ஓடிப் போனானா பாரதி? – 10

பகுதி 10

என் கேள்விக்கென்ன பதில்: 2

courtesy: www.kalachuvadu.com
courtesy: www.kalachuvadu.com

இந்தத் தொடரின் எட்டாம் பகுதியின் கடைசியில் நாம் சில கேள்விகளை எழுப்பிக்கொண்டோம். அவற்றில், ‘இந்தியா’ பத்திரிகையில் ஆசிரியராகவும், உரிமையாளராகவும் பதிவுபெற்றிருந்த சீனிவாசன் அரசாங்கத்தாரால் கைது செய்யப்பட்டதற்கு பாரதியின் எழுத்துகளே காரணம் என்றாலும், இந்தக் கைது நடவடிக்கைக்குப் பின்புலமான சட்டச் சிக்கல்களுக்கு பாரதி பொறுப்பாக மாட்டான் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். நாம் கண்டறிந்த முக்கியமான செய்தி, இதுவரையில் இந்தத் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டவர்கள் எல்லோரும் சொல்லிக்கொண்டு வருவதைப்போல், முரப்பாக்கம் சீனிவாசன் அசக்தனான ஒரு குமாஸ்தா அல்லர். அவரும் ‘இந்தியா’ பத்திரிகையில் முதலீடு செய்திருந்தவர்களில் ஒருவர். அவருடைய வாக்குமூலம் இதனைத் தெளிவாக்குகிறது. பத்திரிகையை யார் பெயரில், என்ன பதவியில் காவல் துறை கமிஷனரிடம் பதிவு செய்துகொள்வது என்பது நிர்வாகம் எடுத்த முடிவு. பாரதி, அந்தப் பத்திரிகையின் எழுத்துப் பணியில் மட்டுமே ஈடுபட்டு வந்தவன். ஆகவே, கால காலமாகச் சொல்லப்பட்டுக்கொண்டு வரும், ‘நம்பியிருந்தவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டு தாம் தூரப் போய்விட்டமை,’ என்றும் ‘பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு களங்கமே,’ என்றும் குறிக்கப்பட்ட வாதம், அபவாதமே என்பதைக் கண்டோம்.

இப்போது நாம் எழுப்பிக்கொண்ட இன்னொரு கேள்விக்குப் போவோம். சீனிவாசனின் வக்கீல்கள் – முக்கியமாக அவருடைய கெளன்ஸல் ஆன கெளடல் என்ற வக்கீல் – எடுத்து வைத்த வாதங்கள் எடுபடாமல் போயின. இந்த வழக்கை விசாரித்த மிஸ்டர் ஜஸ்டிஸ் மன்றோ, ‘சீனிவாசனின் வக்கீல்கள் வைத்திருக்கும் வாதங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளத் தக்கன அல்ல,’ என்று காரண காரியங்களை விளக்கி, சீனிவாசனுக்கு ஐந்தாண்டு கால தீபாந்திர தண்டனை வழங்கினார். நீதிபதியின் தர்க்க நியாயங்கள் வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாமே ஒழிய, அவருடைய தீர்ப்பு மிகக் கடுமையானது என்று அனைவராலும் கருதப்பட்டது. ‘ராஜ துரோக வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்புகள் எல்லாம் மிகக் கடுமையாக அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டி ஹிந்து பத்திரிகை, ‘இது சிதம்பரம் பிள்ளையின் வழக்கில் நீதிபதி பின்ஹே வழங்கிய தீர்ப்பைப் போன்றே அளவில் மிகப் பெரிதாகும்,’ என்று குறிப்பிட்டது. ‘In yesterday’s case, the accused is not given the right of appeal, either against verdict of the jury or the exceedingly harsh sentence of the Judge. The accused is subjected to all the disabilities which the system of trial by jury entails upon him without having had any of its chief benefits,’ என்றும் ஹிந்து சுட்டிக் காட்டியது.

இத் தொடரின் பகுதி எட்டாம் பகுதியில் (சில கேள்விகள்) முனைவர் பா. இறையரசன் எழுதிய ‘இதழாளர் பாரதி,’ என்ற நூலில் காணப்படும் ஒரு ‘மென்மையான’ குற்றச்சாட்டைப் பார்த்தோம். சீனிவாசனுக்கு ஐந்தாண்டு தீபாந்திர தண்டனை விதிக்கப்பட்ட சமயத்தில் ‘இந்தியா’ பத்திரிகையில் பாரதி எழுதிய தலையங்கத்திலிருந்து ஒரு முக்கால் வாக்கியத்தையும், ஒரு முழு வாக்கியத்தையும் மேற்கோள் காட்டிவிட்டு, ‘சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுப் புதுச்சேரி சென்ற பாரதி இவ்வாறு ஆசிரியவுரையில் எழுதுவது பொருத்தமாயில்லை’ என்று முனைவர் பா. இறையரசன் குறிப்பிட்டுள்ளதைக் கண்டோம்.

இவரைப் போலவே இந்தத் தலைப்பில் ஆய்வு செய்த பெ. சு. மணி அவர்கள் ‘இந்தியா’ பத்திரிகையின் மேற்படித் தலையங்கத்திலிருந்து வேறு சில பகுதிகளை எடுத்து வைக்கிறார். அதன் பின்னர், வங்காளத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘யுகாந்தர்,’ பத்திரிகையின் மீது நடந்த வழக்கைக் குறிப்பிடுகிறார். ‘ஆனால், பூபேந்திர நாத் தத்தா துணிவுடன் ‘குற்றமிழைக்கத்’ தூண்டிய கட்டுரைகளுக்கான முழுப் பொறுப்பை ஏற்றார். ஜூலை 24-ல் 1907-ல் ஓராண்டு காலம் கடுங்காவல் தண்டனையும் ஏற்றார்,’ என்று சொல்கிறார். அதே கையோடு, ‘1907-ல் ‘வந்தே மாதரம்’ நாளிதழில் உண்மையில் அரவிந்தர் ஆசிரியராக இருந்தும், பத்திரிகையில் ஆதார பூர்வமாய் அவர் பெயர் அச்சிடாததால் ‘வந்தே மாதரம்’ வழக்கில் தண்டிக்கப்படவில்லை,’ என்றும் சொல்கிறார். அதற்கு அடுத்த பத்தியில், ‘இந்த முன்மாதிரியை வைத்துப் பார்க்கும் பொழுது பாரதியார் தமது கட்டுரைகளுக்குப் பொறுப்பேற்காது, புதுச்சேரிக்குச் சென்றதை, ஓர் அரசியல் ராஜதந்திரமாகக் கருதலாம்,’ என்று சொல்லி முடித்த மூச்சோடு, ‘ஆனால், பாரதியாரின் தோழரான எஸ். ஜி. இராமநுஜலு நாயுடு ‘நக்கீரர் பார்வையில்’ பாரதியாரைப் பற்றி பின்வருமாறு கூறிவிட்டார்,’ என்று நாம் இந்தத் தொடரில் சில முறை எடுத்துக் காட்டியுள்ள அந்தக் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டி முடிக்கிறார்.

இறையரசன் அவர்களுடைய கருத்து, ‘தான் புதுச்சேரிக்குச் சென்ற பிறகு, சீனிவாசனைக் குறித்து இவ்வாறு எழுதுவது பொருத்தமாயில்லை,’ என்று வெளிப்பட்டிருக்கிறது. பெ. சு. மணி அவர்களுடைய ஆய்வோ, ஆய்வாளர் கருத்து இன்னதென்பது வெளிப்பட்டுத் தோன்றாமல் நிற்கிறது. ஆய்வாளர் என்ன நினைக்கிறார் என்பது சொல்லப்படாமலேயே அவருடைய நூலின் இந்தப் பகுதி முடிவடைந்திருக்கிறது.

ஆனாலும் இந்தப் பகுதியில் பெ. சு. மணிஅவர்கள் எழுதி உள்ளதன் தொனிப் பொருள் என்னவோ, பூபேந்திர நாத் தத்தாவுக்கு இருந்த துணிச்சல் பாரதிக்கு இல்லை என்பதுதான். அதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் பெ. சு. மணி சுற்றி வளைத்து சுட்டுவதன் சாரம் என்னவோ இதுதான். பெ. சு. மணியின் வாதம் சற்றும் பொருத்தமற்றது என்று சொல்லவேண்டி நேர்ந்திருக்கிறது. வங்காளத்திலிருந்து வெளியிடப்பட்ட ஜுகாந்தர் (அல்லது ‘யுகாந்தர்’) என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பூபேந்திரநாத் தத்தா பதிவு செய்யப்பட்டிருந்தார்; அவரை அரசு கைது செய்ய முடிந்திருந்தது; அவர் மீது அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது; வழ்க்கு நடைபெறும்போது நீதி மன்றத்தில் அவர் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எழுதியது ‘தானேதான்’ என்று பொறுப்பேற்றார். பாரதி விஷயத்தில் இது எதுவுமே பொருந்தாதே!

பாரதியின் மீதுதான் அரசால் எந்த வழக்கையும் தொடுக்கவே முடியவில்லையே! பாரதியின் மீது வழக்கு தொடரப்படிருந்தால்; ‘நீர் இன்னின்ன வகையில் ராஜ துரோகமாக எழுதி இருப்பதாக அரசு கருதுகிறது’ என்ற வகையில் ஏதேனும் அந்த வழக்கு நடைபெறுகையில் நீதிபதி சொல்லியிருந்தால்; அந்தச் சமயத்தில், ‘இவற்றுக்கு நான் பொறுப்பு’ அல்லது ‘இவற்றுக்கு நான் பொறுப்பில்லை’ என்று பாரதி ஏதேனும் சொல்லி இருந்தால் மட்டுமே, ஜுகாந்தர் பத்திரிகை மீதான வழக்கையும் இந்தியா பத்திரிக்கை மீதான் வழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். When comparing two similar events, you should have similar and comparable circumstances too, in order to arrive at an acceptable conclusion! Though these two events are comparable, the circumstances are not! ஆகவே மணி சொல்ல நினைப்பது–what he tries to imply–எள்ளளவும் பொருத்தமற்றது.

‘ஆனால், பூபேந்திர நாத் தத்தா துணிவுடன் ‘குற்றமிழைக்கத்’ தூண்டிய கட்டுரைகளுக்கான முழுப் பொறுப்பை ஏற்றார். ஜூலை 24-ல் 1907-ல் ஓராண்டு காலம் கடுங்காவல் தண்டனையும் ஏற்றார், என்று மணி சொல்கிறார். அவர் தண்டனையை ஏற்கவில்லை; அது அவருக்கு வழங்கப்பட்டது. He had no choice but to accept the sentence. ஆகவே அவர் ‘பொறுப்பை ஏற்றதும், தண்டனையை ஏற்றதும்’ ஏதோ வீர தீரச் செயல் அன்று. நீதி மன்றம் வழங்கிய தண்டனையை ஏற்காமல் வேறு என்ன செய்வது? ஆகவே, அவர் ‘தண்டனையை ஏற்றார்’ என்று சொல்லி, பாரதி பாண்டிச்சேரிக்குப் போய்விட்டார் என்னும் குறிப்பை வைத்து, பாரதி ‘பொறுப்பை ஏற்காத தவறைச் செய்திருக்கிறார்’ என்று சொல்லாமல் சொல்ல முயலும் மணி அவர்களுடைய எழுத்து பொறுப்பற்ற எழுத்து என்பதில் ஐயமில்லை. It does more harm than a direct and frontal attack–which would be more honest than what is stated by ‘mincing’ one’s statements–as it does not come out with any committed conclusion, but merely tries to express something by implications and suggestions.

அதற்குமேல், இந்தக் கட்டுரைகளை தான் எழுதவில்லை என்று பாரதி ஒருபோதும் மறுத்ததில்லை. மாறாக, ராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில் கூட, “When I came to Pondicherry, I was living as an independent Journalist, not attached to any particular paper, but receiving money from various papers for signed articles” என்றுதான் குறிப்பிடுகிறான். ‘கையெழுத்து இட்ட கட்டுரைகளுக்குப் பணம் பெற்றுக்கொண்டிருந்தேன்’ என்று சொல்லும்போதே, தான் எழுதிய ஒவ்வொன்றுக்கும் பாரதி பொறுப்பேற்றுக் கொள்கிறானா இல்லையா? இவ்வாறு இருக்கும்போது பெ. சு. மணி அவர்களுடைய வாதம் செல்லுபடி ஆகுமா?

இவர்களுடைய ஆய்வின் பின்னணியில் பார்க்கும்போது, மேற்படி ‘இந்தியா’ பத்திரிகையின் மீதான வழக்கில், ‘நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்,’ என்று சொன்ன காரணத்துக்காக முரப்பாக்கம் சீனிவாசனை பாரதி கண்டித்து எழுதியிருக்கிறான் என்பது போன்ற தோற்றம் உருவாகிறது. ஆனால், இந்தக் குறிப்பிட்ட தலையங்கத்தின் முழு வடிவத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படும் அபிப்பிராயம் மேற்படி ஆய்வாளர்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு ஒத்ததாக இருக்க முடியவில்லை. ஆய்வாளர்கள் என்ன காரணத்தினாலோ அங்கொன்றும் இங்கொன்றுமான வாக்கியங்களின் அடிப்படையில் கருத்துச் சொல்லியிருக்கிறார்களே தவிர, அந்தத் தலையங்கம் சொல்ல வரும் கருத்தின் தொனியையும், அதன் குவிமையத்தையும் காணவில்லை என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

இந்த வழக்கு நடக்கும்போது, சீனிவாசனின் வக்கீல் கெளடல் – இந்த மாதிரியான தருணங்களில் மற்ற வக்கீல்கள் செய்வதைப் போலவே – ‘தன் கட்சிக்காரர் மீது எந்தத் தவறும் இல்லை; ஆனால், சந்தர்ப்ப, சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போதும், ‘தனக்குச் சம்மதமில்லாதிருந்த போதிலும் (முதலாளிகள் நிர்பந்தித்த காரணத்தால்) வேறு வழியின்றித் தம்மைப் பத்திரிகை ஆசிரியராகவும், உரிமையாளராகவும் பதிவு செய்துகொண்ட காரணத்தாலும் இப்படி ஒரு வழக்கில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்,’ என்று வாதிட்டு, நீதிமன்றத்தாருடைய இதயத்தைக் குறிவைத்தார். இது வக்கீல்கள் மேற்கொள்ளும் உத்திகளில் ஒன்று. ‘என் கட்சிக்காரர் குற்றமற்றவர்,’ என்று நிறுவுவதோடு அவர்கள் கடமை முடிந்துபோகிறது. அப்படித் தங்கள் கட்சிக்காரரை விடுவிக்கத் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை; அப்படிக் கவலைப்பட வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை.

எனவே, கெளடல் நிகழ்த்திய வாதங்கள் முழுவதும், ‘என் கட்சிக்காரருக்கு ஒன்றுமே எழுதத் தெரியாது; அவருக்குப் போதுமான பயிற்சி கிடையாது; பாரதிதான் இந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார்; ஆகவே சீனிவாசன் மீது எந்தத் தவறும் இல்லை. மேலும், சீனிவாசனுக்கும் அந்தப் பத்திரிகைக்கும் பணியாற்றுபவர் – நிறுவனம்’ என்ற அளவில்தான் உறவு இருந்திருக்கிறது. இவர் ‘உரிமையாளர்’ என்று பதிவுசெய்துகொண்டிருக்கிறாரே தவிர, இவர் ஓர் ஏழை; பத்திரிகை வைத்து நடத்தும் அளவுக்குப் பணமோ, சாமர்த்தியமோ இல்லாதவர்,’ என்ற வகையில் செய்யப்பட்டன.

ஆனால், தன்னுடைய வாதங்களும், எடுத்து வைக்கும் விவரங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவேண்டும்; முரண்படக் கூடாது என்ற முக்கியமான அடிப்படையை மறந்துவிட்டார் கெளடெல். ‘நான் ஏழை. எனக்குச் சர்க்காருக்கு விரோதமாக எழுத எண்ணமே கிடையாது. எனக்கு ஒரு பத்திரிகை வைத்து நடத்துவதற்கான பணமும் சாமர்த்தியமும் கிடையாது,’ என்று சீனிவாசனுடைய ‘ஸ்டேட்மென்ட்’ தொடங்குகிறது. இது சீனிவாசன் தயாரித்த ஒன்றன்று; அவருடைய வக்கீல் தயாரித்தது என்பது தெளிவு; வெளிப்படை.

இப்படித் தன் தரப்பைத் தொடங்கிய கெளடெல், ‘தான் கடன்வாங்கிப் பத்திரிகையில் முதலீடு செய்திருப்பதையும், அவ்வாறு தான் வாங்கியிருக்கும் கடனைத் திரும்பச் செலுத்தி, தன்னைப் பத்திரிகைப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு திருமலாசாரியாரைக் கேட்டுக்கொண்டதையும்,’ போட்டு உடைத்து, ‘அப்பன் குதிருக்குள் இல்லை,’ என்பது மட்டுமின்றி, ‘இதோ, இந்தக் குதிருக்குள் இல்லை,’ என்றும் சுட்டிக் காட்டிவிட்டார். (இது தொடர்பான மற்ற விவரங்களுக்குப் பகுதி 7 – இவரா அப்பாவி – காண்க.) இந்த வக்கீலின் வாதம் எடுபடாமல் போனதில் என்ன வியப்பு?

இப்போது, ‘இந்தியா’ பத்திரிகையின் – சர்ச்சைக்குரியதாக வண்ணம் தீட்டப்படும் – அந்தக் குறிப்பிட்ட தலையங்கத்துக்குத் திரும்புவோம். ‘இந்தியா கேஸ்’ என்ற தலைப்பில் ‘இந்தியா’ பத்திரிகையில் 21.11.1908 அன்று வெளிவந்த தலையங்கம் இது. இந்தத் தலையங்கத்தின் சில துண்டுகளை மட்டும் ஆய்ந்த ஆய்வாளர்கள், எழுதியவனின் இதயம் வெளிப்படும் முக்கியமான பகுதிகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஆய்வுகளில் மேற்கோள் காட்டும்போது ஒரு சில பகுதிகளைத்தான் காட்டமுடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்றாலும், தான் காட்டும் மேற்கோளின் தன்மை, அந்தப் பகுதியைத் தனியாகப் படித்தால் உண்டாகக் கூடிய – மையப்புள்ளியின்று விலகக் கூடிய – கருத்து உருவாக்கம் போன்றவற்றை மனத்தில் கொள்ளாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டனவோ என்ற ஐயம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எடுத்துக் காட்டாக, மேற்படி ‘இந்தியா கேஸ்’ தலையங்கத்தின் மூன்றாம் பத்தியைப் பார்ப்போம்.

“இந்தக் கேஸை மதராஸ் ஹைகோர்ட்டில் இருக்கும் ஜட்ஜிகளில் ஒருவராகிய மிஸ்டர் ஜஸ்டிஸ் மன்றோ விசாரித்து வருகையில் சில விநோதமான நடவடிக்கைகள் நடந்தன. பிரதிவாதி தரப்பு கெளன்ஸலாகிய மிஸ்டர் கெளடல் ஏற்படுத்தின பிரதிவாதம் மிகவும் வியக்கத் தக்கதே. முப்பது வயது வாய்ந்தவராயும், பிராமண ஜாதியில் பிறந்தவராயும், உலகத்தை யறிய வேண்டுமான சந்தர்ப்பங்களும், அவசியங்களும் சதா நிறைந்துள்ள வாழ்வை அடைந்த எளிய குடும்பத்தாராயும், மதராஸ் சர்வகலாசாலையின் பிரவேசப் பரீக்ஷையில் தேறியவராயும், தமிழ்ப் பாஷையைப் பள்ளியில் பதினோரு வருஷகாலம் கற்றுத் தேர்ந்தவராயும், தன்னுடைய ஹிதாஹிதங்களைத் தெளிவாய்த் தெரிந்துகொள்ளத்தக்க, புத்திக் கூர்மையுள்ளவராயும் இருக்கும் மேற்படி பிரதிவாதி, ஏதோ பிறர் ஏமாற்றலுக்குட்டபட்டுப் பிசகி நடந்துவிட்டாரென்றும், அவர் செய்தது குற்றம் என்றே தீர்ப்பாகிவிடும் பக்ஷத்தில் அதற்காக அனுதாபப்பட்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார் என்றும் சொல்லி எதிர்வாதம் செய்தார்.”

மேற்படிப் பத்தியில் சாய்வெழுத்தில் வேறு வண்ணமாகக் காட்டப்பட்டுள்ள பகுதி, ‘இதழாளர் பாரதியார்,’ நூலில் முனைவர் பா. இறையரசன் அவர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பகுதி. (காண்க: பகுதி 8: ‘சில கேள்விகள்’ – பத்தி மூன்றின் கீழ் தரப்பட்டுள்ள உட் பத்தி.) இப்போது பகுதி எட்டில் நாம் தந்துள்ள ஆய்வாளர் குறிப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அதன் பிறகு இங்கே வந்து, இதோ இந்த முழு மேற்கோளையும் படித்துப் பாருங்கள். ஆய்வாளர் கொடுத்துள்ள மேற்கோளைப் படிக்கும்போது என்ன அபிப்பிராயம் உண்டாகிறது, இதோ இந்த முழுப்பகுதியையும் படிக்கும்போது என்ன அபிப்பிராயம் ஏற்படுகிறது என்பது உங்களுடைய உள்ளத்துக்கே தெரியும். நான் தனியாக ஏதும் சொல்ல வேண்டுவதில்லை.

பாரதி, யாரைக் குற்றம் சாட்டுகிறான்? சீனிவாசனையா, அவருடைய வக்கீல் கெளடலையா? கூர்ந்து படித்தால், நீதிபதியின் தீர்ப்போடு இந்தப் பத்தியை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்று புலனாகும். இந்தத் தலையங்கத்தின் இந்தப் பகுதி ஆசிரியருடைய கருத்து அன்று; வக்கீல் கெளடலுடைய வாதத்தின் சுருக்கம். அது மட்டும் இல்லாமல், நீதிபதி வழங்கிய தீர்ப்பின் பிரதிபலிப்பு. இந்த இடம் தீர்ப்பின் தொனியை எதிரொலிக்கிறது. அவ்வளவே அவ்வளவுதான். அடிப்படையான இந்த விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே ஆய்வாளர் இறையரசன் ‘மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த பாரதி இவ்வாறு சொல்லியிருப்பது பொருத்தமாக இல்லை’ என்று தன்னுடைய தீர்ப்பை வழங்கிவிட்டார்.

தொடர்வேன்…

2 Replies to “ஓடிப் போனானா பாரதி? – 10”

  1. இந்தக் கட்டுரைத் தொடருக்குக் காரணகர்த்தாவின் பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருப்பது மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் அந்தப் பெரியவர் கணினிப் பயிற்சி அற்றவர். அவர் பெயரில் வேறொருவர் வந்து பாராட்டியிருக்கிறார் என்பதும் புரிகிறது. எது எப்படி இருந்தாலும் மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *