நட்சத்திரங்களின் கதை!

நட்சத்திரங்கள், எப்போதுமே மனிதர்களை அவைகளின் மீது தீராத மோகம் கொள்ள செய்தே வந்திருக்கின்றன. தெளிவான இரவு வான நாட்களில், மின்சாரம் இல்லாத இரவுகளில்,  மொட்டை மாடியில் நின்று ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கும் வேளைகளில்,  அங்கே தெரியும் சொர்க்கங்களின் மாட்சிமையான அழகை  கண்டு அதிசயிக்காமல் போனவர் இந்த   மண்ணில் பிறந்தே லாபம் இல்லை என்று கூட   சொல்லலாம்.

முற்காலத்தில் மதிநுட்பமிக்க கருவிகள் இல்லாத சமயத்திலும்  நட்சத்திரங்களின் ஒழுங்கான அமைப்பு முறையை அறிவியல் பூர்வமாக விளக்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வந்துள்ளது.   தற்சமயம் பிரபஞ்சம் குறித்த நமது  அறிவு விசாலமானதாக ஆகி இருப்பினும்,அங்கே தெரியும் முடிவில்லாத பிரமிப்புமிக்கதான பரமாகாச சங்கிலிதொடர்கள் அதனை அறியும்  ஆவலில் உள்ளோரை ஏறத்தாழ ஒவ்வொரு  நொடியும்  புதிது புதிதாக கற்றுக்கொள்ளவும்,  தெரிந்துக்கொள்ளவும் செய்துகொண்டுள்ளன.

interstellar_cloud

இனி இங்கே ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை,  அது  உருவாகும் ,   உள்படல தூசுகளின் (Interstellar  Dust ) மூலத்தில் இருந்து, அது  தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான  நிகழ்வுகளை  விளக்க முயலுவோம்.

நாம் இங்கே அந்த படலகதையின்  உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலப்போவதில்லை.  ஆனால்  இந்தக்கதையை,  இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும்  இயல்பிலேயே விளக்கத் தலைப்படுகிறோம்.

நட்சத்திரங்களின் எடை மற்றும் அளவு ஒன்றுகொன்று மிகபெரிய அளவில் மாறுபடுகின்றன. ஆனால், அவைகள்  உருவாகும் முறையோ, ஒரே வகைதான். உருவாக எடுத்துகொள்ளும் காலத்தில் மட்டும் பெரியதான வித்தியாசங்கள் உண்டு.

தூசில் இருந்து நட்சத்திரமூலம் ஆகும் முதல்  10  மில்லியன்   வருடங்கள்:

வான்வெளி முழுதும் பருபொருட்கள்  (Matters) சீரற்றமுறையில் விநியோகிக்க பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். ஒன்றுமே இல்லை என்று கருதப்படும் அண்டங்களுக்கு இடையேயான  வெற்று பிரதேசங்களிலும்,  ஒரு சதுர மீட்டருக்கு ஒரு அணு என்ற அளவிலாவது பருப்பொருள் கண்டிப்பாக  இருக்கலாம் என்று அறிவியலாளர்களால் நம்பபட்டுவருகின்றன.

பிரபஞ்சத்தின் 75  சதவிகித  எடையானது நீர்வாயுவே  (ஹைட்ரசனைக்)  கொண்டிருக்கலாம் என்றும், மீதி   உள்ள 25  சதவிகிதத்தில்  பெரும்பான்மையாக ஹீலியமே இருக்க  பெருவாய்ப்புக்கள் உள்ளதாகவும் நம்பப்படுகின்றன.

அண்டங்களில், உள்படல வஸ்துக்கள் (Interstellar  Matters )  அடர்த்தியாக உள்ள பகுதிகளிலேயே  நட்சத்திரங்கள்  உருவாவதற்கான  சாத்தியங்கள் அதிகமாக  உண்டென்று சொல்கிறார்கள்.  உள்படல வஸ்துக்களிலும், மேலே சொன்ன ஹைட்ரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களின்  அணுக்களே அதிகம் இருப்பதை ,இங்கே நாம் சொல்ல போகும் கதையை நம்ப, நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

இந்த உள்படலத்தின்,   தூசுகளால் ஆன மேகத்தில் ஒரு  சதுர மீட்டருக்கு ஒரு மில்லியன் அணுக்கள் உள்ளன என்று   நான் சொன்னால், ரொம்ப ரொம்ப அதிகம் தான் என்று நீங்கள் சொல்லிவிடக் கூடாது. ஏனென்றால் நம் பூமியின் ஒரு காலி இடத்தில் ஒரு சதுர மீட்டருக்குள்   இருக்க கூடிய ஆக்சிஜென் அணுக்களின் எண்ணிக்கையை  விட  இது ரொம்ப ரொம்ப குறைவு தான்.

ஒரு எடுத்துக்காட்டுக்காக இப்படி எடுத்து கொள்வோம்.அதாவது நம் வளிமண்டலத்தில் உள்ள சாதாரண ஹைட்ரசன் வாயுவின் அணுக்களின் எண்ணிக்கை ஒரு சதுர மீட்டருக்கு   10-ன் மேல்25 , அதாவது 10  க்கு பின்னால் 25  பூஜ்ஜியங்கள் போட்டு படித்தால் வரும் எண்ணிகையில் இருக்கும் என்று கருதுகிறார்கள்.

இந்த எண்ணிக்கையே இந்த பூமி முழுதும்  உள்ள கடற்கரை மணல் துகள்களின் எண்ணிக்கையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும்  சொல்கிறார்கள். இந்த மணல் துகள்களில், நம் கைப்பிடி மணல்  எடுத்து எண்ணினால் வரும் தொகை ஒரு மில்லியனாக இருக்கும் என்றும் கருதும் போது இதை அப்படியே  எடுத்து உள்படல வஸ்துக்களில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு அங்கே எவ்வளவு குறைவாக அணுக்கள் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பருபொருட்களின் தூசுகளால் உருவான உள்படல மேகத்தின் (Interstellar Dust  clouds)  உள்ளே காணப்படும்  வெப்பமானது  -150  டிகிரியே எனும்போதும் அதனுள் இருக்கும் அணுக்கள் நொடிக்கு ஒரு மைல் வேகத்தில் நகருகின்றன. இந்த அணுக்களின் வேகம் மணிக்கு 3300  மைல்கள் என்று இருந்தாலும் இவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளுதால் மிகவும் குறைவாகவே உள்ளது.

அடிப்படையில்  இந்த அணுக்கள் பரமாகாசத்தில் மிகவும் சுதந்திரமாக     நகருபவையாகவும், ஒழுங்குமுறையில்லாத திசைகளில் நகர்ந்து செல்பவைகளாக   கருதப்படுகின்றன . சிலசமயங்களில், இந்த அணுக்கள்  ஒன்றுக்கு ஒன்றுடனான   ஈர்ப்பு விசையின் காரணமாக இணைந்து, அந்த   மேகத்தில் சாதாரணமாக காணப்படும் தூசுகளின்  அடர்த்தியை விட 500  மடங்குகள் அதிகமாகிவிடுவதும் நடந்து விடுகின்றன.

இப்படி இணையும் அணுக்கள் 15  ட்ரில்லியன் கிலோ மீட்டர்   விட்டம் (Diameter)  அதாவது நம் சூரிய குடும்பம் பரந்துவிரிந்து  கொண்டுள்ள விட்டத்தை காட்டிலும் 1000  மடங்கு பெரியது ஆகி விடும்போது ஒவ்வொரு தனி அணுக்களுக்கும் இருக்கும் ஈர்ப்பு விசையின் கூட்டால்,மாபெரும் ஈர்ப்புவிசை இப்படி உருவான அணுக்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பில்  ஏற்பட்டு விடுகின்றன.

protostarஇதுமாதிரி ஏதேச்சையாக ஏற்படும் பருப்பொருட்கள் குவிதலின் விளைவாக புதியநட்சத்திரத்தின் தொடக்கம் ஆரம்பிகின்றன.இதனை நட்சத்திரமூலம் (protostar) என்று அழைக்கிறார்கள். இந்த நட்சத்திர மூலத்தில்  உள்ள ஒரு அணுவானது  அதிலேயே உள்ள வேறு ஒரு அணுவினால், அவற்றினில் உள்ள  ஈர்ப்புவிசையின்     செயலெதிர்ச்செயலின் விளைவால் கவர்ந்து இழுக்கப்படுகின்றன.

இப்படி இருக்கும் செயலேதிர்செயலின் காரணமாக மொத்த அணுக்களின் ஆற்றல் நட்சத்திரமூலத்தின் மையத்தை நோக்கி செலுத்தப்படுகின்றன.அணுக்களின் ஈர்ப்பு விசையாலே ஏற்பட்ட இந்த ஆற்றலின் சக்திக்கு அந்த ஒவ்வொரு அணுவும் உட்படவேண்டியதாகி அதன் ஈர்ப்பு அழுத்த விசையை இழந்து இயக்க ஆற்றலை பெற்று, மேலும் மேலும் வேகமாக நகர்ந்து ஒன்றுடன் ஒன்று நெருக்கம் ஆகின்றன.

வேகவேகமாக நெருங்கிய அணுக்கள் ஒன்றை ஒன்று தாக்கி கொள்ள அவைகள் சூடேறுகின்றன.எனவே அங்கே ஒட்டுமொத்தமாக வெப்பம் அதிகரிக்கின்றன. நம் சூரிய குடும்பம் போல ஆயிரம் மடங்கு பெரியதாக இருந்த அந்த நட்சத்திரமூலம் சுருங்கி சுருங்கி 30 லட்சம் வருடங்களில் (பரமாகாச கால அளவில் இது என்னவோ  கண் சிமிட்டும் நேரம் தான்) பூமிப்பந்தின்  அளவுக்கு ஆகிப்போகின்றன.

அந்த பந்தின் உள்ளில் வெப்பம் 50000  டிகிரி சென்டிக்ரெட்டை  தொடும்போது அணுக்கள் நொடிக்கு 35  கிலோமீட்டர் என்ற வேகத்தை பெற்று நகருகின்றன. நட்சத்திரமூலத்தில் உள்ள இந்த அதிவேக துகள்களின் அதிவேக உள்நோக்கிய நகர்வு எனும்   விளைவின் எதிர்வினையின் விளைவால்   கணிசமான அளவு வெளிநோக்கிய அழுத்தம் அந்த பந்தின் வெளி அடுக்குகளை நோக்கியும் செலுத்தபடுகின்றன. பருப்பொருட்களை உள் இழுக்கும் ஈர்ப்புவிசை  என்றும் அதனை எதிர்த்து வெளியே இழுக்கும் அழுத்த விசை  என்றும் இந்த வெப்ப இயக்க நாடகம் ஒரு கோடி வருஷம் நடக்கின்றன.இதன் முடிவில் பார்த்தால்  பூமிப்பந்தின் அளவில் இருந்த நட்சத்திரமூலம்  நம் சூரியன் மாதிரி இரண்டு மடங்காக வீங்கிப்போனது.

இந்நேரத்தில் ஏற்படும் இரண்டாவது முக்கியமான நிகழ்வு  என்னவெனில்,இருக்கும் அத்தனை அணுக்களும் அயனிகளாகி விடுகின்றன. அயனியாதல்  என்றால் அணுவில் இருந்து எலக்ட்ரான்களை பிரித்தல் அல்லது சேர்த்தலை இங்கே குறிக்கின்றன. இருக்கும் அதிகபடியான வெப்பத்தினால் அணுக்களின் மோதல் ஆத்திரம் மிக்கதாக ஆகின்றன.அது எந்த அளவுக்கு என்றால்,அணுக்களின் எலக்ட்ரான்களையே அதனில் இருந்து  பிரித்து எடுத்துவிடும் அளவுக்கு! இதனால் அணுக்கருக்கள்  (ப்ரோட்டான்கள் அதிகமாக) மட்டும் நட்சத்திரமூலத்தின் உள்ளில் ஈர்ப்புவிசையை தன்னுள்ளே கொண்டிருக்கும் திரவவிழையமாக (பிளாஸ்மா), வாயுக்கள் மாறி  நகர்ந்து திரிகின்றன.இதுவரை நாம் அணுக்கள் என்று இங்கே பேசிகொண்டிருப்பது எல்லாம் பரமாகாசத்தில் அதிகமாக உள்ள ஹைட்ரசன் மற்றும் ஹீலியம் வாயுக்களின் அணுக்களையே என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இதன் முடிவில் அயனியான வாயுக்களின் மிகப்பெரிய   திரவவிழைய மேகமுட்டங்கள் அந்த பந்தில் தெரிகின்றன. குண்டுபல்பில் இருக்கும் சூடு எப்படி மின்காந்தகதிர்களை வெளியேற்றுகிறதோ  அதே போல இந்த வாயுவின் மேகத்தில் இருந்து அவை அதிவெப்ப தாக்குதல்கள் நடத்திகொண்ட போது மின்இயற்றப்பட்ட துகள்கள் மின்காந்த கதிர்களை வெளியேற்றுகின்றன. வெப்ப கிளர்ச்சி தரும்  முடுக்கத்தின்  காரணமாக,மின்இயற்றப்பட்ட துகள்கள் முடுக்கம் பெற்று அவைகள் தன்னில் இருந்து மின்காந்த கதிர்களை வெளியேற்றுகின்றன என்றும் கூறலாம். மின்காந்த அலைகளின் ஊடே வெளியேறும் ஒளியின் செயலேதிர்செயலின் விளைவால்  தோன்றிக்கொண்டு இருக்கும் நட்சத்திரத்தின் ஆற்றல்  குறிப்பிடத்தக்க அளவில் இழக்கின்றன. அதனை தொடர்ந்து  நட்சத்திரமூலம் சிதையவும்  உட்படுகின்றன. அது எவ்வாறெனில், ஒளி  வெளியேற்றத்தினால்  ஏற்படும் ஆற்றல் இழப்பின் காரணமாக அங்கே வெப்பம் குறைகின்றன .

எனவே  நட்சத்திரமூலத்தின் உள்ளில் இருக்கும் வெளிநோக்கிய  அழுத்தமும் குறைகின்றன. இந்த குறைந்த கொண்டுவரும்  ஆற்றலின்  காரணமாக ஏற்பட்ட வெளிநோக்கிய அழுத்த குறைவினால், உள்நோக்கிய ஈர்ப்புவிசை அதே அளவில் இருப்பினும், அதற்க்கு போதுமான எதிர்ப்பு இல்லாததன் காரணமாக அவை பருபொருட்களை உள்நோக்கி இழுத்தல் நடைப்பெற்று நட்சத்திரமூலம் மேலும் சிதைகின்றன.ஈர்ப்பு விசைக்கும் ஒரு எல்லை இருப்பதை கருத்தில் கொள்வோம்.ஈர்ப்பு விசையின் உள்நோக்கிய இழுப்பு சக்தியும் ஒரு கட்டத்தில் குறைந்து விடுதல்  எப்படி நடக்கின்றன  என்றால்,  உள்நோக்கி இழுக்கப்படும் பருபொருட்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உராய்தல் அதிகமாக, மறுபடியும் அவ்விடத்தில் சூடு அதிகமாக தொடங்குகின்றன.இந்த சூட்டின் விளைவால் குறைந்துகொண்டே வந்த வெளிநோக்கிய அழுத்தம் மீண்டும் அதிகரிக்கின்றன.இப்படி அதிகரித்த வெளிநோக்கிய அழுத்தம்,ஈர்ப்பு விசையை சமநிலை செய்து நட்சத்திரமூலம் மேலும் சிதைதலை தடுக்கின்றன.

ஆனாலும் மின்காந்த கதிர்களின் வெளியேற்றம் நின்றுவிடுவதில்லை என்பதால் ஆற்றல் இழப்பும் நிற்பதில்லை. எனவே மேற்சொன்ன நிகழ்வானது மறுபடி மறுபடி நடந்து நட்சத்திரமூலம் குறுகி,குறுகி 10 மில்லியன் ஆண்டுகளில் குட்டியோண்டு ஆகிவிடுகின்றன. குட்டியோண்டு ஆன அந்த நட்சத்திரமூலம் கொண்ட பரிமாணமே முன்  குறிப்பிட்டது போல நம் சூரியனைவிட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கலாம் என்று  வானியலாளர்களால் சொல்லப்பட்டது.

இளமை முதல் பக்குவப்படும்   காலம் வரையிலான அடுத்த 17  மில்லியன் ஆண்டுகள்:

அப்படி ஆன  நட்சத்திரமூலத்தின் உள்ளில் உள்ள வெப்பம் 10  மில்லியன் டிகிரி சென்டிக்ரெட்டாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.ஆனாலும் இதனை, இன்னும் நட்சத்திரம் என்று சொல்லாமல் நட்சத்திரமூலம் என்றே குறிபிடுகிறார்கள்.  ஏனெனில் இன்னும் அதன் வாழ்வை நிர்ணயிக்க போகும் உள்ளக அணுஉலைகள் தயாராகாததே   காரணம்.

நட்சத்திர மூலத்தின் உள்வெப்பம் 10  மில்லியன்  டிகிரியை  தொடும் போது அங்கே சிறிது காலத்தில் உருவாக   போகும் நட்சத்திரத்தின் வாழ்கை முழுமையையும் கட்டுபடுத்த போகும் ஆற்றல் செயல்படுமுறைமை இயக்கவியல் (Dynamics) எனும் புதிய செயல்முறை உருவாகின்றன.அதன் பெயரை அணுப்பிணைவு (Nuclear  fusion ) என்று விஞ்ஞானிகள்  சொல்கிறார்கள். இந்த அதீதமான வெப்பத்தால் அணுக்கருக்களுக்கு  இடையே ஆன மோதல் தீவிரமாகி, நேர்மின் இயற்றபட்ட(Positively  Charged )  அணுக்கருக்கள்  நிரம்ப நெருங்கி அணுச்சக்தியை வலிமையடைய செய்கின்றன.

இங்கிருந்து தான் அணுச்சக்தி முக்கியத்துவம் பெறுகின்றது! நாம் அணுக்கரு வினைகளை பற்றி  இங்கே விவரமாக விளக்க போவதில்லை! ஆனால் கொள்கை முடிவான, ஹைட்ரஜன் அணுவினைகளால்   வெளியேறும் நான்கு ப்ரோட்டான்கள்  இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கரு  (Nuclei )  உருவாகின்றது என்பதையும்,அப்படி உருவான கருவில் இருந்து இரண்டு பாசிற்றான்களும்,இரண்டு நியூற்றிநோக்களும் வெளியேறுகின்றன என்பதையும்,இப்படி வெளியேறும்   இவைகளால் அணுவில் குறிப்பிடத்தக்க   அளவில்  உள்ளார்ந்த ஆற்றல் குறைகின்றது  என்பதையும் கருத்தில் கொள்ளபோகிறோம்.

இவ்வாறு குறையும்  அணுவின்   உள்ளார்ந்த ஆற்றலானது, இயக்க ஆற்றலாகவும், நியூற்றினோ ஆற்றலாகவும் மாறி அணுவில் இருந்து வெளியிடப்படுகின்றன.  (நியூற்றினோ துகளில் positive charge -ம் இருக்காது, negative charge -ம் இருக்காது.இந்த துகளுக்கு எடையும் கிடையாது). அந்த இயக்க ஆற்றலானது,   உருவாகி கொண்டிருக்கும்  நட்சத்திரத்தின்  அனைத்து துகள்களுக்கும் வேகமாக விநியோகிக்க படுவதால் நட்சத்திரமூலத்தின் உள்ளகத்தில் வெப்பமும்,அழுத்தமும் அதிகரித்து, அதனால் ஏற்படும் ஈர்ப்பு விசை மற்றும் வெளிநோக்கிய அழுத்தம்  என்ற சக்திகளுக்கு இடையே ஆன  இழப்புகள்  மற்றும்  அதிகரித்தலின் விளைவாக,  உள்நோக்கி   இழுக்கும் ஈர்ப்பு விசைக்கும்  , வெளிநோக்கி இழுக்கும் அழுத்தத்திற்கும் இடையே ஒரு கட்டத்தில் ஏற்படும்  சமநிலையே, முடிவாக அந்த நட்சத்திரத்தின் பருமனை  நிர்ணயம் செய்கின்றன.

இப்போது, இதனை நட்சத்திர இளைஞன்  (Young Star) என்று சொல்லலாம். இந்த   புதிய நட்சத்திரம் 17  மில்லியன் ஆண்டுகளில் கொஞ்சமாக சுருங்குகின்றது   ( இந்த கால கட்டம் அந்த நட்சத்திரத்தின் வாழ்கையில் ஒரு சிறிய பின்னம் மட்டுமே).அதன் உள்ளக வெப்பம் 30 மில்லியன் டிகிரி வரை உயரும் போது அதன் சுற்றளவு நம் சூரியன் அளவுக்கு நெருங்கி சுருங்கிவிடுகின்றன. இந்த சமயத்திலே,ஒளி மற்றும் நியூற்றினோ கதிர்களின் வெளியேற்றத்தால் ஏற்படும் சக்திகளின் இழப்பை, அந்த நட்சத்திரத்தின் உள்ளக அணுஉலையில் நடந்துகொண்டு இருக்கும்  அணுவினைகள் சரிகட்டிவிடுகின்றன.அதே போல் அங்கே உருவாகும் வெப்பமும் போதுமான அளவு வெளிநோக்கிய  அழுத்தத்தை உருவாக்கி, ஈர்ப்பு விசையின் உள்நோக்கிய இழுப்பை சமன் செய்து விடுகின்றன. இவ்வாறாக அதன் நடுத்தர வயது முழுதையும்,அதாவது  சுமார் 10  பில்லியன்  ஆண்டுகள் வரை கடத்துகின்றன.

நட்சத்திரத்தின் பக்குவமடைந்த 10  பில்லியன் ஆண்டுகள்:

அந்த நட்சத்திரம்,அதன் வாழ்வின் பெரும் பகுதியை பக்குவப்பட்ட சமநிலையிலேயே கழிக்கின்றது.இந்த நிலையை தான் நாம் இன்று நம் சூரியனில் காண்கிறோம்.எல்லா நட்சத்திரங்களும் அதன் செயல்பாட்டை பொறுத்தவரை கொதிக்கும் கொப்பரை போல இருப்பினும்,அது ஈர்ப்பு விசைக்கும் அழுத்தத்துக்கும் இடையே ஆன சமப்பட்டுகொள்ளும்  நிலையை அடைந்து விட்டதன் காரணமாக ஆண்டுகள் பல கடந்தாலும் நமக்கு ஒரே மாதிரியாக தெரிகின்றன.எனினும் அதன் இறப்புக்கான விதை விழுந்து,அதே நட்சத்திரத்தின் ஆழத்தில் முளைத்து கொண்டு இருப்பதையும், அது தன் அணுஉலையை முதலில் பற்றவைத்த போதே,அந்த விதையும் விழுந்துவிட்டதையும் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

நட்சத்திரத்தினுள் உருவாகும் அணு ஆற்றல் அடுத்து வரும் 10  பில்லியன் ஆண்டுகளில் சிறுக சிறுக குறைய ஆரம்பிகின்றன. அதற்கேற்றார் போல அதனுள் உருவாகும் வெப்பமும், அந்த வெப்பத்தின் விளைவால் பிறக்கும் வெளிநோக்கிய அழுத்தமும் குறைதல்  நடக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.இந்த இடைப்பட்ட காலத்தில்   அந்நட்சத்திரத்தின்   உள்ளக வெப்பம் 30  மில்லியன் டிகிரி சென்டிகிரேட்டாகவும், மேற்ப்பரப்பின் வெப்பம் 5500   டிகிரி சென்டிகிரேட்டாகவும் நிலைப்பெற்று   இருக்கும் .

நட்சத்திரத்தின் உள்ளகத்தில் உருவாகும் ஒளியை நாம் பார்ப்பதற்கு  வாய்ப்பே இல்லை.ஏனெனில் அங்கே உருவாகி  அது மேற்பரப்புக்கு வருவதற்குள் அந்நட்சத்திரத்தின்  அணுஉலையை சுற்றி உள்ள  பல உள்அடுக்குகளை  கடப்பதால் அவ்வடுக்குகள் ஒளியை உள்ளீர்த்து கொண்டு ரொம்ப குறைவான ஒளிமீதமே மேலடுக்குகளை அடைகின்றன.நாம் காணும் ஒளியோ  இந்த மேல்அடுக்குகளில் இருந்து வெளியேறுபவை தான்.  மேல்அடுக்குகள் ஒப்பிட்டளவில்  உள்அடுக்குகளை  விட குளிர்ச்சியானதாக கருதபடுகின்றன.  நட்சத்திரத்தின்  5இல் ஒரு பங்கு கனபரிமானம் உடைய அதன் அதிவெப்ப  நடுபாகத்திலேயே அணுவினைகள் நடக்கின்றன.

இந்த பக்குவப்பட்ட காலத்தின் அவகாசம் என்பது  அந்நட்சத்திரத்தின்  மொத்தையை பொறுத்து எதிர்பாராத விதமாக   அமைந்து விடுகின்றன. நிரம்ப மொத்தையாக இருந்தால் அதன் வாழ்நாள் குறைவானதாக இருக்கின்றன. ஏனென்றால் அதிகபடியான வெப்பமும் அதனால் உருவாகும் வெளிநோக்கிய அழுத்தமும் ஒரு நட்சத்திரம் சிதையாமல் வாழ முக்கியமான தேவைகளாக இருக்கின்றன.அப்போதுதான் நட்சத்திரத்தின் மையம் நோக்கிய ஈர்ப்பு விசையை வெளிநோக்கிய அழுத்தம் சமன்செய்து   சிதையாமல் காக்கும்.இந்த அடிப்படையில் பார்த்தோமானால், மொத்தையாக நட்சத்திரம் இருப்பதால்  அதன் அணுஉலையில் ஏற்படும்   ஆற்றலை  அதன் அடுக்குகள், இழக்கப்படும் வெப்ப மற்றும் அழுத்தத்தை ஈடு செய்ய  வெகு சிக்கிரம் சாப்பிட்டுவிடுகின்றன. எனவே  அணு உலையும்   இருக்கும்   எரிபொருளை (Hydrogen) அதனை சுற்றியுள்ள அடுக்குகளுக்கு உணவளிக்க  அதிகமாக பயன்படுத்துகின்றன.எனவே எரிபொருள் குறைந்து அதன் வாழ்நாளும் சிக்கிரம் குறைகின்றன.அதாவது நம் சூரியன் போல 10  மடங்கு பெரியதான ஒரு நட்சத்திரம் நம் சூரியனை விட 100  மடங்கு ஆயுள் கம்மியாக இருக்கும் என்றும்,நம் சூரியனை போல பத்தில் ஒரு பங்கு உடைய நட்சத்திரம் 100  மடங்கு அதிகமான ஆயுள் உடையதாக ஆகியிருக்கும் என்று கண்டுபிடித்து உள்ளார்கள்.

நட்சத்திரம் பேருரு கொண்ட  சிவந்த அரக்கனாக மாறும்  காலம்:

நட்சத்திரத்தின் நடுப்பகுதியில் உள்ள ஹைட்ரஜன், தொடர்ந்த அணுவினைகளால் தீர்ந்து போகும் போது,ஹைட்ரஜன் அணுப்பினைவுகள்  உள்பாகங்களில் உள்ள மற்ற அடுக்களில் நடக்க தொடங்குகின்றன.இவ்வாறு நடக்கும் போது நடுப்பகுதியில் ஹீலியம் இருப்பினும் அங்கே அணுபினைவுகள் நடப்பதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.இப்படி உள் அடுக்குகளில் நடக்க தொடங்கும் அணுப்பினைவுகளின் காரணமாக,அந்த பிராந்தியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம்  உயருகின்றன. இந்த வெப்பத்தின் விளைவால் வெளிநோக்கிய அழுத்தமும் அதிகரிக்கின்றன.இவ்வாறு ஏற்படும் வெளிநோக்கிய அழுத்தம், மைய்ய நோக்கிய ஈர்ப்பு விசையை காட்டிலும் அதிகமாக இருப்பதால் 100  மில்லியன்  ஆண்டுகளில் அந்த நட்சத்திரம் சாதாரணமாக வேலை செய்துகொண்டு இருந்தபோது இருந்த சுற்றளவை காட்டிலும் 50  மடங்கு பெருத்து விடுகின்றன.அதன் நிறமும் சிவப்பாகிவிடுகின்றன. இந்நிலையில்,இந்நட்சத்திரத்தை பேருரு கொண்ட  சிவந்த ராட்சதன்  என்று சொல்கிறோம்.

red_giant_starஇப்படி நடந்து கொண்டு இருக்கும் சமயத்திலே,அந்த நட்சத்திரத்தின் உள்ளகத்தில்(Core) இருக்கும் ஹீலியம் ஆனது இருக்கும் ஈர்ப்பு விசையின் விளைவால் உள்நோக்கி சுருங்குகின்றன (அணுப்பிணைவு செயல்வினைகள்  இப்போது இந்த பகுதியில் நடப்பதில்லை என்பதையும், அதனால் அங்கே சிதைவும்   நடப்பதில்லை என்பதையும் நினைவுபடுத்துகிறோம்). இப்படி உள்நோக்கிய ஈர்ப்பு விசையின் விளைவால் ஏற்படும் உள்நோக்கிய அழுத்தத்தின் காரணமாக உயரும் வெப்பம் ஹீலியம் அணுப்பிணைவுகளுக்கு தேவையான 200  மில்லியன் டிகிரியை தொடும் போது ஹீலியம் அணுக்களின் பிணைவுகள் தொடங்கி ஹீலியம் எரிந்து கார்பன் ஆகும் நிகழ்வு தொடங்குகின்றன.

இந்த புதிய ஆற்றல் மிகவும் விரைவாக அதிகரித்து,   ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அணுப்பினைவுகளின் பிரதேசமான சிவந்த அரக்கனின் உள்ளேயுள்ள அணுஉலைகளில்  மாபெரும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துகின்றன. ஹைட்ரஜன் அணுபிணைவுகளால் ஹீலியம் உருவாகி,ஹீலியம் அணுப்பிணைவுகளால் கார்பன் உருவாகின்றன என்பதை இதுவரை நடந்த வினைகளில் புரிந்துகொண்ட நாம்,இந்த அணுபிணைவுகளில் எல்லாம் ஆற்றல் வெளியானதையும் புரிந்துகொண்டோம். இந்த அணுப்பிணைவுகள் எனும் செயல் அனைத்து பிரதேசங்களுக்கும் பரவி,ஒரு கட்டத்தில் அணுஉலைகளுக்கு எரிபொருள் கிடைக்காமல் போய் தன் பணியை நிறுத்திகொள்கின்றன.தற்போது கார்பனானது மட்டும் மிஞ்சி அந்நட்சத்திரத்தின் நடுபாகத்துக்கு சென்று குடியேறுகின்றன.

அணு உலைகள் பணி செய்வதை நிறுத்தி கொள்வது முதலான அடுத்த 10000  ஆண்டுகளில் அந்த நட்சத்திரம் குளிர்ந்துபோய் அதன் உண்மையான விட்டத்தை அடைந்துவிடுகின்றன.நட்சத்திரத்தின் பொருண்மையை பொறுத்து அது ஒன்றுக்கும் மேற்ப்பட்ட சிவந்த-அரக்க நிலைகளை மாற்றுகின்றன.சில, ஒரே சிவந்த நிறத்தில் இருந்தும்  குளிர்ந்து போகலாம்.

சிறிய நட்சத்திரங்களின் இறப்பு:

நம் சூரியனை ஒத்த சிறிய நட்சத்திரங்கள் அதன் ஹீலியம் எரிந்துபோன பிறகு அடுத்த நிலையை அடைவதில்லை.

planetary_nebula

நட்சத்திரத்தின் உள்ளகத்தில் இருந்து  எரிந்து கொண்டே வெளிநோக்கி  வரும் ஹீலியம் ஆனது தளர்ந்து போன வெளி அடுக்குகளை  அடையும் போது, பிரமிக்கத்தக்கதும்,ஆச்சரியமானதுமான  ஒரு வெடிப்புக்கு உட்பட்டு, அழகான வான்கோள்ஒளிமுகிலாக (Planetary nebula) காட்சி தருகின்றன.

white_dwarfநட்சத்திரத்தின் உள்ளகத்தை சுற்றி இருந்த  வெளிஅடுக்குகள்  இல்லாமல் போய் வான்கோள்ஒளிமுகிலாக ஆன பின்னர் அந்த நட்சத்திரத்தின் மையத்தில் உள்ள  உள்ளகம், கார்பன் அணுக்கருக்கள் அதிகமாக கொண்டதாகவும், அதன் வெளிஅடுக்குகளில்  ஹீலியம் அணுப்பிணைவுகள் நடந்துகொண்டும் இருக்கும். அச்சமயத்தில் பார்ப்பதற்கு நட்சத்திரம்  வெள்ளையாக தெரிகின்றன. சூடும் மிக அதிகமாக  இருக்கும்.  நம் பூமியின் சுற்றளவை கொண்டதாக இருக்கும் இந்த வெள்ளை உருளையை பிரபஞ்சவியலாளர்கள்  வெள்ளைக்குள்ளன் (White Dwarf) என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

black_dwarfபின்னர் கொஞ்சம்   நீண்ட  காலத்தில் ஹீலியமும் தீர்ந்து போய் வெறும் கார்பன் உருளையாக மாறி விடும், இந்த மடிந்து போன நட்சத்திரம், கறுப்புக்குள்ளன் (Black  Dwarf ) என பெயர் பெற்று  அரைகுறையாக எரிந்த கரி மாதிரி விண்வெளியில் அலைய  ஆரம்பிக்கின்றன. இப்படியெல்லாம்  ஆன பின்னால், இந்த கறுப்புக்குள்ளன் மிகவும் அடர்த்தி கொண்டவன் ஆகிவிடுகிறான்.இந்த பொருளின் சுற்றளவு ஏறத்தாழ நம் பூமியின் சுற்றளவை கொண்டதாக இருப்பினும் எடையோ அந்த  சூரியன் கொண்டு இருந்ததில் கொஞ்சமே (10% விட கம்மியாக) குறைந்ததாக இருக்கும். அங்கிருந்து ஒரு சதுர அங்குல கார்பனை எடுத்து எடை போட்டோமேயானால் அது 10  டன் எடை கொண்டதாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். வெள்ளையாக இருக்கும் போதும், பின்னர் கருப்பாக மாறிய போதும் அந்த குள்ளனின் மேற்பரப்பில் இருக்கும் ஈர்ப்புவிசை  நம் பூமியின் மேற்பரப்பில் உள்ள  ஈர்ப்பு விசையை காட்டிலும் 10  லட்சம் மடங்கு அதிகமாகவே இருக்கும் என்றும் அடித்து சொல்கிறார்கள்.

மாபெரும்  நட்சத்திரங்களின் மரணம்:

artistic_image_of_supernovaமிகப்பெரிய நட்சத்திரங்கள்,அதாவது நம் சூரியனை போன்று பலமடங்கு பெரியதாக உள்ள நட்சத்திரங்களின் மரணம் மேலே சொன்னது போல் நடப்பதில்லை. அவைகள் அடைவதோ சற்றே வித்தியாசமான முடிவை. அவைகளின் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் எரிபொருட்கள் விரிவாக்கம் அடைந்து எரிந்து தீரும் போது அதன் மத்தியில் இருக்கும் அளவிடமுடியாத   மையத்தை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசையின் காரணமாக அவ்விடம் இருக்கும் கார்பனானது சிதைந்து அந்த நடுப்பகுதியில்  600 மில்லியன்  டிகிரி  செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உருவாகின்றன.அப்போது கார்பன் அணுப்பிணைவுகள்  தொடங்கி மேலும்  அடர்த்தியான அணுக்கரு  உருவாக தொடங்குகின்றன. புதிய எரிபொருள் நுகர்வு,  அதனால் ஏற்படும்  விரிவாக்கம், அதனை தொடர்ந்து  சுருங்குதல்  என்று புதிய சுழற்சியை அடைகின்றன.இது, அந்த கார்பன் சூரியனின்  உள்ளகத்தில் கனமான அணுகருக்களை உடைய  இரும்பு  உருவாகும்  வரை நடக்கின்றன.

எப்படி இருப்பினும்,  இரும்பின்  அணுக்கரு மிகவும் இறுக்கமான உட்கருவானதால்,  மேலும் அணுப்பிணைவுகள் நடப்பது கடினமானதாகின்றன. அதனால் இந்நட்சத்திரத்தின்  உள்ளகத்தில் நெருப்பு அணைந்துவிடுகின்றன. அப்போதும், இருக்கும் ஈர்ப்பு விசையின் விளைவால் உள்ளகம்  நிலைகுலைவு அடையும் போது ஒரு அதிர்ச்சி அலையை  அந்நட்சத்திரத்தின் மேற்பரப்பை நோக்கி அனுப்புகின்றன. அப்படி  வெளிநோக்கி அனுப்பப்படும் அதிர்ச்சி அலையின்  விளைவால் ஏற்படும் அமுக்கு விசையின் வினையால், இரும்பு உள்ளகத்தில் அபாரமான வெப்பம் விளைகின்றன.அதனால் ஏற்படும் கற்பனைக்கு எட்டாத ஊழித்தீவெடிப்பால் (supernova ) தனிம அட்டவணையில் இரும்பையும்  தாண்டி இருக்கும் பல தனிமங்களின்  அணுக்கருக்கள் உருவாகி விண்ணெங்கும் சுழற்றி விசப்படுகின்றன.அப்படி விசப்படும் பொருட்களே  அந்நட்சத்திரத்தின் அடுத்த தலைமுறைகளான நம் சூரியன் போன்ற சிறிய நட்சத்திரங்களின் வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கின்றன.

neutron_starஅட,இப்போது அந்த ஊழித்தீவெடிப்பு நடந்து  முடிந்த  நட்சத்திரத்தின்  மத்தியில் பார்த்தால் வேறு ஏதோ தெரிகிறதே!? ஓ..,  நியூட்ரான் நட்சத்திரமா அது!

எஞ்சிய நட்சத்திர மிச்சமான இந்த நியூட்ரான் நட்சத்திரம்,  நம் சூரியனை காட்டிலும் பல மடங்குகளே அதிகமான எடையை கொண்டதாக இருப்பினும் அதன் வடிவம் மிகவும் சின்னதாக ஆகிபோன நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு ஈர்ப்பு விசைகள் அங்கே உருவாகி அணுக்களை இழுக்கும் இழுப்பில், அங்கே இருக்கும் அணுக்களுக்குள் இதுவரை தனித்தனியாக இருந்த, எதிரெதிர்  மின்னூட்டங்கள் (Oppositely  Charged ) பெற்ற எலக்ட்ரான்களும் ப்ரோடான்களும்  ஈருடல் ஓருடலாக மாறினது போல ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிபோய், அணுவானது  எதிரும் நேரும் இணைந்த நடுவாகிவிடுகின்றன. இதனால் கிடைக்கும்  இந்த நியூட்ரான் நட்சத்திரம்  எனும் பொருள், பேராற்றல் கொண்டதும், பெருந்தடியானதுமான ஒரே அணுஉட்கருவை போல் ஆகிப்போனது.  நம் சூரியனை போன்று பல மடங்குகள் கனத்தினை கொண்ட இந்த நடுநிலையடைந்த (Neutron ) நட்சத்திரத்தில் இருந்து பொருளை எடுத்து அதிலிருந்து  ஊசிமுனை அளவுக்கு ஒரு பந்தை செய்து, இந்த மண்ணுக்கு அந்த பந்தை  கொண்டுவந்து எடை போட்டோம் என்றால், அது  குறைந்தது   ஒரு பில்லியன் டன்னாவது  இருக்கும் என்று இயற்பியலும், வேதியலும், கணிதமும் அறிந்த வானியலாளர்கள்  சொல்கிறார்கள்!!

பத்து மைல் விட்டமே (Diameter ) கொண்ட இந்த நியூட்ரான் நட்சத்திரங்களை இங்கிருந்து, அதனை தொலைநோக்கியில் நேருக்கு நேராக பார்க்கமுடியாத நிலையில்,விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்  துடிக்கும் விண்மினாக(Pulsars) மட்டும் பார்த்து, அது நியூட்ரான் நட்சத்திரம் தான் என்று அறிந்துகொள்கிறார்கள்.இந்த துடிக்கும் விண்மின்கள் துல்லியமான நேர இடைவெளில் வானொலி அலைகளையும், x-கதிர் அலைகளையும்  விண்வெளியின் கச்சிதமான ஒரே இடத்தில் திடீர்திடிரென வெளிப்படுத்தி  வருகின்றன. அதனை நாம் ஒளிவடிவில் பார்க்கலாம்.நியூட்ரான் நட்சத்திரங்களே, ஊழித்தீவெடிப்பின் (Supernova)   இறுதியான விளைபொருள் என்று நிண்டகாலமாக கருதப்பட்டது. ஆனால் அப்படி இல்லை என்று கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது……..!!!!

சாதாரணமாக நியூட்ரான் நட்சத்திரங்கள் நம் சூரியனை போன்று 1 .35  மடங்கில் இருந்து 2 .1  மடங்கு வரை கனத்தினை கொண்டதாக சொல்கிறார்கள்.ஆனால் 10  மைல் விட்டமே கொண்டுள்ள இதை  நம் சூரியன் கொண்டுள்ள 600000  மைல்களின் விட்டச்சுற்றளவை ஒப்பிடும் போது விண்வெளியில் எளிதாக பார்க்ககூடிய பொருளாக  இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த புதிதாக உருவான நியூட்ரான்   நட்சத்திரத்தின் உள்ளில் உள்ள வெப்பம்    10  இன் மேல் 11 -ல் இருந்து 10 -இன் மேல் 12  கெல்வினாக   இருக்கும் என்று சொல்கிறார்கள்.இந் நியூட்ரான் நட்சத்திரங்களில்   உள்ள வலிமையான ஈர்ப்பு விசையின் காரணமாக இதன் அருகில் வரும் வெள்ளைக்குள்ளன் அல்லது கறுப்புக்குள்ளன் போன்ற நட்சத்திர மிச்சங்களோ அல்லது வேறு ஏதேனும் பருபொருட்களையோ தன்னுள் இழுத்து கொள்வதாக கூறுகிறார்கள்.இதனால் இதனை கருங்குழிகளுக்கு          (Black Holes )  சமமானதாகவும் சொல்கிறார்கள். நிறைய பொருட்கள்  இதனுடன்  இழுக்கபட்டால் ஒருங்கிணைந்த ஆற்றலின்  விளைவால்  கருங்குழிகளாக  மாறவும் பெருவாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறார்கள் !!!

16 Replies to “நட்சத்திரங்களின் கதை!”

  1. சு பாலச்சந்திரன்

    நட்சத்திரங்களின் கதை படிக்க மிகவும் சுவையாக இருக்கிறது. பலகோடி ஆண்டுகள் முன்போ, பின்போ இப்படி நடந்திருக்கும் என்பது உண்மையாகவும் இருக்கலாம், முழு யூகமாகவும் இருக்கலாம். ஆனால் மனிதனின் வாழ்நாள் குறைவாக இருப்பதாலும் விஞ்ஞானிகள் தெரிவிக்கும் இந்த கருத்துக்கள் சரிதானா என்று சோதிப்பதற்கு ஒரு வழியும் இல்லை என்பதாலும் இது உண்மையே என்று அறுதியிட்டு சொல்லமுடியாமல் உள்ளது.எனினும் இந்த கட்டுரையாளரின் நோக்கம் தவறானதல்ல. விஞ்ஞான அறிவு பெருக இதுபோன்ற கட்டுரைகள் நிச்சயம் உதவும்.ஒரு தெளிவு பிறக்க, எதிர்காலத்தில் வழிகிடைக்க, இது போன்ற சிந்தனைகள் பாதை அமைக்கும்.

  2. Pingback: Indli.com
  3. நல்ல தமிழில் புரியும்படியான எளிய நடையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இறைவனின் ப்டைப்பை நினைந்து வியக்கச் செகின்றது. மேலும் இது போன்ற அறிவியல் கட்டுரைகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்

  4. திரு பாலச்சந்திரன் அவர்களுக்கு,

    ஐயா,தாங்கள் சொல்லும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது,பின்னால் நடக்கலாம்,யூகமாக இருக்கலாம் என்பதை மதிக்கும் அதே வேளையில் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.அதாவது இன்று அறிவியலாளர்கள் நட்சத்திரங்களை பற்றி சொல்லும் அனைத்து விஷயங்களையும் உறுதியாக நம்பலாம் என்றே தோன்றுகிறது.

    ஏனெனில் அவர்கள் வெறும் கண்களாலும்,புத்தியாலும் மட்டும் பார்க்காமல் Fermi Gamma-ray Space Telescope, Compton Gamma Ray Observatory (CGRO),Granat, Spectrum-X-Gamma,XMM-Newton,ROSAT,Hubble,High Energy Transient Explorer 2 (HETE 2) போன்ற பல்வேறுவகையான தொலைநோக்கிகளில் பார்த்து விளக்கி கொண்டு இருப்பதாலேயே என்று சொல்ல விழைகிறேன்.

    அய்யா,நம் பிறப்பை நாம் அறிந்ததில்லை,நம் மரணத்தையும் நாம் அறிவோமா என்பதுவும் தெளிவாக தெரியாது.இருப்பினும் பிறப்பையும்,இறப்பையும் வேறு ஒருவரின் இந்த நிலைகளை பார்த்து எப்படி நம்புகிறோமோ அதுவே தான் நட்சத்திரங்களின் கதையிலும் நடக்கிறது.

    பரந்து விரிந்த பேரண்டத்தின், பல நூறு கோடி அண்டங்களில் தினமும் பல சூரியன்களின் பிறப்பும்,பல சூரியன்களின் இறப்பும் நடக்கிறது என்பது உறுதி செய்ய பட்டுவிட்டது என்பதே நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்.

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  5. மிக அழகான பதிவு. எளிய தமிழ். புதிய புதிய சொற்களை அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு. சுட்ட பின்பு தான் நெருப்பு சுடும் எனத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நெருப்பு சுடும் என்று அறிந்தவர்கள் கூறினால் நம்பத்தான் வேண்டும். நம்பிக்கை என்பது ஓர் அடிப்படை நிலை. தங்கள் பதில் உரையில் பிறப்பையும் இறப்பையும் நம்புவது போல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் நம்ப வேண்டும் என்று கூறி உள்ளது நல்ல கருத்து. எங்களைப் போன்ற பாமர மக்கள் விஞ்ஞானத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள இப்படிப்பட்ட பதிவுகளை வெளியிடும் தமிழ் இந்துவுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.
    ம ச அமர்நாத்

  6. ஜோதிடம் தெரிந்தவர்கள் இங்கு கொடுத்துள்ள நட்சத்திர தகவல்கள் எந்த அளவு ஒத்து போகிறது என கூறினால் நலம்

    சஹ்ரிதயன்

  7. திரு.பிரதீப் பெருமாள்,
    பயனுள்ள கட்டுரை. மனித சமூகம் அறிவியலின் அடிப்படையில்
    வாழ்வதால் மட்டுமே மேன்மையை அடைய முடியும். நீங்கள் கூறியது சரிதான். இது அறிவியல். ஊகம் இல்லை.

    குறிப்பாக Hubble Space Telescopeஐ வான்வெளியில் நிறுத்தியபின்
    நம் வான்வெளி அறிவு இந்த 20 வருடங்களிலேயே வரலாறு காணாத
    அளவு விரிந்துள்ளது. பூமியிலிருந்து தொலைநோக்கியால் அவதானிக்கும்
    போது பூமியின் வளிமண்டலமே (Atmosphere) வான்வெளியை மறைத்து
    விடுகிறது.

    மேற்குலக நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் நன்றியோடு
    பார்க்கத்தான் வேண்டும். அவர்களின் சோம்பலற்ற ஈடுபாட்டால் நமக்கு
    பல விஷயங்கள் தெரிந்துள்ளன.

    கடைசியாக உங்கள் கட்டுரையில் ஒரு குறை. உபநிஷதங்களை படிப்பது
    போல் வறட்சியாக இருந்தது. Raw Science அப்படித்தான் இருக்கும்
    என்றாலும் அங்கங்கே கொஞ்சம் நகைச்சுவையையோ அல்லது சாதாரண மனிதனின் வாழ்க்கை அனுபவங்களையோ சேர்த்து கூறியிருந்தால் அலுப்பு இருந்திருக்காது. தயவு செய்து தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.

  8. //பிறப்பையும் இறப்பையும் நம்புவது போல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் நம்ப வேண்டும் என்று//

    நண்பர் அமர்நாத் அவர்களே,நான் கூற வந்த கருத்து முழுமையாக அது மட்டும் அல்ல!! நம் சூரியனும் ஒரு நாள் (அது தன்னுடைய முதல் அணு பிணைவுகளை தொடங்கிய நாள்) பிறந்தான்,அவனும் ஒரு நாள் இறக்க போகிறான் என்பதுவே!!

  9. சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள கோளரங்கத்திற்கு “பெரியார்’ என்று தொடர்பே இல்லாமல் வைத்ததுபோல் கட்டுரை உள்ளது.

  10. அன்பு பிரதீப் பெருமாள் அவர்களுக்கு

    வாழ்த்துக்கள். மிக சிறப்பான அறிவியல் கட்டுரையை தமிழில் தந்ததற்கு.
    அதையும் ஆன்மீக தளத்தில் தந்தது மிகவும் சிறப்பு.
    ஏனெனில் ஆன்மீகம் என்பது ஏதோ அறிவியலை ஏற்றுக்கொள்ளாது
    என ஒரு சிலர் தவறாக நினைத்துள்ளனர்.
    ஆன்மீகம் என்பதில் ஞானநிலை அதிநுட்ப அறிவியல் நிலையை தெரிவிக்கும்.
    அந்த அதிநுட்ப அறிவியலும் விஞ்ஞானிகளால் ஆராயப்பட்ட அறிவியலும் ஒரு இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
    அப்போது அனைவருமே அறிவில் வாயிலாக ஆன்மீகத்தையும் உணர முடியும்.

    இது போன்ற அறிவியல் கட்டுரைகள் தமிழ் மொழியில் நிறைய வருவதன் வாயிலாக தமிழை அறிவியல் மொழியாக மாற்றலாம்.
    அதற்கு நன்கு தமிழ் தெரிந்த அறிவியலாளர்கள் பிற மொழிகளில் இருந்து இது போன்று நிறைய அறிவியல் கருத்துக்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிடுவதனால் தமிழை வளப்படுத்தலாம்.

    வாழ்க வளமுடன்

    பாமரஜீவன்

  11. டியர் ரியாலிட்டி,

    தமிழ் ஹிந்துக்களும் நட்சத்திரங்களை பார்க்கிறார்கள்,அதனை குறித்து அறியும் எண்ணத்தில் இருக்கிறார்கள் என்ற காரணங்கள் போதும்,இந்த கட்டுரை இங்கே வர!!பல ஆயிரகணக்கான ஆண்டுகள் அவர்களுக்கு நட்சத்திரங்களை பற்றிய அறிவியல் பூர்வமான சிந்தனை இருக்கிறது என்ற மாபெரும் உண்மை மேலும் ஒரு காரணம்!!.பகுத்தறிவு என்னும் ஒளியில் ஹிந்துக்கள் ஒளிர்பவர்கள் என்ற உண்மையை பாலைவன காய்ந்துபோன மதத்தவருக்கு தெளியபடுத்தவும் இங்கே இந்த கட்டுரை பிரசுரிக்கபட்டுள்ளது என்றும் நீங்கள் எடுத்துகொண்டாலும் தவறில்லை!!

    பெரியாருக்கும் கோளரங்கத்திற்க்கும் தொடர்பு இல்லையென்றால் போய் சொல்லவேண்டியது அரசாங்கத்திடம், இல்லையென்றால் விடுதலை மற்றும் உண்மை போன்ற தளங்களில்!!இது பெரியாரை போற்றும் இடம் அல்ல!

  12. ராகுல்ன்னு பெயர் வைத்துக்கொண்டு இவ்வளவு அறிவு பூர்வமா பேசறீங்களே எப்படி! 🙂

  13. தகவல் செறிவு மிகுந்த, அருமையான அறிவியல் கட்டுரை, பிரதீப். Bill Bryson எழுதிய பிரபல புத்தகத்தின் (A short history of nearly everything) ஒரு அத்தியாயத்தை தமிழில் படிப்பது போல இருந்தது! சில சஜெஷன்கள்:

    – அறிவியல் கலைச் சொற்கள் பலவற்றை நீங்களே ஊகம் கொண்டு உருவாக்கியிருப்பதாகப் படுகிறது. தமிழ் அறிவியல் எழுத்துக்களில் ஏற்கனவே பிரபலமான கலைச்சொல் இருக்கும்பட்சத்தில் அதையே பயன்படுத்துவது நல்லது. உதாரணமாக, black hole என்பதற்கு கருந்துளை பிரபலமான சொல். நீங்கள் பயன்படுத்தியிருப்பது ’கருங்குழி’.

    – பாலாஜி சொல்வது போல அங்கங்கு நகைச்சுவை, அங்கதம் கலந்து எழுதினால் சிறப்பாக இருக்கும்.

  14. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.அடுத்த கட்டுரையில் வாழ்வியலோடு கலந்த ஹாஸ்யத்தோடு இந்தமாதிரி அறிவியலை எழுத முயல்கிறேன். சிறிது யோசித்தோம் என்றால் இந்த கட்டுரையிலேயே அரசியல்,சமுகம் மற்றும் ஆன்மிகம் இருப்பதை அறியலாம் என்று எண்ணுகிறேன்.

    கடினம் தான்,இருந்தாலும் யோகவஷிஷ்டம் தனிமனித,பிரபஞ்ச வாழ்வின் மாயங்களை புட்டு புட்டு வைத்துள்ளதை இன்று அறிவியல்காரர்களும் அதை அறியாமலேயே செய்து வருகிறார்கள் என்பது ஹிந்துக்கள் ஆகிய நாம் ஆன்மிகசந்தோஷபட வேண்டிய விஷயமாக உள்ளது என்பதை இத்தருணத்திலே சொல்ல விரும்புகிறேன்.

    அன்புடன்
    பிரதீப் பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *