அறியும் அறிவே அறிவு – 2

அறியும் அறிவே அறிவுபகுதி 1

(தொடர்ச்சி…)

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்களே, அதுபோலத்தான் இத்தொடரும் தொடங்கியிருக்கிறது. இத்தொடரின் சென்ற வாரத்தைய ஆரம்பக் கட்டுரையை எழுதும்போது நான் சிறிதும் எதிர்பாராதபடி ஒரு நிகழ்ச்சி அமைந்தது. ஞான வழி பற்றி ரமணர் சொன்ன முத்துக்களைச் சுருக்கமாக வாசகர்களுக்குத் தரலாம் என்றுதான் நான் இத்தொடரை ஆரம்பித்தேன். அவர் வழியைப் பற்றிச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் “உள்ளது நாற்பது” எனும் நூலில் வரும் அவரது நாற்பத்திரண்டு செய்யுள்களும், அதன் அனுபந்தம் என்று வெவ்வேறு மூலங்களிலும் இருந்து அவர் இயற்றிய நாற்பத்தியொன்று செய்யுள்களும் தான் என் நினைவுக்கு வந்தன. அவைகளில் சிலவற்றை மட்டும் இப்போது சொன்னால் போதுமே என்று நான் தேர்ந்தெடுத்த சில செய்யுள்களின் எண்களை வரிசைப்படுத்தி ஒரு தாளில் தனியாக குறித்து வைத்துக் கொண்டேன்.

அனைவரும் அறிந்த மகா வாக்கியத்தை வைத்துக் கொண்டு தொடங்கலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் போது, அதன் தொடர்பாக முன்நடந்த நிகழ்ச்சி ஒன்று ஞாபகம் வரவே அதை முதலில் எழுதிவிட்டு, ரமணர் நூல்திரட்டைப் பிரித்து, முதலில் குறித்திருந்த ஏழாம் எண் கொண்ட செய்யுளைப் பார்த்துப் பிரமித்தேன். ஏனென்றால் அதிலும் அதே மகா வாக்கியம் இருந்தது. பிரமிப்பு நீங்கும் முன்பாகவே தெய்வத்தின் துணையை எண்ணிக்கொண்டு முதல் கட்டுரையை எழுதி முடித்து விட்டேன்.

அது முடிந்ததும், அடுத்தாற்போல் எழுதுவதற்கு எந்தச் செய்யுள் என்று தேடும்போது, எனது பிரமிப்பு இரட்டிப்பு ஆயிற்று. ஏனென்றால் நான் திட்டமிட்டபடி முதல் பாகத்திலிருந்து தொடங்காமல் நேரே அனுபந்தம் உள்ள பக்கங்களைப் பிரித்திருக்கிறேன் என்று அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. இது எப்படி நடந்தது எனப் பார்த்தால், முதல் பகுதி மற்றும் அனுபந்தம் இரண்டிலும் முதலாவதாக ஏழாவது செய்யுளை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆக புத்தகத்தைப் பிரிக்கும்போது ஏழு என்பதை மட்டும் கவனித்து, எந்த பாகம் என்பதை கவனியாது, எழுத ஆரம்பித்திருக்கிறேன் என்று புரிந்தது. அதனால் முதல் கட்டுரையிலேயே மகா வாக்கியம் தொடர்பான செய்யுளும் நான் அறியாமலேயே வந்து என்னை முதலில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது இறைவன் செயல் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? இப்படி, தானே அமைவதைத்தான் நிமித்தம் பிரகாரம் அமைந்தது என்று சொல்கிறார்களோ? நடந்ததைப் பார்த்து விட்டோம். இனி நடக்க வேண்டியதை அவன் அருளால் தொடர்ந்து பார்ப்போம்.

சீடன் குருவின் கேள்விகளுக்கு வந்த பதில்கள் மூலமாகவும், தானே சிந்தித்து முடிவுக்கு வந்ததாலும், குருவின் வழிகாட்டுதலில் உள்ள தீவிர நம்பிக்கையாலும் “நான் அதுவே” என்று சொல்கிறான். அதற்காக அவன் “தான் அது” என்பதை உணர்ந்து விட்டான் என்று கூற முடியுமோ? புத்தி பூர்வமாக ஒரு நிலையை அறிவது வேறு, உணர்வு பூர்வமாக ஒரு நிலையை அடைவது அல்லது நிலைத்திருப்பது என்பது வேறு அல்லவா? இங்குதான் சீடனுக்கும் குருவுக்கும் உள்ள வேறுபாடு வருகிறது. நாம் சீடனுடன் நமது பயணத்தை மேலும் தொடர்வோம்.

gurusishyanசீடனின் வார்த்தைகள் என்னவாக இருந்தாலும் அவன் விழித்ததும் அவன் கண்டது இந்த உலகமான தன்னைச் சுற்றியுள்ள பொருள்களைத்தானே. அதற்கும் முன்னே, அவன் விழித்தவுடனேயே தன்னைத் தான் என்று உணர்ந்து விட்டாலும், உலகில் உள்ள மற்றவைகளைப் பார்க்கையில் அந்த உணர்வானது சற்றே மங்கலாகி விடுகிறது என்பதை நாம் அனைவருமே தினம் தினம் அனுபவத்தில் காண்பதுதானே. மங்கலான ஒளியில் கூட மற்றவருக்கு கீழே இருப்பது பாம்பல்ல, கயிறுதான் என்று தெரிந்திருக்கலாம். நம்மிடம் அதை அவர்கள் சொல்லவும் செய்யலாம். ஆனாலும் நாம் அதை உணரும்வரை, சொல்பவரை நம்பும்வரை நம்மிடம் சிறிதாவது கலக்கம் இருக்கலாம் அல்லவா? ஆதலால் அப்படி நம் அனைவரையுமே மயக்கும் உலகத்தின் உண்மையை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதுவும் சரிதானே? அதைத்தான் இப்போது நாம் அலசப் போகிறோம்.

(இங்கு நாம் உள்ளது நாற்பது அனுபந்தப் பகுதியிலிருந்து அதன் முதற் பகுதிக்குத் தாவுகிறோம். இந்தப் பகுதியை எழுதுமுன் எனது தேர்வில் சில மாற்றம் செய்ததால், முதலில் மூன்றாம் செய்யுளும், அடுத்ததாக ஏழாவது செய்யுளும் வருகின்றன என்றும் வாசகர்களுக்குச் சொல்ல விழைகிறேன்.)

உலகு மெய், பொய்த் தோற்றம், உலகு அறிவாம், அன்று என்று
உலகு சுகம், அன்று, என்று உரைத்தென்? உலகு விட்டுத்
தன்னை ஓர்ந்து ஒன்றிரண்டு தான் அற்று நானற்ற
அந்நிலை எல்லார்க்கும் ஒப்பாம்

[பொருள்: உலகம் உண்மையானது என்றும், அல்ல அல்ல பொய்யான தோற்றம் என்றும், உலகம் சித்தாகிய அறிவு என்றும், அல்ல அல்ல அறிவற்ற ஜடமென்றும், உலகம் இன்பமயமானது, அல்ல துன்பமயமானது என்றெல்லாம் சொல்லி வாதித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? உலத்தின் தன்மையை ஆராய்வதை விட்டுவிட்டு, தனது ஆன்ம சொரூபத்தை விசாரித்து அறிந்து ஜீவனும் பரமனும் ஒன்றே என்னும் அத்வைத பாவமும் நீங்கி, அல்ல அவை இரண்டே என்ற த்வைத பாவமும் நீங்கி, நானென்னும் ஜீவ பாவமும் அழிந்து பிரகாசிக்கின்ற அந்த உண்மை நிலையானது விவேகிகளான அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடியதே.]

earth1உலகம் உண்மையே, இல்லை பொய்த் தோற்றம் உடையது, உலகம் அறிவின்பால் வளர்ந்ததால் அறிவு மயமானது, இல்லை அதற்கு என்று அறிவு ஏதும் கிடையாது, உலகம் மகிழ்வு கொடுக்கக் கூடியது, இல்லை துன்பத்தையே அள்ளித் தருவது என்றெல்லாம் பேசிக்கொண்டோ அல்லது வாதம் செய்துகொண்டோ இருப்பதால் யாருக்கு என்ன பயன்? உலகம் அப்படியேதான் இருக்கும், வாதிப்போரும் அப்படியே இருப்பார்கள். இவ்வாறு உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும். அப்படிச் செய்யும்போது இறைவனும், சீவனும் ஒன்றே, அல்ல இரண்டே என்ற தத்துவங்களுக்குள் எல்லாம் புகுந்து மாட்டிக் கொள்ளாமலும் நான் உடலே என்ற எண்ணங்களையும் வளர்த்து தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துக் கொள்ளாமலும் இருந்தால், ஒரு சாதகன் இவ்வாறு வெவ்வேறாகக் கூறப்பட்ட அனைத்து நிலைகளையும் கடந்த உண்மை நிலையை அறியவும் அடையவும் முடியும் என்று எல்லாம் உணர்ந்த விவேகிகள் ஒப்புக் கொள்வர்.

தத்துவம் என்றெல்லாம் மிகவும் அறியாதவர்கள் கூட, “அழகு என்பது பார்ப்பவரின் கண்ணில் இருக்கிறது,” என்பார்கள் அல்லவா? கிட்டத்தட்ட அதேதான் இங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. உலகத்தை நீ பார்ப்பது இருக்கட்டும், நீ அதை எப்படிப் பார்க்கிறாய் அல்லது பார்ப்பது யார் என்பதைக் கவனித்தாயா என்பதுதான் இங்குள்ள முக்கியக் கருத்து. அப்படிப் பார்க்கும்போது தன்னளவில் எந்த விதமான ஊகமோ, தாக்கமோ இன்றி இருக்க வேண்டும் என்பதுவும் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

சீடன் என்னதான் தேர்ந்தவனாகவும், அறிவுள்ளவனாகவும் இருந்தாலும், அவன் இன்னும் உலகைக் காண்பதாலும், அப்படிக் காண்பதற்கு ஸ்தூலமான உபகரணங்களைத் தவிர சூட்சுமமான மனமும் ஒரு காரணம் என்று அவனுக்குச் சொல்லப்பட்டிருப்பதால், அவ்விரண்டின் மூலத்தைப் பற்றி மேலும் சீடன் அறியவேண்டும் அல்லவா? ஏன்?

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே. மனம் என்பதை ரமணர் “உபதேச உந்தியார்” பாடலில் விளக்கும் போது சொல்கிறார்..

எண்ணங்களே மனம் யாவினும் நானெனும்
எண்ணமே மூலமாம் உந்தீபற
யானாம் மனம் எனல் உந்தீபற

[பொருள்: மனம் என்பது நமது எண்ணங்களின் மொத்தத் தொகுப்பு. அது ஒரு மூட்டை போல் இருந்துகொண்டு, மேலும் நமது மற்றைய எண்ணங்களையும் பார்வைகளையும் பாதிக்கும். எல்லா எண்ணங்களுக்கும் முதல் எண்ணமாக நமக்கு வருவது நாம் தூங்கி எழுந்ததும் கிளம்பும் “நான்” என்னும் எண்ணமே.]

ஆதலால், அதைப் பற்றிய வாதங்கள் மேலும் தொடரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

உலகு அறிவும் ஒன்றாய் உதித்து ஒடுங்குமேனும்
உலகு, அறிவு தன்னால் ஒளிரும் – உலகு அறிவு
தோன்றி மறைதற்கு இடனாய் தோன்றி மறையாது ஒளிரும்
பூன்றமாம் அஹ்தே பொருள்

[பொருள்: உலகத் தோற்றமும் அதைக் காணும் மனமும் இரண்டும் சேர்ந்தாற்போலத் தோன்றி ஒன்றாக ஒடுங்கும் என்றாலும் உலகமானது மனதின் அறிவினால்தான் பிரகாசிக்கிறது (தானே பிரகாசிக்காது). உலகமும் அதைக் காணும் அறிவாகிய மனமும் தோன்றுவதற்கும் மறைந்து ஒடுங்குவதற்கும் இடம் அளிப்பதாக (ஆதாரமாக) தான் மட்டும் தோன்றி மறையாமல் பிரகாசிக்கின்ற அதுவே (ஒன்றே) நித்திய பரிபூரணமான சத்தியமாகிய பரம்பொருள் ஆகும்.]

நாம் பார்க்கும் ஸ்தூல உலகமும் அதைப் பார்க்க வைக்கும் நமது சூட்சும மனதும் ஒரே சமயத்தில் தோன்றுகிறது. அதேபோல மனம் அதில் லயிக்கவில்லை என்றால் உலகமோ, அதன் நடப்புகளோ தெரியாமல் போகிறது. ஆக அவை இரண்டும் ஒரே சமயத்தில் மறையவும் செய்கிறது. அப்படி இருந்தும், உலகமானது மனத்தின் துணைகொண்டுதான் அறியப்பட முடியும். மனம்தான் உலகம் இருப்பதை அறிவிக்கும். உலகம், தான் இருப்பதைத் தானே அறிவிக்க முடியாது. அதையே உலகம் தானே பிரகாசிக்காது எனப்படுகிறது.

ஓர் உதாரணமாக, “உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்” என்பார்கள். உலகம் நம்மை எவ்வளவுதான் தாழ்த்திப் பேசினாலும், நம்மை நாமே தாழ்வாக நினைத்தால்தான் நாம் தாழ்வோம்; மாறாக நம்மைப் பற்றி நமக்குச் சரியான மதிப்பீடு இருக்கும்போது மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பதோ, பேசுவதோ நம்மை ஒருபோதும் பாதிக்காது.சில சமயம் நம்மைப் பற்றி நமக்கே தெரியாதபோதுதான் உலகால் நமக்குப் பிரச்சினைகள் வருகின்றன.இங்கு நமது மதிப்பீடு நமது மனத்தளவில்தானே இருக்கிறது.

ஆக உலகை அறிய மனத்தின் அறிவு தேவையாகிறது. அப்படிப்பட்ட உலகமும் அதைக் காணத் தேவையான மனமும் தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதே, என்றும் உள்ள பரிபூரண வஸ்துவான பரம்பொருள்.

இந்தக் கூற்றுகளில் உள்ள உண்மையை அறிவதற்கு நாம் இன்னுமொரு உதாரணத்தை இப்போது பார்க்கலாம். வேறு ஒரு தேசத்தில் நடப்பதைப் பற்றி நாம் தினசரிகளில் பார்க்கிறோம். சில சமயம் வேலை மிகுதியால் நாம் தினசரியைப் பார்க்கவில்லை என்றால், தூரதேச நடப்புகளைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்காது. நம்மைப் பொருத்தவரை அங்கு ஏதும் நடக்கவில்லை என்பதே சரியான பதில். அங்கு ஏதும் நடக்கவில்லையா என்று கேட்டால், நமது மனது அதில் லயிக்கவில்லை; ஆதலால் நடக்கவில்லை. வேறொருவர் மனது லயித்திருந்தது, ஆதலால் அவருக்கு அது நடந்திருந்தது. இரண்டில் எது உண்மை என்று கேட்டால், மனம் எவருக்குத் தோன்றியதோ, அவருக்குத்தான் அந்த உலகம் இருந்தது என்பதே உண்மை அல்லவா? அதாவது, மனதின் அறிவாலேயே உலகம் காணப்படுகிறது.

இந்த வாதம் சிறிதே குழப்புகிறதோ? அப்படி என்றால் மேலும் இதை விளக்கப் பார்ப்போம். நடந்தது ஒரே நிகழ்ச்சி என்றாலும் ஒருவருக்கு அதைப் பற்றி அறிவு இருக்கிறது, இன்னொருவருக்கு அறியாமை இருக்கிறது. அந்தமட்டும் சரிதானே. இப்போது அறிவு என்பதும் அறியாமை என்பதும் என்ன என்று பார்ப்போமா?

(தொடரும்…)

5 Replies to “அறியும் அறிவே அறிவு – 2”

 1. நன்றிகள் பல திரு ராமன் அவர்களே
  புற உலகில் அற்புதங்கள் நடக்குமா இல்லையா என்றெல்லாம் யோசிக்கிறோம். நம்மை பற்றி, நாம் யார் என்பதைப்பற்றி யோசிப்பது இல்லை.இது சிக்கலான வாதம் தான் -ஆயினும் இந்த ரீதியில் வேறெந்த கலாச்சாரமும் யோசிப்பது இல்லை.
  நான் இப்போது தான் ரமணர் சொல்லும் நான் யார் விசாரத்தை பற்றி படிக்க த்தொடங்கியுள்ளேன். படிக்காத நேரங்களில் படித்ததை ப்பற்றி யோசித்தால் மலைப்பு மேலிடுகிறது. ” ஆமாம் , உண்மையிலேயே நான் யார்? எங்கிருந்து வந்தேன்? ” என்று யோசித்தால் சிறிது பயமும் கூட மேலிடுகிறது .
  இச்சிக்கலான விஷயத்தை தங்கள் தொடர் எளிமையான சொற்களில் பேசுகிறது. புரிதல் , தெளிதல் என்பதோ அவன் கைகளில் உள்ளது .அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
  அன்புடன்
  சரவணன்

 2. Pingback: Indli.com
 3. முந்தைய வாரத்தில் இருந்து வரும் தொடரை வரவேற்கும் அன்பர்களுக்கு நன்றி.

  திரு. சரவணன்: “நான் யார்” பதிப்பினை நாற்பது வருடங்கள் ஆயினும், இப்போது சில சமயம் நான் படித்தாலும் ஏதாவது புதிதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டது அது. எதுவும் பயப்படும் படியாக இருக்காது. அப்படியே இருந்தாலும் பயப்படுபவன் யார், பயம் என்றால் என்ன என்று தொடர வேண்டியது தான். ஆனால் இவை யாவும் மற்றவரிடம் வாதம் செய்யவதற்காக இல்லை. கேள்விகளை நம்முள்ளே நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாலும், வரும் பதில்களை புத்தி பூர்வமானது என்று ஞாபகம் வைத்துக் கொண்டு தொடரவும். அருள் எப்போதும் யாருக்கும் உண்டு.

 4. அது ஒன்றே முதலில் இருந்தது, ஒன்றாய், இரண்டாவதில்லாததாய், அது விரும்பியது நான் பலவாவேன் என என்னும் உபநிஷத் வாக்யத்திலிருந்து உறுதிப்படும் ‘அது நீயே’ என்னும் சொல் என்றாலும் இதனை நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது? எந்த விஞ்ஞானத்தால் அல்லது கணிதத்தால்? அவ்வாறு எதுவும் இல்லையே! எனவே அதனை நாமே தான் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். எவ்வாறு? தன்னையே தான் ஆராய்வது மூலமாக மட்டுமே இது ஸாத்யம். வேறு வழியில்லை. தன்னையே தான் ஆராய்வது ஸாத்யமா? ஸாத்யம் என்னும் நம்பிக்கையை நமக்கு அளிப்பனவே உபநிஷத்துக்கள்! இவற்றை நம்பித்தான் ஆராய்வைத் தொடங்கவேண்டும்!! எவ்வாறு? இதுகாறும் அவ்வாறு செய்து வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நமக்குக் காட்டிய பெரியோர் வழியில்!!!

 5. நான் இந்த தளத்தில் நிறைய மற்ற கட்டுரை கள் படித்துள்ளேன்.. ஆனால் ரமணர் என் அத்யந்த குரு..எதேச்சையாக ரமணகீதை தேடப்போக உங்கள் எழுத்து கண்ணில் பட்டது.. அருமை…..மிகவும் நன்றி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *