பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – பகுதி 1 | பகுதி 2
(தொடர்ச்சி…)
பகுதி-III – வேதிப்பொருள்களால் பக்கவிளைவுகள்
வேதிப்பொருள்கள் (Chemicals) என்றவுடன் இன்றைய சமூகத்தில் பலருக்கு மின்சார ஷாக் அடிக்கிறது. வேதிப்பொருள்களால் ஏற்படும் ஆபத்துகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் வேதிப்பொருள்களால் மனித சமுதாயம் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. எந்தப் பத்திரிகையும் அவற்றைப்பற்றி எழுதுவதில்லை. பக்கவிளைவுகளால் ஆபத்து என்ற பயத்தை மாத்திரமே உண்டாக்கும். Pros & Cons என்றும் சாதக பாதகங்கள் என்றும்தானே கூறுகிறோம். ஆகவே முதலில் சாதகங்களைப் பார்க்கலாம்.
நன்மை பயக்கும் வேதிப்பொருள்கள்
(1) க்ளோரின் (Chlorine)
க்ளோரின் என்னும் வேதிப்பொருளால் பல பயன்பாடுகள் மனிதர்களுக்குக் கிடைத்தாலும், கிருமிநாசினி என்னும் பயனைப் பார்க்கலாம். குறிப்பாக தண்ணீரிலிருந்தே பல நோய்கள் பரவுகின்றன என்று பல காலமாகவே மனிதர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இன்று உலகம் முழுவதிலும் தண்ணீரிலுள்ள கிருமிகளை அழிக்க க்ளோரின் உபயோகப்படுத்த படுகிறது. தண்ணீரினால் பரவும் நோய்களை பெரிய அளவில் கட்டுப்படுத்த (குறிப்பாக மழைக்காலங்களில்) க்ளோரின் ஒரு ‘வரப்பிரசாதம்’ என்றே கூறலாம். உலகம் முழுவதிலும் ஹைபோக்ளோரஸ் ஆசிட் (HypoChlorous Acid) என்னும் உருவில் க்ளோரின் தண்ணீரில் கலக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
காலரா என்னும் நோயைக் கட்டுபடுத்துவதில் க்ளோரின் செய்த பங்கை அறிவுள்ளவர் எவரும் மறுக்க முடியாது. காலராவினால் கடந்த 200 வருடங்களில் பல முறை Epidemic (கொள்ளை நோய்) உருவாகியுள்ளது. 1817-லிருந்து 1917 வரையிலான 100 வருடங்களில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் இறந்துள்ளனர். இன்று மேற்குலக நாடுகளில் காலரா கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். இதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தண்ணீரை க்ளோரின் மூலம் சுத்திகரிப்பு செய்து மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்க ஆரம்பித்ததுதான்.
ஹெய்தியில் தற்பொழுது காலரா நோயின் தாக்கத்தைப் பற்றி செய்திகள் வருகின்றன. இதுவரை 1000 பேர் வரை இறந்துள்ளனர். க்ளோரினை உபயோகப்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதல்ல அங்குள்ள கேள்வி; எவ்வாறு ஹெய்தியிலுள்ள அனைத்து மக்களுக்கும் க்ளோரின் கலந்த தண்ணீரை விநியோகிப்பது என்பதுதான்.
அடுத்து, அறுவை சிகிச்சைக்குமுன் நோயாளியை மயக்கமடையச் செய்ய க்ளோரோபார்ம் உபயோகப்படுத்தப்பட்டது. (1850-களில்). அறிவியல் மேலும் முன்னேற, இன்று அதைவிட பாதுகாப்பான வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(2) டூத் பேஸ்ட் மற்றும் பல்பொடி
சில மரக் குச்சிகளினால் பல் துலக்குபவர்கள், எங்காவது தேடினால் ஒரு நூறு பேராவது இருப்பார்கள் என்றாலும் காலையில் முதல் வேலையாக நாம் பயன்படுத்துவது வேதிப்பொருள்களினால் உருவாக்கப்பட்ட பேஸ்ட்டைதான். நான் கோல்கேட் பேஸ்ட்டை உபயோகிக்கிறேன். அதில் உள்ள வேதிப்பொருள்களின் விவரங்கள். (Silica, Sorbitol, GPotassium Nitrate, Polythelene Glycol, Tetrasodium Pyrophosphate, Sodium Lauryl Sulphate, Caustic Potash, Sodium Monofluorophosphate, Sodium Carboxymethyl Cellulose, Sodium Saccharin, Xanthan Gum etc..) நான் பிறந்ததிலிருந்து இதுவரை எனக்கு எந்தக் கெடுதலும் ஏற்படவில்லை. என் அப்பா, என் தாத்தா என்று 3 தலைமுறைகளாக டூத் பௌடரையோ, டூத் பேஸ்ட்டையோ உபயோகப்படுத்தி வருகிறோம். (குழந்தைகள் போல அப்படியே சாப்பிடாவிட்டாலும் அனுதினமும் ஒரு துளியாவது வயிற்றுக்குள் போயிருக்கும்.)
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் வேதிப்பொருள்களைக் கொண்டே துவங்குகிறோம் என்பதைக் குறித்துக் கொள்வோம். பிறகு நாம் குளிக்க உபயோக படுத்தும் சோப், துணிகளை சுத்தப்படுத்த சோப் என்று வேதிப்பொருள்கள் நம் தினசரி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
(3) கொசுவை அழிக்கும் வேதிப்பொருள்
வேதிப்பொருளை உபயோகப்படுத்தவில்லை என்றால் கொசுக் கடியினால் மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற வியாதிகள் வரும். காமன்வெல்த் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன் தில்லியில் சரியான மழை. வீரர்கள் தங்கும் வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்கியிருந்தது. உடனடியாகக் கொசுமருந்து (வேதிப்பொருள்) தெளிக்கப்பட்டது.
அடுத்தது, வேதிப்பொருளில் இயற்கையான, செயற்கையான என்று எந்த வித்தியாசமும் இல்லை. பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் கொசுவைக் கட்டுப்படுத்த Pyrethrum என்ற தாவரத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். இயற்கை வேதிப்பொருளான இதற்கும் பக்கவிளைவுகள் உண்டு. No pesticide is 100 percent safe and care must be exercised in the use of any pesticide.
(4) மின்னணுவியல் (Electronics)
தொலைக்காட்சி, வானொலி, கணிணி, செல் தொலைபேசி என்று நாம் தற்காலத்தில் உபயோகிக்கும் அனைத்து பொருள்களும் செயற்கை வேதிப்பொருள்களாலேயே தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் பயன்களைப் பட்டியலிட வேண்டிய அவசியமே இல்லை.
(5) Anti-Biotics
இயற்கையான (தாவரங்கள்) அல்லது செயற்கையான Anti-Biotics-இன் மூலம் இன்று பல நோய்களை நம்மால் குணப்படுத்த முடிகிறது.
(6) Paracetamol, Eldoper and Cetrizine
இந்த மருந்துகளைத் தெரியாத மனிதர்கள் இன்று உலகில் உள்ளனரா, சந்தேகம்தான். பல வேதிப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் இம்மருந்துகள் சாதாரண ஜுரம், பேதி, சளி, உடல்வலி போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் தருகின்றன.
(7) Vaccines
போலியோ, பெரியம்மை, இன்ஃப்லுயன்ஸா, தட்டம்மை, தாளம்மை, டிஃப்தீரியா போன்ற நோய்கள் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட vaccines உதவியுள்ளது. இறந்த (அல்லது) ஆபத்து இல்லாத ஆனால் உயிருள்ள, வைரஸ்கள் சொட்டு மருந்து அல்லது ஊசியின் மூலம் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இந்த பிரம்மாண்ட அளவில் மருந்தைத் தயாரித்து, பதப்படுத்தி, விநியோகிக்க வைரஸ்களுடன் வேதிப்பொருள்களே துணை செய்கின்றன.
(8) Multi-Vitamin Supplement
சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 70 இலட்சம் மக்கள் இன்னும் முகாம்களிலும் தெரு ஓரங்களிலும் வசிக்கிறார்கள். இவர்களில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் போஷாக்குக் குறை ஏற்படாதிருக்க சக்தி மிகுந்த வேதிப்பொருள்கள் (Multi-vitamin Supplement) உணவுடன் சேர்த்து ஐ.நா-வின் அமைப்புகளால் கொடுக்கப்படுகின்றன. இவை முழுக்கவே செயற்கை வேதிப்பொருள்களால் ஆனவை.
(9) சர்வமும் வேதிப்பொருள்கள் மயம்
அரிசி, காய்கறிகள், பழங்கள் என்று நாம் உண்ணும் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் வேதிப்பொருள்கள் கலந்துள்ளன.
இதுவரை நாம் பார்த்த பட்டியலை அவதானிக்கும்போது நாம் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருள்களிலும், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் தண்ணீரிலும் வேதிப்பொருள்கள் இருக்கின்றன.
‘பக்கவிளைவுகள்’ என்று கூச்சலிடும் குழுக்கள் கூறுவது உண்மையாக இருந்திருந்தால் இன்று மனித குலமே பெருமளவில் அழிந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காணும் தோற்றம் தெளிவாக இருக்கிறதே!
- பல வித நோய்களால் குழந்தைகள் மடிவது இன்று இல்லை.
- திடீர் நோய்களின் (ப்ளேக்) தாக்கங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
- 650 கோடிகள் உள்ள மக்கட்தொகைக்குத் தேவையான, ஓரளவுக்கேனும் பாதுகாப்பான குடிநீரை நகரங்களில் விநியோகம் செய்ய முடிந்துள்ளது.
- வலியால் துடிக்கத் துடிக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலிருந்து இன்று பாதுகாப்பான மயக்கம் ஏற்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
- சாதாரண நோய்களுக்கு பல நாள்கள் சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இன்று இல்லை.
- 650 கோடி மக்கட்தொகைக்குத் தேவையான உணவு தானிய உற்பத்திக்கு செயற்கை வேதிப்பொருள் இல்லாத விவசாயம் செய்வதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியுமா?
இதைப் படிப்பவர்கள் நான் ஏதோ வேதிப்பொருள்களை பொழுதுபோகவில்லையென்றால் ஒரு சிட்டிகை பொட்டாஷியம், ஒரு சிட்டிகை மாங்கனீஸை தண்ணீரில் கலந்து குடிப்பவன் என்று நினைக்க வேண்டாம்.
நான் யதார்த்தத்தில் வாழ முற்படுகிறேன்; கனவுலகில் அல்ல. இயற்கையான வழியில் அல்லாமல் மற்ற வழிகளில் வேதிப்பொருள்களே இல்லாத வாழ்க்கை அனைத்து மனிதர்களுக்கும் ஏற்பட்டால் எனக்கும் கண்டிப்பாக சந்தோஷமே! ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது நடக்க வாய்ப்பில்லை.
பக்கவிளைவுகளைப் பற்றி பிரஸ்தாபம் செய்பவர்கள்கூட தங்களுக்கு பேதி ஏற்பட்டால் 3 நாள் பத்தியம் இருந்து பழைய மருத்துவத்தையா நாடுவார்கள். மற்றவர்களுக்குத் தெரியாமல் கமுக்கமாக ஒரு Eldoper-ஐ முழுங்கிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதுதான். 3 நாள் வீட்டில் ஓய்வு எடுப்பது இன்றைய வாழ்வில் எவ்வளவு பேருக்கு சாத்தியம்?
மஹாபாரதத்தில் ஒரு கதை வரும்– ஒரு குடும்பத்தைக் காக்க ஒருவரை இழப்பதில் தவறில்லை; ஒரு கிராமத்தைக் காக்க ஒரு குடும்பத்தை இழப்பதில் தவறில்லை; ஒரு நகரத்தைக் காக்க ஒரு கிராமத்தை இழப்பதில் தவறில்லை; ஒரு நாட்டை காக்க ஒரு நகரத்தை இழப்பதில் தவறில்லை.
- க்ளோரினைக் கலந்தால் வெகு சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலானோர் பயன் பெறுவர்.
- கொசுவர்த்திச் சுருளினால் மலேரியா போன்ற நோய்கள் வராது. ஆனால் வெகு சிலருக்கு ஆஸ்த்மா போன்ற மூச்சுக்குழாய் நோய்கள் ஏற்படலாம்.
- செயற்கை உரங்களை உபயோகித்தால் பசுமை புரட்சி ஏற்பட்டு உணவுத்தட்டுபாடு குறையும். ஆனால் வெகு சிலருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
- பஞ்சம் வந்த பகுதிகளில் சக்தி இழப்பை சரிசெய்ய Multi-Vitamin Supplements வரப்பிரசாதமாக அமையும். ஆனால் வெகு சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
அறிவியல் சரியான திசையிலேயே முன்னேறுகிறது
நவீன அறிவியலின் முன்னேற்றத்தை எடைபோட ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மீண்டும் க்ளோரின்– மனிதனின் உயிர் ஆதாரமாக இருக்கும் தண்ணீரில் க்ளோரின் 1850-லிருந்து கலக்கப்பட்டு வருகிறது. அதற்காக பக்கவிளைவுகளைப் பற்றி நாம் அறியாமல் இல்லை. அதற்கு மாற்றாக ஓசோன் மூலம் தண்ணீரின் கிருமிகளை நீக்கும் முறையும் இன்று பிரபலமடைந்துள்ளது. க்ளோரின் தண்ணீரிலுள்ள கிருமிகளை நீக்கினாலும் அந்த வேதிப்பொருள் தண்ணீரிலேயே தங்கி விடுகிறது. வெகு சிலருக்கு சில உபாதைகள் வந்தது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
அமேரிக்காவின் சில நகரங்களிலும் ஐரோப்பாவின் சில நகரங்களிலும் ஓசோன் மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது ஓசோன் மூலம் சுத்திகரிப்பு செய்ய நிறைய பணம் செலவாகும். அடுத்து ‘புற ஊதா ஒளி’ (Ultra Violet Rays) இதற்குத் தேவைப்படுகிறது. க்ளோரினை தண்ணீரில் கலக்கும்போது ‘வேதி வினை’ (Chemical Reaction) மூலமாக சில உதிரிப்பொருள்கள் உருவாகின்றன. இவைதான் மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை. க்ளோரின் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓசோன் சுத்திகரிப்பிலும் சில உதிரிப் பொருள்கள் உருவாகத்தான் செய்கின்றன. 100 சதவிகிதம் பாதுகாப்பான முறையை நாம் இன்றுவரை பெறாவிட்டாலும் க்ளோரினை விட சிறந்த முறை கிடைத்திருக்கிறது. பணச்செலவு அதிகமாக இருப்பதால் இது எல்லா நாடுகளிலும் வர சில காலமாவது பிடிக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
1850-இல் லண்டன் மாநகரத்தில் முதன்முறையாக தண்ணீர் விநியோகத்தில் க்ளோரின் உபயோகப்படுத்த பட்டது. எவ்வளவு தண்ணீருக்கு எவ்வளவு க்ளோரினைக் கலக்க வேண்டும் என்பது புரியாத நிலையாகவே இருந்திருக்கும். எது சரியான அளவு? எது அதிக அளவு?
ஆனால் இன்று நம்மிடம் அளவுகோல் உள்ளது. (1 லிட்டர் தண்ணீரில் 1 துளி க்ளோரின் ப்ளீச் கலக்க வேண்டும்… என்பது போல). மேலும் விவரங்கள் நமக்கு எதிர்காலத்தில் கிடைத்தால் இந்த அளவுகோல் மாற்றப்படும்.
சிலரின் வியாதியால் பலருக்கு நன்மை
மேலும் 1850-இல் க்ளோரின் லண்டன் மாநகரில் கலக்கப்படும் போது, அதன் பக்கவிளைவுகளைப்பற்றி தெரிந்திருக்காது. காலராவிலிருந்து தப்பிக்க உடனடி தீர்வு தேவைப்பட்ட பொழுது க்ளோரின் கலப்பது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில தசாப்தங்களுக்கு பிறகு சில மனிதர்களுக்கு ஏற்பட்ட உபாதைகளை அறிந்து க்ளோரினின் அளவு சரி செய்யப்பட்டிருக்கும். (இது என் ஊகம் மட்டுமே).
“க்ளோரின் கலக்கப்படா விட்டால் காலரா நோயால் பல்லாயிரம் பேர் இறப்பர்; க்ளோரின் கலந்தால் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படும்”– என்ற செய்தியை லண்டன் மேயருக்கு அளித்தால் அவரால் வேறு எப்படி முடிவு எடுக்க முடியும்?
நோய் எதிர்ப்பு மருந்தினால் மதி இறுக்கம் (Autism)– இந்தச் சர்ச்சை குறிப்பாக மேற்குலக நாடுகளில் பல காலமாக இருந்து வருகிறது. பல வகையான அம்மை நோய்களைத் தடுக்க குழந்தைகளுக்கு இந்த மருந்து (Vaccines) அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துக்கும் ‘மதி இறுக்கம்’ நோய் குழந்தைகளுக்கு வருவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பல முறை உறுதிபடுத்தப்பட்டாலும் சிலர் சந்தேகத்துடனேயே உள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், பிரிட்டனில் 1998-ற்குப் பிறகு இந்தச் சர்ச்சையின் மூலம் பலர் இந்த நோய்த் தடுப்பு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க மறுத்தனர். அதன் விளைவாக அம்மை நோய் பல குழந்தைகளுக்கு மீண்டும் சமூகத்தில் வந்தது என்பதை மட்டும் மறக்காமல் குறித்துக் கொள்வோம்.
தற்பொழுதைய அறிவியலின்படி,
மதி இறுக்கம் (Autism) ஏன் ஏற்படுகிறது? — தெரியாது
மதி இறுக்கம் நோயைக் குணப்படுத்த முடியுமா? — முடியாது.
எந்தத் துறையிலும் முன்னேற்றங்களைக் கொண்ட மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும் என்ற நிலை வந்தால் ‘Status Quo is Unsustainable’ என்று கூறுவார்கள். வேதிப்பொருள்களின் பக்கவிளைவுகளையும் இப்படி எடைபோடலாம். மேலும் பெரிய முன்னேற்றங்களை அடைய வேண்டியது மனித சமுதாயத்தின் அவசியம். ஆனால் வேதிப்பொருள்களை எதிர்ப்போர் கூறும் “வேதிப்பொருள்களே இல்லாத சமுதாயத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்” என்பதற்கு என் பதில். “Alternative will be a calamity”. இன்று உடனடியாக வேதிப்பொருள்களை நம் புழக்கத்திலிருந்து நிறுத்தினால் அது மனித சமுதாயத்தின் பேரழிவுக்கு வழிவகுக்கும்.
உதாரணமாக சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரித் தண்ணீரை க்ளோரினைக் கலக்காமல் சென்னை மக்களுக்கு விநியோகிப்பதை நம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியுமா?
என் Prophecy- உலகின் கடைசி மனிதன் நானே!!!
வேதிப்பொருள்களினால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி பேசும் எதிர்ப்பாளர்கள் செல்தொலைபேசியைப் பற்றி பேசவே மாட்டார்கள். ஏனென்றால் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தாலும் (இன்னும் உறுதி செய்யப்படவில்லை) அதன் பயனை உபயோகித்து விட்டதால் அவர்களாலேயே அதை விட முடியாது. மிகப்பெரும் கோடீஸ்வரர்களிலிருந்து கீழ்மட்ட ஏழைகள் வரையிலும் இன்று செல்தொலைபேசி உள்ளது. சிறு குழந்தைகளைத்தவிர மற்ற அனைவருக்கும் செல்தொலைபேசி இன்னும் 10 வருடங்களில் கிடைத்துவிடும் என்பது ஓர் ஆய்வின் முடிவு.
ஆனால் இவ்வளவு அமர்க்களத்திலும், இன்னும் 10 வருடங்கள் கழித்தும் உலகில் ஒரே ஒருவனிடம் செல்தொலைபேசி இருக்காது. அந்த அற்புத மனிதன் நான்தான். அதிகக் கதிர்வீச்சால் மூளைப் புற்றுநோய் ஏற்பட்டு ஒட்டுமொத்த மனித சமுதாயமும் கபாலம் வெடித்து அழிந்த பின்னும் (என்ன ஒரு கற்பனை!) இந்த கட்டுரையாளன் மட்டும் அழியாமல் இருப்பான்.
சரி, என் Prophecy ஒருபுறம் இருக்க, அறிவியல் செல்தொலைபேசியைப் பற்றி என்ன கண்டுபிடித்திருக்கிறது என்று பார்க்கலாம். “தற்பொழுதுவரை உள்ள தரவுகளைக் கொண்டு எதையும் கூற முடியாது,” என்று கூறுகிறது.
தெளிவான முடிவுகளை அறிய மேலும் 10 வருடங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. செல்தொலைபேசியினால் ஆபத்து இல்லை என்றோ, ஆபத்துதான் என்றோ கூற முடியாவிட்டாலும், குழந்தைகளுக்கு செல்தொலைபேசியைக் கொடுக்க வேண்டாம் என்று மட்டும் கூறப்படுகிறது.
முடிவுரை
‘சாசுவதமான மரண பயம்’ என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே அவனுக்கு உள்ள ஒரு வாழ்வியல் சாதனம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. பயத்தாலேயே அவன் ஆபத்துகளை விலக்கி வாழ பழகியிருக்கிறான்.
அறிவுக்கு பொருந்தாத பயங்களையும் மனிதன் பல நேரங்களிலும் கொண்டிருக்கிறான். அர்ஜுனனின் பயத்தைப் போக்க பகவான் தத்துவ தரிசனம் கொடுத்தது நமக்கு ஒரு பாடமாக இருப்பதற்குத்தான்.
ஆனால் நவீனர்களில் சிலர் மனிதனின் இந்த அறிவுக்குப் பொருந்தாத, ‘பயம்’ என்ற மனநிலையை தாங்கள் நம்பியதோடு நிற்காமல் மற்றவர்களுக்கும் ‘வெடியுப்பு பீரங்கிசாமி‘யை போல் அளிக்க முயல்கிறார்கள். சில நீசர்கள் பணம், பதவி போன்றவற்றுக்காக தங்களுக்கு பயம் இல்லையென்றாலும் மற்றவர்களுக்கு அளிக்க முயல்கின்றனர்.
அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் சிலர் பணத்திற்காகவும் புகழுக்காகவும் பொய்களை அரங்கேற்றுகிறார்கள் என்பது உண்மை. அதைப்போலவே சில பெரிய நிறுவனங்கள் குறுகிய கால இலாபங்களுக்காக தவறுகளைச் செய்கிறார்கள் என்பதும் உண்மையே. ஆனாலும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் அறிவியல் முறைமைகள் (Systems and Procedures), பக்கவிளைவுகள் ஏற்படும்போது தடை செய்யப்படும் மாத்திரைகள் போன்றவையும் உலகில் நடக்கத்தான் செய்கின்றன. வயிற்றுவலி நிவாரணத்திற்கான பெரால்கான், சளி மற்றும் அலர்ஜி நிவாரணத்திற்கான ஆக்டிஃபெட் (Actifed) போன்ற மாத்திரைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
அமேரிக்காவில் எத்தனையோ மாத்திரைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ‘நோய் எதிர்ப்பு’ மருந்துகளில் (Vaccines) பாதரஸம் உபயோகப்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளில் Lead தடை செய்யப்பட்டுள்ளது. அமேரிக்காவில் பிரசித்தி பெற்ற மருந்து நிறுவனமான Pfizer-க்கு மிகப்பெரிய அபராதத் தொகை தண்டனையாக விதிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அளிக்கப்பட வேண்டிய மருந்தை வேறு சில நோய்களுக்குக் கொடுக்க மருத்துவர்களைத் தூண்டியதற்காக இந்தத் தண்டனை.
நாம் விரும்பும் வேகத்தில் தவறுகள் களையப்படாமல் இருக்கலாம். அதற்குப் பலகாலமும் பிடிக்கலாம். சிலர் பாதிக்கப்படவும் செய்யலாம். ஆனால் கடைசியில் அறிவியலே வெல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் போலி மருந்துகள் புழக்கத்தில் உள்ளதால் நாம் அனைவரும் மருந்துகளை உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டோமா? இது ஒரு Calculated Risk என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
தீயோர் அடையாளம் காணப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது எல்லா காலத்திலும் தொடர்ந்து செய்ய வேண்டிய பணி. மற்ற துறைகளைப் போலவே அறிவியல் துறையிலும் குறிப்பாக மருத்துவ துறையிலும் ஊழல் மலிந்துள்ளது.
ஆனால் அறிவியல் அளித்திருக்கும் பல பயன்பாடுகளை நாம் மறப்பது நம்மை கற்காலத்திற்குத்தான் கொண்டு செல்லும். 1947-இல் இந்தியாவின் சராசரியாக இறப்பவரின் வயது 37-ஆக இருந்தது. இன்று அது 62-ஆக உயர்ந்துள்ளது. மேலும் வசதியுள்ளோர் மாத்திரை மருந்துகளை உண்டு வாழ்ந்தால் 80 வயது வரை வாழ்வதை நாம் எல்லோரும் கண்கூடாகக் காண்கிறோம். இவற்றை எல்லாம் ஒதுக்குவது அசல் முட்டாள்தனமாகவே அமையும்.
முதல் தர அயோக்கியர்கள் சிலர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பதால் ஜனநாயத்தை விட்டுவிட்டு சர்வாதிகார ஆட்சிக்கு மாற முடியுமா? அந்த ஜனநாயகத்தின் அமைப்புகளை உபயோகித்தே, தவறுசெய்யும் மந்திரிகளை இன்றும் பதவிநீக்கம் செய்ய முடிகிறதே. சிலர் தவறுகள் வெளிவந்தவுடனே ராஜினாமா செய்கிறார்கள். சிலர் 2 வருடம் கழித்தாவது ராஜினாமா செய்கிறார்கள். பலருக்கு தண்டனை கிடைப்பதே இல்லை. இதைச் சரிசெய்ய துப்பாக்கியை ஏந்த வேண்டும் என்றா கூற முடியும்? எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் சக்தியைக் கொண்டே தீயோர் களையப்பட வேண்டும் என்பதுதானே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் வழி.
இந்த வருடம் மார்ச் மாதத்தில் வெளிவந்த ஆய்வின்படி அமேரிக்கர்களில் 46 சதவிகிதம் பேர் புவி சூடாதல் மனிதர்களால் ஏற்படவில்லை என்றே கருதுகிறார்கள். மேலும் 48 சதவிகிதம் பேர் இந்த அறிவியலை ஒப்புக்கொண்டாலும், அது மிகைப்படுத்தப்படுகிறது என்று நம்புகிறார்கள். ஐரோப்பாவில் குறிப்பாக பிரிட்டனில் 31 சதவிகிதம் பேர் இதை அறிவியல் என்று ஏற்கவே மறுக்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை இது மனித சமுதாயத்தின் இருத்தலியலுக்கு ஆபத்து ‘Existential Threat’ என்றே நம்புகிறேன். இதைப்போலவே மனிதர்கள் சந்திரனுக்குச் செல்லவே இல்லை என்று நம்பும் ஒரு சிறு குழு உலகில் இருக்கிறது. அது அமேரிக்க NASA-வின் சதி என்கின்றனர். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு கொள்வதற்கு சமம்.
1500-களில் கலிலியோ வான்வெளியைக் கண்டவுடனே அவருக்குத் தெரிந்திருக்கும்– முடிவைக் காணமுடியாத பிரம்மாண்டம் இது; தனக்கு அடுத்த தலைமுறைகளில் இந்த அறிவியலில் முன்னேற்றம் ஏற்படும்; மேலும் பல கோள்களையும், பால்வெளிகளையும் அடுத்த தலைமுறையினர் காண்பார்கள் என்று.
சாத்தான்கள் உலகையோ, மனிதர்களையோ அழிக்கப்போவதில்லை. மனித உருக்கொண்ட ‘அறிவியல் எதிர்ப்பு’ சாத்தான்கள்தான் உலகை அழிக்க அரும்பாடு படுகிறார்கள்.
வேதிப்பொருள்களற்ற சமுதாயத்தை உருவாக்குவது உயரிய நோக்கம்தான். ஆனால் அது ஒரு பயணம் என்பதை நாம் உணர வேண்டும். பயணத்தின் நடுவே பல தடங்கல்கள் வரும். தற்பொதைய நிலையை உயர்த்தவே சில தலைமுறைகள் ஆகலாம். சரியான திசையில் முன்னேறும் அறிவியலுடன் பொய் அறிவியலைக் கலந்து, ‘எரியும் கொள்ளிக்கட்டையை’ நம் தலையில் நாமே போட்டுக் கொள்ளக் கூடாது.
பாகவத புராணத்தில், பொய்களே கலிகாலத்தில் நம்பப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும் பொய்களை மறுதலித்து உண்மைகளை தைரியமாகக் கூற சில சமூகத் தலைவர்களாவது முன்வருவார்கள் என்று நம்புவோம்.
நல்லதே நடக்கும்;மெதுவாகவே நடக்கும்.
அறிவியலை நம்புவோர் கைவிடப்படார்.
முற்றும்.
நல்ல கட்டுரை.
வேதிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது நடைமுறையில் சிரமமாகத்தான் இருக்கிறது. பக்கவிளைவுகளற்ற இயற்கை மாற்று முறைகள் காணப்பட அநேகக் காலமாகலாம் என்பதும் உண்மையே.
தங்கள் பக்கத்தில் (வேதித் தரப்பு) இருக்கின்ற குறைகளையும் ஒப்புக்கொண்டு, மறு பக்கத்தில் (இயற்கை முறை) இருக்கின்ற நிறைகளையும் காட்டி நடுநிலையுடன் இக்கட்டுரை எழுதப்பட்டிருப்பது அழகு.