அயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்

mm71990-களின் தொடக்க ஆண்டுகளான 90-91 களில் நான் எந்தவொரு அமைப்பின் சார்பிலும் அல்லாமல் என் சொந்தப் பொறுப்பில் அயோத்தியில் பல மாதங்கள் தங்கினேன். ஹிந்து-முகமதியர் ஆகிய இரு தரப்பு மக்களையும் வீடு வீடாகச் சென்று சந்தித்தேன்.

ராம ஜன்ம பூமியில் வலுக்கட்டாயமாக எழுப்பப் பட்டிருக்கும் பாப்ரி வெற்றிச் சின்ன மண்டபம் அகற்றப்பட்டு அங்கு ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமன்) ஆலயம் ஒன்றை எழுப்புவது எந்த அளவுக்கு நியாயம், அவசியம் என்பதை எடுத்துக் கூறி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதில் முனைந்திருந்தேன். எனக்கு ஹிந்தி, உருது மொழிகளை மிகவும் சரளமாக மக்கள் பேசும் மொழியிலேயே பேசிப் பழக்கமாதலால் மக்களுடன் கலந்துறவாடுவது மிகவும் எளிதாகவே இருந்தது.

அதற்கு முன் முலாயம் சிங் முதலமைச்சராக இருந்தபொழுது அயோத்தியி்ன் எல்லைக்குள் கர சேவகர்களை உள்ளேயே நுழைய விடாமல் துப்பாக்கிச் சூடு நடத்திப் பல ஹிந்து இளைஞர்களும் சாதுக்களும் கொல்லப்பட்டிருந்ததால் அயோத்தி ஹிந்துக்களிடையே கோபாவேசம் இருந்தது. ஆனால் மிகவும் சிரமப்பட்டு அதனை அடக்கி வைத்திருந்தனர். முகமதியர் வட்டாரத்திலும் மாநில அரசு கர சேவகர்கள் மீது இத்தனை கடுமையாக நடந்துகொண்டிருக்க வேண்டாம் என்ற அதிருப்திதான் நிலவியது.

வெளியார் எவரும் அயோத்தி எல்லைக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற் தடையுத்தரவு போடப்பட்டிருந்த அந்த இக்கட்டான சமயத்திலும் நான் அல்லோபதி மருந்துகள் த்யாரிக்கும் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக என்னை அடையாளம் காட்டிக்கொண்டு எளிதாக நகரின் உள்ளே பிரவேசித்துவிட்டேன். எனினும் ஊரில் மிகக் கடுமையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்ததால் ராம ஜன்ம பூமியில் ஸ்ரீ ராம் லல்லாவை தரிசிப்பதே பெரும்பாடாக இருந்தது. பூ, பழம், இனிப்பு என்று வாங்கிக்கொண்டு பரம பக்தனாக என்னைக் காண்பித்துக்கொண்டு மண்டபம் உள்ளே சென்றேன். வழக்கமாக வந்து பூஜை செய்துவிட்டுச் செல்லும் அர்ச்சகர்களுக்கு மட்டுமே அன்று உள்ளே செல்ல அனுமதி இருந்தது.

mm4ஹனுமன் சாலிஸாவை ஆவேசத்துடன் உரக்க முழங்கிக் கொண்டு நான் மண்டபத்தை நோக்கிச் செல்லக் கண்டு மத்திய சிறப்புக் காவல் படையினர் சற்று மிரண்டுவிட்டனர். முதலில் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று சொன்னவர்கள் பிறகு, என்ன செய்வதுஜீ, எங்களுக்கு மட்டும் இப்படித் தடுத்து நிறுத்துவது சந்தோஷமாகவா இருக்கிறது, வயிற்றுப் பிழைப்புக்காகவே இந்தப் பாவத்தைச் செய்கிறோம்; சரி நீங்கள் போய் லல்லாவை தரிசித்துவிட்டுச் சீக்கிரம் வந்துவிடுங்கள் என்று என்னை உள்ளே அனுப்பிவைத்தனர்! எல்லாம் அனுமன் அநுக்கிரஹம்தான்!

அந்தக் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு சுபாவமாகவே விட்டுக்கொடுத்தும் அடங்கியும் போய்ப் பழக்கப்பட்டு, பாப்ரி மண்டபம் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அதுவரை சொல்லிக்கொண்டிருந்த பல அயோத்தி நகரத்து ஹிந்துக்கள் கூடக் கொதிப்படைந்து பாப்ரி மண்டபம் அகற்றப்பட்டு அங்கு ஸ்ரீ ராம் லல்லாவுக்கு முறையான ஆலயம் எழுப்ப வேண்டியதுதான் என்று சொல்லத் தலைப்பட்டனர். ஆக, முலாயம் கூட அயோத்தி ராம ஜன்ம பூமியில் பாப்ரி மண்டபம் அகற்றப்பட்டு ஆலயம் அமைப்பதற்கு அயோத்தி ஹிந்துக்களிடையே ஆதரவு பெருக எதிர்மறையாக உதவிசெய்துவிட்டார்! அதுவும் அனுமன் அநுக்கிரஹம்தான்!

வெளியிலிருந்து வருபவர்கள்தான் இங்கே பாப்ரி மண்டபம் சம்பந்தமாகப் பிரச்சினை செய்கிறார்கள், அதனால் எங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று சுயநலத்துடன் சொல்லிக் கொடிருந்த அயோத்தி நகர சராசரி ஹிந்துக்கள்கூட முலாயம் சிங்கின் துரோகச் செயல் கண்டு எரிச்சலடைந்து மனம் மாறி, ஆமாம், பாப்ரி மண்டபம் போய்த்தொலைய வேண்டியது தான் என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள்.

a001-omnia-vanitas-all-is-vanityமக்களின் கோபம் அடுத்து வந்த உத்தரப் பிரதேச சட்ட மன்றத் தேர்தலின்போது வாக்குச் சீட்டுகளில் பகிரங்கமாக எதிரொலித் தது. பாரதிய ஜனதாவின் கல்யாண் சிங் முதல்வரானார். நான் மீண்டும் அயோத்தி சென்று ராம ஜன்ம பூமியில் பாப்ரி மண்டபத்தை அகற்றி ராம் லல்லாவுக்கு ஆலயம் எழுப்பும் பணிக்கு உள்ளூர் மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஒளிவு மறைவின்றி ஈடுபடலானேன்.

நான் செல்வந்தன் அல்ல. எந்தவொரு நிறுவனத்திலும் தொடர்ந்து பணியாற்ற இயலாத அளவுக்கு மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளவும் முறைகேடுகளுடன் சமரசம் செய்துகொள்ளவும் முடியாதவனாய் இருந்தமையால் தங்கு தடையின்றி மாதா மாதம் ஒரு கணிசமான தொகையை மாதச் சம்பளமாகப் பெறும் வாய்ப்பு எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. நித்ய கண்டம், பூர்ணாயுஸுதான் எங்கும்! தொடக்கத்திலிருந்தே எந்தவொரு பத்திரிகை அல்லது விளம்பர நிறுவனத்துடனும், அவ்வளவு ஏன், விசுவ ஹிந்து பரிஷத்திலுங்கூட என்னால் தொடர்ந்து நீடிக்க இயலவில்லை!

கை வலிக்க, முதுகு வலிக்க எழுதிச் சம்பாதிக்க வேண்டிய நிலைதான் எப்போதும். இன்றுங்கூட இதே நிலைமை தான்!. ஆகவே அயோத்தியில் சொந்தச் செலவில் தங்கியிருப்பது எனக்குத் தொடக்கத்தில் பெரும் பிரச்சினையாகவே இருந்தது. ஆனால் நல்ல வேளையாக எனது நோக்கத்தைப் புரிந்துகொண்ட அயோத்தி வட்டார அக்காடாக்கள் மனமுவந்து எனக்கு இருக்க இடமும் உண்ண உணவும் அளிக்கலானார்கள்.

அக்காடா என்பதற்குக் குறிப்பாக மல்யுத்தப் பயிற்சிக்களம், உடற்பயிற்சிக் களம் என்றெல்லாம்தான் பொருள். ஆனால் அவை ஹிந்து துறவிகள் தங்குமிடமாகவே உள்ளன.

mm5இதற்குக் காரணம், முகமதியர் ஆட்சிக் காலத்தில் ஹிந்துக்களுக்கு மத ரீதியாகப் பல அடக்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் நீடித்து வந்தன. அப்பொழுது அவற்றை எதிர்த்து நிற்பதற்கு ஹிந்து இளைஞர்களைத் திரட்டினர் துறவிகள். இளைஞர்களுக்குப் போர்க் கலைப் பயிற்சிகளை அளிக்கும் பொறுப்பை ப்லவாறான யுத்த முறைகளில் தேர்ச்சிபெற்ற துறவிகளே மேற்கொண்டிருந்தனர். ஆகவே துறவியர் ஆசிரமங்கள் அக்காடா என்றே அழைக்கப்படலாயின. இன்றளவும் இப்பெயர் நிலைத்துவிட்டது!

அக்காடாகள் தவிர மேலும் சில ஹிந்து, முகமதிய இல்லங் களிலும் என்னை உபசரித்து, தேனீர் தின்பண்டங்கள் என்றெல்லாம் வழங்கலானார்கள்.

ஹிந்துக்களிடம் மட்டுமின்றி முகமதியரிடமும் ஒரேயொரு விஷயத்தைத்தான் நான் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்வேன்:

“கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாடிகன்சிடியிலோ முகமதியரின் மெக்காவிலோ, யூதர், கிறிஸ்தவர், முகம்தியர் மூவருக்கும் புனிதமான ஜெருசலேமிலோ அவற்றின் எல்லைக்கு அப்பாலுங்கூட மாற்றுச் சமயத்தினரின் வழிபாட்டுத் தலம் அமைய இயலாது.

இந்த நாடு அடிப்படையில் ஹிந்து நாடு. ஹிந்துக்கள் இங்கு ஏழு இடங்களை மிகப்புனிதமான புண்ணியத் தலங்களாகப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் போற்றித் துதித்து வருகிறார்கள். இவற்றை ஸப்தபுரி என்றும் ஸ்ப்த மோட்சபுரி என்றும் ஸப்த தீர்த்த என்றும் ஹிந்துக்கள் மனதாலேயே வணங்கி வருகிறார்கள்.

காசி, காஞ்சி, மாயாபுரி (ஹரித்துவார்), அயோத்யா, அவந்திகா (உஜ்ஜயினி), மதுரா, த்வாராவதி (துவாரகை), ஆகியவையே இந்த ஏழு புண்ணியத் தலங்கள். இதுபற்றி ஸமஸ்க்ருததில் உள்ள ஸ்லோகம், ‘காசி, காஞ்சி, மாயா, அயோத்யா, அவந்திகா, மதுரா, த்வாராவதி, சைவ ஸப்தைத மோக்‌ஷதாயிகா’ என்பது.

இந்த ஏழு தலங்களில் ஹிந்துக்களை அடிமைப் படுத்தியுள்ளோம் என்று பிரகடனம் செய்து அவர்களைத் தஙளின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட பிரஜைகள் (ஸப்ஜெக்ட்ஸ்) என்று அறிவுறுத்தி அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே முகமதிய அரசர்கள் ஹிந்துக்களின் புனிதத் தலங்களில் வேண்டுமென்றே மசூதிகளையும் வெற்றிச் சின்னங்களையும் எழுப்புயிளனர். இது நியாயம் என்று கருதுகிறீர்களா?”

இந்தக் கேள்வியை முகமதியர், ஹிந்துக்கள் என்ற பேதமின்றி அனைவரிடமும் எழுப்புவேன். ஹிந்துக்களில் மிகப் பெரும் பான்மையினர் நீங்கள் சொலவது சரிதான் என்று உடனே ஒப்புக்கொள்வார்கள். ஒரு சிலர் மட்டும், ‘நாம் நமது நம்பிக்கைப்படி அவற்றைத் தொடர்ந்து புண்ணியத் தலங்களாக மனதால் போற்றி வணங்கி வந்தால் போதாதா, இப்போது இந்தப் பிரச்சினையைக் கிளப்பினால் சகிப்புத்தன்மை இல்லாத முகமதியர் பெருங் கலவரங்களளில் இறங்கி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கை நரகமாகிவிடுமே’ என்பார்கள்.

mm6ஆனால், மிகவும் ஆச்சரியப்படும் விதமாக அவர்கள் வீட்டுப் பெண்மணிகள் ‘அதற்காகப்ப பேசாமல் கிடக்க வேண்டுமா? அவர் சொல்வதுபோல் இந்த ஏழு ஹிந்து புண்ணியத் தலங்களில் மட்டுமாவது நமது கோயில்கள் மீட்கப்படலாம் அல்லவா?’ என்று குரலை உயர்த்திக் கேட்பார்கள்.

நான் சற்றும் தாமதியாமல் அவர்கள் காலில் விழுந்து கும்பிடுவேன். உடனே அவர்கள் பதறிப்போய், ‘பாபுஜி, நீங்கள் இப்படிச் செய்வது எங்களுக்குப் பெரிய அபசாரமாகிவிடும்’ என்பார்கள். ‘அம்மா, நீங்கள் துர்கா மாதாக்கள். உங்கள் தாள்களில் விழுந்து வணங்குவதில் தவறே இல்லை’ என்பேன். நமது பாரம்பரியமும் கலாசாரமும் சமயக் கோட்பாடுகளும் இன்றளவும் உயிர்த் துடிப்புடன் இருப்பதற்குக் காரணம் நம் பெண்மணிகளே என்ற உண்மையை அங்கு கண்கூடாகக் கண்டேன்

முகமதியரிடம் இதே கேள்வியைக் கேட்கும்போது அவர்கள் மிகவும் சங்கடமாக உணர்வார்கள். சிலர் நான் சொலவது சரியே என்று ஒப்புக் கொள்வார்கள்.

நான் அணுகிய முகமதியரில் ஸுன்னி, ஷியா ஆகிய இரு பிரிவினருமே கணிசமான அளவில் இருந்தனர். ஷியாக்களிடையே எனது கருத்துக்குப் பெரும் ஆதரவு இருந்தது. பலர் வெளிப்படையாகவே, ‘ஆம், இது ஹிந்துஸ்தானம், இதனை ஹிந்து தேசமாக அதிகாரப் பூர்வமாக அறிவிப்பதே நியாயம். அப்போதுதான் எல்லா மதத்தவருக்கும் இங்கே பாதுகாப்பு இருக்கும். பாகிஸ்தானில் ஷியாக்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

mm11அங்கே அவர்கள் நிம்மதியாக மொஹரம் பண்டிகையை அனுசரிக்க முடியாது. ரம்ஜானைக்கூட பாகிஸ்தான் ஷியாக்கள் இடையூறில்லாமல் அனுசரிக்க முடிவதில்லை. ரம்ஜான் நோன்புக் காலத்தில் ஷியாக்கள் வழிபாடு செய்கையில் புனிதமான மாதமயிற்றே என்ற எண்ணங்கூட இல்லாமல் ஷியாக்களின் வழிபாட்டுத் தலங்களில் திடீர்த் தாக்குதல் நடத்தி மசூதிகளைச் சேதப்படுத்தி ஷியாக்களைக் கொன்றும் படுகாயப்படுத்தியும் மகிழ்வது பாக்கிஸ்தான் ஸுன்னிகள் வழக்கம்!

ஹிந்துஸ்தானத்தில்தான் ஷியாக்கள் ஸுன்னிகளின் உபத்திரவம் இல்லாமல் தங்கள் மத சுதந்திரத்துடன் வாழ முடிகிறது’ என்றனர்.

அவர்களில் விவரம் அறிந்தவர்கள் இன்னொரு தகவலையும் தெரிவித்தனர்:

mm9‘நியாயப்படி இங்கே ஜன்மஸ்தானில் இருக்கிற பாப்ரி மண்டபத்தைக் கட்டிய மீர் பாக்கி ஒரு ஷியாதான். பாபர் ஒரு ஸுன்னி என்று சொல்லப்பட்டாலும் அவன் பெரிதும் சிலாகித்தது ஷியாக்கள் மிகுந்த பாரசீகத்தைத் தான். மேலும் பாரசீக ஷியாக்களே பாபரின் தர்பாரில் செல்வாக்கு மிகுந்து விளங்கினர். ஆனால், ஸுன்னிகள் தமது பெரும்பான்மை பலத்தால் பிற்பாடு ஷியாக்களுக்குச் சொந்தமான இடங்களைக் கவர்ந்துகொண்டனர்.

இவ்வாறு ஸுன்னிகளால் கவரப்பட்ட உடமைகளில் ஒன்றுதான் பாப்ரி மண்டபமும். அது ஸுன்னிகளின் வக்பு வாரியத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. இப்படிப் பிறர் உடமைகளைக் கவர்ந்து கொள்வது ஸுன்னிகளுக்கு வாடிக்கைதான்.

உதாரணமாகப் பாகிஸ்தான் தோன்றக் காரணமாயிருந்த ஜின்னாவே ஒரு ஷியாதான். ஆனால் இன்று அங்கு ஸுன்னிகளின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. ஹிந்துஸ்தானத்தில்கூட எங்களுக்கு ஹிந்துக்கள் வேண்டுமானால் உதவுவார்களே தவிர, ஸுன்னிகள் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்!’

இவ்வறு சொன்ன ஷியாக்கள் பலர், ஜன்மஸ்தானில் பாப்ரி மண்டபம் அகற்றப்பட்டு ஸ்ரீ ராம் லல்லாவுக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று ஹிந்துக்கள் விரும்பினால் அது நியாயமே என்றும் ஒப்புக்கொண்டார்கள்.

ஷியாக்களின் மன நிலையை ஊர்ஜிதம் செய்வதுபோலவே இன்று அயோத்தி மனை பாத்தியதை பற்றி அலஹாபாத் உயர் நீதிமன்ற லட்சுமணபுரி (லக்நவ்) பெஞ்ச் தீர்ப்பு தொடர்பாகப் பெரும்பாலான ஷியாக்களின் பிரதிநிதிகள் சார்பில் ஓர் அறிக்கை வந்துள்ளது. ஷியா இளைஞர்களின் அமைப்பான ஹுசைனி டைகர்ஸ் (ஹுசைனி புலிகள்) என்ற அமைப்பினர், உயர் நீதி மன்றத் தீர்ப்பை முழு மனதோடு வரவேற்றிருப்பதோடு, ஆல் இண்டியா முஸ்லிம் பெர்சனல் லா போர்டு எனப்படும் அகில பாரத முகமதிய குடிமைச் சட்ட வாரியத்திடம் லக்நவ் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும் தீர்ப்பை ஏற்று ஸ்ரீ ராமர் ஆலயம் அமைய ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஸுன்னிகளின் மத்திய வக்பு வாரியத்திற்கும் இதேபோல் விண்ணப்பித்துள்ள ஹுசைனி புலிகள் இயக்கம், ராம ஜன்ம பூமியில் ஸ்ரீ ராமர் ஆலயம் அமையத் தங்கள் சார்பில் ரூபா பதினைந்து லட்சம் நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

mm2ஹுசைனி புலிகள் அமைப்பின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் ஷாமில் ஷம்ஸி இதுபற்றி விடுத்துள்ள அறிக்கையில், ‘அயோத்தி விவகாரம் இனியும் நீடித்துக் கொண்டிருப்பதை முக்கியமாக ஷியாக்களும் இன்னும் பல முஸ்லிம் இளைஞர்களும் விரும்பவில்லை. உயர் நீதி மன்ற லக்நவ் பெஞ்ச் தீர்ப்பை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்வதே முறை என்று நாங்கள் கருதுகிறோம்’ என்று குறிப்பிடுகிறார்.

வாக்கு வங்கிக்காகத் தீர்ப்பை எதிர்த்து முகமதியரைத் தூண்டிவிடும் முலாயம் சிங்கை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். தீர்ப்பை எதிர்க்கும் தில்லி ஜும்மா மசூதி ஷஹி இமாம் சையது அஹமது புகாரிக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அகில பாரத முஸ்லிம் குடிமைச் சட்ட வாரிய உறுப்பினர்களைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அகில பாரத முஸ்லிம் குடிமைச் சட்ட வாரியத்தில் ஷியா பிரிவு பிரதிநிதியாக உள்ள மவுலானா கல்பே ஜவ்வாத் என்பவர்தான் இந்த ஹுசைனி புலிகள் அமைப்பின் புரவலராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

464781585_1476f49278ஹுசைனி புலிகள் இயக்கத் தலைவர் ஷம்ஸி, பாப்ரி மண்டபம் இருந்த இடத்தில் ஒதுக்குப்புறமாகத் தரப்பட்டுள்ள மூன்றிலொரு பாகத்தில் மசூதி கட்டிக் கொள்ள ஹிந்துக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்தச் செய்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் லக்நவ் பதிப்பின் அக்டோபர் 6, 2010 இதழில் வெளியாகியுள்ளது. பி.டி.ஐ. செய்தி நிறுவனம் அக்டோபர் முதல் தேதியே இச்செய்தியை விநியோகித்து விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் பாப்ரி மண்டபம அகற்றப்பட்டு அங்கு ஸ்ரீ ராம் லல்லாவுக்கு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்கிற ஹிந்துக்களின் கோரிக்கையை உத்தரப் ப்ரதேசத்து ஷியாக்கள் எதிர்க்கவில்லை என்று நான் ஒரு கட்டுரையைத் திண்ணை டாட் காம் என்ற இணைய தளத்தில் எழுதினேன். அப்பொழுது, இங்குள்ள முகமதிய நண்பர்கள் பலர் நான் வெறுமே கதைப்பதாகக் கூறி நகைத்தனர். நான் தந்த தகவல் உண்மையே என்பதற்கு ஆதாரம்போல இருக்கிறது, ஹுசைனி புலிகள் அமைப்பின் தற்போதைய அறிக்கை.

9 Replies to “அயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்”

 1. Jai Shri Ram.
  Fantastic CLARITY and PROUD Perspective.
  Our respects to Shri. Malarmannanji.
  Thank you and God Bless.
  Kind Regards,
  Srinivasan. V.

 2. மிக தெளிவாக எழுதப்பட்ட கட்டுரை.பல விஷயங்கள் தெரிய படுத்தியதற்கு நன்றி.பல ஆங்கில கட்டுரைகளும் படித்திருந்தாலும் உங்கள் கட்டுரயை படிக்கும் பொது அதன் பயன் உணர்தேன்.மீண்டும் நன்றியுடன்
  உத்தம நாராயணன்
  கோவை.

 3. Pingback: Indli.com
 4. மரியாதைக்குரிய திரு மலர் மன்னன் ஐயா அவர்களுக்கு,
  என்னுடைய வணக்கங்கள்,
  நீங்கள் செய்த, செய்து கொண்டுள்ள பணிகள் மிகவும் போற்றத்தக்கது.
  ராம் லால்லவுக்காக இவ்வளவு கஷ்ட்டபட்ட ஒரு தமிழரா?
  நன்றி,நீங்கள் செய்த களப்பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

 5. வெறும் வாய்சவடாவாகமில்லாமல் காரியத்திலும் தங்கள் ராம பக்தியை காட்டிவிட்டீர்கள்! ராமனின் அருள் தங்களுக்கு என்றென்றும் உண்டு!

 6. சரியான நேரத்தில் வந்திருக்கும் பரவசமூட்டும் கட்டுரை. அருமை!

 7. Thank you Shri Malarmannanji.
  My prayers for Shri Rama to bless you with long peaceful life and to continue your fantastic work

 8. மிக்க நன்றி ஐயா.
  நீங்கள் திண்ணையில் எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து ஆ.வி. முதலான பல பத்திரிகைளில் வெற்றிகரமாகப் பின்னூட்டம் எழுதி இருந்தேன். அந்தக் கட்டுரை இதைவிட உபயோகமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *