அருணையின் கருணை

திரிசூலத்தில் அர்த்தநாரீஸ்வரர்: சோழர் கால பஞ்சலோக சிலை

சலனே ஆயினும் அச்சவை தன்னில்
அசலையாம் அம்மை எதிர் ஆடும் – அசல
உருவிலச் சக்தி ஒடுங்கிட ஓங்கும்
அருணாசலம் என்றறி

– அருணாசல நவமணி மாலை

பொருள்: இயல்பில் பரமேஸ்வரனும் அவர் சக்தி அம்பிகையும் சலனமற்றவர்களே. ஆனால் தில்லையாகிய சிதம்பரத்தில் சலனமற்ற அம்பிகை (சக்தி) முன் ஈசன் நடராஜனாக நடனம் செய்கிறான். திருவண்ணாமலையிலோ பரமேஸ்வரன் சலனமற்று அருணகிரி வடிவில் இருக்க, சக்தியாகிய அம்பிகை ஈசனுள் ஒடுங்கி ஒன்றுபட்டு செயலற்று இருப்பதால், ஈசன் அருணையில் ஞான சொரூபியாய் ஒளியுடன் ஓங்கி நிற்கின்றான்.

விளக்கம்: நம் உள்ளமாகிய இதய குகையிலிருந்து வெளிப்படும் மனம், புத்தி, பிராணன் இவ்வனைத்தின் செயல்பாடுகளுக்கும் முளை வித்தாக உள்ள ஆணவம் (அகந்தை) இவை அனைத்தும் சேர்த்து ‘மனம்’ என்று சொல்லப்படும் சக்தி செயலற்று ஒடுங்கி இதயத்தில் ஒன்றுபட்டால் நம்முள் ஈசன் பரம ஞான உணர்வு ஒளியாக மேலோங்கி நிற்கும்.

*********

யோசனை மூன்றாம் இத்தல வாசர்க்கு
ஆசறு தீக்கையாதி இன்றியும் என்
பாசமில் சாயுச்சியம் பயக்கும்மே
ஈசனாம் எந்தன் ஆணையினானே

– பகவான் ரமணரின் மொழிபெயர்ப்பு (மூலம்: ஸ்கந்த புராணம் – அருணாச்சல மகாத்மியம்)

பொருள்: ஆணவமாகிய அகந்தையை ஒழிப்பதற்கு எந்த வித பாரம்பரிய முறைப்படியான மந்திர உபதேசங்கள் பெறாவிடினும், அருணாசலத்தை மையமாகக் கொண்ட சுமார் நாற்பத்தைந்து கி.மீ.-க்குள் உள்ள பிரதேசத்தில் தங்கி வசிப்பவர்கள், சர்வேஸ்வரனாகிய என்னுடைய கட்டளையினால் சிவ சாயுச்சிய பதவியை நிச்சயம் அடைவார்கள்.

விளக்கம்: நம் உள்ளத்தில் அறியாமை நீங்கி ஞான ஒளி வீசிட நம்மில் தடையாய் இருப்பது ஆணவ மலம். இம்மலம் முற்றிலும் அறவே நீங்கிட, ஞானமடைந்த ஆச்சார்யரிடமிருந்து நம் பக்குவத்திற்கேற்ப மந்திர உபதேசம், நயன தீக்கை முதலான வழிகளை முறைப்படி பெறுவது பொதுவில் தேவை. ஆனால் அருணையிலே வாழ்கின்ற ஆன்மாக்கள், மேலே சொல்லப்பட்ட உபதேசங்கள் ஏதுமின்றி அண்ணாமலையாரின்பால் அன்புடன் அவரை உள்ளத்தில் துதித்தாலோ அல்லது கிரி வலம் வந்தாலோ, நிலையான முக்தியை ஈசனின் அருளாணையால் நிச்சயமாக அடைவார்கள்.

*********

கிரி வலம் வரும் முறை:

அண்ணாமலையாகத் தோற்றமளிக்கும் பரமேஸ்வரனுள் சக்தி ஒடுங்கிய நிலையில் சுயம் பிரகாசத்துடன் மோனத்தில் தட்சிணா மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறது. அவருடைய பூரண அருளால் நாம் நம்மிலுள்ள அறியாமையால் வந்த அகந்தையிலிருந்தும், மற்றும் பாச உணர்ச்சியுடைய தேவையற்ற மனச் சலிப்புகளினின்றும் விடுபட வேண்டும். அதற்குத் தூல விடயங்களின் மேல் விருப்பு, வெறுப்பு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உள்ளத்தில் அமைதியுடன் “ஓம் அருணாச்சல சிவாய நமஹ” என்ற மந்திரத்தையோ அல்லது அவரவருக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்தையோ உள்ளத்தில் ஜபித்துச் செல்லவேண்டும். அப்படிச் செல்லும்போது, வழியில் கண்டதையெல்லாம் உண்ணாமல் பசிக்காக லேசான சிற்றுண்டியுடன் நீர் அல்லது இளநீர் உண்ணலாம். பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால், நாம் எதையும் கேளாமலேயே நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.

கிரி வலத்தின் பயன்:

girivalamபண்புடன் இப்படி கிரி வலம் செய்தால் மனம் ஒருமைப் பட்டு படிப்படியாக ஆழ்ந்த நிலையை நாளடைவில் அடையும். இப்படிப்பட்ட ஆழ்ந்த அமைதியின் பயனாய் சித்தம் சுத்தி பெற்று சாதனையில் முன்னேற்றம் காண முடியும். இதற்கு மாறாக நம் இச்சைபோல் ஏதோதோ கேட்டு, அவைகளை நாம் அடைந்தபின் அதனால் வரும் இன்னல்களுக்கு ஆளாகாமல் இருக்க, மிக எச்சரிக்கையுடன் இறைவனிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழ அவன் அருளை நாட வேண்டும். இதனால் நாம் தேவையற்றதில் சிக்கி அதனின்று மீளும் முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து அமைதி பெறலாம். இந்த மன நிறைவுடன் கூடிய மன அமைதியே நாம் அண்ணாமலையாரிடமிருந்து பெறக்கூடிய குறையாத நிலைமாறா இன்பமாகும். இதைவிட அடைவதற்கு பெரியதாக வேறொன்றும் உள்ளதோ? ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய அருணையை வலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்.

பார்வதி தேவி தான் செய்த ஒரு தவறால் தவமிருந்து, கௌதம மகரிஷியின் வழி காட்டுதலால் பின் அருணையை அடைந்து கிரி வலம் செய்து பின் சிவத்தோடு கலந்து அர்த்தநாரியாக காட்சி தரும் தினமே அண்ணாமலைத் தீபத் திருநாளாகும். இந்த சிவ-சக்தி ஐக்கிய சொரூபத்தைக் காட்டும் வகையில்தான் அண்ணாமலை தீப நாள் அன்று, கோவிலுக்குள் ஒரு வருடம் முழுதும் தரிசனம் தராமலேயே வைத்திருக்கப் பட்டிருக்கும் அர்த்தநாரீஸ்வரர், அன்று மாலை ஆறு மணிக்குத்தான் பிரகாரத்தில் எழுந்தருளுவார். உடனேயே கோவில் பிரகாரத்திலும், மலை உச்சியிலும் தீபத்தை ஏற்றுவார்கள். நொடிப் பொழுதில் அர்த்தநாரீஸ்வரரும் கோயிலுக்குள் சென்று விடுவார். அன்று ஒரு நாள் அச்சமயம் அவர் தரிசனம் கொடுப்பதோடு சரி; அதன் பிறகு அடுத்த தீபத் திருநாளன்றுதான்.

*********

இத்தனுவே நானாம் எனுமதியை நீத்தப்
புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்
அத்துவிதமாம் மெய் அகச் சுடர் காண்கை பூ
மத்திஎனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே

– பகவான் ரமணர் எழுதிய “தீப தர்சன தத்துவம்”

பொருள்: பூமியின் இதயமாகக் கூறப்படும் அருணாச்சலத்தின் சிகரத்தில் விளங்கும் ஜோதி ஒளியின் உண்மையானது, அழியக் கூடிய இந்த ஜட உடலே நான் ஆவேன் என்று நினைக்கும் (தேகாத்ம புத்தி) மனதை நீக்கி, அந்த மனதை உள் முகமாக்கி இதயத்தில் நிலையாக ஒன்றி, உண்முக திருஷ்டியால் இரண்டற்ற ஏக சக்தியாகிய உள் ஒளியின் உண்மை சொரூபத்தை உணர்வதே.

அதுதான் சிவ-சக்தியாகிய ஒளிமயமாவதாகும். பௌதிக அறிவியல்படியும் பொருள் சக்தியாக மாறும்போது ஒளி வெளிப்படுகிறது; மற்றும், ஒளி இருநிலைத் தன்மையோடு நுண்பொருளாகவும் உள்ளது, சக்தி அலையாகவும் உள்ளது என்கிறார்கள். அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளதால், பிண்டமாகிய ஒவ்வொருவர் உள்ளும் உள்ள ஒளியை அவரவரே உணர இயலும். அத்தகைய முயற்சியில் ஒன்றே கிரி வலம் ஆகும்.

2 Replies to “அருணையின் கருணை”

 1. நன்றி! அருமையான கட்டுரை! எந்த திருத்தலத்தில் இருந்தாலும் அதன் பெருமையை உணர்ந்து, நடந்தால் தான் முக்தி! திருவண்ணாமலையின் பெருமைகள் அளவிடற்கரியதே!

 2. அன்புள்ள ஐயா,

  அருணாச்சலத்தின் பெருமையை அளவிட முடியாது. நான் சென்ற 12
  வருழங்கலாஹா அருணாசலம் சென்று வருகிறேன். சென்ற ௩ வருழங்கலஹா வருடம் ௪ முறை சென்று வருகிறேன். பகவான்
  ரமணர் போல் ஆத்மா சாந்தி தரும் குரு ஒருவரும் இல்லை. அவருடைய
  பாடல்கள் அனைத்தையும் தினம் கொஞ்சம் படித்து வருகிறேன். உங்கள்
  அருனையின் கருணை கட்டுரை மிகவும் அற்புதமாக உள்ளது. நன்றி.

  சுப்ரமணியன். இரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *