நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்

ஆச்சரியங்கள் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. அவை பற்றி நமக்குத் தெரிவதில்லை. ஒன்று, நமக்கு அந்த ஆச்சரியங்களைப் பார்க்கத் தெரிவதில்லை; அல்லது, அந்த ஆச்சரியங்கள் நம்மிடமிருந்து மறைந்து கொள்கின்றன.

vallikkannan எண்பத்தைந்து வருடங்களோ என்னமோ நம்மிடையே வாழ்ந்து சமீபத்தில் மறைந்த வல்லிக்கண்ணன், யாரைப் பற்றியும், எந்த விஷயம் பற்றியும் குரல் உயர்த்தியோ கடுமையாகவோ பேசி நாம் அறிந்ததில்லை. இதற்கு அர்த்தம், அப்படிப் பேசும் சந்தர்ப்பங்களே அவரை அணுகியதில்லை என்பதல்ல. தமிழ் நாட்டில் இம்மாதிரியான சந்தர்ப்பங்களைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்று நமக்குத் தோன்றும். இருப்பினும், யாரிடமும் எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் சிரித்த முகத்துடனேயே வல்லிக்கண்ணன் காணப்பட்டார். தமிழ் நாட்டில் அவருக்கு கசப்பான, அதிருப்தி அளித்த விஷயம் எதுவுமே இல்லை போலத்தான்; சுற்றி உள்ளவை எல்லாவற்றறயும் அவரிடம் வந்தவை எல்லாவற்றையும் ‘ரசித்து மகிழ்ந்த’ மனிதராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். அவரிடம் எதை எடுத்துச் சென்றாலும், எதைப் பற்றிக் கேட்டாலும், அவர் கட்டாயம் ரசித்து மகிழ்வார்; எதிலும் இலக்கிய அழகும், கலை அழகும் காணும் புண்ய புருஷனாவே திகழ்ந்தார். திருநெல்வேலிக்காரர்கள் கிண்டலுக்கென்றே அவதாரம் எடுத்தவர்கள். ஒருவேளை அவர் கிண்டல் செய்தே தம் வாழ்க்கையைச் சிரித்த முகத்துடன் சமாளித்தாரோ என்று நினைக்கலாம். ஆனால் அவர் தன்னிடம் அண்டியதையெல்லாம் பாராட்டி, நீண்ட ஆயுளையும் நிறைந்த புகழையும் ஆசீர்வதிப்பதையே தன் அவதார லட்சியமாகக் கொண்டவர் என்ற நினைப்பையே நம்மில் ஆழ விதைத்தவர். இதை எல்லோரும் அறிந்திருந்த போதிலும் ஓரிருவரைத் தவிர (ஒன்று நான், இரண்டாமவர் பிரமீள் என்று பின்னர் அறியப்பட்ட, அந்நாளைய தருமு சிவராமு). வேறு யாரும் இதைப் பற்றிப் பேசியதில்லை. நாங்கள் இருவரும் இதைப் பற்றிப் பேசமட்டும் செய்திருந்தால், வல்லிக்கண்ணனின் சிரித்த முகம் மறைந்திராது. நான் செய்தது கண்டனமும் கேலியும். மற்றபடி அவரை அண்டி, பாராட்டும் ஆசீர்வாதமும் கேட்டவர்கள், தங்கள் எழுத்து எப்படி இருந்தாலும் கட்டாயம் புகழாரம் சூட்டப்படும் என்று எதிர்பார்த்தே செய்தார்கள். கிடைக்கவும் செய்தன. எட்டணா கொடுத்தால் ஒரு கார்டு கிடைக்குமென்றால், அதை வாங்குவதில் என்ன பெருமை! கொடுப்பதில் தான் என்ன மகிழ்ச்சி!. ஒரே கார்டு. ஒரே மாதிரி வாசகங்கள் கொண்ட கார்டு. அந்த ஒரே மாதிரியான வாசகங்களையும் பாவம் கஷ்டப்பட்டு கையால் அழகாக எழுதித் தான் தருவார். அச்சடித்து வைத்துக்கொள்ளலாமே சிரமம் குறையுமே என்று சிலருக்குத் தோன்றியிருக்கக் கூடும். ஃப்ரெஷாக அப்போதே எழுதப்பட்ட பாராட்டு, சூடான போண்டா மாதிரி, என்ற தோற்றம் தர, எழுதித்தான் ஆகவேண்டும்.

vallikkannans-table-by-annakannanஆனால் நாம் எல்லோரும் தவறு செய்திருக்கிறோம் என்று இப்போது தெரியவருகிறது. எல்லோரும் என்றால், நான், சிவராமு; பின் வ.க.விடம் ஆசி பெற்றவர்கள்; பின் வ.க.வும் தான். 40-45 வருடங்களுக்கு முன்னரேயே அவர் ஒரு சில விஷயங்கள் பற்றி மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார் தான். சுமார் ஒன்பது மாத காலம், சமரன் இதழ் 8.9.63 – லிருந்து 3.5.64 வரை எழுதியவை அதிகப் பேர் கண்ணில் படாமல் மறைந்தும் விட்டது. பிள்ளையார் என தனக்குத் தற்காலிகப் பெயர் சூட்டிக் கொண்ட வல்லிக்கண்ணன் சமரன் இதழ் 8.3.64-ல் எழுதுகிறார்:

“மகத்தான தன்னகங்காரத்தின் நடமாடும் வடிவங்கள் என்று யாரையாவது குறிப்பிட வேண்டுமென்றால், எழுத்தாளர், கவிஞர் என்று சொல்லிக்கொள்கிற ஒரு இனம் இருக்கிறதே அதைச் சேர்ந்த பிரகிருதிகளைத்தான் சுட்டவேண்டும். தமிழ் நாட்டின் தெற்கு மூலையைச் சேர்ந்த பிற்போக்கு ஜில்லா ஒன்றின் தூங்கு மூஞ்சிப் பட்டிக்காட்டைச் சேர்ந்த அப்பாவியான பிள்ளையார் – அகில உலக அதாரிட்டி மாதிரி அடித்துப் பேசும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பது உண்மையாகும். ஆனாலும் தமிழில் காணப்படுகிற எழுத்தாளர், கவிஞர்கள் வகையறா பற்றிய அனுபவ ஞானம் அவருக்கு நிறைய உண்டு.” (ப.100)

வேறு ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார்:

“ஏதோ, ‘ஒண்ணே முக்கால் கவிதை’ எழுதிவிட்டு, நாங்கள் மகத்தான காரியத்தைச் சாதித்து விட்டோம் என்று நடமாடித் திரிகிற விசித்திரப் பிராணிகள் தமிழ் நாட்டில் டஜன் கணக்கில்   காணப்படுகின்றன” (ப.106)

வல்லிக்கண்ணன் பாராட்டுரைகள் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து கடைசி நாள் வரை அவரிடம் பாராட்டும் புகழுரைகளும் பெற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள் எல்லோரும், ஏதோ போய் நின்று வணக்கம் சொன்னால் விபூதிப் பிரசாதம் கொடுக்கும் சாமியார் போலத்தான் வல்லிக்கண்ணனும் தன் பாராட்டுக்களையும் புகழுரைகளையும்  வந்தோர்க்கெல்லாம் விபூதிப் பிரசாதமாக வழங்கியுள்ளார் என்று தெரிந்து கொள்வது நல்லது. அவர் வெளிச் சொல்லாத அபிப்ராயங்களே வேறு என்பது தெரிகிறது.

பிள்ளையாராக அவர் சமரன் இதழில் மாத்திரம் தான் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளார் என்று தெரிகிறது. இதோ அவர் அன்றைய சினிமா உலகின் இருபெரும் தெய்வங்களைப் பற்றி எழுதியுள்ளது:

sivaji-ganesan“நடிகர் திலகம் என்று புகழப்படுகிற சிவாஜி கணேசன் எந்த வேடத்தில் தான் வரட்டுமே, கணேசன் முகம் அழகு குன்றாமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் ஆடம்பரத்தைக் காணமுடியும். பட்டிக்காட்டானாக வந்தாலும், ஜமீந்தாராக நடித்தாலும், கர்ணனாகவோ, மனோகரனாகவோ காட்சியளித்த போதிலும் கணேசனின் முகத்தில் ஒரே வித மேக்கப் பளிச்சிடுகிறது. வெறுமனே டிரஸ்ஸை மாத்திக்கொண்டால் போதும், கதாபாத்திரக் குணச் சித்திரம் அமைந்து விடும் என்று ‘நடிகர் திலகம்’ நம்புகிறார் என்றே தோன்றுகிறது.” (ப.112)

mgr2“நடிப்பில் சிறந்தவர் என்று போற்றப்படுகிறவரே இந்த லட்சணத்தில் இருந்தால், சும்மா ‘ஆள் காட்டி’ ஆட்டம் போட்டு சுலபப் புகழ் பெறும் நிலையில் இருக்கிற ‘மக்கள் திலகம்’ எப்படி இருப்பார் என்று விவரிக்கவும் வேண்டுமா? விசிலடிச்சான் தம்பிகளுக்கும் கை தட்டும் கும்பலுக்கும் மகிழ்வு அளிப்பதற்காக எம்.ஜி.ஆர். எல்லாப் படங்களிலும் எம்.ஜி.ஆராகத்தான் இருக்கிறார்.” (ப.112)

s_s_rajendar‘லட்சிய நடிகர்’ என்று ஒருவருக்கு விளம்பரப் புகழ். இந்தப் பெயரைக் கேட்டதும் நடிப்புக் கலையின் லட்சிய உருவாகத் திகழலாம் என்று யாராவது எண்ணினால் அது பேதமையே யாகும். ராஜேந்திரனுக்கும் நடிப்புக்கும் ‘ஏணி வைத்தால் கூட எட்டாது’ என்பார்களே அந்த உறவு தான். தி.மு.க.வில் கலந்து அதன் லட்சியங்களை ஒலிபரப்பிக் கொண்டு திரிந்ததால், அண்ணாவின் தம்பிகளுக்கு அவர் ‘லட்சிய நடிகர்’ ஆகிவிட்டார்.” (ப.113)

இவையெல்லாம் வல்லிக்கண்ணனுக்கு மாத்திரமே உரிய, தனித்த, புரட்சிகரமான பார்வைகள் அல்ல. பெரும்பாலோருக்குத் தெரிந்தவை தான். ஆனால் யாருமே- கட்சி சாராதவர்கள் கூட- விஷயம் தெரிந்தவர்கள் என்று நாம் நினைக்கக் கூடியவர்கள் கூட- தம் அபிப்ராயங்களை மனம் திறந்து சொன்னதில்லை; பேசியதில்லை. தமிழ் சமூகத்தில் யாரும் பிரபலமாகி விட்டால்- மக்களிடையே செல்வாக்கு பெற்றவர்களாகி விட்டால்- அவர்கள் பற்றி யாரும் குறைவாகப் பேசுவதில்லை. ஆனால் வல்லிக்கண்ணன் பேசியிருக்கிறார்; சமரன் பத்திரிகையில் வாராவாரம் தொடர்ந்து. சுமார் ஆறு மாத காலத்துக்கு; ஒருவேளை சமரன் பத்திரிகை வாழ்ந்தவரை. ஆனால் அவருக்கும் பிள்ளையார் என்ற புனைபெயரில் தன்னை மறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

எதுவானாலும், அவர் பேசினார். ஒரு பெரிய சக்தியாக, அரசியலில், சமூகத்தில், பத்திரிகை உலகில், மேடைகளில், அதற்கும் அப்பால் சினிமாவில், நாடக மேடையில் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து வந்துகொண்டிருந்தது திமுக. அந்தக் கட்சி பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும், அது தன்னைப் பரப்பிக்கொண்டிருந்த எல்லா ஊடகங்களிலும் அதன் செயல்பாடுகள் பற்றியும் வெகு கறாரான தன் அபிப்ராயங்களை வல்லிக்கண்ணன் முன்வைத்துள்ளார். இதோ இன்னொரு இடத்தில், இன்னும் மேல் சென்று..

“‘காஞ்சித் தலைவன்’ என்ற பெயரே திமுக தம்பிமார்களை வசீகரிக்கும் விளம்பர நோக்கத்துடன் சூட்டப்பட்டது தான். எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்றாலே ‘விசிலடிச்சான் ரசிகர்களுக்கும்’ அப்ளாஸ் கொடுக்கும் அண்ணாவை நினைவுபடுத்தும். ‘காஞ்சித்தலைவன் என்ற பெயரை எழுத்தில் பார்க்கும்போதும், ஒலியாகச் செவி மடுக்கும்போதும் ‘ஒரு மொந்தைப் பழங்களை உள்ளே தள்ளியது போல் வெகு குஷியாக இராதா என்ன? அந்தக் கிறக்கத்தை அதிகப்படுத்தி, அவர்களிடமிருந்து சில்லறைகளைப் பிடுங்குவதற்கு வசதியாக கதை-வசனம் எழுதிய கருணாநிதி ‘பொடிவைத்து எழுதியிருக்கிறார்’ என்று பத்திரிகை ஒன்று மூலம் அறியமுடிந்தது.”

“அண்ணா சிறையில் அடைக்கப்பட்டதும் (ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்) “குற்றமறியாக் கொற்றவனுக்கா தண்டனை?” என்ற விதத்தில் (காஞ்சித் தலைவன் சினிமா விளம்பரம்) அலறியது.

இதெல்லாம் மக்களை மயக்கி, கும்பல் சேர்த்து பண்ண முயலுகிற ‘பிஸினஸ் டிரிக்” அல்லாமல் வேறு என்ன?

ஏதோ சில நாட்களில் எவர் எவரோ ஆன சிலர் சட்டம் எரிக்க முன்வருவார்கள் என்பது தானே திட்டம்? அதற்குப் போய் ‘அண்ணா ஆணையிட்டு விட்டார். படைகள் திரளட்டும்.   சங்கத் தமிழ் காக்க, சிங்கத் தமிழர்களே பொங்கி எழுங்கள்! என்ற விதத்தில் பல சொல் வீச்சுக்களை விட்டெறிவானேன்? இதுகூட ஏமாற்று வித்தைதான்.”

இவை எல்லாம் ‘ஏமாற்று வித்தை’ என்ற தலைப்பில் 1.12.1963 சமரன் இதழில் ‘பிள்ளையார்’ என்னும் வ.க. எழுதியவை.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது (இங்கு மாத்திரமல்ல, பொதுவாகவே), வல்லிக்கண்ணன், அவரது சமரன் கட்டுரைகளில் பேசிய விஷயங்களில் எல்லாவற்றிலுமே காணப்படும் ஒரு அடிநாதமான பார்வை, ஒரு கட்சி சார்ந்து இருப்பதன் காரணமாக, உள்ளீடற்ற, உண்மையற்ற விஷயங்களே, மனிதர்களே, வெற்று வார்த்தைக் குவியல்களால், வார்த்தை ஜாலங்களால், உரத்த குரலால், ஆள் பலத்தால், பெரிதாக்கப்படுவது, ஒரு இயக்கத்தின் குணமாகி, அதுவே தமிழ் சமூகம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதை, அதன் ஆரம்பத்திலேயே வல்லிக்கண்ணன் கூர்ந்து பார்த்திருக்கிறார். அதை அவர் தவிர வேறு யாரும் கவனித்திருப்பதாகத் தெரியவில்லை. எதிர்க் கட்சிகள் பேசுவது ஒரு பொருட்டே இல்லை. நடு நிலையானவர்களாகக் கருதப்படும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் இதை உரத்துப் பேசியிருக்கவேண்டும். பேசவில்லை. மாறாக,. அவர்கள் இந்தப் பிரசார ஆக்கிரமிப்பை ஆதரித்துப் பேசியிருக்கிறார்கள். கௌரவித்திருக்கிறார்கள். சட்டென எனக்கு நினைவுக்கு வருவது, கல்கி, தன் பத்திரிகையில், அண்ணாவின் ஒரு சினிமாப் படத்தின் வெற்றியைக் கண்டவுடன், அவரை ‘பெர்ணாட் ஷா என்று எழுதியது. வ.ரா,. ஈ.வே.ராவைப் புகழ்ந்து எழுதியது, இப்படிப் பல.

வல்லிக்கண்ணன் சமரன்-ல் பிள்ளையாராக அவதாரம் எடுத்து எழுதியது ஆறு மாத காலமே. சமரன் ஒரு பெரிய பத்திரிகையுமல்ல. ஆறு மாதத்திற்கு மேல அது தொடரவுமில்லை. அப்போதைய தேர்தலை முன்னிட்டு வெளிவந்த பத்திரிகை. அவ்வளவே.

சமரனில் பிள்ளையார் எழுதிய முதல் கட்டுரையே “ஆட்சிப் பொறுப்பில் எலிகள்!” (ப.7) என்று தான் தொடங்குகிறது. எலிகள் என்றது திமுக வை. 1963-ல் திமுக ஒரு பெரிய கட்சி தான். மூன்று வருடங்களில் தமிழக ஆட்சிப் பொறுப்பை இனி நிரந்தரமாக கைப்பற்றவிருக்கும் கட்சி. அண்ணாதுரை மிகச் சிறந்த பேச்சாளர். ஒரு பெரும் மக்கள் திரளையே தன் பேச்சில் மயங்கிக் கிறங்கவைக்கும் திறன் பெற்றவர். பிள்ளையார், “அண்ணாதுரை அறிஞர் அல்ல, அளப்பரே என்று நான் எத்தனையோ தடவை சொல்லியாச்சு,” என்று அலுத்துக்கொள்கிறார்.  “திமு கழகம் என்னும் புத்திசாலி எலி, திராவிட நாடு என்னும் கருவாட்டை எப்படியும் கவ்வி விடும்.அதைப் பிடிக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தடைச் சட்டம் என்ற பொறியைக் கண்டு அது பயப்படாது” என்று அண்ணாதுரை பேசப்போக, “அறிவுக்குக் கறுப்பு பூசிக்கொள்ளும் கழகத்தினர், தங்கள் லட்சியத்தையே மிக மட்டமான முறையில் வர்ணிக்கும் கட்சித் தலைவர் இந்த அருமையான நாட்டைத் தவிர வேறு எந்நாட்டிலும் இருக்க முடியாது. வெங்காயம், ஊசல் வடை, பக்கோடா என்று குறிப்பிடாமல் திராவிட நாடு ஒரு கருவாடு என்று தலைவர் அறிவித்திருப்பது அவரது சுவையைக் காட்டுகிறது. கட்சியின் லட்சியம் கருவாடு. அதை அடைய விரும்புவோர் திருடித் தின்னும் எலிகள். என்ன ஞானப் பிரகாசமான எண்ணங்கள்” (ப.8-9) என்று விளாசித் தள்ளியிருக்கிறார், பிள்ளையார் என்னும் வல்லிக்கண்ணன்.

இன்னொரு இடத்தில் எழுதுகிறார்:

“இப்போ அண்மையில் ‘தென்னகத் தலைவன்’ – காஞ்சிப் பெருமாள் – திமுக தலைவன் – அறிஞர் எனத் துதிக்கப்படும் அளப்பர் அண்ணாதுரை தன் மகன்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தார். அதில் அவருக்கு ஏகப்பட்ட லாபம் என்று தெரிகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாகவே ‘மொய்ப்பணம்’ குவிந்ததாம். தலைவர் பரிசுப் பணத்தைச் சேகரித்து கணக்கு வைக்க, ‘நிதி’யையோ ‘முத்து’வையோ நம்பவில்லை. தானே மணமக்கள் அருகில் நின்று வாங்கிப் பத்திரப் படுத்தினாராம். (ப.10-11) இது 1963ல் அண்ணா. அப்பொழுதே அவர் அன்றைய ‘நிதி’யையோ ‘முத்து’வையோ நம்பவில்லை. அண்ணா தன் தம்பிகளை நன்கறிந்தவர்தான் போலும்.

இது அண்ணா தன் தம்பிகளைப் பற்றிய விவகாரம். பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஈ.வே.ரா. தன் ஒரு காலத்திய தளபதி, அண்ணாவைப் பற்றி சொல்லி வந்தது என்ன என்பதைப் பற்றியும் எழுதுகிறார் வ.க.

பகுத்தறிவுப் பகலவன் சொல்கிறார்:

“என்னிடத்தில் முப்பத்தஞ்சு ரூபாய் சம்பளத்துக்கு இருந்தவர் அண்ணாதுரை. இன்று அவருக்கு கார் இருக்கிறது. பங்களா இருக்கிறது. இது எல்லாம் எப்படி எப்படி வந்தது?” (ப.13)

இதைத் தொடர்ந்து வ.க. எழுதுகிறார்:

“தமிழ் நாட்டின் அரசியல் தலைவர் ஈ.வே.ரா., பல குட்டித் தலைவர்கள் முளைப்பதற்கு ஆதி காரணர். அப்படித் தலையெடுத்த தம்பிரான்களுக்கு (நேரடியாகவோ, மறைமுகமாகவோ) குருவாக விளங்குகிறவர் அவர். அரசியலை பிசினஸ் ஆக்கி பணம் பண்ணுவதற்கு வழிகாட்டியவரே அவர் தான். அரசியல் தலைவர், சமூக சீர்திருத்த வாதி, கட்சித் தந்தை என்று வெறும் பெயர் பண்ணி வெறும் பேச்சுப் பேசி வாழ்ந்து வருவதன் மூலம், மக்களை மயக்கி வசீகரித்து பணம் பிடுங்க முடியும் என்பதை மிக வெற்றிகரமாக நிரூபித்து வந்திருக்கிற –  வருகிற – பெருமை பெரியார் ராமசாமிக்கு உண்டு……

“இத்தகைய சிறப்புடைய மூலவர் குற்றம் சாட்டுகிறார். அண்ணாதுரை அரசியல் மூலம் பணநாயகனாகவும், பங்களா வாசியாகவும் ஆகிவிட்டாரே என்று. அவரே குறை கூறுகிறார், ‘சென்னை நகர சபை திமுக மெம்பர்கள் பதவி ஏற்பதற்கு முன்பு ஏழைகளாக இருந்தனர். இப்போது லட்சாதிபதி ஆகிவிட்டார்கள், யார் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பார்க்கவேண்டும்” (ப.14.15) என்று.

அண்ணாதுரை  இதற்கு என்ன பதில் சொல்கிறார்? “எனது ‘தம்பி’கள் லட்சாதிபதிகள் ஆகிவிடவில்லை. ஆடம்பரப் பிரியர்களாகவும் சுகவாசிகளாகவும் சிலர் மாறியிருப்பது உண்மைதான்.”

இன்னொரு இடத்தில் வ.க., பெரியார் பேசியதை எடுத்து எழுதுகிறார்: “அவனவன் பணம் சம்பாத்தியம் பண்ணுகிறதற்காக தனித்தனியே கழகம் என்றும் கட்சி என்றும் ஆரம்பித்து விடுகிறான். கழகம் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிற எல்லாமே பணம் சம்பாதிக்கிறதுக்காக ஏற்பட்டவை தான். ஒரு கழகம் கூட யோக்கியமானது இல்லை. அரசியல் பேசுகிறவங்க பதவியைப் பிடிப்பதிலேயே கருத்தாக இருக்கறாங்க. ஆளுக்கொரு பதவியைப் பிடித்துக்கொள்வது, பணம் பண்ணுவது, இது தான் தொழிலாகிவிட்டது. ஒழுக்கம், நாணயம் தர்மம், நேர்மை இதெல்லாம் இல்லாமலேயே போய்விட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மக்கள் மடையர்களாக இருப்பது தான்.” (ப. 17-18)

இதைத் தொடர்ந்து பிள்ளையார் என்னும் வ.க. கேட்கிறார்: “அப்படியானால் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கிற பெரியார் கட்சியும்  அதே மாதிரியானது தானே? அரசியல் பேசுகிறவர்கள் பணம் சம்பாதிக்கிறவர்கள் என்றால், பெரியார் செய்து வந்திருப்பது?

இது எல்லாம் திமுக சென்னை நகர சபை ஆதிக்கம் செய்யத் தொடங்கியதிலிருந்து. ‘பதவியைப் பிடிக்க அரசியல், பணம் பண்ண அரசியல், என்ற குற்றச் சாட்டுக்கள் பெரியாரிடமிருந்து வருகின்றன. அண்ணாதுரையும் தன் தம்பிகள் சுகவாசிகளாக, ஆடம்பரப் பிரியர்களாக இருப்பது உண்மை,” (ப.14) என்று ஒப்புக்கொள்கிறார்.

அந்தப் புகழ் பெற்ற சம்பவங்கள் தெரியும் தானே. ‘சென்னை நகர சபையைப் பிடிக்க, “கொடுப்பதைக் கொடுத்து, பெறுவதைப் பெறுவோம்” என்ற போர் தந்திரப் பிரகடனம், பின் அன்ணா மனம் மகிழ்ந்து, வெற்றிக்கு வழி கோலிய கருணாநிதிக்கு மோதிரம் பரிசளித்தது எல்லாம்.

20.10.63 கட்டுரையில் பிள்ளையார் சென்னை நகரம் திமுகவின் ஆதிக்கத்தில் வந்ததிலிருந்து நகரமே சாக்கடையும், குப்பைக் கூளமுமாக மாறியதைப் பற்றி முழுக்கட்டுரையே எழுதுகிறார். அந்த திமுக மரபு 1963-ல் தொடங்கியது 2010-லும் தொடர்கிறது. மரபு வழுவாத கட்சி தான். ஆனால் இந்த 40-45 வருட குப்பைக் கூளம், சாக்கடைப் பெருக்கம் பற்றி வ.க. பேசவில்லை. மௌனமாகிவிட்டார். அவரை மட்டும் குற்றம் சொல்வானேன்? இங்கு தமிழ் நாட்டில் எல்லோருமே மௌன சாமிகள் தான். அவரவர்க்கு கலைமாமணி விருதுகள், பதவிகள், தொந்திரவு இல்லாத வாழ்க்கை தேவையாகி விட்டது. இது தான் தமிழ் நாட்டின் பொற்காலம் என்று விளம்பரமும் பிரசாரமும்  செய்துவிட்டால் ஆச்சு. பிரச்சினை தீர்ந்தது.

“கலைஞர் கருணாநிதிக்கு ஓர் ஊரில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது. வெள்ளியால் செய்யப்பட்ட வாள் அது….. அறிஞர் அண்ணாதுரைக்கு வெள்ளியில் செய்த கேடயம் பரிசு…. தமிழ் நாடு அமைக்கப் பட்ட பதினான்கு காரட் தங்கத்தாலான கேடயம் தரப்பட்டது…….

இது ரகமான செய்திகள் அனேகமாக ஒவ்வொரு நாளும் தலைகாட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய கேலிக்கூத்துக்களுக்கும். அபத்தங்களுக்கும், வீர வாள், வீரக் கேடயம் என்ற பெயரை இணைப்பது வீரம் என்ற பண்பையே அவமதிப்பதாகும்.

இந்த வீர வாள் நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. நடத்தப்படாத போராட்டத்தில், கலந்து கொள்ளாத தலைவருக்கு, முன்னதாகவே “வீர வாள்” பரிசு. அதற்கு ஒரு விழா…. அதில் கருணாநிதி என்ன வெட்டி முறித்தார்? அவருக்கு ‘வீர வாள்” என்ற பெயரிலே பரிசு என்ன வேண்டிக்கிடக்கிறது?” (ப. 30-32)

“அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு அரிவாள்”… “செயல் திறமோ, உருப்படியான நல்ல காரியங்களைச் செய்யும் எண்ணமோ, ஆசையோ, ஊக்கமோ எதுவுமே இல்லாத தலைவர்கள் ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்துவிட்டார்கள்.” என்ற மிகக் கடுமையான விமர்சனத்தை வைக்கிறார் வ.க. (ப. 33).

இது நாம் அறிந்த வ.க. இல்லை. ஏதோ கொஞ்ச காலத்துக்கு அவதாரம் எடுத்து வந்தது போல், சில மாத காலம் தன் மனமும் புத்தியும் சொன்னபடி வாழ்ந்து எழுதி, பின் தமிழ் சமூகத்தின் நிர்ப்பந்ததில் ஐக்கியமாகி, விபூதிப் பிரசாதம் கொடுத்து ஆசீர்வதிக்க ஆரம்பித்து விட்டார்.

இது தான் நம் தமிழ் நாட்டின் சரித்திரத்தின் பரிதாபம். அப்படித்தானா? அதுவும் தெரியவில்லை. இன்னும் வெளித்தெரியாத வ.க. வும் உள்ளார். இந்த சமரன் அவதாரத்திற்கெல்லாம் முன்னதாக, அவர் ‘கோர நாதன்’ என்ற பெயரில் ‘கோவில்களை மூடுங்கள்” என்றும், மிவாஸ்கி என்ற பெயரில் ‘அடியுங்கள் சாவு மணி” என்றும் “ஈட்டி முனை”, “கொடுங்கள் கல்தா” என்றெல்லாம் எழுதிய அனல் பறக்கும்  சிறு பிரசார நூல்கள் தமிழ் நாட்டையே கலக்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. ‘கோர நாதன்’ என்றெல்லாம் பெயர் புனைந்து மறைந்திருந்தாலும், அவை சேரும் இடம் சரியாகவே சேர்ந்துள்ளதாகத் தான் தோன்றுகிறது. பெரியார் ஈ.வே.ரா.வே, “வ.க.வினால், ‘கோயில்களை மூடுங்கள்’ என்ற இந்நூலின் நடை எடுத்துக் கொண்ட பொருளுக்கு உகந்த நடை. இந்நூலின் சொற்கள் வாணலியில் வறுத்து எடுத்தன போல் இருந்தன.” என்று பாராட்டியிருக்கிறார். ஈ.வே. ரா. , ‘கோரநாதன்’ என்ற புனை பெயரில் மறைந்திருந்தவரின் தமிழ் நூலைப் படித்து அது வ.க. என்று அறிந்து, பின் அதன் நடையையும் சொற்களையும் பாராட்டுகிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கும் பாக்கியமும் இல்லை. அது போல இன்னொரு ஆச்சரியமான பாராட்டும் வ.க. வுக்குக் கிடைத்துள்ளது. திக/திமுக கூடாரத்ததைச் சேர்ந்த சின்னக் குத்தூசி, “நான் சந்தித்த எழுத்தாளர்களிலேயே மிகவும் சுயமரியாதையுடைய எழுத்தாளர் வல்லிக்கண்ணன்,” என்று புகழ்ந்துள்ளார். சின்னக் குத்துசியிடமிருந்து சுயமரியாதை பற்றிப் பாராட்டு பெறுவதென்றால் அதை என்ன சொல்வது!

ஆனாலும், இன்னமும் வல்லிக்கண்ணனைப் புரிந்து கொண்டதாகச் சொல்லமுடியவில்லை. கோயில்களை மூடுங்கள் என்னும் பிரசார சிறுபிரசுரத்தில் காணும் வல்லிக்கண்ணனைத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலே ஈ.வே.ரா.விலிருந்து கருணாநிதி வரை அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களையும் 1963-லேயே கிண்டலும் கண்டனமுமாக, எங்கே இடம் கிடைக்கும், எழுதவேண்டுமே என்று எழுதிய வல்லிக்கண்ணன்தானா ஈ.வே.ரா, சின்னக்குத்தூசியிடம் பாராட்டு பெற்ற வல்லிக்கண்ணன் என்பதும் தெரியவில்லை. அந்த வல்லிக்கண்ணன், 40 வருட காலம் மௌனமாகிவிட்டார். அண்டி வந்த எல்லோருக்கும் விபூதி பிரசாதமும், ஆசிகளும் வழங்குபவராகிவிட்டார். அப்படித்தானா? அந்த வல்லிக்கண்ணன் தான் கடைசி நாள்களில், தன் மனதில் பட்டதையெல்லாம் மிகத் திறந்த மனத்துடன் எவ்வித தயக்கமுமில்லாமல், பதிவும் செய்துள்ளார். அந்த பதிவுகள் தன் மறைவுக்குப் பிறகே வெளியிடப்பட வேண்டும் என்றும் சொல்லியிருப்பதாக ஒரு செய்தி. ஆச்சரியங்களுக்கு முடிவில்லை.

atchi-poruppil-eligal_cover“ஆட்சிப் பொறுப்பில் எலிகள்”
(வல்லிக்கண்ணன் கட்டுரைகள்)
தியாக தீபங்கள் வெளியீடு,
63/S பார்க்துகார்,
இராமாபுரம்,
சென்னை- 89.

கைப்பேசி: 98840 28376

விலை ரூ. 45.

11 Replies to “நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்”

 1. அன்புள்ள வெ.சா, ஆமாம்.. ஆச்சரியங்களுக்கு அளவில்லை!

  தமிழகத்தின் கலை, கலாசார, சமூக சூழல் முற்றாக மலினப் பட்டுக் கிடக்க, அதில் மந்தைகள் திளைத்துக் கொண்டிருந்த காலகட்டத்திலும் அந்த அவலத்தை மீண்டும் மீண்டும் தார்மீக ஆவேசமும், சுயசிந்தனையும் கொண்டு பதிவு செய்த முக்கியமான தனிக்குரல்களில் ஒன்று தங்களுடையது.

  வல்லிக் கண்ணனும் consistent ஆக் இல்லாவிட்டாலும் ஒரு குறுகிய காலத்திற்காவது, புனைபெயரிலாவது அத்தகைய குரலாக ஒலித்திருக்கிறார் என்று அறிவது ஒருவித மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

  அந்த நையாண்டிகள், அங்கதங்கள் அனைத்துமே அபாரமாக இருக்கின்றன. மிக்க நன்றி

 2. வெசா, வல்லிக்கண்ணன் பற்றிய இக்கட்டுரை பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது. இப்புத்தகத்தைப் படிக்கும் எண்ணமும் அதிகரிக்கிறது. பதிப்பகத்தின் தொலைபேசி எண் இருந்தால் குறிப்பிடுங்கள்.

 3. “கொடுப்பதைக் கொடுத்து, பெறுவதைப் பெறுவோம்” என்ற போர் தந்திரப் பிரகடனம், பின் அன்ணா மனம் மகிழ்ந்து, வெற்றிக்கு வழி கோலிய கருணாநிதிக்கு மோதிரம் பரிசளித்தது எல்லாம்.”

  I read somewhere, an interesting thing about the above incident.

  kavignar kannadasan was an active member of ‘kazhagam’ and worked the most for the victory by collecting the maximum fund. But in the felicitation, anna gave gold ring to karunanidhi. After the meeting, kavignar asked anna, when I am the one who collected and contributed to the victory the most, why did you give the golden ring to karunanidhi and not me.

  For which Anna replied, if you had bought and gave a golden ring to be given to you on the stage, then I would have given a ring to you too….

  🙂

  Regards,
  Satish

 4. நான் இதுவரை அறிந்திராத கும்பிட்டவருக்கு விபூதிப் பிரசாதம் அளிக்கும் வல்லிக்கண்னனைத்தான் அறிந்திருந்தேன். மற்ரொரு வல்லிக்கண்ணனை அறிமுகப்படுத்திய வெசா அவர்களுக்கு நன்றி

 5. இந்தப் புத்தகத்தை சென்னையில் வெளியிடாமல் தடுத்தார்கள். பிறகு கோவையில் இது வெளியிடப்பட்டது என்ற தகவலை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  சுப்பு

 6. 1. ஹரன், தொலை பேசி எண், ஆசிரியர் குழுவாலேயே தேடி எடுத்துத் தரப்பட்டுள்ளது. இருப்பினும், திரும்ப, 98840 28376. உங்கள் ஆர்வம் எனக்கு சந்தோஷமளிக்கிறது.

  2. சதீஷ், இந்தக் கதை பரவலாக பெருமபாலோர் அறிந்த ஒன்று. ஆனால் யாரும் எழுதி பதிவாக்காத் ஒன்று. நெஞ்சுக்கு நீதி (அதன் ஆறோ ஏழோ பாகங்களிலும் நெஞ்சுக்கும் சரி நீதிக்கு சரி ஏதும் உறவில்லை) புத்தகம் ஒன்றாம் பாகத்தில் இந்த மோதிர சம்பவத்தை மிக் புளகாங்கிதத்தோடு கருணாநிதி எழுதியிருக்கிறார். இங்கு அண்ணாவைக் கேட்டது கண்ணதாசன என்று உங்களுக்குக் கிடைத்ததைச் சொல்லியிருக்கிறீர்கள். அது ஈ.வி.கே சம்பத் என்று எனக்குக் கிடைத்த தகவல். இபபடி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தகவல் பெயரளவில் மாறுபடுகிறது. யார் புகார் செய்தார்கள் என்ற தகவல் தான் மாறுகிறதே தவிர் கருணாநிதி தன் கைகாசு போட்டு (அவர் கைக்காசு போடு எதையும் வாங்குவது என்பது சரித்திர முக்கியத்வம் பெறும் சம்பவம்) மோதிரம் வாங்கி அண்ணாவிடம் கொடுத்து பெற்றுக்கொண்டார் மேடையில் எனபது மாறாத செய்தி. இந்த சம்பவம் நம் ஆஸ்திக சம்பிரதாயத்தைச் சேர்ந்த தர்மம். எதையும் நாம் மதிக்கும் பெரியவர்களிடம் கொடுத்து அவர் கையால் அவர்கள் ஆசீர்வாதத்துடன் பெற்றுக்கொள்வது. அண்ணா உயிரோடு இருந்த வரை அவர் அன்ணாவின் பரம பக்தர்.

  3. இன்னுமொரு கேள்வி வல்லிக்கண்ணன் எப்படி ஒரு சிறிய காலத்துக்கு மாத்திரம் தனக்கு உண்மையாக நடந்து கொண்டார், பின் எப்படி நாற்பது-ஐம்பது வருட காலம் ஆசிகள் வழங்கும் மௌன சாமியாரானார் என்பது நம்மால் தீர்க்க முடியாத புதிர். ஆனால் அவர் இறப்பதற்கு முன் தன் மனம் திறந்து பல விஷயங்களைப் பேசி அது பதிவாகியிருக்கிறது. என்றும் தான் உயிரொடு இருக்கும் வரை அது வெளியிடப்படக்கூடாது என்றும் உறுதி மொழி பெற்ற பிறகே அந்தப் பதிவுக்கு இணங்கினார் என்பதும் ஒரு தகவல். இதை எனக்குச் சொன்னவர் தான் பதிவு செய்தவரும் என அவர் எனக்குச் சொன்னார். அது யார் என்பதை அவர் சொல்லாமல் நான் சொல்ல்முடியாது. வல்லிக்கண்ணன் இறந்த பிறகும் அந்தப் பதிவுகள் வெளியிடப் படாது இருப்பதும் எனக்கு ஒரு புதிர் தான். வெளியிடத் தயங்குகிறார்கள் என்றே தோன்றுகிறது. இப்போதைய அரசியல் சூழ்நிலை சரியில்லை. இனி பல தலைமுறைகளுக்கு அது சரியாகாது என்று தான் தொன்றுகிறது.

  வல்லிக்கண்ணன பதிவு வெளியாகாத்து பற்றிக்கவலை வேண்டாம். ஆனால் எல்லோரும் இன்றைய அரசுக்கு டவாலி அணியாத டவாலி சேவகர்களாகியிருக்கிறார்களே, அதற்கு வருத்தப்படவேண்டும்.

  4. சுப்பு சொன்ன செய்தி எனக்கு புதிய செய்தி. அவர் ஆச்சரிய-ப் படத் தேவையே இல்லாது அவருக்கு எல்லா செய்திகளும் தெரிந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. யாராவது அவருக்கு தெரியவராத் செய்தி சொல்லி அவரை ஆச்சரியப்பட வைத்தால் அது ஒரு மாபெரும் நிகழ்வாக இருக்கும் என்று தோன்றுகிறது.

 7. இப்படி ஒரு புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தார் யார்? தியாக தீபங்கள் என்ற பெயரே சற்று வினோதமாக இருக்கிறது, இன்றைய அரசியல் சூழலில்.
  ஒரு புத்தகத்தைச் சென்னையில் வெளியிடாமல் தடுக்க எப்படி முடிந்தது? போலிஸ் உடன்பாடா அதற்கு, அல்லது சட்ட ரீதியாகத் தடுக்க முடிந்ததா? அல்லது வழக்கமான மிரட்டல் மூலமா?
  வ.க என்ன வகை அரசியலை ஆதரித்தார் என்று திரு.வெ.சா சொல்லவில்லை என்றால் பரவாயில்லை, புத்தகத்தில் இருக்கிறதா? அதைச் சாக்காகக் கொண்டு அப்புத்தகத்துக் கருத்துகளை நம் திரள் சமூகம் ஒதுக்குமா?
  பொதுவாக இப்புத்தகத்துக்குத் தமிழ் எழுத்தாளர்கள் நடுவே என்ன எதிர்வினை இருந்தது, இருக்கிறது?
  மைத்ரேயன்

 8. அந்த மோதிர விஷயம் திரு. சம்பத் மேடையில் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். இது தி.மு.க. முதன் முறையாக சென்னை மாநகராட்சியைப் பிடித்தபோது நடந்தது. ஆனால் திரு. சம்பத் கழகத்தை விட்ட பிறகுதான் பேசினார்.

 9. EVR used to collect Re.1 for his autograph.

  For presiding over “self respect” marraiges, he collected money. If the marraige was conducted in “rahukalam”, he used to charge twice the rate.

  When shawls were presented to him, he removed the “jarigai”, sold it & made money.

  Once after finishing a public meeting, some DK members travelled along with him in his van to their destinations. EVR casually enquired the bus fare from them & collected money from them for offering them a “lift”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *