poems are multi-faceted, full of depth and range. They are genuine, poignant. For, real lovers of poetry, they speak volumes. Many lines from his poems are memorable. The same can’t be said of Thiru. Rajamarthandan as a poet.

  latha ramakrishnan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *