தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5

தலித்துகளும் தமிழ் இலக்கியமும்பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

தொடர்ச்சி…

ஆனால், தொன்னூறுகளில் தான் நிறைய சிறுகதைக் காரர்களும், நாவலாசிரியர்களும், கவிஞர்களும் தலித் சமூகத்திலிருந்து வெளி வர ஆரம்பித்தார்கள். அவர்கள் தம் அணிவகுப்பிற்கு ஏந்தி வந்த தலித் கொடி அவர்கள் தோன்றிய காலகட்டத்தில் வீசிய தலித் அரசியல் காற்றில் பலமாகவே படபடக்கத் தொடங்கியது. கொஞ்சம் உறக்க நிலையிலேயே எப்போதும் சுகம் காணும் தமிழ் இலக்கிய சமூகத்தின் கண்கள் திறக்கவே, தலித் எழுத்தாளர்களும் தமிழ் சமூகத்தின் கவனத்தைப் பெறத் தொடங்கினர். புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் அற்ற தமிழ் பிரசுர உலகில், தலித் இலக்கியங்கள் மற்றவற்றைவிட அதிகமாகவும் வேகமாகவும் விற்பனையாவதாகச் சொல்லப்பட்டது. தலித் பிரச்சினைகளை எழுப்பவும், அவர்கள் உரிமைக்காக அரசோடு போராடவும், நீதி மன்றத்துக்கு எடுத்துச் சென்று வழக்காடவும் தயாராக பல குழுக்கள் தோன்றின. எந்தப் பொது மேடை உரையாடலும் தலித் உணர்வுகள் பற்றிய விஷயத்துக்கே இட்டுச் சென்றது. தலித் இலக்கியமே கூட தலித் அரசியலின் நீட்சியாகவே பேசப்பட்டது. தலித் உணர்வுகள், தலித் அழகியல் என்ற பார்வைகள் மேலெழுந்தன. தமிழ் சிந்தனையில் ஒரு சலனம் தொடங்கிவிட்டது தெரிந்தது. அச்சலனம் தொடர்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், நாம் தலித் எழுத்தாளர்களைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால், அந்தச சிந்தனை, தலித் இலக்கிய உலகில் இயங்கும் தலித் இலக்கிய எழுத்தாளர்கள்,  தலித் சித்தாந்திகள் என்னும் இரண்டு சக்திகளை நம் பார்வைக்கு முன் வைக்கும். தலித் சித்தாந்திகள் பெரும்பாலும் நேற்று இடது சாரி சித்தாந்திகளாக இருந்தவர்கள். கட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவர்கள்.

RUSSIA COUP ANNIVERSARYஉலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தேவையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன?

தலித்துகளோடு இணைந்தார்கள்.  தலித்துகளுக்குத் தம் காலியான தலைமையையும் அனுபவப்பட்ட சித்தாந்த வழிகாட்டலையும் தரத் தொடங்கினார்கள். அவர்களுக்குத் தான் எந்த சமூகத்தையும் ஒன்றுபடுத்தி, ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி, அதற்கான சித்தாந்தத்தையும் கொள்கைகளையும் உருவாக்கி வழிகாட்ட வேண்டிய அனுபவம் எல்லாம் அவர்களிடம் தயாராக இருக்கிறதே. குருவாவதற்கு வேண்டிய  தகுதியும் அனுபவமும் இருக்கிறது.

எல்லாம் இருந்தும் அவர்களுக்கு  சிஷ்ய கோடிகள் வேண்டாமா? முன்னாள் பாட்டாளி வர்க்க உணர்வுகளை வழிப்படுத்தியது போல இப்போது தலித் உணர்வுகளை வழிப்படுத்த வேண்டாமா? லெனினே  உருவாக்கித் தந்த சித்தாந்தம் தானே, பாட்டாளிகளின் வர்க்கத்துக்கு பாட்டாளி வர்க்க உணர்வு என்ன என்பதை அறிவுறுத்துவதும், அதைப் பாட்டாளிகளின் மனத்தில் விதைப்பதுமாகிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலையாய கடமை. இல்லையெனில் பாட்டாளி வர்க்க உணர்வு என்பது பாட்டாளிகளுக்குத் தெரிய வாய்ப்பு ஏது? ஆக, அந்தப் பெரிய பொறுப்பை பாட்டாளிகளிடமா  விட்டுவிடுவது? கூடாது.

