இந்து நேபாளம் – ஒரு பார்வை

Nepali people
Nepali people

“என்னோட குழந்தை பம்பாய் நாட்டில் விபச்சாரம் செய்கிறாளாம்.. சீதான்னு பேர் வச்சேன்.. இப்படி ஆகிப்போச்சே” எனக்கதறும் தாயின் கதறல் அந்த அரன்மனைக்குள் கேட்கவே இல்லை. சாப்பிட வழியின்றி, வேலைவாய்ப்புக்கும் வழியின்றி கொத்துக் கொத்தாய் மக்கள் நாட்டை விட்டு பிழைப்புத்தேடி இந்தியாவிலும், கொஞ்சம் உடல் வலு இருந்தோர் மத்திய கிழக்கிலும் நாட்டைப்பற்றிய மோசமான எண்ணங்களுடன் வெளியேறினர், அப்போதும் ராஜாவுக்கு உறைக்க வில்லை..

தீண்டாமைக்கொடுமைகளினால் மக்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். நடத்தியவர்கள் உயர்ஜாதி இந்துக்கள், அதனால் ராஜாவிற்கு அதைப்பற்றி அறிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை…


மன்னருக்கு எதிராக சீனாவில் பயிற்சி பெற்ற மாவோதிகள் துப்பாக்கியைத் தூக்கியபோதும் நோய் முதல் நாடாமல் இந்தியாவிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதையும், நாடு அமைதியாய் இருப்பதாக உலக மக்களுக்கும், தனக்கும் ஒரு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் அரசர். வேலைவாய்ப்பின்றி மக்கள் மாவோதிகளின் கவர்ச்சியான கம்யூனிசத்திற்கு பலியாகி கம்யூனிஸ்டுகளாலேயே கேவலமாக நடத்தப்பட்டும், சுரண்டப்பட்டும் அவர்களை மன்னரை விட அதிகமாய் நம்பி ஆட்சியை ஒப்படைக்கும் அளவு மன்னர் மீதான வெறுப்பு, இதுவும் அவருக்குத் தெரியவில்லை, அல்லது கண்டும் காணாதது போல இருந்தார். ஏனெனில் அவர் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் விஷ்ணுவின் அவதாரமாக தன்னை மக்கள் நினைப்பதால் தனக்கும், தனது அரசுக்கும் ஏதும் நடவாது என நம்பிக்கொண்டிருந்தது. அதையே காரணமாக வைத்து நாட்டு நிலவரத்தை தவறாகக் கணித்தது.


மாவோதிகள் (நேபாளிகள் மாவோயிஸ்டுகளை இப்படித் தான் தங்கள் மொழியில் அழைக்கின்றனர் – மாவோ-வாதிகள் என்பதன் திரிபு) நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கும்போது ஏழு கட்சிக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. உள்ளூர் போலிஸாரை மாவோதிகளை அடக்க பாராளுமன்றம் கட்டளை இட்டது. அவர்களால் மவோதிகளை அடக்க இயலவில்லை. இதுதான் நடக்க வேண்டும் என மன்னர் எதிர்பார்த்தது. அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே ராணுவத்தை களத்தில் இறக்காமல் பயிற்சிகள் சரிவர இல்லாத உள்ளூர் போலிஸை மாவோதீவிரவாதிகளை ஒடுக்க அனுப்பினர். அவர்களால் மாவோதிகளை ஒடுக்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியதும் மன்னர் தான் தான் நாட்டைக் காப்பாற்றமுடியும் என கூறிவிட்டு முழுஅதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு ராணுவம் மூலம் அடக்க முயன்றார். அதற்குள் காலம் கடந்திருந்தது. பெருவாரியான நேபாள நிலப்பரப்பு மாவோதிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டிருந்தது. இதில் ஏழு கட்சிகளின் கூட்டணி யின் தோல்வி என்பதைவிட மன்னரின் அதிகார ஆசைக்கு நாடு பலியானது என்பதுதான் உண்மை. அரசர் ராணுவத்தை தனது மெய்க்காவல்ப் படைபோல நடத்தியதும், சரியான நேரத்தில் நாட்டைப்பாதுகாக்க பயன்படுத்தாமல் போனதும்தான் மாவோதிகளின் கை ஓங்கியதற்குக் காரணங்கள்.


இந்துப் பண்பாட்டின் மூலம் இயல்பாய் ஜனநாயகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டிய நேபாளம், இன்று ஜனநாயகத்தையே மறுக்கும் மாவோதிகளின் பிடியில். இந்த இழிநிலைக்கு அந்த நாட்டைக் கொண்டுவந்த மன்னருக்கும், அவரை இந்து நாட்டின் அரசர் என்ற ஒரே காரணத்திற்காய் அவரது தவறான கொள்கைகளை கண்மூடித்தனமாக ஆதரித்த இந்து இயக்கங்களுக்கும், இந்தியாவிற்கும் பங்குண்டு.


அவரை ஆதரித்த இந்து இயக்கங்களும் சரி, இந்தியாவும் சரி.. நேபாள மன்னருக்கும், மக்களுக்கும் உண்மையான இந்துதர்மம் பற்றி சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். சரியாக வழிநடத்தியிருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்ட இந்து சமூக சீர்திருத்தங்கள், தீண்டாமைக்கும், சாதியத்திற்கும் எதிராக இந்துதர்மத்தில் எழுந்த தலைவர்களின், ஞானிகளின் போதனைகள் நேபாளத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. தற்போது இந்தியாவில் நிகழும் உண்மையான இந்து எழுச்சி, மக்களுடன் இணைந்த வளர்ச்சி, இவையெதுவும் நேபாளத்தில் நடக்கவில்லை.


இதன் காரனாமய் மக்களுக்கும் ராஜ விசுவாசமும், சாதிச் சடங்குகளும், மூடப் பழக்க வழக்கங்களும் தான் இந்து தர்மம் என நினைக்கத் தலைப்பட்டு விட்டனர். அரசியல் ரீதியாகவும் நேபாளம் இந்தியாவிற்கு அத்தனை விசுவாசமாய் இருந்ததில்லை. இருப்பினும், நம்பிக்கையாய் இல்லாது போனாலும் மாவோதிகளின் தாக்குதல் ஆரம்பித்த போது அப்போது நடந்த பா.ஜ.க அரசு நேபாளத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. இந்தியாவிலிருந்து நேபாளம் உதவிகளை மட்டும் பெற்றுக்கொண்டு எப்போதும் நம்பகத் தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை. இந்தியாவிலிருந்து செயல்படும் நக்சலைட் இயக்கங்களுடனும், சீனத் தொடர்பு மாவோ இயக்கங்களுடனும் நேபாள மாவோதிகள் தொடர்புகொண்டு ஆயுதப்பயிற்சியையும், ஆயுதங்களையும் பெற்று வந்தனர். அதற்கு இந்திய கம்யூனிஸ்டுகளும் உடந்தையாய் இருந்தனர்.

Kathmandu view

மாவோதிகளின் தொடக்கமும், இன்றைய நிலையும்


கொரில்லா அடிப்படைத் தாக்குதல் நடத்தி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து மன்னராட்சியை நீக்கி மக்களாட்சியை மலரச் செய்யப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த மாவோ இயக்கம்,( 1996) ஆரம்பத்தில் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தது. அதன் பின்னர் அவர்களது தொடர்ந்த செயல்பாடுகளுக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் கிராமங்களுக்கு இவ்வளவு பணம் தரவேண்டும் எனக் கட்டளை இட்டனர்.


தரமுடியாமல் போன கிராமங்களில் அவர்களது அட்டகாசம் தாளவொண்ணா அளவு பெருகியது. கிடைத்ததை சுருட்டிக்கொண்டு போவது. அரிசி, பருப்பு, பாத்திரம், பண்டம் என ஒன்றையும் விடாமல் கொண்டு சென்றனர். வெளிநாட்டில் வேலைபார்க்கும் நேபாளிகளின் வீட்டில் உள்ள உறவினர்கள் உயிரோடிருக்க மாதாமாதம் இவ்வளவு பணம் தரவேண்டும் என மிரட்டுவது, பெட்ரோல் பங்குகள், அரசு வங்கிகள். அரசு அலுவலகங்களை கொள்ளையடித்தல், புறநகர்ப் பகுதி காவல் நிலையங்களுக்குத் தீவைத்தல் என இவர்கள் கிட்டத்தட்ட ஒரு ரவுடி ராஜாங்கத்தையே நடத்தினர். அவர்கள் அரசின் உளவாளி என சந்தேகிக்கும் எவரையும் கொன்றனர். இப்படிப்பட்டவ்ர்களிடம் ஆட்சியை வழங்கிவிட்டு இடியாப்பச் சிக்கலில் மாட்டி முழிக்கின்றனர் நேபாளிகள். மன்னர் ஆட்சி முடிந்து, மாவோதிகளின் ஆட்சி வந்து மீண்டும் நாடு குழப்பத்தில் ஆனதும் மதமாற்றக் கும்பல்களுக்குக் கொண்டாட்டம் ஆனது.


இன்று நேபாளத்தில் நடப்பது என்ன?? வெறும் எட்டாயிரம் எண்ணிக்கையில் இருக்கும் கத்தோலிக்கர்கள் மதமாற்றம் செய்வது தங்கள் உரிமை எனவும் அதற்கு எதிராக எழும் எந்தக்குரலையும் அடிப்படைவாதிகள் என சொல்லவும் தைரியம் பெற்று உலகமெங்கும் இருக்கும் மதமாற்றக் கும்பல்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களுக்கு உலகமெங்கும் இருக்கும் மிஷநரிகளின் ஆதரவும் கிறித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் கூக்குரல் இடுவதும் வழக்கமாகி விட்டது.


நலிந்து பட்ட உடலில் நோய்கள் புகுவதுபோல இன்று மோசமான நிலையில் இருக்கும் நேபாளத்தைக் குறிவைத்து மிஷநரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. வறுமையைப் போக்குகிறோம், கல்விதருகிறோம் இன்னும் பல சலுகைகள், வேலைவாய்ப்பு என எத்தனையோ காரணங்களைக் கூறி மதமாற்றம் கனஜோராக நடக்கிறது. இதுவரை இல்லாத அளவு புற்றீசல்போல கிறித்தவ மதமாற்றக் கும்பல்கள் பலப் பல பெயரில் அங்கு சேவை நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்படுகின்றன.


அவர்களது குறிக்கொள்கள்:

  • கடைசி நேபாளிவரை கிறித்தவனாக மதம்மாற்றுவது.
  • புதிய புதிய சர்ச்சுகளை உருவாக்குவது.
  • உள்ளூர் நேபாளிகளையே இதே மதமாற்ற ஆக்கிரப்பு – வியாபாரத்தில் பகடைகளாக ஈடுபடுத்துவது.

நேபாள் ஃபார் கிரைஸ்ட் (நேபாளம் ஏசுவுக்கே) என்பது போன்ற வெளிப்படையான பெயர்களில் உள்ள வலைத்தளம் தொடங்கி எண்ணற்ற வலைமனைகளும், விவாதக்களங்களும் எப்படி புதிதாக கிடைத்துள்ள நேபாள் எனும் இரையை பங்கு போட்டுக்கொள்வது என்பதில் தீவிரமாய் இருக்கின்றனர்.


நினைத்துப்பாருங்கள் இரண்டு கோடியே தொன்னூறு லட்சம் மக்களை மதம் மாற்றக்கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடுவார்களா என்ன??


இந்தியாவும், அகில உலக இந்து இயக்கங்களும் செய்ய வேண்டியது என்ன?

  • நேபாள மக்களுக்கு இந்துதர்மத்தின் உண்மையான கருத்துக்களையும், சமத்துவ சமூக நடைமுறைகளையும் சொல்லிக் கொடுப்பது.
  • கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணரச்செய்து ஜாதிபேதங்களை களைவது. பிறமத ஊடுருவல்களால் எப்படி சமூக அமைதி குலைகிறது. அதன்மூலம் எப்படி பிற மதங்களுக்கு கட்டாய மதமாற்றம் செய்கின்றனர் என்பதை அவர்களுக்கு உணர்த்துதல்.
  • இந்து இயக்கங்களும், மடாலயங்களும், ஆச்சாரியார்களும் நேபாளத்தில் மக்களை பிற மத தாக்குதலிலிருந்து பாதுகாத்தல்.
  • உண்மையான ஜனநாயகத்தை, இந்துதர்மத்துடன் கூடிய அனைத்து மக்களுடனும் இணைந்து வாழும் ஒரு கலாச்சார மாற்றத்திற்கு அடிகோலுதல் இவையெல்லாம்.

இடித்துரைக்கும் நண்பனோ மந்திரியோ இல்லாத மன்னனாக வாழ்ந்து தனது குடும்ப உறுப்பினர்களின் நலன் மட்டும் கண்ட இந்த நேபாள மன்னனால் ஒரு நல்ல நாடு எப்படி ஜனநாயகத்தை மறுக்கும் மாவோதிகளின் கையில் சென்றது என்பதற்கு உதாரணமாய் ஆனது.


இதுபோல மக்கள் நலனை நாடாத எந்த ஒரு அரசும் ஒருநாள் தூக்கி எறியப்படும் என்பதை உணர்ந்து நேபாள அரசியல்வாதிகளும், இந்துசமுதாயமும், அதன் தலைவர்களும் செயல்படவேண்டும்.

3 Replies to “இந்து நேபாளம் – ஒரு பார்வை”

  1. எந்தவித உணர்ச்சிவசப்பட்ட சாய்வுமின்றி, அமைதியாகவும், ஆலோசித்தும் எழுதப்பட்ட கட்டுரை.

    எழுதிய வெற்றிச்செல்வனின் திறமை பாராட்டவைக்கிறது.

    இந்துத்துவம் என்பது தனக்குள்ளும், வெளியேயும் இருக்கும் குறைகளைக் களைந்து பரிணாமத்தில் மனிதர்களை முன்னேற்றிக்கொண்டே இருக்கும் ஒரு போக்கு என்பதற்கும், தனது குறை நிறைகளை வெளிப்படையாக முன்வைத்து உரையாடுதலின் மூலம் செழுமை பெறும் பாரம்பரியத்தைக் கொண்டது அது என்பதற்கும் இந்தக் கட்டுரை ஒரு சோற்றுப் பதம்.

  2. Gives realistic picture of Nepal.
    Hindus should realise the dangerous portend arising out of the missionary activities.

  3. கொஞ்ச கொஞ்சமாக இந்து கலாச்சாரம் அழிவதற்க்கு இந்திய அரசும், இந்திய குடிமகன்களான நாமும் ஒரு காரணம், காங்கிரஸ் போன்ற இந்து சிந்தனை இல்லாத கட்சியை நாட்டை ஆழ விடுவது, சந்தற்ப்பவாத பா.ஜ.க போன்ற கட்சிகள் மூல காரணம். ராமர் கோவிலை பிரச்சாரமாக்கி அரசியல் கட்டில் அமர்ந்த பா.ஜ.க அதன்பின் அடுத்த தேர்தலில் அடிவாங்கியபின் தான் விழித்தது. இவர்களால் இந்து மதம் தழைத்தோங்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

    \\\\\இந்தியாவும், அகில உலக இந்து இயக்கங்களும் செய்ய வேண்டியது என்ன?\\\\ ??????????/
    இலங்கையில் ஆயிரமாயிரம் இந்து கோயில்கள் இந்து மக்கள் கண்மூடித்தனமாக சீன ஆயுதங்களுக்கு பலியாகும் போது வாய்மூடி மெளனமாய் இருந்த நாம் நேபாளம் பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

    இந்த கட்டுரையை ஆழ்ந்து படித்தால் ஒன்று மட்டும் புரிய வருகிறது!!!!
    சொல்லவா?

    சொல்லுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *