பிழைத்தோம்
மாலை நாலு மணி யாயிருக்கும்.
நான் சிறிது ஆயாஸத்தினால் படுத்து இலேசான தூக்கம் தூங்கி விழித்துக் கண்ணைத் துடைத்துக்கொண்டு தாம்பூலம் போட்டுக்கொள்ள யோசனை செய்துகொண்டிருந்தேன். அப்போது வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் வந்து சேர்ந்தார். இவர் நமக்கு ஆப்த சிநேகிதர். நல்ல யோக்கியர். ஆனால், சூதுவாது தெரியாத சாதுவான பிராணி.
இவர் வந்தவுடனே “ஓராச்சரியம்!” என்று கூவினார். “என்ன விஷயம்?” என்று கேட்டேன். “நேற்று ராத்திரி ஒரு கனவு கண்டேன்” என்றார். “என்ன கனவு? சொல்லும்” என்றேன்.
வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் பின்வருமாறு சொல்லலானார்:
“டாம், டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பக்ஷி போலே அகப்பட்டுக்கொண்டேன்.
“திடீரென்று எனக்குக் கீழே ஒரு வெடிகிளம்பும். அது என்னைக் கொண்டு நூறு காதவழி தூரத்தில் ஒரு க்ஷணத்திலே எறிந்துவிடும். அப்படிப்பட்ட வேகத்தை சாமானியமாக விழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் நம்மாலே ஸ்மரிக்கக்கூட முடியாது.
“மனோவேகம் என்பதின் பொருளை நேற்று ராத்திரித்தான் கண்டேன். அடே ராமா! ஒரு தள்ளுத் தள்ளினால் நேரே தலையை வானத்திலே கொண்டு முட்டும். அங்கே போனவுடன் மற்றொரு வெடி, அது பாதாளத்திலே வீழ்த்தும். எட்டுத் திசையும் பதினாறு கோணமும், என்னைக் கொண்டு மோதினபடியாக இருந்தது. வெடியின் சத்தமோ சாமானியமன்று. அண்ட கோளங்கள் இடிந்து போகும்படியான சத்தம். இப்படி நெடுநேரம் கழிந்தது. எத்தனை மணி நேரம் இந்தக் கனவு நீடித்ததென்பதை என்னால் இப்போது துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் சொப்பனத்திலே அது காலே யரைக்கால் யுகம் போலிருந்தது. மரணாவஸ்தை இனிமேல் எனக்கு வேறு வேண்டியதில்லை. மூச்சுத் திணறுகிறது, உயிர் தத்தளிக்கிறது, அந்த அவஸ்தை ஒரு முடிவுக்கு வருமென்றாவது, என் பிராணன் மிஞ்சுமென்றாவது எனக்கு அப்போது தோன்றவேயில்லை.
“நெடுநேரம் இப்படி என்னைப் புரட்டித் தள்ளிய பிறகு ஒரு சுவர் மேலே கொண்டு மோதிற்று. அந்தச் சுவரில் ‘ஓம் சக்தி’ என்று ஒளி எழுத்துக்களால் பலவிடங்களில் எழுதப்பட்டிருந்தது. அவற்றுள் மிகவும் ஒளி பொருந்திய எழுத்தின் கீழே ஒரு சிறு பொந்திருந்தது. அந்தப் பொந்துக்குள்ளே போய் விழுந்தேன். ஆரம்பத்தில் இவ்வளவு சிறிய பொந்துக்குள் நாம் எப்படி நுழைய முடியுமென்று நினைத்தேன். பிறகு சொப்பனந்தானே? எவ்விதமாகவோ அந்தப் பொந்துக்குள் என் உடம்பு முழுதும் நுழைந்திருக்கக் கண்டேன். அதற்குள்ளே போனவுடன் புகைச்சலுமில்லை, வெடியும் நின்றுவிட்டது.”
“கனவுக்குப் பொருள் கண்டுபிடித்துச் சொல்லும் சாஸ்திரம் எனக்குத் தெரியாது” என்று சொன்னேன்.
கிருஷ்ணய்யங்காருக்குத் திருப்தி ஏற்படவில்லை. நான் கனவு சாஸ்திரத்திலேயே ஒரு வேளை நம்பிக்கை யில்லாமல் இருக்கலாமென்று நினைத்து அவர் கொஞ்சம் முகத்தைச் சிணுக்கினார். பிறகு சொல்லுகிறார்:
“அப்படி நினையாதேயுமையா, கனவுக்குப் பொருளுண்டு. பலமுறை கனவிலே கண்டது நனவிலே நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்றார்.
‘காலைச் சுற்றின பாம்பு கடித்தாலொழியத் தீராது’ என்று வசனம் சொல்லுகிறது. ஆதலால், நான் இவருக்கு ஏதேனும் விடை சொல்லித்தான் தீர வேண்டுமென்று கண்டு பிடித்துக் கொண்டேன். எனவே பின்வருமாறு சொன்னேன்:
“அந்த வெடிப்புத்தான் உலகநிலை; அந்த சக்தி மந்திரமே தாரகம். அந்தப் பொந்து விடுதலை. அதற்குள் நுழைவது கஷ்டம். தெய்வ வெடியினாலே தள்ளினாலொழிய மனிதன் ஜீவன் முக்தி நிலையில் நுழைய முடியாது. உள்ளே நுழைந்து விட்டால் பிறகு அது விஸ்தாரமான அரண்மனையாகக் காணப்படும். அதற்குள்ளே நுழைந்தவர்களுக்கு அதன்பிறகு எவ்விதமான அபாயமுமில்லை. அதற்குள்ளே போனவர்கள் உண்மையாகவே பிழைத்தார்கள்” என்று சொன்னேன். கிருஷ்ணய்யங்கார் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்றார். மூச்சுத் திணறவுமில்லை, ஆறுதலுண்டாயிற்று.
வாழ்க்கைத் தத்துவத்தை எளிமையாய்ப் புரிய வைக்கிறார் பரதியார். இன்னும் நிறையக் கதைகளை வெளியிடுங்கள்.
நல்ல பதிவு
மனோ கார்த்திக்
திக்கு எட்டும் என்ற பாரதியார் பாடலையும் வெளியிடுக
வாழ்க்கையின் தத்துவத்தை மிக எளிமையாக எடுத்துரைக்கும் கதை.