பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1
(தொடர்ச்சி…)
டாக்டர் ப்ரான் வைஸ் என்ற அந்த மன நல மருத்துவர் எழுதியுள்ளதைப் பார்த்தால் அந்த நோயாளிக்கு நேர்ந்த சுமார் எண்பத்திரண்டு பிறவிகளில், மருத்துவரிடம் வந்த நோயின் மூலத்தை அறிவதற்காக நடந்த சிகிச்சை முடியும் வரை, நோயாளி தனது பதினைந்து பிறவிகளைப் பற்றி ஓரளவு விவரிக்கிறார். ஆணாகப் பிறக்கிறார், பெண்ணாகப் பிறக்கிறார். வெவ்வேறு நாடுகளிலும், ஆதி காலத்திலிருந்து இன்று வரையிலும் பிறந்து வளர்கிறார். போர்க்களங்கள் பல காண்கிறார். இயற்கை மரணம், செயற்கை மரணம் எல்லாம் அடைகிறார். ஒரு பிறவியில் தான் பிறக்கும் சில நிமிடங்கள் முன்பாக அந்த இடத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கீழ்க்கண்டபடி கூறுகிறார். தனது தாயின் முகத்தைப் பற்றியும் அவள் தனது வரவால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதையும் சொல்கிறார். அது தவிர தன் தாயைச் சுற்றிக் கூடியிருப்போர் மன நிலையையும் விவரிக்கிறார்.
பல சமயம் நிகழ்வுகள் நடந்த ஆண்டுகளையும், சரித்திர நிகழ்ச்சிகளையும் கூறுகிறார். திடீரென அவரே அறியாத மொழிகளிலும் பேசுகிறார். பெரும்பாலும் ஏழைக் குடும்பச் சூழ்நிலையில் பிறக்கிறார். அதுதான் அவருக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்ததோ என ஆசிரியரும் நினைக்கிறார். முற்பிறவியில் சந்தித்த சில நபர்களை இப்பிறவியில் எந்த நண்பர்களாக, உறவினர்களாக உள்ளார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். அதாவது, ஆழ்நிலையிலும் அவருக்கு தனது இப்பிறவி உணர்வு போய்விடவில்லை என்று மருத்துவர் கூறுகிறார்.
சிகிச்சை நடக்கும் போது ஆழ்நிலையில் அவர் கூறுவது பற்றி அவரது விழிப்பு நிலையில் மருத்துவர் அவரிடமே விளக்கும்போது பல விவரங்கள் அவருக்கே ஒத்துப் போகாதவாறு இருக்குமாம். கடைசி வரை அவருக்கு மறு பிறவிகளில் அவ்வளவாக நம்பிக்கையும் வரவில்லையாம். ஒரு வேளை அப்படியும் இருக்கலாம் என்ற மனோநிலையில்தான் இருந்தார் என மருத்துவர் குறிப்பிடுகிறார். அதாவது, ஆழ்நிலை அனுபவங்களை அந்நோயாளி தனது சிகிச்சைக்காக எடுத்துக் கொண்டாரே தவிர, அவைகளால் அவர் தனது விழிப்பு நிலை உணர்வுகளை மாற்றிக்கொள்ள இயலாதவாறு அவரது நம்பிக்கை அமைந்தன என்றும் கூறலாம். ஆனாலும் அவரது மன உளைச்சலின் காரணத்தை தனது முற்பிறவிகளில் செய்த வினைப்பயன் என்பதை அவர் உணர்ந்தார்.
அப்படி உணர்ந்த அவருக்கு தான் வெறும் உடல் மட்டும் அல்ல, மனத்தளவில் தானே இயற்றிய, மற்றும் தனக்கு நடந்த கடந்த காலச் செயல்கள் தன்னை வெகுவாகப் பாதித்திருந்தன என்ற உண்மையை உணர்கிறார். அவை மனத்தளவில் மட்டும்தான், அது தெரிந்து திருந்திவிட்டால் அதற்கும் தனது தற்போதைய நிலைக்கும் வேறு சம்பந்தம் ஏதுமில்லை என்றும் உணர்ந்து, அவற்றின் பாதிப்பிலிருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொண்டார்.
இவையெல்லாம் படித்த எனக்கு, இந்தியப் பண்பாட்டில் திளைத்த நமது முன்னோர்கள் பிறவிகள் பற்றி எவ்வளவு முக்கியமான விஷயங்களை நமக்கு அரிய பொக்கிஷங்களாகத் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற பெருமிதம் வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும், செய்யும் தொழிலே தெய்வம், தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் சொன்னார்களே, நாம் அவை அனைத்தையும் சரியாக உணர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தன.
நான் லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய சில வாரங்களிலேயே, சென்னை இந்தியன் எக்ஸ்பிரஸ் தினசரி ஒன்றில் (29-6-2009) வந்த செய்தி என்னைக் கவர்ந்து இழுத்தது. சென்னைக்கு வந்த வால்டர் செம்கிவ் (Walter Semkiw) என்ற ஒரு அமெரிக்கர், தான் முற்பிறவி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததாகத் தெரிந்து கொண்டதாகவும், மேலும் செய்த ஆராய்ச்சியின் பயனாய் எழுதப்பட்ட நூல் ஒன்றில் அமெரிக்கா அல்லாது இந்தியாவில் உள்ள சில நபர்களைப் பற்றியும் எழுதியிருப்பதாக வந்த செய்திதான் அது.
தான் அந்த நூலை எழுதியதன் காரணமாக அவர் கூறுவது:
“இம்சை, பயங்கரவாதம் எல்லாம் அறவே ஒழியவேண்டும்; நாம் அனைவரும் ஒன்றே என்பதை உணரக்கூடிய கலாசாரத்தை உருவாக்க வேண்டும்; நாம் அனைவரும் நம்மை வளர்த்து உருவாக்கியுள்ள இந்த பூமிக்குத்தான் இனம், மொழி, நிறம், ஜாதி, வகுப்பு, நாடு என்ற பாகுபாடுகள் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு பிரிவுகளில் பிறந்து வருகிறோம் என்பதை உணரவேண்டும். ஆதலால் நம்மிடையே எந்தச் சச்சரவும் இருக்கலாகாது.”
இவை அனைத்துமே உயரிய நோக்கங்கள்தான். அவைகளைப் புரிந்து கொள்ள மறுக்கும் அல்லது தடுக்கும் மனிதர்களையும், இயக்கங்களையும் நாம் விழிப்புடன் நோக்க வேண்டும்.
அந்த ஆய்வு நூலில் அவர் எழுதியுள்ளதாகச் சொல்வதைப் பார்த்தால், ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கனிடம் போர்த்துறைச் செயலாளராக இருந்த எட்வின் ஸ்டேன்டன் என்பவர்தான் பிற்காலத்தில் இந்திரா காந்தியாகப் பிறந்ததாகவும், லிங்கனைச் சுட்டுக் கொன்ற ஜான் பூத் என்பவனின் சகோதரரான எட்வின் பூத் என்பவர் அந்தக் காலத்தைய பிரபலமான ஷேக்ஸ்பியர் நடிகர், அவரே இப்பிறவியில் அமிதாப் பச்சனாகவும், எட்வினின் மனைவியான மேரி மெக் விக்கெர்ஸ் என்பவர்தான் தற்சமயம் நடிகை ஜெயா பச்சனாகப் பிறந்துள்ளதாகவும், அந்த ஜான் பூத்தைக் கல்யாணம் செய்வதாக நிச்சயித்திருந்த லூசி ஹேல் என்பவர்தான் இப்பிறவியில் சோனியா காந்தியாக உள்ளதாகவும், அந்த லூசியின் தந்தையான ஜான் ஹேல் என்பவர்தான் இப்பிறவியில் ராகுல் காந்தியாக இருப்பதாகவும், நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முற்பிறவியில் திப்பு சுல்தானாகவும் இருந்ததாக அவர் சொல்வதைப் படித்தபோது ஏதோ நம் காதில் பூ சுற்றுவதுபோல்தான் ஒரு சமயம் தோன்றியது. ஆனாலும் யோசித்துப் பார்த்தால் ராஜீவ் காந்தி அத்தகைய துர்மரணத்தைத் தழுவுவதற்கு நாம் அறிந்தவரை ஒரு வேளை சீக்கியர் சம்பந்தப்பட்ட கலகம் என்பது தவிர வேறு வலுவான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. “ஒரு வேளை அவரே முற்பிறவியில் லிங்கனின் கொலையுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தால்….?” என்றுதான் எனக்குத் தோன்றிற்று. முற்பிறவிகள் பற்றி மேலும் விவரங்கள் தெரிய வரும்போது பார்க்கலாம் என்று அப்போதைக்கு என் எண்ண அலைகளைத் தொடரவில்லை..
அதைத் தொடர்ந்து, ஒரு மாதம் கழிந்தபின் அமெரிக்கா சென்ற எனக்கு டாக்டர் ப்ரான் வைஸ் அவர்களது மற்றைய நூல்களையும் பற்றித் தெரிய வந்தது. ஒரு நூல் நிலையத்திற்குச் சென்ற நான் வரிசையாக அடுக்கி வைத்திருந்த அவரது நூல்களைப் பார்த்து, அனைத்தையும் வாங்கி வந்து படித்து முடித்தேன். முதல் நூலில் ஒருவரின் அனுபவங்களைப் பற்றி எழுதியிருந்த அவர், அடுத்த நூலில் பலரது அனுபவங்களை விவரித்திருந்தார். மூன்றாவது நூலில் வரப் போகும் பிறவியின் சாத்தியக் கூறுகளை தனது நோயாளிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்து, அவர்களையே சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வைத்த சம்பவங்களை விவரிக்கிறார். நான்காவது நூலில் நோயாளிகளின் ஆழ்நிலையில் அவர்களின் கூற்றை வைத்துக்கொண்டு, அவர்களையே கேள்வி கேட்டு இதுவரை அவரே அறிந்திராத, புதியதான சிலவற்றை மருத்துவர் அறிகிறார். அதாவது, நோயாளிகள் தானே சில செய்திகள் சொல்வதும் அல்லாது, அவர்களை மேலும் சில சொல்ல வைக்க அந்நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் முகமாக முன்அறிமுகம் ஏதுமில்லாத குருமார்கள் அவ்வப்போது தோன்றுவார்கள் என்பதே அவர் புதியதாக அறிந்தது. அவ்வப்போது நோயாளிகள் அவர்களைக் கேட்டுச் சொல்வதில் வைத்துக்கொண்டும், நினைவிலே முற்றும் அறியாத மொழியை நோயாளிகள் தங்கள் ஆழ்நிலை மயக்கத்தில் மட்டும் பேசுவதை வைத்துக்கொண்டும், மருத்துவர் இதனை அறிந்தார். அவர்கள் அப்படி வருவதும், குருமார்கள் இஷ்டப்படியே நடக்கும், இவர்களாக அவர்களை வரவழைக்க முடியவில்லை என்பதையும் அவர் அறிந்துகொண்டார்.
நமக்கு உதவியாக இருக்கும் என்றால், குருமார்கள் தானாகவே வந்து நாம் அறிய வேண்டிய செய்திகளைச் சொல்வார்கள் என்பதுதான் நாம் இதில் காணவேண்டிய பொருள் என்று நான் நினைக்கிறேன். இவை அனைத்தையும் நூல்கள் மூலமாக நான் அறிந்தபோது, எனக்கு எனது பல அனுபவங்களின் பொருளும் ஓரளவுக்கு நன்கு விளங்கின.
எழுதியவர் மருத்துவர் என்பதாலும், அவரிடம் ஏதோ ஒரு மன உளைச்சல் பிரச்சினையினால் வந்தவர்கள் என்பதால் அவர்களை நோயாளிகள் என்றும் குறிப்பிட்டேன். நோயாளிகள்தான், ஆனால் அவர்கள் என்னிடம் பெற்றதைவிட நான் அவர்களது அனுபவங்கள் மூலமாக அவர்களிடம் நிறைய அறிந்துகொண்டேன் என்கிறார் அந்த மருத்துவர்-ஆசிரியர். அவர்கள் அனைவருக்கும் அவர் psycho therapy மூலம் சிகிச்சை அளிக்கத்தான் முன்வந்தார். ஆனால் அவரோ தான் அதுவரை கேட்டறியாத, கண்டறியாத பொக்கிஷங்களை அடைந்ததாகச் சொல்கிறார். அந்த அனுபவங்களை எல்லாம் வெளி உலகிற்குத் தெரிவிப்பதற்கு அவர் பல வருடங்கள் எடுத்துக்கொண்டார். தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, சொல்வார்களோ, இதனால் தான் தொழில் ரீதியாக, மருத்துவராகப் பணிபுரிவதில் ஏதேனும் பங்கம் வருமோ என்றெல்லாம் அவர் மனதில் ஏற்பட்ட கலக்கத்தால் வந்த தயக்கம் ஒரு காரணம். வந்து தங்களைச் சரி செய்துகொண்டு திரும்பிய நோயாளிகளுக்கு ஏதேனும் ஊறு நேரலாமோ என்னும் தயக்கமும் ஒரு காரணம். ஒருவர், ஒரு வேளை, ஓர் அனுபவம் என்றில்லாமல் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் இந்த மாதிரி நேர்கிறதா என்று சோதித்துப் பார்க்கும் ஓர் அறிவியல் மனநிலையே, வெளி உலகத்திற்கு தெரிவிக்கும் அவரது தயக்கத்திற்கு எல்லாவற்றிலும் முக்கியமான காரணம் என அவர் தனது நூல்களில் சொல்கிறார்.
அமெரிக்காவில் பிளாரிடா மாநிலத்தில் தனிப்பட்ட அளவிலும், பொதுவாகவும் அளித்துக் கொண்டிருந்த மருத்துவ சேவையை அவர் நிறுத்திக் கொண்டு விட்டார். தற்சமயம் பல கருத்தரங்கங்களில் பங்கு கொண்டு தனது சேவையை இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.
நம்மிடையே அண்மைக் காலம்வரை வாழ்ந்திருந்த ஆங்கில எழுத்தாளர் R.K. நாராயண் அவர்களுக்கே இறந்த தன் மனைவியுடன் பேசும் அனுபவம் இருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். அதை ஒட்டியே அவர் தனது “English Teacher” ஆங்கில நவீனத்தை எழுதியதாகவும் சொல்வர். அது போல பல நம்பகத்தன்மை உள்ளவர்களுக்கும் அனுபவங்கள் இருந்தும், வேறு பல ஏமாற்றுக்காரர்களின் கூத்தால் பிறவித் தொடர்வு பற்றி பலருக்கும் மிக்க சந்தேகங்கள் வருவது புரிந்துகொள்ளக் கூடியதே.
ஒருவர் எப்படிப் பிறந்தாலும், தனது அப்போதைய பிறப்பில் தனது கர்மங்களை எல்லாம் கழிக்கும் முகமாகப் பணியாற்றவேண்டும். செய்யும் செயல்கள் மேலும் கர்மத்தைக் கூட்டாதவாறு அமையவும் வேண்டும். அப்படியும் இப்பிறவியில் கர்மங்கள் எல்லாம் கழியாது போனாலோ, நம்மையும் அறியாது கூட்டப்பட்டாலோ என்ன செய்வது என்பது எல்லோருக்கும் வரும் ஐயங்களே. அதற்கு நமது இந்து மத வழியில் சொல்லப்பட்ட பல கருத்துக்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒன்றைச் சொல்கிறேன். மற்றவற்றை மறுமொழியில் காண்பீர்கள் என நினைக்கிறேன்.
ஸ்ரீ ரமண மகரிஷி உள்ளது நாற்பது அனுபந்த வெண்பாவில் கூறுவார்:
சஞ்சித ஆகாமியங்கள் சாராவாம் ஞானிக்கு ஊழ்
விஞ்சுமெனல் வேற்றார் கேள்விக்கு விளம்பும் சொல்லாம்
பர்த்தா போய் கைம்மையுறாப் பத்தினி எஞ்சாதது போல்
கர்த்தா போம் மூவினையும் காண்
இச்செய்யுளின் பொருளைப் பார்ப்பதற்கு முன் நாம் சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்வோம். ஒருவன் பிறப்பது அவன் சில கர்ம விளைவுகளை அனுபவித்துத் தீர்க்கவே என்றால், இப்பிறவியில் தொலைக்க முடியாத பழைய கர்ம மூட்டை ஒன்று, வரும்பிறவிகளுக்காக என்று இருக்கலாம். அது தவிர இப்பிறவியில் புதிதாகச் சேரும் கர்ம வினைகளும் நம்மை அடுத்த பிறவியில் துரத்தலாம் என்றும் கொள்ள முடியும். இவைகளை முறையே ஊழ் அல்லது பிராப்தம் என்றும், சஞ்சிதம் என்றும், ஆகாமியம் என்றும் மூன்று வகையாகக் கூறுவர். ஞானியும் மற்றவர்களைப் போலவே பிறந்திருப்பதால், சிலர் ஞானிக்கும் சஞ்சிதம், ஆகாமியம் இரண்டும் இல்லாவிட்டாலும், இப்பிறவியில் அனுபவித்துத் தொலைக்க ஊழ் உண்டு என்பார்கள். அவர்கள் பிறந்திருக்கும் உடலையே பிரதானமாகக் காண்பதால், அப்படிக் கருதுகின்றார்கள். ஞானிக்கோ தான் உடல் இல்லை என்று நன்கு உணர்வதால், அவர்கள் கூற்று எவ்வாறு சரியாகும்? தான் கர்மம் செய்கிறேன் என்று நினைப்பவர்களுக்கு அது பொருந்தலாம், ஞானிக்கு எப்படிப் பொருந்தும் என்று ரமணர் கேட்கிறார். அதற்கு அவர் கீழே காணும் உதாரணத்தைக் கொடுக்கிறார். பர்த்தா எனப்படும் கணவன் ஒருவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தால் அவன் இறக்கும் போது மூன்று மனைவிகளுமே கைம்மை அடையவில்லை, ஓரிருவர்தான் கைம்மை அடைகின்றனர் என்று கூற முடியுமோ? அதே போல “தான் கர்த்தா” என்று இல்லாதிருப்போனுக்கு கர்மம் மூன்றும் ஒட்டாது என்கின்றார் ரமணர்.
ஆக நமக்கு வேண்டியதெல்லாம் பிறவிகள் எத்தனை வந்தன, போயின என்பதும் இல்லை; கர்மம் எஞ்சியுள்ளதா அல்லது தீர்ந்து விட்டதா என்பதுவும் இல்லை. செய்பவன் அவன், ஆட்டுபவன் அவன் என்று சதா சர்வகாலமும் அவனையே சிந்தித்து, அவனன்றி வேறு எதுவும் இல்லை, நான் கர்த்தா இல்லை என்பதை உணர்வதே நாம் செய்ய வேண்டியது. ஆக செய்யும் தொழில் எதுவும் தெய்வம் என்று இருப்போரை அவனே தேடி வருவான். அதாவது நமக்கு வேண்டியதெல்லாம், மனதில் உறுதி, வாக்கினிலே இனிமை, நினவு நல்லது. அவ்வளவே. அப்படி இருந்தால் நமக்கு நெருங்கிய பொருள் கைப்படும். நமக்கு இறைவனை விட நெருங்கியவன் வேறு யார்?
(தொடரும்…)
மிக அருமையான,ஆச்சர்யமூட்டும் கட்டுரை.நம் இந்து மதத்தின் அதி முக்கியமான தத்துவமான மறுபிறவி(கர்மா பலன் ) தத்துவம் அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகும் என்பது தெளிவு.
மிக அற்புதமான கட்டுரை. திரு ராமன் அவர்களுக்கு எனது நன்றி. இது போல மேலும் பல சிறந்த கட்டுரைகள் இந்த தளத்தில் வந்து சிறப்புப் பெறட்டும்.
இக்கட்டுரை மிகச்சுவையாக உள்ளது. நமது சனாதன தர்மத்தின் மிக முக்ய கோட்பாடே ஆன்மா வேறு உடல் வேறு, ஆன்மா பல பிறவிகளை எடுக்கும் – அதாவது, தான் உடல்களில் தளையுறுகையில் நிகழும் வினைப் பயன் விளைவாக பல்வேறு உடல்களில் மீண்டும் மீண்டும் தளையுறும், என்பதே.
எனினும், ஒரு முக்கிய விஷயம் குறித்து இங்கு நாம் கவனிக்கவேண்டும். நாம் பெரிதும் போற்றும் பெரியோர்கள் தமது முற்பிறவி பற்றியோ வரப்போகும் பிறவி பற்றியோ மற்றோரிடம் சொல்லி அவர்களை பிரமிக்கச் செய்வதில்லை. அவை அவரவது பிரத்யேக அனுபவம் மட்டுமே.
இது ஏனெனில், சாதனைகள் ஏதும் புரிந்திராத பாமரமக்களை இத்தகைய விவரிப்புகள் திகைப்பில் ஆழ்த்தி, அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து அவர்களை திசை திருப்பிவிடும் சாத்யக்கூறு அதிகம் என்பதாலேயே.
இதனால்தான் கண்ணனும் கீதையில், ‘அர்ஜுனா! நீ முன் எப்போதும் பிறந்திராமல் இருந்தாய் என்பதே இல்லை, நீ இனி பிறக்க மாட்டாய் என்பதும் கிடையாது, என்பதை அறி. உனக்குப் பல ஜன்மங்கள் கழிந்தன, நான் அவற்றை அறிவேன், அனால் நீ உன் ஜன்மங்களை அறியமாட்டாய்’ என அழுத்தம் திருத்தமாகக் கூறினாலும் அவன் முன் பிறவிகளில் இன்னவாக இருந்தான் அல்லது இனி வரும் பிறவிகளில் இன்னவாக இருப்பான் என்பது பற்றிக் கூறுவதில்லை.
ஆம், பல புராணங்களில் இலைமறை காய் மறையாக முன் பிறவியில் இன்னார் இன்னவாக இருந்தார் அல்லது இன்னது இன்னவாக இருந்தது என விவரிக்கப் பட்டுள்ளது உண்மையே ஆனாலும், அவை குறிப்பிட்ட ஒரு விளக்கத்தை முன் வைக்கும் நோக்கத்தில் மட்டுமே. முற்பிறவிகளைப் பற்றிய அறிவை ஊட்டும் நோக்கத்தில் அல்ல. இதை மனத்தில் இருத்தியவாறே கட்டுரையை நாம் படிப்பது பயன் தரும் என்று எண்ணுகிறேன். இது பற்றி திரு ராமன் அவர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
நமது பழம் பெரும் நூல்கள் சொல்லாமல் சொல்வதை விரிவாக எடுத்துரைத்ததற்கு, திரு. ஸ்ரீனிவாச ராகவன் அவர்களுக்கு,நன்றி. அதையே வேறு விதமாக ஆனால் சுருக்கமாக, கட்டுரையில் கடைசி பத்தியில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:
“ஆக நமக்கு வேண்டியதெல்லாம் பிறவிகள் எத்தனை வந்தன, போயின என்பதும் இல்லை; கர்மம் எஞ்சியுள்ளதா அல்லது தீர்ந்து விட்டதா என்பதுவும் இல்லை. செய்பவன் அவன், ஆட்டுபவன் அவன் என்று சதா சர்வகாலமும் அவனையே சிந்தித்து,………….”
மேலும் இதைப் பற்றி ராமன் என்ன கூறுகிறான் என்பதைவிட, ரமணர் என்ன கூறுகிறார் என்பதை வரும் வாரம் காணலாம்.