இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1

முன்னுரை:

sudan-refugeesஉலகத் தலைவர்களாலும், புத்திஜீவிகளாலும் ஜனரஞ்சக ஊடகங்களாலும் முன்வைக்கப்படும் “எல்லா மனிதர்களும் ஒன்றே” மற்றும் “Cosmopolitan Culture” போன்ற கோஷங்களை மனிதனின் இயற்கையான மனநிலையின் மூலமும் வரலாற்றின் மூலமும் நம் கண்முன்னால் நடைபெறும் இன வன்முறைகளின் மூலமும் அவற்றைத் தடுக்கமுடியாமல் திணறும் நம் கையாலாகாத்தனத்தின் மூலமும் இந்தச் சமுதாய மாற்றங்கள் வரும் காலங்களிலாவது சாத்தியமா என்பதையும் நிதானமாக சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

முன் குறிப்பு: அறிவியலாளர்கள் தோல் நிறம், முக வடிவமைப்பு, முடியின் நிறம் போன்றவற்றால் மனிதர்களை ஐந்து விதமாகப் பாகுபடுத்தியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் உருவான “Race” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் இனம் என்பது மொழிபெயர்ப்பு. ஆனால் மொழி, மதம், பிரதேசம் போன்றவற்றின் அடிப்படையிலும் இனம் என்ற சொல் இக்கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது.

 

இனங்களும் இன வேற்றுமைகளும்

கற்கால மனிதர்களினிடையே நல்ல பழம் தரும் மரங்கள், நல்ல மண், நிறைய மிருகங்கள் அமைந்துள்ள பிரதேசங்களை அடைய இரு குழுக்களின் இடையே ஏற்பட்ட மோதலே இன வேற்றுமை துவங்கக் காரணமாக அமைந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. நாளடைவில் இந்த வேற்றுமைகள் உடல் நிறம், பிறந்த ஜாதி, மொழி, மதம், நாடு, ஒரு நாட்டின் பிரதேசம் போன்ற வேறுபாடுகளின் அடிப்படையில் வளர்ந்தது. ஒவ்வொரு இனத்திற்கும் தங்கள் அடையாளங்களாக உள்ளீடுகளும் குறியீடுகளும் உள்ளன. ஒவ்வொரு இனமும் தங்கள் இன வரலாறு என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவும் தங்கள் மூதாதையார்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு இந்நாள் வரை வந்துள்ளதாகவும் உறுதியாக நம்புகின்றனர். உணவு, உடை, மொழி, மூதாதையரால் தங்களுக்கு வந்துள்ள அறிவு (எழுதப்பட்டதாகவோ அல்லது வாய்மொழியால் இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவோ இருப்பது), கடவுள் மற்றும் அந்தக் கடவுளை வழிபடும் முறைகள், மருத்துவம், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் (தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை) போன்றவை இனத்திற்கு இனம் வேறுபட்டு உள்ளன.

 

இன துவேஷமும் இனப் படுகொலையும்

முன்னர் குறிப்பிட்ட இன அடையாளங்கள் அழிக்கப்பட்டாலோ அல்லது அழியும் சூழ்நிலை இன்னொரு இனத்தால் உருவாக்கப்பட்டாலோ இன துவேஷம் உருவாகிறது. இனப் படுகொலைகள் திடீரென்று உருவாவதில்லை. இன துவேஷங்கள் சகிக்க முடியாமல் போகும்போதும் ஒரு இனம் முழுமையான அதிகாரத்திற்கு வரும்போதும் மற்றொரு இனத்தின் மேல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இக்கட்டுரையை இன வன்முறையின் அடிப்படையில் மூன்று பகுதிகளாக பிரித்துக்கொள்வோம்.

(1) நடந்தவை (2) நடந்து கொண்டிருப்பவை (3) நடக்கக்கூடும் என்று நான் அஞ்சுபவை.

 

பகுதி – 1 – நடந்தவை:

பெரும் இனப் படுகொலைகள்: ரோமானிய நாகரிகத்தில் நடத்தப்பட்டவை, க்ருசேட் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதத்தினரிடையே கி.பி.1000 வாக்கில் நடந்தவை, ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தியவை, இந்தியப் பிரிவினையின்போது இந்து முஸ்லிம்களுக்கு இடையே நடந்தவை, சூடானில் இன்றளவும் நடந்து கொண்டிருப்பவை போன்றவற்றை பெரும் இனப் படுகொலைகளுக்கு உதாரணங்களாகக் கூறலாம்.

வரலாறு முழுவதும் இதுபோன்ற கறைபடிந்த பக்கங்கள் இருப்பினும் வரும் சந்ததிகளில் இது போன்ற படுகொலைகள் நேரக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில் ஐ.நா.சபையின் பல சட்டங்கள் எழுதப்பட்டுள்ளன.

“எல்லா மனிதர்களும் ஒன்றே”

slavesஇந்தத் தாரக மந்திரம் அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கருப்பு அடிமைகளின் சுதந்திரத்திற்காக சில வெள்ளை அமெரிக்கர்களாலேயே முன்வைக்கப்பட்டது. ஆனால் 19ம் நூற்றாண்டின் மத்தியில் சார்ல்ஸ் டார்வின் எழுதிய “Origin of Species” என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தக் கோஷத்தின் மவுசு குறைந்தது. இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் மனிதர்களும் விலங்குகளிலேருந்தே பரிணாம வளர்ச்சியின்மூலம் தோன்றினார்கள் என்பதை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டார்கள். இந்தப் புத்தகத்தின் “Survival of the Fittest” வாசகத்தை “பலத்தாலும் புத்தி கூர்மையாலும் மேம்பட்டவர்களே மனித சமுதாயத்தை வழிநடத்துவதற்கும் சந்ததியினரை உருவாக்குவதற்கும் தகுதி படைத்தவர்கள்” என்பதான “Social Darwinism” மற்றும் “Eugenics” போன்ற கொள்கைகளை உருவாக்கினார்கள். சார்ல்ஸ் டார்வினே தன்னுடைய மற்றொரு புத்தகமான “The Descent of Man”ல் ஐரோப்பிய வெள்ளையர்களே மற்ற மனிதர்களை விட புத்தி கூர்மையிலும் பலத்திலும் உயர்ந்தவர்கள் என்றும் எப்பொழுதெல்லாம் பழங்குடியினர்கள் நாகரிமடைந்த இனத்துடன் (அவர் இங்கு இங்கிலாந்தைக் குறிக்கிறார்) மோதுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பழங்குடியினர் அழிக்கப்படுவார்கள் என்றும் கருத்து தெரிவித்தார். இந்தக் கொள்கைக்கு வலு சேர்க்கும் விதமாக சில விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பை அறிவித்தார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் புதைக்கப்பட்ட வெள்ளை மற்றும் கறுப்பு இனத்தாரின் உடல்களின் எலும்புக்கூடுகளை ஆராய்ந்தார்கள். இதன் படி கறுப்பு இனத்தாரின் எலும்புக்கூட்டின் தலைகள் சிறியதாக குரங்குகளை ஒத்து இருந்ததையும் வெள்ளை இனத்தாரின் எலும்புக்கூட்டின் தலைகள் பெரியதாக இருந்ததையும் சுட்டிக்காட்டினார்கள். இதனையொட்டி மேற்கத்திய நாடுகளின் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் கருப்பர்கள் இன்னும் விலங்கைப்போலவே உருவ அமைப்பும் புத்தி வளர்ச்சியும் கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்களை அடிமைகளாக நடத்துவதில் தவறில்லை என்று பிரசாரம் செய்தார்கள். (Source – Racism A History – BBC)

ஆனால் 1920களில் பரிணமித்து 1960களில் மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் மூலம் கருப்பர்களுக்கு அமெரிக்காவில் முழுமையான சுதந்திரத்துடன் வாழும் அங்கீகாரம் கிடைத்தது. ஐ.நா.சபையின் பல சட்டங்களில் “எல்லா மனிதர்களும் ஒன்றே” என்ற தாரக மந்திரத்தின் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இச்சட்டங்களை இயற்றுவதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் மிகவும் பாடுபட்டிருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

 

கருப்பு வெள்ளை இன வரலாறு:

மேலே செல்வதற்குமுன் வெள்ளையர்கள் கருப்பர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட இன ரீதியான கொடுமைகளைக் கவனிக்கலாம்.

obama-in-ghanaஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறிய பிறகு உடல் வருந்தி செய்யும் வேலைகளைச் செய்ய குறிப்பாக விவசாய வேலைகளுக்காக ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பர்களை அடிமைகளாக அழைத்து வந்தார்கள். நடந்த எண்ணிலடங்கா இனக்கொடுமைகளின் தீவீரத்தைப் புரிந்துகொள்ள இரண்டு உதாரணங்களை மட்டும் பார்ப்போம். சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்பிரிக்காவின் கானாவில் ஒரு கடற்கரையில் உள்ள கோட்டையைக் காணச் சென்றிருந்தது நினைவிருக்கலாம். இங்கே பல தாழ்வறைகள் உள்ளன.

slave-fortress-in-cape-coastஇருநூறு பேர் மட்டுமே அதுவும் குனிந்து நிற்க மட்டுமே வசதி உள்ள ஒரு பெரிய அறையில் ஐநூறு பேர் வரை பல மாதங்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த ஆப்பிரிக்க கானா தேசத்திலிருந்து அமெரிக்கா செல்ல கப்பல் வரும் வரை இவர்கள் இந்த அறையில் தங்க வைக்கப்பட்டனர். குறிப்பாக இந்த அறைகளில் கழிப்பறை வசதி கிடையாது. அறையின் ஒரு மூலையில் இந்த கருப்பர்கள் கழிவுகளை அகற்ற வேண்டும். கப்பல் வந்தவுடன் வியாதியினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் அகற்றப்பட்டு உயிரோடிருப்பவர்கள் மட்டும் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படுவர்.

congoமற்றொரு உதாரணம் ஆப்பிரிக்க காங்கோ நாட்டில் 1920 களில் நடந்தது. அந்நாள்களில் பெல்ஜியத்தின் காலனியாக இருந்த காங்கோவில் கிட்டத்தட்ட ஒரு கோடி கருப்பர்கள் இருபது வருடங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிபிசியின் ஒரு ஆவணப் படம் கூறுகிறது. சரியான தஸ்தாவேஜுகள் இல்லாததால் அங்கு பணியில் அமர்த்தப்பட்ட இராணுவத்தினரின் குறிப்புகளிலிருந்தே இவை வெளியுலகிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றின்படி பெல்ஜிய இராணுவத்தினர் ஒரு கிராமத்தின் பெண்களை ஒரு பெரிய இடத்தில் அடைத்து வைப்பார்கள். மிகவும் கடினமான விவசாய வேலைகளை கிராமத்து ஆண்கள் செய்யுமாறு பணிக்கப்படுவர். பெரிய அளவில் மகசூல் கிடைக்கவில்லையென்றால் பெண்கள் கற்பழித்து கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுவார்கள். இது போன்ற நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடந்ததாக இராணுவத்தினரின் டைரிகளினால் இன்று நமக்குத் தெரிய வருகிறது. (Source: Racism – A History – BBC)

இன்று மேற்கத்திய நாடுகள் “எல்லா மனிதர்களும் ஒன்றே” என்று அறைகூவல் விடுத்தாலும் நேற்று நடந்தவற்றைக் குறித்து கொள்வோம்.

 

பகுதி – 2 – நடந்து கொண்டிருப்பவை

இந்தப்பகுதியில் 1960களிலிருந்து நடப்பவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் 1960களில்தான் கருப்பர்களுக்கு அமெரிக்காவில் முழு சுதந்திரம் கிடைத்தது. அதன் பிறகுதான் “எல்லா மனிதர்களும் ஒன்றே” என்ற கொள்கை உலக அளவில் வலுப்பெற்றது.

 

இன ஒற்றுமை என்றால் என்ன?

உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது சாதாரணமானவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம் இதுதான். உணவு, உடை, மொழி போன்றவற்றில் வேறுபாடுகள் உலகில் இருந்தே தீரும். ஆனால் இவ்வேறுபாடுகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் போன்ற வாழ்வாதாரங்கள் எவருக்கும் மறுக்கப்படக்கூடாது. மதம் மற்றும் பண்டைய கலாசாரங்களை சுதந்திரமாக அனைவரும் பின்பற்ற உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். இவ்வுரிமைகள் மறுக்கப்படின் அந்நாட்டை பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது பொருளாதாரத் தடை மூலமாகவோ திருத்த வேண்டும். இம்முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் பலாத்காரமாக அந்நாட்டின் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் வீட்டிற்குள் எவரும் தங்கள் இன பழக்க வழக்கங்களை பின்பற்றலாம். ஆனால் வெளியில் மற்ற இனத்துடன் மோதாத அளவிற்கு இவைகள் அமைய வேண்டும். இதன் அடிப்படையில் பல்வேறு இன மக்கள் ஒரே இடத்திலோ, பிரதேசத்திலோ அல்லது நாட்டிலோ வாழலாம். இவ்விளக்கம் பல்வேறு உலகத் தலைவர்களாலும், புத்திஜீவிகளாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்படுகிறது. இதை ‘Cosmopolitan Culture’ என்று அழைக்கிறார்கள். [இன ஒற்றுமை என்பதற்கு எல்லா சமுதாயங்களாலும் எல்லா காலங்களிலும் பின்பற்றக்கூடிய விளக்கத்தை 3ம் பகுதியில் தருகிறேன்.]

இவ்வகையான சமுதாயத்தை எல்லா நாடுகளிலும் உருவாக்கி இன ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடப்படுகிறது. இன துவேஷம் உள்ள நாடுகளில் இம்முயற்சி எந்த அளவில் மேற்கொள்ளப்பட்டது? இனக்கொடுமைகள் நடந்த நாடுகளை மற்ற நாடுகளால் என்ன செய்ய முடிந்தது என்பதை சில உதாரணங்களின் மூலம் நோக்கலாம்.

 

Better Late than Never எனச்சொல்லும் விதமாக சாதித்தவை…

saddam-husseinஈராக்: சுன்னி முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். சதாம் உசேன் ஒரு சுன்னி முஸ்லீம். ஈராக் போர் சரியா தவறா என்பதைப்பற்றி நாம் பார்க்கப்போவதில்லை. சதாம் உசேன் ஒரு கிறுக்கனா அல்லது வெறி பிடித்தவனா என்று கூற முடியவில்லை. அவன் ஷியா முஸ்லீம்கள் மீதும் இனக்கொடுமைகளை நடத்தியிருந்தாலும் குர்த் இன மக்களின் மீது அவன் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் மனதை உலுக்கும். இங்கு கவனிக்க வேண்டியது குர்த் இனத்தவர்களில் பெரும்பாலோனோர் சுன்னி இஸ்லாமையே சேர்ந்தவர்கள். ஆனால் குர்த் இன மக்களின் கலாசார பழக்க வழக்கங்கள் மற்ற சுன்னி இனத்தவர்களை விட வேறுபட்டது. தன்னுடைய நாட்டின் ஒரு இன மக்களின் மீதே விஷ வாயுவைப் பாய்ச்சி ஆயிரக்கணக்கானோரை கொன்றிருக்கிறான். இவை 80களிலும் 90களிலும் கூட நடந்திருந்தாலும் உலக நாடுகளால் இதைத் தடுக்க முடியவில்லை. அவன் கடைசியாக தூக்கில் போடப்பட்டது வெறும் ஆறுதல் செய்தியே. இவ்விஷயத்தை வேறுவிதமாக நோக்கலாம். அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது குர்த் இன மக்களின் சுதந்திரத்திற்காக அல்ல. சதாம் உசேன் பெரும் அழிவு படைக்கும் ஆயுதங்களை வைத்திருந்ததாக சந்தேகப்பட்டதாலும் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நடந்ததற்காகவும்தான். சதாம் உசேன் அமெரிக்காவுடன் சில சமாதானங்களுக்கு ஒத்துக்கொண்டிருந்தால் அவன் இன்றும் உயிருடனும் அதிகாரத்திலும் இருந்திருப்பான். மேலும் பல்லாயிரம் ஷியா மற்றும் குர்த் இன மக்களைக் கொன்றிருப்பான்.

 

போஸ்னியா ஹெர்சகொவினா: இந்த நாடு 1995ம் ஆண்டு யூகோஸ்லோவியாவிலிருந்து பிரிந்து உருவானது. இப்பிரதேசத்தில் சர்பியர்கள், க்ரோயேஷியர்கள் மற்றும் போஸ்னிய முஸ்லீம்கள் என்ற மூன்று இன மக்கள் வசிக்கின்றனர். யூகோஸ்லோவியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு இந்தப் பிரதேசத்திலும் தனிநாட்டுக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு காட்டு தர்பாரே இங்கு நடந்தது. பெரும்பாலான அதிகாரம் யூகோஸ்லோவிய சர்பியர்களின் வசம் இருந்தது. இந்த மூன்று இனத்து மக்களுக்கிடையே நடந்த வன்முறையில் அதிகாரபூர்வமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் கொடுமைகள் நடந்தேறிய பின்னரே நேடோ படையினர் போஸ்னியாவிற்குள் நுழைந்து அமைதியை ஏற்படுத்தினர்.

 

தென் ஆப்பிரிக்கா: உலகில் பல நாடுகளில் தீண்டாமை வழக்கில் இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில்தான் தீண்டாமை 1990கள் வரை தொடர்ந்தது. அமெரிக்காவில் 1960களில் தீண்டாமை அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டாலும் 1960களில்தான் தென் ஆப்பிரிக்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. தீண்டாமையை அதிகாரபூர்வமாக சட்டமாக்கியது போயர்ஸ் (டச்சுக்காரர்கள், பிரென்ச்சுக்காரர்கள் மற்றும் ஜெர்மானியர்கள்) மற்றும் பிரிட்டிஷ் வெள்ளையர்கள். வேறுவிதமாகச் சொல்வதென்றால் தீண்டாமையை காலனித்துவ வெள்ளையர்கள் முன்மொழிந்தார்கள். சுதந்திரத்திற்குப்பின் அதிகாரத்திற்கு வந்த தென் ஆப்பிரிக்க வெள்ளையர்கள் வழிமொழிந்தார்கள். தென் ஆப்பிரிக்க வெள்ளையர்கள் 1990களில் தீண்டாமையை ஒழித்தது மன மாற்றத்தாலா அல்லது கருப்பின மக்களின் எழுச்சியாலா என்பது தெரியவில்லை. ஆனால் உலக நாடுகளால் தென் ஆப்பிரிக்காவை 30 வருடங்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இனி இன்றும் நடந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

 

ஜிம்பாப்வே: ஒரு மாறுதலுக்காக வெள்ளையர்கள் கருப்பர்களால் படும் துன்பத்தைப் பார்ப்போம். வெள்ளையர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் காலூன்றியபின் பெரும் நிலச்சுவாந்தாரர்களாக மாறினார்கள். இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு ஏழைமையை ஒழிக்கும் நோக்குடன் “நில உச்சவரம்புத் திட்டத்தை” அறிமுகப்படுத்தினார்கள். இதன்படி 30 ஏக்கர்களுக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தி நிலமில்லா ஏழைகளுக்கு அரசு வழங்கியது. இச்சட்டம் மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் சரியாக அமுல்படுத்தப் படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதிகாரபூர்வமாக சட்டமாவது இயற்றப்பட்டது. ஆனால் ஜிம்பாப்வேயிலோ முகாபே என்னும் அதிபரின் ஒத்துழைப்புடன் பணக்கார வெள்ளையர்களிடமிருந்து நிலங்கள் முழுவதுமாக கையகப்படுத்தப்பட்டு சில கருப்பினத் தலைவர்களால் ஏப்பம் விடப்படுகின்றன. சில இடங்களில் வெள்ளை இனத்தாரின் மீது வன்முறையும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு முழி பிதுங்குகிறது. கருப்பின மக்களின் காவலர்களாக தங்களை முன்னிலைப்படுத்திய பிறகு கருப்பர்களுக்கு எதிராக பேசவும் முடியவில்லை, சும்மாவும் இருக்க முடியவில்லை.

 

sudanசூடான்: இங்கு இனவேற்றுமை வித்தியாசமானது. இது ஆப்பிரிக்க தேசமாகையால் கருப்பர்களே பூர்வ குடிகள். 8ம் நூற்றாண்டிலிருந்து அரேபியாவின் இஸ்லாமியமார்க்கத்தினால் சூடானும் இஸ்லாமியமயமானது. அரேபியாவிலிருந்து இஸ்லாத்தை பரப்புவதற்கு வந்தவர்கள் கருப்பர்கள் அல்லர். நடுவான நிறமுடையவர்கள். இன்றுள்ள நிலையில் சூடானுக்கு வந்து குடியேறியவர்களே அதிகாரத்தில் உள்ளனர். ஆப்பிரிக்காவின் மற்ற தேசங்களைப்போலவே இங்கும் கருப்பர்கள் கிறிஸ்தவர்களாகவோ முஸ்லிம்களாகவோ தங்களை முன்னிருத்திக்கொண்டாலும் பழங்குடி கலாசாரத்தை இவர்கள் இன்னும் விட வில்லை. நிறத்தாலும் கலாச்சாரத்தாலும் வேறுபட்ட இவர்களை அதிகாரத்திலுள்ள நடுநிறத்தை சேர்ந்தவர்கள் சுரண்டுகிறார்கள். கருப்பு முஸ்லீம்களுடன் கருப்பு கிறிஸ்தவர்களும் அதிகாரத்திற்காக போராடுகிறார்கள். கடந்த 10 வருடங்களில் மட்டும் 5 லட்சம் மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். 15 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கும் பெயரளவிற்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் குரல் கொடுத்தாலும் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் இன்னொரு விஷயம் அடங்கியிருக்கிறது. சீனா தன் வர்த்தக நலனுக்காக ஸூடானை (மியன்மார், வட கொரியா போன்றவற்றையும்தான்) காப்பாற்றுகிறது. அமெரிக்காவும் இது போன்ற வன்முறையைத் தூண்டும் நாடுகளை பல நேரங்களில் காப்பாற்றுகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, உலகில் எந்த நாடும் உத்தம நாடு இல்லை.

மேற்கூறிய உதாரணங்கள் பெரிய அளவில் நடந்த இன வன்முறைகள். ஈராக்கை அமெரிக்க இராணுவம் கைப்பற்றிய பிறகு இந்த 4 வருடங்களில் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்களால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டுள்ளனர். 4 லட்சம் இருந்த கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை இன்று 30,000 மாகக் குறைந்துள்ளது. இஸ்ரேலில் பெத்தெலெகம் நகரிலும் இதே நிலைமை. சில ஆயிரம் கிறிஸ்தவர்களே எஞ்சியுள்ளனர்.மற்றவர்கள் பாலஸ்தீனிய முஸ்லீம்களால் விரட்டப்பட்டுள்ளனர்.

இவற்றைப் போன்ற உதாரணங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளதால் இவற்றை விட்டுவிட்டு அடுத்த பகுதிக்குச் செல்வோம்.

(தொடரும்…)

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2

2 Replies to “இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1”

  1. காஷ்மீரப் படுகொலைகளும், காஷ்மீரப் பண்டிட்களின் நிலைமையும், ஈழத் தமிழரின் நிலையும் சேர்த்திருந்தால் கட்டுரை மேன்மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

    அடுத்த பாகத்தில் வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *