அஞ்சலி: ரா.கணபதி

தமிழகத்தின் முதுபெரும் ஆன்மீக எழுத்தாளரான பெரியவர் ரா.கணபதி அவர்கள். சென்னையில் பிப்-20 திங்கள்கிழமை மாலை 7.30 மணி அளவில் காலமானார்.

ரா.கணபதி அவர்கள் ஒரு சகாப்தம். பெரும் தத்துவஞானி, ஆன்ம சாதகர், பக்தர். தனது ஆன்மீக ஈடுபாட்டினாலும், எழுத்துப் பணி மீதிருந்த தாகத்தினாலும் திருமணமே செய்து கொள்ளாமல் நைஷ்டிக பிரமசாரியாக வாழ்க்கை நடத்தியவர்.

கல்கி இதழில் அவர் எழுதிய தொடர் ‘அறிவுக்கனலே அருட்புனலே’ ஒரு தலைமுறையை ராமகிருஷ்ண –  விவேகானந்த இயக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது. தூய அன்னை சாரதா தேவி குறித்து அவர் எழுதிய “அம்மா” என்ற படைப்பு அன்னையை தமிழகத் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அருகே கொண்டு வந்தது.

ரா.கணபதி காஞ்சி பரமாசாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் பரம பக்தர். தெய்வத்தின் குரல் – அவரால் தொகுக்கப்பட்ட காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் உபந்நியாசங்கள், விளக்கங்கள் – மாபெரும் ஒரு முயற்சி. ஒரு தலைமுறையே புனிதராக மதிக்கும் மகான் ஒருவரின் எழுத்துகள் எப்படி தொகுக்கப்பட வேண்டும் என்பதற்கான முன்மாதிரி என்று கூட சொல்லலாம். அதிலுள்ள சில கருத்துகள் ஏற்கப்பட முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அவற்றுள் கூடவே அரும் பெரும் நற்கருத்துகள் உள்ளன என்பதை எவராலும் – அதை எதிர்ப்பவர்களால் கூட – மறுக்க முடியாது.

சத்திய சாய் பாபாவின் வாழ்க்கையை ரா.கணபதி அவர்கள் ’ஸ்வாமி’ என எழுதியது பாபா பக்தர்களால் இன்றும் ஒரு திவ்ய சரிதமாகவே கருதப்படுகிறது. ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கை சரிதத்தையும் ரா.கணபதி அர்ப்பணிப்பிலும் பக்தியிலும் தோய்ந்து எழுதியுள்ளார்.

பழம்பெரும் பௌராணிக மரபின் இறுதி ஒளிவிளக்காக வாழ்ந்த அவர் வாழ்க்கை மஹா சிவராத்திரி அன்று முடிவடைந்தது ஒரு அற்புத பொருத்தம்.

அவரது புனித நினைவை தமிழ்ஹிந்து வணங்குகிறது. அவரது பிரிவால் வருத்தமடைவோரின் துயரத்தை தமிழ்ஹிந்து பகிர்ந்து கொள்கிறது.

12 Replies to “அஞ்சலி: ரா.கணபதி”

  1. அவரது அந்தப் புண்ணிய ஆத்மா பரிபூரணமாகச் சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
    இது தவிர, அவர் ஏகப்பட்ட ஆன்மீக தொகுப்புகள் – நீண்ட தவத்தின் வெளிப்பாடாக -நமக்கென்று விட்டு விட்டு சென்றிருக்கிறார்.
    எங்களின் பிரார்த்தனைகள்.
    வணக்கம்.
    ஸ்ரீனிவாசன்.

  2. ஸ்ரீ ரா கணபதி அவர்களால் தொகுக்க்ப்பட்ட “தெய்வத்தின் குரல்” மற்றும் அவரால் எழுதப்பட்ட பல நூற்களைப் படித்து பயனடைந்துள்ளேன். பக்த மீராவின் சரித்ரத்தை அவர் “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதுவும் மறக்கவொண்ணா நூல்.

  3. மிகவும் வருந்துகிறேன். அன்னாரின் படைப்பை அதிகம் படித்தவன். அவரது எழுத்து என்றும் மறையாது.

  4. மிகவும் வருந்துகிறேன். அவர் பிறந்ததும் பிள்ளையார் சதுர்த்தி எனக் கேள்விப் பட்டேன். இறக்கையிலும் ஈசனின் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் அமர்ந்த நிலையிலேயே இறந்திருக்கிறார். உயர்ந்த மனிதர். உயர்ந்ததொரு யோகி. அளவிட முடியாத தொண்டு. அன்னாரின் இறப்பால் வருந்துபவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

  5. திருவாளர் ரா. கணபதி அவர்களின் மறைவு, அவரை இறைவனின் திருவடிகளுக்குக் கொண்டு சேர்ப்பதாக அமையட்டும். பழம்பெரும் புராணிக மரபின் இறுதி ஒளி விளக்காக அவர் இருந்துவிடாமல், விளக்கு வரிசையை இறைவன் நீட்டித்தரப் பிரார்த்தனை செய்வோம்.

  6. ஆன்மீக எழுத்தாளர் ரா.கணபதி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது.அவருடைய தெய்வத்தின் குரல் புஸ்தகத்தை ஆழ்ந்து படித்தேன். அதுபோல் காற்றினிலே வரும் கீதம் அறிவுக்கனலே அருட்புனலே என்ற புஸ்தகங்களையும் அடியேன் படித்துள்ளேன்.ஆழ்ந்த கருத்துக்கள்.அவரது எழுத்துக்களை ஆழ்ந்து நோக்கும் போது அவர் எப்படி வாழ்ந்திருப்பார். என்று என் மனம் அசை போடுகின்றது.இந்து மதக்கருத்துக்களை இவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளகூடியவாறு தொகுத்து வழங்கிய அந்த மாபெரும் ஆன்மீகவாதிக்கு அடியேனது ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகளுடன் அவரது உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  7. திரு ரா கணபதி அவர்களின் பணி தெய்வத்தின் குரல் ஏழு பாகங்கள் மூலம் என்றுமே நிலைத்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுகிறேன்.

  8. ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், அன்னாரின் ஆன்மீகப் பணிக்கு இறைவன் அளித்த பரிசு, சிவலோகப்ராப்தி, சிவராத்திரி அன்று பூத உடலை உதறுவது ஒரு மகாப் பேறு

    சந்திரசேகரன்

  9. A great and blessed soul in the service of Paramachaarya had been taken away on a day devoted to Lord Shiva . We are poorer now. When will come another like him?. I wonder.

  10. ஆன்மீகம் தழைக்கத் தம் மொழியறிவு கொண்டு பெருந்தொண்டாற்றிய பெருமக்களில் இரா.கணபதி ஒருவர். அவர் மூலமாக நம் மண்ணில் அவதரித்த மகான்கள் பலர் பற்றித் தெரிந்து கொண்டுள்ளேன். அன்னாரது புண்ணியாத்மா இறைவனின் திருவடி நிழலில் அமைதி கொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

  11. அகம் புறம் இரண்டிலு.ம் தூய்மையுடன் தெய்வீமாக வாழ்ந்த மகான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *