அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்

ஸ்ரீ… சு ப் ர ம ண் யா ய ந ம ஸ் தே … ந ம ஸ் தே ….

சுப்பிரமணியரின் திருவடியில் இந்திராதி தேவர்கள் தங்கள் கிரீடங்கள் தரையில் பட வீழ்ந்து வணங்குகிறார்கள்.
கான சரஸ்வதி காம்போதி ராகம் பாட, அவள் திருமுன் ஸ்வரதேவதைகள் அஞ்சலி செய்து நமஸ்கரிக்கின்றனவோ?

மனஸிஜ கோடி கோடி லாவண்யாய, தீன சரண்யாய..

மனதின் கோடி கோடி அழகுகள் திரண்டு உருவெடுத்து பிரவாகமாகி இசையாய் பொங்கிப் பெருகுகின்றனவோ?
இந்த சங்கீதம் நாதமுனிகள் சொன்ன தேவகானம் தான், மனுஷ்ய கானமே அல்ல என்ற உணர்வு ஏற்படுகிறது.

அவருடைய பிரக்யாதி அப்பேற்பட்டது. இளவயதிலேயே “பட்டம்மா நீ பாடுபட்ட பாட்டம்மா” என்று வாயார ஆசிர்வதித்தாராம் சங்கீத அறிஞர் ஜஸ்டிஸ் டி.எல்.வெங்கட்ராம ஐயர். டைகர் வரதாசாரியார் “கான சரஸ்வதி” என்று பெயர் சூட்டினார். சங்கீத கலாநிதி, காளிதாஸ் சம்மான் என்று பல விருதுகள். நெல்லையில் பாரதியார் பாடல்களை அவர் பாடுவதைக் கேட்ட மகாகவியின் மனைவி செல்லம்மா கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகக் கட்டியணைத்தாராம். அவரது 80வது வயதில் “பத்ம விபூஷண்” அளித்து இந்திய அரசு தன்னை கௌரவப் படுத்திக் கொண்டது.

கர்நாடக சங்கீதம் என்ற செவ்வியல் இசை வடிவம் தியாகராஜர், தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மும்மூர்த்திகளின் காலத்தில் சிகரங்களைத் தொட்டு மகோன்னதத்தை அடைந்தது. பின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன மதிப்பீடுகளும், நகர்ப்புற கலை ரசிகர்களும் உருவாகி வளர்ந்த போது, அதன் அடுத்த பொற்காலம் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில், கர்நாடக இசையின் பல பரிமாணங்களை உருவாக்கி, வளர்த்தெடுத்த முன்னோடிகளில் முக்கியமானவராக டி.கே பட்டம்மாள் விளங்கினார். எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி ஆகிய மூவரும் சங்கீதத்தின் முப்பெரும் தேவியர் என்றே இன்று போற்றப் படுகின்றனர்.

பட்டம்மாளின் கலை ஆகிருதி ஆழமும், பன்முகப் பட்ட விகசிப்பும் கொண்டது. சம்பிரதாயமான சங்கீத சுத்தம் சிறிதும் பிசகாமல், பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் அவர் கண்ணும் கருத்துமாயிருந்தவர். அதே சமயம், தன் வாழ்நாளில் அனாயாசமாக மரபு மீறல்களை நிகழ்த்தியபடியே, மரபைக் கடந்து சென்று கொண்டும் இருந்தார்.

1940: சகோதரர் டிகே.ஜயராமனுடன்
1940: சகோதரர் டிகே.ஜயராமனுடன்

1919ல் காஞ்சிபுரத்தில் தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதரின் ஆசாரமான குடும்பத்தில் அலமேலுவாகப் பிறந்து “பட்டா” என்று செல்லமாக அழைக்கப் பட்டார், பிறகு அந்தப் பெயரே நிலைத்து விட்டது. அவரது தந்தையார் பெரிய சங்கீத ரசிகர். தாயார் ராஜம்மா அபாரமான பாடகி. ஆனால் ஆசாரம் கருதி, பிராமணப் பெண்கள் பாடக் கூடாது என்ற வழக்கு இருந்ததால், ராஜம்மாவின் சங்கீதம் குடும்பம் மற்றும் உறவினர் வட்டத்தில் கூட அறியப் படாமல் போயிற்று.. இத்தகைய சூழலில், 10 வயதிலேயே அப்போது மெட்ராஸ் கார்ப்பரேஷன் ரேடியோ என்றழைக்கப் பட்ட ”ஆல் இந்தியா ரேடியோ”வில் தனது முதல் பாடலைப் பட்டம்மாள் பாடினார். 1932ல் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் முதல் கச்சேரி. 1939ல் தன் இருபதாம் வயதில் ஆர்.ஈஸ்வரனை மணந்தார். பின்னர், மலைமுகடுகளிலிருந்து ஓடையாகக் கீழிறங்கிப் பேராறாகப் பாயும் காவேரி போல அவரது சங்கீதம் பிரவகித்தது.

ஆரம்ப கட்டத்தில் குடும்பமும், அன்றைய ரசிகர் வட்டமும் அவரது இசைத் திறனைக் கண்டுகொண்டு அதை முடக்காமல், மாறாக ஊக்குவித்து மலரச் செய்தது காலத்தின் கையெழுத்து, கலையுலகின் சௌபாக்யம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? குருகுல முறையில் கல்வி கற்க வாய்ப்பில்லாததால், குடும்பத்திலேயே அவரது தொடக்க கால சிட்சையும், சாதகமும் பெருமளவில் நிகழ்ந்திருக்கிறது.. கீர்த்தனங்களையே முதலில் நேரடியாகக் கற்றுக் கொண்டு அவற்றைப் பாடிப் பாடி சாதகம் செய்தே இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதாகவும், சரளி வரிசை, ஜண்டை வரிசையெல்லாம் படிக்கவே இல்லை என்றும் பின்னாளில் பட்டம்மா பேட்டிகளில் கூறியிருக்கிறார்.. ஆறு வயதாக இருந்த போதே அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து ஆறு மணி வரை சியாமளா தண்டகம், முகுந்தமாலா போன்ற சுலோகங்களையும், எளிய கீர்த்தனங்களையும் பாடி அசுர சாதகம் செய்வாராம்.. பிறகு பள்ளியிலிருந்து வந்தபின் இரவு வரை சாதகம்! ஒவ்வொரு கிருதியும் கைவருவதற்கு குறைந்தது 50 முறையாவது பாடி சாதகம் செய்திருக்கிறேன் என்று தனது 80வது வயதில் அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். (“A lifetime for Carnatic Music”, Frontline, August 13, 1999). இன்றைய வித்வான்கள் இந்த அளவுக்கு சாதகம் செய்வதில்லை என்பதைத் தன் மனக்குறையாகவும் சொல்லிவந்தார்.

பெண்கள் கச்சேரி செய்ய ஆரம்பித்து, அது ஏற்றுக் கொள்ளப் பட்ட காலங்களிலும், “ராகம் தானம் பல்லவி” என்பது ஆண் பாகவதர்களின் கோட்டையாகவே கருதப் பட்டது. பெண்குரலின் வீச்சும், சாரீரமும் தானம், பல்லவி பாடுவதற்குப் போதுமானதல்ல, அப்படியே பாடினாலும் பரிமளிக்காது என்பது போன்ற எண்ணங்கள் இருந்தன. இவற்றை உடைத்தெறிந்து பல கன ராகங்களின் பல்லவிகளை அவற்றிற்குரிய முழு லட்சணங்களுடன், கடினமான தாளங்களிலும் பாடி “பல்லவி பட்டம்மாள்” என்ற பட்டத்தையும் பெற்றார் பட்டம்மா. இப்போது 85 வயதாகும் என் பாட்டி,

“ நெஞ்சே நினை அன்பே துதி நெறி குருபரனே
அஞ்சாதிரு நம் பாவங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமாகையால் (நெஞ்சே…)

என்ற பட்டம்மாள் பாடிய ஜகன்மோகினி ராக பல்லவியை அவரது சிறுவயதில் ரெகார்டில் அடிக்கடி கேட்டு ரசித்ததை பரவசத்துடன் இப்போதும் நினைவுகூர்கிறார்.

dkpattamal-midதாய் தந்தையரையே ஆதி ஆசான்களாகக் கொண்டு, பின்னர் காஞ்சிபுரம் நயினாபிள்ளை, முத்துஸ்வாமி தீட்சிதரின் வம்சாவளியில் வந்த அம்பி தீட்சிதர், பாபநாசம் சிவன், டி.எல் வெங்கட்ராம ஐயர் என்று தனது குருமார்களை அவரது இசை தானாகத் தேடிக் கண்டு அடைந்தது. அப்பாதுரை ஆசாரியிடம் திருப்புகழும், வித்யால நரசிம்ஹுலு நாயுடுவிடம் பதங்களும், ஜாவளிகளும் கற்றுக் கொண்டதாகவும் அவர் பின்னாளில் கூறினார்.

இசை அளவு கோலில் low-alto, high tenor range என்று அழைக்கப் படுகின்ற அனைத்து ஸ்தாயிகளிலும் சஞ்சரிக்கும் குரல் வளம் (full throated voice) பட்டம்மாவின் விலைமதிப்பற்ற சொத்தாக இருந்தது. பட்டின் நேர்த்தியும், தேனின் அடர்த்தியும், மலரின் மென்மையும், வீணையின் கம்பீரமும், அருவியோசையின் ஒழுக்கும் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதம் என்று அந்தக் குரலைக் கற்பனை செய்யலாம் ! ஸ்ருதியும், லயமும் சிறிதும் பிசகாமல் ராக பாவம் முழுமையாக நிறைந்து அந்தக் குரலோடு சேர்வதால் விளையும் சங்கீதம் தான் பட்டம்மாளின் இசை. அதோடு, அர்த்த பாவமும், உணர்ச்சிமயமான வெளிப்பாடும் ஒன்றுகலப்பதால் உண்டாகும் தருணம் தான் இதனை ஒரு இசைத் தொழில்நுட்ப வித்தகம் என்ற நிலையிலிருந்து மேலெழுப்பி ஒரு பூரணத்துவம் ததும்பும் அனுபவமாக மாற்றுகிறது.

நமது மரபிசையில் பாவத்தை வெளிப்படுத்துவதில் வாய்ப்பாட்டுக் காரர்களுக்கு இருக்கும் சாத்தியங்கள் வேறு இசைக் கருவிகளில் கிடையாது. மொழியும், உணர்வும், படிமங்களும் இசையில் ரூப அரூபங்களாக ஊடுருவும் இந்த நிலை, இசை என்கிற தன்னளவில் முழுமையான அபோதபூர்வமான (totally subjective in itself) கலை வடிவத்தை, ஓவியமும், இலக்கியமும் போன்று போதமும், அபோதமும் கலந்த கலை வடிவமாக மாற்றுகிறது. குரலிசை, அதுவும் விஸ்தாரமான வார்த்தை அடுக்குகள் கொண்ட கீர்த்தனங்கள் எல்லாம் இசையின் “தூய்மை”யை ஒருவிதத்தில் பங்கப் படுத்தும் சமாசாரங்கள் என்று சொல்லும் சில தூய்மைவாதிகள் (puritans) இந்த விஷயத்தைக் கவனிப்பதில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது.

பட்டம்மாள் ஆரம்பத்திலிருந்தே இந்த அம்சத்தை நன்கு உணர்ந்த குரலிசை மேதை. “ஐம்பது வயதானபோது லயத்தோடு, பாவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன்.. பாவத்தை மையமாக வைத்துப் பாடுவது, இசையை உள்முகமாகத் திருப்புகிறது.. அது ரசிகர்களையும் உள்முகமாக்கி அவர்கள் உள்ளத்தைச் சென்று தொடுகிறது” என்று பட்டம்மாள் ஒருமுறை கூறினார். கீர்த்தனங்களின் சொற்களை தெளிவான உச்சரிப்போடு, அவற்றின் பொருள் விளங்குமாறு பாடுவது முக்கியம் என்பதை உணர்ந்து அதை ஆரம்பத்திலிருந்தே கடைப் பிடித்தவர் பட்டம்மா. அதோடு, எந்தப் பாடலையும், அவசர கதியில் பாடுவது என்பது அவரிடம் அறவே கிடையாது .. துரித காலம் என்பதை இதோடு போட்டுக் குழப்பிக் கொள்பவர்கள் பட்டம்மாளின் “ராமா நீ பை” என்ற கேதார ராக தியாகராஜ கிருதியைக் கேட்க வேண்டும்.

தீட்சிதர் கிருதிகளை அவற்றின் பாரம்பரிய, மூல இசை வடிவத்தில் கச்சேரி மேடைகளில் பெருமளவில் பிரபலப் படுத்தியதில் பட்டம்மாளுக்குப் பெரும் பங்கு உண்டு…

தியாகராஜ யோக வைபவம்
ராஜயோக வைபவம்
யோக வைபவம்
வைபவம்
பவம்
வம்

என்று அடுக்கடுக்காக ஆனந்த பைரவியில் சொகுசு நடை பயிலும் கிருதியை பட்டம்மாள் பாடிக் கேட்பது பரமானந்த அனுபவம்!

ஸ்லோகங்களையும், விருத்தங்களையும் அவற்றின் பக்தி பாவமும், ஓசை நயமும் வெளிப்படுமாறு அழகாகப் பாடியவர் பட்டம்மா. ”ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்… “ என்ற திருப்பாணாழ்வாரின் அழகிய பிரபந்தம் அவர் குரலில் இன்னும் மெருகேறுகிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இன்றைய கச்சேரிகள் விருத்தம் முக்கிய இடம் பெறச் செய்ததில் அவருக்குப் பங்குண்டு.

“தாய்நாட்டை நேசிக்க வேண்டும், என்பதையும் தேசபக்தியும் சிறு வயதிலேயே என் அப்பா கற்றுக் கொடுத்தார். அதனால் பாரதியார் பாடல்களில் இயல்பாகவே பிடிப்பு ஏற்பட்டது” என்று ஒருமுறை சொன்னார். பாரதியார் பாடல்களைத் தமிழகமெங்கும் இசை வடிவில் முதலில் கொண்டு சென்றதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. 1947ல் தேசம் விடுதலை அடைந்த நள்ளிரவு ”ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” என்று சுதந்திர நாதமாக வானொலிகளில் ஒலித்த தமிழ்க் குரல் அவருடையது. தீராத விளையாட்டுப் பிள்ளை, வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, பாருக்குள்ளே நல்ல நாடு போன்ற பாடல்கள் இன்று எங்கும் பாடப் படும் ராக வடிவங்கள் எல்லாம் பட்டம்மா உருவாக்கியவையே. ”சின்னஞ்சிறு கிளியே” பாடலை அவர் பாடும் tempo வும், ராகவடிவமும், இன்று நாம் பிரபலமாகக் கேட்கும் வடிவத்தை விட மிக அழகாக இருக்கிறது !

dkp-oldதியாக பூமி, நாம் இருவர் ஆகிய திரைப் படங்களில் பட்டம்மா பாடிய திரைப் பாடல்கள் தமிழ்த் திரையிசை வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவை. தமிழிசை இயக்கம் அரசியல் மயமாக்கப் பட்டு, ஆர்ப்பாட்டத்துடன் முன்வைக்கப் பட்ட காலத்திற்கு முன்பாக இயல்பாவே கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன் ஆகியோரது தமிழ்ப் பாடல்களை மேடைகளில் பாடிவந்தவர் பட்டம்மா. “தமிழ் மீது எனக்கு இருந்த அன்பினால் தமிழ்ப் பாடல்களைப் பாடினேன், ஒரு அரசியல் ஸ்டேட்மெண்டாக அல்ல” என்று 80 வயதில் அளித்த பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார்.

மேடைக் கச்சேரி என்பது ஒரு அறுசுவை உணவு போன்று அதன் முழு சுவையையும் ரசிகன் அனுபவிக்குமாறு பரிமாறப் படவேண்டும் என்பதற்கு இலக்கணகாக பட்டம்மாளின் கச்சேரிகள் அமைந்திருந்தன என்பதை, அவற்றை இப்போது கேட்கும் என் தலைமுறையினரால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதிக பட்சம் மூன்று நான்கு முக்கிய உருப்படிகள். சிலவற்றில் கொஞ்சம் அதிக துக்கடாக்கள். இன்று ஒரு கச்சேரியில் எக்கச்சக்க பாடல்கள் பாடும் சில இளம், நடுவயது வித்வான்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது..

ஆக, இதெல்லாம் சேர்த்துத் தான் பட்டம்மாள் “பாணி” என்றாகிறது. மறைந்த டிகே.ஜயராமன் (பட்டம்மாளின் சகோதரர்) பட்டம்மாளுடன் சேர்ந்தும், தனியாகவும் பல கச்சேரிகள் செய்திருக்கிறார். லலிதா சிவகுமார், நித்யாஸ்ரீ மகாதேவன், பவதாரிணி அனந்தராமன் என்று சீடர்கள் இருந்திருக்கிறார்கள்.. ஆனாலும் ”பட்டம்மாள் பாணி” என்பது அவருக்கே உரியது. ”கன்னனொடு கொடை போயிற்று; உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று” என்று பாரதி சொன்னாற்போல, அவருடனேயே அந்தப் பாணியும் போய்விட்டது !

அநாதியாக, அனந்தமாக, பிறப்பு இறப்பு அற்றிருக்கும் பரம்பொருள் பிரபஞ்ச லீலையாக தன்னை மீண்டும் மீண்டும் பிறப்பித்துக் கொள்கிறது என்கிறது நம் மரபு. இசை பரம்பொருளின் வடிவமே என்று சொல்லி அதைக் கண்டுணர்ந்த நாதயோகிகளையும் நம் மரபு அளித்திருக்கிறது.

“ஒரு பக்தியுள்ள ஹிந்துவாக, பிறவா வரத்தையே இறைவனிடம் வேண்டுகிறேன்… ”பிறவா வரம் தாரும் இறைவா, மறுபடி பிறந்தாலும் இசையை மறவா வரம் தாரும்” என்பது தான் என் பிரார்த்தனை” என்று 1999ல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். 90 வயது வரை சங்கீதத்தையே உபாசித்து, அதில் ஒன்றுகலந்த நிறைவாழ்வு.

கான சரஸ்வதிக்கு அஞ்சலி.

(கட்டுரையில் உள்ள இணைப்புகள் அனைத்தும் டி.கே. பட்டம்மாள் பாடிய பாடல்களின் audio வடிவங்களுக்கு இட்டுச் செல்லும்).

17 Replies to “அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்”

  1. நான் படித்த எல்லாவற்றுள்ளும் இந்தப் பதிவு மிகச் சிறந்த அஞ்சலி.
    வாழ்க பாட்டம்மாள்!

  2. அருமையான ஆழமான நினைவஞ்சலிக்கு நன்றி ஜடாயு.

  3. //பாவத்தை மையமாக வைத்துப் பாடுவது, இசையை உள்முகமாகத் திருப்புகிறது.. அது ரசிகர்களையும் உள்முகமாக்கி அவர்கள் உள்ளத்தைச் சென்று தொடுகிறது” //

    ஒரு இசை மேதைக்கு நல்லதொரு அஞ்சலி கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி

  4. டி கே பிக்கு எழுதப்பட்ட மிகச் சிறந்த அஞ்சலி. நன்றி ஜடாயு, அருமையாக தொகுத்து, அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் ! பாராட்டுக்கள்.

  5. அருமையான அழகான ஓர் அஞ்சலி.

  6. DKP yaarendrey theriyaathiruntha ennakku oru nalla arimugam! kaalam kadanthukittathu kurithu varthamthan!!
    DKP maraivukku en anjali

  7. நான் ஒரு விளையாட்டு பொம்மையா? என்ற பாட்டு இன்னும் என் காதுகளில் அதே கம்பீரத்துடன் ஒலிக்கிறது.. மற்றவைகள் எல்லாமே சேகரித்து அடிக்கடி கேட்க வேண்டிய பொக்கிஷங்கள். சம்ஸ்கிருத உச்சாரணை மிகவும் போற்றுதற்குறியது. அவ்ரை ஒரு முறை அவரது வீட்டில் பார்த்திருக்கிறேன்.

  8. ஜடாயூ அவர்கள் திருமதி பட்டம்மாள் அவர்களின் சங்கீத அனுபவத்தை நன்கு அனுபவித்து இந்த நினைவஞ்சலியை எழுதியுள்ளார்கள். ஸ்ரீ ரங்கபுர விஹாரே, ரங்கநாதுடே, ஸ்ரீ சத்யநாரயணம் போன்ற பாடல்களைப் பட்டம்மாள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். தீட்சிதர் கிருதிகளில் எனக்கு விருப்பத்தை விளைவித்ததே D.K.J. ,D.K.P அவர்கள்தாம். கமலாம்பாள் நவாவரணக் கீர்த்தனைகளை இவர்கள்போல் பொருளனுபவத்துடன் பாடியவர்கள் இல்லை. அதிலும் ஆகிரி இராகப் பாடல் உள்ளத்தைப் பிழியும். ஜம்பூபதே எனும் திருவானைக்கா பற்றிய கீர்த்தனை, அங்காரகமாஸ்ரயாமி சுருட்டிக் கீர்த்தனை முதலியன இவர்களாலேயே பிரபலமடைந்தன.
    வ்டமொழி அறிவு இல்லாத என்போன்றவர்களும் தீட்சிதர் அவர்களின் கீர்த்தனைகள் மேல் மோகம் கொள்ள D.K.P, D.K.J அவர்களின் இசையே காரணம். திருமதி பட்டம்மாள் அவர்களின் மறைவு எத்தொ ஒரு ஏக்க உணர்வினை விளைவிக்கின்றது. காரைக்கால் அம்மையார் விரும்பியதுபோல ஆனந்தநடனப் பிரகாசத்தில் அவரது ஆன்மா திளைத்தின்புறறுவதாகுக

  9. திருமதி டி கே பட்டம்மாள் அவர்களின் கணீரென்ற குரலில் மகாகவி பாரதியின் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். கொஞ்சம்கூட அலுப்பு தட்டாது. அதிலும் அவர் பாடியுள்ள தீராத விளையாட்டுப்பிள்ளை கண்ணன், தெருவிலே பெண்களுக் ஓயாத தொல்லை என்கிற பாடலை அவர் பாடியுள்ள விதமே அலாதியானது. மறைந்த பட்டம்மாள் என்றென்றும் மக்கள் மனங்களில் தனது பாட்டால் நினைவில் நிற்பார்.

    வித்யாநிதி

  10. அருமையான அஞ்சலி. மிக்க நன்றி ஜடாயு.

  11. பிரபல பாடகி பட்டம்மாள் அவர்களுக்கு ஜடாயு அவர்கள் நல்லமுறையில் அஞ்சலி அளித்ததிற்கு நன்றி.

    திருமதி பட்டம்மாள் அவர்கள் அருமையான தமிழ் தனிப்பாடல்கள் பலவற்றை இசைத்தட்டுகளில் பதித்து இருக்கிறார் என்பது பலருக்கு தெரிய வாய்பில்லை. அவற்றை வானொலியில் ஒலிபறப்பினால் இந்நாளைய தலைமுறையினர் கேட்க வாய்ப்பிருக்கும். திருமதி பட்டம்மாளின் கணவர் ஈஸ்வரன் அவர்களின் குடும்பம் தீவிர காந்தியவாதிகள், அவரது தாய் மாமன் Dr P S ஸ்ரீனிவாசன் அவர்கள் திரு C .N . அண்ணாதுரை அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் .
    திருமதி பட்டம்மாள் காலத்தில் முப்பெரும் பெண் பாடகர்களில் சிறந்த ஒருவராக திகழ்ந்த திருமதி N C வசந்த கோகிலம் அவர்களை ஏன் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *