கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அது போல பாவித்து எடுக்க முயற்சி செய்யப்பட்டுச் சொதப்பப்பட்ட ஒரு மலையாளப் படம். மிகப் பெரும் கலைப் படைப்பு ஒன்றை எடுப்பதாய் ஒரு பாவனை செய்து கொண்டு மிகவும் போலித்தனமாகவும் அமெச்சூர்த்தனமாகவும் எடுக்கப்பட்ட ஒரு சாதாராண மலையாளப் படம். இந்தப் படத்தில் பாரட்டுவதற்கும் ஏதும் இல்லை. நான் இங்கு சொல்லப் போவது சுமாரான இந்த சினிமா பற்றியோ, சுகுமாரியின் சிவாஜிகணேசத்தனமான நடிப்பைப் பற்றியோ, தான் எதுக்காக வருகிறோம் என்றே தெரியாமலேயே சினிமாவில் தலை மட்டும் காட்டிவிட்டுப் போகும் மோகன்லாலைப் பற்றியோ அல்ல. மொத்தத்தில் இந்தப் படம் மெனக்கெட்டு குறிப்பிடும் அளவுக்கு எந்த விதத்திலும் ஒரு சிறப்பான படமோ அல்ல, குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவோ அல்ல. பெரிய கலைப் படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு பாப்கார்ன் என்ற படு மோசமான ஒரு சினிமாவை எடுத்த நடிகர் நாசரைப் போலவே இந்தப் படத்தையும் அஷோக் ஆர் நாத் என்னும் ஒரு டைரக்டர் குறைப் பிரசவ சினிமாவாக மிகவும் அமெச்சூர்த்தனமாக எடுத்திருக்கிறார்.
இவ்வளவு குறைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் தன் கதையினாலும், ஒரு சில வசனங்களினாலும், ஜிஹாதி பயங்கரவாதத்தினால் சூழப்பட்ட இன்றைய இந்திய சூழ்நிலையில் குறிப்பிடத் தக்க ஒரு படமாக மாறிப் போகிறது. இப்படி ஒரு சினிமா தமிழ் சூழலில் எடுக்கப் படுவது சாத்தியமில்லை என்பதினாலும் இதில் துணிவாக எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சிகளினாலும் இந்தப் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
மிழிகள் சாக்ஷியின் கதை:
ஒரு வயதான ஊமைப் பெண், கேரளத்தில் ஊர் பெயர் தெரியாத ஏதோ ஒரு பெரிய அம்பலத்தில் வந்து ஒதுங்குகிறார். அம்பலத்தில் உள்ள சில மனிதாபினாம் மிக்க இந்துக்களும், கோவிலில் தரப்படும் அன்னதானமும், அடைக்கலம் கொடுக்கும் ஒரு பூக்காரப் பெண்ணும் அந்த முதிய பெண்மணியை அரவணக்கின்றார்கள். கோவில் குளத்தில் குளித்து, அம்பலத்தில் போடும் அன்னதானத்தைச் சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே கிடந்து கோவிலைக் கூட்டிப் பெருக்கி, கொஞ்சம் கொஞ்சமாக கோவில்காரர்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்று கோவில் வாசலிலேயே தங்கி ஒரு அதிதியாகி விடுகிறார். அநாதரவாக வந்த அந்தப் வாய் பேச முடியாத, லேசாக மன நிலை பாதித்த அந்தப் பெண்ணிற்கு கோவில் உணவு, உடை, இருப்பிடம், அன்பான அரவணைப்பு எல்லாம் தருகிறது. அந்த ஆசுவாசத்தில் அவரும் கோவிலுடன் ஒன்றி விடுகிறார். ஒரு சமயம் கோவிலில் சுவாமி உற்சவத்தின் பொழுது சேவகம் செய்யும் பேறும் கிட்டுகிறது. ஏன் கிருஷ்ணனின் விக்ரகத்தைக் கூடத் தொட்டு விட்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்குக் கோவிலின் அடியாராகி விடுகிறார். பேச முடியாதபடியால் யார் என்ன போன்ற விபரங்கள் தெரிவதில்லை. எப்பொழுதும் அழுத முகமும் கண்ணீருமாக எதையோ தேடிஅலைகிறார். இப்படியே பல நாட்கள் கழிகின்றன. கண்ணன் புகழ் பாடும் கதகளியும், குழந்தைகளுக்கான சாப்பாட்டு ஊட்டலும், துலாபாரமும், கோவில் தீர்த்தமும், கோவில் நியமங்களும் அவருக்குப் பெரிய ஆசுவாசத்தையும் ஆறுதலையும், பாதுகாப்பையும், ஆன்மீகமான நிம்மதியையும் அளிக்கின்றன.
ஒருநாள் அவர் ஒதுங்கியிருக்கும் அறையில் தனியாக அவர் தொழுகை நடத்திக் கொண்டிருப்பதை கோவில் நம்பூதிரிகள் பார்த்து விட நேர அவர் முஸ்லிம் என்ற உண்மை தெரிய வருகிறது. கோவில் தீட்டுப்பட்டு விட்டதாக வைதீகர்கள் அனைவரும் பெரிய பிரச்சினை பண்ணி விடுகிறார்கள். அவர் ஒரு முஸ்லிம்; அவர் ஏன் கிருஷ்ணன் கோவிலுக்கு வந்து கோவிலை அசுத்தப் படுத்தினார் என்ற கேள்வி எழுகிறது. கோவிலுக்கு புண்யாவாசனம் செய்யவேண்டும் என்று தீர்மானித்து விடுகிறார்கள். அவரை அடித்து விரட்டினாலும் கோவிலைவிட்டுப் போகாமல் கண்ணீரும் கம்பலையுமாக கோவிலிலேயே சுற்றி சுற்றி வருகிறார். அவரை அடையாளம் கண்டு ஒரு முஸ்லிம் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உடனே ஜமாத் வந்து இந்துக் கோவிலில் போய் அடைக்கலமானவளை முஸ்லிம் வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மிரட்டித் துரத்திவிட்டு விடுகிறார்கள். அதே நேரத்தில் அவரை தன் அன்னையாக நினைத்து அந்தக் கோவிலின் நம்பூதிரி ஒருவரே உருகுகிறார். இன்னும் பல இந்துக்களும் அவருக்காக மனம் இரங்குகிறார்கள். அடைக்கலம் கொடுக்கப்பட்ட ஹாஜியார் ஒருவர் வீட்டிருந்தும் முஸ்லிம் ஜமாத்தினால் துரத்தப்பட்டு விட மீண்டும் கோவிலை நோக்கி அடைக்கலம் கோரி ஓடி வருகிறார் அந்த அநாதரவான முஸ்லிம் பெண்மணி. இந்த முறை கோவில் நிர்வாகிகள் வேறு மதப் பிரச்சினைகள் வந்து விடக் கூடாது என்பதற்காக அவரைப் போலீஸில் ஒப்படைத்து விடுகிறார்கள். விசாரிக்க வந்த உயர் அதிகாரி அவரை அடையாளம் கண்டு கொள்கிறார். அவர் குண்டு வெடிப்புக் குற்றசாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் தீவீரவாதியின் அம்மா.
அவரது கதையை பிற போலீஸ்காரர்களுக்குச் சொல்கிறார். அவரது மகன் ஒரு இஸ்லாமியக் கல்லூரியில் லெக்சரர். நாம் இணையத்தில் காணும் இஸ்லாமியக் கல்லூரி லெக்சரர் ஒருவரோ சல்மான் ருஷ்டியைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள் என்று வன்முறையையும் பயங்கரவாதத்தையும் போதிக்கும் லெக்சரராக இருக்கிறார். ஆனால் சினிமாவில் வரும் இந்த முஸ்லிம் லெக்சரரான மோகன்லாலோ ஒரு நிஜமான சீர்திருத்தவாதி. லெக்சரர் ரூமி போன்று வன்முறைகளை ஒரு போதும் போதிக்காத நல்ல உள்ளம் படைத்த ஒரு பக்தியான முஸ்லிம். அவர் சீர்திருத்தவாதி என்பது நமக்கெல்லாம் புரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக அவர் வீட்டுச் சுவற்றில் அவரின் தலைக்குப் பின்னால் எப்பொழுதும் காந்தி நேரு, சே குவாரா, லெனின், ஸ்டாலின் எல்லோரும் அருள்பாலித்துக் கொண்டேயிருக்கிறார்கள்!! அவர் இஸ்லாமியர்களின் நடுவில் ஒரு புரட்சிக்காரராக மதத்தை எதிர்ப்பவராகக் கருதப்படுகிறார். அவர் சிறிய அளவிலான புரட்சிக்காரர், தன் கருத்துக்களை கூறப் போக ஜமாத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட கவிஞர் ரசூலைப் போலவே இந்த சினிமாவில் வரும் மோகன்லாலும் செயல்படுகிறார்.
அவர் இஸ்லாமில் உள்ள பெண்ணடிமைத்தனம், தீவீரவாதம், காஃபிர்களை வெறுக்கும் போக்கு ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டித்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார். எழுதுகிறார், பேசுகிறார். ஈஸ்வரனை எந்த வடிவிலும் நம்பும் எவருமே ஆண்டவனின் பக்தர்களே அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் நாம் மதிக்கவேண்டும் வெறுக்கக் கூடாது என்று உபதேசித்துக் கொண்டிருக்கிறார். பர்கா போடுவதைக் கண்டிக்கிறார். குரான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது (என்று ஒப்புக்கு) ஒரு வசனமும் இருக்கிறது. வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் பாடவேண்டும் என்றும் முஸ்லிம்கள் தேச பக்தியில் இருந்து என்றும் விலகக் கூடாது என்றும் பல கூட்டங்களில் பேசுகிறார். தேச பக்திவேண்டும் என்கிறார்.
இஸ்லாமியத் தீவீரவாதத்தையும் இந்துக்களைக் கொல்லவேண்டும் என்று மூளைச் சலவை செய்யும் ஆட்களை கடுமையாகக் கண்டிக்கிறார். அவரது மென்மைவாதப் போக்கும், இந்திய தேசிய ஆதரவும், பிற மதத்தினரை அரவணைக்கும் போக்கும் பிடிக்காத மத வெறி பிடித்த முஸ்லிம் தலைவர்களும், ஜமாத்களும் அவர் மேல் கோபம் கொண்டு அவரைத் தூற்றுகிறார்கள். அவரது மத நல்லிணக்க நடவடிக்கைகள் பிடிக்காத ஜமாத் அவரைத் தள்ளி வைத்து விடுகிறார்கள். அவருக்கு பனிஷ்மெண்ட் கொடுத்து வேறு எங்கோ போய் வேலை பார்க்க அனுப்பி விடுகிறார்கள். அவர் போகும் ரெயிலில் குண்டு வைத்து விடுகிறார்கள். அவர்தான் வைத்தார் என்பதற்கான சகல சாட்சிகளும் செட்டப் செய்யப்பட்டு விடுகின்றன. அவர் கம்ப்யூட்டரில் தீவீரவாதத் தொடர்புகள் திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. தூக்கில் போட்டு விடுகிறார்கள் அவரும் வந்தே மாதரதைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டே தூக்கில் தொங்கி விடுகிறார். (இது மட்டும் நம்ப முடியவில்லை., இந்தியாவில் எந்த முஸ்லிமையாவது அவன் எவ்வளவு கொடூர தீவீரவாதியாக இருந்தாலும் தூக்கில் போட மன்மோகன்விட்டுவிடுவாரா என்ன?) அப்பாவும் இறந்து போக அம்மா அநாதையாகக்கிளம்பி மனம் பேதலித்து கிருஷ்ணன் கோவிலில் அடைக்கலமாகி விடுகிறார். போலீஸ் வந்து விசாரித்து, இந்து முஸ்லிம் பிரச்சினை வந்து விடக் கூடாது என்றும்,எதற்கு வம்பு என்றும் அவரை ஒரு கத்தோலிக்க அநாதை விடுதியில் கொண்டு போய் சேர்க்கிறார்கள்.
ஆனால் அவரது மனமோ அந்தக் கிருஷ்ணன் கோவிலையே சுற்றி சுற்றி வருகிறது. அநாதை நிலையத்தில் ஒரு இரவு கூடத் தங்கப் பிடிக்காமல், மீண்டும் இரவில் கோவிலை நோக்கி ஓடிப் போகிறார். கோவிலில் அவரை ஆகர்ஷிக்கின்றது. மீண்டும் கண்ணனின் கால்களில் சரணடைகிறார். கதகளியாடும் காட்சியை கண் முன் நிறுத்திக் கொண்டே, கண்ணனைத் துதித்து கதகளி ஆடுவதாக நினைத்துக் கொண்டே கோவில் குளத்தின் படிததுறையிலேயே உயிர் விடுகிறார். அவரை லாரியில் அநாதைப் பிணமாகத் தூக்கிக் கொண்டு போவதுடன் படம் முடிகிறது.
வாய் பேச முடியாத முஸ்லிம் பெண்ணாக மலையாளத்தின் மிகப் பெரும் நடிகையான சுகுமாரி நடித்துள்ளார். சுகுமாரி அற்புதமான ஒரு நடிகர். ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு அவார்ட் கிடைக்கச் செய்கிறேன் என்ற நினைப்பில் திரிசூலம் சிவாஜிகணேசன் சாயலில் ஓவர் ஆக்டிங் செய்ய வைத்து சொதப்பியிருக்கிறார்கள். அவர் அழுகிறார், உதட்டைப் பிதுக்குகிறார். விம்முகிறார், பத பதைக்கிறார், படபடக்கிறார், விம்முகிறார், மீண்டும் அழுகிறார், மீண்டும் அழுகிறார், சோகத்தைப் பிழிகிறார், மீண்டும் அழுகிறார், அழுது அழுது கண்ணீரைப் பிழிகிறார், மீண்டும் அழுகிறார், உதட்டைப் பிதுக்கிறார், நெஞ்சம் பிளப்பது போல சோகத்தில் துவள்கிறார், மீண்டும் அழுகிறார். இப்படியே பாதிப் படம் சுகுமாரியின் சோகத்தைப் பிழிவதிலேயே ஓடி விடுகிறது. அடுத்துக் கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் சுகுமாரியுடன் இயக்குனரும் சேர்ந்து அழுது கொண்டிருக்க, நாமும் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த கொடுமைக்காக அழ ஒரே அழுவாச்சி காவியம் தான். சுகுமாரி போன்ற அருமையான நடிககையை சிவாஜி கணேசன் போல நடிக்க வைத்த பாவத்திற்கும், மோகன்லால், நெடுமுடி வேணு, மனோஜ் ஜெயன் போன்ற அற்புதமான நடிகர்களை வீணாக்கியதற்காகவும் அந்த அஷோக் நாத்தை ஒருநாள் முழுக்க இந்தப் படத்தைப் பார்க்க வைப்பதே உரிய தண்டனையாக இருக்கும். பாதி படத்திற்கு மேலே ஏதோ கதை சொல்லவேண்டும் என்ற நினைப்பு வந்து திருப்பத்தை வைத்து அமெச்சூர்த்தனமாக இருந்தாலும் கூட ஒன்றிரண்டு தேவையான முக்கியமான விஷயங்களைத் தொட்டிருப்பதால் நாம் அவரை மன்னித்துவிட்டு விடலாம்.
என்னமோ சொல்ல நினைத்து உருப்படியாக ஒரு படத்தை எடுக்காமல் சொதப்பியிருக்கிறார் இயக்குனர். ஆனாலும் இவ்வளாவு தூரம் துணிவாக இஸ்லாமியத் தீவீரவாதம் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறார். அந்த முயற்சிக்காக மட்டுமே நாம் இந்த இந்த இயக்குனரை தாராளமாகப் பாராட்டலாம். தமிழில் இது போன்ற முயற்சிகள் சாத்தியமேயில்லை. பர்காவைப் பற்றியும், முஸ்லிம்கள் வந்தேமாதரம் பாடவேண்டும் என்றும்,காஃபிர்கள் என்று பிற மதத்தினரை வெறுக்கக் கூடாது என்றும் உபதேசம் பண்ணுவதும் அல்லாமல் இந்தப் படத்தைத் தாயரிக்கவும் செய்திருக்கிறார் கேரளத்தின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால். அவரது திறமையும், நடிப்பும் இந்த படத்தில் வீணடிக்கப் பட்டிருந்தாலும் கூட அது சொல்லும் செய்தியினால் இந்தப் படம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டில் எந்தவொரு சூப்பர் ஸ்டாரும் தொட மறுக்கும், அஞ்சும் ஒரு விஷயத்தை ஒரு பாத்திரத்தை துணிவாக மோகன்லால் செய்திருக்கிறார். பாலன்ஸ் செய்கிறேன் பேர்வழி என்று இந்துக்களை அவ்வளவு தூரம் மோசமாகவும் காண்பிக்கவில்லை. ஒரு சில கேரளக் கோவில்களில் மிகவும் ஆச்சாரங்களை அனுஷ்டானிப்பது கேரளத்தில் வழக்கமான ஒரு நியமம்தான். இருந்தாலும் படத்தில் நிறைய இந்துக்கள் அந்த புனிதப் படுத்தும் செயல்பாட்டைக் கூட கண்டிக்கிறார்கள். அந்த முஸ்லிம் பெண்ணின் மீது பரிதாபம் காட்டி அரவணைக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர், ஏதோ சொல்ல நினைத்து தொண்டையிலேயே நின்று போய் சொல்லியும் சொல்லாமலும் விட்டிருக்கிறார் என்று மட்டும் தோன்றுகிறது.
இப்படி இஸ்லாமியத் தீவீரவாதத்தைக் கண்டித்தும், கோவிலில் தன் அமைதியைத் தேடும் ஒரு அநாதரவான முஸ்லிம் பெண்னின் கதையைப் பற்றியும் ஒரு சினிமா வந்துள்ளது என்று தெரிய வேண்டுமே என்பதற்காக நான் இதை எழுதினேன். மற்றபடி, சிறந்த கலைப்படம் என்ன சுமாரான படம் என்று கூட இதைச் சொல்லமுடியாது. என்ன நினைத்து இந்தப் படத்தை எடுத்தார்கள் என்பதும் புரியவில்லை. இதில் என்ன சொல்ல வருகிறார் என்பதை கதையைப் படித்த உங்கள் முடிவுக்கேவிட்டு விடுகிறேன். படத்தின் ஒரே ஆறுதல் தஷிணாமூர்த்தியின் இசையும், வினீத்தின் கதகளி நடனுமே ஆகும். பாராளுமன்றத் தாக்குதலில் கைதாகி விடுவிக்கப்பட்ட லெக்சரர் ஜிலானியின் நிலையை இந்தப் படம் நியாயப்படுத்த முயல்வதாக ஒரு சிலர் நினைக்கிறார்கள். முஸ்லிமாக மாறிய பின்னும் குருவாயூரப்பனை நினைத்து உருகிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட சர்ச்சைக்குரிய எழுத்தாளரான மறைந்த கமலா தாஸ் வாழ்க்கையையும் சற்றே இந்தப் படம் நினைவு படுத்துவது போலவும் உள்ளது. இந்தப் படத்தில் வரும் சீர்திருத்த எண்ணங்களும் மிதவாதப் போக்குகளும், கருணையும், அன்பும், சகிப்புத் தன்மையும் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரிக்குமானால் நம் எதிர்கால சமுதாயம் நிம்மதியாக வாழ ஒரு அமைதியான உலகம் நமக்கு அமையும். அதற்காக எல்லாம் வல்ல அல்லாவை நாமும் பிரார்திப்போமாக.
நல்ல விமர்சனம். மோசமான கலைப் படைப்பாக இருந்தாலும், படம் தொட்டுக் காட்டும் சமூக, கலாசார விஷயங்கள் முக்கியமானவை. அதனை அருமையாக விளக்கிய விஸ்வாமித்ராவுக்கு நன்றி.
விஸ்வாமித்ராவின் இந்த விமர்சனம் அருமை. ஒன்றுக்கும் தேறாத இந்தப்படத்தில்தான் நாம் இன்றைக்கு எதிர்கொள்ளும் இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர். இதுபோன்ற பல சினிமாக்கள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். தவறான வழிநடத்தலில் செல்லும் இஸ்லாமிய இளைஞர்கள் தடுக்கப்படவேண்டும். ஒரு நல்ல இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க இஸ்லாமிய சமூக மூத்தோர்கள் உண்மையாய் முயலவேண்டும்.
sir verygood artical now tamilhindu.com superp
கதை நல்ல கதைபோலத் தெரிகிறது. இதுபோன்ற பல சினிமாக்கள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று கூறும் ஜெயக்குமாரின் கருத்துடன் உடன்படுகிறேன்.
விஸ்வாமித்ரா சிவாஜி கணேசன் நடிப்பை எதிர்மறை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
நடராஜன்.
நடராஜன் அவர்களுக்கு
ஆம் நல்ல கதைதான். நல்ல இயக்குனரிடம் மாட்டியிருந்தால் ஒரு அருமையான படமாக வந்திருக்கும். நான் சிவாஜி கணேசன் நடிப்பை இங்கு குறையாகச் சொல்லவில்லை. இந்தப் படம் ஒரு கலைப் படமாக எண்ணி எடுக்கப் பட்டுள்ள படம். இது போன்ற படங்களுக்கென்று ஒரு நடிப்பு பாணி இருக்கிறது. அதற்கு நாடக பாணி நடிப்பு ஒத்து வராது. சிவாஜியே முதல் மரியாதையிலும், தேவர் மகனிலும் அந்தப் படங்களுக்குரிய இயல்பு அறிந்து வித்யாசமாக நடித்திருப்பார். அது போல இது இயல்பாக நடித்திருக்க வேண்டிய ஒரு படம். சுகுமாரி அபாரமான ஒரு நடிகை. அவரைக் கொஞ்சம் அதிகப் படியாக வேலை வாங்கியது இது போன்ற சினிமாக்களுக்கு ஒவ்வாது உள்ளது. ஒவ்வொரு விதமான நடிப்பிற்கும் ஒவ்வொரு விதமான படம் இருக்கிறது. அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் கண்ணாம்பாள் நடித்தால் அவர் வேறு விதமான நடிப்பைக் காண்பிக்க வேண்டியிருக்கும். அதைத்தான் நான் குறிப்பிட்டேன். சுமாரியின் நடிப்பு படத்தின் இயல்புக்கு ஒவ்வாமல் போய் விட்டது. முதல் மரியாதை சிவாஜி கணேசன் போல இருந்திருக்க வேண்டிய நடிப்பு திரிசூலம் சிவாஜி ரேஞ்சுக்குப் போய் விட்டது. மற்றபடி நானும் சிவாஜியின் ஒரு சில வகையான நடிப்புக்களுக்கு பெரும் ரசிகன் தான். இடம் இயல்பு பொருத்து நடிப்பு மாற வேண்டும் என்று சொல்ல வந்தேன்.
நன்றி
விஸ்வாமித்ரா
Regardless of the merits or demerits of the film, i we must admit it is a subject unthinkable- and even anathema to the Tamil cinema which shows Hindus- especially Brahmins- in bad light with those lewd, double-meaning dialogues on their attire, women and dialect which forms the comic elements . (e.g simbus ‘Silambattam’)
But when it comes to other communities, our filmmakers show extra sensitivity. Thus the good samaritans with a reformist zeal in Tamil films are invaribly a soft-spoken Christian priest ( the BGM switches to a soft note on piano or keyboard as the camera captures the picture of virgin mary with the child!) or a devout Muslim with a flowing beard, skull cap et al frequently using phrases like ‘Masha Allah’ or ‘Inshah Allah’ (here BGM music is mandolin accompanied by circular drum with metallic discs on its circumference, with strains of ‘Allaho Akbar..’ sung by MSV or Nagoor Haneefa!)
The fact is the worst Malayalam films are much better than the super hits churned out by Kodambakkam.
படத்தில் உள்ளது போல அல்லாமல் முஸ்லிம்கள் முஸ்லிம் முதியவர்களை மட்டுமல்ல, அனைத்து மத முதிய வர்களையும் அரவணைத்து பாதுகாப்பவர்கள் என்பது உங்களைப்போல குருடர்களுக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பேதுமில்லை.