லெனின் சொன்னபடி, அதைக் கட்சிதான் ஏற்கவேண்டும்.  அந்த அனுபவத்தை ஒட்டித்தான், இடது சாரி சித்தாந்திகள் புதிதாகத் தம்மை தலித் சித்தாந்திகளாக தாமே முடிசூட்டிக் கொண்டு, தலித் எழுத்தாளர்களுக்கு, தலித் இலக்கியம் எப்படி எழுதப்படவேண்டும் என வகுப்பெடுக்கத் தொடங்கினார்கள். அதற்கான சட்ட திட்டங்களை (do’s and don’ts) தாமே எழுதி நிர்வகிக்கத் தொடங்கினார்கள். அதன்படி, தலித் இலக்கியத்தின் முதலும் அடிப்படையானதுமான சட்டத்தின்படி, தலித் எழுத்தாளர்கள் எழுதுவதே தலித் இலக்கியமாகும். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

kovaignaniநியாயமானது தான். சரி. ஆனால், இதற்கு அடுத்த படியாக, அவர்கள் இயற்றிய சட்டத்தின் இரண்டாம் விதி, “எது தலித் இலக்கியமாகும்?” இங்கு தான் சிக்கல் எழுகிறது. நான் இதை விளக்க ஞானி என்னும் மார்க்ஸிஸ்ட் இலக்கிய விமர்சகர் சொல்வதையே மேற்கோள் காட்ட வேண்டும்

ஞானி வெகு நீண்ட காலமாக இடது சாரி இலக்கியத்தில் தோய்ந்தவர். அவற்றின் சித்தாந்தியாக இருந்தவர். ஆனால், சமீப காலமாக அவர் மாஜி இடது சாரி சித்தாந்திகள், எழுத்தாளர்களின் காலாவதியாகிப்போன சோஷலிஸ யதார்த்த வாதங்களை மிகக் கடுமையாகச்   சாடி வருகிறார். ஆயினும், இன்னம் அவர் தன்னை இடது சாரியாகவே அடையாளம் காட்டிக்கொள்கிறவர். இனி அவரே பேசட்டும்:

“தலித் சமூகத்தை அரசியல் அரங்கில் பார்ப்பனர் மற்றும் உயர் சாதியினருக்கு எதிரான அரசியல் அரங்கில் முன் நிறுத்துவது அவர்கள் (கட்சி சார்ந்த மார்க்ஸீயர்கள்) நோக்கம். படித்த தலித் இளைஞர்களை இயக்கத்தினுள் திரட்ட இவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள். தலித் இலக்கியத்தைத் தலித் தான் படைக்க முடியும் என்கிறார்கள். தலித் இலக்கியத்தில் அழகியல் பார்க்க வேண்டியதில்லை என்கிறார்கள். அறம், நேர்மை, தியாகம் முதலிய பண்புகளைப் பார்ப்பனீய பண்புகள் எனக் கூறுகிறார்கள். தலித் இலக்கியத்திடம் குறை காண்பவர்களைச் சாடுகிறார்கள். தலித் அல்லாதவர்கள் எழுதியவை, எழுதுகிறவை தலித் இலக்கியமாக முடியாது என்கிறார்கள்.”

(ஞானி – தலித்தியம் ப.30 காவ்யா பிரசுரம் 1996)

சாதீய அரசியலை நோக்கமாகக் கொண்டு தலித் இலக்கியக் கோட்பாடு வகுப்பவர்கள், தமிழகச் சூழலில் மேலே குறிப்பபிட்ட மார்க்சீயரின் இலக்கியக் கோட்பாட்டின் தொடர்ச்சியான சற்று வேறுபட்ட பதிவுதான் என்று இதைக் கருத முடியும். இவர்கள் சாதீய சமுதாயத்தினுள் தம்மைத் திணித்தவர்கள் என பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

the-silence-we-keep-a-nuns-view-of-the-catholதலித் மக்களிடம் காணப்படும் குண திரிபுகள் உயர்சாதியினர் தமக்குள் பதித்தவை என்று கூறுகிறார்கள். தமக்கு மேற்பட்ட சாதியினரைப் பழித்துக் கூறுவதைத் தங்களுக்குத் தேவையான குணம் என்று கூறுகிறார்கள். வசை மொழிகள் மூலம் தமக்குள் பதிந்துள்ள கோப தாபங்களை விடுவித்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்.

பழையன கழிதலும்” எனும் (சிவகாமி என்னும் தலித் எழுத்தாளரின்) நாவலில் கவுண்டர் சமூக திமிர்த்தனத்துக்கு எதிர்வினையாக காத்தமுத்து (தலித்) தன் முனைப்போடு நடந்து கொள்கிறார். தன் எல்லைக்குள் வரும் மூன்றாவது பெண்ணையும் தனக்கு உடமையாக்கிக் கொள்கிறார். படித்த இவருடைய மகள் கௌரி தன் தந்தையிடம் குற்றம் காண்கிறாள். காத்தமுத்துவிடம் உள்ள குணத்திரிபைச் சிவகாமி வெளிப்படுத்துகிறார். ஆனால், தலித் விமர்சகர் காத்தமுத்துவிடம்தான் தலித்தின் குணம் காண்கிறார். இவ்வாறு சிவகாமி பார்ப்பது தலித் சாதிக்குள் தோன்றிய படித்த நடுத்தர வர்க்கத்தின் போக்கு என்கிறார் விமர்சகர்.  கன்னியர் மடத்தில் பெண்கள் காமத்துக்கு இரையாவதை அல்லது இரையாக்கப் படுவதை (“கலக்கல்” விடிவெள்ளி) மறைத்திருக்க வேண்டும் என்று இந்தக் கோட்பாட்டாளர் கூறுகிறார். இவரும் இன்னும் சிலரும் தலித் மக்களிடம் காணப்படும் சில கலாச்சாரக் கூறுகளை எதிர் கலாசாரக் கூறுகள் என கூறுகின்றனர்.”

( ஞானி, தலித்தியம் ப.29-30)

sivakami_i_a_sகுறிப்புகள்:

(1) சிவகாமி, ஒரு தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
(2) தடித்த எழுத்துக்கள் சொல்லப்பட்டவைக்கு அழுத்தம் தர என்னால் இடப்பட்டவை
(3) தலித்தியம்: தொகுப்பு, காவ்யா பிரசுரம், 1996

“கட்சி சார்ந்த மார்க்சீயர் எவ்வாறு முன்பு தம் “எதிரிகளிடம்” மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார்களோ, அதேபோல் இவர்களும் எதிரிகளைக் கண்டுபிடித்து மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள். சிவகாமி நம்மவர் என்பதால் அடக்கமாக விமர்சனம் செய்கிறார்கள். இமயத்தை வெளியில் வைத்துச் சாடுகிறார்கள். அறிவழகன் போன்றவர் தம் வட்டத்தில் இல்லையென்பதால் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். வர்க்கப் பார்வையின் எல்லைக்குள் வைத்து  தலித் மக்கள் வாழ்வையும் போராட்டத்தையும் டேனியல் எழுதினார். ஆனால், அவரைத் தலித் அரசியல் எல்லைக்குள் வைத்து சுருக்கப் பார்க்கிறார்கள். பூமணியின் “பிறகு” இவர்களின் பார்வை எல்லைக்குள் சங்கடத்தோடுதான் வருகிறது. ஆனால், அவரின் “நைவேத்தியம்” இவர்களின் பார்வைக்கு வெளியே நிற்கிறது. “புதிய தரிசனங்கள்” (பொன்னீலன்) இவர்கள் பார்வைக்குள் வருவதில்லை. (மே.கு. பக்கம் 30)

மேற்கோள்கள் சற்று நீண்டவை தான். ஆனால், தவிர்க்க முடியாதவை. ஏனெனில், ஞானி ஒரு காலத்தில் அதிகார பூர்வமான மூத்த மார்க்ஸீய விமர்சகராக இருந்தவர். இப்போது தம்மை அதிகார பூர்வமான தலித் இலக்கிய விமர்சகராக முடிசூட்டிக் கொண்டுள்ளவர்கள் ஒரு காலத்தில் எத்தகைய மார்க்சீய  சித்தாந்திகளாக இருந்தார்களோ, அந்த வகையைச் சேர்ந்தவராகத்தான் ஞானியும் ஒரு காலத்தில் இருந்தவர். இப்போதும் அவர் தம்மை மார்க்சீயராகத் தான் கூறிக்கொள்கிறார் என்ற போதிலும், பழைய கட்சிக் கொள்கைக் கட்டுப்பாட்டின் இறுக்கத்திலிருந்து இப்போது தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.  அதிகார பூர்வத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் முத்திரை பதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை கொத்தளங்கள் ரஷ்யாவிலும், ஏன் சீனாவிலும் கூட இடிந்து தரைமட்டமாகிவிட்ட நிலையில், ஞானி சுதந்திரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார். ஆகவேதான் அவரை முழுதும் மேற்கோள் காட்டுவது.

ஞானி எடுத்துக் காட்டியிருப்பதைப் போல, தலித் சித்தாந்திகள் தம் கோட்பாட்டிலும் அதன் பிரயோகத்திலும் முன்னுக்குப் பின் முரணாகவே செயல்படுகிறார்கள். இமையத்தை அவர்கள் ஏற்பதில்லை. ஏன்? இமையம் தலித் சமூகத்துக்குள்ளேயே பேணப்படும்  வகுப்புப் பிரிவினைகளையும் அதன் ஏற்றத்தாழ்வுகளையும், அவர்கள் தமக்குள் பத்திரமாகப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளும் தீண்டாமையையும் வெளிப்படுத்துகிறார். மறைப்பதில்லை. இம் மாதிரி தலித்துகள் செய்துகொள்ளும் சுய விமர்சனம், உயர்சாதியினருக்கும் பார்ப்பனீயத்துக்கும் எதிராக அவர்கள் கோஷமிட்டுக்கொண்டிருக்கும் போராட்டத்தைப் பலவீனப் படுத்திவிடும் என்பது அவர்கள் வாதம். ஆனால், இதே சுய விமர்சனத்தை அவர்கள் அங்கீகரிக்கும் விழி. பா. இதயவேந்தன், அபிமானி போன்ற தலித் எழுத்தாளர்களின் எழுத்திலும் காணும்போது சித்தாந்திகள் வாய் பொத்திக் கொள்கின்றனர். ஏன்? அபிமானி பற்றி ஒரு தலித் சித்தாந்தி எழுதுகிறார்.

law_students“அனைத்துச் சாதிக் கொடுமைகளுக்கும், தீண்டாமைக்கும் காரணமாக விருப்பது பாப்பனீயம் தான் என்று அம்பேத்கர் வெகு தீர்மானமாகச் சொல்லியிருந்தாலும், நாம் கண்முன் காணும் யதார்த்தங்களும், இன்றும் கிராமங்களில் நிலவும் உண்மைகளும், அம்பேத்கரின் வாசகங்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் உண்மையை அறிந்துகொள்ள தடையாயிருக்கின்றன.  தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் அத்தனைக்கும் பொறுப்பாக இருப்பது பிற்படுத்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் தான்.  எனவே, தலித்துகளின் அரசியல் போராட்டத்திற்கான உடனடித் தேவை, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எதிராகப் போராடுவது தான். ஆனால், இத்தேவை தான்,  பிற்படுத்தப் பட்ட சாதி மக்களும், தலித்துகளும், ஒடுக்கப்பட்டோரும், சிறுபான்மை இனத்தவரும், ஒன்று திரண்டு,   பார்ப்பனருக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கிக்கொள்வதற்கு தடையாக இருக்கிறது.  தலித்  அரசியல் பற்றி அம்பேத்கரின் தூரதிருஷ்டிப் பார்வை அளித்த தீர்மானமான முடிவுகளுக்கு  எதிராக இந்த வாழ்க்கை எதார்த்தம் நம் பார்வையை மறைத்துக்கொண்டு நிற்கிறது.”

(மறுபடியும், தமிழ் மூலத்திலிருந்து நான் மொழிபெயர்த்து வைத்துக் கொண்ட ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் இது – அதன் வாசக குறைகளோடு. கருத்து மாற்றம் இராது என்றே நம்புகிறேன்.)

ethayaventhanRight from the horse’s mouth  அப்படித்தான் இருக்கிறது இந்த மாஜி மார்க்சீய  தலித் இலக்கிய சித்தாந்திகளின் தலித் போராட்ட அக்கறைகள். நிலத்தடி யதார்த்தங்கள், வாழ்க்கை உண்மைகள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ள சித்தாந்தங்களுக்குள் அடைபடுவதற்கு வசதியாக முறுக்கி, வளைத்து, ஒடித்து, ……

விழி பா. இதயவேந்தன், மலம் அள்ளும் சமூகத்தில் பிறந்தவர். இப்போது கைநிறைய பல்கலைக் கழக பட்டங்கள் கொண்டவர். அவர் ஊர் முனிசிபல் அலுவலகத்தில் பணி செய்பவர். அவருடைய எழுத்துக்கள் காட்டும் உலகமும் உண்மைகளும், தலித் சித்தாந்திகளின் கோட்பாட்டு வாய்ப்பாடுகளை கண்டு கொள்ளாதவை. முற்றிலும் மறுப்பவை. ஆனால், சித்தாந்திகள் அவரை ஒன்றும் சொல்வதில்லை.

கிறிஸ்துவ கன்னிமாடங்களில் நடக்கும் ஆபாச நடவடிக்கைகளை பாமா (தலித் கிறித்துவர்) எவ்வித தயக்கமுமின்றி எழுதுகிறார். பாமா அக்கன்னி மாடங்களில் இருந்தவர். ஆனால், அவரையும் சித்தாந்திகள் ஒன்றும் சொல்வதில்லை. பாமா அவர்களுக்கு செல்ல குட்டித் தங்கச்சி. ஒரு விரல் கூட அவருக்கு எதிராக நீளாது. கடைசியில் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எப்படி விளங்கிக்கொள்வது? நீங்கள் என்ன எழுதினாலும், எப்படி எழுதினாலும், நீங்கள் எந்த குழுவை, வகுப்பைச் சேர்ந்தவர், எந்தக் கட்சியின் ஆள் என்பனவே நம்மாளா இல்லையா, நீங்கள் எழுதியுள்ளது அங்கீகரிக்கப்பட்டு தலித் இலக்கியமாக முத்திரை குத்தப்படுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

gods-smuggler-comic-bookதலித் இலக்கியம் தலித்துகளால் தான் எழுதப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஏனெனில், அவன் வாழ்க்கையில் பட்ட அவஸ்தைகளையும் துயரங்களின் வலியையும் அவன் தான் எழுதமுடியும். தலித்தாக பிறந்து விட்ட கொடுமையை அதன் அர்த்தத்தை அவன் தான் உணரமுடியும். மற்றவர் எழுதுவதெல்லாம்  மனிதாபிமானம் தான். இரக்க சிந்தனைகள் தான். சக மனிதனின் உணர்வுகளை உணரும் சினேக பாவம் தான். தலித் அல்லாதவர் ஒரு பார்வையாளன் தான். மூன்றாம் மனிதன் தான். ஆனால், ஒரு தலித்தின் எழுத்து, முன் தீர்மானங்களோடு பிரகடனப் படுத்தப் பட்ட  கோட்பாட்டு வாய்ப்பாடுகளுக்கு ஒத்து வராவிட்டால், அவன் வாழ்க்கை அந்தக் கோட்பாடுகளுக்குப் பிரதியாக இல்லாவிட்டால், ஒரு தலித்திடமும் அதிகார வேட்கையும் மேலாண்மை உணர்வுகளும் மனித விரோத செயல்பாடுகளும் காணப்பட்டால் அதை எழுதுவதும், ஒரு உயர் சாதிக்காரனிடம் மனிதாபிமானமும் தலித்திடம் இரக்க சிந்தனையும் காணப்பட்டால், அந்த எழுத்துக்கள் தலித் இலக்கியமாக சித்தாந்திகளால் ஏற்கப் படுவதில்லை. அந்த தலித் எழுத்தாளரிடம் தலித் இலக்கியம் படைக்கத் தேவையான தலித் பிரக்ஞையும், தலித் நுண்ணுணர்வுகளும் இல்லையென தீர்மானிக்கப் படுகிறது. இனி அவன் செய்ய வண்டியது யாது?

ஒரு தலித் சித்தாந்தியின் அலுவலகம் சென்று அவனிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தலித் இலக்கிய அங்கீகாரத்திற்கான விதி முறைகள் சட்ட திட்டங்கள் என்னென்ன வென்றும், எதெது காணாவிட்டாலும் சொல்லப்பட வேண்டும், எதெது, கண்டாலும் காணாது கண் மூடிக்கொள்ளவேண்டும் என்ற பட்டியல்களையும் கற்றுத் தெளியவேண்டும்.  தலித் இலக்கியம் படைப்பது என்பது இவ்வளவு கடுமையானதும், சிரமமானதுமான காரியமாக இருக்கும்போது அதை தலித் எழுத்தாளரின் பொறுப்பில் விடுவது என்பது அறியாமை தான். சாத்தியமற்ற காரியம் தான்.

ஒரு மாஜி கம்யூனிஸ்ட் முகாமைச் சேர்ந்தவன், அவனது பூர்வீகக் கோட்டைச் சிறை சிதிலமடைந்ததால் அகதியாக வந்துள்ளவன் அவன், கட்சி விதிகளுக்கேற்ப வாழும் மன அமைப்பும் மூளைச் சலவையும் பெற்றவன், அவன் தலித் இலக்கிய முகாம் ஒன்றுக்குள் புகுந்தானானால் அவனிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? தமிழ் நாட்டின் முற்போக்குகள் முகாம் மாறினாலும் வெகு காலமாகப் படிந்த பழக்கங்கள் அவர்களை சுலபத்தில் விடுவதில்லை. அதிலும் உதறக் கடினமானவை, அதிகார ஆசையும், கட்டளை பெற்றுக் கட்டளையிடும் அதிகாரப் பசி வேட்கையும்.

(தொடரும்)

4 Replies to “தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5”

 1. // தலித் இலக்கியம் தலித்துகளால் தான் எழுதப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. //
  நீங்கள் சொல்ல வரும் பாயின்ட் புரிகிறது; ஆனால் என்னால் முழு மனதோடு ஏற்க முடியவில்லை. இதை நீட்டித்து பெண்ணிய இலக்கியம் பெண்களால்தான் எழுதப்பட வேண்டும் என்றும் சொல்லலாம். அப்புறம் அவர்கள் பெண்களாக இருந்தால் போதாது, எதோ ஒரு வகையில் victim ஆக இருக்க வேண்டும் என்றும் சொல்லலாம். அப்புறம் ரவுடிகளைப் பற்றி ரவுடிதான் எழுத முடியும், காந்தியை வைத்து காந்திதான் எழுத வேண்டும், சரித்திர நாவல் எழுதவே முடியாது என்று எல்லைகளை சுருக்கிக் கொண்டே போகலாமா, இப்படி எல்லைகளை சுருக்குவது எங்கேதான் நிற்கும் என்று தோன்றுகிறது. என் கண்ணில் எழுதப்பட்டிருப்பதுதான் முக்கியம், எழுத்தாளன் இல்லை.

  ஆனால் நீங்கள் சொல்வதும் சரியே. சொந்த அனுபவம் என்பது எழுத்தின் ஊற்றுக்கண். நெருப்பில் கை வைத்தவனுக்கு சூடு என்றால் என்ன என்று தெரிவது போல அதைப் பற்றி படிப்பவனுக்கு தெரிவதில்லை. இப்படி இரண்டு பக்கமும் சரி என்று குழப்பமாக இருக்கிறதே!

 2. Pingback: Indli.com
 3. RV,
  //என் கண்ணில் எழுதப்பட்டிருப்பதுதான் முக்கியம், எழுத்தாளன் இல்லை//

  ஆகா அற்புதம்!!!

 4. \\\\\\\\\தலித் இலக்கியத்தைத் தலித் தான் படைக்க முடியும் என்கிறார்கள். தலித் இலக்கியத்தில் அழகியல் பார்க்க வேண்டியதில்லை என்கிறார்கள். அறம், நேர்மை, தியாகம் முதலிய பண்புகளைப் பார்ப்பனீய பண்புகள் எனக் கூறுகிறார்கள். தலித் இலக்கியத்திடம் குறை காண்பவர்களைச் சாடுகிறார்கள். தலித் அல்லாதவர்கள் எழுதியவை, எழுதுகிறவை தலித் இலக்கியமாக முடியாது என்கிறார்கள்.”\\\\\\\\\

  காலங்காலமாக பட்ட புண்களும் வேதனைகளும் அதில் இருந்து மீண்டு எழுந்து வாழ்வாங்கு வாழ்ந்தது எப்படி என்பதையும் உள்ளது உள்ள படி ஒரு தலித்தாலேயே எழுத முடியும். அடுத்தவன் எழுதினால் அது பண்டித நேரு இங்கிலாந்தில் படித்து அதனால் அன்னியப்பட்டு எழுதிய “டிஸ்கவரி ஆஃப் இண்டியா” போல தான் இருக்கும்.

  வெளியிலிருந்து நான் புரிந்து கொண்டபடியில் இது ஒரு அம்ருத மந்தனம் போல். அம்ருத மந்தனத்தின் போது ஐராவதம், உச்சைஸ்ரவஸ்,காமதேனு இவையெல்லாத்தோடு ஆலகாலவிஷமும் கிடைத்தது. ஆனால் கடைசியில் அமரத்வமீயும் அம்ருதமும் கிடைத்தது. பொதுவான சமூஹம் ஏற்காத விஷயங்களை சரி என்று ஒரு தலித் சொல்வது அவரின் வலியின் ப்ரதிபலிப்போ என்று எண்ண தோன்றுகிறது. அவ்ர்களின் மத்தியிலேயே ஸஹோதரி சிவகாமி போன்றோர் பொதுவான சமூஹத்தின் பார்வையில் சரி தவறு பிரிப்பது பொது சமூஹத்தில் ஐக்யமான விழிப்புற்ற ஒரு நபரின் கருத்தாக தோன்றுகிறது.

  எது எப்படி இருப்பினும் காலங்காலமாக ஹிம்சித்த சமூஹத்தை கட்டையால் நாலு சார்த்த வேண்டும் என்ற எண்ண்ப்போக்கில் தவறேதுமில்லை என்றே படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *