இம்மைச் செய்தது

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.

sanga-pulavarஆய் அண்டிரன் என்னும் சங்ககாலத் தலைவனை ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர்பெருமான் பாடிய இப்புறநானூற்றுப் பாடல் சங்கத் தமிழர்களின் விழுமிய வினைக்கோட்பாட்டை விளக்குகின்றது. பின்னாளில் வினைக்கோட்பாடு பற்றிய விரிந்த சிந்தனைக்கு இப்பாடலில் வித்தினைக் காணலாம்.

“இப்பிறப்பின்கண் செய்ததொன்று மறுபிறப்பிற்கு உதவுமென்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; சான்றோர் பிறரும் போய வழி அது என்று உலகத்தார் கருதுவதால் அவனது கைவண்மை அந்த நற்செய்கையில் பட்டது.”

என்பது இப்பாடலின் பொருளாம்.

இப்பாடலால் பெறப்பட்ட செய்திகள்:

1. இந்த பிறப்பில் செய்த நல்ல வினை மறுபிறப்பில் உதவும்.

2. அவ்வாறு செய்வது அறத்தை(புண்ணியத்தை) விலை கொடுத்து வாங்குவதாகும்.

3. அது சான்றோர் சென்ற வழி என்பதால் ஆய் அவ்வழியை மேற்கொண்டான்.

இதனால் இம்மையில் செய்த நல்வினையோ தீவினையோ இப்பிறப்பில் இல்லாது போனாலும் மறு பிறப்பில் தன் பலனை அளிக்கும். இந்த நம்பிக்கை சங்கத் தமிழ் மக்களிடம் வழங்கியிருத்தல் தெளிவாகின்றது.

இதே போன்று, இப்பிறப்பில் ஒருவன் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும் முற்பிறப்பில் அவன் செய்த நல்வினை தீவினைகளே காரணம் என்பதை மேற்கண்ட சங்கப் பாடலின் வழி அறியலாம்.

இந்தக் கருத்தினை வலியுறுத்தி, சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருவிடைமருதூர் தேவாரத்தில்,

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்

என்று பாடினார்.

“இடைமருதுறை எந்தைபிரானே! முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால், அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் வீணாகப் போயின. நன்மை தீமைகளைச் சிந்தித்து ஆராயும் அறிவற்றவனாயினேன்”

என்பது இத்திருப்பாடலடிகளின் பொருளாம். மூர்க்கனானபடியினால் துன்பத்தின் காரணத்தைச் சிந்தித்துக் காணும் அறிவற்றவனாயினன் என்பது கருத்து.

வினை, அறம், பாவம் பற்றிய இந்தக் கோட்பாடு, பிற்காலத்தில் சைவசித்தாந்த தத்துவம் உருப்பெறுங்காலத்தில் சைவசாத்திரங்களில் வரையறுக்கப்பட்டு இடம்பெறலாயிற்று.

நல்வினை-தீவினை, புண்ணியம்-பாவம் இரண்டுமே மறுபிறவிக்குக் காரணம் ஆகும் என்றும் அவை சுகதுக்கங்களாக அனுபவித்துக் கழியும் என்றும் நல்வினை சான்றோர் கட்டிய அறநெறி என்று கடைப்பிடித்து, சிவனை நினைந்து சிவார்ப்பணமாகச் செய்தால் அது சிவபுண்ணியம் ஆகும் என்றும், சிவபுண்ணியம் நுகர்வினால் குறையாமல் மேலும் மேலும் வளரும் என்றும் பின்னாளில் சைவசாத்திரம் கூறுவதற்கு மூலம் மேற்காட்டிய சங்கப் பாடலில் காணலாம்.

 

வினையின் அடையாளம் / அறிகுறி

நன்மாணாக்கன் ஒருவர், சித்தாந்த ஞானாச்சாரியரை அடுத்து, “ஐயா, நான் ஆணவம், கன்மம் ஆகிய மலச் சார்புடையவனாக இருக்கின்றேன் என்பதை எவ்வாறு அறிவது?” என்று வினவினார். அதற்கு ஞானாச்சாரியர் சுருக்கமான விடை கூறி விளங்க வைக்கின்றார்.

-கூறில்

அறியாமை ஆணவம் நீயானசுக துக்கம்
குறியா வினையென்று கொள்.

உண்மை விளக்கம்: ‘கூறில்’– சுருக்கமாகச் சொன்னால். குறி என்றால் அடையாளம், அறிகுறி என்பது பொருள். குறி ஆ(க)- அடையாளமாக; அறிகுறியாக என்பது பொருள். அறிகுறியினால் (symptoms) நோயை அறிவதுபோல, காரியத்தால் காரணத்தை அறியலாம்.

உன்னிடம் அறியாமை இருப்பதை அறிவாய். சித்து அல்லது உணர்வுடைய பொருளாகிய உன்னிடம் அறியாமை இருப்பதற்குக் காரணம் ஆணவம். ஆணவம் காரணம்; அறியாமை காரியம். காரியத்தைக் கொண்டு காரணத்தை அறியலாம். எனவே, உன்னிடத்தில் உள்ள அறியாமை, உன்னைப் பந்தித்துள்ள ஆணவமலத்தின் அடையாளம்..

அதுபோல வினை அல்லது கன்மமலத்தையும் அறியலாம். உன்னிடம் உள்ள சுகதுக்கங்கள் உன்னைப் பந்தித்துள்ள வினை அல்லது கன்ம மலத்தின் அடையாளம்.

நீ சுகதுக்கங்களை அனுபவிக்கும்போது அவை வேறு நீ வேறு என்ற வேறுபாடின்றி அவையேயாக அழுந்தி அனுபவிக்கின்றாய். சுகதுக்கங்கள் ஆன்மாவின் இயல்பு அல்ல. ஒருபொருளுக்கு மாறுபட்ட இரண்டு குணங்கள் இருக்க முடியாது. நீரின் குணம் தண்மை, குளிர்ச்சி. அது வெப்பமும் மணமும் உடையதாயின் அது நெருப்பும் மலரும் கூடிய செயற்கை. அதுபோல உயிருக்கு மாறுபட்ட குணங்களாகிய இன்ப துன்பங்கள் இயல்பாக இருக்க முடியாது; எனவே அவை செயற்கை. எப்படி தண்ணீர் நெருப்புடன் கூடியபோது தன் இயற்கையாகிய தண்மை நீங்கி செயற்கையாகிய வெப்பம் பெற்றதோ அதுபோல ஆன்மாவும் வினையினால் தன் இயற்கைக்கு மாறாக இன்பதுன்பங்களாகவே, நீயான சுகதுக்கங்களாக இருக்கின்றது. நீ அனுபவிக்கும் சுகதுக்கங்கள் உன்னைப் பந்தித்திருக்கும் வினைக்கு அடையாளம், அறிகுறி என்று ஆசிரியர் விளக்கினார்.

 

குறியா வினை

இனி, குறியா வினை என்றதில் உள்ள ‘குறியா’ என்ற சொல்லை சுகதுக்கங்களுடன் கூட்டி, ‘குறியா சுகதுக்கங்கள்’ என்று கொண்டு, இன்ன காரணத்தால் எனக் குறித்து அறிய முடியாத சுகதுக்கம் என்றும் பொருள் கூறுவது உண்டு.

இதனைச் சற்று விரிவாக சிந்திக்க வேண்டும்.

நாம் செய்கின்ற செயல்கள் எல்லாம் வினை ஆகிவிடுவதில்லை. செயலின்றி வாழ்க்கையும் இல்லை. செயல்களே வாழ்க்கையாக உள்ளது. செயல்கள் எப்பொழுது வினைகள் ஆகின்றன?

‘ஒருவன் ஒரு வினையைச் செய்தான்’ என்று கூறினால், அவன் செய்த செயலுக்குச் செயப்படுபொருள் வினை என்பது பெறப்படுகின்றது.

எப்பொழுது ஒரு செயல் இன்னொரு உயிரைப் பாதிக்கின்றதோ அப்பொழுது அச்செயல் வினையாகின்றது. உண்ணுவது ஒரு செயல். அது வினையன்று. அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற நினைப்போடு உண்ணுவது வினை.

 

இருவினை > புண்ணியம் பாவம் > இன்ப துன்பம்

வினை, பயன் அளிப்பதில் மூன்று நிலைகள் உள்ளன. இதமோ அகிதமோ, நற்செயலோ தீச்செயலோ அச்செயல் ஒருநிலையில் முடிவுறுகிறது. ஒருவனை ஒருவன் அடித்தால், அடித்ததுடன் அச்செயல் முடிவு பெறுகிறது. அடிபட்ட உடல்வலியும் கொஞ்ச நேரத்தில் மறைந்து விடுகின்றது. காலப்போக்கில் அடிபட்டவனும் நிகழ்ச்சியை மறந்து விடுகின்றான். இது முதல் நிலை. ஆனால், நாம் இப்பிறப்பில் பிறருக்குச் செய்கின்ற இதம் அகிதங்கள் நல்வினை தீவினைகளாக, ஆகாமியமாகின்றன.

இதம் அகிதமாகிய நல்வினை அல்லது தீவினை புண்ணிய பாவமாகிறது. இது இரண்டாம் நிலை. பலபிறவிகளிலும் ஈட்டிய ஆகாமியங்கள் சஞ்சிதமாகின்றன.

புண்ணிய பாவங்கள் இன்பதுன்பங்களுக்கு வித்துப் போல உரிய காலத்தில் இன்பதுன்பமாகப் பலன் அளிக்கின்றன. பலனளிக்கின்ற காலத்தில் புண்ணிய பாவங்களாகிய சஞ்சிதங்கள் சுகதுக்கங்களாகிய பிராரத்துவமாகின்றன..

 

வினையை அறியும் அடையாளம் – இலக்கியச் சான்று

kovalan-kannagi-and-saint-kounthi-in-the-outskirts-of-maduraiஆக, இம்மையில் நாம் அனுபவிக்கின்ற சுகதுக்கங்களாகிய பிராரத்துவம், புண்ணியபாவங்களாகிய சஞ்சிதத்துக்கும் அவற்றிற்கு ஏதுவாகிய நல்வினை தீவினை எனும் இருவினைகளுக்கும் அடையாளம் அல்லது அறிகுறியாகின்றன.

சைவசித்தாந்தம் கூறும் இந்த வினைக்கோட்பாட்டினை ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதற்கு இலக்கியமாகச் செய்யப்பட்ட சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பாக விளக்குகின்றார்.

கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மதுரைக்குப் புறத்தே ஒருசோலையில் தங்கியுள்ளனர். அப்பொழுது கோவலனை நன்கு அறிந்த மாடலன் என்னும் மறையவன் ஒருவன், குமரி முதல் தீர்த்தமாடி பொதிகையை வலங் கொண்டு வருவோன், அங்கு கோவலனைக் கண்டு திகைப்படைகின்றான். கோவலனோடு உரையாடுகின்றான். கோவலன் இம்மையிற் செய்த நலன்களை நினைவுபடுத்திப் பேசுகின்றான்.

 

madalan-reminds-kovalan-of-his-past-glory“உன் மகள் மணிமேகலைக்கு, அணிமேகலையார் ஆயிரவர் கூடி, உன்குலதெய்வமாகிய மணிமேகலையின் பெயரைச் சூட்டியபோது நீ வழங்கிய பெருங்கொடையைப் பெறுவதற்குக் கையில் பற்றிய கோலொரு காலாகத் தண்டூன்றி வந்தை முதுமறையவனைப் பெருமத களிறொன்று துதிக்கையினால் பற்றித் தூக்க, அதன் துதிக்கையைப் பற்றி அதன் வழி ஒதுங்கி மறையவனை விடுவித்துக் களிற்றின் தந்தங்களினூடு குன்றேறுவானைப் போல மத்தகத்தைப்பற்றிச் சென்று அதன் பிடரி மீதமர்ந்து அதன் மதத்தை அடக்கிய கருணை மறவன் அல்லனோ நீ!” என்றான்.

 

benevolent-kovalanபூம்புகார் நகரில் நீண்ட காலம் மகப்பேறு இல்லாமல் வருந்திய பார்ப்பனத் தம்பதியர் கீரிப்பிள்ளையொன்றைக் குழந்தைபோல வளர்த்தனர். அப்புண்ணியத்தால் குழந்தை பிறந்தது. குழந்தையை வீட்டில் இருத்தி நீர் கொண்டுவரச்சென்ற பார்ப்பனி, மீண்டுவந்தபோது வாசலில் குருதியொழுகும் வாயுடன் கீரி நிற்பதைக் கண்டாள். அவசரபுத்தியுடன் தன் குழந்தையைக் கீரி கடித்துக் கொன்றுவிட்டதென்று நினைத்துக் குடத்தை அதன் தலைமீது இட்டுக் கொன்றுவிட்டாள். வீட்டினுள் சென்று பார்த்தபோது, நாகமொன்று துண்டுதுண்டாக இறந்து கிடக்கக் குழந்தை மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். சிசுஹத்தி செய்த பார்ப்பனியுடன் வாழ்தலை வெறுத்த பார்ப்பனன், ஓரேட்டில் வடமொழிச் சுலோகம் ஒன்றை எழுதி அவள் கைக்கொடுத்து, ‘கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க’ என்று கூறி விட்டு வடநாடு போயினான். பார்ப்பனி அந்த ஓலையைப் பயனின்றிப் பலருக்கும் காட்டிப் பின்னர் இறுதியில் கோவலனிடத்துக் காட்டினாள். கோவலன் அந்த ஏட்டில் இருந்த வடமொழி வாசகத்தின்படி, பார்ப்பனி செய்த பாவத்துக்கு உரிய பரிகாரங்கள் செய்து, பாவத்தைப் போக்கி, பிரிந்து சென்ற பார்ப்பனனையும் மீட்டு வந்து, வறுமையின்றி அவர்கள் வாழ்வதற்கு வேண்டிய பொருள்களும் நல்கி வாழ்வித்தான். இந்த அறக்கொடையை நினவுகொண்ட மாடலன், இந்நிகழ்ச்சியை விரித்துக் கூறி, இத்தகைய “செல்லாச் செல்வன்” அல்லனோ நீ என்றான்.

புகார்நகரில் கழிமகன் ஒருவன், கற்புடைப் பெண் ஒருத்தியின் மீது அடாதபழி சுமத்தி அவளைக் கணவனிடமிருந்து பிரிக்க, பொய் சாட்சி சொல்லுவோரை அடித்துண்ணும் சதுக்க பூதமொன்றின் கைப்பட்டான். பூதம் அவனை அடித்து உண்ணுதலைக் கண்ட அவனின் தாய், தனக்கு வேறு கதி இல்லாததால் அரற்றிப் புலம்பும் துயர் கண்ட கோவலன், பூதத்திடம் தன்னை உண்டு, அவனை விடுவிக்குமாறு வேண்டினன். அதற்குப் பூதம், ‘நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை’ என்று கூறி அந்தப் பாவியை விழுங்கி விட்டது. கோவலன் மகனை இழந்த தாயை அழைத்து வந்து அவளுக்கும் உற்றாருக்கும் வேண்டிய பொருள் உதவி அவர்களைக் கவலை இன்றி வாழச் செய்தான். மறையவன் இந்நிகழ்ச்சியைக் கூறி, இவ்வாறு, ” ‘பற்றிய கிளைஞரிற் பசிப்பிணி யறுத்துப், பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்’ அல்லவா நீ!” என்றான்.

இவ்வாறு கோவலன் செய்த நிகரற்ற புண்ணியங்களை நினைவு கூர்ந்த மாடலமறையோன்,

இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”

என்று வினாவினன்.

தானறிந்த வரையில் கோவலன் இப்பிறப்பில் செய்தன எல்லாம் புண்ணியங்களே; அவற்றிற்குப் பயனாக மிக்க இன்பமே விளைந்திருக்க வேண்டும் ஆனால் மனைவியுடன் நள்ளிரவில் அகதியாக நாடுவிட்டு நாடு செல்லும் பெருந்துன்பம் விளைந்ததற்கு காரணம் முன்பு செய்த தீவினையாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு மாடலமறையவன் வந்தது சித்தாந்த சாத்திரம் கூறும் நிலையைத் தெளிதாக விளக்குகின்றது.

 

வினைவிளை காலம்

வினை எப்பொழுது பலன் தரும்?

வினைகள் செய்த அப்பொழுதே அல்லது அப்பிறப்பிலேயே பலன் தரும் என்ற நியதி இல்லை.. சில அப்பிறப்பிலேயே பலன் தரும்; சில இனி வரும் பிறவிகளில் பலன் தரும். அதுவரை சஞ்சிதத்தில் புண்ணிய பாவமாகச் சேர்ந்து நிற்கும்.

இதற்கு ஓர் உதாரணம் கூறப்படும்.

ஒருவன் முதலில் பனை விதை நட்டான்.; தென்னை நட்டான்; வாழை நட்டான்; கீரையும் விதைத்தான். இவை விதைத்த இந்த முறையிலேயே பலன் தரா. கீரை விதைத்த சிலநாள்களிலேயே பலன் தரும். வாழை சிலமாதங்களிலும் தென்னை சில வருடங்களிலும் பனை அடுத்த தலைமுறைக்கும் பலன் தரும். வினைகளும் இப்படியே; சில பிறப்புகள் கழித்தும் பலன் தரும்.

வினை, பலனைத் தரத் தொடங்குகின்ற காலத்தைச் சிலப்பதிகாரம் வினைவிளை காலம் என்று கூறுகின்றது.

kovalan-was-accused-of-stealing-the-queens-ankletசிலப்பதிகாரம் பதிகமும் கட்டுரைக் காதையும் வினைவிளை காலத்தைக் குறிப்பிடுகின்றன. பொற்கொல்லன், ‘பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக், கண்டனன் பிற்னோர் கள்வன் கையென’ இதுவரை செங்கோல் வழுவாத பாண்டியன், ‘வினைவிளை கால மாதலின் யாவதும், சினையலர் வேம்பன் தேரா னாகி, கன்றிய் காவலர்க் கூயக் கள்வனைக், கொன்றச் சிலம்பு கொணர்க’ என்றான்..

‘வினைவிளை கால மென்றீர் யாதவர் வினைவிளைவு’ என்று சேரன் செங்குட்டுவன் கேட்க சீத்தலைச் சாத்தனார் பழைய வரலாறு ஒன்றைக் கூறினார்.

“கண்ணகி மதுரையை அனலுக்கு இரையாக்கியபோது, அழியாமல் இருந்த ஒரே இடம்,

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்,
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்,
வெள்ளியம்பலம்

(கூத்தப்பிரான் கால்மாறி ஆடிய வெள்ளியம்பலம் சிலப்பதிகார காலத்திலேயே இருந்த பெருமை உடையது.)

அந்த அம்பலத்துள் அன்றிரவு நான் துயின்றேன். அப்பொழுது அந்த நகருக்குக் காவல் தெய்வமாகிய மதுராபுரித் தெய்வம், கண்ணகி முன் வெளிப்பட்டு, ‘பைந்தொடி! முதிர்வினை நுங்கட்கு முடிந்தது; முந்தைப் பிறப்பில் சிங்கபுரத்துச் சங்கமன் என்னும் வணிகனைன் மனைவி இட்ட சாபம் இப்பொழுது பலித்தது’ என்று சொல்லிக் கோவலனின் முந்தையதொரு பிறப்பின் வரலாற்றைக் கூறியது.

சிங்கபுரம், கபிலபுரம் என்ற இருநாட்டை தம்மில் பகை கொண்ட தாயத்தாராகிய வசு என்பவனும் குமரன் என்பவனும் ஆண்டு வந்தனர். கபிலபுரத்தைச் சேர்ந்த வணிகன் ஒருவன் சங்கமன் என்னும் பெயருடையவன்; பெரும்பொருள் ஈட்டும் ஆர்வத்தில் தன்மனைவியையும் அழைத்துக் கொண்டு சிங்கபுரத்தில் உள்ள அங்காடியில் வந்திருந்தான். அவன் மீது பொறாமை கொண்ட பரதன் என்பான், ஒற்றன் இவனெனப் பற்றிக் கொண்டுபோய் அரசன் முன் காட்டிக் கொல்வித்தான். அந்நிய நாட்டில் கொலையுண்ட சங்கமனின் மனைவி, ‘நான் பட்ட இத்துயரத்தை எனக்கு இதைச் செய்த தாங்களும் படுவாராக’! எனச் சபித்து உயிரை விட்டாள். அவள் இட்ட வழுவில் சாபத்தில் நீங்கள் பட்டனீர். பொய்க் குற்றம் சாட்டிப் பரதனைக் கொல்வித்தவன் இப்பிறப்பில கோவலனாகப் பிறந்தான். பரதன் மனைவி அந்நிய நாட்டில் பட்ட துயரத்தைத்தான் அவள் சாபப்படி கோவலன் மனைவியாகிய நீ அனுபவித்தாய்’ என்று ஒரு பழங்கதையை மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்குக் கூறியது.

இந்தப் பழைய வரலாற்றில் மற்றொரு உண்மையும் தெரிய வருகின்றது. கோவலன் செய்த தீவினைக்குக் அவன் துன்பம் அனுபவித்தல் தானே முறை. கண்ணகியும் ஏன் துயருறவேண்டும். ஒரு பொருளை நெருப்புப் பற்றி எரிகின்றபோது, அதன் வெப்பம் அருகில் உள்ள பொருளையும் தாக்கும். அதுபோல ஒருவன் வினைப்பயனை அனுபவிக்கும்போது, அது அவனை அடுத்துள்ளவர்களையும் பாதிக்கும்.

இங்கு மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு உணர்த்திய வினை பற்றிய சிறப்பான கோட்பாடு ஒன்றனையும் அறிய வேண்டும். மாடல மறையோன் கோவலனை நோக்கி,

இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது

என வினவினான். அதற்குப் பதில் கூறுவது போல,

உம்மை வினைவந் துருத்த காலைச்
செம்மையி லோர்க்குச் செய்தவம் உதவாது

என்று மதுராபுரித் தெய்வம் கூறியது.

கழிந்த பிறப்பில் செவ்விய மனம் இல்லாதோருக்கு, அக்காலத்துச் செய்த தீவினை வந்து பலிக்கும் காலத்தில் இப்பிறப்பில் செய்த நல்வினை வந்து உதவாது. இந்தத் தீவினை பலிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நல்வினை அதற்குரிய நற்பலனைத் தருமே அன்றி முன்செய்த தீவினையை இப்பொழுது செய்த நல்வினை அழிக்காது. புண்ணியபலனையும் பாவத்தின் பலனையும் தனித்தனியே அனுபவித்துக் கழிக்க வேண்டுமேயன்றி அவை ஒன்றையொன்று ஒழியா என்பது மதுராபுரித் தெய்வம் கூறியதன் கருத்து.

இந்தக் கருத்தே பின்னர் சைவ சித்தாந்தம் சாத்திரமாக எழுதப்பட்ட பொழுது இருவினைச் சமம் அல்லது இருவினை ஒப்பு என்னும் அருமையான கோட்பாடாக உருவெடுத்தது.

ilango-adigal-who-wrote-silappathikaram-in-the-poetic-formநெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தைப் பயில்வதன் பயன் இவையென நாம் கைக்கொண்டு ஒழுக வேண்டிய அறிவுரைகளை வஞ்சிக்காண்டம், வரந்தரு காதையின் இறுதியில் இளங்கோ அடிகளாகிய தவப்பெருஞ் செல்வர் உரைக்கின்றார். அவற்றுள் சில:

தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்

— — — — — — —
— — — — — — —

கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லுந் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லல் ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்

இவ்வுரையை மனத்தில் இருத்தாமல் சிலப்பதிகாரத்தைப் படிப்பது, பேசுவது வெறும் ஆரவாரமாகும்.

19 Replies to “இம்மைச் செய்தது”

  1. The Thamizh Saandroar have discovered great truths by their investigation about life and this is found in literatures like Silapadhigaram. purananooru etc.. There are even Kural couplets confirming the above truth. This particular article is applicable to all people irrespective of their religion.

  2. I request TamilHindu present the “Paramapadha Sobhana Padam” to the readers of this site. I presume that it is a treasure of knowledge containing lot of indepth meaning. In my opinion, the Paramapadha padam is a depiction of how the Atma struggles through it’s way to reach the Paramanin padham or Moksham. Kindly tell your expert authors to study this subject and present it for the benefit of us. Why the game of paramapadham is played during the night of Vaikunda Ekadhasi ?

  3. சிறந்த கட்டுரை. சிலபதிகரத்தில் கூறி உள்ள சைவ சித்தாந்த கருத்துக்கள் பற்றி எழுதியதிற்கு நன்றி. ஆராய்ச்சி நோக்குடன் எழுதப்பட்டுள்ளது.
    சோமசுந்தரம்

  4. சைவ சிந்தாந்த கருத்துக்கள் கூறும் சிலப்பதிகாரம் ஏன் ஜைன நூலாகச் சொல்லப்படுகிறது?

  5. சைவ சிந்தாந்த கருத்துக்கள் கூறும் சிலப்பதிகாரம் ஏன் ஜைன நூலாகச் சொல்லப்படுகிறது?/சிலப்பதிகாரம் மணிமேகலையைப் போல ப்வுத்தத்தைக் கூறும் காப்பியமோ சீவகசிந்தாமணியைப் போல சமணத்தை கூறும் நூலோ அன்று. வைதிக மதக் கருத்துக்களும் மந்திரங்களும் இந்நூலில் பேசப்படுகின்றன. .”அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும், வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்” எனப் பஞ்சாக்கரமும் அட்டாக்கரமும் பேசப்படுகின்றன. சேரன் செங்குட்டுவன் சிவபெருமானின் அருளால் பிறந்தவன் என்னும் உண்மையை இளங்கோவடிகள்,” செஞ்சடை வானவன் அருளினில் விளங்கிய, வஞ்சித் தோன்றிய வானவன்” என்றும், ” ஆனே றூர்ந்தோன் அருளிற் றோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவன்” என்றும் கூறுவதால் அறியலாம். மேலும் சேரன் செங்குட்டுவனின் சிவபத்தியின் பெருமையை இளங்கோவடிகள் மறவாது பதிவு செய்கின்றார். சேரன் செங்குடுவன் வடநாட்டின் மீது படையெடுத்தற்கும், பத்தினித் தெய்வம் படிமம் செய்யக் கல் கொண்டுவருவதற்கும் புறப்படும் முன், ஆடக மாடத்தில் அறிதுயில் கொண்டிருக்கும் திருமாலின் பிரசாதத்தைக் கொண்டுவந்து கொடுத்துச் சிலர் வாழ்த்தினர். இறைவனின் பிரசாதத்தைச் சிரசில் தாங்குதல் வேண்டும் என்பது மரபு. சேரன் செங்குட்டுவன், ஏற்கெனவே, ” தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்”( கங்கையத் தரித்த சிவனின் திருவடிகளைத் தன் சிரசின் மேல் வைத்திருத்தலினால்) , பெருமாளின் சேடத்தை அலட்சியம் செய்ய்க் கூடாது என்பதும் சைவ மரபாதலினால், ” ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்” என்றும் சேரமன்னர்களின் சைவமரபுச் சிறப்பினை இளங்கோவடிகள் மரவாது பதிவு செய்து வைத்துள்ள சிறப்பினை அறிதல் வேண்டும். இளங்கோவடிகள் சமணத்தைத் தௌவியது உண்மை. சமண்சமயத்தைத் தழுவிய இளங்கோவடிகள் செய்த காப்பியம் சமணகாப்பியமாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதுவது நூலை முழுதும் படிக்காமல் செய்யும் தவறு. இளங்கோவடிகள் சமணசமயத்துக்குச் சென்ற காரணத்தையும் அறியவேண்டும். அப்பர் பெருமான் தம்முடைய இளமையில் ,நிலையாமைய்யின் இயல்பினை நன்கு அறிந்தார். அதனால் நிலையாமையைப் பெரிதும் வலியுருத்திய அமண் சமயம் புகுந்தார் என்று அவருடைய புராணம் தெரிவிக்கின்றது. அதுபோல, இளங்கோ, சோதிடனின் உரையைப் பொய்ப்பிக்கத் துறவைப் பெரிதும் வலியுறுத்தும் சமணத்தை மேற்கொண்டார். ஆயினும் தம்முடைய வைதிக மரபைப் போற்றுதலை மறக்கவில்லை. சிலப்பதிகாரம் சமணநூல் என்பது பிழை.

  6. சிலபதிகரம் சமண சமய காப்பியம் தான் அய்யா …….தாங்கள் கூறுவது போல் பிழை ஆக இருக்கும் பட்சத்தில் ஏன் காப்பிய தலைவன் தலைவி இருவரும் சமண சமண சமயத்தை சேர்ந்தவர்களாக சித்தரிக்க பட வேண்டிய அவசியம் ஏன் …….அவர் சமய காழ்ப்பு இன்றி அணைத்து மதத்தையும் படம் பிடித்து காட்டுகின்றார்….அவ்வளவு தான் …..ஏர்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளி பாட புத்தகங்களில் சிலபத்திகாரம் சைவ சமயம் என்று அச்சிட பட்டது அதனை மறுத்து ஜைன சமய காவலர் என்று அழைக்கப்படும் ஸ்ரீபால் அவர்கள் அதை தக்க ஆதரங்களுடன் ஜைன சமய காப்பியம் தான் என நிருபித்து உள்ளார்கள் …எனவே தாங்கள் இங்கு சிலபத்திகாரம் ஜைனசமய காப்பியம் என்பது பிழை என்று கூறி உள்ள கருத்தை திரும்ப பெற வேண்டும் என கேடுகொள்கின்றேன்…….adhiraj

  7. @ adhiraj அவர்கள்

    கட்டுரை ஆசிரியரின் விளக்கம் வேறு வகை அணுகுமுறையைக் காட்டுகிறதே.

    அவரது விளக்கத்தின்படி சமண, பௌத்த, சைவ மதங்களுக்கு இடையே இறுகிய எல்லைகள் இல்லாத ஒரு காலத்தில் இந்த நூல் உருவானது. (இப்போதும் அப்படிப்பட்ட எல்லைகள் இல்லை.)

    உருவாக்கியவர் சமணர் என்றாலும், அந்த நூல் உருவாகிய முறை மற்றும் அந்த நூல் முக்கியத்துவம் கொடுக்கிற, விதந்தோதுகிற ஞானமரபு போன்றவை சைவசித்தாந்தமாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக தனது கட்டுரையில் காட்டியுள்ளாரே.

    கோவலனும், கண்ணகியும் சமணர்கள் என்று நீங்கள் சொல்லுவது எனக்குத் தகவல். ஆனால், தலைவனும், தலைவியும் சமணராகக் காட்டப் படுவதால் அது சமண நூலாகத்தான் இருக்க வேண்டுமா?

    ஆயிரம் பேர்களை சுண்டு விரலால் அடித்து விரட்டும் நம்படத்துக் கதாநாயகர்கள் வன்முறை தப்பு, போய் பிள்ளை குட்டிங்களை படிக்க வையுங்கள் என்று கடைசியில் வசனம் பேசினாலும், அவர்கள் போற்றிப் பாடுவது வன்முறையைத்தானே.

    அவர்களைப் போலல்லாமல், கோவலன் – கண்ணகி வாழ்வின் ஊடாக முன்வைக்கப்படுவது சைவசித்தந்தமாக இருக்கலாம் அன்றோ?

    ஸ்ரீபால் அவர்கள் முன்வைத்த ஆதாரங்கள் என்ன?

    @ முத்துக்குமாரசாமி அவர்கள்

    சமண மதத்தையும், சைவ மதத்தையும் வேறுபடுத்தும் பல விஷயங்களில் ஒன்று “முக்தி”. அஃது குறித்து சிலப்பதிகாரம் ஏதேனும் சொல்லுகிறதா?

  8. அன்பர் ஆதி ராஜ் அவர்களுக்கு, சிலப்பதிகாரத்தில் எங்காவது சீவகசிந்தாமணியில்உள்ளவாறு ச்மணம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதா? காவுந்தியடிகளுடைய பேச்சில், அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்தியவகையில் அருகவணக்கம் உள்ளதே அன்றி வேறெங்கும் சமணம் பேசப்படவில்லை. கண்ணகியும் கோவலனும் சமணசமயத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்த தலைமக்கள் எனில் அவர்களின் திருமணம் ஏன் தீயோம்பி மறையவனால் நடத்தப்பட்டது? இளங்கோவடிகள் சமயக் காழ்ப்பு அற்றவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சிலப்பதிகாரத்தில் வேதவழக்குகள் தெள்ளத்தெளிவாக இருப்பதுபோல் சமணசமயக் கோட்பாடுகள் கூறப்படவில்லை. ஜீவபந்து சிலப்பதிகாரத்தைச் சமணக் காப்பியம் என உரிமை கொண்டாடுவது அவருக்கு உரிமை. அந்த உரிமை உண்மைநிலையை மறைக்காது. மேலும் சமணம் பாரதமண்ணில் தோன்றிய சமயம். அதில் காணப்படும் சில தீவிரத்தன்மைகளைத் தவிர பிறகோட்பாடுகள் பாரதப் பண்பாட்டின் பரப்பில் அடங்குவனவே.

  9. அன்பர் களிமிகு கணபதி அவ்ர்கள் தெரிவித்துள்ளபடி சிலப்பதிகாரம் வைதிக , சைவ, சமண, பவுத்த மதங்களுக்குள் தீவிர வரையறுத்த எல்லைகள் தோன்றுவதற்கு முன் படைக்கப்பட்ட காப்பியம். எனவே தொன்றுதொட்டு இந்தமண்ணில் வழங்கிவந்த கொள்கைகள் இதில் பேசப்பட்டன. கோவலன் தீவிர சமணனாக இருந்திருந்தால் , இளங்கோவடிகள் தீவிரசமணராக இருந்திருந்தால் எட்டெழுத்து மந்திரத்தையும் ஐந்தெழுத்து மந்திரத்தையும் பாய்கலைப்பாவை மந்திரத்தையும் இத்துணை உயர்த்துக் கூறியிருக்க மாட்டார். கோவலனின் நண்பர்கள் வேதங்கற்ற மறையவர்கள். அதே போன்று கண்ணகியின் தோழி தேவந்தி பார்ப்பனி. மதுரை எரிந்தபின் கண்ணகி சென்று தங்கிய இடம் வெள்ளியம்பலம். தீவிர சமணர்கள் கொலைத் தொழில் நிகழும் இடத்திற்குச் செல்லமாட்டார்கள். ஆனால் கோவலனும் கண்ணகியும் ஐயை கோட்டத்தில் சென்று தங்குகின்றனர். சமணர்களுக்குத் தெய்வக்கொள்கை உண்டா எனத் தெரியவில்லை.என்னுடைய கட்டுரை சிலப்பதிகாரம் தோன்றிய காலத்தில் வினையைப் பற்றித் தமிழர்கள் என்னகருத்தினைக் கொண்டிருந்தனர், அக்கருத்துக்கள் பிற்காலத்தில் சைவசித்தாந்தம் உருவானபோது எப்படி விரிவடைந்தது, வினைபற்றிய சிந்தனை தமிழர்களுடையது என்பதைத் தெரிவிப்பதுதான்.

  10. சிலப்பதிகாரத்தில், சனாதன தருமத்தின் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பல உள்ளன. எனக்குத் தெரிந்தவற்றுள் சில –

    (௧) காடுகாண் காதையில் கோவலன்-கண்ணகி இருவர் மாங்காட்டு மறையர் (அந்தணர்) ஒருவரை சந்தித்து அவரைப் பற்றி விசாரிக்க, அதற்கு அவர் ‘திருவரங்கத்தில் இரண்டாற்று நடுவிலுள்ள தீவில் லட்சுமி பிராட்டியை மார்பில் தரித்து கிடந்த கோலத்திலும், திருப்பதியில் சங்காழி ஏந்தி, பல வித திவ்ய அலங்காரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் திருமாலைக் காண விழைந்து, இந்த மாநிலத்தை அடைந்தேன்’ என்று கூறுமாறு எழுதியுள்ளார் இளங்கோவடிகள் (மதுரைக் காண்டம், காடுகாண் காதை, வரிகள்: 35-55)

    “நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
    பால்விரிந் தகலாதுபடிந்தது போல
    ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
    பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
    விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
    திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்

    வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
    ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
    இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
    மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போலப்
    பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையி னேந்தி

    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
    பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
    என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
    வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்
    தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
    கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின் ”

    தைத்திரிய உபநிஷத்தின் இறுதியில் படிக்கப்படும் நாராயண சூக்தம் திருமாலை “நீல மழைமேகத்தின் நடுவில் தங்கநிற மின்னற் கோடி போன்ற திருவுருவை உடையவன்” (தைத்திரீய ஆரண்யகம் X.xi.12) என்று ஒதிற்று. சமண மதத்தவராக இருந்த போதிலும், இளங்கோ இவ்வுபநிஷத் வாக்கியத்தையே, “மின்னுக் கோடி.. ” என்ற மேற்கண்ட வரிகளில் தமிழ்ப்படுத்தி காட்டுகிறார்.

    (௨) இதையும் தவிர, ‘ஆய்ச்சியர் குரவை’ என்னும் பகுதியில் கண்ணன் பற்றிய பரம பிரசித்தமான பல புராண நிகழ்வுகளும், அவதாரப் பெருமையும் பல உண்டு.

  11. நன்றி! அருமையான கட்டுரை! தமிழர்கள் தங்களிடம் உள்ள இத்தகைய சொத்துக்களை இழந்து கொண்டு வருவது போலத் தெரிகிறது! இதைத் தவிர்க்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்!

  12. எனது சந்தேகத்தை தீர்க்க இங்கே பதில் அளித்த அனைவருக்கும் நன்றி. நல்ல தகவல்கள்.

    கர்மா என்பதில் சமணமும், புத்தமும் கூட நம்பிக்கை வைக்கிறது இல்லையா?
    ஆனால் இந்த நம்பிக்கையின் அடிப்படைகளில் வித்தியாசம் இருக்கிறது.
    சிலப்பதிகாரத்தில் கையாளப் பட்டு இருக்கும் இந்த கர்ம வினைக்கும் சமணத்தின் நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். நான் தெரிந்து கொண்ட வரை சமணம் கர்மா என்பதை ஒரு புறப் பொருள் உடலோடு கலந்து விடுகிறது. ஆன்மா தன் நற் செயல்களின் மூலம் கர்மாவில் இருந்து இந்த பிறப்பிலோ, அல்லது தொடரும் பிறப்புகளிலோ விடுபட்டு முக்தி அடைகிறது.
    இந்த வகையில் பார்த்தால் சிலப்பதிகாரம் சொல்லும் கருத்து வேறுபடுகிறது.

    எனக்கு இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.
    இந்த பதிவின் மையக் கருத்தாக இது இருப்பதாலேயே இந்தக் கேள்வியை எழுப்பினேன்

  13. களிமிகு கணபதி அவர்கள் கேட்ட ஆதாரங்கள் ,அய்யா ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள் முன்வைத்த கருத்துகள் இளங்கோவடிகள் சமயம் எனும் புத்தகமாக அறுபத்து ஏழு ஆண்டு களுக்கு முன்பே வெளிடபடுள்ளது அதற்க்கு அறிஞ்சர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் பாராட்டி கட்டுரையும் வெளிட்டுள்ளார் …அந்த புத்தகத்தில் மயிலை சீனி .வேங்கடசாமி போன்றவர்களும் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன…..தங்கள் கட்டுரையை பற்றி நான் விமர்சிக்க வில்லை தாங்கள் பின்னுட்டத்தில் குறிபிட்டுள்ள சிலபத்திகாரம் சமணநூல் என்பது பிழை என்ற வாக்கியம் மட்டும் தான் நான் மாற்ற கோருவது…..

  14. திருக்குறள் கிறித்தவ நூல், இந்தியாவே தோமாசிய கிறித்தவ நாடு என்று சமர்க்கிப்பட்ட நூலில் கூட நம் பெருந்தலைகள் உரை எழுதி ஏகபோகமாக ஆதரவு காட்டி இருக்காங்க.
    அப்போ அதை எல்லாமும் அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா ?

  15. virutcham அவர்கள் கேட்டுள்ள வினை சமந்தமான அணைத்து விளக்கங்களும் மற்றும் எவ்வாறு ஜைன சமய கருத்துகளை நுட்பமாக அழுத்தமாக இளங்கோவடிகள் பயன் படுத்தி உள்ளார் என்பதை இளங்கோவடிகள் சமயம் என்ற புத்தகத்தில் விளக்கமாக எடுத்துகாட்டுகளுடன் உள்ளது …..

  16. இங்கே ஜால்ராக்களுக்கு மட்டுமே இடம்

  17. அய்யா பாபு நீங்கள் சொல்லும் ஜால்ராவுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை .நமது தேசத்தில் சைவம் வைணவம் என்ற பாகுபாடெல்லாம் ஹிந்து மக்களிடத்தில் கிடையாது .ஹரியாகட்டும் ஹரனாகட்டும் என்றுமே ஒன்றுதான் .ஸ்ரீ ராமபிரான் இலங்கேஸ்வரனை வென்று வந்ததும் தன் கையால் சிவலிங்கம் செய்து வணங்கியது ஒன்றே சைவம் வைணவம் வேறுவேறு அல்ல எல்லாம் ஒன்றே என்பதை காட்டவில்லையா?
    மேற்காண் விவாதமே நமக்கு ஒரு அருமையான கட்டுரையாக விரிகிறதே.இது போல் பயனுள்ள கடிதங்களை நிறைய வெளியிடுங்கள் .
    மிக்க நன்றி.பூலாம்பட்டி க.ஈஸ்வரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *