இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1

(தங்கமும், வைரமும் அனைவருக்கும் நன்கு அறிமுகமானதுதான். இருந்தும் ஒன்றை உருக்கி வெவ்வேறு வடிவத்திலும், அளவிலும் நகைகளாகவும், மற்றதை வெவ்வேறு கோணங்களில் பட்டை தீட்டியும், வெவ்வேறு இடங்களில் பொருத்தியும் அழகு பார்க்கிறோம். அதுபோல நம் அனைவருக்குமே நன்கு அறிமுகமான இராமாயண காவியத்தை, வால்மீகி முனிவரின் மூலச் செய்யுட்களில் சிலவற்றை எடுத்தாட்கொண்டு, வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கம் இத்தொடர். ராம ராஜ்ஜியம் நமக்கு வேண்டும் என விரும்புவோர் அனைவருமே, முதலில் காவியத் தலைவன் இராமனைப் போலத் தனது வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மிகையாகாது.)

முன்னுரை:

இந்திய விமானப் படையின் வானிலைப் பிரிவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றியபின் 1989-ம் வருடம் ஒய்வு பெறும்போது, மூல ஆசிரியர் திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்களுக்கு, அவரது விருப்பங்களை நன்கு புரிந்து கொண்ட சக ஊழியர்கள், ஒரு வால்மீகி ராமாயணம் புத்தகம் ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தனர். அந்த நூலை வான்மீகி முனிவர் 24,000 செய்யுட்கள் வடிவில் 500 அத்தியாயங்களில் இயற்றியுள்ளார். அதை ஆசிரியரும் நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயமாக படித்து, தனது குறிப்புகளையும் எழுதி வந்தார். அப்படி அவர் அந்த நூலை மூன்றாம் முறையாகப் படித்து வரும் போது, வால்மீகி முனிவர் எந்தக் காரணத்தை முன்னிட்டு ராமாயணத்தை எழுதியிருக்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியதை “Rama: a Model for Mankind” என்ற தலைப்பில் தனது ஆங்கில நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்குப் பொருத்தம் என்று தோன்றிய மூல சம்ஸ்க்ருத சுலோகங்களை தேர்ந்தெடுத்து, அதை ஆங்கிலத்தில் விளக்கி அதன் தொடர்பான இராமாயண நிகழ்ச்சிகளையும் விவரித்துள்ளார். அந்த மூல நூலை நான் படிக்க நேர்ந்தபோது, நான் பெற்ற இன்பத்தை தமிழ்ஹிந்து வாசகர்களுக்கும் மொழியாக்கம் செய்து அளிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.

உடனே ஆசிரியரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு அதற்கு அவர் அனுமதியைக் கேட்டேன். அவரோ, “பகீரதன் தனது முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வதற்கு என்று கங்கை நதியைக் கொண்டு வந்தான்; நாம் எவருடைய அனுமதியைப் பெற்று கங்கை நீரைப் பருகுகிறோம் என்று போஜ மகராஜா சம்பு ராமாயணத்தில் சொல்வதைச் சொல்லி, தாங்கள் மொழியாக்கம் செய்ய அனுமதி அளிப்பதற்கு நான் யார் ? ராமாயணம் மக்கள் அனைவரின் சொத்து. தங்கள் பணியைத் தாராளமாகச் செய்யுங்கள்” என்று மிக்க பெருந்தன்மையுடன் ஆசீர்வதித்தார். ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள மூலச் செய்யுட்களையும், சில சொற்களின் பொருளையும் நான் IIT Kanpur தொகுத்தளித்துள்ள வால்மீகி இராமாயண இணையதளத்திலிருந்து ( https://valmiki.iitk.ac.in/index.php?id=translation ) அப்படியே எடுத்து தொடர் கட்டுரையில் பொருத்தியுள்ளேன். நாரதர், வால்மீகி முதற்கொண்டு லக்ஷ்மிநாராயணன் உள்ளிட்ட நம்முடன் என்றும் வாழும் பாரதப் பெரியோர்களை மானசீகமாக வணங்கி, எனது பணியை வரும் ராம நவமி முதற்கொண்டு இத்தொடர் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருந்து எல்லாம் நல்லபடி நடந்தேற அருள் புரிவானாக.

1. கற்ற பின் நிற்க அதற்குத் தக
तपःस्वाध्यायनिरतं तपस्वी वाग्विदां वरम् ।
नारदं परिपप्रच्छ वाल्मीकिर्मुनिपुङ्गवम् ।। 1.1.1 ।।

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் | 
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

तपस्वी ascetic, वाल्मीकि: Valmiki, तप: स्वाध्यायनिरतम् highly delighted in the practice of religious austerities and study of vedas, वाग्विदां वरम् eloquent among the knowledgeable, मुनिपुङ्गवम् pre-eminent among sages, नारदम् Narada, परिपप्रच्छ enquired.

முனிவர்களுள் சிறந்தவரும், வேதம், யக்ஞம் மற்றும் பலவிதமான கலைகளைக் கற்று அவை சொல்வதற்கு ஏற்ப வாழ்பவருமான நாரத முனியை வால்மீகி முனிவர் கேட்கிறார் ( உலகில் வாழ்வாங்கு வாழ்பவனின் குணங்கள் எத்தகையது என்று).

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார். அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள். எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது. மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை. ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்குமுறையை வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம். சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும், தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது. அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது. தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார். ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி, நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது; அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார். இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன. அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும், மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும். அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும். மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும்போதுதான் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான். இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது. அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது. கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும். ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

வேதங்கள் “எது எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும்” என்று கூறுமே தவிர, அதன் காரணங்களை விவரமாகக் கூறி விளங்க வைக்காது. அதனாலேயே அவைகள் ஒருவன் இப்படி இருந்ததால் இப்படி ஆயிற்று என்று விவரங்கள் தராது. அதனாலேயே கலை மற்றும் கவி நயத்துடன் காவியங்கள் படைத்து வால்மீகி போன்றோர் உதாரண புருஷர்களையும் காட்டி புராணங்களைப் படைத்தனர். அவை மூலம் வேதங்கள் கூறும் நீதி, நேர்மை சார்ந்த நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வாழ்க்கை வாழும் வழியை கதாபாத்திரங்கள் மூலம் காட்டி நல்லுலகத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பினர். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் நம் காவிய நாயகனான இராமபிரான்.

அவரது குணாதிசயங்களைப் பற்றி படித்தோ, கேட்டோ அறிபவர்கள் அவரைப் போலவே நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்களா என்ற ஆதங்கமே வால்மீகி போன்றோரை காவியங்களைப் படைக்க வைத்தது. உபநிடத காலத்தில் வால்மீகி வாழ்ந்திருந்தார் என்றால், “ராமாயணம் படித்து ராமபிரானைப் போல அனைவரும் வாழ்ந்து நன்னெறிகளைப் பரப்ப வேண்டும்” என்று உபநிடத வாக்கியங்களே அமைந்திருக்கக் கூடும்! வேத ரிஷிகளைப் போல அல்லாது வால்மீகி வித்தியாசமாக இராமனை நன்கு விவரித்து அவர் போல வாழவேண்டும் என்று சொல்லாது சொல்கிறார். இராமாயணத்தைப் படித்தும், கேட்டும் நாம் அனைவரும் கற்க வேண்டியதைக் கற்று, அதன்படி வாழ்ந்து, அது சொல்லும் கருத்துக்களையும் பரப்புவோம் என்று வால்மீகி நம் மீது திடமாக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

2. பதினாறும் பெற்ற பெருவாழ்வு

को न्वस्मिन् साम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ।। 1.1.2 ।।

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் | 
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||

अस्मिन् लोके in this world, साम्प्रतम् now, गुणवान् endowed with excellent qualities, क: नु who indeed, वीर्यवांश्च with prowess, धर्मज्ञ: च knower of righteousness, कृतज्ञ: च grateful (who remembers even little help done by others), सत्यवाक्य: truthful in his statements, दृढव्रत: firm in his vows (till such time he achieves the results), क: who?

चारित्रेण च को युक्तः सर्वभूतेषु को हितः ।
विद्वान् कः कः समर्थश्च कश्चैकप्रियदर्शनः ।। 1.1.3 ।।

சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: | 
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: || 1.1.3 ||

क: who?, चारित्रेण with good conduct, युक्त: is endowed, क: who?, सर्वभूतेषु for all living beings, हित: benefactor, क: who?, विद्वान् learned man (knower of everything which is to be known), क: who?, समर्थ: च competent (capable of doing things which cannot be done by others), क: who? एकप्रियदर्शन: च solely delightful in appearance to everyone,

आत्मवान् को जितक्रोधो द्युतिमान् को ऽनसूयकः ।
कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे ।। 1.1.4 ।।

ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: | 
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

आत्मवान् self-restrained, क: who?, जितक्रोध: one who has conquered anger, द्युतिमान् one who is endowed with splendour, अनसूयक: one who is free from envy (envy – depicting one’s merits as weak points), क: who?, जातरोषस्य excited to wrath, कस्य to whom, संयुगे in the battle, देवा: च celestial beings, devatas, बिभ्यति are afraid of.

நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.

குணங்கள் என்று வந்துவிட்டாலே நல்லவை, கெட்டவை என்ற இருமை வந்துவிடும். இதில் ஒருவனுக்கு ஒரு சமயத்தில் எது மிகுந்து காணப்படுகிறதோ, அந்த சமயத்தில் அவனை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ குறிப்பிடுகிறோம். அதாவது ஒருவனுக்கு நல்லவனாகவோ, தீயவனாகவோ இருப்பதற்கு சரிசம வாய்ப்புகள் இருக்கின்றன. நீதி, உண்மை கலந்த தூய எண்ணங்களோடு வாழ்ந்து, அவை ஒட்டிய செயல்களைப் புரிய விரும்புவோன் நல்லவனாகவே வளர்வான், இருப்பான். அப்படி எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்? இதை எல்லாம் யோசித்த வால்மீகி முனிவர் மேற்கண்டவாறு பதினாறு நற்குணங்களைப் பட்டியலிட்டார்.

சாதாரண மக்களிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தால், இவ்வளவா என்று மலைத்துப் போய் இதெல்லாம் நமக்கு ஆவாது, நம்மால் முடியாது என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சி, இக்குணங்கள் அனைத்தையும் உள்ளடக்கி வாழும் ஒருவனைப் பற்றிச் சொன்னால் நன்மை பயக்குமே என்று எண்ணினார். அப்படியும் ஒருவன் இருக்கிறானா, அப்போது நம்மாலும் அப்படி வாழ இயலும் என்று தோன்றுவது மக்களின் சாதாரண இயல்புதானே? ஆதலால் நாரதரை அணுகி அவர் வினவும் போது, அவரும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருந்த இராமனின் வரலாற்றைப் பற்றிச் சொல்வதாக அமைந்துள்ளது இராமாயண காவியம். அதன் முதல் அத்தியாயத்திலேயே நூறு செய்யுட்களில் ராமனின் கதையாக இராமாயணக் காவியம் முழுவதும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் தொடக்கமே மேலே நாம் கண்ட அந்த பதினாறு குணங்களின் விரிவான பட்டியல்தான்.

இன்று வேண்டுமானால் இராமனை நாம் தெய்வமாகக் கொண்டாடலாம். ஆனால் வால்மீகியின் இராமாயணத்திலோ இராமன் ஒரு சாதாரண மனிதனைப் போல்தான் காட்சி அளிக்கிறார். அதில் அவர் எந்த விதமான அமானுஷ்ய அல்லது தெய்வீக குணாதிசயங்களைக் காட்டவில்லை. ஆக இராமன் மதித்து, நேசித்து, வாழ்ந்த நெறிமுறைகள் அனைத்துமே எந்த மனிதனாலும் எளிதாகக் கடைப்பிடிக்க முடியும். வால்மீகி முனிவர் தந்த இராமனை நாம் எவருமே நம் வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொள்ள முடியும்.

(தொடரும்)

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

 

8 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1”

 1. நன்றிகள் பல உரித்தாகுக.

  அற்புதமான தொடர். இராமபிரானின் பிறந்த நாளில் வெளியிட்டமைக்கு மேலும் நன்றிகள்.

  பிறன்மனை நோக்கா பெருந்தகையாளன்.

  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவன்.

  சார்வாக முனிவரின் வாதங்களின் அடிப்படையை தகர்த்தெறிந்து , அரச சிம்மாசனம் தன்னுடைய கால் தூசுக்கும் கீழானது என்று நிரூபித்தவன்.

  அவனடி போற்றுவோம், அல்லல்கள் களைவோம்.

 2. // வால்மீகியின் இராமாயணத்திலோ இராமன் ஒரு சாதாரண மனிதனைப் போல்தான் காட்சி அளிக்கிறார். //

  உண்மை. ‘ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்’ (என்னை தசரத குமாரனான மனிதன் என்றே கருதிக் கொள்கிறேன்) என்றே கூறிக் கொள்கிறான் வால்மீகியின் ராமன்.

  இனிமையும் எளிமையும் அழகும் பொருந்தியவை ஆதிகவியின் சுலோகங்கள். சம்ஸ்கிருதத்தில் எளிய பயிற்சி உடையவர்கள் கூட வால்மீகம் முழுதையும் படி்த்து விடமுடியும். இந்த நன்னாளில் நல்லதொரு தொடரைத் தொடங்கி உள்ளீர்கள் ராமன் அவர்களே. வாழ்த்துக்கள்.

  இந்த சுலோகங்கள் சில வருடங்கள் முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரையை நினைவுக்குக் கொண்டு வருகின்றன –

  நற்குணக் கடல்: ராம தரிசனம் – https://jataayu.blogspot.in/2007/03/blog-post_29.html

 3. //
  இனிமையும் எளிமையும் அழகும் பொருந்தியவை ஆதிகவியின் சுலோகங்கள். சம்ஸ்கிருதத்தில் எளிய பயிற்சி உடையவர்கள் கூட வால்மீகம் முழுதையும் படி்த்து விடமுடியும்//

  பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது தான். புராணங்களும் இடிஹாசங்களும் வேண்டும் என்றே தான் மிக எளிய சமஸ்க்ரிதத்தில் எழுதப்பட்டன. வேதத்தில் உச்சாரண சப்தங்களின் முக்கியத்துவம் உள்ளதால் கொஞ்சம் கரடு முரடாக பொலிவு பெறாத சமஸ்க்ரிதம் போல தோன்றும். இதை வைத்துக் கொண்டு பலர் கால நிர்ணயங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வருத்தத்திற்கு உரியது.

  புராணங்களை உபநிஷத் காலத்திற்கு பின் தள்ளி விடுகின்றனர். உபநிஷட்களிலேயே புராணங்களை படிக்க வேண்டும் என்று வருகிறது அதை யாரும் பாக்க மாட்டேன் என்கிறார்கள்.

 4. மிகச்சிறந்த இனிய தமிழ் விருந்தளித்த பேராசிரியர் ராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஒரு சிறிய சுட்டு மட்டும் கூற விழைகிறேன்: ஸ்வாத்யாயத்திற்கு திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்கள் அளித்த அர்த்தமும், அதை தொடர்ந்து அதற்கு ஒவ்வாத விளக்கம், பாரம்பர்ய பார்வையில் தவறானது.
  “ப்ரனவாதி பவித்ரானாம் ஜபோ மோக்ஷ சாஸ்த்ரான் படனம் வா” என்று யோகா சுற்றதிர்கான விசா பாஷ்யத்தில் ச்வாத்யாயம் பற்றிய விளக்கம் உள்ளது. அதனை மேலும் , “தத்தம் குல வேதத்தை அத்யயனம் செய்தல், பிரணவம்- சாவித்திரி முதலான பவித்ரமான மந்திரங்களை சபித்தல் , கீதை முதலான வீடுபேறு பற்றிய நூல்களை சரியான ஆசார்யனின் உதவியோடு படித்தல்” என்று பாரம்பர்ய விரிவுரையாளர்கள் விளக்குவர். மேலும் இதைப்பற்றி சாஸ்திர விற்பன்னர்களாய் உள்ள ஆசார்யார்களிடம் கேட்டுத் தெளிவுறலாம். ஓம்.

 5. எப்படி தங்கத்தையும் வைரத்தையும் வெவ்வேறு விதமாக பயன்படுத்தி சளைக்காமல் இருக்கிறதோ, அது போல ராமாயணம் சலிக்காது.

 6. இத்தொடரை வாழ்த்தி வரவேற்கிற அனைவர்க்கும் மிக்க நன்றி. திரு. யோகேஷ்வர் கார்த்திக் குறிப்பிட்டுள்ள “ஸ்வாத்யாய” என்ற வார்த்தை கையாண்டிருப்பது பற்றி மூல ஆசிரியர் சொல்கிறார்: “.. மொழியாக்கம் என்பது அகராதி கொடுக்கும் வார்த்தைகள் பற்றியது மட்டும் அல்ல. எதற்கும் ஒரே ஒரு பொருள்தான் இருக்கும் என்பதை நான் ஏற்கவில்லை… என் அளவில் என்ன எண்ணங்களைத் தோற்றுவித்ததோ அதை எழுதியிருக்கிறேன். தாங்களும் அப்படியே செய்யுங்கள்….” அவரது அஞ்சலில் ஒரு பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்:
  “There are many who may disagree with my translation of sansskrit. My defense is that words have meaning going beyond what one may see in dictionary It is sheer arrogance to claim that there is one and only 0ne meaning and other meannings are wrong and not permitted. In this connection I may cite the example of those who claim that there is one and only one God. I refer to such people Manickkavachagar’s emphatic assertion Ekan Anekan Iraivan Adi Velga One and at the same time many In short there are many permissble meanings. I stick to my limited understanding and do not like quoting others. Once again expressing my appreciation for your efforts and please interpret the way you like Rama is a multi dimensional personality He is delighted by other interpretations. This lengthy comment is in connection with Svadhyaya
  Yours sincerely
  Lakshminarayanan “

 7. தங்கத்தினும் வைரத்தினும் மேலோனான ஸ்ரீ ராமனைப் பற்றிய இந்தத் தொடரின் அறிமுக உவமையே (தங்கத்தையும் வைரத்தையும் வித விதமாகப் பயன்படுத்தி மகிழ்வது) மிகப் பொருத்தமுடையதும் அருமையானதுமாகும்.

  திருவாளர் லக்ஷ்மி நாராயணனும் கட்டுரையாளர் இராமனும் கூறும் வண்ணம் ‘ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டு’ என்பதை நானும் ஆதரிக்கிறேன். அதனை விளக்க மாணிக்க வாசகரின் ‘…ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க !…” என்னும் பொன் அடியை மேற்கோளாக்கியிருப்பது இன்னும் அற்புதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *