ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ந:
பார்தோ² வத்ஸ: ஸுதீ⁴ர்போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்!பசுக்களாக உபநிடதங்கள், பால் கறக்கும் கோபாலநந்தனன்,
பாலைப் பருகும் பசுங்கன்றாக பார்த்தன், அமுதமான பாலாக கீதை!கடல் போன்ற உபநிடதங்களைக் கடைந்து, கண்ணன் வழங்கிய ஆரமுதான கீதையின் சாரமாக, நமக்காக பகவான் ரமணர் தந்த, சுருக்கமான பொருட்செறிவு மிகுந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய புதிய தொடர்!
நான் கேள்விப்பட்டவரை, பகவான் ரமணர் மதுரையிலிருந்து திருவண்ணாமலை அடைந்தபின் வேறெந்த ஊருக்கும் தன் பூத உடல் கொண்டு சென்றதில்லை. சூக்ஷம உடல் கொண்டு சென்னை அருகே திருவொற்றியூர் சென்றதையும் அவருக்கே தெரியாது ஏதோ அதிசயம் நடந்தது போலத்தான் சொல்லியிருக்கிறார். அங்கு ரமணர் வந்ததை அவரது சீடரான கணபதி முனியும் அதை உறுதிப்படுத்திருக்கிறார். அதேபோல அவர் எவருடைய வீட்டிற்கும் தன் இச்சை கொண்டு சென்றதில்லை. ஒரு முறை வலுக் கட்டாயமாக வண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
அவர் எங்கு சென்றும் உபன்யாசம் செய்ததாகக் கேள்விப் பட்டதில்லை, -ஒரே ஒரு முறை தவிர. அப்போது சில அன்பர்களுடன் கிரி வலம் சென்று கொண்டிருந்தவர் ஈசான்ய மூலையில் உள்ள ஈஸான்ய தேசிகர் மடத்தின் பக்கம் வந்தார். அங்கு பிரவசனம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ரமணர் வருவதைப் பார்த்ததும், அங்கிருந்தோர் மிகவும் வற்புறுத்தி வேண்டிக் கொண்டதால் பகவத் கீதையைப் பற்றி ஒரு சொற்பொழிவு கொடுத்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதேபோல, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் படைப்புகளில் வெகுச் சிலவே அவருக்காகத் தோன்றி அவர் எழுதியது. மற்றவை எல்லாமே யாராவது ஒரு அன்பர் அவரிடம் விளக்கம் கேட்டதாலோ, அல்லது வேண்டிக் கொண்டதாலோ உருவானவைகள் தான். ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ரமணரிடம் கேட்டதன் பலனாகவே நமக்கு அவரது பகவத்கீதாசாரம் கிடைத்தது.
மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதையின் சாராம்சத்தை விளக்குவதாக மட்டும் அல்லாது, ரமணர் போதிக்கும் “நான் யார்?” எனக் கேட்டு ஒருவன் ஆன்ம விசாரம் செய்வதன் நோக்கத்தையும், முறையையும், பலனையும் விளக்குவதாக அது அமைந்துள்ளது. பகவத் கீதையின் வெவ்வேறு அத்தியாயங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னுக்குப் பின் கோர்க்கப்பட்டிருந்தாலும், அந்தக் கோவையில் ஒரு முறையையும், அழகையும் காணலாம்.
ஒருவன் தன் பிறவிப் பெரும் பயனை அடைவதற்கு உண்டான வழிகளைக் காட்டுவதில் முதன்மை வகிக்கும் உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் முப்பெரும் நூல்களை “பிரஸ்தானத்ரயம்” என்று ஆன்றோர் குறிப்பிடுவர். நமது இந்து மதம் எனப்படும் சனாதன தர்மத்திற்கு ஆதாரமான வேதங்கள் சொல்வதன் சாரத்தைப் பிழிந்து உபநிஷத்துகள் கொடுக்கின்றன என்றால், அந்த உபநிஷத்துகளின் சாரத்தை கீதை நமக்குக் கொடுக்கின்றது என்று சொல்லலாம். அதுவும் ஒரு போர்க்களத்தில் கொடுக்கப்பட்டதால், வேதங்கள் சொல்வது எந்த நிலையிலும், எந்த இடத்திலும் பொருத்தம் ஆனவைகளே என்றும் நமக்குப் பாடம் ஆகிறது. தற்காலத்தில் இந்து மத நூல்கள் அனைத்திலும் பகவத் கீதைதான் மேலை நாட்டினருக்கு மிகவும் பரிச்சயமாக உள்ளது. இப்படியாக நம்மவர் தவிர மற்றோரும் போற்றும் கீதையில் சொல்லப்பட்டுள்ளவைகளில் சில சுலோகங்களாவது நாம் நினைவில் கொள்வது நன்மை பயக்கும் அல்லவா? அந்த கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு கீதாசாரத்தை அருளியிருக்கிறார்.
முதலில் தம் தேர்வின் மூலம் கீதையின் சாரத்தைக் கொடுத்தவர், நம் பொருட்டு தமிழில் மொழி பெயர்த்து வெண்பா வடிவிலும் கொடுத்திருக்கிறார். வாசகர்கள் எளிதில் வாசிக்கும் பொருட்டு அந்த வெண்பாவில் வரும் சொற்றொடர்களைப் பிரித்து கட்டுரையில் எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றின் வடமொழி மூலத்தையும், அவைகளோடு கொடுத்துள்ளேன்.
எஸ்.ராமன் அவர்களின் ரமணர் குறித்த வேறு சில கட்டுரைகள்:
முன்பு நாம் வெவ்வேறு கட்டுரைகளில் பார்த்த ரமணரின் ஞான நெறி விளக்கங்களையும் இங்கு வரும் கீதையின் கருத்துக்களையும் ஒப்பு நோக்கினால், கீதையின் போதனைகளை நம் முன் வாழ்ந்து காட்டிய விதேக முக்தரான ரமணர் மூலம் கீதாசாரியனின் அருள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதை நாம் உணரலாம்.
நூல் காப்பு
பார்த்தன் தேரில் நல் வார்த்தையால் அவன்
ஆர்த்தி போக்கு அருண் மூர்த்தி காக்கவே
பொருள்: அர்ஜுனனுடைய தேர் தட்டின் மீது அமர்ந்திருந்து, நல்ல அருள் மொழிகளால் அவனுடைய துயரத்தைப் போக்கிய அருள் வடிவான கிருஷ்ண பரமாத்மா காத்து அருள்வாராக.
மஹாபாரதப் போரின் கதை நம்மில் பலருக்கும் நன்கு அறிமுகமானதே. அதர்மமான பகடைக் காய் ஆட்டத்தில் தர்மத்திற்கே உதாரணாமாய் விளங்கிய யுதிஷ்டிரர் தலைமையில் எல்லாவற்றையும் இழந்தும், அதற்குப் பிராயச்சித்தமாக சகல இன்னல்களுக்கும் உள்ளாகி பஞ்ச பாண்டவர்கள் தர்ம வழியில் சென்று, இறுதியில் அமைதியை நாடும் வேளையில், ஐவருக்கும் ஐந்து நாடுகள் வேண்டாம், ஐந்து ஊர்கள் வேண்டாம், ஐந்து கிராமங்கள் கூட வேண்டாம், ஐந்து வீடுகளே போதும் என்று பாண்டவர்களின் தூதனாக கிருஷ்ண பரமாத்மா வேண்டியும், கௌரவர்களில் மூத்தவனாகிய துரியோதனன் எதையும் கொடுக்க மறுத்து பாண்டவர்களைப் போருக்கு இழுக்கிறான்.
அந்த நிலையில் வேறு வழியின்றி போரிட்டுத்தான் நமக்கு உரியதையே பெற முடியும் என்ற நிலையில் போர்க்களத்திற்கு வீராவேசமாக வந்த அருச்சுனன், பகவான் கிருஷ்ணரே அவனுக்கு தேரோட்டியாக வந்துள்ள தேர்த் தட்டின் மேல் நின்று ஒரு முறை சுற்றிப் பார்க்கிறான். எதிர்ப்புறத்தில் தன்னை வளர்த்த பெரியோர்களையும், தனக்கு ஆசானாய் நின்று சொல் வித்தை, வில் வித்தை என்று சகல கலைகளையும் கற்றுத் தந்த தன் குருமார்களையும், தன்னுடன் கூடப் பிறந்து, வளர்ந்து, கற்ற தம்பிமார்களையும், மற்றும் உற்றத்தார், சுற்றத்தார், நண்பர்களையும் பார்த்து வாய் குழறி, நா உலர்ந்து “இவர்களுடன் போரிட்டு, இவர்களைக் கொன்றா நாம் நமக்கு வேண்டியதைப் பெற வேண்டும்? அதனால் நமக்கு பாபம் அல்லவா வந்து சேரும்?” என்று இவ்வாறெல்லாம் சொல்லி மன உளைச்சல் கொண்டு, மனக் கிலேசத்துடன் தனது காண்டீபத்தை கீழே போட்டுவிட்டு தன் தேரோட்டியான கண்ணபிரானிடம் தஞ்சம் புகுகிறான்.
அப்போது தர்மம் காக்கும் நல் வார்த்தைகள் சொல்லி அவனுக்கு உண்மை நிலையை உணர்த்தி அவன் மேற்கொண்டு செய்யவேண்டியது பற்றி உணர்த்தப் போகும் இறைவன் நம்மையும் காப்பாராக என்று வேண்டி இந்தக் காப்புச் செய்யுள் கீதா சாரத்தை தொடங்கி வைக்கிறது.
காப்புச் செய்யுள் என்றாலும், இந்த முதல் செய்யுளிலேயே பல உண்மைகள் உணர்த்தப்பட்டிருக்கின்றன. எந்த மாதிரியான நிலைமை என்றாலும், தர்மம் கூறும் நல் வார்த்தைகள்தான் ஒருவனுக்குத் தேவை. அது வில் வல்லமை காட்ட வேண்டிய போர்க்களமாகவும் இருக்கலாம், அல்லது சொல்வன்மை காட்ட வேண்டிய ஒரு பல்கலைக் கழகமாகவும் இருக்கலாம். எங்கும் எப்போதும் நிலைத்து நிற்கும் உண்மைகள் தவிர வேறு எதுவும் ஒருவனுக்குப் பயனில்லை என்பதையே நாம் இதில் முதலாகக் காண்கிறோம்.
ஒருவன் எப்பேர்ப்பட்ட வன்மை உடையவனாய் இருந்தாலும், தனது-எனது என்ற எண்ணங்கள் வரும்போதோ, அல்லது தான் கொண்ட கடமையில் சற்றே சந்தேகங்கள் வரும்போதோ அவன் தன் நிலையினின்று பிறழ்ந்து சுக-துக்கங்களினால் ஆட்கொள்ளப்படுகிறான். அதனால் அவன் தனது இயல்பான சிந்திக்கும் நிலையை தற்காலிகமாகவேனும் இழந்து அல்லல் படுகிறான். அவனுக்கு அப்போது சரியான வழி காட்ட ஒரு துணை தேவைப்படுகிறது என்பதையே நாம் அடுத்ததாகக் காண்கிறோம்.
என்னதான் கற்றுத் தேர்ந்திருந்தாலும் எதையும் அலசிப் பார்த்து முடிவெடுக்கும் திறனிருந்தாலும், எதிலும் தன்னிச்சையாலும், தன் முயற்சியாலும் மட்டுமே எதுவும் ஆவதில்லை என்னும் உணர்வு ஒருவனுக்கு வரும்போது, அவனுக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில், ஏதோவொரு வடிவில் ஆண்டவன் வந்து அருள் புரிவார்; அது நடக்க நாம் அவரை வேண்டிக் கொள்ள வேண்டும் என்பதே இங்கு நாம் காணும் முக்கிய அம்சமாகும்.
तं तथा कृपयाssविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् |
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदन: ||
கருணை மிகுந்த கருத்தனாய்த் துக்கம்
பெருகி விழிநீர் பெருக – வருந்தும் அப்
பார்த்தன் துயரகலப் பார்த்து மதுசூதனன் இவ்
வார்த்தை உரைத்தான் வகுத்து
பொருள்: மிகுந்த இரக்கம் மேலிட்ட உள்ளம் கொண்டவனாய், அடக்க முடியாத துக்கத்தால் விழிகளில் கண்ணீர் பெருகிட, வருத்தத்தினால் ஏங்கித் தவிக்கும் அப்பார்த்தனுக்கு மனதில் படிந்த துயரம் நீங்கு முகமாக அருட்கண்ணால் அவனை நோக்கி மதுசூதனன் இந்த உபதேசத்தைக் கூறலானான்.
ஒருவனுக்குத் துக்கம் வரும் என்ற நிலையில் தான் வேதாந்தம் பேச வரும் போல் இருக்கிறது. அந்தப் பேச்சோ வார்த்தைக்கு வார்த்தை சரியாக இருக்கும் போலத் தோன்றினாலும், அதை ஊக்குவித்த எண்ணமோ சரியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. தனது வீரத்தை இங்கு காவு கொடுத்துவிட்டு, ஒரு இரக்க பாவனையை இங்கு அருச்சுனன் காட்டுகிறான். எதற்காகத் தன் விருப்பமின்றியே அவன் போர்க்களத்திற்கு இழுத்து விடப்பட்டானோ, அதை மறந்து விட்டுப் பேசுவதால் அவனது வாதம் இங்கு வறட்டு வேதாந்தம் ஆகிறது.
அப்படி அவன் பேசினாலும் துக்கம் வரும்போது அவனுக்குச் சரணடையும் பக்குவமும் வருகிறது. அப்போது இறைவன் அவனைக் காக்கும் முகமாக நல் வார்த்தைகள் அருள இருக்கிறார். குழம்பிப் போய் இருக்கும் ஒருவனிடம் எப்படி முதலிலேயே நல்வார்த்தைகள் கூறுவது? அதை அவன் புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் ஒரு பக்குவமான மன நிலை வேண்டாமா? மனத்தின் துக்கத்தையும், புத்தியின் கலக்கத்தையும் ஓரளவேனும் கட்டுப்படுத்த வேண்டாமா? அதற்காக முதலில் அவர் கருணை கொண்டு அவனை ஒரு அருட்பார்வை பார்க்கிறார்.
அருச்சுனன் எத்தனையோ போர்க்களங்களைப் பார்த்தவன் தான். எதிரிகளுடன் சண்டையிட்டு, பலரையும் களத்தில் பலி கொண்டு வெற்றிவாகை சூடியவன் தான். ஆனால் இந்தப் பாரதப் போரில் எதிரில் நிற்பவர்களைப் பார்த்ததும் அவன் கலங்கிப் போனதன் முதல் காரணம் அவனுக்கு நன்கு தெரிந்தவர்களே இங்கு எதிரிகளாய் நிற்கின்றார்கள். அவர்களைப் போர்க்களத்து எதிரிகள் என்று பார்க்கமுடியாது, தன் உற்றார், உறவினர், நண்பர்கள் எனப் பார்க்கத் தொடங்கி விட்டான். அதனால் அவன் உள்ளத்தில் கருணை உணர்ச்சி பொங்க ஆரம்பித்தது.
பொதுவாகக் கருணை என்று வந்து விட்டால் அன்பு, இன்பம் என்றுதான் உணர்ச்சிகளாய் வெளிப்படும். ஆனால் இங்கோ அருச்சுனனுக்குத் துக்கம் மேலிடுகிறது. அதன் காரணம் என்ன?
மற்றோரிடம் கருணை காட்டும் போது, நாம் நம்மை மறந்து அவர்களுக்காக, அவர்கள் நன்மைக்காக என்று ஏதோ செய்வோம். அப்போது நாம் நம்மை இழப்பதால், நமக்கு ஆனந்தமே ஏற்படும். மாறாக துக்கம் வருகிறது என்றால், அந்தக் கருணையில் நான்-எனது என்ற மனோபாவம் இருக்கிறது, நாம் நம்மை இழக்கவில்லை என்றுதான் அர்த்தம் ஆகிறது. அருச்சுனன் தன் முன்னால் நிற்பவர்களை எதிரிகள் என்று பார்க்காது, தன்னைச் சார்ந்தவர்கள் எனப் பார்க்கிறான். தன்னை இழந்து அதனால் வரும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது, அவன் தனது என்றிருப்போரை இழப்போமே என்று துக்கப்படுகிறான். அதனாலேயே கருணை உள்ளம் கொண்டவன் போன்று அவன் பேசினாலும், அவனுக்கு ஆனந்த உணர்வு ஏற்படாது துக்கம் மேலிடுகிறது. அதனால் அவன் கண்களில் நீர் பெருகுகிறது.
அவனது துயரத்தைப் போக்கும் வழியாக கண்ணபிரான் சொல்லப்போகும் அருள் வார்த்தைகள் துயரத்தின் காரணத்தை விளங்கவைக்க வேண்டும். அதற்கும் முன் அவன் அதைப் புரிந்து கொள்ள அவனைத் தயார் படுத்தவே, அவர் தனது அருள் பார்வையால் அவனை நோக்குகிறார்.
ரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.
(தொடரும் …)
ரமண மகரிஷியின் மீது எனக்கு பக்தி உண்டு. அவர் குறித்து மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவல். ஆசிரியர் எழுதிய மற்ற தொடர்களையும் படித்தேன். கொஞ்சம் உதாரணம், குட்டிக் கதை என்று சொன்னால் தான் என் போன்றவனுக்கெல்லாம் புரியும். வெறும் செய்யுளுக்கு பொருள் மட்டும் சொன்னால் கோனார் நோட்ஸ் போல இருக்கிறது. ஏற்கனவே பல புத்தகங்களில் இந்த வடிவில் கிடைக்கின்றன. ஆசிரியர் இன்னும் சுவாரஸ்யமாக தன் அனுஷ்டான, அனுபவ, அநுபூதி விஷயங்களை இணைத்து எழுதினால் நானும் பயனடைவேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பகவத் கீதாசாரம் பகவான் ரமணருடைய விளக்கத்துடன் தருவது மிகவும் மகிஷ்ழ்ச்சிகுரியது.
முடியுமானால் வெவ்வேறு உபநிடதங்களுடைய விளக்கங்களும் தர முயற்சி செய்யவும்.
ஹிந்து மதத்தின் பொக்கிஷங்கள் இவை. இவைகளை அறிந்திருக்கவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை. அதற்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்கிறேன்.
மிக்க நன்றி.
I wanted to read Bhagavat geeta. But I could not understand the meaning of it. This website giving good explanation on this. I like it very much. I am very happy reading it. I want to read continuously. thank you Tamilhindu website.
திரு. ஸ்ரீகாந்த் அவர்களே, தாங்கள் சொல்வதுபோல்,
“…..கொஞ்சம் உதாரணம், குட்டிக் கதை என்று சொன்னால் தான் என் போன்றவனுக்கெல்லாம் புரியும். வெறும் செய்யுளுக்கு பொருள் மட்டும் சொன்னால் கோனார் நோட்ஸ் போல இருக்கிறது. ஏற்கனவே பல புத்தகங்களில் இந்த வடிவில் கிடைக்கின்றன. ஆசிரியர் இன்னும் சுவாரஸ்யமாக தன் அனுஷ்டான, அனுபவ, அநுபூதி விஷயங்களை இணைத்து எழுதினால்…”
என்று செய்யத்தான் எனக்கு ஆசை. கீதையைப் பற்றி பலப்பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த சாரத்துக்குண்டான விஷயங்களில் மட்டும் நான் தற்போது கவனம் செலுத்துகிறேன். நான் கோனார் நோட்ஸ் படித்தவன் மட்டும் அல்லாது, அந்த திரு, அய்யன் பெருமாள் கோனாரிடமே தமிழ் பயின்றவன்தான். இரண்டையுமே மிகவும் ரசித்தவன். தாங்களும் நோட்ஸ் நடையை ரசிக்க முயலலாம். அனுபவம் பற்றிச் சொன்னீர்கள். எனது மற்ற கட்டுரைகளில் நிறையச் சொல்லியிருக்கிறேன்.இங்கும் அவைகளைப் பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்காது. மற்றபடி அனுஷ்டானம் என்பது என்னைப் பொறுத்தவரை அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.
திரு. மேனன் அவர்களுக்கு நன்றி. தாங்கள் கூறுவதுபோல் வேறுபல மூலங்களில் இருந்தும் விளக்கங்கள் கொடுக்க முடிந்தால் அவசியம் செய்கிறேன்.
ஹெலன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி, மேலும் அதற்கு உரியவனாக இருக்க முயல்கிறேன்.
Very good information, I am really happy to thank the Tamil Hindu authors.
Its really great. Continue your service. Sri Ramana Maharishi will bless you all. I see “Sri Ramana Maharishi” on your writings. You open so many persons eyes…. Thanks!!!