பாரதியின் சாக்தம் – 1

rajarajeshwari-panchapredhasana

சக்தியை வழிபடுவதுதான் சாக்தம் என்பதற்கும், சாக்தம் என்பதன் கீழ் கொண்டுவரப் பட்டிருக்கும் பெண்ணின் அகப்புற உலகின் தெய்விக ஆக்கத்திற்கும் நெடும் வித்யாசம் இருக்கிறது. சக்தி, சிவனின் மனைவி. சக்தி வழிபாடு ஒரு விதத்தில் சைவத்தினுள் அடக்கம் என்பது போன்ற புரிந்துகொள்ளல்கள் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வைத்து நோக்கும் பொழுது சரியெனத் தோன்றலாம். ஆனால் சாக்தத்தின் பல புரிகளை ஒப்பிட்டு நோக்கும் போது பெண் என்ற மெய்மையின் வழி பரம்பொருளைப் பற்றிய தரிசனம் சக்தி, சிவன், விஷ்ணுவின் யோக மாயா, சாமுண்டீ, பவானி என்று பல விதங்களில் தன்னை உரைபொருளாய் ஆக்கிக்கொள்கிறது என்பதுதான் நமக்குப் புரிய வருவது. இத்தகைய ஒரு யதார்த்தமான பார்வை இவ்வளவு அழுத்தமாக, படிப்புக்கு இலக்காகி இருப்பதும் வழிபாட்டின் உணர்ச்சிகளுக்கு வடிவமாகியிருப்பதும் பெரும் வியப்பே.

சாக்தத்தின் தொடக்கத்தை வேதங்களில் தேடலாம்; பண்டைய இனக்குழுப் பாடல்களிலும், நம்பிக்கைப் பயிலல்களிலும் தேடலாம்; பௌத்தம், சமணம் இவை தம் நிலை பெருத்துப் பின் பிறழ்ந்து, சூழ்நிலைப் பண்பாட்டு அம்சங்களை உள்வாங்கி, உளவியல், யோகம் முதலியவற்றை உள்பெய்து விரிவாக்கிய தாந்திரிக வழிபாட்டுத் தடங்களிலும் தேடலாம்; இவைக்கு முன்னும், இவையோடும், இவற்றின் அம்சங்கள் சிலவற்றை ஏற்று இவற்றின் பின்னும் தன்னை வளர்த்திக்கொண்ட ஹிந்துவின் பன்முகப் பலபரிமாணப் பார்வையின் செழிப்பிலும், செறிவிலும் ஒரு முக்கிய ரத்தினமாக இருப்பது சாக்தம் என்ற பெயரால் குறிப்பிடப்படும் பெண்மையின் பாரமார்த்திகத் தந்திரம்.

சாக்தத்தில் ஹிந்து சாதித்திருப்பது முன்மாதிரிப் படிவத்தின் முழுமாற்றச்சோதனை (Paradigm Shift). அந்த ஒன்றிலேயே அவன் தன் சுயத்தின் பரிசோதனையையும் நிகழ்த்தியிருக்கிறான். பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது.

‘யாரவன்’ என்று கேட்டு எழுந்த சமயத் தேட்டங்கள் பெருமதங்களாய் வடிவு துலங்கி நிற்கின்றன. ‘ஆணல்லன், பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்’ என்று புருஷோத்தமனைப் பற்றி எழுந்த வைணவமும், ‘தாயுமிலி, தந்தையிலி, தான் தனியனாய்க் காயில் உலகனைத்தும் கற்பொடியாய் ஆக்கும்’ அரனைப் பற்றி எழும் சைவமும் செழிக்கும் காலத்தின் ஊடேயே ‘யாரவள்’ என்று கேட்டு எழும், பெண்மையின் ஊடே பரத்துவத்தை உள்வாங்கும் சாக்தமும், ஒரே மக்களின் மாற்று ஊக்கமாய்க் கிளர்வது ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்று.

சாக்தத்தில் சக்தி என்பவள் விஷ்ணு மாயை. விஷ்ணுவின் துயில். சிவனின் மனைவி. சைவ சித்தாந்தத்தில் சிவன் சுத்த மாயையை நோக்க அதனால் கலக்குண்ட சுத்த மாயா பாகம் சிவனால் அதிட்டிக்கப்பட்டு சக்தி என்று பேர் பெறுகிறது. ஆக ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்.

devi_maha_shakti

அது என்ன சக்தியை வழிபடுவது? சக்தி என்பது ஆற்றல். ஆற்றல் என்பது மாற்றுவது. மாறாத உணர்வுப் பொருளாய்ப் பரம்பொருளைப் பரவும் அணுகுமுறை ஒரு பக்கம் எனில், மாற்றங்களின் மொத்த வடிவாய்ச் சக்தியைப் போற்றுதல் மறுபக்கம். மனம், மொழி தாண்டி மாறாத உணர்வின் சத்யம் என்பது ஒரு தரிசனம். ஆயினும் மனம், மொழி, உடல், உலகம், பூத பௌதிகம் அனைத்தையும் உள்ளடக்கி, ஊடு பாய்ந்து, உள் நின்று இயக்கும் பெரும் இயக்கத் தொடரின் முழுமை, நாமும் அதன் அங்கம், அதன் ஒரு கண்ணி என்று உணரும் பொழுது சக்திதான் இருக்கிறது, உலகம் இல்லை; உலகம் சக்தியாக இருக்கிறது என்பது நிதர்சனமான பார்வையாய் எழுகிறது. அங்குதான் சக்தி வழிபாட்டின் முக்கியமான கேந்திரம் இருக்கிறது. அந்த இயக்க முழுப்பார்வை புத்தியில் தட்டாதவரை தகதகதகவென உயிர்க்குல முழுமைக்கும் இயக்கம் ஊட்டியபடி பிரம்மாகாரமாய் (பேருணர்வின் வடிவாய்) நிலவும் சக்தி ஸ்வரூபம் நமக்கு வெறுமனே பெண் விக்ரகமாய், தாயின் பிரதிமையாய் வணங்கத்தக்க ஆலயப் பொருள்; அவ்வளவே.

பாரதியின் பார்வை இந்த கேந்திர ஸ்தானத்தில்தான் நிலைகொண்டு இருக்கிறது என்பதையும், அந்தச் சக்தி தரிசனம் பாரதிக்குக் கிடைத்தது எவ்வாறு என்பதையும், அதைப் புரிந்து கொள்ளும்போது நம் நோக்கு எப்படிச் செழிக்கும் என்பதையும் இந்தக் கட்டுரையில் காணலாம் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னர் ஒரு முன்னோட்டமாக சாக்தம், அதன் துறை சார்ந்த புரிதல்கள், நூல்கள், சாக்த நெறியாளர்களின் புரிந்துகொள்ளலுக்கு ஏற்ப அவர்கள் தம் பனுவல்களில் பதிந்து வைத்த முடிவுகள் முதலியவற்றைப் புரிந்துகொள்வது பாரதியின் சாக்தம் என்ன என்பதைப் பின்னர் காண்பதற்கு உதவியாய் இருக்கும்.

மனிதன் பெரும் ஆற்றல் கொண்டு ஈடுபடும் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் அது போராய் இருந்திருக்கிறது; விளையாட்டாய் இருந்திருக்கிறது; காதல், காமம், இன்பக் கேளிகள் என்பனவாய் இருந்திருக்கின்றன. மனிதனே தன்னை மீறிய ஒரு நிலையில், தான் இயங்கியதாக உணரும் தருணங்கள் இவை. தான், சில கணங்களே நிலைக்க முடிந்த இந்த நிலைகளை, இந்த நிலைகளின் விளைவுகளை எண்ணிப்பார்த்து, தான் என்றென்றும் இந்த நிலைகளிலேயே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை, அது தன் வாழ்வியல்பால் முழுக்க முழுக்க முடியாமல் போனாலும் எவ்வளவு அதிக நேரம் தான் அந்த உச்சக் கணங்களில் நிலவ முடிகிறது என்ற எண்ணமாக மலர்கிறது. தன்னால் முடியாத ஒன்று, தனக்கு மறுக்கப்பட்ட ஒன்று அல்லது தன்னுடைய இப்பொழுதைய நிலையில் சாத்தியப்படாத ஒன்று, சாத்யமான முழு வடிவம் அவன் உணர்விலும், தோய்விலும் சக்தி என்ற பேருருவாக எழுகிறது. இயக்க மயமாக முற்றிலும் தான் ஆகிவிட முடிந்த சாத்தியப்பாட்டின் ஒரு கோடியில் இருக்கிறது அவனுடைய சக்தி பீடம். தான் என்ற உண்மைக்கெல்லாம் உண்மையாய் இருக்கும் அவன் அகத்தின் ஊடுபாவாய்ச் சமைந்த சத்தியத்தின் ஈறுநிற்கும் சான்றாண்மையைத் தேடி அவன் உணர்வு நிகழ்த்தும் நிர்வாண அகமெய்மைப் பயணம், அதன் ஒரு கோடியில் திகழ்கிறது அவனுடைய பிரம்ம ஸத்பாவம்.(பேருணர்வோடு ஒன்றிய உள்ள நிலை). ஆற்றல் என்னும் பிரபஞ்ச மூர்த்தமாய் மாறி, அகிலமெங்கும் நான் நான் என்று அவன் அகம் பூத்தவண்ணம் இருக்கும் இயக்க ஸ்திதியின் சத்யம், நித்ய நிகழ்வண்ணமாய் இருப்பது. விரியும் பேருணர்வின் சுடரொளியில் காண ஒண்ணாது மறைந்துபடும் உலகின் பேத தரிசனம், தான் அதுகால் மறைத்துவந்த ‘ஒன்றாகக் காண்பதே காட்சி’ என்ற அகவிழியின் புலத்தைக் காட்டிக் காண்பானும் காண்பொருளும் காட்சியும் ஒன்றாகும் விந்தையாயும் இருப்பது. உணர்வின் கோடி ஆண். இயக்க ஆற்றலின் ஸ்வரூபம் பெண். சக்தி சிவம். பிரம்மம் காளி. ஸ்ரீராமகிருஷ்ண முனியின் வாக்கில் ‘பாம்பு சுருண்டு இயக்கமற்றுக் கிடக்கும் நிலை பிரம்மம். ஓடும் பாம்பு காளி.’ முழு உணர்விற்கும், முழு ஆற்றலுக்கும் பேதம் இல்லை. ஒன்றே. இதை யோக ரீதியில் சாதிக்க முயல்கிறது சாக்த தந்திரங்கள். உலகம் என்ற பிரம்மாண்டத்தின் நிதர்சனம் உடல் என்ற பிண்டாண்டத்தின் நிதானமாகவும் இருக்கிறது என்கிறது சாக்தம்.

kundalini_snakeயோகம் மனிதனை ஏழு சக்கிரங்களில் உணர்வு நிலை ஏறி முற்றி ஏழாவதான தலையில் இருக்கும் ஆயிரம் இதழ்க் கமலம் ஆன உணர்வின் சுருக்கற்ற விரிநிலையில் தன் விடுதலையை உணரும் ஜீவனாகக் காட்டுகிறது. உலகத்தில் பிரம்மம் சக்தி அபேதம். அதுபோல் உடலில் ஜீவன், குண்டலினி அபேதம் என்கிறது. குண்டலினி என்பது மனிதனின் வெளிப்படாத, வெளிப்பட்ட ஆற்றலின் முழு உருவம். முதுகுத் தண்டின் அடிப்பீடமாகத் திகழும் மூலாதாரம் என்ற சக்கிரத்தில் மூன்றரைச் சுருள் சுருண்டு கிடக்கும் குண்டலினிப் பாம்பு என்று மனித சாத்யமான ஆற்றலை உருவகப் படுத்துகிறது யோக சாத்திரம். இந்தக் குண்டலினி இல்லையேல் ஜீவனின் விடுதலை இல்லை. சக்தி இல்லையேல் உலகில் இயக்கம் இல்லை.

இந்தச் சக்தி வெளிப்படும் பொழுது மனிதனில் ஆரம்ப காலங்களில் கீழ்மை உணர்ச்சிகளாகத்தான், வேகங்களாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் அவை ஆற்றலின் வெளிப்பாடு. அவற்றைக் கண்டு வெருவாமல் மேலும் மேலும் வளர்த்திக் கொண்டு போய் அடுத்த அடுத்த சக்கிரங்களில் உணர்வு ஏறிக்கொண்டே போனால்தான் ஜீவனின் விடுதலையை நோக்கிய யாத்திரையில் முன்னேற்றம். உணர்ச்சிகளின் மூலம் மனிதனின் ஆற்றல் விரயம் ஆவதன் மூல காரணத்தைக் கவனத்தில் கொண்டு வருகிறது யோகம். அதாவது மனம் ஒருமைப் படாமல் சிதறி, வெளிமுகப்பட்டு, தான் புறக்காரணங்களால் அலைக்கழிக்கப்படும் பந்துபோல் ஆவதே இந்த விரயத்திற்கான காரணம் என்கிறது. அதைத் தடுக்கத்தான் மனப்பயிற்சிகளைத் தருகிறது. மனப்பயிற்சியால் ஏதோ வெளியிலிருந்து புதிய ஆற்றல் பெறப்படுவதில்லை. ஆற்றலின் சிதறல்தான் தடுக்கப்படுகிறது.

sahasrara-chakraமூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எழுந்து பேருணர்வை நோக்கிய பயணத்தில் இடம் வலம் என்று எங்கும் கவனம் சிதறிவிடாமல் நேருறக் கண்டு சென்று உச்சந்தலையில் இருக்கும் ஆயிரம் இதழ்த் தாமரை என்று கூறப்படும் சகஸ்ராரம் என்ற சக்ரத்தில் பேராற்றலும் பேருணர்வோடு ஐக்யம் அடைவதுதான்- முக்தி என்பதுதான்- சாக்த சாராம்சம். பேருணர்வாகிய பிரம்மத்தைச் சிவம் என்கிறது சாக்த தந்திரம் சில. சிவ சக்தி ஐக்யம் என்று பேசுகிறது இந்த ஜீவனின் முக்தி நிலையை.

மஹாயான தந்திரம், சாக்த தந்திரம், வைஷ்ணவ தந்திரம், சைவ தந்திரம் என்று எந்தத் தந்திரமானாலும் தெய்வ பேதம் இல்லாமல் அனைத்தும் இந்த யோக மயமான உணர்வு ஆற்றல் ஐக்யத்தைப் பற்றிப் பேசுகின்றன. முழு உணர்வில் முழு ஆற்றலும் ஐக்யமாவதுவே ஜீவனின் முக்தி என்பது அனைத்துத் தந்திர சாரம்.

சாக்தம் இந்த ஐக்யத்தை இருமுனைகளிலும் தொடங்கி சாதிக்கும் வழிகளை வளர்க்கிறது. உணர்வின் கோடியிலிருந்து இந்த ஐக்யத்திற்கான பிரஸ்தானத்தை (முக்கியப் பனுவல்) வளர்க்கும் சாக்த மார்க்கம் ஸமயாசாரம் என்றும், ஆற்றலின் கோடியிலிருந்து இந்த ஐக்யத்தை அடைய நெறிகாட்டும் மார்க்கம் கௌலம் என்றும், இரண்டும் கலந்து விரவும் மார்க்கம் மிசரம் என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இதைத்தவிர சாக்த ஆசாரமானது, வாம ஆசாரம் என்றும் தக்ஷிண ஆசாரம் என்றும் பெயரிட்டு வகைப்படுத்தி அழைக்கப்படுகிறது. வாமம் என்றால் இடது, தக்ஷிணம் என்றால் வலது என்றெல்லாம் சொல்லும் பொருள்கள் வெறும் பெயர்களுக்குப் பொருள் கண்டுபிடிக்கும் முயற்சிகளே. தக்ஷிணம் என்பது சாதாரண மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைவது என்றும், வாமம் என்பது பெண்ணின் நேரடி உதவியுடன் ஆண் பெண் இரட்டையாக முனையும் நெருடலான ஆபத்தான மார்க்கம் என்றும் சாக்தம் பொருள் கொள்கிறது.

ஏன் நெருடல்? ஏன் ஆபத்து? பெண்ணின் உதவி என்பதால் வெறும் காமக் கேளியாக மாறி அதற்கு வெறுமனே சாக்த வழிபாடு என்ற புறப்பூச்சு கொடுத்ததாக ஆகும் விபரீதம் இந்த வழியில் இருக்கிறது. ஏன் பெண்ணின் துணை என்பானேன்? பிறகு காம உணர்ச்சி தவிர என்ன வரும்? இது என்ன, பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டு, பிறகு பிரச்சினை என்று அலறுவானேன்?

shakti

இந்த இடத்தில்தான் சாக்தம் கூறுகின்ற ஒரு கருத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். காமம் என்பது நம் மனத்தை மயக்குகிறது. ஏன்? பெண்ணின் உடல், அவளின் அங்க லாவண்யம், அவளுடைய சகவாசம் அனைத்தும் ஓர் ஆணுக்கு அவளை அனுபவிக்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தக் காரணம் நாம் நம் மனத்தின் ஆற்றலில் அழிந்து, அந்த இனிய உணர்ச்சிகளுக்கு நம்மைப் பலி கொடுத்துவிடுகிறோம். எனவேதான் சாதாரண ஆன்மிக நெறிகள் பயந்துபோய், ‘காமமா, ஐயோ! பார்க்காதே, நினைக்காதே, தலையைக் குனிந்துகொள்; அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடு…’ என்றெல்லாம் தம் சாதகர்களை நெறிப்படுத்துகின்றன; மனம் சிதறி விடாமல் இருக்க. ஆனால் வாமாசார தந்திரம் இது கோழைத்தனம் என்கிறது. நம்மைத் தாக்கும் எந்த உணர்ச்சியையும், அது துன்பமோ, இன்பமோ எதுவானாலும் நம் ஆற்றலை நன்கு வளர்த்துக்கொண்டால் அதை நாம் நேருக்கு நேர் எதிர்கொள்ளலாம். அவற்றை நம்முள் உள்வாங்கி அமைதிபடக் கடந்து செல்லலாம். அதுதான் வீரனுக்கு அழகு. எது எது மனிதனை மயக்கும் என்று பயப்படுகிறோமோ அவையெல்லாம் நம் ஆற்றலின்மையாலேயே நம்மைப் பாதிக்க நாமே இடம் கொடுத்துவிடுகிறோம். அவற்றைக் கடந்து மீள ஒரே வழி நம் ஆற்றலை மிகுதிப்படுத்தி அவற்றைச் சிறிதும் சலனமடையாமல் இயற்கையின் அம்சமாகவே நமக்குள் உண்டுவிடுதலேயாகும். அதனால்தான் வாமாசாரம் மிகத்துணிவுடன், மனிதனை நெறிபிறழச்செய்யும் காரணங்கள் அனைத்தையும் தன்னுடைய விசார மார்க்கத்தில் நேரிடையாக சந்திக்கத் தயார் செய்கிறது- தன் வழியில் தகுந்த சிரத்தையுடனும், பக்குவத்துடனும் முயலும் சாதகனை. இதனாலேயே வேத ஆசாரத்தில் பழிக்கப்பட்டதெல்லாம் தந்திரம் தன் நெறியாக எடுத்துக்கொண்டு விட்டது என்ற பொதுச்சொலவும் ஏற்பட்டது.

ஆனால் வாமாசாரத்தைப் பல ஞானியரும் மக்களுக்கு ஏற்ற மார்க்கம் அன்று என்று கண்டித்திருக்கின்றனர். அதற்கு நடைமுறையில் தகுந்த காரணங்களும் இருக்கின்றன. என்னதான் முறையான பயிற்சி, தகுதி என்று முன்ஜாக்கிரதைகள் செய்தாலும் இயற்கையானது காமத்தை உயிர்களிடம் இனவிருத்தி செய்யும் பெருந்தொழிலுக்காக உடல் உள அமைப்பாய்க் கலந்துகட்டி வைத்திருக்கிறது. இந்த இயற்கையுடன் நேரடியாக மோதும் சாக்த சாதகன், எதிர் நீர் ஓட்டத்தைத் தடுத்து முன்னேற முயற்சிக்கும் வேலை கெட்ட வேலையில் முனைபவனோடு ஒப்பிடத் தக்கவன். ஏன் அதுவும் வழிதானே? வீரனுக்கு அழகும் அதுவே அல்லவா? என்ற வாதங்கள் எல்லாம் எழுந்து விழுந்த வண்ணம் இருக்கின்றன தந்திர, சாத்திர, பக்தி மதங்களின் வாதப் பிரதிவாதங்களின் வரலாறுகளில்.

அதுவுமில்லாமல் முற்றிலும் உலகின் நிலையாமையையும், ஆசைகளின் அர்த்தமற்ற போக்கையும் நன்கு உணர்ந்த துறவு மனத்தவன்தானே ஆன்மிகத்தில் உண்மையாக முனைவோனாக ஆகிறான். பின் அவன் தெரிந்தே ஏன் இந்த ஆபத்துகளைப் பரிட்சை செய்து, தான் அந்த ஆசைகளில் ஒருக்காலும் மடியாத வீரனாக வரவேண்டும் என்ற சிரம சாத்தியமான வீண்வேலைகளைத் தன்மீது இழுத்துவிட்டுக்கொள்ளப் போகிறான்? அப்படித் துறவு உள்ளம் இல்லாதவன், பேசாமல் மனம் கொண்ட மட்டும் உலக இன்பங்களைத் துய்ப்பதில் கருத்தும் உழைப்பும் செலுத்துவதுமே புத்திசாலித்தனம் அல்லவா? அவனும் இந்தக் கத்தி மேல் நடக்கும் கழைக்கூத்தாடித்தனங்களில் ஈடுபடப்போவதில்லை. பின் யார்தான் இந்த வாமாசார வழிகளில் புகுந்து அதன் மூலம் தன் ஜீவ இயற்கையை வெற்றிகொள்ள முனைபவன்? ஏதோ ஒரு காலத்தில் காம இன்பங்களில் நன்கு தோய்ந்து, பின் அதனால் அடிமையாக்கப்பட்டவன்தான் இந்த இன்பங்களின் வெறுமைகளை நன்கு உணர்ந்துவிட்டாலும் வெளி வரமுடியாது திணறி, பின் இந்தக் காமங்களின் ஊடேயே இவற்றைக் கடந்து வரலாம் என்று தனக்குக் கிடைத்த ஒரே வழியாக இதைக் கண்டு பிடித்திருப்பான். சாகப் போகின்றவனுக்குக் கிடைத்த ஏதோ ஒரு புணை போல் அவன் மீண்ட வழி பின்னர் பெரும் ஆய்விற்கு இலக்காகி, இந்தக் காமத்தை ஆன்மிக ரீதியாகவும் கையாள முடியும் என்று ஊக்கத்துடன் பலர் முனைந்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் இந்த நெறிகளுக்கான உயர்ந்த பட்ச சாதகமான அம்சத்தைத் தந்து யோசித்துப்பார்க்கும்போது தோன்றுவது. உண்மையில், பெரும்பாலான நேரங்களில், நடைமுறையில், காம சுகத்தை ரகசிய வழிகளில், ஆன்மிகப் போர்வையையும் போர்த்தியபடி தேடும் பல பலஹீனர்களின் ஒண்டு இடமாக இந்தத் துணிச்சல் வழிகள் ஆகிவிட்டன என்று கூறலாம். ஆனாலும் தவறான பயன்பாடுகள் அதனுள் இருக்கும் உண்மையான அணுகுமுறையின் மெய்மையை இல்லை என்று செய்துவிடமுடியாதல்லவா?

நெடுநேரம் தந்திரங்களின் பல வழிமுறைகளை விளக்கிச்சொல்லக்கேட்ட நரேந்திரர் ஆகிய விவேகானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இந்த மாதிரியான ஆபத்தான வழிகளைப் பற்றிக் காரசாரமாகச் சாடி, விமர்சனம் செய்தார். அதையெல்லாம் கேட்ட ஸ்ரீராமகிருஷ்ணர், “சரியப்பா! அதன்வழியாகவும் சில ஜீவன்கள் கடைத்தேறியிருக்கின்றனவே! எனவே எதையும் வெறுக்காதே. ஒரு வீடு என்றால் வாசல் கதவு மட்டும் இல்லையே. கொல்லைக் கதவு, கக்கூஸ் வழியாக உள்ளே நுழைய ஒரு வழி என்று பல வழிகளும் இருக்கின்றன அன்றோ! அந்த வழிகளில் எல்லாம் நாம் செல்ல வேண்டும் என்பது இல்லையே. ஆனால் மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.

sakthamபழக்கமும், வழக்கமும் சேர்ந்த வழிகளான ஆசாரங்கள் ஏழுவகையாகவும் சொல்வர். வேதாசாரம், வைஷ்ணவாசாரம், சைவாசாரம், தக்ஷிணாசாரம், வாமாசாரம், சித்தாந்தாசாரம், கௌலாசாரம் என்பன. முதல் நான்கையும் தக்ஷிணாசாரம் என்றும், பின் மூன்றையும் வாமாசாரம் என்றும் சொல்லும் முறையும் உண்டு. சாக்த தத்துவத்தை உபதேசித்த குருமார்களில் பன்னிருவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது வழக்கம். மனு, சந்திரன், குபேரன், லோபாமுத்ரா, அகஸ்தியர், அக்னி, ஸூர்யன், இந்த்ரன், ஸ்கந்தன், சிவன், க்ரோதபட்டாரகர், தேவி.

சக்தியை வழிபடுவதும் மூன்று வழிகளில் என்று கூறப்படுகிறது. மந்திரம், யந்திரம், தந்திரம். யந்திரம் என்பது ஓலையிலோ, காகிதத்திலோ, தகட்டிலோ, குங்குமம், விபூதி முதலியவற்றிலோ வரைந்து சக்கிரங்கள், முக்கோணங்கள், சதுரங்கள் என்ற அமைப்பில் வழிபடுவது. மந்திரம் மனனத்தின் மூலம் மனச்சிதறலைத் தடுத்துக்காக்கும் சொற்சேர்க்கை. தந்திரம் வழிபடுமுறைகள்– தக்ஷிண வாம ஆசார நெறிகள். யந்திரம் என்பது உண்மையில் இந்த உடல். இதன் பலவேறு அமைப்பு நுணுக்கங்கள். இந்த உடல் வெறுமனே எலும்பு, தோல், இரத்தம் சேர்ந்தது அன்று. பேராற்றலின் கேந்திரம் என்பதை பூஜை முறையாக ஆக்கித் தருவது யந்திர மார்க்கம் எனலாம். கணக்கியல், உடற்கூறு இயல், யோக தத்துவம் ஆகியன கலந்த ஒரு நூதன அணுகுமுறை யந்திர பூஜை.

abhiramiசக்தியின் பல உருவங்களில் மனம் வைத்துப் பாடப்படும் ஆயிர நாமங்களான ஸஹஸ்ரநாமங்கள், தெற்கில் லலிதா ஸஹஸ்ர நாமம், காஷ்மீரத்தில் பவானி ஸஹஸ்ர நாமம் முதலியனவும், வங்காளத்தில் துர்கா ஸப்தஸதீ ஆகியவையும் மந்திர வகையைச் சாரும். துர்கா ஸப்தஸதீ என்பதன் வியாக்கியானமும், லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு பாஸ்கரராயர் எழுதிய வியாக்கியானமும், யாமள, சாரதா திலக, குலார்ணவ தந்திரங்களும் சாக்த நூல் பெருக்கத்தில் முக்கியமானவையாம்.

தமிழில் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி தெற்கத்திய சாக்த பக்திக்குப் பெரும் எடுத்துக்காட்டு. அதில் வரும் ஒரு பாடல்:–

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சின் உள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறு இப்பொருள் அறிவார்
அன்று ஆல் இலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

(தொடரும்…)

11 Replies to “பாரதியின் சாக்தம் – 1”

 1. நவராத்திரியின் போது துவங்கியுள்ள மிக அருமையான கட்டுரை…

 2. Pingback: Indli.com
 3. ஷண்மத ஸ்தாபனத்தில் சாக்தம் பலராலும் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறை. மகாகவி பாரதியும் ஒரு சாக்தன்தான். அபிராமி பட்டரும், காளிதாசனும் சாக்தர்கள்தான். சக்தி உபாசனை செய்தவர்கள் உயிரோட்டமுள்ள பல ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். குண்டலினி பற்றி பாரதி பாடிய பாடல்கள் சாதாரணமாகப் படிப்பவர்களுக்குப் புரியாது. சக்தி உபாசகர்களிடம் அதற்கு பொருள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அருமையான கட்டுரை. பொதுவாக நுனிப்புல் மேய்கிற இந்த நாளில் மிகவும் கனமான பொருளை மையக் கருத்தாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி.

 4. புதியதாக ஒன்றை கற்க முற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். மூன்று முறை படித்த பின்பு தான் முழுமையாக விளக்கம் பெற்றேன். “ஸ்ரீராமகிருஷ்ண முனியின் வாக்கில் ‘பாம்பு சுருண்டு இயக்கமற்றுக் கிடக்கும் நிலை பிரம்மம். ஓடும் பாம்பு காளி.’- இது தான் ரொம்ப புரிந்தது.
  இன்னும் கொஞ்சம் எளிய வாக்கில் விளக்கினால் நன்றாக இருக்கும்.

 5. தமிழ் சித்தர்களில் பெரும்பாலானோர் சாக்த வழிபாடுடயவர்களே,அவர்கள் வாலை என்ற பெயரில் சக்தியை யோகத்தை தருபவளாக வழிபட்டனர் .யோகநெறியில் நின்று சக்தி வழிபாடு செய்பவர்களால் ஆகாதது எதுவுமில்லை .மூவரும் ,தேவரும் வணங்கும் முழுமுதல் காரணியாக பராசக்தி சாக்தர்களால் கருதப் படுகிறாள் .உண்மையும் அதுவே .சலனமற்ற பரப்ரம்மத்தின் செயல் படும் சக்தியாக அன்னை இருக்கிறாள் .

 6. >>> சாக்த தத்துவத்தை உபதேசித்த குருமார்களில் பன்னிருவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது வழக்கம். மனு, சந்திரன், குபேரன், லோபாமுத்ரா, அகஸ்தியர், அக்னி, ஸூர்யன், இந்த்ரன், ஸ்கந்தன், சிவன், க்ரோதபட்டாரகர், தேவி <<> ……… யாமள, சாரதா திலக, குலார்ணவ தந்திரங்களும் சாக்த நூல் பெருக்கத்தில் முக்கியமானவையாம்<<

  மிக அரிய தகவல்

  தேவ்

 7. மிக மேன்மையான விசயங்களை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி .., மேலும் தொடர்க சாக்த யோகா விளக்கங்களை .வைஷ்ணவ தாந்தரிகம் பற்றி குறிப்பாக தெறித்து கோல ஆர்வம் யார்றேயனும் வுதவுவீர்களா ..,

 8. மிக மேன்மையான விசயங்களை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி .., மேலும் தொடர்க சாக்த யோகா விளக்கங்களை .வைஷ்ணவ தாந்தரிகம் பற்றி குறிப்பாக தெரிந்து கொள்ள ஆர்வம் யார்றேயனும் வுதவுவீர்களா ..,

 9. இயற்கைக்கு நன்றி சொல்லும் தை பொங்கல் வாழ்த்துகள் அனைவருக்கும் என்றும் இயற்கையை ரசிப்போம் ,நேசிப்போம், மதிப்போம் ,பாதுகாக்க முயற்சிப்போம்

 10. சக்திக்கு உருவம் காண்பது மனிதர் தம் கருத்தன்றோ? அதில் உயர்வு தாழ்வுக்கு வழி உண்டே?

 11. சாக்தம் என்னும் புஸ்தகம் தேவை. எங்கே கிடைக்கும். புஸ்தக தலைப்பு “ஸாக்தம்” கீழே “ஷண்மத ஸ்தாபனம்” என்று உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *