இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்

மாவீரனான அர்ஜுனனுக்கு  முன்  அந்த விசித்திர பிராணி தோன்றியது – சேவல் தலை,  மயில் கழுத்து,  எருதின் திமிலுடன் கூடிய உடல்,  சிங்கத்தின்  கம்பீரமான இடை, பாம்பு வால்.    யானைக் கால், மான் கால்,  புலிக் கால் என்று மூன்று கால்களுடனும்,  ஒரு மனிதக் கையுடனும் அது நின்றுகொண்டிருந்தது.  இது ஒரு அரக்கன் தான் என்று முடிவுகட்டி விட்ட அர்ஜுனன், தாக்குதலுக்காகத் தன் வில்லை எடுக்கையில் இன்னொரு விஷயத்தைக் கவனித்தான்.  அந்தப் பிராணி தன் கையில் தாமரை மலரை ஏந்தி இருந்தது.

navagunjaraஉடனே அர்ஜுனன் என்ன பிராணி இது என்று யோசிக்கத் தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட ஜந்து என்று சொல்ல முடியாமல் இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று சேர்ந்து இருந்தது அது.  இயற்கையின் சிருஷ்டியில் இப்படி ஒரு பிராணியும் இருக்குமா என்ன?  இது போன்ற ஒரு மிருகத்தை இது காறும் அவன் கண்டதில்லை. ஆனால் அப்படிக் காணாததாலேயே அது இல்லை என்று  ஆகிவிடாது  என்று அவன் மனம் சொன்னது. , “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய் நண்பா!”  என்று ஆரம்பிக்கும் தனது உயிர் நண்பனான கிருஷ்ணனின் உபதேசத்தை எண்ணிப் பார்த்தான். “மனித மனம் ஒரு எல்லைக்குள் அடங்குவது, ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது” என்பதை நினைவுகூர்ந்தான்.  தன் வில்லைக் கீழே வைத்து விட்டு, விழுந்து வணங்கினான்.

மனித பிரக்ஞையில் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சாத்தியங்கள் தெய்வீகப் பிரக்ஞையில்  உண்மையாகவே இருக்கக் கூடும். ஒன்பது  உயிர்வகைகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய அந்தப் பிராணியின் பெயர் நவகுஞ்சரம் (Navagunjara). இந்த ஞானத்தை அர்ஜுனனுக்கு வழங்குவதற்காகவே எழுந்தருளிய தெய்வ வடிவம் அது!

ஒரிய மொழியில் சரளா தாஸர் எழுதிய மகாபாரதத்தில் மேற்சொன்ன கதை வருகிறது.   (நன்றி: Indian mythology: tales, symbols, and rituals from the heart of the Subcontinent –  By Devdutt Pattanaik, Imprint:  Inner Traditions, Bear & Company)

ராமாயணத்தில்  மற்றொரு காட்சி.

தங்கமயமான தகதகக்கும் உடலும், மாணிக்கத்தால் காதுகளும், கால்களும், வாலும் கொண்ட மானைப் பார்த்து,  அதைப் பிடித்துத் தாருங்கள் என்று சீதை வேண்டுகிறாள். சந்தேகத்துடன், இது போன்ற  மான் உலகில் கண்டதில்லை  என்று லட்சுமணன் கூறுகிறான்.

”இந்த உலகின் ரகசியங்களை அறிவில் வல்லவர்களும் முழுதும் உணர முடியாது. பல்லாயிரம் கோடியாகப்  பரந்து, முறையும், முடிவும் இல்லாத உயிர்த் தொகுதியில்,  இல்லாதது என்று ஒன்று இல்லை  தம்பி”  என்று  ராமன் அதற்குப் பதில் கூறுகிறான்.

”நில்லா உலகின் நிலை, நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம்
பல்லாயிர கோடி பரந்துளவால்;
இல்லாதன இல்லை – இளங்குமரா!

….  முறையும், முடிவும் இலை, மொய் உயிர்’ என்று
இறைவன் இளையானொடு இயம்பினனால் …

(கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம், 53, 55)

மானைப் பிடிக்கச் செல்லும் ராமன், பின்னர் அது மாய மாரீசன் என்றறிந்து அவனைக் கொல்ல நேரிடுகிறது.

chimera_apulia_louvre_k362முதலில் சொன்ன மகாபாரதக் கதையை,  கிரேக்க புராணங்களில் வரும் கைமெரா (Chimera) என்ற விசித்திரப் பிராணியுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுவது தவிர்க்க முடியாதது. ஹோமரின் இலியட் காவியத்திலும்  இந்த பிராணி குறிப்பிடப் படுகிறது.  சிங்க உடலும்,  முதுகிலிருந்து கிளைக்கும் ஆட்டுத் தலையும்,  பாம்பு வாலும் கொண்ட நெருப்பு உமிழும் விசித்திர மிருகம் இது.  கைமெராவைக் காண்பது ஒரு தீய சகுனம்;  அது சூறாவளி,  எரிமலைகள், கப்பல் கவிழ்தல் மற்றும் இயற்கை விபத்துக்களுடன் தொடர்புடையது என்று கூறப் பட்டது. அரக்கத் தன்மை கொண்ட இந்த மிருகம் ஆசியாவைச் சேர்ந்ததாகவும்,  பெண்ணாகவும் கருதப் பட்டது என்பதும் கவனிக்கத் தக்கது.  கடைசியில் பெகாஸஸ் (Pegasus) என்ற தேவலோகக் குதிரை மீதேறி வரும் வீர நாயகன் பெல்லர்ஃபோன் (Bellerophon) இந்தப் பிராணியை வேட்டையாடி முற்றிலுமாக அழிக்கிறான்.

பின்னாளில் ஆங்கில மொழி வழக்கில்  chimera என்ற சொல்லுக்கு  ”முட்டாள்தனமான பொய்க் கற்பனை” என்றே பொருள் உண்டாகி விட்டது!

Main Entry: chi·me·ra

1 a capitalized : a fire-breathing she-monster in Greek mythology having a lion’s head, a goat’s body, and a serpent’s tail b : an imaginary monster compounded of incongruous parts

2 : an illusion or fabrication of the mind; especially : an unrealizable, foolish dream

ஆங்கில-சாக்சானிய வீரக் கதைகளின் நாயகன் பே உல்ஃப் (Beowolf) நெருப்புமிழும் டிராகன்களைக் கொன்று சுவடில்லாமல் அழிக்கிறான்.  ஆனால்,  இந்துப் புராணங்களில் பூதகணங்கள் தர்மத்திற்காகப் போராடுகிறார்கள்; கோயில் மதில்சுவர்களில் மனிதர்களின் பாதுகாவலர்களாக நிற்கிறார்கள்;  தெய்வவடிவங்களைச் சுற்றிய  அலங்கார  பிரபை வளைவில் கீர்த்திமுகமாக  அருள் வழங்குகிறார்கள்.

இரண்டு வேறு வேறு கலாசாரங்கள்.  இரண்டுமே  சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன.  ஒரு கலாசாரம்  அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது.  மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது.  முன்னது  அதனை முடிவின்மையின் உருவகமாககக் கண்டது, பின்னதற்கோ அது குழப்பங்களின் குறியீடாயிற்று.  முன்னதன் பார்வை  பல்வேறு சாத்தியங்கள் கொண்ட உலகத்தைக் கண்டது. பின்னதன்  பார்வையில்  அறிந்த விஷயங்களுக்கு அப்பாற்பட்டது அனைத்தும் ஆபத்தை விளைவிப்பதாகவே  உணரப்பட்டது.

”அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்று அடக்கத்துடன் உரைத்தார் நம் தெய்வப் புலவர்.

”ஒற்றைப் படையான குறுகிய அறிவை விடுத்து, மாறுபட்டுத் தோன்றும்  பொருட்கள் அனைத்திலும் பிரியாமல் நிற்கும் ஒருமையை உணர்வதே உண்மையான அறிவு. அத்தகைய அறிவாகத் திகழும் பிரான் அல்லவா நீ?” என்று பாடுகிறார் இன்னொரு இறைஞானி.

“அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிரிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?”

(கந்தர் அனுபூதி, அருணகிரிநாதர்)

இந்து ஞான மரபின் தத்துவ தரிசனங்கள் அனைத்திலும் இந்த ஞானம் இழையோடிக் கொண்டிருப்பதைக் காணலாம். சாங்கிய தரிசனத்தின் படி, புருஷன், பிருகிருதி ஆகிய இரண்டு தத்துவங்களுமே எல்லையற்றவை, அனந்தமானவை.  ஆனால், புருஷன் அசைவற்றும், மாறுதலற்றும் இருக்கிறான்.  பிரகிருதியோ  அசைவையும், இயக்கத்தையுமே உயிராகக் கொண்டிருக்கிறாள்.  காலத்திற்கும், தேசத்திற்கும் அப்பாற்பட்டவனாக புருஷன் இருக்கிறான்.  பிரகிருதி கால, தேசங்களுக்கு உட்பட்டு அவையாகவே இருக்கிறாள்.  ”இதுவும், இதுவும்..” (இதி, இதி)  என்று  ஒவ்வொன்றையும்  (ப்ர)  தன்னகத்தே கொண்டு,  சிருஷ்டி அனைத்தையும் உள்ளடக்கியதாகவும்,  வெளிப்படுத்துவதாகவும் பிரகிருதி இருக்கிறது.   இதே கோட்பாடு தான் வேதாந்த தரிசனத்தில்   பரம்பொருளான  பிரம்மமாகவும்,  அதன் இயங்கு சக்தியான  மாயையாகவும்  பரிணாமம் கொள்கிறது.

belur-halebid_temple_carvings_mediumநமது ஆலயங்களின்  அமைப்பும் சரி, அவற்றில் உள்ள சிற்பங்களும் சரி  பிரகிருதியின் இந்தப் பூரணத் துவத்தை நன்கு வெளிப்படுத்துவதாக அமைகின்றன.  தேவதைகள்,  அசுரர்கள், மனிதர்கள், கின்னரர்கள், யட்சர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், மிருகங்கள், பறவைகள், செடி, கொடிகள் இவற்றோடு அறியாதவையும்,  கற்பனை செய்யாதவையும், ஏன் கற்பனை செய்ய முடியாதவையும் எல்லாம்  அங்கே உயிர்த்துடிப்புடன் திகழ்கின்றன.  அழகு ததும்பும் அப்சரஸ்களும்,  அச்சுறுத்தும் வடிவம் கொண்ட பூதகணங்களும்  அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள்.  காம ரசம் ததும்பும் காட்சிகளுக்கிடையில், கண்கள் மூடி, புலன்களை அடக்கி யோகிகளும், முனிவர்களும் தவம் செய்கிறார்கள்..  உக்கிரமான போர்க்களங்களும்,    குழந்தைகள் விளையாடும், அன்புததும்பும் குடும்ப வாழ்க்கைக் காட்சிகளும்  இணைந்திருக்கின்றன.

மிருகங்களுக்கும்  மனிதர்களுக்கும்,  மனிதர்களுக்கும் தேவர்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான இடைவெளிகள் எல்லாம் அங்கே அழிந்து விடுவதாகத் தோன்றுகிறது!  மனித மனத்தின் கசடுகள் செயற்கையாக, அடுக்கடுக்காக உருவாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு  சுவரையும் உடைப்பதற்காகவே  நம் முன்னோர்கள் ஆலயங்களில் இத்தகைய  ஏற்பாட்டைச் செய்தார்களோ? இருக்கலாம்.  அறிவார்ந்த தத்துவ ஞானம், அற்புதமான படைப்புத் திறனுடன் கலந்து, அழகிய கலையாக வெளிப்பட்டு நிற்கையில், அது நம் ஆழ்மனத்தில்  பதிந்து விடுவதில் ஆச்சரியமில்லையே!  உலகின் மற்றெல்லா மக்களுடனும் ஒப்பிடுகையில், இந்துக்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும்,   பன்முகத் தன்மையை ரசிப்பவர்களாகவும், போற்றுபவர்களாகவும்  இருப்பதற்கு இந்த ஆழ்மனப் பதிவுகள் தான் காரணம் என்பதில் ஐயமில்லை.   ”நம்பமுடியாத வகையில் முரண்பாடுள்ள விஷயங்களைக்  கூட  சேர்த்துக் கொள்ளும் தன்மை இந்து கலாசாரத்தில் இருக்கிறது; இது  தான் நம்ப முடியாததாக,  இயற்கைக்கு  முரண்பாடாக (unnatural) இருக்கிறது” என்று ஆரம்ப கால பிரிட்டிஷ் காலனியர்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு  இந்தத் தன்மை நம் கலாசாரத்தில் வேரூன்றி விட்டது.  அது குழப்ப வாதமல்ல என்பதையும், அதன்பின் உறுதியான தத்துவ மையம்  இருக்கிறது என்பதையும்,  பின்னாட்களில் தான் திறந்த மனமும், சுதந்திர சிந்தனையும் கொண்ட சில மேற்கத்தியர்கள் புரிந்து கொண்டார்கள்.

விசித்திரங்கள் கொண்ட புராணங்களும்,  கோயில் சிற்பங்களும்  நாம் காணாதவை, நாம் அறியாதவை பிரபஞ்சமெங்கிலும் உண்டு என்பதை  நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும்.  முத்திரை குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும்,  புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதைத் திறந்து வைத்திருப்பதே சிறந்தது  என்று  நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்.  மேம்போக்கான  சமூக நாகரிகப் பார்வையில்  அருவருக்கத் தக்கதாக பல விஷயங்கள் சித்தரிக்கப் படலாம் –  அகோரி சன்யாசிகள்,  அலகு குத்திக் கொள்பவர்கள்,  ஓரினச் சேர்க்கையாளர்கள்,  நிர்வாண ஜைன முனிவர்கள்,  தீ மிதிப்பவர்கள், திருநங்கைகள் இத்யாதி இத்யாதி.. ஆனால் இவை எவையுமே  ”இயற்கைக்கு முரணானவை”யோ, வெறித்தனமாக அழித்து ஒழிக்கப் படவேண்டியவையோ அல்ல.  ’ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உபநிஷதம் சொல்வதன் படி, எல்லாமே  இறைத் தன்மையின் வெளிப்பாடுகள் தான்!

விசித்திர பிராணியிடத்தில் சிறுதுளியாக அர்ஜுனனுக்கு வந்த ஞானம், விஸ்வரூப தரிசனத்தில் முழுமையடைந்திருக்க வேண்டும்.  கடந்தவையும், வருபவையும்,  கண்டவையும், காணாதவையும்,  அறிந்தவையும், அறியாதவையும் எல்லாம் அர்ஜுனனுக்கு அந்த தரிசனத்தில் புலப் பட்டது.  அவன் கண்கள் கூசின,  உடல் சிலிர்த்தது.  பிரமிப்பு அடங்கவில்லை. ”வானத்தின் எல்லைகளுக்குள் தன்னைக் கட்டி வைத்திருக்கும் மனிதன் தான் எவ்வளவு முட்டாள்?” என்ற எண்ணம் மேலிட்டது.  பணிவுடன் சிரம் தாழ்த்தி பிரபஞ்சத்தின் அந்தப் பேரிருப்பை அவன் மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தான்.  அவனது பார்வை வானத்திற்கப்பால் விரிந்தது, ’சத்’தியத்தின் (இருப்பின்) எல்லையற்ற சாத்தியங்களை நோக்கி.

21 Replies to “இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்”

 1. Thank you,
  A GREAT insight.
  Thanks for all your efforts.
  Read and cherishing its contents.
  Very enlightening.
  God Bless and Greetings,
  Best Regards,
  Anbudan,
  Srinivasan,
  Perth, Australia.

 2. Jaatuyu,

  Brilliant.. Expecting more articles in this line. Very good insight and lucid to read.

  Thanks again.

  Regards
  S Baskar

 3. ஹிந்து மதத்தை நன்றாக புரிந்து எழுதப்பட்ட வார்த்தைகள்.
  ஜடாயு அவர்கள் பணி சிறக்க இறைவன் அருளட்டும்.

  நன்றி

 4. Dear Sir,
  Brilliant article. Beautifully explains the difference between the Hindu mind and the Western mind in their perceptions. Fanatically exclusive west cannot understand the all inclusive Hindu
  mind. To any oridnary Christian all the other faiths are either a chimera or a dragon.
  Thank you very much for authoring such a wonderful thought provoking article which gives much insight.
  With regards,
  Umayorubhagan

 5. சிந்திக்கவைக்கும் சீரிய பதிவு. மனம் விரிந்தால் வானம் வசப்படும்.
  மனம் சுருங்கினால் மனிதனும் மிருகம் ஆவான் என்பது எளிதாகப் புலனாகிறது.

 6. // மனம் சுருங்கினால் மனிதனும் மிருகம் ஆவான் என்பது எளிதாகப் புலனாகிறது //

  நூற்றுக்கு நூறு சத்தியமான கருத்து இது; தயவுசெய்து எனது பின்னூட்டங்களை மட்டுறுதி செய்யும் கனவான்கள் இதனை உணர வேண்டுமாக வேண்டுகிறேன்;

 7. ஜடாயு அய்யா,

  சிந்தனையை தூண்டும் ஒரு அழகான எளிமையான கட்டுரை

  இது தான், நான் சொல்றது தான் கடவுள் என்று கடவுளையே ஒரு வரையறைக்குள் ஒடுக்க நினைப்பவரின் மனோபாவத்திற்கும், எங்கும் உளன் என்று எல்லாவற்றிலும் கடவுளை காணும் நம்மவரின் மனோபாவத்திற்கும் உள்ள வேறுபாட்டை மிக நேர்த்தியாக எடுத்துரைதுள்ளீர்கள்.

  இந்த கட்டுரையின் வலிமையே அதன் எளிமை தான்

 8. காலத்துக்கேற்ற அருமையான கட்டுரை. ஜடாயு உங்கள் பணி வளரட்டும்.

 9. ஒன்பது உயிர்வகைகள் எவை என கூற முடியுமா?

 10. தமிழகத்தில் உள்ள பல கோயில் கோபுரங்களில் சில நிர்வாணச் சிற்பங்களைக் காணலாம். அதன் மேல் மாடங்கள் வெறுமையாகவோ அல்லது வேறு பல தெய்வச் சிலைகளோ அமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் பொருள் முறையான காமத்தினை உணர்ந்து அனுபவித்து சிற்றின்பத்திலிருந்து விடுபட்டு தெய்வனிலையை அடையவேண்டுவதற்கான குறியீடுகளே கோபுரமும் அதனூடான சிற்பங்களும் என பெரியோர்கள் உரைப்பர். ஜடாயுவின் கட்டுரை மிக நன்றாகவுள்ளது.

 11. ஜடாயு அய்யா, உங்களை இராமாயணத்தின் ஜடாயு போலவே உணர்கிறேன்! ஆச்சர்யமான, அழகான கட்டுரை.. தொடரட்டும் உங்கள் பணி!

 12. ஜடாயு அய்யா மிகச் சிறப்பான கட்டுரை.பாராட்டுக்கள்.

 13. Excellent Jatayu ji. Thanks for the wonderful insight. If we compare our culture to the western culture, forget the inner meanings, even outwardly its different and I cannot stop wondering the richness of our tradition and culture.

  Last month end (oct 31) was ‘Halloween Day’ in the west and people celebrated it my office on Oct 23rd, the previous friday. Everyone will dress up in different costume. Even old people happily will dress like a witch or some funny characters. Mainly kids dress like their favorite character and go from door to door, saying ‘Trick or Treat’ (i really dont know what the meaning is and why they celebtrate Halloween. its related to something spooky) and get ‘candy’s’ (chocolate/ muttai).

  I was wondering how people across the world think in similar terms. We dress up our kids as Krishna/Rama/Radha and send to other’s houses during Gokulashtami and Navarathri and I was smiling to myself. Immediately it struck me how contrast the two cultures were and I felt bad equating both. We dress up our kids as Gods and not as witch or satan or something evil. We send our kids to others houses, and pass on our ‘batchanam’ (murukku, seedai, athirasam etc) to our neighbours. It inculcates a godliness (goodness) in our kids and teach them to ‘GIVE’.

  But here in the west, they dress up as witch or satan or something evil or funny, just for fun and go and ask for chocalates. This teaches kids to ‘GET’ things from others and not GIVE.

  Same kind of enjoyment, but how contrast morals it teaches.

  I could not stop appreciating our culture which teaches wonderful morals and ethics to us, leave alone the spirituality.

  Satish

 14. அருமை ஜடாயு…

  உங்கள் கட்டுரைகள் ஒவ்வொன்றும் நம் பாரம்பரியத்தின் வெவ்வேறு கோணங்களை காட்டுகின்றன..

  வாழ்க பல்லாண்டு..!

  நன்றி..

 15. பாராட்டும் நண்பர்கள், பெரியோர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

  // Utham
  11 November 2009 at 7:29 pm
  ஒன்பது உயிர்வகைகள் எவை என கூற முடியுமா? //

  gunjaram என்றால் கொத்து என்று பொருள் (தமிழ் “குஞ்சலம்”!). நவகுஞ்சரம் என்றால் மயில், புலி, மான் என்று அந்த விசித்திரப் பிராணியில் அடங்கிய ஒன்பது உயிரினங்களின் கொத்து.

 16. இன்னும் பல வித்யாசங்கள் உண்டு

  நான் இப்பொழுது வெளிநாட்டில் உள்ளேன் – நேற்று முன்தினம், ஆண்டுக்கு சுமார் 120,000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கும் ஒருவரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன், அவர் ஒரு அம்பது வயதை தாண்டியவர் – நாங்கள் பேசி முடித்தபின் அவர் நான் திரும்பி செல்வதற்கு வழி காட்டுவதற்காக வந்தார் – அப்பொழுது வழியில் இருக்கும் சோபாவில் எங்கோ ஒளிந்து கிடந்த ஒரு நாலணாவை பொருக்கி பையில் போட்டுக்கொண்டார் – நான் ரொம்ப லக்கி என்று வேற மார் தட்டி கொண்டார், அவருக்கு அதில் அப்படி ஒரு ஆனந்தம்- இது எனக்கு அல்பத்தனமாக இருந்தது – லக்கி இல்ல பக்கி என்று மனதில் நினைத்துக்கொண்டேன்

  நம்ம ஊர் காரர்கள் என்ன செய்வார்கள் – ஒன்று அதை எடுக்க மாட்டார்கள் அப்படியே எடுத்தாலும் உண்டியலில் போட்டுவிடுவார்கள் – அடுத்தவன் காசு நமக்கு ஏன் என்ற எண்ணமே நமக்கிருக்கும்

  இவர்களுக்கோ அடுத்தவன் காசென்றால் உயிர் – ஆளாய் பறப்பார்கள் – அடுத்தவன் மனைவி, அடுத்தவன் மதம் எல்லாத்துமேளையும் ஒரு வித்யாசமான ஆசை

 17. Dear Sri Jataayu Ji,

  //“எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய் நண்பா!” என்று ஆரம்பிக்கும் தனது உயிர் நண்பனான கிருஷ்ணனின் உபதேசத்தை எண்ணிப் பார்த்தான்.//

  Did Krishna Really meant to say that, “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல்”

 18. // Dear Sri Jataayu Ji,

  Did Krishna Really meant to say that, “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல்” //

  ஆமாம். கீதையின் முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனுடைய தர்மக் குழப்பம் அவனது புலம்பலாக வெளிப்பட்டு, எடுத்த வில்லையும் அம்பையும் அவன் கீழே போட்டு விடுகிறான்.. இரண்டாம் அத்தியாயத்தில் கிருஷ்ணன் பேச ஆரம்பிக்கையில் “கவலைப் பட வேண்டாதவற்றை எண்ணிக் கவலைப் படுகிறாய்; எல்லாம் தெரிந்தவன் என்ற ரீதியில் பேசுகிறாய் (ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே…)” என்று கூறுகிறான்.. அதைத் தான் குறிப்பிட்டேன். “எனக்கு” என்ற சொல் குழப்பம் தருகிறது என்று நினைக்கிறேன்..

  “Arjuna, you talk as if you know everything”, thats how krishna starts. Hope its clear now.

 19. “ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே ” என்ப‌தை

  “ஞான‌ வார்த்தைக‌ளையும் பேசுகிராய்” என்றோ,

  “சான்றோர்க‌ளின் சிந்த‌னை வார்த்தைக‌ளையும் பேசுகிராய்” என்றோ

  “speaking learned words” என்றோ

  பொருள் கொள்வது ச‌ரியோ என‌ நினைக்கிரேன்.

  “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய்”
  என்பது வேறு பொருளை த‌ருகிற‌து, என‌ நினைக்கிரேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *