நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04

தொடர்ச்சி…

நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி

தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக்  கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்களாகும்.

சைவம், வைணவம், வேதாந்தமென்னும் சமயங்களையும் அப்பிராமணரென்போர்களே ஏற்படுத்தியுள்ளதால், அச்சமயங்களை, எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களேயாவர்.

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் தழுவிக் கொண்டே (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கிறன்றனரா? அன்றேல் சாதியாசாரங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கின்றனரா என்பது விளங்கவில்லை.

அங்கனம் சாதியாசாரங்களையும், சமயவாசாரங்களையும் ஒழித்துள்ளக் கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் பெயர் காத்திருக்கின்றார்கள். பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு (நான்-பிராமிண்ஸ்) எனக்கூறுவது வீணேயாகும்.

‘‘15-9-1909, தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்

தாழ்த்தப்பட்ட தலைவர்களில் சிலர் ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தனர். ஆனால், அதில் கலந்துவிடவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையிலேயே அந்தத் தொடர்பு இருந்தது. அப்போதும் கூட ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றை பல நேரங்களில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் விமர்சித்தே வந்திருக்கின்றனர்.

ஏனெனில், உயர்த்தப்பட்ட சாதியினரான நீதிக்கட்சியினர் தங்களது சொந்த சாதியினரின் உயர்வுக்காக மட்டுமே உழைத்தவர்கள். அவர்களுக்குத் தாழ்த்தப்பட்டோரைப் பற்றி எஞ்ஞான்றும் கவலை இருந்ததேயில்லை. இதை மறந்து விடக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தாழ்த்தப்பட்டோரே வாதாடினார்கள், போராடினார்கள், தியாகம் புரிந்தார்கள். அதனால் தாழ்த்தப்பட்டோர் பெற்ற உரிமைகள் ஏராளம்….ஏராளம். இதைத் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்நாட் குறிப்புகளைப் படிக்கும்போது நாம் உணர்ந்துகொள்ளலாம்.  இந்த குறிப்புகள் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய ‘மக்களுக்கு உழைத்த பெருமக்கள்’ என்ற நூலில் தெளிவாக உள்ளன.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தையும், உரிமையையும் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நீதிக்கட்சி தோன்றியது என திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன?

நீதிக்கட்சி ஆரம்பித்ததின் வரலாற்றுப் பின்னணியைப் பார்ப்போம்.

அரசாங்க உத்தியோகங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதனால் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு 1851ஆம் ஆண்டு முதலே கூற ஆரம்பித்தது.

அதன் பின்னர் உத்தியோகங்களைத் தங்களது உறவினர்களுக்கே பிராமணர்கள் வழங்குகிறார்கள் என்று கலெக்டர்களுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு அந்த ஆண்டு வருவாய்த்துறை வாரியம் ஒரு உத்தரவினை வெளியிட்டது.

கீழ்நிலை உத்தியோகங்களை ஒரு சில செல்வாக்குள்ள குடும்பங்கள் ஏகபோகமாக்கிக் கொள்ளக்கூடாது என்றும், அனைத்து உத்தியோகங்களையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாதியினருக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிக்க வேண்டுமென்றும், தாசில்தார் பதவிகளில் ஒரு விகிதாச்சாரம் பிராமணரல்லாத சாதியினருக்கு அளிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் ஹுசூர் சிரஸ்தேதார்,  இங்கிலீஷ் ஹெட்கிளார்க் என்ற இரு பிரதான வருவாய் அதிகாரிகள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாதென்றும் அந்த உத்தரவு கூறியது.

ஆனால், இந்த உத்தரவை அதைப் பிறப்பித்த அரசே பின்பற்றவில்லை. இது ஏன் என்பது ஆராயத் தக்கது.

ஆனால், 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டது.

‘அரசுப் பதவிகளில் அவர்களது (பிராமணர்களது) எண்ணிக்கையைக் குறைப்பதும், அதிக அளவு இந்து பிராமணரல்லாதாரையும், முஸ்லீம்களையும் அரசு உத்தியோகங்களில் ஊக்குவிப்பதும், அதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் மற்றவர்களைவிட அதிக முக்கியத்துவமோ அல்லது அதிக எண்ணிகைப் பலமோ பெற்றுவிட அனுமதிக்காமல் இருப்பதும்தான் அரசின் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும்’

நாட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட உத்தியோகங்களில் எந்த ஒரு சாதியும் ஏகபோகம் வகிப்பதைத் தவிர்ப்பதற்கு, அரசு தனிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று மக்கள் தொகைக் கணிப்புக் கண்காணிப்பாளர் கார்னிஷ் குறிப்பிட்டிருந்தார்.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து உதயமானது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்புத் தந்து அவர்களைக் கைதூக்கிவிடவேண்டும் என்ற ஆங்கிலேயரின் சமநோக்கு மட்டும் இதற்கு காரணம் இல்லை. ஒரு சாராரின் ஆதிக்கம் பெருகிவிட்டால் அது அன்னியர் ஆட்சிக்கு எதிரான சதிக்கு இடம் கொடுத்துவிடும் என்கிற அச்சமே அப்போது ஆங்கிலேயரிடம் மேலோங்கியிருந்தது. (திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)

பிராமணரல்லாதாரின் மனதில் ஆங்கிலேயர் போட்ட இந்த தூபம் தான் பின்னாளில் நீதிக்கட்சியாக உருவெடுத்தது.dravidian_1779

தாங்கள் பிராமணரல்லாதாராய் இருந்த ஒரே காரணத்தால், வேலையில் புறக்கணிக்கப்பட்டு, வேலை உயர்வு போன்ற நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை உணர்ந்து அரசு ஊழியர்கள் சிலர் மெட்ராஸ் யுனைடெட் லீக் என்னும் அமைப்பை 1912ஆம் ஆண்டில் உருவாக்கினர். இந்த அமைப்பிற்கு டாக்டர் சி. நடேசன் முதலியார் வழிகாட்டியாக விளங்கினார்.

இந்த இயக்கம் அமைவதற்குப் பாடுபட்டவர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள்:

சரவணபிள்ளை (பின்னால் தஞ்சையில் டெபுடி கலெக்டர் ஆனவர்)

ஜி. வீராசாமி நாயுடு

துரைசாமி முதலியார் (பொறியியல் துறையைச் சார்ந்தவர்)

எஸ்.நாராயணசாமி நாயுடு (வருவாய் வாரியத்தின் ஷெரீப்பாகப் பணியாற்றியவர்)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வாங்கித் தருவதற்காக இந்த அமைப்பை இவர்களில் யாருமே துவங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உத்தியோகத்துறையிலும் பதவி உயர்விலும் தாங்களும், தங்களுக்கு இணையான மற்ற உயர்த்தப்பட்ட சாதியாரும் புறக்கணிக்கப்படுவதை எதிர்க்கவே  இந்த அமைப்பை உருவாக்கினர்.

1913ஆம் ஆண்டு. டாக்டர் நடேச முதலியாரின் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் மெட்ராஸ் யுனைடெட் லீக்கின் முதலாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. அப்போது அதனுடைய பெயரைத் ‘திராவிடர் சங்கம்’ என்று மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெயர் மாற்றப்பட்ட திராவிடர் சங்கமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை எதுவும் செய்ததாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பில் 1915ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கடிதங்கள் ரெட்டி, நாயுடு, வேளாளர் ஆகியோருக்கான ஒருங்கிணைவை முதலில் குறிப்பிட்டது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும், கோ.கேசவன்)

1916ம் ஆண்டு டாக்டர் நடேச முதலியார் திராவிட சங்க விடுதி என்ற விடுதி ஒன்றைத் துவக்கினார். திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் பிராமணரல்லாத மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக அந்த விடுதி செயல்படத் துவங்கியது. இவ்விடுதியும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தைக் கருதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. பிராமணரல்லாத மற்ற உயர் சாதி மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் டி.எம்.நாயர் மற்றும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் ஆகியோர். நீதிக்கட்சியை இவர்கள் ஆரம்பித்த கதை ரசிக்கும்படியானது. முக்கியமானதும் கூட.

டி.எம்.நாயர் கட்சி ஆரம்பித்த கதை:

t_m_nairடி.எம்.நாயர் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு காங்கிரசில் இருந்தார். 1907ஆம் ஆண்டில் சித்தூர் நகரில் நடைபெற்ற வடஆற்காடு மாவட்ட காங்கிரஸ் மகாநாட்டில் தலைமை வகித்தார்.

1904ஆம் ஆண்டு பிராமணர்கள் அதிகம் வாழக் கூடிய திருவல்லிக்கேணித் தொகுதியிலிருந்து அவர் சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னரும் தொடர்ந்து மும்முறை அந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916ம் ஆண்டு அதே தொகுதியில் இந்திய சட்டசபைக்குப் போட்டியிட்ட பொழுது அவர் தோற்றார். தாம் தோற்றதற்கு அங்கு வாழும் பிராமணர்களே காரணம் என்ற புதுமையான (?) முடிவுக்கு அவர் வந்தார். இந்தத் தோல்வியானது அவரை பிராமணரல்லாத இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

சர்.பி.டி.தியாகராய செட்டியார் கட்சி ஆரம்பித்த கதை:

வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் நீதிக்கட்சியைத் தொடங்குவதற்கு முன் காங்கிரசிலேதான் இருந்தார்.

ஒருமுறை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும் விட அதிகத் தொகையாகிய ரூ.10,000 அளித்தார் தியாகராய செட்டியார். இருந்தும், விழாக் கூட்டத்திற்குச் சென்றபோது அவரை மேடையில் உட்கார வைக்காமல் கீழே உட்காரச் செய்தார்களாம். ஹைகோர்ட் ஜட்ஜ் முதல் அர்ச்சக, பரிச்சாரக, தரகர் – பார்ப்பனரெல்லாம் மேடையில் அமர்ந்திருந்தனராம். இவரிடம் இவருடைய அலுவலகத்தில் வேலைக்கு இருந்த சில பார்ப்பனச் சிப்பந்திகள் கூட மேடைமேல் வீற்றிருந்தனராம். ஆனால், இவரை மேடையில் வீற்றிருக்க யாரும் அழைக்கவில்லையாம்.

இந்தப் பார்ப்பன சாதித் திமிரை சகிக்க முடியாத சர்.பி.டி.தியாகராய செட்டியார், அந்த இடத்தை விட்டு விர்ரென்று எழுந்து காரிலேறி டாக்டர் நாயர் பங்களாவுக்குச் செல்லச் சொன்னாராம். இந்த நிகழ்ச்சிகள்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதாம்.

இதைப்பற்றி ‘டாக்டர் நாயர், தியாகராயர், நான்’ என்ற தலைப்பில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பின்வருமாறு எழுதுகிறார்:-

‘ …ஆரம்பகாலத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர் (நாயர்). நானும் ஆரம்பத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி.டி.தியாகராய செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதியாக இருந்தவர்தான். 1914ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே நாங்கள் எல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர்களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்காமல் இழிவு பற்றிய உணர்ச்சி பெற்று விழிப்படைந்தவர்கள்தாம் நாங்கள்.’1

(நீதிக்கட்சி 75வது ஆண்டு பவள விழா மலர் 1992)

ஈவேராவும் தனது சொந்தப் பிரச்சினைகளின் காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நீதிக்கட்சியை ஆதரித்தார். இது குறித்து “ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” என்ற எனது நூலில் விவரங்கள் உள்ளன.

ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நான் இப்படிச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.  டி. எம். நாயர் சென்னை மாநகராட்சிக்கு மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த மும்முறையும் அவர் தாழ்த்தப் பட்டவர்களைப் பற்றி எண்ணியதுண்டா? கவலைப்பட்டதுண்டா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா? சேரியிலே புழுக்களாக அகப்பட்டுக் கொண்டு தினமும் இன்னல்களை அனுபவித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி மாநகராட்சியில் பேசியதுண்டா?

இல்லை…இல்லை…இல்லை.

அதைப் போலவே தியாகராய செட்டியாரும் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? கெடுதிதான் செய்திருக்கிறார்.

1921ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பக்கிங்காம் கர்னாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட போராட்டம் சாதிக் கலவரமாக மாறியது. இதைக் காரணமாக வைத்து தியாகராயர் என்ன செய்தார் தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டோர்களை நகருக்கு வெளியே குடியமர்த்த வேண்டும்’ என்று அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

அன்றைய தொழிலாளர் தலைவரான எம்.சி.ராஜா இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நேர்மையற்ற செயல் ‘ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் நீதிக்கட்சியினர்’ என்று தலைவர் ஜெ.சிவசண்முகம் பிள்ளையை எழுத வைத்தது.

அதேபோல 1921-22ல் தியாகராய செட்டியார் தீண்டாமை ஒழிப்பைப் பற்றிய விவாதத்தில் ஆதரவான கருத்து ஏதும் கூறாமலே இருந்துவிட்டார்.

இப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யாத, அவர்களுக்கு எதிராக இருந்தவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சியை ஆரம்பித்தனர்?

கல்வியிலும் செல்வத்திலும் வளமாக இருந்த நாயருக்கும் தியாகராய செட்டியாருக்கும் ஒருவேளை கட்சியிலும் மேல் சாதியாரிடத்தும் மதிப்பும் வாய்ப்பும் கிடைத்து இருக்குமானால் இந்த ‘இன உணர்வு’ உண்டாகியிருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இவர்களுடைய சொந்த நலன்கள் பாதிக்கப்பட்டதாலேயே பிராமணரல்லாத கட்சியை ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.

1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் நீதிக்கட்சி உருவானது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் நாள் தியாகராயச் செட்டியார் ‘பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை’யை வெளியிட்டார். அந்த அறிக்கை, பிராமணரல்லாத உயர்சாதி மக்களுக்கான – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அறிக்கையாகத்தான் வெளிவந்தது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதியிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.

‘‘…..(கல்வித்துறையில்) தாமதமாக நுழைந்திருந்தாலும் பிராமணரல்லாத சமுதாயங்கள் முன்னேறத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள். செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர்கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

பிராமணர்களில் காணப்படுவதைவிட சில பிராமணரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (ஆண்-பெண் இருபாலரும் கல்வி கற்கும் சூழ்நிலையிலும்) இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க சூழ்நிலையாகும். எது காரணம் பற்றியோ கல்வி இலாக்காவினர் பிராமணப் பெண்களுக்கும், குறிப்பாக பிராமண விதவைகளுக்கும் ஏதோ அவர்கள் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக்கொண்டு கல்விச் சலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் பிராமணரல்லாதாரைச் சேர்ந்த நாயர் பெண்களின் அளவுக்குப் பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் பிராமணரல்லாதார் அடக்கமாக அதேநேரம் பயனுள்ள வகையில் இந்த மாகாணத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களும் அவர்களுடைய சகோதரர்களும் இதுவரையில் வேறுவழியின்றி பின்னால் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். பிராமண ஜாதியினர் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்யோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் அறிவுத்துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் பரீட்சைகளில் வெற்றி பெறும் திறமை ஒரு தனித்திறமை என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், மற்றவர்களைவிட ஆங்கிலம் கற்ற ஆடவர் தொகை அதிகம் கொண்டிருக்கிற ஒரு சிறு வகுப்பு, இதர வகுப்புகளில் ஏதோ குறைந்த அளவாவது திறமை, ஞானம், பண்பாடு கொடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அரசாங்க உத்தியோகங்களில் பெரிதும், சிறியதும், உயர்ந்ததும், தாழ்ந்ததுமான அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்கப்படுவதுதான்!” ….

(திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)

செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற தங்கள் சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனரே – நாயர் பெண்கள் முன்னேறி வருகின்றனரே, அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிடுகின்றனரே இந்த பிராமணர்கள்! என்ற ஆதங்கம்தான் இதில் தொனிக்கிறது என்பதைக் கூர்ந்து படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றிய கவலை இதில் இல்லை. ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள்தானே!

ஆனால், என்ன செய்தால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து, ஆக்கபூர்வமாகச் செயல்படுத்திய பெரியோர் பலர் உண்டு. உதாரணமாக,

ராவ் சாகேப் எல்.சி. குருசாமி (1885- 1966)

1920 முதல் பத்து வருடங்களுக்கு அவர் சென்னைச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றிருந்தார். இருபத்திரண்டு வருட காலம் அவர் கௌரவ நீதிபதியாகப் பதவியை அலங்கரித்தார்.

நாகரிகமான, பண்பாடு நிறைந்த வாழ்க்கையின் முதல்படியானது கல்விதான் என்னும் கோட்பாட்டை அவர் கொண்டிருந்தார். அதனால் 1921ல் இரண்டு இரவுப்பள்ளிகளை நிறுவினார். அதற்காக அவர் இரண்டாயிரம் ரூபாய் உதவிப்பணமும் அக்கால அரசாங்கத்திடமிருந்து பெற்றார். புதுப்பேட்டை, கொய்யாத்தோப்பு, ராயபுரம், மைலாப்பூர், பெரியமேடு ஆகிய பகுதிகளிலும் அவர் பள்ளிகளை நிறுவினார். செங்கல்பட்டு, பொன்னேரி முதலிய முக்கியப் பகுதிகளில் பகல் நேரப் பள்ளிகளையும் ஆரம்பித்தார். கல்வி பயில மக்கள் தவறுவார்களானால் அது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்திருக்கின்றார்.

1921ல் பல நூறு குடும்பங்கள் தாங்கள் வாழும் நிலத்தை உரிமையாகப் பெற அவர் வழி கண்டார். புளியந்தோப்பு, வேப்பேரி, மைலாப்பூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மக்களைக் குடியேற்ற அவர் நிலங்களைப் பெற்றார். ஆதிக்குடி மக்கள் கல்வி, பொருளாதார வகை முதலியவற்றில் வலிமை பெற்றால், பிறகு தீண்டாமையும் சாதி வேற்றுமையும் தாமாகவே ஒழிந்துவிடும் என்ற கருத்தையே அவர் மேற்கொண்டிருந்தார்.

1926ல் கோடம்பாக்கம் கைத்தொழில் பள்ளி நலச் சங்கத்தில் இணைந்திருந்தார். நகரக் கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும், சென்னை நகரசபைக் கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1927ல் அவர் ‘ராவ் சாகேப்’ என்ற பட்டம் பெற்றார். செங்கல்பட்டு, திருவள்ளூர் முதலிய பகுதிகளில் அவர் கல்வி நிறுவனங்களில் தொண்டாற்றினார்.

1929ல் அவர்  பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தார்.

1932ல் டில்லியில் நிகழ்ந்த வாக்காளர்கள் கூட்டத்தில் அவர் தமது மதிப்பு வாய்ந்த யோசனைகளை வழங்கினார்.

1937ல் நிகழ்ந்த ஆலயங்களில் துணிந்து பிரவேசித்தல் என்ற போராட்டத்துக்காக அவர் பலரைத் திருவாங்கூருக்கு அழைத்துச் சென்றார். பல மாணவர் விடுதிகளை நிறுவினார்.

தளபதி எம். கிருஷ்ணசாமி, (1917 – 1973)

வறுமையின் பிடியிலே சிக்கினாலும் இலட்சியத்தின் மதிப்பினை குறைத்துவிடாமல் வாழ்ந்தவர்களிலே தலைவர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் சிறப்பானவராவார். ஆசிரியராகவும் பின்னாளில் வணிகத்திலும் தம் வாழ்வை துவக்கினார்.

தமிழ்ப் பழங்குடி மக்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்த அவர்  ஏற்கனவே 1920ல் தோற்றுவிக்கப்பட்ட  பழங்குடி மக்கள் சம்மேளனத்தின் கொள்கைகளை ஏற்று 1940 முதல் பணியாற்ற முன்வந்தார். இடையில் புத்த பிரச்சாரத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அவரை பல்வேறு பகுதி மக்களிடையே ஈடுபாடு கொள்ளச் செய்தது.

தலைவர் என்.சிவராஜ் போன்ற தலைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின் விளைவாக மாமேதை அம்பேத்கர் 1942லும் 1956லும் ஷெட்யூல் வகுப்பினர் சம்மேளனம், இந்தியக் குடியரசுக்கட்சி போன்ற அமைப்புக்களை ஆரம்பித்தார். இந்த அமைப்புகளின் தலைவராக சிறப்பாக தொண்டாற்றினார் இவர்.

பழங்குடி சமுதாய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, சாதி ஒழிப்புப் போராட்டம், விலைவாசி போராட்டம் போன்றவைகளில் பெரும் பங்கேற்று சிறை சென்றார். பழங்குடிச் சமுதாயம் விழிப்படைய தனது சமத்துவ சங்கு என்ற பத்திரிகையின் மூலமாக சங்கநாதம் செய்தார். வளர்ந்த கட்சிகள் வலிய வந்து அழைத்தும் பதவிக்கோ, பணத்திற்கோ தமது இலட்சியத்தை விட்டு கொடுக்காமல் மறுத்து தேர்தல்களில் எதிர்த்து நின்றார்.

ஏழை பங்காளன் தொண்டு வீ. வீராசாமி, எம்.பி (1919-1995)

கல்லூரியில் படிக்கும்போது தான் தங்கியிருந்த திருச்சி ஹரிசன சேவாசங்க தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு மட்டும் கஞ்சி ஊற்றப்படுவதைக் கண்டு வருந்தினார். இந்த அவலத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள்  தலைவர் தந்தை சிவராஜின் கவனத்துக்கும் சட்டமன்ற உறுப்பினர் திரு.மருதையனின் கவனத்துக்கும் கொண்டு சென்று தீர்வு கண்டார். இங்கனம் சமூக நலனுக்காக உழைத்தாலும், கல்வியிலும் கவனமாய் இருந்து 1941ல் பி.ஏ.பட்டம் பெற்றார்.

1945ல் திருச்சி தக்கர்பாபா ஹரிஜன மாணவர்கள் இல்லத்திலிருந்து தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவர்களை அற்பக் காரணங்களுக்காக இல்ல நிர்வாகிகள் வெளியேற்றினர். மாணவர்களின் பரிதாப நிலையைக் கண்டு வீராசாமி 31-1-1945 அன்று இரவோடு இரவாக தம் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் மாணவர் இல்லமாக மாற்றினார்.

தந்தை சிவராஜ், ஈவேரா போன்றவர்களிடம் இருந்த நெருக்கத்தால் 1950ல் தாம் பணிபுரிந்த திருச்சி வானொலி நிலையத்திலிருந்து விலகி முழுநேரப் பொதுநலத் தொண்டரானார்.

1950ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ‘தொண்டு’ என்ற பத்திரிகையை (தமிழிலும், ஆங்கிலத்திலும்) தொடங்கி 20 வருடங்கள் தொய்வில்லாமல் நடத்தினார். 1952 நாடாளுமன்ற தேர்தலில் மாயவரம் (மயிலாடுதுறை) தாழ்த்தப்பட்டோர் தொகுதியில் தனிச்சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏழை மாணவர்களின் நன்மைக்காக பல நூல்நிலையங்களோடு கூடிய மாணவர் இல்லங்களை உருவாக்கினார்.

1974ல் சமூக புரட்சி என்ற இதழையும் (4 வருடங்கள்) 1980ல் (பௌத்த மார்க்கம்) என்ற இதழையும் (2 வருடங்கள்) நடத்திய பெருமை வீராசாமிக்கு உண்டு.

பறை அடிப்பதையும் , இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் வேலை செய்வதையும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நிறுத்த வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்தார். 1980ல் தம் குடும்பத்துடன் துறையூரில் பௌத்தத்தைத் தழுவினார்.

ராவ் பகதூர் ஜெகந்நாதன் (1894 – 1954)

தனது காலத்திலே அரசியல் சமுதாய துறைகளில் உழைத்துக்கொண்டிருந்த தலைவர்களுடன் இணைந்து தொண்டாற்றி விரைந்து முன்னேறினார். இரவுப் பள்ளிகளையும் மாணவர் விடுதிகளைத் துவக்கி வைப்பதிலே இவர் அதிகம் அக்கறைக் காட்டினார். 1920ல் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1929லிருந்து 1938 வரை மாநகராட்சி உறுப்பினராக இருந்து திறம்பட தொண்டாற்றினார். சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சென்னை மாநில டிப்ரஸ்டு வகுப்பினர் சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும், மாநில கொள்கை பரப்பும் தலைவராகவும், மற்றும் எண்ணற்ற அமைப்புகளிலும்  பொறுப்பேற்று உழைத்தார்.

அயல்நாட்டிலிருந்து இந்திய தேச நிலைமையையும், நிதி, சமுதாயம் போன்ற நிலைமைகளையும் ஆராய வந்த குழுக்களிடம் இவரது இன்றியமையாத அரிய கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம் வேண்டிக் கொண்டது. எனவே, இவர் ராயல் கமிஷன், சைமன் கமிஷன், லோத்தியன் கமிட்டி, ஹாமென்ட் கமிட்டி போன்ற தலைசிறந்த அரசியல் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவினரிடம் தனது ஆலோசனைகளை வழங்கினார்.

1933ல் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

சமுதாய நன்மைகளுக்காக மக்களை விழிப்பூட்ட பல மாநாடுகளில் இவர் பங்கேற்று நிலைமைகளை மக்களுக்கு அறிவுறுத்தியும், அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தும் மக்கள் பயனடைய வகை செய்தார்.

ஆந்திர மாநிலத்தில் நிலப்போராட்டங்களை முதுபெரும் தலைவர் ஆர். சீனிவாசன் அவர்களுடனிருந்து நடத்தி ஏழை மக்கள் நிலங்களைப் பெறுவதற்கு பேருதவியாக இருந்தார்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் (1904 – 1992)

வி.ஜி. வாசுதேவப்பிள்ளை – மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் 26-12-1904ல் பிறந்தார் அன்னை மீனாம்பாள். அன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ.மு.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர்; வள்ளலுங்கூட. இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர்.

அன்னையவர்களின் தந்தையார் திரு.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.

அன்னை மீனாம்பாள் அவர்களுடைய பொதுப்பணி 1928ல் சைமன் குழுவினரை ஆதரித்த முதல் மேடைப் பேச்சில் துவங்கியது. 1930லிருந்து அண்ணல் அம்பேத்கரின் பணிகளை பொதுமக்களிடம் தமிழில் எடுத்துக் கூறியவர். ‘என் அன்பு சகோதரி’ என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். கிட்டதட்ட 1970 வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது. அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதவிகள் அவரைத் தேடிவந்தன. அவற்றில் சில :

துணைமேயர், சென்னை மாநகராட்சி,

ஆனரரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட்,

உறுப்பினர் மெட்ராஸ் பிரசிடென்ட் அட்வைசரி போர்டு,

உறுப்பினர் போஸ்ட்வார் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கமிட்டி,

உறுப்பினர் மெட்ராஸ் யூனியவர்சிட்டி (செனட்)

அன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தன் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் அன்னையவர்கள் சிறப்பித்திருக்கிறார்.

தலைவி ஜோதிவேங்கிடசெல்லம் (1917 – 1992)

ஜோதி அம்மாள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் 27-10-1917ல் பர்மாவிலுள்ள மேம்யோ என்ற ஊரில் குப்புராம் தம்பதியிருக்கு பிறந்தவர். ரங்கூனில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை படித்தவர். 1934 சென்னைக்கு வந்ததும் 1935ல் திரு பி.வி.எஸ்.வேங்கிட செல்லம் அவர்களை மணந்தார். 1961ல் கணவர் கார் விபத்தில் காலமான பிறகு தொழிலகத்திற்குப் பொறுப்பேற்றார்.

இந்திய வணிகர்களில் தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற வேங்கிட செல்லம் கம்பெனியார் குறிப்பிடத்தக்கவர். இந்த நிறுவனத்தின் ஊறுகாய் வகைகள் 1900ல் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்தது. லண்டனில் இன்றைய எலிசபெத்ராணியாரின் பாட்டனார் எட்வர்ட் காலத்திலும், தந்தை ஜார்ஜ் மன்னர் காலத்திலும் அண்மை காலம் வரையிலும் வின்சர் அரண்மனையில் பி.வி.நிறுவனத்தின் ஊறுகாய் வகைகளைத்தான் விரும்பி உண்டு வந்தார்கள்.

1938லிருந்து இவர் பொதுப்பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபாடு கொண்டார்கள். 1940ல் கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும் 1950ல் மாநில சமூக நலப் போர்டின் துணைத்தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் (செனட்) உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952ல் அவருடைய கணவர் சென்னை செரீப்பாக இருந்தபோது திரு.ராஜகோபாலாச்சாரியாரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜோதியம்மாளுடைய ஆற்றலையும், செல்வாக்கையும் கண்ட ராஜாஜி அவர்கள் தமது அமைச்சரவையில் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொண்டார். அன்றுவரை சமூக சேவகியாக இருந்த அவர் அமைச்சர் பொறுப்பைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டது அவருடைய திறமைக்கு நல்ல சான்றாகும்.

பிறகு 1962ல் திரு.காமராசரின் அமைச்சரவையிலும், திரு. பக்தவத்சலம் அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராக இருந்தார்.

1976வரை கலைக்கப்பட்ட சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தார். 1974ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 1978ல் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவர் புரிந்த விளம்பரமில்லாத சாதனைகள் பல. அவற்றில் சில: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டை பி.ஜ.எம்.கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணா சித்த வைத்தியக் கல்லூரி ஆகியவை அவர் காலத்தில் அவர் முயற்சியால் தொடங்கப்பட்டவை. அம்மையாருடைய மூதாதையர் ஏற்கனவே நூறு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கிடாசல ஏழையர் பள்ளி ஒன்றை நிறுவி இருந்தார்கள். அது இன்றும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

இப்பொழுது சொல்லுங்கள் !

‘‘அந்த கால அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப் பெற்றிருந்த ஓரிருவர் நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சி கொடியின் கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிற்று….’’

என்று எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர் ராசதுரை உண்மையைத்தான் எழுதினாரா?

தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கத்தைப் பெருமைபட எழுதலாம். அதில் தவறில்லை. ஆனால் ஒரு சமுதாயத்துக்காக உழைத்த பல தலைவர்களின் வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, தான் சார்ந்திருக்கிற இயக்கத்தால்தான் உரிமை போராடி பெறப்பட்டது என்று சொல்வது கடைந்தெடுத்த பொய் அல்லவா?

ஒரு சமுதாயத்தையே கீழ்த்தரமாக எண்ணி எழுதுகின்ற எழுத்தல்லவா அவர் எழுதியது?

அதைப் போலவே ‘பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய’ என்றுதான் இவரின் முன்னோடிகளான நீதிக்கட்சியினரும் எழுதினர்.

இப்படி எழுத என்ன காரணம்?

இவர்களுக்குள் இருப்பது ஜாதியம் மட்டுமே என்பதுதான் காரணம்.

(தொடரும்)

10 Replies to “நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04”

 1. திரு மா.வெங்கடேசன் அவர்களுக்கு
  உங்களது நான்கு பாகங்களில் யார் தலித்துகளுக்கு உண்மையாக உழைத்தனர் என்பதை பட்டியல் இட்டுள்ளீர்கள். சுயநலவாதிகளின் ஒட்டுமொத்த கூட்டே அநீதிகட்சி என்பதை தோல் உரித்து காட்டியுள்ளிர்கள். ”மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார் தம்மக்கள் நலமும் சுயநலமும் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்” என்ற அடிப்படை பிடிவாத கூட்டுசேர்க்கையே நீதிகட்சி என்பதை தெளிவாக பல மறைக்கப்பட்ட உண்மைகளை கூறியுள்ளிர்கள்.
  எனது அன்பானவேண்டுகோள் தலித்துகள் முன்னேற்றத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு நிறைய பிராமிணர்களும் அரும்தொண்டு ஆற்றியுள்ளார்கள். அவர்களைப்பற்றியும் நீங்கள் எழுதவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
  கே.சி.லஷ்மிநாராயணன் எழுதிய ”தலித்துகளும் பிராமிணர்களும்” என்ற புத்தகத்தில் உங்களுக்கு வேண்டிய ஆரதரமான செய்திகள் கிடைக்கும்.

 2. இது சற்றே இந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் தான் ..அனால் எங்கு சொல்வது என்று தெரியவில்லை .இந்த மத மாற்ற கொசு தொல்லை தாங்கலப்பா ..
  national missionary society of india.
  VISION : India for Christ
  MISSION : To proclaim the gospel of Jesus Chirst to Indians by Indians with Indian Money and through Indian Methods.
  http://www.nmsofindia.org/

 3. @ Inthiyan

  // …. இது சற்றே இந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் தான் ..அனால் எங்கு சொல்வது என்று தெரியவில்லை ….//

  சரியான இடத்தில்தான் சொல்லி இருக்கிறீர்கள். நீதிக் கட்சிக்கும், நேஷனம் மிஷனரிஸ் ஆஃப் இந்தியா குழுவிற்கும் மிஷனும், விஷனும் ஒன்றுதான்.

 4. அருமை! எல்லோரும் ஒன்று பட உங்கள் எழுத்துக்கள் பயன் படட்டும்! மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி!

 5. மிகவும் அருமையான ஆதாரத்துடன் எழுதப்பட்ட கட்டுரை. ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள். இக்கட்டுரையை ஏதாவது தமிழ் பத்திரிகையில் பிரசுரித்தால் எல்லாவற்கும் சென்று அடையும். துக்ளக் பத்திரிகைக்கு அனுப்பலாமே.

 6. ஒரு பக்கம் பிராமணர்கள் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் மறு பக்கம் பல பிராமணர்கள் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காக பெரும் தொண்டு செய்துள்ளனர்

  ராஜாஜி அவர்கள் சென்னை மாகாணத்தின் முதன் மந்திரியாக இருந்த போது( 1939) ஹரிஜன ஆலய பிரவேச சட்டம் இயற்றி அது வரை ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்ட பல ஜாதியினரின் அன்புக்குப் பாத்திரமானார் .
  அதைப் போன்றே குடிப் பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஹரிஜனங்களின் வாழ்வு முன்னேற பாடுபட்டார்
  அதற்காக ‘விமோசனம் ‘ என்ற பத்திரிகையை நடத்தினார்.

  ராஜாஜியைப் போலவே வைத்திய சுப்ரமணிய ஐயரும் ஹரிஜன ஆலயப் பிரவேச இயக்கங்கள் நடத்தினார்.

  மகாகவி பாரதியார் மிகப் பெரும் சீர்திருத்தவாதியாக விளங்கினார் .

  கனகலிங்கம் என்ற ஹரிஜனச் சகோதரருக்கு பூணூல் அணிவித்து பெரும் எதிர்ப்பை சந்தித்தார் .

  ‘பார்ப்பானை ஐயர் என்ற காலம் போச்சே’ என்று பாடக் கூடிய மனோ தைர்யம் அவரிடம் இருந்தது .
  அதே போல் மகாராஷ்ட்ராவில் வீர சாவர்கர் அந்தக் காலத்திலேயே ஹரிஜனங்களின் மீது பெரும் அன்பு கொண்டிருந்தார் .அவர் ஒரு கோவிலைக் கட்டி அதில் ஒரு ஹரிஜனை பூசாரியாக நியமித்தார் .
  நீதிக் கட்சியிலிருந்து பிறந்த திமுக ஏன் ஒரு தலித்தை முதல் மந்திரி ஆக்கவில்லை ? ஏன் கட்சியின் தலைவராக கூட ஆக்கவில்லை?
  ரா.ஸ்ரீதரன்

 7. கிட்டத்தட்ட நூறு ஆண்டுககளாக பிராமணர்களைப் பற்றிப் பேசியாகி விட்டது
  அவர்களை முற்றிலுமாக சமுதாய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலிருந்தும் விரட்டி அடித்தாகி விட்டது
  ஒரு சாதாரண பிராம்மணன் சாதியைப் பற்றிப் பெரிதாகக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை .
  முன்னோர்கள் தங்களுக்கு கொடுத்துச் சென்ற சடங்குகளை யந்திரத் தனமாகச் செய்வதை தவிர பெரிதாக வேறு ஒன்றும் செய்வதில்லை
  அதுவும் பலர் அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டிருக்கின்றனர் .

  ஆனால் வேடிக்கையாக மற்றவர்கள் தான் இதைப் பற்றி மிகவும் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
  இன்று பிராமணர்கள் எந்த வித அதிகாரமும் இன்றி இருக்கின்றனர்
  அவ்வாறு இருக்கும் பொது அவர்களால் சமுதாயத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது .
  தலித்துகள் எல்லோருமே அம்பேத்கர்களாக மாறட்டும்.
  பிராமணர்களுக்கு மகிழ்ச்சிதான் .
  வெறும் இரண்டு அல்லது மூன்று சதவீதம் இருப்பவர்களைப் பற்றிக் கவலை ஏன்?

  மேலும் பிராமணர்களில் படித்த, வசதியுள்ள பிரிவினர் அமெரிக்காவிற்குப் பறந்து விட்டனர்
  ஒரு பகுதியினர் கல்யாணம் ,கார்த்திகைக்குப் ‘பொங்கப்’பொய் விட்டனர்
  ஒரு பகுதியினர் தர்ப்பைக் கட்டை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்
  ஒரு சிலர் கோயில்களில் ௨௦௦௦ ,3௦௦௦ சம்பளத்திற்கு மாரடிக்கின்றனர்( தட்டில் எதாவது விழுமா என்று பார்த்துக்கொண்டு)
  ஒரு பகுதியினர் மத்திய அரசு அலுவலகங்களில் பணி புரிகின்றனர்
  சிலர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்
  இதுதான் நிலைமை
  அவர்களால் எந்த அரசியல் அல்லது சமுதாயக் கொள் கைகளையும் திணிக்க முடியாது

  அப்படி இருக்கும் போது 80 சதம் இருக்கும் மீதி ஹிந்துக்கள் இந்த ( அவர்களது) தாய் நாட்டைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி?
  இப்படியே விட்டு விட்டு தங்களது குழந்தைகள் எப்படி வேண்டுமானாலும் அரசியல், சினிமா இவற்றால் சீரழியட்டும் என்று நினைக்கிறார்களா
  இஸ்லாமிய ஏகாதிபத்தியம் மற்றும் கிறித்தவ மத மாற்றத்தால் தங்களுக்கும் தங்களது எதிர் கால சந்ததியினருக்கும் ஒரு கெடுதலும் இல்லை என்று நினைக்கிறார்களா?
  இந்தக் கேள்விகளுக்குப் பதில் ‘ இல்லை’ என்றால் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் கேள்வி
  அப்படியானால் பிராமணர்களைப் பற்றி அழுது கொண்டிருக்காமல் களத்தில் இறங்கட்டும் .
  பதில் ‘ஆமாம்’ என்றால் – ராமனும் கிருஷ்ணனும்,வியாசரும்,அகத்தியரும்,அவ்வையாரும்,அருணகியாரும் ,சிவாஜியும் ,சேக்கிழாரும் ,கட்டபொம்மனும், கம்பனும் அவர்களுக்கும் முன்னோர்தான்.
  அவர்களின் சுவடுகள் முழுமையாக அழியட்டும் , அதனால் தங்களுக்கு ஒன்றும் இழப்பு இல்லை என்றால் அவர்கள் வாளாவிருக்கட்டும்.
  இரா.ஸ்ரீதரன்

 8. திரு. ஸ்ரீதரனின் கூற்று உண்மையே ,,இல்லாத பிராமணர்களை பற்றி இன்னும் எத்தனை காலம்தான் பேசி கொண்டுஇருப்பது..எல்லோரும் தங்களை வெள்ளைக்காரர்கள் போல் மாற்றிகொண்டுவிடடார்கள் ..கால் டவுசர் ,பனியன்,(ஆண், பெண் ரெண்டு பேரும்தான் வித்தியாசம் தெரியவில்லை!!.)நுனி நாக்கு ஆங்கிலம் ,கையில் நேற்று வெளிவந்த கைபேசியோ ,கணினியோ,அமெரிக்காவில் டாலர்கனக்கில் பணம் .. ,,அடையாளங்கள் இல்லாமல் ,பாரம்பரியம் தெரியாமல் ..இப்போது எல்லோருமே முற்போக்காலர்கள்தான்..ஜாதி வித்தியாசம் பாராமல் எவனோ/எவளோ பெற்றோரை மதிக்காமல் ”கல்யாணம் ” செய்து கொள்கிறார்கள் ..கொஞ்ச நாள் கழித்து “அப்பாவி மணவிலக்கு ” பெற்றவர் என்று விளம்பரம் ..இன்னும் சொல்லபோனால் அவர்களுக்கு அடி வாங்கத்தான் தெரியும் ,கொடுக்க தெரியாது ..பாவம் ஒருத்தர்” எங்கே பிராமணன்” என்று கேட்டு கொண்டுஇருக்கிறார் …பெற்றோர்களே அவர்கள் பிள்ளைகளை பிராமணன் என்ற அடையாளத்தை சொல்லி வளர்பபத்தளில்லை ..இறைதூதர் அழைத்து போனவர்களும் உண்டு ,,இன்னும் இவர்கள் யாரை பார்த்து பயபடுகிறார்கள்.. கோடி கொடியாக பணம் சம்பாதிக்க இன்னும் பழைய பல்லவி .கசாபை போல் யாராவது துப்பாக்கியை தூக்கி கொண்டு வந்தால் முன்னே சென்று எதிர்க்க முடியாத கோழைகள் .அப்சல் குருவை ஏன் இன்னும் தூக்கில் போட வில்லை என்றால் அவன் இந்து மத வெறியன் ..ஏன்பா கோயில் உள்ளேயே கிறித்தவர்களையும் விட வேண்டும் என்று போராட்ட்டம் பண்ண முடியும் போது இதை விட வேற என்ன சமூக உரிமை கிடைக்க முடியும் ..யாருமே இந்துவாக/மனிதராக இருக்காதீகர்கள் ..எல்லோரும் விலங்குகளை போல் இருங்கள் …அவர்கள் ஆசை அதுதான் ..எதுவும் தப்பு என்று யாரும் எதுவும் சொல்லகூடாது …

 9. அம்பேத்கரின் இயற் பெயர் பீமா ராவ். அவரது பள்ளிபடிப்பை தொடர்ந்து படித்துமுடிக்க உதவி செய்தவர் அம்பேத்கர் என்ற பிராமிண ஆசிரியர். அந்த நன்றிகடனாகவே தன் பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரையும் சேர்த்து பிமா ராவ் அம்பேத்கர் பி.ஆர்.அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
  அவ்வாறே அவர் உயர்கல்வி பயிலவும் வெளிநாடு செல்லவும் கிருஷ்ணாஜி அர்சுன் கேலுஸ்கர் என்றபிராமிணர் கெய்குவாட் மகாராஜாவிடம் அழைத்துசென்று வேண்டிய பணஉதவிக்கு ஏற்பாடுசெய்தார்
  அவரது வாழ்கையின் இறுதிகட்டத்தில் அவர் தனக்கு மருத்துவமனையில் சேவை செய்த சாரதா அம்மையார் என்ற பிராமிணபெண்னை அவரது விருப்பத்தின் படி இரண்டாம் தாரமாக மணம் செய்தார்

 10. திரு, ம வெங்கடேசன் அவர்களுக்கும் ,தமிழ்ஹிண்டு நிர்வாகதிற்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
  தன்னலம் சிறுதும் விரும்பாத இவர்களை பற்றி இத்துனை நாள் ஏன் வரலாற்றிலோ அல்லது வேறு ஊடகத்திலோ நான் பார்க்கவில்லை ,

  ராவ் சாகேப் எல்.சி. குருசாமி (1885- 1966
  தளபதி எம். கிருஷ்ணசாமி, (1917 – 1973
  ஏழை பங்காளன் தொண்டு வீ. வீராசாமி, எம்.பி (1919-1995
  ஏழை பங்காளன் தொண்டு வீ. வீராசாமி, எம்.பி (1919-1995)
  ராவ் பகதூர் ஜெகந்நாதன் (1894 – 1954)
  அன்னை மீனாம்பாள் சிவராஜ் (1904 – 1992)
  தலைவி ஜோதிவேங்கிடசெல்லம் (1917 – 1992

  இவர்களை போல் இனியும் பல சமூக நீதி மலர பாடுபட்டவர்கள் இருந்திருப்பார்கள் அவர்களை பற்றியும் தெரியுமாயின் ,இதனை ஒரு தொடர் பதிவாய் நீங்கள் பதியலாம் ,நிச்சயம் இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்

  சமுக நீதியின் காவலர்கள் என்று தன்னை தானே போற்றிகொள்ளும் கைவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று திண்ணமாக நம்புகிறேன்
  .
  நன்றியுடன்
  பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *