ரமணரின் கீதாசாரம் – 4

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2| பகுதி 3

காணும் மற்றும் காணப்படும் அனைத்தும் ஆன்மாவே என்னும் அறிவைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் அந்த அறிவைப் பெற்று அதற்குத் தக இருப்பது என்பதே அனைத்து உயிர்களின் ஒரே லட்சியம் என்றாலும், எவரும் தான் உலகியல்படி காண்பதையே பெரிதாகக் கொண்டு உண்மை அறியாது மயங்கி இருப்பார்கள். அருச்சுனனுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மன மயக்கத்திற்கும், அதனால் வந்துள்ள துன்பத்திற்கும் அதுவே காரணம். ஆதலால் பகவான் மேலும் ஆன்மாவின் தன்மை பற்றி அவனுக்கு எடுத்துச் சொல்வார்.

2-17

अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततं |
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ||

எதனால் நிறைவு எய்தும் ஏயும் இவை யாவும்
அது அழிவில்லாதது அறிவாய் – எதனாலும்
மாளாத அப்பொருளை மாளச் செயவல்ல
ஆளாகான் ஆரும் அறி

பொருள்: காணக் கூடிய இந்த உலகம் அனைத்தும் எந்த ஒரு பொருளால் முழுவதும் வியாபிக்கப்பட்டு நிறைவு அடையுமோ, அந்தப் பொருளே அழிவற்றதென்று அறிவாயாக. எதைக் கொண்டும் அழிக்க முடியாத அந்த நித்திய ஆத்மாவை அழிக்க வல்லமை படைத்தவனாக எவனும் இருக்க மாட்டான் என்றும் அறிவாயாக.

சிறிது இடைவெளி உண்டு என்று ஏதாவது இருந்தால்தானே ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு அகற்ற முடியும். ஆன்மாவின் தன்மை எங்கும் வியாபித்து இருப்பது என்றால், அதை எப்படி அகற்ற முடியும்? வெவ்வேறு பொருட்கள் என்றால் ஒன்றை அழித்து வேறொன்றை உருவாக்கலாம். ஆனால் எல்லாம் அந்த ஆத்மாவே என்றால் அந்த ஆத்மாவை அழிக்க வல்லவன் யார்?

திட, திரவ, வாயு என்று ஏதேனும் ஒரு வடிவில் உள்ள பருப்பொருள் என்றால் அதனை அழிக்கவோ, மாற்றவோ முடியும். ஆன்மா ஒன்றுக்குள் ஒன்றாய், அணுவுக்கும் அணுவாய்  இருக்கும் நுண்பொருள் என்றால் அதை என்னதான் செய்ய முடியும்? அதற்கு முதல்-முடிவு, வளர்ச்சி-தேய்மானம், உண்டு-இல்லை என்ற எந்த நிலைகள்தான் பொருந்தும்? ஆக பார்ப்பதும் அதுவே, பார்க்கப்படுவதும் அதுவே, பார்வை போலத் தெரியும் காட்சியும் அதுவே  என்ற நிலையில் எங்கும் உள்ள அதுவே நீங்காது நிறைந்திருக்கும் ஆன்மா என்று அறிந்து கொள்வாய் என பரமாத்மா அருச்சுனனுக்கு எடுத்து உரைக்கிறார். பார்ப்பது அது என்றால் சரி, “பார்க்கப்படுவது” என்றாலும், “பார்வையும் அதுவே” என்றாலும் என்ன பொருள் என்று பலர் கேட்கலாம். அதற்கு நாம் விடை காண இன்றைய விஞ்ஞான முறைகளையே அணுகிப் பார்க்கலாம்.

விஞ்ஞானம் என்பது மனிதன் தன்னைச் சுற்றி உள்ள பருப்பொருட்களை ஆராய்ந்து அவைகளின் ஆக்க மூலங்களையும், தன்மைகளையும், அவைகள் ஒன்றோடு ஒன்று சேரும்போது ஏற்படும் விளைவுகளையும் அறியும் ஒரு முயற்சி. முதலில் சுற்றி உள்ளவைகளைப் பார்க்கிறான். அவைகள் எதனின்று உருவாகி வந்திருக்கலாம் என்று அவைகளின் மூலக் கூறுகளை ஆராய்கிறான். ஓரளவு வந்ததும் சில பொருட்களை அடிப்படைப் பொருட்கள் என்று கொள்கிறான். அவைகளின் தன்மைகளை மேலும் ஆராயும்போது அவைகளில் சில ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் கண்டு, அவைகள் மேலும் மிக நுண்ணிய அடிப்படையின் பேரில் உருவானவை என்று கண்டுபிடிக்கிறான். அந்த நிலையில்தான் அவைகளின் அணு அமைப்புகளையும், அதனுள் இயங்கும் நுண் அணுத் துகள்களையும் இதுவரை கண்டுபிடித்துள்ளான். இவை அனைத்தும் சில விதிகளுக்கு உட்பட்டே நிகழ்கின்றன என்று அறிய வருகிறான்.

பருப்பொருட்கள் அளவில் அவைகளின் இயக்க விதிகளை அறியும் இயலை இயற்பியல் (Physics) என்றும், நுண்பொருட்கள் அளவில் ஏற்படும் மாற்றங்களை அறியும் இயலை வேதியல் (Chemistry)  என்றும், அவையெல்லாம் நிகழ்வதற்கான சமன்பாடு விதிகளையும், வேறு பலதரப்பட்ட விதிகளையும் அறிவிக்கக் கைகொடுக்கும் இயலை கணிதம் (Mathematics) என்றும் பொதுவாகக் கூறுவர். இதில் நுண்பொருட்களான அணுவின் அமைப்புகள், மற்றும் அதன் துகள்களைப் பற்றி ஆராயும் போது, அதுவரை இருந்த இயற்பியல் விதிகள் நுண்பொருட்களுக்குப் பொருந்தாமல் போயின என்று கண்டறிந்தனர். அதனால் பருப்பொருட்களைப் பற்றியது பழைய இயற்பியல் என்றும், நுண்பொருட்களைப் பற்றியது புதிய இயற்பியல் என்றும் பெயரிட்டனர்.

இங்குதான் பல விநோதங்களைக் கண்டறிந்தனர். பழைய இயற்பியலின் படி ஒளியானது அலைபோன்ற தன்மை கொண்டு விளங்குவதாக அந்த விதிகள் அறிவிக்கின்றன. ஆனால் புதிய இயற்பியலின் படி ஒளி நுண்பொருள் தன்மை கொண்டதாக விளங்குகிறது. ஒளியின் சில குணங்கள் அதனுடைய அலைத் தன்மை கொண்டும், வேறு சில குணங்கள் அதன் நுண்பொருள் தன்மை கொண்டும்தான் விளக்கப்படுகின்றன. ஆக இந்த இருதலைத் தன்மையை இன்றும் விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ளது. அதுபோல இன்னொன்றும் நிகழ்ந்துள்ளது.

அதாவது நுண்பொருள் இயக்கத்தை அறுதியிட்டு துகள்கள் இப்படித்தான் உள்ளன என்றோ, இந்த இடத்தில்தான் இருக்கின்றன என்றோ உறுதியாகக் கூற முடியாது. இவ்வளவு சதவிகிதம் இந்த குறிப்பிட்ட இடத்திற்குள் இருக்கலாம் என்றோ, இவ்வளவு காலத்திற்குள் அதை எதிர்பார்க்கலாம் என்றோதான் சொல்ல முடியும். அதாவது அதன் இயக்கங்கள் ஒரு நிலையான தன்மை கொண்டதல்ல, ஆனாலும் ஒரு வரைமுறைக்குள் இயங்குகிறது. இப்படியாகப்பட்ட நுண்பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவும் கருவிகள் எப்படிப்பட்டன?

gita

அளவுகளைப் பொறுத்தவரை துகள்கள் நுண்ணிய, மிக நுண்ணிய, அதிமிக நுண்ணிய என்றளவில் இருக்கின்றன. துகள்கள் போட்டோத் தகடுகளில் விட்டுச் செல்லும் தடங்களில் இருந்தே அன்று அவைகளின் தன்மைகளைக் கணித்தனர். சமீப காலமாக அணுவின் வடிவையே நேராகக் காணக்கூடிய மின்னணு மைக்ராஸ்கோப் வந்துள்ளது. புதிய இயற்பியல் விதிகளின் படி இயங்கும் துகள்கள் நுண்ணியவை என்றாலும், அவைகளை அளக்கும் கருவிகளோ பழைய இயற்பியல் விதிகளின் படி செயல்படும் பருப் பொருட்கள் அளவில் அமைந்துள்ளன. அவைகளை இயக்கும் மனிதனோ உடல் அளவில் பருப்பொருளாகவும், விவரங்களைத் தொகுத்து அறியும் சிந்தனை-அறிவு அளவில் நுண்பொருளாகவும் உள்ளான். ஆக இவ்வாராய்ச்சியில் அளவை என்பது பருப்பொருளாகிய கருவிகள் கொண்டு அளக்கப்படுவது என்பது ஒருபுறம் இருக்க, அவ்வாறு அளக்கப்படுவது நுண்ணிய பொருட்கள் என்பதாலும் ஆராய்ச்சி செய்பவனும் அளவையின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறான். அவன் அல்லாது அவனது ஆராய்ச்சி முழுமை ஆகாது. இப்படியாக அவன் ஆராய்ச்சியில் அளப்பவன், அளக்கப்படுவது, மற்றும் அளவை எல்லாம் பின்னிப் பிணைக்கப்பட்டு ஒன்றாகிறது.

அணு அமைப்புகளை ஆராயும் மனிதனின் வழிமுறைகளுக்கே இந்த ஒன்றிய தன்மை உண்டு என்றால், ஆராயும் மனிதனின் தன்மை மட்டும் வேறுபட்டா இருக்கும்? கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்லும் ஆத்மாவும் பார்ப்பவன், பார்க்கப்படுவது, மற்றும் பார்வை என்று விதவிதமாய் இல்லாது எல்லாம் ஒன்றாய்  இருக்கிறது

2-16

नासतो विध्यते भावो नाभावो विध्यते सत: |
उभयोरपि द्रुष्टोsन्तस्त्वनयोस्तत्वदर्शिभि: ||

இல்லாததனுக்கு இருப்பில்லை உள்ளதனுக்கு
இல்லாமை என்பதிலை எனவே – இல்லதுளது
என்னும் இரண்டின் இயல்பிது தாம் கண்டார் மெய்
தன்னை அறிந்த தவர்

பொருள்: அசத்தாகிய பொய்ப் பொருளுக்கு இருப்பு என்பது இல்லை. சத்தாகிய மெய்ப் பொருளுக்கு இல்லாமை என்பது இல்லை. ஆகையால் இல்லாததை அசத்து என்றும், உள்ளதை சத்து என்றும் உணர்ந்து, இரண்டின் தன்மை இது என்று நேரில் கண்டவர் எவரோ அவரே சத்திய ஞான சொரூபமான தன்னை அறிந்த மெய் ஞானி ஆவார்.

தேகம்-ஆன்மா இரண்டையும் பகுத்து அறிய வேண்டும் என்று முன்பு பரமாத்மா சொல்லியிருந்தார் அல்லவா? அதை அறியாததினாலேயே அருச்சுனன் தன் முன் நிற்கும் தேகங்களைப் பார்த்து குழம்பி நிற்கிறான். தனது போர்த் திறமையால் தன் முன் நிற்போர்கள் மரணமடையக் கூடும் என துக்கித்து நிற்கிறான். தேகம்-ஆன்மா இவ்விரண்டில் எது உண்மையில் நிலைத்து உள்ளது, எது அப்படி  இல்லை என்று அவனுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்துடன் மேலும் தொடர்கிறார்.

எது என்றும் உள்ளதோ அது நிலைத்து நிற்கும், எதற்கு இருப்பு இல்லையோ அது இல்லாததே. அருச்சுனன் தேகங்களைப் பார்ப்பதால் அதன் தன்மைகள் பற்றிக் கூறுவார். தேகத்திற்கு ஒரு தொடக்கம் உண்டு, அதுபோல் அதற்கு ஒரு முடிவும் உண்டு. அதாவது இன்று இருக்கிறது, நாளை இல்லாது போகும் தன்மை கொண்டது அது. ஆக முன்னும் பின்னும் இல்லாது இடையில் மட்டும் இருக்கும் தேகத்தை எப்படி நிலையானது என்று கொள்ள முடியும்? ஆனாலும் அது கண் முன் இருக்கிறதே, அதை எப்படி மறுப்பது என்ற சந்தேகம் எவருக்கும் வருவது தான். சிறிது யோசித்துப் பார்த்தால் அதன் உண்மை விளங்கலாம்.

நமக்கு தேகம் இருப்பது போல் உள்ள உணர்வு எப்போதுமா நமக்கு இருக்கிறது? நாம் இருந்தும் நமது தேகம் பற்றிய உணர்வு இல்லாது போவதும் நமது சாதாரண தினப்படி அனுபவம்தானே? என்ன, அது எப்படி என்கிறீர்களா? நாம் நன்கு உறங்கும் போது நமது உடல் பற்றிய உணர்வு ஏதேனும் நமக்கு இருக்கிறதா? விழித்ததும்தானே அது வருகிறது? அதுவரை உறங்கும் நம் உடலைக் காணும் மற்றவருக்கு அது இருக்கலாம். ஆனால் நமக்கு இருக்கிறதா என்பது தான் இங்கு ஆழ்ந்து யோசிக்க வேண்டியது.

அப்படிப்பட்ட ஆழ்ந்த தூக்கத்தில் நமக்கு தேக உணர்வு இல்லாது போய்விட்டாலும், நாம் இல்லாதா போய் விட்டோம்? ஆக இறப்பு என்பதும் நமக்கு வரும் தூக்க அனுபவத்தைப் போன்றததுதான். அதில் உடல் இல்லாது போய் விடுகிறது. தூக்கத்திற்குப் பின்போ உடல் உணர்வு வந்து விடுகிறது. மற்றபடி இரண்டுக்கும் வேற்றுமை இல்லை. இப்படி நமது உடலின் தன்மை நமக்குத் தினம் தினம் அறிவுறுத்தப்பட்டாலும் அதை நாம் சரிவர உணரவில்லை. உடல் பிறப்பு-இறப்பு என்று மட்டுமில்லை, விழிப்பு-உறக்க நிலைகளிலும் இருந்து-இல்லாது போய் விடுகிறது. இருப்பு என்ற நமது என்றும் உள்ள தன்மையே எப்போதும் நிலைத்திருக்கிறது.

இதற்கு உலகியலில் ஒரு உதாரணம் காட்ட வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். தங்கத்தை வைத்துக் கொண்டுதான் வளையல், சங்கிலி, மோதிரம் என்று விதவிதமாய்ச் செய்வார்கள். அப்படிச் செய்யப்படும்போது அந்த அந்த ஆபரணம் இருக்கிறதா என்று கேட்டால், “ஆமாம், இருக்கிறது” என்றுதான் எவரும் சொல்வார்கள். ஆனாலும் ஒன்றை உரு மாற்றி இன்னொன்றைச் செய்யும்போது பழைய ஆபரணம் போய் புதியதொன்று வரும். அப்போது முந்தைய ஆபரணம் எங்கே என்று கேட்டால் “இப்போது இல்லை” என்றுதானே சொல்ல முடியும். ஆனாலும் முன்பும் சரி இப்போதும் சரி, அங்கு நிலையாய் இருப்பது தங்கம் தானே. ஆபரணத்திற்கு மதிப்பு இல்லை, தங்கத்திற்குத் தானே மதிப்பு? அதுபோல ஒன்று தெரிகிறது என்றால் அதன் உள்ள தன்மை அறிவது அவசியம்.

இப்படியாக நிலைத்து உள்ளதாய் நிற்கும் உண்மையானது எது, நிலையாதிருக்கும் இருப்பதுபோலத் தோன்றும் இல்லாத உண்மையற்றது எது என்ற இரண்டையும் அறிவு பூர்வமாக மட்டும் அல்லாது, தன் அனுபவத்திலும் நேரடியாக உணர்பவர் எவரோ அவரே மெய் ஞானி ஆவார்.

music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

2 Replies to “ரமணரின் கீதாசாரம் – 4”

  1. நல்வழிப்படுத்தும் சிறந்த ஆன்மீக கட்டுரை…
    உங்கள் பணி தொடரட்டும்…
    ஹிந்து சக்தி வெல்லட்டும்…
    ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *