இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

280406ஒவ்வொரு இந்துப் பண்டிகைக் காலங்களிலும் இந்துக் கடவுளர்களைக் கேலி செய்வது தொடர்கிறது. புராணச் செய்திகளின் உட்கருத்தை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக நுனிப்புல் மேய்ந்துவிட்டுத் தங்கள் அரைகுறை அறிவுக்கு எட்டியபடி திரித்துப் பேசியும், வேண்டுமென்றே கொச்சை மொழிகளால் இழிவு படுத்தியும் சில தனி நபர்களும், சில இயக்கங்களும் தமிழ்நாட்டில் எழுதியும் பேசியும்வரும் செயல் இன்று நேற்றல்ல கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திலும் தமிழ்நாட்டின் வேறு சில இடங்களிலும் இராமபிரான் படத்தை இழிவு படுத்தி நடந்துகொண்ட கேவலத்தையும் பார்த்திருக்கிறோம். அப்படி அவர்கள் செய்து வந்ததால் தமிழ்நாட்டில் கோயிலுக்குச் செல்லும் மக்களைத் தடுக்கவோ, எண்ணிக்கையை குறைக்கவோ அவர்களால் முடிந்ததா என்றால் இல்லை.

மாறாக இன்று விசேஷ தினங்களில் மக்கட்கூட்டம் ஆலயங்களில் நிறைந்து வழிகிறது. நாமும் பார்க்கிறோம்; அவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாலும்கூட இப்படி இவர்கள் நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதை நாம் சற்று யோசித்துப் பார்ப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

இந்த மதத்தை இழிவு படுத்தி, நம் கடவுளர்களைக் கேவலமாகப் பேசி, இந்து மக்கள் மனதில் தாங்கள் ஏதோ செய்யக்கூடாத தவறைச் செய்து வருகிறோமோ, நம் வழிபாட்டு முறைகள் குறை மலிந்தவைகளோ என்ற பிரமையை ஏற்படுத்தி, மக்கள் மனதை மாற்றி, மாற்று மதங்களுக்கு அனுப்பத் தூண்டில் இடுகிறார்களோ என்ற ஐயப்பாடும் ஏற்படுவது இயல்பு அல்லவா? அப்படியானால் இவர்கள் செய்யும் இந்தக் காரியத்தினால் இவர்களுக்கு என்ன பயன்? அதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

சிறுகதை மன்னன் திரு ஜெயகாந்தன் அவர்கள் கரூரில் நடந்த ஒரு கூட்டத்தில் “நானும் என் எழுத்தும்” என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு கருத்து மிக முக்கியமானது.

அவர் சொன்னார், “ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது என்பது அங்கு சென்று கோயிலின் கோபுரத்தில் அமைந்துள்ள சிற்பங்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புவது அல்ல. ஆலயத்தின் அமைப்பு மனித சரீரத்தை ஒத்தது. அதன் இதய ஸ்தானம் இறைவன் திருவுரு அமைந்துள்ள கருவறை. பலிபீடத்தில் நம் மும்மலங்களை பலியிட வேண்டும். கொடிமரம் இறைவனின் ராஜாங்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்த. அங்கு பல சுற்றுக்களைச் சுற்றியபின் மூலத்தானத்து இறை உருவைப் பார்த்து அதன் தத்துவங்களைப் புரிந்து கொண்டவனே தரிசனம் செய்தவனாவான். வெறுமனே கோயில் கோபுரத்து பொம்மைகளைப் பார்த்துவிட்டு இறைவனை தரிசித்தேன் என்பது கேலிக்குரியது” என்ற கருத்தில் பேசினார். அதுதான் உண்மை.

இன்று பலர் புராணங்களில் உள்ள சில கற்பனை உவமைகளையும், சுவைகூட்டுவதற்காக எழுதப்பட்ட சில கற்பனைகளையும், அப்படிக் கற்பனையாக எழுதும் விஷயங்களுக்குள் சில தத்துவங்கள் மறைபொருளாக விளக்கப்படுவதையும் புரிந்து கொள்ள சற்று ஆழ்ந்த அறிவும், ஞானமும், விருப்பு வெறுப்பற்ற ஈடுபாடும் தேவை. அது இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று தூக்கி எறிந்து பேசுவதும், கேலி, கிண்டல் செய்து பெருவாரியான மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதோ பண்பாடாகாது. ஆனால், அது அவர்களுக்குப் புரியவில்லை.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுப் பிறர் மனங்களைப் புண்படச் செய்தவர்களில் பலரும் அறியாமையில் வீழ்ந்து கிடந்தவர்கள். தாழ்வு மனப்பான்மையால் தங்களை மேம்படுத்திக் கொள்ளத் தெரியாமல் பிறரை தூற்றுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் அப்படிப் பேசியதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், இன்று படிக்கிறார்கள், பட்டங்களைப் பெறுகிறார்கள். என்றாலும் கூட அந்தக் கல்வி இவர்கள் அறிவினைத் தூண்டியிருக்கிறதா, கல்வி பயின்றவர்கள் புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்களா என்றால் இல்லை. இன்னமும் அந்த பழைய வாதங்களைப் பேசித் தங்கள் அறியாமையையும், கண்மூடித்தனமாக தங்கள் வெறுப்பையும் தங்களது தாழ்வுமனப்பான்மையினால் வெளியிட்டு வருகிறார்கள்.

280406இந்த ஆண்டு விநாயகரின் பிறப்பைப் பற்றியும் பிள்ளையார் வழிபாடு பற்றியும் திண்டுக்கல், கோவை போன்ற சில ஊர்களில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவைகளைப் பற்றிய புகார்கள் ஆங்காங்கே காவல் துறையிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனினும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அப்படி எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், மக்கள் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எல்லா ஊர்களிலும் சந்து பொந்துகளில் உள்ள சின்னஞ்சிறு பிள்ளையார் கோயில்களிலும்கூட மிக விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. எல்லா ஆலயங்களிலும் மக்கட்கூட்டம் நிறைந்து வழிகிறது. இவை ஒன்று போதும், இதுபோன்ற விமர்சனம் செய்வோரின் கருத்துக்கள் எடுபடவில்லை என்பதற்கு.

புராணங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள், அல்லது ஜனரஞ்சகமாகச் சொல்லப்பட்ட உண்மைகள். அதைப் புரிந்து கொள்ள சராசரி அறிவு இருந்தால்கூட போதுமானது.

தமிழிலக்கியங்களில் சேக்கிழார் பெருமானின் “பெரிய புராணம்” முக்கியமானது. அது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டர் திருத்தொகை எனும் பாடலில் கண்ட சைவப் பெரியார்கள் பற்றிய விவரமான படைப்பு. சோழமன்னன் குலோத்துங்கன் கேட்டுக்கொண்டபடி மக்கள் வெற்று இன்பநூல்களைப் படித்து வீணாகின்றார்களே, அவர்களுக்கு கதை கேட்கும் மனவோட்டத்தில் இருப்பதால், சைவ நாயன்மார்கள் குறித்த வரலாற்றைக் கதைகளாகக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த நூல் பாடி அரங்கேற்றப் பட்டது. இதில் காணப்படும் நாயன்மார்கள் எல்லோருமே சிவனைப் பாடித் தொழுதவர்கள் அல்ல. அவர்களில் பலர் சிவன் மேல் இருந்த பக்தியினால், அன்பினால், சிவத்தொண்டு பல புரிந்து தங்களை வருத்திக் கொண்டவர்கள் என்பது முக்கியம். குங்கிலியம் வாங்கி இறைவனுக்குப் போட்டு இறைத் தொண்டு செய்தவர் முதல் தனக்கு உண்ண உணவு இல்லாத நிலையிலும், தன்னைத் தேடி பசியோடு வந்த விருந்தினரை உபசரிப்பதற்காக அன்று மாலை வயலில் விதைத்த நெல்லை கொட்டும் மழையிலும் போய் தேடி பொறுக்கி எடுத்து வந்து குத்தி அரிசியாக்கி உணவு படைத்த நாயனார் வரை பலர் வரலாறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவர்களில் “எறிபத்த நாயனார்” என்றொருவர். இவர் கருவூரில் வாழ்ந்தவர். அங்குக் கோயில் கொண்டிருக்கின்ற ஆநிலையப்பர் என்கிற கல்யாண பசுபதீஸ்வரருக்குத் தினமும் ஆம்பிராவதி நதியில் நீராடிவிட்டுத் தோட்டத்திலிருந்து மலர்களைக் கொய்ந்து பூக்குடலையில் வைத்து ஆலயத்துக்கு சிவபூசனைக்காகக் கொண்டு கொடுக்கும் கைங்கரியத்தை சிவகாமியாண்டார் எனும் முதியவர் செய்து வந்தார். அப்படி அவர் தினமும் செய்து வருகின்ற காலத்தில் அவ்வூரில் எறிபத்தர் எனும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். இந்த எறிபத்தருக்கு இறைவன் மீதிருந்த அளவுகடந்த பக்தியின் காரணமாக இறைவனுக்குத் தொண்டு புரியும் அன்பர்களுக்குப் பாதுகாவலராக விளங்கி வந்தார்.

ஒரு நாள் சிவகாமியாண்டார் ஆம்பிராவதி நதியில் நீராடிவிட்டு மலர்களைக் கொய்து குடலையில் இட்டு, தன் வாயை ஒரு துணியால் மூடிக்கொண்டு ஆலயம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அப்போது உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டுவந்த புகழ்ச்சோழ மன்னன் கருவூருக்கு விஜயம் செய்து அரண்மனையில் தங்கி யிருந்தான். அவனும் ஓர் சிவபக்தன். அறுபத்து மூவரில் ஒருவன்.

சிவகாமியாண்டார் பூக்குடலையுடன் ஆநிலையப்பர் ஆலயம் நோக்கி வந்து கொண்டிருந்த சமயம், புகழ்ச்சோழனின் பட்டத்து யானையை நதியில் குளிப்பாட்டி அதற்குத் திருநீறு பூசி, அலங்காரங்கள் செய்து, வீதி வழியே அழைத்துக் கொண்டு ஐந்து பாகர்கள் வந்து கொண்டிருந்தனர். யானையின் மீது ஒருவன், இருபுறமும் இருவர் வீதம் நான்கு பேர். நீராடிய மகிழ்ச்சி, நல்ல உணவு தன்னை மறந்து மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்த யானைக்கு சிவ்காமியாண்டார் கொண்டு வந்த பூக்கூடை கண்ணில் பட, அதனைப் பறித்து வீசி, பூக்களைத் தெருவில் கொட்டி வீணடித்து விட்டது.

பதறிக்கொண்டு ‘சிவனே சிவனே’ என்று கையால் தரையில் அடித்துக்கொண்டு அலறினார் சிவகாமி யாண்டார். இதை அப்போது அந்த வழியாக வந்த எறிபத்தர் பார்த்து விட்டார். தலைக்கேறிய கோபத்தில் தன் கையில் வைத்திருந்த மழு எனும் ஆயுதத்தால் அந்த யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார். யானை கீழே விழுந்து இறந்தது. இவரை எதிர்க்க வந்த பாகர்கள் ஐவரையும் கொன்று வீழ்த்தினார்.

‘பட்டவர்த்தனம்’ எனும் அந்த யானையையும் அதன் பாகர்கள் ஐவரையும் யாரோ கொன்று விட்டார்கள் என்ற செய்தி மன்னன் புகழ்ச்சோழனுக்கு வந்தது. உடனே அவன் யாரோ ஒரு எதிரி நாட்டு மன்னனின் படை வந்து விட்டது. அந்தப் படையினர்தான் தனது பட்டத்து யானையைக் கொன்று விட்டார்கள் என நினைத்து மன்னன் தனது புரவியின் மீது ஏறி வேகமாக கோயிலை நோக்கி வந்தான். அங்கு அவன் கண்ட காட்சி, யானையும் பாகர்களும் கீழே வீழ்ந்து கிடக்க, இடையில் காவி உடை அணிந்து உடலெங்கும் வெண்ணீறு பூசி கையில் குருதி வழியும் மழுவுடன் நிற்கும் ஒரு சிவனடியாரையும் பார்த்துவிட்டு “யானையைக் கொன்றவர் யார்?” என்றான்.

இந்தக் காரியத்தைச் செய்தவர் இந்த சிவனடியார்தான் என்பது அவனுக்குச் சொல்லப்பட்டது. அடடா! இவர் சிவனடியார் ஆயிற்றே. அவரா தவறு செய்திருப்பார், இருக்காது. இந்த யானை ஏதோ தவறு செய்திருந்தால் அல்லவோ அடியார் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருப்பார், என்று எண்ணிக் கொண்டே குதிரையிலிருந்து கீழே இறங்கி, அந்த அடியாரைச் சென்று வணங்கி “தேவரீர் இந்தக் காரியம் செய்யும்படியாக எனது பட்டத்து யானை செய்த தவறு என்னவென்று சொல்லியருளுங்கள்” என்றான் பணிவோடு.

எறிபத்தர் சொன்னார், “மன்னா! ஆநிலையப்பருக்குச் சாத்துவதற்கு பூக்குடலையுடன் ஆலயம் நோக்கி வந்த சிவகாமியாண்டாரை இந்த யானை கீழே தள்ளிப் பூக்குடலையையும் சிந்தி மிதித்தது. அதனால் அதனை என் மழுவால் வெட்டினேன். கூட வந்த பாகர்கள் ஐவரும் அதன் மதத்தைத் தடுக்காததால் அவர்களையும் கொன்றேன்” என்றார்.

புகழ்ச்சோழர் அவரை வணங்கி “சிவனடியாருக்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும், பாகர்களையும், குத்துக்கோல்காரர்களையும் கொன்றது போதாது. அடியேனையும் கொல்லுங்கள், சிறியோனாகிய என்னை தாங்கள் திருக்கரத்தால் உங்கள் புனிதமான மழுவால் கொல்வது சரியல்ல, ஆகையால் இதோ எனது வாள், இதனால் என்னைக் கொல்லுங்கள்” என்று தன் உடைவாளை அவரிடம் கொடுத்தான்.

எறிபத்தர் மன்னனின் பணிவு, பக்தி, அன்பு கண்டு அவன் நீட்டிய வாளை வாங்காமல் சிறிது நிதானித்துவிட்டு, ஒருக்கால் இவன் இந்த வாளால் தன்னை மாய்த்துக் கொண்டுவிட்டால் என்ன செய்வது என்று அதனைத் தன் கரங்களால் வாங்கிக் கொண்டார். தன் யானையையும், பாகர்களையும் கொன்ற என்னைத் தண்டிக்காமல் தான் ஒரு சிவனடியார் என்பதனால் தன்னையும் தண்டிக்க வேண்டுமென்று கேட்கும் இந்த மன்னனின் பெருமையை உணர்ந்தார். இதற்கு ஒரே பரிகாரம் தாம் செய்த தவறுக்குத் தண்டனை தானே கொடுத்துக் கொள்ள வேண்டி அந்த வாளால் எறிபத்தர் தன் கழுத்தை வெட்டிக் கொள்ளப் போனார்.

அந்த நேரத்தில் ஆலயத்திலிருந்து ஒரு அசரீரி எழுந்தது. “அடியவர்களின் தொண்டு உலகத்தாருக்குத் தெரிவிக்கும் பொருட்டே இப்படியொரு திருவிளையாடல் நடந்தது.” என்று சொல்லி இறந்த யானையையும், பாகர்களையும் உயிர்ப்பித்து எழச் செய்தார் சிவபெருமான்.

“இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கடியேன்” என்று சுந்தரமூர்த்தி பாடும்படியாகப் பெருமை பெற்ற இந்த வரலாற்றின் உட்பொருள் என்ன என்பதுதான் இப்போது நாம் பார்க்க வேண்டியது. அப்படியில்லாமல், அரசனின் யானையை ஒரு பரதேசி கொன்றானாம். அவன் காலில் மன்னன் விழுந்து தன்னையும் கொல்லும்படி கேட்டுக் கொண்டானாம். இதெல்லாம் ஒரு சாரார் கிளப்பிவிட்ட புரளிகள். தமிழ் மன்னனைக் கேவலப்படுத்தும் செயல், சூழ்ச்சி என்றெல்லாம் கூடப் பேசுவார்கள். ஆனால் இந்த வரலாற்றில் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்ன? அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இங்கு சிவத்தொண்டு புரியும் சிவகாமியாண்டார் எறிபத்தர் புகழ்ச்சோழன் இவர்களின் பெருமையை இந்த வரலாறு சுட்டிக் காட்டுகிறது. இதில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதும், இறைத் தொண்டுக்கு ஒரு இடையூறு நேரும்போது அதனைத் தட்டிக் கேட்கும் இடத்தில் ஒரு அடியார் இருந்ததும் கவனிக்கப் படவேண்டும்.

இங்கு யானை என்பது மனிதனின் மனதில் தோன்றும் ஆணவ மலம். அது இறை பூஜைக்கு இடையூறு செய்கிறது. அதனைத் தட்டிக் கேட்கவேண்டிய இடத்தில் இருக்கும் ஐந்து பாகர்களும் மனிதனது ஐம்பொறிகள். அவை மனிதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்; மாறாக மனம் ஆணவம் காரணமாகச் செய்யும் செயல்களுக்குத் துணை போனதால் அந்த ஐம்பொறிகளும் தண்டிக்கப்பட வேண்டும், கட்டுக்குள் அடக்கி வைக்கவேண்டும் என்பதுதான் இந்தக் கதை கூறும் உண்மை.

இந்த உவமைகளைப் புரிந்து கொள்ளாமல் கதையை மேம்போக்காகப் படித்துவிட்டு வாய்க்கு வந்தபடி எழுதியும் பேசியும் வருவது அறியாமையின் வெளிப்பாடே தவிர ஆழ்ந்த புலமை அல்லது அறிவின் விளக்கமல்ல.

இதுபோன்றவர்களுக்கு இனியும் விளக்கமளித்துக் கொண்டிருக்கவோ, அவர்களின் செயலுக்கு விமர்சனம் செய்து கொண்டிருப்பதோ தேவையில்லை. மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டு எது சரி எது தவறு என கல்வி, அனுபவம் இவற்றல் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இதுபோன்ற சலசலப்புகளைப் புறம் தள்ளிவிட்டு இந்து மக்கள் தங்கள் பண்பாட்டின்படியும், பாரம்பரிய நடைமுறைகள் படியும் தங்கள் பண்டிக்கைகளை, திருவிழாக்களை, இறைவழிபாடுகளைச் செய்து வருவார்கள், வரவேண்டும்.

23 Replies to “இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?”

 1. //இந்த உவமைகளைப் புரிந்து கொள்ளாமல் கதையை மேம்போக்காகப் படித்துவிட்டு வாய்க்கு வந்தபடி எழுதியும் பேசியும் வருவது அறியாமையின் வெளிப்பாடே தவிர ஆழ்ந்த புலமை அல்லது அறிவின் விளக்கமல்ல// தங்களின் கருத்து உண்மை.உண்மை.முற்றிலும் உண்மை.. புராணம் இயற்றியவர்கள் வெறும் கதை சொல்லிகள் அல்லர். மக்களுக்கு நல்லொழுக்கமும் தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் சத்தியத்திற்கு அஞ்சும் மனத் திண்மையும் சூதும் வாதும்வேதனையைத் தவறாமல் அளிக்கும் என்னும் அச்ச உணர்வையும் கதை வாயிலாகக் கேட்போர் நெஞ்சில் விதைத்து நல்லசமுதாயத்தை அறுவடை செய்யஆன்றோர்கள் உருவாக்கிய இலக்கிய வகையே புரானங்கள். புராணக்கதைகள் பல உருவகங்களாக, அதீதக் கற்பனைகளாக இருக்கும். அவை பயன் கருதிப் புராணஆசிரியனே படைத்ததுதான். அம்புலி மாமாகதைக்ளும் எந்திரன்கதைகளும் இரங்கூன் ராதா கதைகளும் சமுதாயத்தில் சில மனநிலை உடையவர்களைக் கவருகின்றன. இத்தகைய மன நிலையில் உள்ளவர்களையும் கதைச்சுவையினால் கற்பனையினால் தன்பால் ஈர்த்து நன்னெறிப்படுத்துவதுதான் புராணக் கதைகளின் நோக்கம். இவை வெறும் கதையே என்பது படைத்தவனுக்கும் தெரியும்; ஆன்மீகத்தில் முன்னேறியவர்களும் அறிவர். பவுராணிகர்கள் வேடிக்கையாகக் கதையை மட்டும் சொல்லிக் குறியீட்டை உரிய முறையில் விள்க்காமற் போனால் பிழை நேரிடும். திருக்கோவில் விழாக்கள் கேளிக்கைக்காண கேலிக்கூத்துக்களாக அல்லாமல் மக்களின் உணர்வுகளைப் பண்படுத்துவதாக அமைந்திருந்தால் புராணக்கதைகளின் செய்திகளும் மக்களிடத்தேசென்று சேரும் பண்டைக் காலத்தில் புராணபடனம் கோவில் திருவிழாக்களில் ஒருஅங்கமாகவே இருந்துவந்தது.

 2. எறிபத்த நாயனார் கதை மிக அழகு . விநாயகர் சதுர்த்தி விழா நோக்கம் விரிவாக சொல்லிய்ருந்தால் நன்ன்றாக இருந்திருக்கும்

 3. எறிபத்த நாயனாரின் சரித்திரத்தைத் தத்துவ விளக்கங்களுடன் தந்ததற்கு மிக நன்றி.
  ஆனால் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்ட தற்குறிகளுக்கு இது புரியாது. மாற்று மதங்களின் பண்டிகைகளை விமரிசித்து இதுபோல் பிரசுரங்கள் வெளியிட ஆண்மையும் இருக்காது. மதக் கலவரங்களின் பொது கோவையில் இவர்கள் செய்த துரோகங்களை கோவை மக்கள் மறக்கமாட்டார்கள். எச்சில் ஓட்டுக்காக அலையும் இவர்கள் கருவில் தான் குறை.
  தேர்தல் நேரத்தில் நாம் இதை மறக்காமல் இருக்கவேண்டும்.

  அன்புடன்
  சிவா

 4. Pingback: Indli.com
 5. கடவுளர் விக்கிரக வழிபாடு மூட நம்பிக்கை.
  தலைவர்கள் சிலைக்கு மாலை போட்டுக் கும்பிடுவது பகுத்தறிவு.
  இறந்து போன முன்னோர் நினைவாகத் திவசம் கொடுப்பது மூட நம்பிக்கை.
  செத்த தலைவர்களின் சிலைக்கு பிறந்தநாள், இறந்தநாளில் மாலை போட்டு அஞ்சலி செலுத்துவது பகுத்தறிவு.
  இந்தப் பகுத்தறிவு படுத்தும் பாடு தாங்கமுடியவில்லை.

  ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் கட்சிக்கு ஆள் சேர்க்கும் போதே எதிர்த்துக் கேள்வி கேட்காமல் தான் சொல்வதை ஒப்புக் கொள்பவர்களே வேண்டும் என்றார். யோசிக்கத் தெரியாவனாக அருகில் வைத்துக் கொண்டால் தான் புத்திசாலியாக வளையவரலாமே என்ற நப்பாசையின் விளைவே இது. விளைவு, இன்று அரைகுறைகள் ஆசான்கள் போல வளைய வருகின்றன.

  விமர்சித்தால் அடிவிழும் எனும் அச்சத்தால் கம்பரசம் எழுதிய பருப்புகள் பிறமதங்களுக்கு சாம்பார் வைக்கக்கூடத் துணியவில்லை.

  இந்துக்களே! கீதையை பின்பற்றுங்கள். தர்மத்தை எதிர்ப்பவன் யாராயினும் கண்டிக்கத்தக்கவன். ஒன்றுபட்டுக் கண்டிப்பது என்பது ஒற்றுமையாய் ஓட்டுச்சீட்டு மூலம் இவர்களுக்கு ஓட்டை போடுவது.

  ஏன் இந்து அமைப்பினர் ஈ.வே.ரா பிறந்தநாளில் கடவுள் மறுப்பை விமர்சித்து பிரசுரம் விநியோகிக்கக் கூடாது?
  ஒன்றே குலம் ஒருவனே தேவன் (ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி) என்பதன் ஆன்மீக விளக்கத்தை அச்சடித்து அண்ணாபிறந்த நாளில் ஏன் தருவதில்லை?

  Power respects only the powerful. None would make Hindus powerful. We gotta make ourselves so. No other go.

 6. //Power respects only the powerful. None would make Hindus powerful. We gotta make ourselves so. No other go.- as quoted by Sri Arun Prabhu//
  இதுவே முற்றிலும் சரியான தீர்மானம். உனது ஆயுதம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கிறான். நமது புராணங்கள் தரும் செய்தியும் இதுவே. மோடசம் அருளுவதில் பாரபட்சம் காட்டாத ஹிந்து கடவுளர்கள் துஷ்டர்களை அனுக்ரஹம் செய்து அவர்களுக்கும் மோட்சம் அளிக்கும்விதம் அவர்களை சம்ஹாரம் செய்வதேயாகும். துஷ்டர்கள் எல்லை மீறும்வரை அவர்களாகத் திருந்துகிறார்களா என்று பார்த்திருந்து அதன் பின் அவர்களை சம்ஹரிப்பதே கடவுளர் வழிமுறை என்பதையும் நம் புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன. மேலும், புராணங்கள் பல அரிய உண்மைகளைத் தமக்குள் பொதிந்து வைத்திருப்பவை. ஆழ்ந்து படித்து ஆராய்ந்தால் இதனை உணர முடியும். கடவுளுக்கு அமைந்துள்ள பல்வேறு வடிவங்களும் அவ்வாறே ஆய்ந்துணர்ந்து அனுபவிக்க வேண்டியனவாகும். அவ்வாறு அனுபவிக்கக் கற்றுவிட்டால் நம்மை மகிழ்விக்கக் கடவுள் அந்தந்த வடிவங்களைத் தரித்துக்கொள்வதும் சாத்தியமே யாகும்.
  -மலர்மன்னன்

 7. //இந்த உவமைகளைப் புரிந்து கொள்ளாமல் கதையை மேம்போக்காகப் படித்துவிட்டு வாய்க்கு வந்தபடி எழுதியும் பேசியும் வருவது அறியாமையின் வெளிப்பாடே தவிர ஆழ்ந்த புலமை அல்லது அறிவின் விளக்கமல்ல.//

  It looks like that author considers eripaththa nayanar’s incident only as a story and not a historical one. Then why we keep all the 63 nayanmaar’s idols in most of the siva temples if they are only story characters? What about the sthala puranams which says that this is where these incidents happened? Another story to cover up the previous story? Why did Sankara refer Kannappa nayanar in his Sivananda Lahari (Sloka 63)? Even whatever he did is just a story to convey some meaning? Would we say same for Rama and Krishna?

  The problem is that we are all brain washed (or deeply infected?) by TB of TBMccaulay’s education. We can’t believe that such thing could have happened. We advise our children to take only the moral of it and discard the incident as story as we ourselves are not convinced.

 8. கடவுள் மறுப்பை பகுத்தறிவு என்பதே நகைப்பிற்குரியது.
  அருண் பிரபுவின் கருத்து சரியான பதிலடியாக இருக்கும் என நினைக்கிறேன்.
  மலர் மன்னனின் “உனது ஆயுதம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கிறான். நமது புராணங்கள் தரும் செய்தியும் இதுவே.” இந்துக்கள் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது.
  பதிலடி பலமாக இருக்கும் என்றால் எப்பேர்ப்பட்டவனும் நம்மை இகழ தயங்குவான்.

 9. இதற்கு சரியான தீர்வு இளைய தலை முறையினரிடம் ஹிந்து மத தத்துவ விளக்கங்களை கொண்டு செல்வது தான் ,நம் முன்னோர் மருத்துவம் ,விஞ்ஞானம் ,வாழ்வியல் நெறிகள் -என அனைத்து விசயங்களையும் ஆன்மிகம் கலந்தும் ,சமய நெறிகளாகவும்,முற்காலத்தில் ஊட்டியதன் காரணம் அன்று பெரும்பாலான மக்கள் கல்வியறிவு இன்றி இருந்தது தான் .ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை ..எனவே காலத்திற்கேற்ப குழந்தைகளிடம் நம் மத கருத்துக்களை கூறி விளங்க வைத்தாலேபோதும் .நாம் தெளிவாக இருந்தால் மற்றவன் நம்மை எப்படி குழப்ப முடியும் .

 10. Erottan,
  //அன்று பெரும்பாலான மக்கள் கல்வியறிவு இன்றி இருந்தது தான்//

  நீங்கள் கூறும் கல்வி எது என்று கொஞ்சம் சொல்வீர்களா?

 11. *** சொல்ல மறந்த விஷயம் ***
  எறிபத்த நாயனார் சரித்திரத்தைத் தத்துவக் கண்ணோட்டத்தில் தந்தது பாராட்டுதற்குரியது. வாழ்க கோபாலனார். மென்மேலும் சமய சரித்திரங்களைத் தக்க தத்துவ விளக்கங்களுடன் தந்து, தத்துப் பித்தென்று உளரும் இந்துவிரோத பிரச்சாரத்திற்கு சாட்டையடி தரவேண்டும். அதற்கு அவர் ஆரோக்கியமும், உறுதியும் பெற இறைவன் அருள வேண்டும். திருச்சிற்றம்பலம்| திருச்சிற்றம்பலம்||

 12. ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் சரித்திரப் பாட கிறித்தவ ஆசிரியர், ‘தான் க்ரிஷ்ணபரமாத்மாவின் யாதவகுலத்தில் பிறந்தவர் என்றும், அவர் மூதாதையரில் ஒருவர் பால் பவுடருக்காகவும், ரொட்டித்துண்டுக்காகவும், பணத்துக்காகவும் கிறித்தவ மதத்தில் சேர்ந்ததனால், அவர்கள் கிறித்தவர்களாக கட்டாயத்தில் வாழ வேண்டி இருக்கிறது ” என்றும் அடிக்கடி கூறுவார். அப்படிப்பட்ட வருந்தும் நல்லவர்கள் போய், சர்ச் பணத்திற்காகத், தன்மானத்தை விட்ட கும்பல்கள் தான் இவ்வாறு இழி செயல்களில் ஈடுபடுகின்றன இக் கும்பல்களின் இன்றையக் கொடுந் தலைவன் “ஸ்டாலினின்” தந்தை கருணாநிதி இக்கும்பல்களில் பெரும்பாலானோர், இந்துப் பெயர்களை வைத்துக்கொண்டு, இழி செயல்களில் ஈடுவதை சாதாரணமாக நாம் பார்க்கலாம். நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டுடன், ராமபிரான் கிடையாது என்று கூறியவர், அம்பிகா சோனி எனப்படும், இந்துக்களின் பெயரைத்தாங்கி , இந்துக்களைத் தாக்கும் கிறித்தவர். சோனியா காந்தி எனப்படும் ரோமானிய/இத்தாலியக் கிறித்தவரின், அந்தரங்கப் பாவை, இந்த இந்துப்பெயர் கொண்டு, இந்துக்களுக்கு எதிராகத் திரியும், அம்பிகா சோனி.

  (edited and published)

 13. அன்பர் குமுதன் அவர்களுக்கு, குலோத்துங்கள் காலத்தில் மக்கள் செல்வத்தில் மிதந்தார்கள். வறுமை என்பதே இல்லை. அதனால் செல்வந்தர்கள் புலவர்களை அழைத்து “சீவக சிந்தாமணியைப்” படிக்கச்சொல்லி இன்புற்றார்கள். அது சமண நூல் மட்டுமல்ல, இன்பநூல் எனப்படும். சீவகனின் பல திருமணங்களைப் படித்து இன்புற்றார்கள் மக்கள். மன்னன் அமைச்சரிடம் சொன்னான், “சேக்கிழார் பெருமானே இந்த நிலை மாற இவர்களை அற நூல்களைப் படிக்குமாறு செய்ய முடியாதா என்றான். மக்கள் சுக போகத்தில் கதை கேட்கும் நிலையில் இருக்கிறார்கள். அறவழி தெரிய வேண்டுமானால் திருக்குறள் ஒன்று போதுமே என்றார். அப்படியானால் நீங்கள் நல்ல கருத்துக்களை கதை வடிவாக சொல்லுங்கள் என்றார். சுந்தரமூர்த்தியின் திருத்தொண்டர் திருத்தொகையில் வரும் அறுபத்து மூவரின் கதையை மெருகேற்றி கதை சொல்லுங்கள் என்றான் மன்னன். பெரிய புராணம் தோன்றியது. அது வரலாற்றில் கற்பனை மெருகு ஏற்றப்பட்டது என்பதற்கு பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களின் பெரிய புராண ஆய்வு நூல் ஆதாரம்.

 14. இங்கிருக்கும் சந்திரனுக்குப் போவதாகக் கூறிக்கொண்டு எவ்வளவு முஸ்தீபு செய்துகொள்ளும்போது, வெவ்வேறு வான் மண்டலங்களில் இருக்கும் தெய்வங்கள், எவ்வளளவு திறன் படைத்ததாக இருக்க வேண்டும். எனவே தெய்வங்களின் உருவ அமைப்பு சாதாரணமாக இப் புவியுலகில் உள்ளதுபோல் இல்லாமல்தான் இருக்கும். எனவே இந்துக் கடவுள்களை கேலி செய்வது , கேலி செய்பவர்களின் ஞான சூன்ய நிலைமையாகும்.

 15. reality,
  //தெய்வங்கள் உருவ அமைப்பு இப் புவியுலகில் உள்ளதுபோல் இல்லாமல் தான் இருக்கும்.//

  என சந்தேகத்துடன் கூறிய தாங்கள் எப்படி விலங்கும் மனிதனும் கலந்த கலவையாக உள்ள தெய்வங்களை புவியில் உள்ளதுபோல் கற்ப்பனை செய்து வணங்குகிறீர்கள்?

 16. //Author
  //”அது வரலாற்றில் கற்பனை மெருகு ஏற்றப்பட்டது என்பதற்கு பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களின் பெரிய புராண ஆய்வு நூல் ஆதாரம்.”//

  நமக்கு எது கற்பனை எது உமை சம்பவம் என்று தெரியாததால், பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதே நல்லது. இதை பற்றி காஞ்சி பெரியவரின் கருத்து இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது:

  https://www.kamakoti.org/tamil/Kural117.htm
  https://www.kamakoti.org/tamil/Kural118.htm

  மேலும்: https://ancientindians.net/puranas/basis-of-puranas/

  பைபிளையோ, குரானையோ எவராவது Mythology கூறுகின்றனரா? இந்த அடைமொழி இந்திய கிரேக்கிய மற்றும் இதர பகன்களின் காவியங்களுக்கு மட்டுமே.

 17. Moreover,

  When we say Puranams are mixture of history marinated with some exaggerations to our children, we should be ready to tell them what is actual history and what could have been exaggerations. Else the same parroting about this history+imagination mixture will be passed on generations after generations and over the period of time it’ll be considered only as mythology and not a true incident. Unfortunately this impression is already there even among the asthikas due to our affinity to scientific verification.
  Somebody in the West said: Science is about believing what you see whereas religion is about seeing that you believe.

 18. “போல” என்ற உவம உறுபு, அதாவது, கற்பனையைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல், “இல்லாமல் தான் இருக்கும்” என்ற அடுத்துவந்த சொற்றொடர்கள் மூலம், கற்பனையல்ல என்று அழுத்தமாகக் குறிக்கப்பட்டிருப்பதை உணரலாம். மேலும், வணக்கம் மற்றும் வணங்குதல் என்பது, மதித்தல், பணிதல் என்ற குணங்களைக் குறிப்பிடுவதால், அப்படிப்பட்ட செயல்கள், நற்பண்புக்கு, அடித்தளமாகும்போழ்து, அப்படிப்பட்ட செயலை, அனைவரும் பின்பற்றுவதுதானே மனித இயல்பாக இருக்க முடியும். வணகுதல் என்ற நற்பண்பை ஏற்படுத்தும் உருவ அமைப்பு, நன்மையின்பாற்பட்டதே. மேலும், மனிதனும், விலங்கும் கலந்த கலைவை, மனிதருக்குள்ளேயே இருந்து, கெடுதல் செய்யும்போழ்து, தெய்வத்திற்குள்தான் அக்க்லைவை நம்மையைச செய்யும் என்பது விளங்கும். மெயஞானம் என்கின்ற தெய்வக்கலை கூறியதை, பல் யுகங்கள் கழித்து, மனிதக்கலையான விஞ்ஞானம், மரபணு ஆராய்ச்சி என்ற பெயரில், இப்போதுதான் புரிந்து கொள்ள முயற்சிசெய்து கொண்டிருக்கிறது.

 19. Dear rafi,

  //என சந்தேகத்துடன் கூறிய தாங்கள் எப்படி விலங்கும் மனிதனும் கலந்த கலவையாக உள்ள தெய்வங்களை புவியில் உள்ளதுபோல் கற்ப்பனை செய்து வணங்குகிறீர்கள்?
  //

  without getting into the specific part – there is a fundemental difference between semitic religions and religions that originated in the east

  semitic religion believes that animals are mean creatures and man only is great – eastern religions know to see God everywhere and in everything – as only this was God can be omnipresent – a god who is absent in a plant, in a tree and one who resides over the royal sky cannot be omnipresent, nor can he be omnipotent

  one of your sibiling relgion say no to animals but depict the holy spirit as a pure white dove 🙂

 20. இவர்கள் ஹிந்து மதத்தை மட்டுமே தூஷிப்பவர்கள். வேறு மதங்களை பற்றி சற்று இழிவாக பேச வேண்டியதுதானே . உடனே வழக்கு பாயும் . அல்லது பிரச்சினை உருவாகும். இவர்கள் விளம்பரம் ஒன்றே நோக்கமாக கொண்டுள்ளவர்கள். மத ,கடவுள் எதிர்ப்பை பிழைப்பாக கொண்டுள்ளவர்கள். வேறு மதங்களிலும் சாதி உள்ளது. தீண்டாமை உள்ளது. மத சடங்குகள் உள்ளன. அவற்றை சாட வேண்டியது தானே. அமைதியாக இருப்பது ஹிந்துக்களின் கடமை. ஆனால் அதுவே மற்றவர்களுக்கு வசதியாகி போனது தான் கொடுமை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எத்தனை பேர் கிளம்பி வந்தாலும் ஹிந்து மதத்தை அழிப்பது என்பது நடவாது. ஈன எனில் ஹிந்து மதம் ஒரு மதம் மட்டும் அல்ல . அது வாழ்கை முறை.

 21. இந்து மதத்தை விமர்சிக்கும் அறிவிலிஅகள் எந்த அளவும் பைபிளை அரிந்து உள்ளார்கள்?

  ஒரு உதாரணம்.

  ஆபிரகாமினரின் தீயொழுக்கமும் புறஜாதியினரின் நல்லொழுக்கமும்
  https://tamilarsamayam.wordpress.com/2010/10/26/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

 22. இந்த ஹிந்து த்வேஷிகள் செய்வது கடவுள் மறுப்பு அல்ல- அப்படி என்றால் அல்லாவையும் ,ஏசுவையும் மறுக்க வேண்டியதுதானே?

 23. எல்லாம் மக்களும் மதத்தையும், கடவுளையும் ஒன்றாக நினைத்து குழப்பி கொள்கிறார்கள்.கடவுள் வேறு , மதம் வேறு. மதம் மனிதனை பிரிப்பது. கடவுள் இணைக்கிறார். அல்லவா? பிரிவு என்றுமே கடவுள் தருவது அல்ல. மதம் கடவுளை உணர வழி காட்டும்.அவ்வளவே. மதங்களை கடந்த ஆன்ம ஞானம் எத்தனை பேருக்கு இர்ருக்கிறது?நீங்கள் ஆத்மா சோதனை செய்து பாருங்கள்.மிக சிலரே. அப்படிப்பட்டவர்கள் எந்த மதங்களையும் இழிவாக பேசமாட்டார்கள்.இன்று கிருஸ்துவர்களும், இந்துக்களும், இஸ்லாமியர்களும் பிற மதங்களின் கொள்கைகளை விமர்சிக்கிறார்கள். இன்றே இதை நிறுத்துவோம்.

  இந்து மதம் (இந்துயிசம் அல்ல) . இந்து மதம் வேறு , இந்துயிசம் வேறு . இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? உண்மையான் இந்து மதம் இப்பொழுது எங்குமே இல்லை. அது கி.பி . ஏழாம் நூற்றாண்டுக்கு பின் மறைந்து விட்டது. அப்போது உள்ள இந்து மதத்தில் சாதி இல்லை . சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தலைமை அர்ச்சகர் நந்தனார் ஒரு கீழ் ஜாதி அந்தணர். அதே போல் ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் திருப்பானாழ்வார் ஒரு கீழ் ஜாதி சேர்ந்தவர். இன்று நடை முறை என்ன என்று யோசித்து பாருங்கள். இன்று இந்து ஆலயங்களில் நமக்கும் நாம் வணங்கும் ஆண்டவனுக்கும் நடுவில் அர்ச்சகராக யார் இருக்கிரார்கள்? ஆண்டவன் என் தந்தை. என் தந்தைக்கும், எனக்கும் இடையில் ஏன் தரகர். இதனால் , நமக்கு கடவுளை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லை. நமக்கு யார் சொல்லித்தருவது? இந்த தரகர்களா? அல்லது நமக்கென்று ஏதேனும் மதபுத்தகம் உண்டா? தேவாரமமும், திருவாசகமும், திருப்புகழும் , மற்றும் வேதங்களும் யாரை கடவுள் என்று சொல்கின்றன . நன்கு ஆராய்ந்து பாருங்கள்.தேடி பாருங்கள். அவை யாவும் ஒரே தேவனைத்தான் சொல்கின்றது. நாம் வணங்கும் முருகன், விநாயகர், சிவன், விஷ்நு , அய்யப்பன், சக்தி இவர்கள் எல்லாமே கடவுளின் பல நிலைகளை, குணங்களை தத்துவார்த்த அடிப்படையில் விளக்க மனிதன் அக்கடவுளுக்கு வைத்த பெயர்தான். உதாரணமாக நோய்களை தீர்ப்பதனால் வைதீஸ்வரன் , ஒளியாக இருப்பதனால் ஐயப்பன், அழகனாக இருப்பதால் முருகன், நம் ஆத்மாவை அவனுடன் சேர்த்துகொள்வதால் சங்கமேஸ்வரன் இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

  எனவே, நான் சொல்வது என்னவென்றால், பிற மதத்தை சார்ந்தவர்கள் நம்மை விமர்சனம் செய்வது ஏன் என்று நாம் ஆராய்ந்து பார்த்து நம்முடைய குறைகளை முதலில் நிவர்த்தி செய்வதே நாம் செய்யவேண்டிய முதல் கடமையாகும். பிற மதங்களில் உள்ளவர்கள் சாதியால் வேறுபட்டாலும் மதத்தில் ஒன்று படுகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் இந்த ஒற்றுமை பார்க்கமுடியுமா? நாம் கீழ் ஜாதி ஆத்மாவை கோவிலில் அனுமதிப்பதில்லை. நமக்கு யார் ஆண்டவனோ அவன் தான் அவனுக்கும் ஆண்டவன் என்று நாம் ஒத்துக்கொள்வதில்லை. எல்லாவற்க்கும் மேல், நம் இந்து மக்களுக்கு கடவுளை பற்றிய தெளிவு இல்லை. புராணங்களில் எவ்வளவு கொச்சையாக, மிக அசிங்கமாக சொல்லிருக்கிறது. அதை ஏன் அப்படி உள்ளது? என்று நாம் என்றாவது ஒரு நாள் சிந்தித்து பார்த்திருக்கிறோமா? நாம் அதை எல்லாம் ஆராய வேண்டும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். முருகனுக்கு இரண்டு மனைவிகள். எப்படி கடவுளுக்கு மனைவி இருக்கமுடியும்? அதுவும் இரண்டு மனைவிகள்? இது ஒரு தத்துவம். சைவ மார்கத்தில் விநாயகரை பிரம்மச்சாரியாக பார்த்தவர்களுக்கு கடவுளை ஒரு சம்சாரியாக் அழகு பார்க்க ஆசை. கடவுள் அல்லவா ? அரசன் அவன். எனவே அவருக்கு ஏற்ற தெய்வானையை மனைவியாக புராணம் சொல்கின்றது. நாம் முருகன் மேல் பக்திகொண்டு அவனை நம் முழு ஆத்மாவோடு பூஜித்தால் நாம் வாழ்க்கையில் எவ்வளவு கீழானவர்களாக இருந்தாலும் அவன் நம்மை ஏற்றுகொல்வான். எப்படி வள்ளி சமூகத்தில் பின்தங்கிய குறத்தியாக இருந்தாலும் முருகன் அவளை ஏற்றுகொண்டானத்தை போல். இதுதான் அந்த புரானகதையின் தத்துவம். இப்படி எல்லா புராணத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம்மை பற்றியே நமக்கு சரியாக தெரியவில்லை. பின் பிற மத்தைசார்ந்தவர்கள் நம்மை எப்படி அறிந்துகொள்வார்கள். சொல்லிகொண்டே போகலாம். எனவே நான் சொல்லிய கருத்துகளை யோசித்துபாருங்கள். கேள்வி உங்கள் உள்ளத்தில் பிறக்கட்டும். உண்மை விளங்கும்.உண்மை தெரிந்தால் தெளிவு கிடைக்கும். தெளிவு பிறந்தால் ஞானம் கிட்டும். ஞானம் கிடைக்க இறைவனை அறிவீர்கள்.

  இன்னும் பேசுவோம் . nandri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *