தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6

தலித்துகளும் தமிழ் இலக்கியமும்பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5

(தொடர்ச்சி…)

dalitstreetsweepers

அநேகமாக, ‘பஞ்சும் பசியும்’ என்னும் சிதம்பர ரகுநாதனின் நாவலிலிருந்து தொடங்கும் இடதுசாரி சோஷலிஸ யதார்த்த வகை தமிழ் எழுத்துகள் அனைத்தும் ஏதோ தொழிற்சாலையில் முன்தீர்மானிக்கப்பட்ட ஸ்பெஸிஃக்பிகேஷனுக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் போல, மார்க்சிஸ விமர்சகர்கள் கட்சியின் கொள்கைகளுக்கேற்ப தரும் சட்ட திட்டங்களை சரிவர அனுசரித்துப் படைக்கப்பட்டவை. அதற்குக் கட்சி சார்ந்த விமர்சகர்களே பொறுப்பேற்க வேண்டும். கடைசியில் இந்த உற்பத்திப் பெருக்கத்தில், அதன் ஐம்பது வருடங்களுக்கும் மேல் நீண்ட கால வரலாற்றில் இந்த முற்போக்கு எனப்படும் எழுத்தாளர் சமூகத்தின் எழுத்துகளில் ஒன்றுகூட- திரும்பவும், ஒன்று கூட- இலக்கியம் என்று சொல்லத்தக்க குணம் கொண்டவையாக இருக்கவில்லை.

ஆனால் தலித் எழுத்துகளின் சமாசாரம் வேறாகத்தான் இருந்துள்ளது. இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை, படித்த இளம் தலைமுறையைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் தலித் வாழ்க்கையின் அவஸ்தைகளையும் அவதிகளையும் அன்றாடம் எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்த வாழ்க்கையின் கசப்புதான் அவர்கள் எழுதும் அனுபவமாக இருக்கிறது. இதற்கு நேர் எதிராக முற்போக்கு எழுத்தாளர்கள் பாட்டாளிகளின், விவசாயிகளின் அன்றாடப் பாடை அறிவார்களோ இல்லையோ அது அவர்கள் எழுத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம். அவர்கள் எழுதுவது கட்சியின் தாக்கீதுகளை மார்க்சிஸ்ட் விமர்சகர்கள் மூலம் கேட்டு அதற்கேற்ப கதைகளையும் மனிதர்களையும் அவர்கள் உணர்வுகளையும் வடிவமைத்துக்கொள்பவரகள். அவர்கள் எழுத்துக்கும் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்க்கைக்கும் எந்த உறவும் இருந்ததில்லை. ஆனால் தலித் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தலித் அவதிகள், தலித் இலக்கிய சித்தாந்திகள் வரையரைத்துக்கொடுப்பது போலிருப்பதில்லை. இந்த அடிப்படை அணுகலில்தான், ஆரம்பம் தொட்டு நேற்று வரை நாம் காணும் சோஷலிஸ யதார்த்த வகை எழுத்தாளர்களும் திராவிடக் கழகங்கள் சார்ந்த எழுத்தாளர்களும் கட்சிக் கொள்கைகள் சார்ந்து எழுதுபவர்களாகவும், தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்படும் வாழ்க்கை சார்ந்து எழுதுபவர்களாகவும் வேறுபடுகிறார்கள். சித்தாந்திகளோ தம் அரசியல் பார்வைகளை, ஆங்கிலத்திலிருந்தும் இன்னும் மற்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்படும் கொள்கைப் பிரகடனங்களிலிருந்து பெறுகிறார்கள்.

தலித் எழுத்தாளர்கள் நிச்சயமாக இன்றைய தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ளார்கள். இதுகாறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு பெறாத உலகை, வாழ்க்கையை, அனுபவங்களை அவர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தின் எல்லைக்குள் கொணர்ந்திருக்கிறார்கள். தலித் அல்லாதவர்கள் சிலர் சில எழுதியிருக்கிறார்கள் என்றாலும், அவை தலித் எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் உக்கிரத்தில், விவரப் பெருக்கத்தில், நேர்முக நெருக்கத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தலித் எழுத்தாளர்களின் மொழிக்கு ஒரு வண்ணம் உண்டு. நேரடித் தன்மை உண்டு. ஒரு உயிர்ப்பும், தாக்க வலுவும் உண்டு. அவை இதுகாறும் வாழ்க்கையில் காணப்பட்டாலும், எழுத்தில் பதிவாகியிருக்கவில்லை.

இப்பதிவுகளை முதலில் பூமணிதான் எழுபதுகளில் தொடங்கி வைத்தார்.. திரும்பவும்- பூமணிக்கு இது ஒரு புதிய பாதையாக இருக்கவில்லை. இப்படி ஒரு வட்டத்தின் மொழியைக் கையாள்வது என்பது அவரது கண்டுபிடிப்பும் அல்ல. அவருக்கு முன் பி.ராஜம் அய்யரும் புதுமைப் பித்தனும் அவரவர் உலகின் மொழியைக் கையாண்டனர். பூமணி அந்த இழையைப் பற்றிக்கொண்டு தம் உலகின் அனுபவங்களின் மொழியைப் பதிவு செய்தார். இதுகாறும் தலித்துகளுக்கு தம் அவஸ்தைகள, தாம் அனுபவிக்கும் அவலங்களைச் சொல்ல ஒரு குரல் கிடைக்காதிருந்தது. பூமணியின் குரல் அந்த முதல் குரலாயிற்று.

writer-bamaதொன்னூறுகளில் பெண்ணியப் பிரச்சினைகளிலும் தலித் பிரச்சினைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த பாமா, எழுத்துலகிற்கு வருகிறார். அவர் கிறித்துவ கன்னிமாடங்களிலும்கூட கடைபிடிக்கப்படும் தீண்டாமையை நேரில் கண்டு அனுபவித்த அதிர்ச்சி அடைகிறார். ஏனெனில் கிறுத்துவ மடாலயங்கள் இந்து மதத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுதலை அளிப்பதாகச் சொல்லியே தாழ்த்தப்பட்ட மக்களை கிருத்துவத்திற்கு மதம்மாற, பிரசாரம் செய்பவர்கள். பிரசாரம் ஒன்றும் நடைமுறை வேறாகவும் இருக்கும் நிலையால் ஏதேதோ கனவுகளுடன் உள்ளே நுழைகிறவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்படும்.. பாமா கிருத்துவ கன்னிமாடத்தில் தன் அனுபவங்களை சுயசரிதமாக, ‘கருக்கு’ என்னும் தலைப்பில் எழுதுகிறார். அதிலிருந்து ஒரு சில பகுதிகளை இங்கு தரலாம் என்று நினைத்தேன். ஆனால் காபிரைட் பிரச்சினைகள் இருப்பதாக பாமா சொல்கிறார். பாமாவின் ‘கருக்கு’ இரண்டு விஷயங்களில் தலித் இலக்கிய சித்தாந்திகளின் கடுமையான பார்வைக்கும் கண்டனத்துக்கும் இலக்காகியிருக்க வேண்டும். சித்தாந்தக் காரணங்கள் பல. ஒன்று தீண்டாமை இந்து மதத்தில் மட்டுமே காணப்படுவது. மேலும் அதற்குக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் பார்ப்பனர்களே. இவை இரண்டும் சித்தாந்தங்கள். இரண்டாவது கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னரும் அங்கும் தீண்டாமை சர்ச்சுகளின் அனுமதியுடன் மேல்சாதி ஹிந்துக்களாக இருந்து கிறுத்துவத்திலும் தம் மேல்சாதிப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களின் வற்புறுத்தலால் தொடர்கிறது எந்த வித விக்கினமும் இல்லாமல் என்ற நிதர்சன உண்மை. இருப்பினும் அதை ஒரு கிறுத்துவர் வெளி உலகம் அறியச் செய்வது என்பது சர்ச்சும் ஏற்க இயலாத ஒன்று.

பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அணி திரட்டும் தலித் இலக்கிய சித்தாந்திகளுக்கு கிறித்துவ ஸ்தாபனங்களை அதன் உள்ரகசியங்களை வெளிப்படுத்தி விரோதித்துக் கொள்வது எப்படி ஏற்புடைய செயலாகும்? இருப்பினும், சித்தாந்திகள் பாமாவைக் கண்டிப்பதற்கு பதிலாக கனிவு நிறைந்த கண்களோடுதான் பார்க்கிறார்கள். பாமா தன் பாட்டியின் பார்வையில் சொல்லும் தலித் வாழ்க்கையையும் எழுதியிருக்கிறார், ‘சங்கதி’ என்னும் நூலில். ‘அண்ணாச்சி‘ என்னும் சிறுகதையில் பாமா மிகுந்த ஹாஸ்ய உணர்வோடு, ஹாஸ்யமே எப்படி ஒரு சதிகார வேலையைச் செய்யக்கூடும் என்று சொல்வதாகத் தோன்றுகிறது.

perumal-muruganபெருமாள் முருகனின் ‘ஏறு வெயில்’ என்னும் சிறு நாவலிலிருந்தும் சில பகுதிகளை இங்கு கொடுத்திருக்கவேண்டும். வெகு நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த கவுண்டர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான பந்தங்கள், கால மாற்றத்தில், வாழ்க்கையின் கதி மாற, வெவ்வேறு நிலைகளில் அப்பந்தங்கள் அறுபடுவதைத்தான் ‘ஏறு வெயில்’ சொல்கிறது. ஆனால் ஏறு வெயில் நாவலில் வரும் பாத்திரங்களின் பேச்சை, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது அவ்வளவு சுலபமில்லை. எனவே ‘மேடு’ என்னும் அவரது சிறுகதை இங்கு தரப்படுகிறது. வயலில் வேலை செய்யும் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் பராமரிப்பில் ஒரு பெண் குழந்தை வளர்கிறது. ஆனால் பல வருடங்களுக்குப் பின் எதிர்பாராது சந்திக்கும் போது இருவரும் அந்நியப்பட்டுப் போகிறார்கள் இப்போது பெரியவளாக வளர்ந்து விட்ட பெண், தன்னை வளர்த்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்ணைப் பார்த்ததும் பழகி அறிந்த புன்னகைக்குக்கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினள் தகுதி அற்றவளாகிவிடுகிறாள். மனித உணர்வுகள் அறவே வற்றிப் போகும் நிலைதான். தலித் மக்கள் இப்படியான அவமானங்களை மௌனமாகத்தான் சகித்துக்கொண்டு வாழவேண்டி வருகிறது. பெருமாள் முருகன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. ஆனால் தலித் வாழ்க்கை அனுபவம் என்னவென்பதை எவ்வளவு நெருக்கமாக உணர முடியுமோ எவ்வளவுக்கு ஒரு தலித் எழுதுதல் சாத்தியமோ அவ்வளவு நெருக்கத்தை தன் எழுத்தில் சாதித்து விடுகிறார். அதுதான் எழுத்தைக் கலையாக்கும் அனுபவம்.

அபிமானி, விழி.பா.இதயவேந்தன், உஞ்சை ராஜன் எல்லாம் தலித் வகுப்பில் பிறந்தவர்கள். அவர்கள் தாம் நேரில் கண்ட, தாமும் பங்கு கொண்ட அனுபவங்களைத்தான் எழுதுகிறார்கள். இவர்கள் எழுத்தில் காணும் சொற்சிக்கனமும், வெளிப்பாட்டு வீரியமும் அவர்களது எழுத்து பெற்றுள்ள தேர்ச்சியைச் சொல்கிறது. இந்தத் தேர்ச்சி அவர்களுக்கு முன்னோடியாக இருந்த இலக்கியாசிரியர்களிடமிருந்து கொடையாகப் பெற்றது. அந்த முன்னோடிகளைத்தான் அவர்கள் மேல்தட்டு வகுப்பினராக இருந்த காரணத்தால் இத்தலைமுறை தலித்துகள் நிராகரிப்பதும். உஞ்சை ராஜனின் ‘சீற்றம்’ என்னும் கதையை நான் விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் கொதித்தெழும்போது அது வன்முறையில் வெடித்து வெளிக்கிளம்புவதை அச் ‘சீற்றம்’ கதை சொல்கிறது. விழி.பா.இதயவேந்தனின் கதையில் வரும் பவுனுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினள்தான். அவள் சக்கிலியர்கள் செய்யும் வேலையைச் செய்ய மறுக்கிறாள். மறுபேச்சுக்கே அதில் இடமில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவள் இன்னொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினளைத் தனக்கு சமமாகக் கொள்ள மறுக்கிறாள். அவர்களுக்குள்ளேயே சாதி பேதங்கள்; நான் உயர்ந்தவள், நீ தாழ்ந்தவள் என்னும் பாகுபாடுகள் மிக தீவிரத்தோடு பார்க்கப்படுகின்றன. இதையெல்லாம் சொல்வதா வேண்டாமா என்றெல்லாம் விழி.பா.இதயவேந்தன் யோசிப்பதில்லை. நடக்கிற உண்மைதானே. சொல்லித் தான் ஆக வேண்டும் என்று சொல்லி விடுகிறார். இதை எப்படி தலித் இலக்கிய சித்தாந்திகள் சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? ஆனால் ஆச்சரியம்; அவர்கள் என்ன காரணத்தாலோ இதய வேந்தனைப் பார்க்காதது போன்ற பாவனையில் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுகிறார்கள்.

பாவண்ணன் தலித் இல்லை. அதே போல் பேராசிரியர் பழமலையும் தலித் இல்லைதான். ஆனால் தலித் முகாமுக்குள்ளிருந்து இவர்களை யாரும் இதுவரை உரிமையில்லாது உள்ளே நுழைந்து ஆக்கிரமித்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டி வெளித்தள்ளவில்லை. இவர்களும் தங்களை தலித் முகாமைச் சேர்ந்தவர்களாகச் சொல்லிக்கொள்வதில்லை. எப்படியோ இங்கும் இருக்கிறார்கள்; அங்கும் இருக்கிறார்கள், எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனைப் போல. பாவண்ணன் நிறைய எழுதிக் குவிப்பவர். அவர் தன் பிராந்தியத்தில் வழங்கும் கதையைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்று நினைக்கிறேன். பழமலையும் தன் கவிதைக்கு இந்த வரலாற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார். பழமலையின் கவிதைகள் தனி ரகமானவை. வசனம் போலவே எழுதப்படுபவை. அத்தோடு உரையாடல் வடிவிலும். அமைந்தவை. எப்படியோ அவை கவிதையாக இயக்கம் கொண்டு விடுகின்றன. அவரது கவிதைகள் அவருக்கே உரியவை. ஒரு ப்ராண்ட் தரத்தையும் பெற்று அவருக்குப் புகழையும் சம்பாதித்துக் கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளவை அவர் கவிதைகள். இவ்விருவருடைய எழுத்துகள் தலித் முகாமில் வரவேற்பு பெற்றுள்ளன எவ்வித தடையுமின்றி.. பாக்கியம் செய்தவர்கள்தான்.

தலித் எழுத்து பற்றிய இச்சிறப்பு இதழுக்கான விஷயங்களை நான் சேகரித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு தலித் சித்தாந்தி-எழுத்தாளர்-தலித் இயக்கத்தவர், யார் யார் உண்மையில் தலித் எழுத்தாளர்கள், யார் யார் அங்கீகாரமின்றி தலித் முகாமுக்குள் நுழைந்தவர்கள் என்று எனக்கு தரம்பிரித்துக் கொடுத்து உதவ முன்வந்தார். எனக்கு ஆச்சரியமாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருந்தது, நான் கேட்காது வரவிருந்த இந்த உதவி. இதுவே அவர்கள் உச்ச குரலில் கோஷமிட்டு எதிர்த்துப் போராடும், சாதிப் பாகுபாடு பார்க்கும் மனப்பான்மையின் வெளிப்பாடு இல்லையென்றால், வேறு என்னவென்று இதைச் சொல்வது?

துரதிர்ஷ்டவசமாக, இடமின்மை காரணமாக இங்கு பிரதிநிதித்வம் பெறாத ஒரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் கிறிஸ்துவ குருமாராக நகரமுமில்லாத, கிராமமுமில்லாத இடைப்பட்ட ஒரு சின்ன டவுனின் சர்ச்சில் பொறுப்பேற்று இருப்பவர். அவரே ஒரு தனி ரக மனிதர் தான். அவர் ஒரு தலித் இல்லாத போதிலும் தலித்துகளின் முன்னேற்றத்துக்காகவே மிகுந்த முனைப்போடு செயல்படுபவர். சமூக முன்னேற்றச் செயல்களுக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் ‘IDEAS’ என்னும் ஒரு அமைப்பை நடத்தி வருபவர். அவர் எத்தகைய காரியங்களில் ஈடுபட்டுள்ளார், உயர் ஜாதி ஹிந்துக்கள் கிருத்துவராக மதம் மாறிய பின்னும் தம் உயர்ஜாதி அந்தஸ்தை விட்டுவிட மனமில்லது ஜாதி பேதங்களை வந்த இடத்திலும் பேணுவதில் தீவிரமாக இருப்பதையும் அதற்கு சர்ச்சும் உதவியாக இருப்பதையும் கண்டு அதற்கு எதிரான தன் போராட்டங்களையும் அதில், தான் எதிர்கொண்ட கஷ்டங்களையும் பற்றிய வரலாற்றை ஒரு கற்பனைப் புனைவாக ‘யாத்திரை’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார். இவர் தான் பாமா தன் அனுபவங்களை எழுதத் தூண்டுதலாக இருந்தவரும்.

activist-writer-psivakamiசிவகாமி, தலித் எழுத்தாளர் சமூகத்தில் ஒளி வீசும் தாரகை என்று சொல்லலாம். அத்தோடு இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிரதான பிரவாஹத்திலும் சேர்கிறவர். அவர் தலித் எழுத்தாளர் மட்டுமில்லை; பெண்ணியவாதி மட்டும்கூட இல்லை; தன்னைச் சுற்றி நடப்பவற்றை, வாழ்க்கையை ஒரு தேர்ச்சியுடன் கூர்ந்து கவனிப்பவர். திரும்பவும் சொல்ல வேண்டும்– யாரிடமிருந்தும் பெறப்பட்ட முன்தீர்மானிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கையின் எப்பகுதியை, எந்த மனிதர்களைத் தான் எழுதத் தேர்ந்துகொள்ளும் வகையினர் இல்லை சிவகாமி. ‘பழையன கழிதல்’ என்னும் தன் முதல் நாவலுக்கு அவர் கொடுத்த முடிவில் இத்தகைய தேர்தலின் நிழல் படிந்திருந்தாலும், விரைவில் அவர் தன்னைத் திருத்திக் கொண்டுள்ளார். அவருடைய அனுபவத்தில் கண்ட வாழ்க்கையின் கூறுகளை எழுதுவதில் அவர் தயக்கம் காட்டுவதில்லை. அவர் நாவல்களில் வெளிப்படும் வாழ்க்கையும் நமக்கு வழக்கமாகச் சொல்லப்படும் சட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட வாழ்க்கையும் அல்ல. அவர் நாவல்களில் வரும் முக்கிய பாத்திரங்கள் பொருளாதார வசதிகளோடு முன்னேறியவர்கள். அதிகார அரண்களின் தாழ்வாரங்களில் தம் அக்கறைகளுக்காக வலை வீசுபவர்கள். இதற்கான எல்லா தந்திரோபாயங்களையும் நன்கு அறிந்தவர்கள். அகங்காரம் கொண்டவர்கள். எத்தகைய தவறான வழிகளுக்கும் அஞ்சாதவர்கள். மற்றவர்களைத் தம் வழிக்கு வளைத்துக் கொள்ளும் வழி முறைகளைத் தெரிந்தவர்கள். தம் பலத்தை முரட்டுத்தனமாக வெளிக்கட்டுவதில் ஒரு குரூர சந்தோஷம் அடைபவர்கள். தம் வசத்தில் விழும் எந்தப் பெண்ணையும் தம் இச்சைக்கு இரையாக்கத் தயங்காதவர்கள். இலக்கியம் தம் அரசியலுக்கான ஆயுதம் என்று நினைக்கும் சித்தாந்திகளுக்கு சிவகாமியின் எழுத்துகள் எந்த விதத்திலும் சிறிதளவு கூட பயன் தராதவைதான். இருந்தாலும், தலித் வகுப்பைச் சார்ந்த எழுத்தாளராயிற்றே அவர்! அவர் தம் கட்டுக்குள் அடங்காது திமிரும் போது அவரைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தானே கையாளவேண்டும்! அதிலும் அவர் ஒரு பெண்ணாகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் இருந்துவிடும் பக்ஷத்தில்!. எந்த சமயமானாலும் யாரைப் பார்த்தாலும் அடிக்கத் தடியெடுத்துவிடுவது விவேகமான காரியமா என்ன?

(தொடரும்…)

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

8 Replies to “தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6”

 1. அருமையான கட்டுரைத் தொடர் ஐயா.

  தமிழ் இந்து தளத்திற்கும் நன்றி.

 2. சமீபத்தில் நடந்த இந்து ஆண்மீக புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய சில புத்தகங்கள்
  1.தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி ? – டி.தருமராஜன்
  2.பள்ளு இலக்கியமும் மறு கட்டமைப்பும் – தே.ஞானசேகரன்
  3.தலித் என்ற சொல்லும் தமிழ் சூழலும் – தே.ஞானசேகரன்

  கட்டுரை ஆசிரியர் இந்த புத்தகங்களை படித்திருந்தால் இவை முடிவாக என்னதான் கூறுகின்றன என்பதை பற்றி சுருக்கமாக கருத்தை தெரிவிக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு புரிந்தமட்டில் சாரம் இதுதான் –

  தலித் இயக்கங்களில் உள்ளவர்கள் பள்ளர், பறையர் ,சக்கிலியர் ஆவார்கள். இவர்கள் முறையே மள்ளர் (தேவெந்திர வேளாளர்) ,ஆதி திராவிடர், அருந்ததியினர் என்ற உண்மையான அடையாளம் கொண்டவர்கள். இவர்கள் எல்லோருமே தங்களது பழய வரலாற்றை பற்றிய ஆராச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள் என தெரிகிறது. இது மிகவும் வரவேற்க்க வேண்டியதே. ஆனால் ஆராய்ச்சி என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ,வலுவான ஆதாரங்கள் இல்லாத, ஊகத்தின்பேரில் சோடனை படத்தாத ஆராய்சியாக இருத்தல்வேண்டும்.

  கட்டுரை ஆசிரியர் ”தலித் இலக்கியம் தலித்துகளால்தான் எழுதப்படவேண்டும் (PART -5) …………………………………………………………………………………………………….. என்று தொடங்கும் பத்தியில் உள்ள முழுவனவற்றையும் வரலாற்று ஆராய்சியில் இறங்கும்போது மனதில் கொள்ளவேண்டும். இதற்கு முதலில் பார்பன கசப்பையும் இந்துமத வெறுப்பையும் அடியோடு விட்டொழிக்க வேண்டும். ஏன் என்றால் தமிழன் எந்த பார்பனர்களை வெறுக்கின்றார்களோ எந்த இந்து மதத்தை வெறுக்கின்றார்களோ அந்த பார்பனர்களையும் அந்த இந்து மதத்தையும் பாலுட்டி சிராட்டி வளர்த்தவன் இந்த தமிழனை தவிர வேறுயாரும் இல்லை என்ற அப்பட்டமான உண்மையை மனதில் கொள்ளவேண்டும். மேலும் கிருஸ்துவத்துடனும் இஸ்லாத்துடனும் தொடர்பு படுத்தாமல் தமிழனை தமிழனாக அடையானப்படுத்தும் முயற்சி என்றால் வரவேற்கதக்கதே.

  இந்த புத்தகத்திலிருந்து வேறு ஒரு செய்தி – முற்படுத்தப்பட்ட சாதிகள் பட்டியலில் பிராமிணனை தவிர மற்ற முற்படுத்தப்பட்ட சாதிகளில் மொத்தம் 250 உப சாதிகளை பிற்படுத்தப்பட்ட சாதிகளாக ஏற்கிறார்கள். அதைப்போல் பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் இந்திய அளவில் 1088 உப சாதிகளையும் தமிழகத்தில் 78 உப சாதிகளையும் தாழ்த்ப்பட்ட சாதிகளாக ஏற்கிறார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் உண்மையாகவே பிற்படுத்தப்பட்வரோ உண்மையாகவே தாழ்த்தப்படடவரோ இடஒதுக்கீட்டில் பெரும் அளவு பயன் அடையவில்லை என்பது புலனாகும். எப்படி ஆங்கிலேயர் வந்தபின் சத்திரியர்களும் வைசியர்களும் ஆதயத்திற்காக சூத்திரன் ஆனார்களோ இன்று அதே ஆதாயத்திற்காக தலித்துகளாக மாறி வருகிறார்களா ? ????????????

 3. அன்புள்ள நண்பர் வேதம் கோபால்,

  நீங்கள் குறிப்பிடும் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை உங்களிடமிருந்து இப்போது தான் கேள்வியே படுகிறேன் ஆகையால் நான் ஏதும் சொல்வதற்கில்லை.
  ஆச்சர்யப் படும் வகையில் பெரும்பாலான தலித் எழுத்தாளர்கள் தம் அனுபவம் சார்ந்து தான் எழுதுகிறார்கள் அது உண்மையாகவும் இல்க்கியமாகவும் மலர்ந்து விடுகிறது.

  ஆனால் இந்த ஆராய்ச்சியாளர்களின் நோக்கங்கள் வேறாகத்தான் இருந்துள்ளது. நான் பார்த்தவரை. என்ன ஆராய்வது என்ன முடிவுகளுக்கு வருவது என்பது முன்னரே தீர்மானிக்கப் பட்டு விடுகிறது. அவர்களும் அரசியல் கட்சிகளும் சித்தாந்திகளும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பவர்கள். தமிழ் நாட்டில் ஆய்வாளர்களை நிங்கள் ஒதுக்கிவிடலாம்.

  ஒதுக்கீடு விஷயம் அதுபோல்தான். பிள்ளைமார்களில் முதளியார்களில் உப சாதிகள் நீங்கள் சொல்வது போல நுற்று க்கணக்கில் உள்ளார்கள். சில உபபிரிவுகளை
  சேர்ந்தவர்கள் தம் விருப்பத்திற்கேற்ப கிராம அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் க ப்பத்த்திற் கேற்ப பிற்படுத்த சாதியாகவோ அல்லது தாழ்ந்த சாதியாகவோ சாதிப் பத்திரம் வாங்கிக் கொள்கிறார்கள். இது இரண்டு தலைமுறையாக நடந்துவரும் ஒரு நடப்பு உண்மை. எல்லோருக்கும் தெரிந்த சமாசாரம்.

  இது மேலும் மேலும் வலுவடைந்து வருகிறதே தவிர போகும் வழியாக இல்லை.

 4. In my earlier comment by mistake I have mentioned that in the forward community except Brahmin rest of the forward community has got around 250 sub cast which will identify them as backward class likewise in backward class some 1008 sub class in which TN has got 78 group as SC. Please read as backward class has got 250 cast and in SC has got 1008 cast in whole of India and particularly 78 cast in TN in the gazette list. What I want to highlight is in the forward community except Brahmin all other forward community has got a few sub cast which will be identified as backward likewise from OBC to SC. Reservation benefit is being misused for several years by giving wrong cast identification certificate by the well placed people of the society.

 5. இந்தியாவிற்கு அப்பாலும் தலித்திய (சாதீய) பிரச்சினைகள் உள்ளன.

  யாழ்ப்பாணத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும் கிறிஸ்துவ சமயியுமாகிய பிரபல எழுத்தாளருமாகிய திரு.டானியல் அவர்கள் நிறைய சாதி எதிர்ப்பு நாவல்களை வடித்திருக்கிறார்.

  பஞ்சமர்- தீண்டத்தாகாதவன் போன்ற பல நாவல்கள் அவற்றில் முக்கியமானவை. அதில் ஒன்றில் கிறிஸ்துவச் மூழலிலும் மிகுந்த உயிர்ப்பு நிலையிருக்கும் ஜாதீயத்தை வெளிக்காட்டுகிறார். அதன் சாராம்சம் இது..

  இந்துக் கோயில் ஒன்றில் ஜாதி காரணமாக ஏற்பட்ட மனக்கசப்பினால் கிறிஸ்துவ சமயத்தை தம் குடும்பத்தோடு ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகன் ஒருவன் தழுவிக் கொள்கிறான். அதன் பின் அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் பலரை கிறிஸ்துவர்கள் ஆக்குகிறான். புதிதாக தேவாலயம் ஒன்றைக் கட்டுவதிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறான்.

  அவனது பாரிய நிதி- உடல் பங்களிப்பில் தேவாலயம் அமைக்கப்பெற்று முதல் திருப்பலி நடக்கிறது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் பல்வேறு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அங்கே கூடியிருக்கிறார்கள். அப்போது ஒரு பிரச்சினை. சிலருக்குப் பக்கலில் சில ஊர்களில் இருந்து வந்த (சாதிமான்கள்) அமர மாட்டோம் என்று கூறி அப்படியாகில் நாம் திரும்பிச் செல்லப் போகிறோம் என்கறார்கள்.

  தேவாலய பங்குத்தந்தை (பாதர்) அப்போது இரு கயிறுகள் கட்டுகிறார். குறித்த ஊரிலிருந்து மதம் மாறி வந்தவர்கள் ஒரு பக்கம். மதம் மாறிய இன்னொரு சாரார் ஒருபக்கம். மற்றவர்கள் இன்னொரு பக்கம் இருக்குமாறு பிரித்துச் சொல்கிறார். அப்படியே நடக்கிறது.

  எவன் முன்னர் இந்து சமயத்திலிருந்து மதம் மாறி- பலரை மாற்றி- தேவாலயமும் கட்ட முன் நின்றானோ அவன் வெறுப்புடனும் விரக்தியுடனும் வெளியேறுகிறான். ஈது தான் கதை..

  டானியல் அவர்களின் இக்கதை கிறிஸ்துவ மரபில் பேணப்பட்ட- பேணப்படும் சாதியத்தினை சிறப்பாக காட்டுவதாக கருதுகிறேன்.

 6. இந்த கட்டுரையில் ஈழத்து எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடாதது, ஒரு குறைதான். எப்படி நேர்ந்தது என்பது இப்போது என்னால் விளக்க இயலாது. தெரியவில்லை. அவ்வளவு தான். ஆனால் அப்போது ஈழத்திலிருந்து தில்லி கலைக் கல்லூரியில் படித்து முடிக்கவிருந்த த.சனாதனனிடமிருந்து ஈழத்தில் கதியற்றுக் கிடக்கும் மனிதத்தின் உருவகமாக ஒரு ஓவியத்தை தலித் சிறப்பிதழின் அட்டைப் படத்திற்கு பெர்றுத்தர முடிந்தது. ஆனாலும் கே.டேனியல், டொமினிக் ஜீவா ஆகிய இருவரைப் பற்றியும் பற்றிப் பேசாதது குறைதான். இந்த இருவரில் டொமினிக் ஜீவா நம்மூர் முற்போக்கு மாதிரி லேபிளில் வாழ்பவர். அந்த ஊர் கமிஸாரான க்.கைலாசபதியிடம் தன்னை அர்ப்பணீத்துக்கொண்ட விசுவாசி. போகட்டும்.

  அக்காலங்களில் நான் சாஹித்ய அகாடமி வெளியிட்டு வந்த Encyclopaedia of Indian Literature-க்கு Tamil Consulting editor – ஆக இருந்தேன். அப்போது ஈழத்து தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எழுதி அதில் சேர்க்க அகாடமிக்கு விருப்பமில்லை. இப்படிச் சேர்ப்பதாக இருந்தால், பாகிஸ்தானில் இருக்கும் சிந்தி, பஞ்சாபி, உருது எழுத்தாளர்களையும் பங்களா தேஷின் வங்காளி எழுத்தாளர்களையும் சேர்க்க வேண்டியிருக்கும். பின்னர் அது இந்திய இலக்கியமாக இராது. என்றார்கள். கடைசியில் ஈழத்து தமிழ் எழுத்தைப் பற்றி ஒரு கட்டுரை வேணுமானால் எழுதுங்கள் சேர்க்கலாம். என்றார்கள். அதன் காரணமாக ஒருவேளை நான் டேனியல், டொமினிக் ஜீவா பற்றி எழுதாமல் விட்டேனோ என்று சந்தேகம் தட்டுகிறது. ஒருவேளை அதுதான் காரணமாக இருக்க வேண்டும். இந்த இருவரில் எனக்கு டேனியல் எழுத்தில் மரியாதை உண்டு. அவருடைய எழுத்துக்களில் பஞ்சமர் கொஞ்சம் பிரசார காட்டம் இருக்கும். தஞ்சையில் தஞ்சை பிரகாஷின் ஆதரவில் இருந்தபோது எழுதியது.. அதை பிரசுரம் செய்ததும் தஞ்சை பிரகாஷ் தான்.

  தஞ்சை பிரகாஷ் தமிழ் எழுத்தாளர்களிலில் மிகவும் வித்தியாசமானவர். அவர் நாவலக்ளும் மற்றவையும் பிரசுரங்களின் அலுவலகம் ஒன்று மாற்றி ஒன்று என சுற்றிக்கொண்டிருக்கும். எப்போது எந்த நாவல் யாரிடம் போயிருக்கிறது என்று அவருக்குத் தெரியாது. இப்படிக் காணாமல் போனவை நிறைய உண்டு. ஆனால், அவர் தனக்குப் பிடித்த மற்றவர்களின் எழுத்துக்களை தன் காசு போட்டு பிரசுரிப்பார். எனக்காக நான் மாத்திரமே முழுதும் எழுதி நிரப்பவேண்டும் என்று ஒரு பத்திரிகையும் ஆரம்பித்தார். இரண்டாம் இதழுக்குப் பின் அவர் இந்த உலகில் இல்லை.

 7. சொல்ல முடியுமென்றால் IDEAS அமைப்பை நடத்தும், யாத்திரை என்ற புனைவை எழுதியவர யாரென்று சொல்லுங்களேன்!
  வீழி பா. இதயவேந்தன், பாவண்ணன், பழமலய் போன்றவர்கள் எழுதிய நல்ல “தலித் இலக்கியம்” என்று எதைக் கருதுகிறீர்கள்? விவரங்கள் தர முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *