பெங்களூரிலும் அகமதாபாத்திலும் குண்டுவெடிப்புகளில் இறந்த உயிர்களுக்கு தமிழ்இந்து.காம் தனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. மனிதம் மிக
உன்னதமானது. உலகமெங்கும் வாழும் மனிதர்களை குலம், இனம், மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இந்து வேதங்கள் ‘அழிவின்மையின்
மைந்தர்களே’ என அழைக்கின்றன.
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என நம் சமயக்குரவர்கள் நம்மை ஆனந்த வாழ்க்கை வாழவே அழைக்கின்றனர்.
நரக அச்சத்தையோ வேற்றுமத நம்பிக்கையாளர்களை அழிப்பதையோ தெய்வீகக் கடமையாக நம் தேசத்தின் பாரம்பரியம் ஒருபோதும் கூறுவதில்லை. ஏன்…செந்தமிழால் வைதாரையும் இங்கு வாழவைப்பவனாக அல்லவா செந்தமிழ் கடவுள் முருகன் நமக்குக் காட்டப்படுகிறான்! துரதிர்ஷ்டவசமாக இந்த தேசத்தில் அடிப்படைவாதம் ஒரு நோயாகப் பரவி அரசியல் காரணங்களால் முற்றி இன்று பயங்கரவாதமாக நம் சகோதர சகோதரிகளின் உடல்களை வீதிகளில் சிதற வைத்துக்கொண்டிருக்கிறது.
தமிழ்இந்து.காம் இந்த நிகழ்வுகளை மிகுந்த வேதனையுடன் நோக்குகிறது. இறப்பின் சோகத்தில் மதங்கள் இல்லை மானுடம் மட்டுமே உள்ளது. ஆனால் இந்தத் தீவினையைச் செய்யும் இதயங்களில் மதவெறி மானுடத்தை மிஞ்சி நிற்கின்றது. தான் வணங்கும் கடவுள் மட்டுமே உண்மை, தன் திருமறை மட்டுமே உண்மை, தாம் தேவதூதராக நம்புபவர் மட்டுமே உண்மை என்னும் மனநிலையே இந்த மதவெறியின் தொடக்கம்.
இந்த மதவெறியின் உச்சகட்டமே மானுடமிழந்த பயங்கரவாதம். மத்திய மாநில அரசுகள் உளவுத்துறையாலும் காவல்துறையாலும் சட்டங்களாலும் இந்த
பயங்கரவாதத்தை ஒடுக்கட்டும். அதனுடன் இந்த மதவெறி மனநிலையை எதிர்த்து மனமாற்றங்களை ஏற்படுத்தும் அறப்போரில் — நம்பிக்கைகளுக்கு அப்பால் சத்தியத்தினாலும் தர்மத்தினாலும் மனங்களை இணைக்கும் பாலங்கள் அமைக்கும் பணியில் — தமிழ்இந்து.காம் ஈடுபடும். இதுவே இறந்த நம் பாரத சகோதர
சகோதரிகளின் உயிர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி. நம் வருங்கால சந்ததியினருக்கும் உலகுக்கும் நாம் செய்யவேண்டிய கடமையும் கூட.
தீவிரவாதத்தை வேறோடு ஒழிப்போம்! இதை ஒவ்வொரு இந்தியனும் சபதமாகக் கொள்ளவேண்டும்.
இந்த கொடிய மிருகங்கள் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து தங்கள் மதவெறியை வளர்த்துக்கொள்கிறார்கள்.
இந்த ஊழிக்கூத்தில் பலியாகும் அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம். இந்தியாவை பலமிழக்கச்செய்வதும், இந்தியர்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்குவதும், தங்கள் மதவெறி சாம்ராஜ்யத்தை நிறுவதும் இந்த தீவிரவாதிகளின் குறிக்கோள்கள்.
எல்லோரும் ஒற்றுமையாய் இருந்து இந்த ஈனர்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை பொய்யாக்குவோம்.
வந்தே மாதரம்!
நன்றி
ஜயராமன்
“தமிழ் இந்து” செலுத்தும் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். உயிர் இழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாகவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
புண்ணிய பூமியாகிய நமது தேசம் இன்று மகா பாவிகளின் கூடாரமாக ஆகிக்கொண்டிருப்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. அப்பாவி மக்களின் உயர்களைக் குடிக்கும் அரக்கர்களுக்கு இந்த தேசத்தில் இடம் கிடையாது. அவர்களை அரசாங்கம் கடுமையாக தண்டிக்கவேண்டும். அந்த அரக்கர் கும்பலையும் அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் வேரறுக்க வேண்டும்.
உயிர் கடவுள் கொடுத்தது. அதைப் பறிக்க கடவுளுக்கு மட்டுமே உரிமை உண்டு. மதத்தின் பெயரால் அப்பாவிகளை கொன்று குவிக்கும் அரக்கர்களை தண்டிக்க மனிதருக்கு உரிமை உண்டு. அரக்கர்களை தண்டித்து மதவெறி அழிப்போம். மனிதம் வளர்ப்போம்.
ப.இரா.ஹரன்.