இந்துமதம் மிகப்பழைய காலத்திலேயே இந்தியா,இலங்கை உள்ளிட்ட பரதகண்டப்பகுதி முழுவதிலும் அதற்கப்பால் தென்கிழக்காசியப் பகுதிகளிலும் மேலும் உலகமெங்கிலும் பரவி விரவியிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த வகையில் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு எவ்வாறெல்லாம் இந்துமதம் சிறப்புற்றிருந்தது என்று சுருக்கமாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது. இது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே இந்து மதம்- முக்கியமாக சைவசமயம் இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது. அவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது.
[பொ.மு – பொதுயுகத்துக்கு முன், BCE. பொ.பி – பொதுயுகத்திற்குப் பின், CE (Circa)]
பழங்கால நாணயங்கள் காட்டும் இந்துமதத்தொன்மை
இலங்கையில் கிடைத்த பொ.மு 3ம், 2ம் நூற்றாண்டுகளுக்குரிய நாணயங்கள் பலவற்றில் இடபஇலட்சிணைகள் இருப்பதாக வரலாற்றறிஞர்கள் காட்டுவர். இது குறித்து பேராசிரியர்.ப.புஷ்பரட்ணம் அவர்கள் இவை தமிழகத்து இடப நாணயங்களைக் காட்டிலும் வேறுபாடாக இருப்பதால் அவை இலங்கைக்கே உரியன எனக் கருதுவதாகக் குறிப்பிடுவார்.
வேறு நாணயங்கள் சிலவற்றில் மகாலஷ்மி, சிவலிங்கம், சுவஸ்திகம், பூரணகும்பம், வேல், மயில், சேவல் போன்ற உருவங்கள் செதுக்கப் பட்டிருப்பதாகவும் வரலாற்றாய்வாளர்கள் காட்டுகின்றனர். இவ்வாறான நாணயங்கள் இலங்கையின் கந்தரோடை, மாதோட்டம், நல்லூர், வல்லிபுரம்,அநுராதபுரம், புத்தளம், திசமகராம போன்ற இடங்களில் கிடைத்தன என்பர்.
இலங்கையில் பௌத்த சாசனங்கள் பலவற்றில் குமார, விசாக, மகாசேன போன்ற பெயர்கள் உள்ளன. இவையும் முருகவழிபாட்டின் அடையாளங்களை உணர்த்துவதாகவும் சில அறிஞர்கள் கருதுவர். இவ்வாறாக இலங்கையின் பல பாகங்களிலும் கிடைத்த பழங்கால நாணயங்களினூடாக இந்து மதம் பழைய காலத்திலேயே இங்கு நிலவியிருக்கிறது என அறியலாம்.
அரசரும் சமூகமும்
மகாவம்சத்தில் விஜயனது புரோஹிதனாக உபதிஸ்ஸ என்னும் பிராம்மண மரபினன் விளங்கினான் என்று கூறுகிறது. அது போல பண்டுகாபயன் என்ற இலங்கை வரலாற்றில் பிரபலமான அரசன் பண்டுல என்ற பிராம்மணனிடம் வில் வித்தை கற்றான். பண்டுலவின் மகனான சந்திரன் என்பான் பிற்காலத்தில் அவனது ராஜகுருவானான். சுமார் 22 மிகப்பழைய கால ஈழத்துப் பிராமிச் சாசனங்களில் பிராமணர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை பேராசிரியர் சி.பத்மநாதன் எடுத்துக் காட்டுவார். இச்சாசனங்கள் யாவுமே பௌத்தசமயச் சார்பானது.இவ்வாறு பிராமணர்கள் சிறப்புற்றிருந்தமையானது இலங்கையில் இந்துசமயத்தின் செல்வாக்கைக் காட்டுவதாகக் குறிப்பிடுவர். இங்கே பிராமணர் என்று சாசனங்களால் குறிப்பிடப்படுபவர்கள் வேதம் கற்ற ஒழுக்க சீலர்களாகவே கருத முடியும் (அக்காலத்திலே பிராமணர்கள் ஜாதி மரபில் தான் உருவானார்கள் என்று கருத ஆதாரங்கள் இல்லை).
வாட்டிகதிஸ்ஸ என்ற பௌத்தஅரசன் காலத்தில் மஹாவிகாரை என்ற பௌத்த முக்கிய விகாரையினருக்கும் அபயகிரி விகாரையினருக்கும் ஏற்பட்ட தகராறை நீக்கவும்,அதை விசாரித்து தீர்க்கவும் மன்னனால் திக காரயண என்ற பிராமணன் அரசனால் நியமிக்கப்பெற்றான் என்று குறிப்பிடப்படுவது இக்கருத்திற்கு வலுவூட்டுகிறது.
மாமல்லன் என்ற பல்லவப் பேரரசனின் சேனைகளின் துணையுடன் மானவர்மன் என்பான் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. இக்காலத்திலேயே தொண்டை மண்டலத்தில் சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக கிரந்தலிபி உருவாக்கம் பெற்றது என்பர். இந்தக் கிரந்த லிபி இன்று வரை இலங்கையில் தாராளமான புழக்கத்தில் இருக்கிறது. பல்லவக் காலத்தில் வரையப்பெற்ற சாசனங்கள் பலவற்றில் கூட இந்த லிபி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் சிகிரியா போன்ற இடங்களில் கிரந்த லிபியில் அமைந்த சாசனங்களைக் காணலாம்.இக்காலத்தைய பௌத்த ஆலயங்களான நாலந்தா கெடிகே மற்றும் தேனுவரைக்கோயில் போன்றன பல்லவ காலத்தில் எழுந்த காஞ்சி கைலாசநாதர் கோயில் போன்ற அமைப்பில் உள்ளது. இசுறுமுனிய என்ற இடத்தில் பிரபலமான இரு காதலர்களின் சிலை உள்ளது. இதை சில ஆய்வாளர்கள் உமாமஹேஸ்வரர் என்று கூறுகின்றனர். இவை ஏழாம் எட்டாம் நூற்றாண்டிற்குரியது.
இசுறுமுனியவில் குதிரைத் தலையின் அருகிலிருக்கும் வீரன் ஒருவனின் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கலாயோகி டாக்டர் ஆனந்த குமாரசுவாமி ‘இராமாயணத்தில் பாலகாண்டத்தில் வர்ணிக்கப்பெறும் கபில முனிவரின் வடிவமாக இதுவுள்ளது’ என்கிறார்.ஆம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழகப் பேராசிரியரான லொனாஹஸன் டீ லியூ என்ற உலகப்புகழ் ஆய்வாளர் இச்சிற்பத்தை ‘ஐயனார்’ என்று குறிப்பிடுவார். இதற்கு ஆதாரமாக அவர் தமிழகத்திலும் கர்நாடகத்திலுமுள்ள புராதன ஐயனார் சிலைகளுடன் இசுறுமுனிய சிற்பத்தை ஒப்பு நோக்கி ஒரு ஆழமான ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார்.
இராஜராஜனுக்குப் பின் பொ.பி 1016ல் பட்டம் ஏறியவன் இராஜேந்திர சோழன். அவன் கங்கையும் கடாரமும் தன் கையகப்படுத்தியவன். இவன் இலங்கையையும் தன் ஆட்சிக்குள் உட்படுத்திக் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். இக்காலத்தில் இலங்கை ‘மும்முடிச் சோழமண்டலம்’ என்று அழைக்கப்பெற்றிருக்கிறது.இக்காலத்தில் மாதோட்டத்தில் சோழர்களால் திருவிராமேஸ்வரம், இராஜராஜேஸ்வரம் என்ற இரு சிவாலயங்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. இதைவிட உத்தமசோழீச்சரம்,பண்டித சோழீச்சரம் என்ற கோயில்களும் அமைக்கப்பட்டன.அது வரை காலமும் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தை இவர்கள் பொலநறுவைக்கு மாற்றினர். புலத்திநகரே பொலநறுவையாயிற்று. இதற்கு சோழர்கள் வைத்த பெயர் ஜனநாதமங்கலம். இங்கும் பல சிவாலயங்கள் எழும்பின. இவற்றில் வானவன் மாதேவி ஈஸ்வரம் என்கிற கோயில் இன்று வரை சிறப்பாக உள்ளது. இக்காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் என்ற குடியிருப்புக்களும் அமைக்கப்பெற்றிருக்கின்றன.
ஞானசம்பந்தரும் சுந்தரர் பெருமானும் பாடிய பெருமை
வாயுபுராணத்தில் கோகர்ண என்கிற சிவாலயமஹத் (பெரிய சிவாலயம்) பற்றி பேசப்படுகிறது. இது இலங்கையிலுள்ள திருக்கோணேஸ்வரத்தைக் கருதும் என்பது சிலரது அபிப்ராயம். இது பற்றி தெளிவாகக் குறிப்பிட முடியாவிடிலும் இத்திருத்தலம் ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தப் பெருமானால் ஒரு பதிகம் பாடிப் போற்றப்பெறுவது தெளிவாகக் கிடைக்கிறது. கிழக்கிலங்கையில் கடலோரம் காணப்படுகிறது இக்கோயில்.
தாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலார் மாண்பினர் காண்பல வேடர்
நோயினும் பிணியும் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
இப்படியாக இந்தப் பதிகம் திருக்கோணேஸ்வரத்திற்காக அமைந்துள்ளது.
இத்தலத்தில் மாதுமையம்பாள் உடனாக கோணநாதர் விளங்குகிறார். கோயில் தீர்த்தம் பாவநாசம். சிறிய அழகிய மலை மீது இக்கோயில் இருக்கிறது. தட்சண கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசலபுராணம், திருகோணமலை அந்தாதி என்ற பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்கள் இத்தலம் குறித்து எழுந்துள்ளன. கோகர்ணேஸ்வரம் என்றும் கூறப்பெறும் இக்கோயிலை நேபாளத்தில் உள்ள கோகர்ண, மற்றும் கலிங்கதேசத்தில் இருந்த கோகர்ண, மேலும் மேற்கிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள கோகர்ண என்கிற சிவாலயங்களுடன் ஒப்பிடுவர்.
ஆக, ஜம்பூத்துவீபத்தின் நாற்றிசையிலும் கோகர்ண என்கிற சிவாலயங்கள் சிறப்புற்றிருந்துள்ளன. அவற்றில் தென்திசையில் இருப்பதே திருகோணமலையாகும். இக்கோயிலில் பல்வேறு புராதன கல்வெட்டுகள்-சிற்பங்களும் கிடைத்துள்ளன.
திருகோணமலையிலுள்ள சிவாலயம் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்றதாகவும், அங்குள்ள கன்யா வெந்நீரூற்று அவன் தன் பிதிர்களுக்கு கடனாற்ற உருவாக்கியது என்றும் கூறுவர். திருகோணமலையில் மலையில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. இதை ‘இராவணன் வெட்டு’ என்கின்றனர்.
இவற்றை விளக்குவதாக புதிதாக- கோயில் முன்றலில் இராவணன் சிவபூஜை செய்கிற பெரிய சிற்பம் ஒன்றும் இம்மாதம் உருவாக்கப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலைப் போல இலங்கையின் வடமேற்கில் மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வரம் அமைந்திருக்கிறது. இத்தலம் பேரில் திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒவ்வொரு தனிப் பதிகங்களால் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
நத்தார் படைஞானன் பசு வேறுந்தனைக் கவிழ்வாய்
மத்தம் மதயானையுரி போர்த்த மணவாளன்
பத்தாகிய தொண்டர் தொழும் பாலாவியின் கரைமேல்
செத்தார் எலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே
என்று பலவாறாக இத்தலத்தைப் போற்றும் தேவாரப்பாசுரங்களைக் காண்கிறோம்.மாதுவட்டா என்கிற அசுரச்சிற்பி வழிபட்ட இடம் ஆதலில் இவ்விடம் மாதோட்டம் எனப்படுகிறது என்பதும் கேது பூஜித்த தலமாதலில் கேதீஸ்வரம் எனப்படுகிறது என்பதும் புராணச்செய்திகள்.
இத்தலத்து இறைவனை இராவணனும் மண்டோதிரியும் மட்டுமல்லாது பிரம்மஹத்தி தீருவதற்காக ஸ்ரீ ராமரும் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
தேவன் எனையாள்வான் திருக்கேதீச்சரத்தானே
என்பது சுந்தரர் வாக்கு. இவற்றால் இத்தலத்தீர்த்தமான பாலாவி ஆறு சிறப்புற்றிருக்கிறது.
இக்கோயிலில் கௌரியம்பாள் உடனாக கேதிஸ்வரநாதர் விளங்குகிறார். பௌத்த சாசனங்கள் சிலவற்றிலும் கேதீஸ்வரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.சுந்தரரும் ஞானசம்பந்தருமே இத்தலத்தைப் பாடியதாகச் சொல்லப்படுமிடத்தும் திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றிலும் (திருவீழிமிழலைப் பதிகம்) இத்தலம் கூறப்படுவது கண்டின்புறத் தக்கது.இதனோடு இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்.
இவற்றில் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் (இத்தலம் பற்றி “ போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்” என்ற தமிழ்ஹிந்து கட்டுரையில் குறிப்புகள் உள்ளன), முன்னேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவர்.
திருத்தம்பலேஸ்வரம் இன்று இல்லை. முன்னேஸ்வரம் இன்றும் உள்ள அற்புத தலம்.இங்கு வடிவாம்பிகை உடனாக முன்னைநாதர் விளங்குகிறார். இங்கு வருடாந்தம் ஆவணிமாதத்தில் 25 நாட்கள் மஹோற்சவம் நடைபெறுகிறது. இதனை விட பல்வேறு சிவாலயங்கள் இலங்கை எங்கணும் விரவிப் பரந்திருக்கின்றன. புதிதாகவும் பல ஆலயங்கள் தோன்றியுள்ளன.
ஸ்காந்தம் முதலிய புராணங்களில் ஏமகூடம் என்று போற்றப்பெறுவதான கதிர்காமம் தென்னிலங்கையிலேயே உள்ளது.சூரசம்ஹாரத்திற்காக முருகன் சூரனுடைய இருப்பிடமான மஹேந்திரபுரிக்கு படையெடுத்துச் சென்றபோது ஹேமகூடம் என்கிற பாசறையில் வீற்றிருந்தார். கதிர்காமத்தில் தேவதச்சனைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இப்பாசறையில் நடந்த சம்பவங்களைப் பற்றி தமிழில் எழுந்த கந்தபுராணத்தின் ‘ஏமகூடப்படல’மும் பேசுகிறது. முருகப்பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் செய்த இடமாகவும் இதனைச் சிலர் கருதுவர். அது போலவெ ஸ்கந்தாவதாரம் பூர்த்தியான இடம் இதுவே என்பதும் சில ஞானிகளின் கருத்து. அதாவது அந்த அவதாரத்தை நிறைவு செய்த இடமும் கதிர்காமமே. இலங்கையில் உள்ள கதிர்காம தலத்தை முப்பதிற்கும் மேற்பட்ட திருப்புகழ்களால் அருணகிரிநாதர் போற்றியிருக்கிறார். மிகவும் புனிதமான இத்தலம் உள்ள கிராமமே புனிதநகராக இலங்கையரசால் பிரகடனம் செய்யப்பெற்றுள்ளது. இன்று இக்கோயிலில் சிங்கள மொழி பேசும் கப்புறாளைமார் என்போரே வெண்துணியால் வாய்கட்டிப் பூசிக்கிறார்கள் எனினும், பழைய காலத்தில் சிவாகம முறையிலான வழிபாடு நடந்தமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.
வட இலங்கையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புகழ்மிக்க நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலாலய அம்பாளின் திருவடிவம் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற அன்னை நாகபூஷணியாள் பேரிலும் பல்வேறு இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.
அம்பிகைக்கே உரிய பழைமையான ஆலயங்கள் பலவும் இலங்கை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இதிலும் யாழ்ப்பாணத்தில் அம்பிகை வணக்கம் மிகச்சிறப்பாகப் பரவியிருக்கிறது. இவ்வகையிலேயே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அம்பிகை அடியவரான அன்பர் ஒருவரே மகாகவி பாரதிக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் வாய்த்திருக்கிறார். இதை பாரதியே கூறுவான் –
‘கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான்
தேவி பதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
பாவியரைக் கரையேற்றும ;ஞானத்தோணி,
பரமபதவாயிலெனும் பார்வையாளன்
காவிவளர் தடங்களிலே மீன்கள்பாயும்
கழனிகள் சூழ்புதுவையிலே அவனைக் கண்டேன்’
இது போலவே வேறு இடங்களிலும் ‘யாழ்ப்பாணத்தையன்” என்றும் ‘ஜகத்திலொரு உவமையிலா யாழ்ப்பாணத்தான்’ என்றும் பாரதி கூறுவான். இவை மூலம், பாரதி காலத்தில் அம்பிகை மேல் மாறாப் பக்தி கொண்ட யாழ்ப்பாணத்து சைவசமயிகள் புதுச்சேரி போன்ற இடங்களில் பரவியிருந்தமையையே காட்டுவதாகவும் கொள்ளலாம்.
பிற்பட்ட காலத்தில்..
பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறது. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும்.இக்காலத்தையவனான குளக்கோட்டன் என்கிற அரசன் திருக்கோணமலையில் உள்ள சிவாலயத்திற்குப் பெருந்திருப்பணிகள் செய்திருக்கிறான்.குளக்கோட்ட அரசன் காலத்தில் ஒரு ஜோதிடரின் எதிர்காலக் கணிப்பின் படி ஒரு வெண்பா எழுதி கோயிலுள்ள கோட்டைச் சுவரில் பொறிக்கப்பட்டது. அது இன்றும் இருக்கிறது.
முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே –மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போன பின்
மானே வடுகாய் விடும்
இச்சாசனம் 16ம் நூற்றாண்டிற்குரியது என்று தமிழகச் சாசனவியலாளரான கிருஷ்ணசாஸ்திரிகள் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் இதன் காலம் இன்று வரை சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.இதே போல கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும். அவன் பங்குனி உத்தரத்தன்று பெரியளவில் உற்சவங்கள் செய்ததாக குறிப்புகள் உள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேரோட்டம்
திருகோணமலையில் பல கிரந்த லிபியில் எழுதப்பெற்ற சாசனங்கள் கிடைத்ததாகக் கூறுகின்றனர். பேராசிரியர் சேனரத் பரணவிதான அவர்களால் ஆராயப்பெற்ற ஒரு சாசனம் இப்படிக் கூறும்.
ஸ்வஸ்தி ஸ்ரீ தேவ ஸ்ரீ சோடகங்க, ஷதிதல தில, காம்ப்ராய்ய லங்காம் அஜ,
ய்யாம் சாகேப்(த) (ச)ம்பு புஷ்பே க்ரிய பவ(ன) ரவெள ஹஸ்தவேமே, ஷ லக்நே
கோகர்ணே..
இதன் பொருளாக அவர் மொழிபெயர்த்தது-
மங்கலம் பொலிக! சுகாப்தம் சம்புபுஷ்ப வருஷத்திலே இரவி மேடத்தில் நிற்க,அத்த நட்சத்திரம் (சந்திரனோடு) மேட இலக்கினத்திற் கூடிய வேளையில் மேன்மை பொருந்திய சோடங்க (தேவ(ன்) பூலோகத் திலகமானதும் வெல்லுவதற்கு அரியதுமான இலங்கையில் வந்து கோகர்ணத்திலே..’
இது சுட்டும் காலம் கி.பி 1223 சித்திரை 14ம் திகதி காலை என்பது அவரது கருத்து.
இது போல இந்துசமயச் சார்பான பல சிலாசனங்கள் கிடைக்கப் பெற்றதாக வரலாற்றாய்வாளர் பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகிறார்.
இதே போல பல்வேறு புராதன கால சிற்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் உமாமஹேஸ்வரர், சந்திரசேகரர், நடராஜர், வீரபத்திரர், நாகராஜர், அம்பாள்,மஹாவிஷ்ணு, விநாயகர், நந்தி, சப்தமாதர், சிவலிங்கம், சோமாஸ்கந்தர்,ரிஷபவாஹனர், சூரியன், சைவநாற்குரவர் (நாயன்மார்கள்), சண்டிகேஸ்வரர், மஹாலஷ்மி, நர்த்தனகிருஷ்ணர், முருகன் போன்ற பலவும் அடங்கும்.
இலங்கையின் வடபால் இரு பெரும் விஷ்ணுவாலயங்கள் உள்ளன. அவையும் மிகப்பழைய காலம் தொட்டு உள்ளவை. பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில், வல்லிபுரம் பெருமாள் கோயில் என்கிற அவை இரண்டும் நிச்சயமாக 10ம் நூற்றாண்டுக்கு முந்தைய புராதனமானவை.
இவற்றில் பொன்னாலைக் கோயில் போர்த்துக்கேயரின் வருகைக்கு முன் ஸ்ரீரங்கம் போல ஏழு திருவீதிகளுடன் காணப்பட்டது என்பதற்கு அங்கே கோயில் சூழமையில் உள்ள சில சிதைவுகள் சான்றாகின்றன. இதே போல அநுராதபுரம் தென்னிலங்கையில் தேவேந்திரமுனை மற்றும் கிழக்கிலங்கையிலும் பழைமையான விஷ்ணுவாலயங்கள் இருந்துள்ளன. ஆனால் வைஷ்ணவர்கள் இருந்துள்ளனரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. சைவ ஆகம அர்ச்சகர்களே இக்கோயில்களும் பூசை செய்திருந்திருக்கக் கூடும்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில், மாமாங்கம் சிவன் கோயில், திருத்தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோயில், நீர்வேலி அரசகேசரிப்பெருங்கோயில், போன்ற இன்னும் பிற பல ஏராளமான சோழர்கால, நாயக்கர் கால வரலாறு கோண்ட கோயில்களையும் இன்றும் இலங்கையில் அவதானிக்கலாம்.
16ம் நூற்றாண்டில் போர்த்துக்கெயர் இலங்கைக்கு வந்து இந்துக் கோயில்கள் பலவற்றையும் தரைமட்டமாக்கி அதிபாதகம் செய்ததால் இன்றைக்கு புராதன கோயில்களை புராதன அமைப்புடன் காண இயலவில்லை. இவர்களும் இவர்களுக்கு அடுத்து வந்த ஒல்லாந்தர்களும் மிகவும் மதக்காழ்ப்புணர்வுடன் செயற்பட்டமை வரலாற்றில் பதிவாகிறது.
இவர்களின் குறிப்புகளில் தாம் இந்துசமயிகளுக்குச் செய்த துன்பங்களை எல்லாம் பெருமை பொங்க எழுதி வைத்திருப்பதாகவும் அறியமுடிகிறது. இவற்றில் உள்ளபடி, நல்லூரியில் பல வீதிகளுடன் விளங்கிய நல்லைக் கந்தன் பேராலயத்தை தாம் துடைத்தழித்தமை பற்றி பெருமையாகக் கூறியிருக்கிறார்கள்.
திருகோணமாமலையில் ஆயிரங்கால் மண்டபம் பொன்றவற்றுடன் அமைந்திருந்த மாபெருங்கோயிலையும் திருக்கேதீஸ்வரத்திலிருந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய கோயில்களினையும் நொருக்கியிருக்கிறார்கள் இவர்கள். மிகவும் நெருக்கி மக்களை கிறிஸ்தவத்திற்கு (கத்தோலிக்கம், புரொட்டஸ்தாந்தியம் இரண்டு பிரிவுகளும்) வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்திருக்கிறார்கள்.
இவர்களின் மதமாற்ற அட்டூழியங்கள் குறித்து பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. இது குறித்து முனைவர். கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்களின் ’ஈழத்துச் சிதம்பரம்’ கட்டுரையிலும் சிறிது விடயங்களைக் காணலாம்.
போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு வீட்டார் போர்த்துக்கேயரின் உணவுக்காக பசு ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்ததாம். இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலி (யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி என்று ஒரு ஊர் இருக்கிறது) என்ற ஊரிலிருந்த ஞானப்பிரகாசர் என்பவரது முறை நாள் வந்ததாம். அவர் அதற்கு உடன்படமுடியாமல், அதே வேளை ஆட்சியாளர்களுடன் பகைக்க இயலாமல், முதல் நாள் இரவோடு இரவாக ஊரை விட்டு களவாக ஒரு படகில் ஏறி வேதாரண்யம் வந்து துறவு பூண்டார். ஞானப்பிரகாச முனிவர் பின்னர் சிதம்பரத்திற்குச் சென்றுதங்கியிருந்து பல பணிகள் செய்தார். சைவசித்தாந்த நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். கோயிலிற்கு அருகில் மாலைகட்டித் தெரு என்று சொல்லப்பெறும் இடத்தில் இன்றைக்கு உள்ள சேக்கிழார் கோயிலுக்கு முன் குளம் ஒன்று அமைத்தார். அது ஞானப்பிரகாசர் குளம் என்றழைக்கப்பெற்று சில காலத்திற்கு முன் வரை நடராஜரின் தெப்போத்ஸவம் நடைபெற்று வந்ததாம்.
இவை எல்லாம் போர்த்துக்கேய- ஒல்லாந்த மத வெறியர்களின் செயற்பாடுகளுக்கு ஆதாரங்களாக இருக்கின்றன. இத்தகு சிக்கல்களுக்கு அப்பால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களின் பணிகளால் மீளவும் இந்து எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஆக, இக்கட்டுரை இலங்கையில் எக்காலம் தொட்டு இந்துக்கள் இருந்தார்கள்? என்று கேட்பவர்களுக்கான ஒரு சுருக்க விளக்கக் கட்டுரையேயாகும். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. இன்னும் இன்னும் அது விரிவு பெற வேண்டும். இலங்கையில் இந்து மதம் வந்த காலம் என்ன? என்று கேட்கப்படுமாகில் இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. வரலாற்றால் நிர்ணயிக்கமுடியாத காலத்திலிருந்தே இலங்கையில் இந்து தர்மம் செழிப்புற்றுத் திகழ்ந்திருக்கிறது.
பாலச்சந்திரன் சு
மதிப்பிற்குரிய மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு,
நல்ல பல தகவல்களை அருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள். நன்றிகள் பல. இதுபொன் போன்ற தொகுப்பு. தமிழர்களாகிய நாம் பல சரித்திர ஆவணங்களை இழந்துள்ளோம். ஆவணங்கள் மறைந்தாலும் உண்மை என்றும் மாறாதது . உங்கள் பணி தொடர இறைவன் உமாபதி அருள் புரிவானாக.
// வரலாற்றால் நிர்ணயிக்கமுடியாத காலத்திலிருந்தே இலங்கையில் இந்து தர்மம் செழிப்புற்றுத் திகழ்ந்திருக்கிறது.//
இது முற்றிலும் உண்மை – ராமயண காலாத்திலிருந்தே இந்த தொடர்பு இருந்ததற்க்கு பல சான்றுகள் இன்றும் இலங்கையில் உள்ளது. பி.வி.என்.மூர்த்தி எழுதிய ”ராமாயண ரகசியம்” என்ற புத்தகத்தில் நிறைய சான்றுகள் கொடுத்துள்ளார். அதில் முக்கியமாக நூராஎலியாவில் உள்ள சீதா எலியா என்னும் சீதை அம்மன் கோவில் என்று அழைக்கபடும் வனம். சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனம் என்று பலரும் நம்புவது இதைத்தான். இலங்கையில் ஒரு பொருட்காட்சியில் மிகபெரிய கல் சிம்மாசனம் இருக்கிறது. இது ராவணனுடைய சிம்மாசனம் என்று கூறுகிறார்கள்
திரு சர்மா அவர்களின் நல்ல பதிவு இது. பல அரிய தகவல்களை அளித்துள்ளார். “கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமரந் தாரே” என ஞானசம்பந்தரின் திருப்பதிகம் ஓதியிருக்கின்றேன். அந்த இனிய காட்சியை இக்கட்டுரையில் அமைந்துள்ள புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன்.
ஈழத்தில் தமிழர்களுக்குள் ஆரிய திராவிட இனப் பிளவுகள், பிரித்தாளும் ஆபிரகாமிய மதத்தவர் சூழ்ச்சி எடுபடவில்லை. ஆதலால் இந்து வைதிகமதம் சிறப்பாகவே விளங்கி வந்துள்ளது. பார்ப்பனர் எதிர்ப்பும் வடமொழி எதிர்ப்பும் அவ்வளவு வலுவாகப் பரவவில்லை. ஆனால் இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு வளர்ந்த்போது நாத்திகமும் உடன் வளர்ந்தது. கலாநிதி கைலாசபதி போன்ற அறிஞர்கள் இடதுசாரிச் சிந்தனையினராயினும் ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களுக்கும் பண்டைய சமயச் சான்றோர்களுக்கும் உரிய கவுரவத்தைக் கொடுத்தே வந்துள்ளனர்.
ஆனால், கிறித்துவர்களின் மற்றொரு சூழ்ச்சி நன்றாக வெற்றி பெற்றுவிட்டது. திராவிடர்- சைவர் – தமிழர் X ஆரியர்- பவுத்தர் – சிங்களர் என , மொழி சமய இனவேறுபாட்டுப் பகையை வளர்த்து பல இலட்சம் தமிழர்களை நாடுபெயர வைத்து விட்டது. (பார்க்க Breaking India ,by Aravindhan NeelakaNdan and Rajiv Malhotra)
nalla pathivu. Nalloor kandaswamy kovil thereottam koottathaik kandu mahilndhane. enna koottam, thamizarhal sirappaha srilankaavil irundha kaalakattathil edukkappattathaaha irrukka venndum? Manam sohathil aazlhirathu.
I enjoyed reading this article.
Thanks.
மயூரகிரி சர்மா,
நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் நலமும், வளமும், புகழும் பெற்று பல நூறு ஆண்டுகள் சிறக்க என் சிவனைப் பிரார்த்திக்கிறேன்.
நல்ல தகவல்கள் கொண்ட கட்டுரை.
தமிழக இந்துக்கள் முத்துக்குமாரசாமி கூறியதை கவனத்தில் எடுக்கவும்.
//தமிழர் X ஆரியர்- பவுத்தர் – சிங்களர் என , மொழி சமய இனவேறுபாட்டுப் பகையை வளர்த்து பல இலட்சம் தமிழர்களை நாடுபெயர வைத்து விட்டது.//
இலங்கை இந்துக்கள் ஒன்றும் பாக்கிஸ்தானிலோ அல்லது அப்கானிஸ்தானிலோ வாழவில்லை. இலங்கையின் தலைவரோ எதிர்கட்சி தலைவரோ பவுத்த மதத்தை சேர்ந்தவராயினும் இந்து ஆலயத்தில் வந்து பய பக்தியுடன் வணங்கும் தலைவர்களை கொண்டது இலங்கை.புலி ஆதரவு சக்திகளால் தமிழகத்தில் நடத்தப்படும் ஆரிய, பவுத்த, சிங்கள விரோதங்களுக்கு துணை போகாதீர்கள்.
https://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/11456-2010-11-19-07-45-33.html
பழைய நகரமான பொலன்னருவாவில் இரு சிவன் கோவில்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாக தெரிகிறது.
https://www.srilankatravelnotes.com/POLONNARUWA/SHIVADEVALE1/SivaDevale1.html
https://1.bp.blogspot.com/_m9gHPkU2U-I/S9vpJJu70VI/AAAAAAAAAFQ/5g5bTSW60ZE/s1600/polonnaruwa-8.jpg
https://chandikadilan.blogspot.com/2010/05/devales-still-within-perimeter-of-city.html
நேரில் பார்த்த எவராவது எழுதினால் நலம்.
திரு மயூரகிரியார் அருமையாக ஈழத்தில் ஹிந்துப்பண்பாட்டின் தொன்மையினை அது சந்தித்த சவால்களை எழுதியுள்ளார். ஹிந்துப்பண்பாட்டை அழிக்க அன்னியர்களே முயன்றுள்ளதும் தெரிகிறது. ஆனால் சிங்கள பௌத்தர்கள் எந்த ஊறும் ஹிந்து சமயத்திற்கோ அல்லது ஆலயங்களுக்கோ செய்ததாகத்தெரியவில்லை. திரு சர்மா அவர்களின் கட்டுரை ஈழத்திலுள்ள ஆலயங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் ஏற்படுத்துகிறது. இவ்வளவு இடர்பற்றும் துயருற்றும் நம் சமயத்திலும் பண்பாட்டிலும் ஈழத்து தமிழர் கொண்டுள்ள ஈடுபாடு மெய் சிலிர்க்க வைக்கிறது. திரு சர்மா அவர்கள் நற்பணி தொடரவேண்டும்.
ஹேமகூடம் என்ற சிறப்பு பெற்ற கதிர்காமம் பற்றி திரு சர்மா அவர்கள் கூறுவது
“இன்று இக்கோயிலில் சிங்கள மொழி பேசும் கப்புறாளைமார் என்போரே வெண்துணியால் வாய்கட்டிப் பூசிக்கிறார்கள் எனினும், பழைய காலத்தில் சிவாகம முறையிலான வழிபாடு நடந்தமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன”.
வெண்துணியால் வாய்கட்டி பூஜை செய்கிற முறை தென்னாட்டில் இன்றும் உள்ளது. பெரும்பாலும் காளியம்மன், கருப்பசாமி போன்ற உக்கிரமான தெய்வங்களுக்கு பூஜை இன்றும் இப்படியே நடைபெறுகிறது ஒரே சிவாலயத்திலும் கூட இதைக்கண்டேன்(ஆச்சரியம் அவர்கள் அங்கனாதேசுவரர் என்ற பெயரில் காலபைரவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள்). பொதுவாக இம்முறையை அந்தணர்கள் செய்வத்தில்லை. கருனாடகத்தில் கூட இம்முறை காளிவழிபாட்டில் காணமுடிகிறது. இம்முறை பழையமுறையாகவே இருக்கவேண்டும் எனறே அடியேனுக்குத்தோன்றுகிறது.
இங்கே ஒரு கேள்வி எழுகிறது. சிங்களவரான கப்புறளைமார் சைவரா பவுத்தரா என்பது தான் அது.
அன்பின் வீபூதிபூஷண் அவர்களுக்கு,
இலங்கையில் சிங்கள மொழி பேசும் மக்களிடத்தில் சைவர்கள் என்று பிரகடனம் செய்து கொண்டோர் இல்லை… ஆனால் நிறையவே அவர்கள் சைவாலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள்.. கணதெய்யோ என்று விநாயகரையும் சிவதெய்யோ என்று சிவபெருமானையும் கதரகமதெய்யோ என்று முருகனையும் விஷ்ணு தெய்யோ என்று நாராயணனையும் இன்னும் சரஸ்வதி மஹாலஷ்மி முதலிய தேவியரையும் பத்தினி தெய்யோ என்று பராசக்தியையும் வழிபடுவார்கள்..
இது போலவே தற்போது கப்புறாளைமார் என்பவர்களின் நிர்வாகத்திலும் பூஜையிலுமே கதிர்காமம் இருக்கிறது.. (சிங்களத்தில் கதரகம) ஆக, கப்புறாளைகள் என்பவர்கள் முருகவழிபாடு பேணும் பௌத்தர்களே… இதனால் சிக்கல் என்ன எனில் கதிர்காமத்தில் முருகன் கோயிலுக்கு அருகிலேயே அவர்களின் வழிபாட்டிற்காக கிரிவிஹார என்று பெரிய பௌத்த விகாரம் எழுந்து விட்டது… இந்நிலைகளால் சிவாகம மரபு முழுமையாக அங்கு பின்பற்றப்படாது போயிற்று…
Sivashri Viputhi booshan and other readers have been mislead by Mayurakiri Sharma. Sharma has not written about the events that took place during the last fifty years. What he wrote was the events happened hundreds of years ago.
Since 1956 racial riots about 1800 hindu temples have been damaged and destroyed by the Sinhala Buddhist State armed forces and buddhist nationalists.in Sri Lanka.
In Thiruketheeswaram temple while damaging the temple Buddhist army has gouged the third eye of the icon Lord Siva. All madams surrounding the temples were destroyed by them
Nainathivu Nakapooshani temple ther was burnt by the Army.
Bomb was dropped by the Army on Naguleswaram temple and Thellipalai Thurkai Amman temple. Ganesh idol was taken from Koneswaram temple in Trincomalee and thrown into the sea after writting on the wall ” God Ganesh has gone for a bath” Hindu priests were assaulted and arrested in Eastern province and in Colombo.
There are so many incidents which Sharma has failed to mention in his article. He has not mentioned the Buddha idols and Buddhist viharas being built now by the present Sri Lankan government in Tamil hindu areas where there is no Buddhist live to worship.
I could send an article written in English about the death damage and destruction caused to Hindus, temples their culture and history. It was already sent to Tamilhindu, a few months ago. Readers could ask tamilhindu to publis that article upon translating.
RISHI
அன்புள்ள ரிஷி அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுடைய வேதனை கோபம் எம்மையும் தொடுகிறது. சிங்கள பேரினவாதம் ஹிந்து ஆலயங்களை தகர்த்ததை உணர்ந்து வேதனை அடைகிறோம். ஆனால் இந்தப் பேரின வாதப்போக்கு சிங்களவரிடையே தூண்டப்படுவதற்கு நிச்சயம் ஆபிராகாமிய மதங்களின் சூழ்ச்சியே காரணம் என்ற முனைவர் முத்துகுமாரசாமி ஐயா அவர்களின் கூற்றினை இங்கே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மக்களைப் பிளந்து மதமாற்றத்தை செய்வதே அவர்தம் கொள்கை என்பதை உணர்வோம். இலங்கையில் அமைதி முழுமையாக நிலவ தமிழர்தம் உரிமையாவும் உறுதிப்பட இந்திய ஹிந்து தமிழர்கள் யாவரும் வேண்டுகிறோம், துணை நிற்போம். தில்லைக்கூத்தப்பெருமான் திருவருள் பெருக அவர் சிலம்படி வேண்டுகிறேன்.
சிங்களவர்களிடையே மதவெறி, இனவெறி பரவ முக்கிய காரணம் அவர்களது பிக்குகள் எழுதிய மகாவம்சம்.
ஈழம் : புத்தரின் படையெடுப்பு என்ற தலைப்பில் காலச்சுவடில் வெளியாகி உள்ள கட்டுரை தமிழர் வாழ்விடங்களில் சிங்கள ஆக்கிரமிப்பு புத்தத்தின் வழி நிறுவப்படுவதை வெளிக்காட்டுகிறது
https://kalachuvadu.com/issue-140/page40.asp
நாத்திக வாதம் பேசும் பௌத்தர்கள்,கஷ்டம் என வரும் போது தான் கடவுளை நாடி செல்கின்றனர்…..ஆனால்,எந்த ஒரு இலங்கை இராணுவ வீரனும் தென் இலங்கையில் தான் வழிபட்ட அதே பிள்ளையார்,முருகன் தெய்வங்களின் வட-இலங்கை ஆலயங்கலக்கு மதிப்பளித்து செயற்பட்டதாக தெரியவில்லை.முருகண்டி பிள்ளையார் ஆலயத்தை தமிழ் ஈழ விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பின் கோவில் என்ற உணர்வு கூட இல்லாமல் சப்பாத்து காலுடன் உல் சென்றதை பின் எவ்வாறு தான் கூறுவது ??????????
போர்த்துகீசிய ,ஒல்லாந்த பரங்கிகளுக்கு எங்கே தெரியபோகுது நமது பாரம்பரியம்.
நாசகார நீசர்கள் ..
Un fortunately in Tamil Nadu we have these so called ” Theera Vidam ” parties, ruling for the past 50 years.
நல்ல தகவல்கள் கொண்ட கட்டுரை.
https://universaltamil.com/simba-audio-launch-gallery/